Skip to content
Post Views: 3,942
பாட்டி எனக்கு சப்பாத்தி, சிக்கன் குருமா வேணும்! பாப்பாத்தியின் கழுத்தை கட்டிக் கொண்டு கொஞ்சினாள் ஸ்ருதி.
பாட்டி எனக்கு ரைஸ் நூடுல்ஸ் கொஞ்சினான் குகன்.
ரைஸ் நூடுல்ஸா? புரியாமல் பார்த்தார் பாப்பாத்தி.
இடியாப்பதை தான் நாங்க அப்படி சொல்வோம் என்று குழந்தை போல் கொஞ்சி சிரித்தாள் சங்கீதா.
Advertisement
வராது வந்த மாமணிகளாக வந்திருக்கும் பேரக்குழந்தைகள் கேட்டு மறுத்துவிடுவாரா பாப்பாத்தி.
துள்ளளுடன் ஓடிப்போய் அத்தனை ஆசையாய் இரவுணவை தயார் செய்யத் தொடங்கினார்.
பூமாலை போய் சிக்கன் வாங்கி வந்தார். சுப்ரஜா சாப்பாத்தி மாவு பிசைய,கோழி குருமாவிற்கு மசாலா அரைக்க தொடங்கினார் பாப்பாத்தி.
Advertisement
தங்கள் அறையில் மெத்தையில் படுத்துக் கொண்டு அஞ்சலியுடன் பேசிக்கொண்டிருந்தாள் சங்கீதா.
Advertisement
நாங்க நாளைக்கு மதியம் வந்துடுவோம் சங்கிக்கா என்றாள் அஞ்சலி.
வாங்க… வாங்க! என்றாள்.
தீபாக்கும் வரணும்னு ஆசை தான் ஆனா அவ புருஷனுக்கு யாரு சமைச்சு போடறது? நாம பிள்ளை குட்டியை சாக்கு போக்கு சொல்லி வந்துடறோம். அஞ்சலி வருத்தம் கொண்டாள்.
Advertisement
அட நீ வேற? நம்ம தான் பிள்ளக்குட்டி வச்சுக்கிட்டு லோள் படறோம்… அவ கொஞ்ச நாளைக்கு என்ஜாய் பண்ணட்டுமே என்றாள் சங்கீதா.
ஆனா எழிலுக்கு வருத்தம் தான். ரெண்டரை வருஷம் ஆகுதே கல்யாணம் ஆகி….போன வாரம் கூட ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தாங்களாம்.
அப்படியா? அதெல்லாம் சீக்கிரம் நல்லது நடக்கும்.
குரும்பூர்காரி என்ன பண்ணுறா?
மாமியார் கூட ஜோடி போட்டுக்கிட்டு சமையல் பண்ணுறா….
உன்கிட்ட நல்லா பேசுனாளா?
பேசுனா பேசுனா. கொஞ்சம் திமிரு தூக்கலா தான் இருக்கு. மன்னாரு பய ட்ரெயினிங்கா இருக்கும்.
ஆளு நல்லா பள பளன்னு பளிச்சுன்னு இருக்கா…. ஆதங்கம் கூடியது சங்கீதாவிற்கு.
மாமியார் கவனிப்பு பலமா இருக்கும்.
இவர்கள் குடும்ப அரசியல் பேசிக் கொண்டிருக்க…. சுப்ரஜா கை வலிக்க இடியாப்பம் பிழிந்துக் கொண்டிருந்தாள்.
சித்தி…..பாட்டி குகன் மருந்து பாட்டில் உடைச்சுட்டான்…. ஸ்ருதி கத்தினாள்.
என்னன்னு போய் பாரும்மா…. பாப்பாத்தி சிக்கனை வதக்கிக் கொண்டிருந்தார்.
அய்யயோ…. என்னடா பண்ணி வச்சிருக்க? இது உங்க தாத்தாவோட இருமல் மருந்து.
ஸ்ருதி தம்பியை கூட்டிகிட்டு உங்க ரூமுக்கு போ!
நான் போய் முறம் எடுத்துட்டு வரேன். சுபி கிச்சனுக்கு செல்ல அம்மா என்று அலறினான் குகன்.
கிச்சனில் இருந்து சுபி ஓடிவர பின்னாடியே பாப்பாத்தி ஓடிவந்தார். சங்கீதாவும் ஓடிவந்து பார்த்தாள்.
அய்யோ ரத்தம்…. மகனின் கையில் கசிந்த ரத்தத்தை கண்டு பதறினாள் சங்கீதா.
ஸ்ருதி உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்…? தம்பியை உங்க ரூமுக்கு கூட்டிட்டு போ முறம் எடுத்துட்டு வந்து கண்ணாடி துண்டுகளை க்ளீன் பண்றேன்னு தானே சொன்னேன்.. சுப்ரஜா வருத்தமுடன் சொல்ல….
உனக்கு தெரிந்து தான் இவ்வளவு அலட்சியமா இருக்கியா? அவங்க அவங்க பிள்ளைன்னா தான் அக்கறை இருக்கும்….
அய்யோ அக்கா… நான்… அவள் தடுமாறி நிற்க… குழந்தையின் கையில் துணியை வைத்து இறுக்கி பிடித்திருந்தாள் சங்கீதா.
ரத்தத்தை கண்டதும் குழந்தை இன்னும் வீறிட்டு அழ….கையை கழுவிட்டு காயம் என்னனு பாருமா என்றார் பாப்பாத்தி.
பார்க்க மாட்டேனா? இங்கே வந்து ஒரு நாளிலே இப்படி நடக்குது. யாருக்கு அக்கறை இருக்கு? அங்கே தான் தனியா பிள்ளை குட்டிகளை வச்சிட்டு படாதப்பாடுபடறோம் இங்கே வந்து மாமியார் வீட்டில் கொஞ்ச நேரம் நிம்மதியா உட்காருவோம்னு உட்கார்ந்தா எம்புள்ள ரத்தம் ஒழுகிட்டு நிற்குது.
எரும, எட்டு வயசாகுது! தம்பியை பார்த்துக்க தெரியாதா? மகளை திட்டினாள்.
காயம் எதுவும் இல்லை கட்டை விரலிலும் ஆள்காட்டி விரலிலும் கண்ணாடி சில்லு மேலாக்க குத்தி இருந்தது. அதில் லேசாக கசிந்திருந்தது ரத்தம்.
ஒண்ணுமில்ல சாமி…. இப்போ குட்டிக்கு சரியா போச்சே…. அந்த மருந்துபுட்டியை அடிச்சிருவோம்! எப்படி எங்க தங்க புள்ள கையில் குத்தலாம்? குழந்தையை வாங்கி தட்டிக்கொடுத்து கொஞ்சி சமாதானம் செய்தார் பாப்பாத்தி.
சுபி,மன்னரு மருந்து வச்சிருப்பான் கொண்டு வந்து பூசிவிடும்மா என்றார்.
அம்மா அடித்து விடுவாளோ என்று ஸ்ருதி நடுங்கி அமர்ந்திருந்தாள். குழந்தைக்கு மருந்து பூசி தங்கள் அறைக்கு தூக்கி சென்றுவிட்டாள் சங்கீதா.
சுபி சிதறி கிடந்த கண்ணாடி சில்லுகளை முறத்தில் அள்ளிக் கொண்டிருந்தாள்.
என்னாச்சு? உள்ளே நுழைந்த மன்னர் கேட்டான்
ஸ்ருதி சோபாவில் அமர்ந்து கண்ணை உருட்டிக் கொண்டிருந்தாள்.
ஹே ஸ்ருதி குட்டி….
அவ பயத்தில் உட்கார்ந்திருக்கா….துணி வைத்து சிந்திக்கிடந்த மருந்தை துடைத்தாள் சுபி.
என்னாச்சு ஸ்ருதி?மகளை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் சித்தப்பன்.
சுபி நடந்ததை சொல்ல…
செல்லக்குட்டி இதுக்கு பயந்துட்டீங்களா? குழந்தையின் கன்னம் வருடினான்.
சித்தப்பா நான் டிவி ஆஃப் பண்ணிட்டு போகலாம்னு ரிமோட்டை தேடினேன் குகன் அதுக்குள்ள ஒரு க்ளாஸ் பீசை கையில் எடுத்துட்டான்.
ஏன் உங்கம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க? பிள்ளையை பார்த்துக்கறதை விட வேறென்ன வேலை?
தம்பி…. பட்டென்று ஓடிவந்த பாப்பாத்தி வாயில் கை வைத்து உஷ் என்றார்.
என்னமோ போங்க….. என்றவன் எழுந்து தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.
“———————-“
இரவு உண்ணும் போது குகன் சித்தப்பாவை கண்டு ஓடிவந்தான்.
குகன் என்று ஆசையாய் அள்ளி முத்தமிட்டான்.
குகன் குட் பாய் தானே….? சிரப் பாட்டில் எல்லாம் கையில் எடுக்கலாமா?
ஸாரி சித்தா என்றான் பிள்ளை.
சங்கீதாவை கண்டு வாங்க என்றான் ஒரு சம்பிரதாயத்திற்கு.
மன்னர் சாப்பிட்டு எழுந்து கொண்டான்.
சித்தா தூக்கு என்று குகன் கையை விரித்து கொஞ்சினான்.
குழந்தையை தூக்கிபோட்டு பிடித்து சிரிப்பு காட்டினான்.
சித்தா இன்னும்… கன்னம் குழிய சிரித்தான் குகன்.
நோ… வாமிட் வரும் குகன்! முத்தமிட்டு தன்மையாய் சொன்னான்
சித்தா அப்போ பைக் ரைடு கொஞ்சினான் குழந்தை.
இந்நேரத்திலா? காலையில் போகலாம். இப்போ போய் தூங்கு! குழந்தையின் கன்னத்தை தட்டிவிட்டு சென்றான்.
குகனுக்கு சுடுதண்ணி பிளாஸ்கில் ஊத்தி வச்சிடுங்க! நாட்டு சர்க்கரை போட்டு பால் கலந்துடுங்க! சங்கீதா கட்டளையிட செவ்வனே செய்தார் பாப்பாத்தி.
சுபி எதுவும் கண்டு கொள்ளாது அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
என்ன சுபி என் மேல் கோபமா?
ச்ச அப்படிலாம் இல்லக்கா!
குகன் கையில் ரத்தம் பார்க்கவும் கொஞ்சம் டென்ஷனாகிட்டேன்.
பரவாயில்லக்கா என்று புன்னகையுடன் கிச்சனுக்கு சென்று விட்டாள்.
ம்ம்ம்ம் இவளை எல்லாம் சமாதானம் செய்ய வேண்டியிருக்கு… உள்ளுக்குள் கடுப்பு தான் சங்கீதாவிற்கு.
மணி பத்துக்கு மேல் ஆகுது. இன்னும் காணோமே… மனையாளை காணாது அறை வாயிலை பார்த்துக் கொண்டிருந்தான் மன்னர்.
குழந்தைகள் உறங்கிவிட ஒய்யாரமாய் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் சுப்ரஜா.
வெளியில் வந்து எட்டிப் பார்த்தவன் எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டான்.
பாத்திரம் கழுவி கிச்சனை ஒதுக்கி விட்டு வந்தவள் தைலத்தை எடுத்து கழுத்து கை என்று தேய்த்துக் கொண்டு படுத்தாள்.
விழித்திருந்தவன் எதுவும் பேசி அவளை தொந்தரவு செய்யாமல் விழி மூடிக் கொண்டான்.
“————————“
காலையில் எழுந்து வாக்கிங் போகலாம் என்று வந்தான் மன்னர்.
குகனை கிச்சன் மேடையில் அமர்த்தி பாலாத்திக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.
வாக்கிங் சென்று வந்தவன் ம்மா டீ என்று கிச்சனை நோக்கி குரல் கொடுத்தான்.
தரை எல்லாம் ஈரமாக இருந்தது. அப்போது தான் துடைத்திருக்கிறார்கள்.
சுபி டீ கொண்டு வந்து கொடுத்தவள் தலைக்கு குளித்து இருந்தாள்.
அவள் கரம் பற்றி பக்கத்தில் அமர்த்திக் கொண்டவன் இன்னைக்கு அமாவாசை கூட இல்லையே என்றான்.
இன்னைக்கு கிருத்திகை என்றாள்.
நீ டீ சாப்பிட்டியா? புது ரோஜாவாய் மலர்ந்திருந்த அவள் கரம் கோர்த்து காதலுடன் இறுக்கிக் கொண்டான்.
இன்னைக்கு நான் விரதம் என்றாள் சிரிப்புடன்.
போட்டீங்க….. சிரித்து விட்டான்.
எனக்கு கிச்சனில் வேலை இருக்கு….. நெளிந்தாள்.
என்ன வேலை? அவள் ஈரக்கூந்தலை கோதினான்.
பொங்கல், சாம்பார், வடை, தேங்காய் சட்னி இன்னைக்கு மெனு.
இன்னும் நாலு வகை சேர்த்து செய்ய வேண்டியது தானே….? உங்க அக்கா சாப்பிடுவாங்க.
ஷ்….விருந்தாளிங்க ஸ்பெஷல், கையை உருவிக் கொண்டாள்.
அவங்க விருந்தாளிங்க இல்லை சுப்பு… வீட்டு ஆளுங்க.
சரி…. எப்போவாவது ஒரு முறை வந்து போனாலும் விருந்தாளிங்க தான்.
என்ன பண்றாங்க உன் பெரிய்ய்ய்ய அக்கா?
இன்னும் எழுந்துக்கல…..!
அது சரி…. ரெஸ்ட் எடுக்கட்டும். கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தான் மணி ஆறே முக்கால்.
நம்ம தோட்டத்துக்கு போகலாமா?
இன்னைக்கு வேணாம்…. மதியம் அஞ்சலி அக்கா வராங்க.
இன்னைக்கு மட்டும் தான் எனக்கு லீவ் என்றவன் இறுக்கமாய் எழுந்து அறைக்கு போய் விட்டான்.
“—————————“
ஏழரைக்கு மேல் சாவதானமாய் எழுந்து வந்த சங்கீதா அய்யோ சுபி நான் காபி தானே குடிப்பேன் என்றாள்.
சரிங்கக்கா என்றவள் காபி போட்டு கொண்டு வந்தாள்.
சுப்பு டிபன் ரெடியா? என்று வந்து நின்றான் மன்னர்.
இதோ வடை மட்டும் தான் போடணும்! எண்ணெய் காயுது. சாப்பிட்டு போப்பா என்றார் பாப்பாத்தி.
சித்தப்பா என்று பின்னால் வந்து கட்டிக் கொண்டான் குகன்.
கை வலிக்குதா ராஜா என்றான் மென்மையாய் கரம் பற்றி.
நோ… சரியா போச்சு…. என்று அழகாய் சிரித்தான்.
சாப்பிடலாமா? குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டான்.
ரைடு போகலாம் என்றான்.
சரி வா என்று தூக்கிக் கொண்டான்.
ஊரை ஒரு முறை சுற்றி வந்தனர்.
சித்தப்பா இன்னும் ஒரு ரவுண்ட் ப்ளீஸ்…. கெஞ்சினான்.
குட்டிக்கு பசிக்கும். ஈவினிங் போகலாம் என்றான்.
நோ சித்தப்பா ஒன் ரவுண்ட் ப்ளீஸ் ஜாலியா இருக்கும்…. சிணுங்கினான்.
பிடிவாதம் பிடிக்க கூடாது குகன். கண்டிப்பான குரலில் கூறினான்.
குகன் சமர்த்தாய் தலையாட்டினான்.
டிபன் ரெடியாகிவிட சாப்பிட்டு கிளம்பினான் மன்னர்.
மதியம் சாமி கும்பிட வந்துடுங்க என்றாள் சுபி.
ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டியவன் ரொம்ப டல்லா இருக்க…. ஜூஸ் ஏதாவது போட்டு குடி என்றுவிட்டு கிளம்பினான்.
“————————–“
காலை உணவு முடிந்து மதிய சமையல் கையோடு தொடங்கி விட்டார் பாப்பாத்தி.
அத்தை நான் பெரிய மாமா வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சங்கீதா கிளம்பிவிட்டாள். அதே தெருவில் இரண்டு வீடு தள்ளி தான் மன்னரின் பெரியப்பா வீடு அதற்கு அடுத்த வீடு சித்தப்பா வீடு.
கிராமங்களில் பங்காளிகள் வீடு இப்படி பக்கத்தில் தான் இருக்கும்.
விரதம் இருப்பதால் சுபி சாப்பிடவில்லை.
ஜூஸ் போட்டு தரவா? என்றார் பாப்பாத்தி.
இல்லத்தை வேண்டாம் என்று விட்டாள்.
காலை சமைத்த பாத்திரமே மலைபோல் குவிந்து கிடந்தது.
நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா என்றார் மருமகளை.
இல்லத்தை மணி பதினொன்னு ஆகப் போகுது. இப்போ தொடங்கினா தான் மதியம் சமையல் முடிய சரியா இருக்கும்.
நான் பாத்திரம் தேய்க்கிறேன் என்றவள் கிச்சனில் நின்று கொண்டு இவ்வளவும் கழுவ முடியாது என்று அள்ளிக் கொண்டுப்போய் தோட்டத்தில் வைத்து தேய்த்து கழுவி கூடையில் கவிழ்க்கும் போது அவ்வளவு கழுத்து வலி இறுக்கி பிடித்தது.
நிறைய வேலை செய்து அவளுக்கு பழக்கம் இல்லை.
சின்ன வெங்காயம் உரிம்மா, இந்த உருளக் கிழங்கை தோல் உரிம்மா, பூண்டு மிளகு சீரகம் வைத்து அம்மியில் கொர கொரப்பா நுணுக்கி கொடும்மா. இப்படியாய் பாப்பாத்தி சொல்ல சொல்ல… சுபி செய்து கொண்டிருந்தாள்.
முக்கால்வாசி சமையல் முடிஞ்சுதும்மா, அப்பளம் பொரித்து பருப்பு பாயசம் வைக்கணும் வடை போட்டு எடுக்கணும் என்றார்.
வாசலில் கார் வந்து நின்றது. சரவணன் மனைவி மகனுடன் வந்து விட்டான்.
ம்மா பசிக்குது ஆயுஷ் வரும்போதே சிணுங்கினான்.
அத்தை உங்க பேரனுக்கு பசிக்குதாம் என்றாள் அஞ்சலி.
ராஜாகுட்டிக்கு பசிக்குதா? இரு ஜூஸ் போட்டு தறேன் என்றார்.
வாங்கக்கா, வாங்க மாமா என்று நலம் விசாரித்த சுபி குழந்தையை தூக்கிக் கொண்டாள்.
அவசரமாய் மாதுளை உரித்து ஜூஸ் போட்டு கொண்டு வந்த பாப்பாத்தி சுபி குழந்தைக்கு கொடுத்துட்டு நீ கொஞ்சம் குடிம்மா என்றுவிட்டு போனார்.
உடை மாற்றிக் கொண்டு வந்த அஞ்சலி மகனுக்கு ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டு மீதமிருந்ததை அவள் வாயில் சரித்துக் கொண்டாள்.
கிச்சனுக்கு வந்து நின்ற சுபியை கண்டவர் என்ன சுபி ஜூஸ் குடிக்கலையா? என்றார்.
இல்ல அக்காக்கு பசி போல…
சரி இந்த வாழைப்பழத்தை சாப்பிடு என்று ஒரு செவ்வாழைப் பழத்தை எடுத்து கையில் கொடுத்தார்.
இல்லத்தை வேண்டாம். இதோ சமையல் ஆகிடுச்சே என்றாள்.
எப்படியும் சாமி கும்பிட இன்னும் அரைமணி நேரம் ஆகும். அன்பாய் மிரட்டி சாப்பிட வைத்தார்.
“——————–“
பாகற்காய், புடலங்காய், கோவைக்காய் என்று ஒரு பை நிறைய பறித்துக் கொண்டு மன்னர் வந்து விட்டான்.
ஆயுஷ் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தான். சரவணன் செய்தி பார்த்துக் கொண்டிருந்தான்.
வாண்ணா என்று அண்ணனை வரவேற்றவன் ஹலோ ஆயுஷ் சார் ரொம்ப பிஸி போல என்றான் கிச்சு கிச்சு மூட்டி….
சித்தா என்று அவன் கன்னத்தில் முகம் புரட்டி சிரித்தான் ஆயுஷ்.
கிச்சனில் மிக்சி சத்தம்.
ம்மா சமையல் ரெடியா என்று குழந்தையை தூக்கிக் கொண்டே கிச்சனுக்கு சென்றான். சோர்வுடன் சுப்ராஜா மாவிளக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். பாயாசத்தில் முந்திரி திராட்சை தாளித்துக் கொட்டினார் பாப்பாத்தி.
இதோ ஆச்சுப்பா….. சங்கீதா பிள்ளைகளை கூட்டிகிட்டு உங்க பெரியப்பா வீட்டுக்கு போயிருக்கா அவளுக்கு ஒரு போன் போடேன் என்றார்.
பெரியப்பா முருகேசனுக்கு போன் செய்து சங்கீதாவை வர சொன்னான்.
பூஜை அறையில் ஒன்பது இலை போட்டு சோறு, குழம்பு, இரண்டு வகை பொரியல், பருப்பு நெய்,கூட்டு, வடை பாயாசம் அப்பளம் என்று இலையில் பரிமாறி மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றி நிறைவாய் சாமி கும்பிட்டனர்.
மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் என்று கூட்டமாய் குழுமி இருப்பது கண்டு அவ்வளவு சந்தோஷம் பாப்பாத்திக்கு.
பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இது போல் எல்லாருமாய் கூடி வாழ வேண்டும் என்று தான் ஏக்கம் இருக்கும்.
எழிலும் வந்திருந்தா நல்லா இருக்கும் என்றார் பூமாலை.
அம்மா எனக்கு இலை என்று துள்ளினான் குகன், அம்மா எனக்கும் என்றான் ஆயுஷ்.
கூடத்தில் அனைவரும் அமர்ந்தனர்.
இன்னைக்கு சன்டேயில் கிருத்திகை வந்திருக்கு பாருக்கா என்றாள் அஞ்சலி
அதை சொல்லு! குகனுக்கு சன்டேன்னாலே இறால் பிரியாணி, மட்டன் பிரியாணின்னு கேட்பான்.
ஆயுஷ் மட்டும் என்னவாம் சார் சிக்கன் பிரியர்.
இவர்கள் சிரித்து பேசிக் கொண்டு சாப்பிட மன்னருக்கு அவ்வளவு கோபம். சாமி கும்பிடும் நேரத்தில் இந்த பேச்சு தேவையா? ஒரு நாள் அசைவத்தை தியாகம் செய்தால் உயிரா போய் விடும்?
நேற்று இரவு கூட சப்பாத்தி சிக்கன் குருமா சாப்பிட்டார்களே…. அப்புறம் என்னவாம்?
சுப்ரஜா எல்லாருக்கும் பரிமாறவும் கிச்சனுக்கு சென்று ஏதாவது எடுத்து வரவுமாய் இருந்தாள்.
பாயாசத்தில் இனிப்பு இன்னும் கொஞ்சம் இருந்திருக்கணும் அத்தை என்றால் அஞ்சலி. சாம்பாரில் மாங்காய் கரைஞ்சுடுச்சு போல புளிப்பு அதிகம் என்றாள் சங்கீதா.
ம்மா மணி ஒன்னே முக்கால் ஆகுது அவளை சாப்பிட சொல்லுங்க! என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு போனான் மன்னர்.
பாப்பாத்திக்கு கிலி பிடித்துவிட்டது.
அவசரமாய் கிச்சனுக்கு ஓடியவர் சுபியை இழுத்து வைத்து ஒரு இலையை எடுத்து வைத்தார்.
செல்ல மருமகளுக்கு அத்தை ஊட்டிவிட போறாங்க போல….சங்கீதா கேலியாய் சிரித்தாள்.
சுபி விரதம்மா என்றார் தவிப்பாய்.
ஓ….என்ன வேண்டுதலோ என்றாள் சங்கீதா.
மன்னர் வந்து ஏதாவது கேட்டு விடுவானோ என்று பயம் அவருக்கு.
அவன் முகத்திற்கு எதிரே பேசிவிடும் ரகம் அல்லவா?
error: Content is protected !!