Skip to content
Post Views: 3,674
அத்தியாயம் 3
இப்பொழுது பாரியும் வில்வாவும் எட்டாம் வகுப்பும் கருணாம்பிகை ஆறாம் வகுப்பும் படிக்கின்றார்கள்.
Advertisement
அன்று காலை ஆறரை மணிக்கு எல்லாம் பாரியும் வில்வாவும் அவர்கள் ஏரியாவில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.
“டேய், வில்வா பிள்ளையாரை நல்லா வேண்டிக்கனும் டா. அவர் மட்டும் தான் நமக்கு உதவி செய்ய முடியும்” என்றான் பாரி.
Advertisement
Advertisement
“ஆமா டா பாரி, வா.. வேண்டிக்கிட்டு அப்படியே நூத்தியெட்டு சுத்தும் சுத்திடலாம்”
இருவரும் மனமுருக பிள்ளையாரை வேண்டிவிட்டு, நெற்றியில் பட்டையுடன் அவரவர் வீடு திரும்பினார்கள்.
Advertisement
“என்னடா அதிசயமா இருக்கு. நான் எழுப்பிறதுக்கு முன்னமே எழுந்திரிச்சு குளிச்சு இப்படி பட்டையோட வந்து நிக்குற?” என்று வில்வாவை பார்த்து கேட்டார் சுமதி.
“நீ வேற ஏம்மா? நான் அந்த பிள்ளையாரை மட்டும் தான் நம்பி இருக்கேன்” என்றான் வில்வா.
“அப்படி என்ன வேண்டுதல் வில்வநாதா?” என்று கேட்டுக்கொண்டு வந்தார் தாத்தா.
“தாத்தா, இன்னிக்கு எங்க ஸ்கூல்ல…”
“அதுக்குள்ளே எக்ஸாம் எல்லாம் வராதே.. ஸ்கூல் திறந்து ஒரு வாரம் தானே ஆகுது..” என்று இடை புகுந்தார் அப்பா.
வில்வா அனைவரையும் கடுப்பாக பார்த்தான்.
“எல்லாம் சகவாச தோஷம் அப்பா.. அவன் ஆருயிர் தோழன், கோவிலுக்கு கூப்பிட்டிருப்பான்.. அதனால நம்ம வீட்டு சாரும் போயிருப்பாரு” என்று வந்தாள் கருணாம்பிகை.
“பாருங்க ப்பா.. என் பிரண்ட் இவள விட பெரியவன் தானே? மரியாதை கொடுத்து பேச சொல்லுங்கப்பா”
“ஆமா ஆமா.. இவங்க இரண்டு பேரும் ரொம்ப பெரியவங்க… போடா அண்ணா.. நீ ஒரு டால்டா .. உன் நண்பன் ஒரு டால்டா..”
“கருணா..” என்று அப்பாவின் அதட்டலில், வாயை சுளித்து விட்டு அமைதியாக நின்றுகொண்டாள்.
“இதுக்கு தான் நாங்க காலையிலே சாமி கும்பிட்டோம். இன்னிக்கு எங்க ஸ்கூல்ல புது மாணவர்களுக்கும், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் குரூப் பிரிக்கிறாங்க. எங்க குரூப்க்கு இந்த குட்டி சாத்தான் வரக்கூடாதுன்னு பிள்ளையார் கிட்ட ஸ்டராங்கா வேண்டிக்கிட்டு வந்திருக்கோம்” என்றான் வில்வா வேகமாக.
“யார் குட்டி சாத்தான்.. ? “ என்று கருணாம்பிகை தன் தலையில் பாட்டி கட்டிக்கொண்டிருந்த ரிப்பனை இழுத்துக்கொண்டு சண்டைக்கு கிளம்பினாள்.
“நீதான்டி குட்டி சாத்தன்” என்று கூறி விட்டு, இவள் கையில் சிக்காமல் ரூமிற்குள் ஓடி சென்று கதவை சாத்திக்கொண்டான் வில்வா.
இவர்கள் பள்ளியில் அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் நான்கு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். நான்கு குழுக்களுக்கு இடையில் தான் எல்லா போட்டிகள் நடைபெறும்.
ஆறாம் வகுப்பில் தான் எந்த குழு என்று மாணவர்களை பிரிப்பார்கள்.
வில்வாவும் பாரியும் எப்பொழுதையும் போல, ஒரே குழுவில் தான் உள்ளார்கள்.
இந்த ஆண்டு கருணாம்பிகை ஆறாம் வகுப்பு என்பதால் அவர்கள் வகுப்பில் உள்ளவர்களை இன்று தான் குழுக்களாக பிரிக்க இருக்கிறார்கள். இவர்கள் குழுவில் அவள் தேர்வாக கூடாது என்பதற்காக தான் பிள்ளையார் அப்பனிடம் பலமான வேண்டுதலை வைத்துள்ளார்கள் இருவரும்.
பாரி வில்வாவின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்த சாந்தி மிஸ் தான் இவர்கள் குழு தலைமை ஆசிரியர். அவரும் சீதா லட்சுமி என்ற புது ஆசிரியரும் ஆறாம் வகுப்பின் ஒவ்வொரு பிரிவாக சென்று தங்கள் குழுவிற்கான மாணவர்களை தேர்வெடுத்து கொண்டிருந்தார்கள்.
“எந்த குழந்தையை எடுக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு இல்ல மிஸ்” என்றார் சீதாலட்சுமி சாந்தியிடம்.
“நாலு அஞ்சு டேலண்ட்டட் குழந்தைகள் இருந்தா தான் நம்ம டீம் ஜெயிக்க முடியும் மிஸ்” என்றார் சாந்தி.
அடுத்து கருணாம்பிகை வகுப்பிற்குள் சென்றார்கள் இருவரும்.
“எங்க குழுவிற்கு யார் எல்லாம் வர பிரியப்படுறீங்க, கையை தூக்குங்க” என்றார் சீதாலட்சுமி.
உடனே, “நான்” என்று முதலில் கையை தூக்கி இருந்தால் கருணாம்பிகை.
காலையிலே முடிவு செய்து விட்டாள். தன்னை இந்த குழுவில் சேர விடாமல் இருக்க கடவுளிடம் வேண்டிக்கொண்ட அண்ணனுக்கு பாடம் கற்றுகொடுப்பதற்காகவே.
“இவளா?” என்று சாந்தி மிஸ் அதிர்ச்சி அடைவதற்குள்,
“வெரி குட்.. எவ்வளவு ஆர்வமா இருக்க.. உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டார் சீதாலக்ஸ்மி.
‘இந்த பொண்ணு வேண்டாம்’ என்று செய்கை காண்பித்தார் சாந்தி மிஸ்.
அதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் கருணாம்பிகை கவனித்துவிட்டாள். அதனால் சீதா லட்சமி மிஸ்ஸின் கவனத்தை முழுதாக அவள் பக்கம் திருப்பிக்கொண்டாள்.
அவளது வீர தீர செயல்களை எல்லாம் எடுத்து விட்டாள்.
வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவோ செய்கை சாந்தி மிஸ் காட்டிய போதிலும், கருணாம்பிகையின் பேச்சில் கவரப்பட்ட சீதாலட்சுமி மிஸ் அவளை தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
“எவ்வளவு திறமையான பொண்ணு இல்ல மிஸ்?’ என்றார் வெளிய வந்ததும்.
“இப்ப தான் நான் உங்க கண்ணுக்கு தெரியறேனா?”
“ஏன் மிஸ்? என்னாச்சு?” என்றார் அவர் குழப்பமாக.
“அந்த பொண்ணை எடுக்காதீங்கன்னு எவ்வளவு ஆக்ஷன் காட்டினேன்?”
“என்ன ப்ராப்லம்? நல்லா பேசுறாளே?”
“ யாராவது டைம் பாம்பை மடியில கட்டிப்பாங்களா?அந்த பொண்ணு அப்படித்தான்”
“இதுவரைக்கும் பார்த்த குழந்தைகளிலே இந்த பொண்ணு தான் ரொம்ப பிரில்லியண்ட் டா பேசுனா”
“அது எல்லாம் நல்லா பிரில்லியண்ட் தான்”
“அப்புறம் என்ன மிஸ் பிரச்சனை “
“உங்களுக்கு சொன்னா புரியாது.. அனுபவிங்க” என்று நொடித்துவிட்டு சென்றுவிட்டார் சாந்தி மிஸ்.
“ரொம்பத்தான், நான் பார்க்காத பிள்ளையா? எந்த குழந்தையை எப்படி உருவாக்கனும் அப்படின்னு ஒரு ஆசிரியருக்கு தெரியனுமா இல்லையா? அது தெரியாம ச்ச..ச்ச.. இந்த பொண்ணு நம்ம குழுவிற்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம்ன்னு நான் காட்டுறேன்” என்று அவரும் முனங்கி கொண்டே சென்று விட்டார்.
சாந்தி மிஸ் வரும் வழியில் காத்துக்கொண்டிருந்தார்கள் வில்வாவும் பாரியும்.
“என்ன மிஸ்.. என் தங்கச்சிய செலக்ட் பண்ணலை தானே?” என்றான் வில்வா அவரிடம்.
“டேய்… அவ நம்ம குழுதான் வேண்டும்ன்னு வாலன்டியறா கேட்டு சேர்ந்திருக்கா … என்னால ஒன்னும் பண்ண முடியல..” என்று சோகமாக சொல்லி சென்று விட்டார்.
பாரி வில்வாவை முறைக்கவும், “என்ன எதுக்கு டா இப்ப முறைக்கிற?”
“காலையில அவ கிட்ட உளர்னீயா?”
“அது வந்து.. நாம ஏன் கோவில் போனோம்னு சொன்னேன்…”
‘அது தான்.. குட்டி பிசாசு வேணும்னே இப்ப நம்ம குழுவில் சேர்ந்திருக்கு.. எல்லாம் உன்னால தான்… ஓட்ட வாய்…” என்று அவன் மண்டையில் நங்கென்று கொட்டி விட்டு சென்றான் பாரி.
வில்வா நாள் முழுவதும் பாரியிடம் மன்னிப்பு கேட்டு, அவன் பின்னே சுற்றி கொண்டிருந்தான்.
அடுத்த மாதம் அறிவியல் கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்தார் முதல்வர்.
மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக தயாராக தொடங்கினார்கள் அறிவியல் கண்காட்சிக்கு.
சாந்தி மிஸ், கருணாம்பிகையின் வகுப்பை நேக்காக சீதாலட்சுமி மிஸ்ஸிடம் ஒப்படைத்துவிட்டார்.
“கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவது” என்ற பழமொழியை கேட்டுள்ளார் சீதாலட்சுமி. அப்படி என்றால் என்ன என்று தினமும் புரிய வைத்தாள் கருணாம்பிகை.
முழி பிதுங்கி பாவமாக சாந்தி மிஸ்ஸை பார்த்தார் அவர்.
error: Content is protected !!