Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமுதமழை சாரல்

அமுதமழை சாரல் 30

அத்தியாயம் 30 

“அப்புறம் தங்கச்சி எப்படி இருந்துச்சு டெல்லி பயணம் எல்லாம்” என்றார் முருகானந்தம் தாத்தா.



Advertisement

“எங்க பயணத்துக்கு என்ன அண்ணே?ரொம்ப ஜோரா இருந்துச்சு” 

“என்ன வீரராகு, நீ என்னடான்னா ஒரு வாரம் தங்கச்சி இல்லைன்னு, சோறு தண்ணி இல்லாம கவலையா இருந்தியே?ஆனா தங்கச்சி உன்னை பத்தி கவலை பட்டாப்ல தெரியலையே?”

Advertisement

Advertisement

“யாரு? இவரா? ஒரு நாள் என் பேத்தி சமைச்ச சாப்பாட்ட அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட முடியுமா, அவினாஷ் கால்ல இல்ல போய் விழுந்திருக்காரு? நாக்கு அம்புட்டு நீளத்துக்கு இருக்கு. யாரு எந்த சீமைக்கு போனாலும் வாய்க்கு வக்கணையா வேணும் அவருக்கு” என்று நொடித்துக்கொண்டார் பாட்டி.

“அப்படி இல்ல தங்கச்சி, வேதா தான் எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்னு ஆசை பட்டாப்புல. அதான் எல்லாரும் அங்கே போய் சாப்பிட்டோம். நீ வேண்ணா அவரையே கேட்டுப்பாரு” என்று வேதாச்சலம் தாத்தாவை கோர்த்து விட்டு, தன்  தேநீரை பருக ஆரம்பித்தார்.

Advertisement

பின், பாட்டி டெல்லியில் அவர்கள் பார்த்த இடங்களை பற்றியும் அங்கே நடந்தவைகளை பற்றியும் சுவாரசியமாக கூறிக்கொண்டிருந்தார்.

இவர்கள் அனைவரும் கருணா வீட்டின் முகப்பறையில் அமர்ந்து டீ  சிற்றுண்டியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கருணா, தர்மராஜ், சங்கரன், அவினாஷ், அருந்ததி என்று அனைவரும் வந்து இணைந்து கொண்டார்கள்.

பின் தமயந்தியும் சுமதியும் அங்கே இருந்து வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொடுத்தனர்.

அனைவருக்கும் அழகிய வேலைபாடுகளுடன் ஷால் வாங்கி இருந்தார்கள். மூன்று தாத்தாக்களுக்கும் ஒரே மாதிரி பைஜாமா குர்தாவும், அதே போல சங்கர் தர்மராஜிற்கு ஒன்று போல குர்தா, அவினாஷ் பாரி வில்வா மூவருக்கும் ஒரே மாதிரி குர்த்தா, என்று வாங்கி இருந்தனர்.

அருந்ததிக்கும் கருணாவிற்கும், சல்வார் கமீஸ் நிறைய வாங்கி வந்திருந்தனர்.

அருந்ததி ஆசையாக வாங்கிகொண்டாள்.

“இப்ப எதுக்கு இவ்வளவு வாங்கிருக்கீங்க? வீண் செலவு தானே?” என்றாள்  கருணா.

“எப்பவுமே  செலவை மட்டுமே பார்காதடீ, ஆசையா வாங்கிட்டு வந்திருக்கோம் இல்ல?” என்றார் சுமதி.

“சரி, உங்க மூனு பேருக்கும் என்ன வாங்குனீங்க?”

“எங்களுக்கு, ஸ்வெட்டர் ஸ்கார்ப் எல்லாம் வாங்கினோம். அப்புறம் வீட்டுக்கு பூஜை  சாமான்கள் கொஞ்சம் வாங்கினோம்” என்று ஒரு பெரிய பையை பிரித்து காட்டினார்.

“அம்மாடியோவ்.. இனி நீங்க மூனு பேரும் சேர்ந்து எங்கயாவது போங்க பார்த்துக்கிறேன். எவ்வளவு ஷாப்பிங்” என்ற கருணா, “ஏம்பாட்டி நீயும் எதுவும் சொல்லலையா?” என்றாள் பாட்டியிடம்.

“எங்க சொல்றது, கூடவே ராஜேஷ்வரியை வேற கூட்டிட்டு போனோமா, அவக்கூட சேர்ந்து இதை விட நாலு மடங்கு ஷாப்பிங் பண்ணி இருப்பாங்க. நான் கூட போனதால இதோட முடிஞ்சுது”

“சரி வில்வா பாரி நல்லா இருக்காங்களா?” என்றார் முருகானந்தம். அவருக்கு பாரியை பார்க்காமல் ஏக்கமாக இருந்தது. 

“ஜம்முன்னு மாப்பிள்ளை கணக்கா இருக்கானுங்க” என்றார் பாட்டி பெருமையாக.

“மாப்பிள்ளை நீ சொன்னதும் தான் தங்கச்சி நானும் பேசணும்னு நினைச்ச விஷயமே நியாபகம் வருது. பசங்க எல்லாரும் வளர்ந்துட்டாங்க. அடுத்து கல்யாணத்துக்கு பார்க்கலாமே ?” என்று முருகானந்தம் தாத்தா ஆரம்பித்தார்.

“மூனு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தானே.. யாருக்கு முதல்ல பார்க்கலாம்?” என்றார் வேதாச்சலம் தாத்தா.

“இங்க கருணா இருக்கா இல்லையா, கருணாவுக்கு முடிச்சிட்டு தான் வில்வாவிற்கு பார்க்கணும்” என்றார் பாட்டி.

“அது எல்லாம் அந்த காலம் சௌந்திரவள்ளி. கருணாம்பிகை இன்னும் படிக்க இரண்டு வருஷமாகும், அதுக்குள்ள வில்வநாதனுக்கு பார்க்கறது தான் சரின்னு படுது. நீ என்ன சங்கரா சொல்ற?” என்று மனைவியிடம் ஆரம்பித்து மகனிடம் முடித்தார்.

“நீங்க சொல்றதும் சரி தான் ப்பா. வில்வாவுக்கு முடிச்சிட்டே கருணாவிற்கு பார்க்கலாம்” என்றார் சங்கரன்.

 சுமதியும் ஆமோதிப்பக தலையாட்டினார். கருணா அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

கல்யாணப்பேச்சு எடுத்ததுமே பெரியவர்கள் அனைவரும் உற்சாகமாகி விட்டார்கள்.

அருந்ததியும் குஷியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் .

“மூனு கல்யாணத்தையும் நம்ம எல்லாரும் சேர்ந்து தான் முடிக்கணும்.. என்னால ஒத்தையில அவினாஷ் கல்யாணத்தை நடத்த முடியாது” என்றார் வேதாச்சலம் கரகரத்த குரலில்.

“மூனும் நம்ம பசங்க தானே அண்ணே, நீங்க சொல்லனுமா?” என்றார் கண்டிப்பான குரலில் பாட்டி.

“முதல்ல பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்” என்றார் வீரராகு தாத்தா.

“மூனு பேருக்குமே பார்ப்போம், யாருக்கு ஜாதகம் பொருந்தி எல்லாம் சரியா வருதோ அவங்களுக்கு முதல்ல முடிச்சிடலாம், அடுத்தடுத்து அமையவும் முடிச்சிடலாம்” என்றார் சுமதி.

“அதுவும் சரியாத்தான் இருக்கு” என்றார் முருகானந்தம் தாத்தா.

“இல்ல தாத்தா, எனக்கு இன்னும் ஒரு வருஷம் போகட்டும். பிசினஸ் ஆரம்பிச்சு கொஞ்சம் நிலையானதும் அப்புறம் பார்க்கலாம்” என்றான் அவினாஷ்.

“அவி சொல்றதும் சரிதான், முதல்ல பாரிக்கும் வில்வாவுக்குமே பார்க்க ஆரம்பிப்போம்” என்றார் வேதாச்சலம் தாத்தா.

“எதுக்கும் முதல்ல பசங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுப்போம், அவங்க மனசுல யாராவது இருந்தாங்கனா?” என்றார் தமயந்தி தயங்கிக்கொண்டே.

“நல்ல காரியத்தை தள்ளி போட வேண்டாம், உடனே இவனுங்களுக்கு போனை போடுங்க” என்றார் வீரராகு தாத்தா.

“நான் வீடியோ கால் பண்றேன்” என்று அருந்ததி தான் கால் செய்தாள்.

முதலிலே யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று போனில் அவர்களுக்கு காட்டிவிட்டாள்.

“அதானே, உங்க அண்ணாஸ்க்கு மட்டும் ஹெல்ப் பண்ணற வேலையை சரியா செஞ்சுடுவியே?”என்றான் அவினாஷ்.

“என்ன சின்ன பாப்பா, வட்டமேசை மாநாடு நடுக்குது, இதுல எங்களை அழைத்ததன் நோக்கம் என்னவோ?” என்றான் வில்வா நாடக பாணியில்.

“இந்த மாநாட்டின் முக்கிய தலைப்பு தாங்கள் இருவருமே” என்றாள் அருந்ததியும் அவனை போலவே.

“நீங்களும் இங்கேதான் இருக்கீங்களா தாத்தா?” என்றான் முருகானந்தத்தை பார்த்து பாரி.

“ஆமா வேந்தா, எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்”

“நல்லா இருக்கோம் தாத்தா, நீங்க எல்லாரும் கூட நாங்க இங்கே இருக்கும் போதே ஒரு தடவை டெல்லி வந்துட்டு போங்க தாத்தா”

“அதை அப்புறம் பார்க்கலாம். நாங்க ஒரு முக்கியமான விஷயமா கேட்க தான் போன் போட்டோம். உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு இல்ல?”

“அதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு  செய்வோமான்னு கேட்க போன் போட்டோம்” என்றார் தமயந்தி இடைபுகுந்து.

“அப்பாடா” என்றான் பாரி.

“இப்பயாச்சும் தோனுச்சே” என்றான் வில்வா.

இவர்கள் ரியாக்ஷனில் மொத்த குடும்பமுமே “ஆங்” என்று வாய் பிளந்து நின்றனர்.

“ஏன்டா? ஒரு பேச்சுக்காச்சும் இப்ப என்ன அவசரம் ? கொஞ்ச நாள் போகட்டும்? நாங்க ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்புறம் பாருங்க? இப்படி ஏதாச்சும் சொல்லாம் இல்ல?” என்றார் தர்மராஜ்.

“எதுக்கு? நீங்களே இப்பதான் ஆரம்பிச்சிருக்கீங்க? நாங்க ஒரு பேச்சுக்கு சொல்லி, உடனே நீங்க சரின்னு சொல்லிட்டா?” என்றான் பாரி.

“அதானே” என்றான் வில்வா.

அனைவரும் கொல்லென்று சிரிக்க தொடங்கினார்கள்.

“பாப்பா ஐ ஈ எஸ் முடிக்கணும்னு சொல்றா… அவி பிசினஸ் ஆரம்பிக்கணும்னு சொல்றான்.. அப்படி நீங்களும் லட்சியம் ஏதாவது வச்சிருப்பீங்கன்னு கேட்டோம்” என்றார் சுமதி.

“அது எல்லாம் ஒன்னும் இல்லை, நாங்க சென்னை வர இன்னும் ஏழு எட்டு மாசம் இருக்கு, வந்ததும் கல்யாணத்தை வைச்சுக்கலாம்” என்றான் பாரி.

“ஆல்ரெடி லேட்டா தான் கேட்டு இருக்கீங்க. சட்டுபுட்டுன்னு வேலையை ஆரம்பிங்க” என்றான் வில்வா.

அனைவர் முகமும் மலர்ந்து இருந்தது.

“அண்ணாஸ் இந்த கால் முக்கியமா எதுக்குன்னு நான் சொல்றேன்” என்றாள் அருந்ததி துள்ளலாக.

“சொல்லு பாப்பா” என்றான் பாரி.

“பொண்ணு பெரியவங்க பார்க்கணுமா நீங்களே பார்த்து வச்சிருக்கீங்களா?” என்று அருந்ததி கூறவும்,

“இவனுங்க ஒருத்தரை ஒருத்தர் மட்டும் தானே பார்த்துகிட்டு இருக்காங்க பொறந்ததுல இருந்தே. வேற யாரையும் பார்த்து இருக்கவும் மாட்டாங்க, இவனுங்களை பார்த்தாலும் கவனிச்சிருக்க மாட்டாங்க” என்றாள் கருணா சிரித்துக்கொண்டே.

“அதச்சொல்லு” என்றார் பாட்டியும்.

“அதான் நீங்களே சரியா சொல்லிட்டீங்களே.. நாங்க எந்த பொண்ணையும் பார்க்கலை, நீங்க தான் பார்க்கணும்” 

“எந்த மாதிரி பொண்ணு வேணும்? உங்க எதிர்பார்ப்பு என்னனு சொல்லுங்க” என்றார் சங்கரன்.

நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.

“எங்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான்.. 

எங்களுக்கு ஓரே நாள்ல

ஒரே முஹுர்த்தத்துல

ஒரே மண்டபத்தல்ல 

ஒரே மண மேடையில ..”

என்று மாறி மாறி கூறிக்கொண்டே செல்லவும்,

“டேய்..” என்றனர் அங்கே இருந்து கோரஸ்ஸாக அனைவரும், அடுத்து என்ன சொல்லுவார்களோ என்ற பீதியுடன்.

“எங்களை மாதிரியே ஒற்றுமையா,

சண்டையே போட்டுக்காத,

பிரண்ட்ஸ்ஸா இருக்கிற,

ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காத,

பொண்ணுங்களா பாருங்க”

கிழிஞ்சது என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்கள் அனைவரும்.

“எனக்கு பார்க்கிற பொண்ணு பாரி மாதிரி இருக்கணும்” என்றான் வில்வா.

“எனக்கு வர மனைவி வில்வா மாதிரி இருக்கணும்“ என்றான் பாரி.

இருவரும் ஒருவரை ஒருவர் தோளோடு அணைத்துக்கொண்டு கலங்கிய கண்களுடன் அலைபேசியை பார்த்தனர்.

“டேய், இது எல்லாம் நடக்கிற காரியமா?“ என்றார் சங்கரன் நொந்துபோய்.

“லூசு பயல்களே” என்று தலையில் அடித்துக்கொண்டார் பாட்டி.

“அம்மா, அத்தை நீங்க தான் நாங்க சொல்ற மாதிரி பொண்ணு பார்க்கணும்” என்றனர் தமயந்தி சுமதியை பார்த்து.

அவர்கள் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஒன்னும் அவசரமில்லை. நாங்க சென்னை வரதுக்குள்ள பார்த்துடுங்க போதும்” என்றனர் நண்பர்கள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பாரிக்கு ராஜியிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“இருங்க ராஜிம்மா கூப்பிட்றாங்க, என்னனு கேட்டுட்டு  வரேன்” என்று பாரி சற்று  தள்ளி சென்று ராஜியின் அழைப்பை ஏற்றான்.

அலைபேசியை ஏற்று, பின் பதட்டமாக “நாங்க உடனே வரோம் பயப்படாதீங்க என்று கூறிக்கொண்டே, “வில்வா ராஜிம்மாக்கு நெஞ்சு வலிக்குதாம், சீக்கிரம் வா என்றான்”

“என்னடா சொல்ற?” என்று அங்கே வீடியோ அழைப்பில் இருந்தவர்கள் பதறவும்,

“தர்ஷ் காலேஜ் பிரண்ட்ஸ் கூட ட்ரெக்கிங் போயிருக்கான், அவங்க தனியா இருக்காங்க. நாங்க போய் பார்த்துட்டு என்னனு சொல்றோம்” என்று அழைப்பை கட் செய்துவிட்டு இருவரும் விரைந்தனர்.

செல்லும் வழியிலே ஆம்புலன்ஸிற்கும் அழைத்துவிட்டனர்.

லேசாக நெஞ்சு வலிக்கும் பொழுதே இவர்களுக்கு அழைத்துவிட்டு கதவை திறந்து வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டார் ராஜி.

இவர்கள் செல்லும் போது  பார்த்தது, முகமெல்லாம் வேர்த்து, மயக்க நிலையில் இருந்தவரை தான்.

ஆம்புலன்ஸும் உடனே வந்து விடவும், அவரை உடனடியாக அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!