Skip to content
Post Views: 2,777
அத்தியாயம் 22
“எப்படி இருக்கீங்க கருணா எல்லாரும்? எப்ப உனக்கு எக்ஸாம்? எப்ப சென்னை வர்றீங்க? இப்ப ஜுரம் எல்லாம் பரவா இல்லையா?”
Advertisement
மூன்று நாட்களாக கருணாவிற்கு நல்ல ஜுரம். பாரியும் வில்வாவும் தான் லீவ் போட்டு அவளை பார்த்துக்கொண்டார்கள். பாட்டியிடம் கேட்டு கஞ்சி, ரசம் சாதம் என்று சமைத்தும் கொடுத்தார்கள்.
Advertisement
“நல்லா இருக்கேன் அவினாஷ். இன்னும் அஞ்சு மாசம் இருக்கு எக்ஸாம்க்கு. ப்ர்ஸ்ட் அட்டெம்ப்ட்ல பாஸ் ஆயிடணும் அவினாஷ்”
Advertisement
வழக்கத்திற்கு மாறாக கருணாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.
“கண்டிப்பா ஒரே அட்டெம்ப்ட்ல முடிக்கணும்னு என்ன கட்டாயம்? நேத்து பேசும்போது பாரி கூட சொன்னான், நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்கிறேன்ன்னு. அதனால தான் காய்சல் வந்து இருக்கு, எல்லாருக்கும் அட்வைஸ் பண்ற எங்க கருணா எங்கே?”
Advertisement
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு வருஷம் வேஸ்ட் ஆயிடும் இல்லையா?”
“எப்பவும் போல உன்னோட பெஸ்ட் கொடு போதும். அதுவே உன்னை பாஸ் ஆக்கிரும், அதைவிட்டு அதிகமா உன்னை வருத்திக்காத புரியுதா?”
“நல்லா சொல்லு அவி, பாவம் பொண்ணு உடம்பு சரி இல்லைன்னு உதவி செஞ்சா, நல்லா வச்சு செஞ்சா எங்களை” என்று கூறிக்கொண்டே கருணா அருகில் வந்து அமர்ந்தனர் பாரியும் வில்வாவும்.
“கஞ்சி வச்சு பார்த்துக்கிட்டீங்க சரி, அதுக்கு எதுக்கு ஓவர் பில்ட் அப்?” என்றான் அவினாஷ்.
“உன்னை கொண்டு வந்து இங்க விடனும், அப்ப புரியும் எங்க கஷ்டம்”
“அதானே..” என்று அவி பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அருந்ததி.
“ஹலோ அக்கா எப்படி இருக்கீங்க? அப்புறம் நீங்க சொல்லுங்க அண்ணாஸ் .. என்னாச்சு? ஏன் இந்த சோகம்”
“நீயாச்சும் கேளு சின்ன பாப்பா, நாங்க இரண்டு பேரும் சேர்ந்து லீவ் போடக்கூடாதுன்னு முதல் கண்டிஷன்..”
“அச்சச்சோ…அப்புறம்”
“லீவ் போட்டு கஞ்சி மட்டும் தானே போடணும்.. வச்சு கொடுத்துட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தா?”
“பார்த்தா..”
“என்னால உட்கார்ந்து படிக்க முடியல.. நீ மெதுவா இந்த சாப்டரை சத்தமா வாசி, நான் அப்படியே கேட்டு படிச்சுக்கிறேன்னு, நாள் பூரா இந்தியன் எக்கனாமிக்ஸ், வேர்ல்ட் எக்கனாமிக்ஸ், ஸ்ட்ரட்டஜிஸ்ன்னு எங்களை படிக்க விட்டுட்டா “
“அட பாவமே”
“இப்ப எங்க இரண்டு பேருக்கும் தான் பாப்பா தொண்டை கட்டிக்கிச்சு”
இவர்கள் கதையை சுவாரஸ்சியமாக சொல்லி முடித்து திரும்பி பார்த்தால் கருணா தன் அறைக்குள் சென்று படிக்க அமர்ந்துவிட்டாள்.
“பாவம் டா, ரெஸ்ட் இல்லாம படிச்சிட்டே இன்னும் உடம்புக்கு முடியாம வரப்போகுது.. நீங்க தான் பார்த்துக்கணும்” என்றான் அவினாஷ் உண்மையான அக்கரையில்.
“எங்களை பார்த்துக்க தான் ஆளே இல்ல.. என்னமோ போ அவி.. “ என்று இலகுவாகவே அதனை ஏற்றுக்கொண்டனர் நண்பர்கள்.
“அது எல்லாம் அண்ணாஸ் சூப்பரா தான் பார்த்துப்பாங்க” என்று அருந்ததி தான் அவர்களை விட்டு கொடுக்காமல் பேசினாள்.
“சீக்கிரம் பேசிமுடிச்சிட்டு போய் படி அருந்ததி, நான் அத்தை வீட்டுக்கு போயிட்டு வரேன்”, என்று அவினாஷ் கிளம்பி சென்றான்.
அங்கே தமயந்தி வீட்டில்,
“இது நல்ல டீல் மாமா, நிச்சயம் இது மாதிரி வீடு சென்னைல கிடைக்காது” என்று தர்மராஜ் வேதாச்சலம் தாத்தாவிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அவினாஷ் குடி இருக்கிற வீடு இப்பொழுது விலைக்கு வருகிறது. அதை அவினாஷே வாங்கிக்கொள்ளும்படி தர்மராஜ் கூறிக்கொண்டிருக்கிறார்.
சங்கருடைய நண்பரின் வீடு தான் அது. அவர் தன் மகனுடன் வெளிநாட்டில் செட்டில் ஆக இருப்பதால், வீட்டை விற்க முடிவு செய்திருந்தார்.
தெரிந்தவர்கள் என்பதால் விலையும் கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.
“இல்ல அவினாஷ் பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறான். இப்ப வீட்லயும் இன்வெஸ்ட் பண்ணா பின்னாடி பாப்பாக்கும் கல்யாண செலவு எல்லாம் வரும் இல்லையா?” என்றார் வேதாச்சலம் தாத்தா யோசனையாக.
“இப்ப என்ன தாத்தா, இன்னும் ஒரு வருஷம் கழிச்சே நான் பிசினஸ் ஆரம்பிச்சுக்கிறேன். முதல்ல இந்த வீட்டை வாங்கிடலாம். பாப்பா இப்ப தானே காலேஜ் படிக்கிறா, அவ கல்யாணத்துக்கு எல்லாம் இன்னும் நாள் இருக்கு. நம்ம கிட்ட சேமிப்பே நிறைய இருக்கு. அதுவுமில்லாமல் லோன் போட்டுக்கலாம். நான் எல்லாம் கணக்கு போட்டு வச்சிருக்கேன் உங்களுக்கு விளக்கமா சொல்றேன் தாத்தா, மாமா நீங்க மேற்கொண்டு வீடு வாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க” என்று தாத்தாவிடம் ஆரம்பித்து மாமாவிடம் முடித்தான்.
“ஏம்பா வேதா, பேரன் தலை எடுத்தாச்சு, சும்மா குழப்பிக்கிட்டு இருக்காத, அவினாஷ் கனவுகள் பெருசு, அவன் உழைப்பு பெருசு, அவன் லட்சியங்களும் பெருசு.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பயந்துகிட்டே இருந்தா எதையும் சாதிக்க முடியாது. அவன் நாலையும் யோசிச்சு செய்யுற பிள்ளை. அவன் மேல நம்பிக்கை வை. நம்பிக்கை வைக்கிற தகுதி அவனுக்கு நிறைய இருக்கு, புரியுதா?” என்றார் வீரராகு தாத்தா தோழனாக.
ஒரே மாதத்தில் அவினாஷ் அருந்ததி இருவர் பேரிலும் வீட்டை வாங்கினார்கள். ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு என்பதால், பெரிதாக கிரகப்பிரவேசம் செய்யவில்லை.
வீட்டிலே கணபதி ஓமம் மட்டும் வைத்து பால் காய்ச்சினார்கள். ஊரில் இருந்து முருகானந்தம் தாத்தாவை அழைத்திருந்தாரக்ள்.
“அவினாஷ் கல்யாணத்தப்ப வீட்டை இன்னும் கொஞ்சம் பெருசா எடுத்து கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்” என்றார் முருகானந்தம் தாத்தா.
அன்று மதியம் அனைவருக்கும் அவினாஷ் வீட்டில் தான் உணவு. தாத்தாவும் பேரனும் தங்கள் கையாலே விருந்தை அமர்க்களமாக தயார் செய்திருந்தார்கள்.
“பசங்க எல்லாரும் எப்ப வர்றாங்க தமயந்தி?” என்றார் தாத்தா மருமகளிடம்.
“அது தெரியல அப்பா, இப்ப பால் காய்ச்சுறதுக்கு வர சொல்லலாம்னு நான் சொன்னேன், அவினாஷ் தான் இப்ப அலைச்சல் எதுக்கு அத்தை வேண்டாம்னு சொல்லிட்டான்” என்றார் தமயந்தி.
“அதுவும் சரி தான், பக்கத்துலயா இருக்குதுங்க நினைச்சுதும் வர்றதுக்கு.”
“அவினாஷ், வாழைப்பூ வடை ரொம்ப நல்லா செஞ்சிருக்க ப்பா. இத்தனை வயசுக்கு இப்படி ஒரு அருமையான வடையை நான் சாப்பிட்டதே இல்லை..” என்றார் வீரராகு தாத்தா.
“உக்கும், ஆமா நாங்க வாழைப்பூ வடை சுட்டதே இல்லை, இவர் சாப்பிட்டதே இல்லை“ என்று நொடித்துக்கொண்டார் பாட்டி.
“ஏன் பாட்டி, தாத்தா வடை சாப்பிட்டதே இல்லைன்னு சொல்லல்லயே, இப்படி நல்லா டேஸ்ட்டா சாப்பிட்டது இல்லைனு தானே சொல்றாங்க” என்றாள் அருந்ததி.
“அப்படி சொல்லு அருந்ததி” என்றார் தாத்தா குஷியாக.
பேச்சும் சிரிப்புமாக உணவை முடித்துவிட்டு அனைவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவினாஷ் இரண்டு பெட்டிகள் கொண்டு வந்து வைத்தான்.
‘என்னது?’ என்று அனைவரும் ஆர்வமாக பார்க்கவும்,
“அத்தை, மாவு அரைச்சிட்டு கிரைண்டர் கழுவ கஷ்டமா இருக்கு, கல்லை தூக்க சிரமமா இருக்குன்னு சொன்னீங்க இல்ல, இங்க பாருங்க நான் ஒரு கிரைண்டர் டிசைன் செஞ்சிருக்கேன்” என்று ஒரு பெட்டியை பிரித்து காண்பித்தான்.
அதில், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு கிரைண்டர் இருந்தது.
“என்னப்பா இது, கிரைண்டர் பக்கத்துல ஒரு பைப்பை வச்சிருக்க? என்றார் பாட்டி.
இருங்க நான் காட்டுறேன், என்று ஆன் செய்து காண்பித்தான்.
மாவு அரைச்சதும் இந்த பைப்பை கீழே ஓபன் பண்ணி, ரிமூவ் பட்டன் அழுத்தினா, இது வழியா மாவு வெளியே வந்துடும். அதே மாதிரி மேலே இருக்க இந்த பைப்பை திறந்து தண்ணீர் ஊத்திட்டு, வாஷ் பட்டன் பிரஸ் பண்ணா போதும், அதுவே கல், ட்ரம் எல்லாம் நல்லா கழுவிடும், அப்புறம் ட்ரைன் பட்டன் அழுத்தினா போதும், தண்ணீர் வெளியே போய்டும். அரைக்கும் போது இந்த பைப் எல்லாம் இப்படி பின்னாடி மடிச்சு வைக்க முடியும்.
“அட.. சூப்பர் அவி” என்று பெண்கள் மூவரும் பாராட்டினார்கள்.
“இதுக்கு எல்லாம் உனக்கு எங்க நேரம் இருக்கு அவி. டிசைன் சூப்பர்” என்றார் சங்கர் வியப்பாக.
“இதை மேனுபாக்சர் பண்ணலாம்ன்னு யோசிக்கிறேன் அங்கிள். இதே மாதிரி இன்னும் கொஞ்சம் ப்ராடக்ட்ஸ் டிசைன் பண்ணிட்டு அப்புறமா ஆரம்பிக்கணும். அதுக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் வச்சிருக்கேன்”
“இப்ப இதை டெஸ்டிங் பண்ணனும். அதுக்கு தான் இரண்டு பீஸ். அத்தைக்கு ஒன்னு, சுமி ஆன்ட்டி க்கு ஒன்னு” என்று இருவருக்கு ஆளுக்கொன்று கொடுத்தான்.
பின் ஆண்கள் அதன் காஸ்ட், மார்க்கெட்டிங் என்று பேசினார்கள்.
“இது ஸ்பெஷல் ப்ராடக்ட். இதனோட சாதாரண க்ரண்டர் மிக்ஸி எல்லாம் சேர்த்து ஒரே பிராண்ட் பெயர்ல பண்ணலாம்னு நினைக்கிறேன்”
“ஏற்கனவே நிறைய பிராண்ட் இருக்கே மார்க்கெட்ல? அதுவும் இல்லாம இப்ப எல்லாம் நிறைய பேரு வீட்ல மாவு அரைக்கிறதே இல்லை, கடைல வாங்கிக்குறாங்க” என்றார் முருகானந்தம் தாத்தா.
“சரியான பாயிண்ட் தாத்தா, நிச்சயம் நீங்க சொல்ற பிரச்னைகள் எல்லாம் இருக்கு தாத்தா. நம்மகிட்ட வேற புது பியுச்சர்ஸ் எல்லாம் இருக்கு. அதுவும் இல்லாமல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்னு ஒரு யோசனை. நம்ம நாட்டு மக்கள் நிறைய இப்ப வெளிநாடுகளில் இருக்காங்க. ஆனா அங்க கிரைண்டர் அதிகமா பயன்பாட்டுல இல்லை, மிக்ஸி இருக்கு. இங்கே இருந்து கொண்டு போகணும்னாலும் கிரைண்டர் வெயிட் அதிகம். இப்ப நான் குறைந்த எடையில் ஒரு கிரைண்டர் டிசைன் பண்ணிட்டு இருக்கேன். அது வெற்றிகரமா முடிஞ்சா நல்ல மார்க்கெட் கிடைக்கும். அதுவுமில்லாமல், வீட்டு உபயோகம் இல்லாமல் கமர்சியல் உபயோகத்திற்கும் ஐடியாஸ் வச்சிருக்கேன் தாத்தா”
“இதை பத்தி நிறைய யோசிச்சு வச்சிருக்கன்னு புரியுதுப்பா, எப்ப என்ன உதவி வேணும்னாலும் தாத்தாகிட்ட தயங்காம கேளு” என்றார் முருகானந்தம் மகிழ்ச்சியாக.
“இப்ப இருக்க வேலையில நிறைய சம்பளம் கிடைக்குதே அவினாஷ். அதை விட்டுட்டு தொழில் தொடங்குறது ரிஸ்க் இல்லையா?” என்றார் தர்மராஜ்.
“ரிஸ்க் இருக்கு தான் மாமா, ஆரம்ப காலத்துல பெரிய லாபம் வரலைனாலும், சீக்கிரம் நல்ல லாபம் வரும்” என்று நம்பிக்கையாக கூறினான்.
மேலும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு கிரைண்டர்களுடன் விடை பெற்றனர் இரு குடும்பமும்.
———————
காலையிலே வீடியோ அழைப்பில் பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தனர் வில்வாவும் பாரியும்.
“என்ன பாட்டி, என்ன டிபன்?” என்றான் வில்வா.
பாட்டி அமைதியாக அவனை முறைத்துப்பார்த்தார்.
“ஏன் பாட்டி முறைக்கிறீங்க? நாங்க தான் இங்க தனியா சமைச்சு கஷ்டப்படறோம். உங்களுக்கு என்ன? வித விதமா சாப்பிடுவீங்க” என்றான் பாரி.
“நீங்க என்ன டிபன்?” என்றார் பாட்டி.
“இன்னிக்கு பொங்கல் பாட்டி.. நீங்க தானே நைட் அளவு எல்லாம் சொன்னீங்க.. சூப்பரா இருந்துச்சு”
“நேத்து என்ன டிபன்?”
“நேத்து பணியாரம்..”
“முந்தாநேத்து?”
“முத்தா நேத்துதுது… ஆங்… ராகி ரொட்டி”
“பார்த்தீங்களா டா? நீங்க தான்டா வித விதமா சாப்பிடறீங்க.. இங்க இன்னிக்கு இட்லி தக்காளி சட்னி, நேத்து இட்லி மல்லி சட்னி, முந்தாநேத்து இட்லி வெங்காய சட்னி, அதுக்கு முன்னாடி இட்லி காரச்சட்னி.. இப்படி டெய்லி இட்லி தான்டா..”
“என்ன பாட்டி இட்லி வாரமா?”
“எல்லாம் அந்த அவி பையனால வந்தது.. முதல்ல மாவு அரைக்கிற கிரைண்டர் கொடுத்தான். அதுல கழுவற வேலை எல்லாம் இல்லை.. அத வந்ததுல இருந்தே இட்லி நிறைய தான்.. அது போதாதுன்னு..”
“போதாதுன்னு?”
“இப்ப இட்லி அவிக்ர மெஷின் கொடுத்திருக்கான் டா..”
“அதுக்கு எல்லாமா மெஷின் கண்டுபிடிச்சிருக்கான்?”
“ஆமாடா.. சின்னதா அழகா இருக்கு, அதுல ஒரே நேரத்துல நாற்பது இட்லி வருது டா”
“அடடா!”
“அட அடடா !”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன.. உங்க அம்மாவும் இவங்க அம்மாவும் சேர்ந்து இட்லியா போட்டு எங்களை கொல்றாங்க டா” என்றார் பாட்டி சோகமாக.
“டெய்லி நாப்பது இட்லியா அவிக்குறாங்க?”
“ஆமா டா.. காலையில இட்லி, ராத்திரி இட்லி உப்மா..என்னத்த சொல்ல?”
“ஏன் பாட்டி இந்த அவினாஷ் தொழில் அதிபர் ஆகறதுக்குள்ள எங்க மம்மீஸ் ரெண்டு பேரையும் இட்லி சுடற ஆயாவா ஆகிடுவான் போலயே?”
இவர்கள் உரையாடலை கேட்டு கொண்டே இருந்து கருணாம்பிகை எழுந்து வந்தாள். “பாட்டி அம்மாவையும் அத்தையையும் கூப்பிடுங்க” என்றாள்.
பாட்டி விரைந்து சென்று இருவரையும் அழைத்து வந்தார்.
“என்ன ம்மா இது எல்லாம்? ஏன் அத்தை உங்களுக்கு கூடவா அறிவு இல்லை?”
“என்னன்னு சொல்லுடி முதல்ல, சும்மா எடுத்ததும் சும்மா குதிக்குற? நான் அம்மவா நீ அம்மவா?” என்றார் சுமதி கறாராக.
“எப்படி?” என்று தமயந்தியை பார்த்து செய்கையால் வேறு கேட்டார்.
“அங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன சின்ன வயசா? வாலிபம் திரும்புதோ? டெய்லி ரெண்டு வேலை இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?”
“ஆறு மாசகுழந்தைகளுக்கு கூட இட்லி கொடுக்கலாம் தப்பில்லைன்னு, நீங்க தானே அத்தை சொன்னீங்க” என்றார் சுமதி திரும்பி மாமியாரிடம்.
“சும்மா லூசு மாதிரி பேசாதீங்க ம்மா. மாவு இன்னிக்கு அரைச்சு நாளைக்கு சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, நீங்க ஒரு வாரத்துக்கு அரைச்சு வச்சு தினமும் சுட்டா அது நல்லதே கிடையாது. எல்லாமே அளவா இருந்தா தான் நல்லது. இனி வாரத்துக்கு ஒரு நாள் இட்லி செய்ங்க போதும். மீதி நாள், கேப்பை கூழ், கம்பங்கூழ், சிறு தானிய கஞ்சி, ரொட்டி இப்படி செய்ங்க. அப்படி மாவு ஆட்டியே ஆகணும்னா, இட்லி ஊத்தியே ஆகணும்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இட்லி கடை ஒன்னு ஆரம்பிங்க.. காசாச்சும் வரும்” என்று மேலும் இருவரையும் ஒரு காட்டு காட்டிவிட்டு, க்ளாஸிற்கு நேரமானதால் கிளம்பி சென்றாள்.
சுமதியும் தமயந்தியும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
“என்ன பாட்டி மிஷன் சக்ஸஸ் போல?” என்றான் வில்வா.
“ஆமா டா.. நாம சொன்னா எல்லாம் கேக்க மாட்டாங்க. கருணாகிட்ட விஷயம் போனா, அப்புறம் அவ பார்த்துப்பா இல்ல?”
“கேடி பாட்டி நீ..”
“உங்களை விடவாடா?”
“சரி பாட்டி நாங்களும் கிளம்பறோம்”
“ஆமா இன்னிக்கு உங்களுக்கு லீவுன்னு சொன்னீங்க, எங்க கிளம்புறீங்க?”
“அதுவா பாட்டி, இன்னிக்கு எங்க பாக்ஸிங் கிளாஸ்ல் பாக்ஸிங் போட்டி நடக்குது”
“நீங்க போட்டில இருக்கீங்களா?”
“ஹா ஹா.. நல்லா கேட்டீங்க போங்க.. நாங்க வேடிக்கை தான் பார்க்க போறோம்”
“அதுதான் நீங்க நல்லா பார்ப்பீங்களே”
“நாங்க சொன்னோம் இல்ல பாட்டி, ரெண்டு பொண்ணுங்க, பைக், ரவுடி லுக்”
“ஆமா பயில்வான் மாதிரி இருந்தாங்கன்னு”
“அவங்க கூட இன்னிக்கு போட்டியில இருக்காங்க போல.. நான் அங்க இருந்து உங்களுக்கு வீடியோ கால் பண்றேன்”
“சரி டா..”
“பாப்பாவும் பார்க்கணும்னு சொன்னா.. நீங்க இரண்டுபேரும் ஒன்னா இருங்க.. ஒரு பதினொரு மணிக்கு கூப்பிடறோம்.”
“சரி டா, பாய்”
“பாய் பாட்டி” என்று கூறி நண்பர்கள் இருவரும் கிளம்பி பாக்ஸிங் அகாடெமி சென்றார்கள்.
அன்று அவ்விடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அகாடமி வாசலிலே ஹர்ஷ் தான் ஜெயிப்பாங்க.. வர்ஷ் தான் ஜெயிப்பாங்க என்று ஒரே கூச்சல். யார் ஜெயிப்பார்கள் என்று பெட் வேறு கட்டிக்கொண்டிருந்தார்கள்.
“யார் டா இந்த ஹர்ஷ், வர்ஷ்?” என்று பேசிக்கொண்டே இவர்களும் உள்ளே சென்றார்கள்.
error: Content is protected !!