Skip to content
Post Views: 1,894
அத்தியாயம் 39
வீரராகு தாத்தா சௌந்திரவள்ளி பாட்டி முன்னின்று, அவர்கள் ஊரில் கோலாகலமாக நடந்தது நிச்சயதார்த்த விழா.
Advertisement
உண்மையில் இதுவே திருமணம் போலத் தான் நடந்தது.
கருணாம்பிகை, பட்டுப்புடவையில் பாந்தமாக வளைய வந்தாள்.
Advertisement
Advertisement
அவினாஷின் பார்வை கருணாம்பிகையின் மீதே இருந்தது. பொங்கும் பிரவாகம் போல அவன் நெஞ்சத்தில் கருணாவிற்கான நேசம் பொங்கி ஊற்றாக வழிந்துகொண்டிருந்தது. அனைவரும் விழாவில் கவனமாக இருந்ததால் அவினாஷின் பார்வையை கவனிக்கவில்லை.
பாரியும் வில்வாவும் ஒரே மாதிரி உடை அணிந்து பூரிப்பாக இருந்தார்கள். ஆனால் மணப்பெண்களோ, எதிலுமே ஒரே மாதிரி இருக்க கூடாது என்று மெனக்கெடலுடன் தலை அலங்காரம் முதல், உடையின் நிறம் வரை வேறு வேறாக தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார்கள்.
Advertisement
அருந்ததி “இனி நீங்க அக்காஸ் இல்ல.. அண்ணிஸ்” என்று இருவருடனும் பேசிக்கொண்டே மாறி மாறி இருவருக்கும் உதவி கொண்டிருந்தாள்.
விக்ராந்த் ராஜியிடம், “பெண்ணோட கல்யாணம்னா நிறைய வேலை இருக்கும்னு சொல்லுவாங்க, இங்க நம்ம ரெண்டு பொண்ணுங்களுக்கு ஒரே நேரத்துல கல்யாணம். ஆனா மாப்பிள்ளை வீட்டுகாரங்களே போட்டி போட்டு எல்லா வேலையும் செய்றாங்களே ராஜி, நாம செய்ய ஒன்னும் பெருசா இல்லையே?” என்றார்.
“ஆமா விது.. ஆனா எவ்வளவு சொந்தகாரங்க வந்திருக்காங்க, நீங்க போய் எல்லார்கிட்டயும் பேசிட்டு இருங்க..”
வந்தவர்களை இன்முகமாக வாங்க என்று வரவேற்றுவிட்டார். அதற்கு மேல் என்ன பேசுவது என்று அமைதியாக ராஜியுடன் நின்றுகொண்டார்.
ராஜியோ நிற்காமல் இங்கும் அங்கும் ஓடி அனைவருடனும் அளவலாவி கொண்டிருந்தார். இவர் திண்டாடுவதை பார்த்த ஸ்ரீனிவாசன், அவரது மகள் ப்ரதிக்ஷாவை விக்ராந்த் கையில் கொடுத்து சென்றார். அவரும் சீதாவும் அவர்கள் பக்க உறவுகளை கவனித்து கொண்டனர். பாட்டி பேத்திகளுடன் அவர்கள் அறையில் இருந்து கொண்டார்.
விக்ராந்தும் மருமகளை வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்துகொண்டார்.
அலுங்காமல் குலுங்காமல் அமைதியாக இருந்த மாமன் கையில் சொகுசாக அதுவும் நிம்மதியாக அடைக்கலமானது.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் அங்கே இருந்து பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். அனைவரும் அன்று மாலையே சிவகங்கை சென்று சேர்ந்தார்கள். மறுநாள் திருமணம்.
ஊரே திருவிழா போல காட்சி அளித்தது. முருகானந்தம் தாத்தா ஊர் முழுவதும் மணமக்களின் போட்டோக்களை பிளெக்ஸ் வைத்து அமர்க்களப் படுத்தி இருந்தார்.
கருணாவிற்கு, ‘எதுக்கு இவ்வளவு ஆடம்பர செலவு..’ என்று எண்ணமே! நிச்சய விழாவிலும் அவளுக்கு இது தான் எண்ணம். ஒரு வேலை உணவிற்கு வழி இல்லாமல் பல்லாயிரம் மக்கள் தவிக்கையில், இப்படி ஆடம்பர செலவு அவளுக்கு ஒப்ப வில்லை, இருந்தாலும் குடும்பத்தாரின் மகிழ்ச்சியை கெடுக்க விருப்பமில்லாமல் அமைதியாக இருந்தாள்.
இரவு அனைவருக்கும் தங்குவதற்கான ஏற்பாடுகளை பாரியின் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வீட்டு அனைத்து விஷேசங்களிலும் தர்மராஜ் ஓடியாடி வேலை செய்திருந்ததால் பாரியின் கல்யாணத்தில் அனைவரும் இழுத்து போட்டு வேலைகளை செய்தார்கள்.
சிவகங்கைக்கு வந்ததும், வேதாச்சலம் தாத்தா அவரது நண்பர் அனந்தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
“நாம அவரை கல்யாணத்திற்கு அழைச்சிருக்கோமே அப்பா, நாளைக்கு அவங்க குடும்பத்தோடு வந்துடுவாங்க. நாம கல்யாணம் முடிஞ்சதும் போய் பார்க்கலாம்” என்றார் தமயந்தி.
அவினாஷ் தர்மாரஜோடு வந்து முன்னமே அவரை அழைத்திருந்தான். இவர்கள் வாழ்வின் திருப்பத்திற்கான முக்கிய காரணம் அவரல்லவா?
மாலை முருகானந்தம் தாத்தா வீட்டு தோட்டத்திலே விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தமயந்திக்கு பழைய நியாபகங்கள்.
“என்ன அத்தை அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததுவே வா? என்று கேட்டுக்கொண்டே அவரிடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் கருணா.
“ஆமாடா.. நாம எல்லாம் வந்தாச்சு, அங்க பாரு கல்யாண பொண்ணுங்க கூட வந்துட்டு இருக்காங்க, எங்க மாப்பிள்ளைகளை காணும்?”
“ஹா ஹா.. ஓவர் அலும்பாத்தான் இருக்கு அத்தை அங்க.. அவினாஷ் ரெண்டு பேரையும் கிளப்பிகிட்டு இருக்காரு”
“என்ன தமயந்தி, உன் செல்ல பாப்பா தான் உனக்கு மருமகளா வரும்னு இல்ல நாங்க எல்லாரும் நினைச்சுகிட்டு இருந்தோம், இப்ப வேற பொண்ணை இல்ல பார்த்திருக்கீங்க?” என்று கேட்டார் பாரியின் பெரியம்மாவின் நாத்தனார்.
கருணாவும் தமயந்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்து கொண்டனர்.
“நான் பாரிவேந்தனுக்கு தோழி ஆன்ட்டி.. “
“இருந்தாலும் சின்னதுல அத்தை அத்தைன்னு வாய் நிறைய கூப்பிடுவ.. தமயந்தி பின்னாடியே சுத்திட்டு இருப்ப, அவளை யாரும் ஒரு சொல் சொல்ல விட மாட்ட.. நீயே அவளுக்கு மருமகளா வந்திருந்தா உங்க அன்யோன்யம் நீடிச்சு இருக்கும் இல்லையா.. இப்ப வேற ஒரு பொண்ணு வந்தப்புறம் உன்னால பழைய மாதிரி இருக்க முடியுமா?”
அந்த பெண்மணியும் விடுபவராக தெரியவில்லை.
“இப்பவும் நீங்க சொன்ன எதுவும் மாறிடலையே? எங்க அன்யோன்யம் நிலைச்சு இருக்க எங்களுக்குள்ள இருக்க அன்பு மட்டுமே போதும்”
“நீ என்ன தான் சொன்னாலும் அத்தைன்னு மருமகள் உரிமையா கூப்பிட்டா, நீ ஒரு படி கீழே தான்”
“இப்ப உங்க அண்ணாவுக்கு நாலு குழந்தை பிறந்தா, நாலாவது குழந்தைக்கு நீங்க அத்தை இல்லாம சித்தின்னு ஆகிடுவீங்களா?”
“ங்கே ..” என்று அந்த பெண்மணி விழிக்கவும் தமயந்தியும் கருணாவும் ஹை பை கொடுத்து கொண்டனர்.
“அதானே உன்கூட பேசி ஜெயிக்க முடியுமா? சரி சரி நான் வரேன்” என்று அவர் நகர்ந்து விட்டார்.
“பாப்பா, இந்த லெஹங்கா பிளவுஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு, இங்க நிறைய பேர் கண்ணு உன் மேல தான் இருக்கு பாரு” என்றார் தமயந்தி கருணாவிடம்.
“நீங்க மட்டும் என்ன அத்தை, அங்க பாருங்க எங்கே இருந்தாலும் மாமா கண்ணு உங்க மேலே தான்” என்றாள் கருணா பதிலுக்கு.
சரியாக அந்த நேரம், தர்மராஜின் நண்பர்கள் வந்திருக்கவும், “தமா, இங்கே வாம்மா” என்று தர்மராஜ் தமயந்தியை அழைத்தார்.
கருணாவின் பார்வையில் சிவந்த முகத்துடன் தமயந்தி எழுந்து சென்றார்.
“கருணா, நீயும் அருந்ததியும் போய் பொண்ணுங்க பக்கத்துல நில்லுங்க” என்று சுமதி வந்து இருவரையும் மேடையில் ஏற்றி விட்டார்.
அவினாஷும் தர்ஷனும் மாப்பிளையை அழைத்து வந்து மேடை ஏறினார்கள்.
இரு ஜோடிகளும் பார்ப்பவர்களை குளிர்வித்தார்கள்.
சீதாலட்சமி, ஸ்ரீனிவாசன், பாட்டி, ராஜி, விக்ராந்த் என்று பெண் விட்டார் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். ப்ரதிக்ஷா மாமா மடியில் தான் இப்பொழுதும்.
“ரிசெப்ஷன் பொண்ணு வீட்ல வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு இப்பவே அதையும் முடிச்சிட்டாங்க பாரேன்” என்றார் விக்ராந்த் ராஜியிடம்.
அதில் பெருமையே அவருக்கு.
“என் பேத்திகளை பார்க்க எவ்வளவு அழகா இருக்காங்க இல்ல சீதா.. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்னு” என்றார் பாட்டி மகளிடம்.
“ஆமாம்மா நம்ம கண்ணே பட்டுடும் போல.. “
“மாப்பிளைங்க மட்டும் என்ன .. ராஜாங்க மாதிரி தான் இருக்காங்க” என்றார் ஸ்ரீனிவாசன்.. அவருக்கு வில்வாவையும் பாரியையும் அவ்வளவு பிடித்தது. கலகலப்பாக அனைவரையும் வைத்துக்கொள்வது என்பது எல்லாருக்கும் வராது அல்லவா? தாங்களும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு மற்றவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கும் அவர்களுது குணம் அவரை பெரிதாக கவர்ந்தது”
“உண்மையாவே ஜோடி பொருத்தம் சூப்பர் தாங்க” என்றார் சீதா.
“ஏன் விது, இந்த குட்டி, என்கூட போட்டிக்கு வந்துடுவா போலயே? எப்பவும் உங்க மடி மேலே ஒய்யாரமா உக்காந்துட்டு இருக்காளே?”, என்றார் ராஜி எப்பவும் போல சத்தமாக.
“ஷ்… ஷ்…” என்ற விக்ராந்தின் குரலில்
‘க்ளுக்’ என்று சிரித்து விட்டனர் சீதாவும் பாட்டியும்.
ஸ்ரீனிவாசன் மட்டும், சிரித்தால் விக்ராந்த் என்ன நினைப்பார் என்று பயந்துகொண்டு, வந்த சிரிப்பையும் அடக்க முடியாமல் விக்ராந்தை பார்த்து பாவமாக முழித்தார்.
அதை பார்த்து விக்ராந்தும் சிரித்து விட்டார்.
சற்று நேரத்திலே கூட்டம் அதிகம் என்பதால், மணமக்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் கீழே வந்து விட்டார்கள்.
பரிசு கொடுப்பது போட்டோ எடுப்பது என்று நேரம் சென்றது.
ஒரு பக்கம் உணவும் ஆரம்பமானது.
அருந்ததியை ராஜி அவர்களுடன் அழைத்து கொண்டார்.
சுமதி சங்கரன் ஒரு புறம், தர்மராஜ் தமயந்தி ஒரு புறம், தாத்தா பாட்டி ஒருபுறம் என்று விருந்தினர்களை கவனித்து கொண்டிருந்தார்கள்.
வேதாச்சலம் தாத்தாவை முருகானந்தம் தாத்தா உடன் நிறுத்திக்கொண்டார்.
கருணா அமைதியாக ஒருபுறம் வந்துவிடவே,
“என்ன கருணா? பலத்த யோசனை மாதிரி இருக்கு” என்று அவளிடம் வந்தான் அவினாஷ்.
“நம்ம கல்யாணத்துக்கு இப்படி செலவு எல்லாம் செய்ய கூடாது, சிம்பிள்லா நடந்தா போதும்..” என்றாள் கருணா.
அவினாஷிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
“கருணா… “
“எதுக்கு அதிர்ச்சி ஆகுறீங்க.. நேசத்தை சொல்லி தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இருக்கா என்ன?”
அவன் இல்லை என்று தலை ஆட்டவும்,
“ உங்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கா என்ன?”
அவன் மீண்டும் இல்லை என்று தலை ஆட்டவும்,
“உங்க குரலோடு தான் நான் என்னோட ஒவ்வொரு நாளையும் செலவழிச்சிட்டு இருக்கேன். இப்ப எதுக்கு இந்த அமைதி?”
பதில் கூறாமல் சிரித்து கொண்டான்.
இவர்கள் இருவரும் தனியே பேசுவதை பார்த்த ராஜியும் அருந்ததியும் ‘இன்னிக்கு இவங்களை பத்தி நாம கண்டுபிடிச்சே ஆகனும்ன்னு’ என்று யாருக்கும் தெரியாமல் உணவுகளை எடுத்து கொண்டு இவர்களுக்கு பின்புறம் சற்று அருகில் இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டனர்.
கருணா, “நிஜமாலுமே அவினாஷ்.. எத்தனை பேரு ஒரு வேலை உணவு கூட இல்லாம இருக்காங்க தெரியுமா? அதுவும் நான் ஆப்பிரிக்காவுக்கு போனப்போ, நம்ம நாடே பரவாயில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன், அடிப்படை வசதி கூட இல்லாமல் எத்தனை கிராமங்களே இருக்கு தெரியுமா? நம்ம கிட்ட காசு இருக்குன்னு இப்படி செலவு செய்றது தப்பு தானே?” என்றாள் தீவிரமான குரலில்.
அவினாஷ் மறுப்பாக பார்க்கவும்,
“என்னமோ தெரியலை, என்னால இந்த ஆடம்பரத்தோடு ஒன்ற முடியலை..”
“நீ எப்பவும் சொல்றதுதான் கருணா, காட்சி ஒன்று தான்.. நம்ம பார்வைகள் தான் வேற வேற..”
“அப்ப உங்களுக்கு நான் சொல்றதுல உடன்பாடில்லையா? இதுல உங்க பார்வை வேற விதமா இருக்கா?”
“அப்படி சொல்ல வரலை கருணா, எல்லாரும் சாப்பிட ஆர்மபிச்சிட்டாங்க.. வா நாமளும் சாப்பாடு எடுத்துட்டு வந்து பேசுவோம்”, என்று அவளையும் அழைத்து சென்று உணவுகளை இருவரும் எடுத்து வந்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
“நான் ஒன்னு கேக்குறேன், இப்ப இந்த செலவு இங்கே செய்யாம இருந்தா, நீ சொல்ற வறுமை மாறிடுமா? இல்ல எங்கோ இருக்கிற ஆப்பிரிக்கா கிராமங்கள் இதனால பாதிக்க படப்போகுதா?”
“அது எனக்கும் தெரியும், நான் சொல்றது ஆடம்பர செலவு வீண் செலவுன்னு தான்..”
“நீ இதை வீண் செலவுன்னு சொல்ற.. நான் இதை பல பேர்களோட வாழ்வாதாரமா பார்க்கிறேன்”
“இப்ப நம்ம சாப்பிடற சாப்பாட்டையே எடுத்துக்கோ, இதை சமைக்கிறவங்க, சமைக்கிற பொருட்களை விக்குறவங்க, இதை பரிமாறுறவங்க, சுத்தம் செய்றவங்க, இந்த பாத்திரங்களை வாடகைக்கு கொடுக்கிறவங்க.. இப்படி எத்தனை பேர்களுக்கு இது ஒரு வேலை வாய்ப்பு, ஒரு நாள் வருமானம். அதே மாதிரி மேடை அலங்காரம், மைக் செட், இந்த டேபிள் சேர்கள்.. இப்படி ஒவ்வொரு செலவிலும் ஒவ்வொருத்தரோட பிசினஸ் இருக்கா இல்லையா?”
கருணா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.
இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த ராஜியும் அருந்ததியும் நொந்தே போயினர்.
“அட பாவிங்களா … “ என்று ஒருவரை ஒருவர் பார்த்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.
“பாருவும் வில்லுவும் சொல்ற மாதிரி இவங்க ரெண்டு பேரும் சேவை கடமைன்னு தான் இருப்பாங்க போல… வா சின்னு.. இவங்க பேசறதை கேட்டு மண்டை காஞ்சு போயிடுச்சு. நாம் போய் சில்லுன்னு ஐஸ் கிரீம் சாப்பிடுவோம்” என்று சென்றுவிட்டார்கள்.
“நீங்கி சொல்றதும் ஒரு வகையில சரியா இருக்க மாதிரி இருக்கு” என்றாள் கருணா அரை மனதாக.
“இன்னும் என்ன ஓடுது இந்த சின்ன மண்டைக்குள்ள?”
“இருந்தாலும் நம்ம கல்யாணம் சிம்பிள்லாவே இருக்கட்டும் அவினாஷ்”
“ஹா ஹா ஹா.. கண்டிப்பா சிம்பிள்லா தான் இருக்கும்” என்றான் அவினாஷ்.
சில நிமிடங்கள் இருவரும் அமைதியாகவே இருந்தனர்.
“எனக்கு சீக்கிரமா நம்ம கல்யாணம் நடக்கணும்னு ஆசையா இருக்கு” என்றான் அவினாஷ் மெல்ல.
“இன்னும் நமக்குள்ள இருக்க தடைகள் அப்படியே தான் இருக்கு”
“தடைகளை மீறி நேசம் வளர்ந்து நிக்குதே?”
“நீங்க பிசினஸ் இன்னும் ஆரம்பிக்காம இருக்கிறதே அதனால தானே?”
“நீ சின்ன வயசுல நான் என்னவா ஆகணும்னு என்கிட்டே கேட்ட பாரு.. அப்ப நான் சொன்னது பிசினஸ் பண்ணி நல்ல நிலைமைக்கு வரனும்னு.. அப்படி தானே?”
“ஆமாம் “
“நல்ல நிலைமைக்கு வரனும்ன்றது தான் என்னோட ஆசை.. எல்லார் முன்னுக்கும் நல்லா வாழணும்னு.. சொந்தமா வீடு வாங்கணும், தாத்தாவையும் பாப்பாவையும் நல்லா பார்த்துக்கணும், பாப்பாவை நல்லா படிக்க வைச்சு, சீரும் சிறப்புமா அவ கல்யாணத்தை நடத்தி வைக்கணும், அது தான் என்னோட ஆசை. இதுல பாப்பா கல்யாணம் மட்டும் தான் பாக்கி.. அதுக்கு பிசினஸ் எல்லாம் தேவை இல்லைன்னு இப்ப முடிவு செஞ்சிட்டேன். இப்ப இருக்க வேலை மாதிரி எனக்கு வேற எங்கே போனாலும் நல்ல வேலை கிடைக்கும். டெல்லினாலும் கிடைக்கும், இந்த வேலையிலேயே கை நிறைய நல்லா சம்பாதிக்கிறேன். இன்னும் பெரிய பெரிய பொசிஷனுக்கு என்னால போக முடியும்..”
“இது எனக்கான காம்ப்ரமைஸ்ஸா?”
“கருணாம்பிகை தேவி தவமிருந்து அவினாசியப்பர் கிட்ட சேர்ந்தாங்களாம். ஆனா இங்கே இந்த அவினாஷ் தவம் இருக்கிறேன் என்னோட கருணாம்பிகையுடன் சேர்றதுக்காக.. என்னோட தவம் நிச்சயமா காம்ப்ரமைஸ் இல்ல..”
கருணாவிற்கு அவன் அன்பின் ஆழத்தில் கண்கள் கசிந்தது…
“அவினாஷ்…” என்றாள் உணர்ச்சிவசமாக.
மீண்டும் சில நிமிடங்கள் மௌனம்.
“நாளைக்கு இவங்க கல்யாணம் முடிஞ்சதும் வீட்ல சொல்லிடுவோமா?”
இப்பொழுது கருணா அமைதியாக தலை ஆட்டினாள்.
“எனக்கு சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை. எப்பவுமே என் கை வளைவில் என் மனைவி இருக்கணும்னு”
கருணா குறும்பாக அவனை பார்த்தாள்.
“கை வளைவுக்குள்ள பொத்தி வைக்க கருணா பூங்கொத்து இல்லையே.. அவள் சூறாவளி காற்றாச்சே!
ஆனா இந்த சூறாவளி காற்றோடு சேர்ந்து சுழலத்தான் இப்ப எனக்கு பிடிச்சிருக்கு “
எத்தனை அன்பு என்மேல் என்று கருணா ஆசையாக அவினாஷை பார்த்தாள். அவள் கண்களில் நேசமும் காதலும் பெருக்கெடுத்து பொங்கியது.
“கண்ணம்மா.. “ என்றான் அவினாஷ் அடிமனதிலிருந்து…
அந்த ஒரே அழைப்பில் அவினாஷின் மொத்த காதலும் கசிந்து பெண்ணவளின் மனத்தை உருக்கியது.
அவினாஷின் அன்பின் ஆழத்தை உணர்ந்து பேச்சற்று நின்றாள் பேச்சாளினி.
…………………..
error: Content is protected !!