Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 25

அம்மையப்பன் 25

 

பவளத்தின் விழிகளில் கண்ணீர் வைகை போல் பொங்கிக் கொண்டிருந்தது..

 



Advertisement

சில மணிநேரம் முன்பு அவரின் விழிகளில் வழிந்த கண்ணீரில் தன் வாழ்வு குறித்தான துயரம் இருந்தது என்றால்.. இப்போது தன் கணவன் குறித்தான மகிழ்வு இருந்தது.. 

 

தன் கணவன் தனக்கு துரோகம் செய்யவில்லை என்ற நினைவே அவரின் மனதின் பெரும் சுமையை குறைத்திருந்தது.. தனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்.. 

Advertisement

 

Advertisement

தன் கணவர் மனதால் மட்டுமின்றி உடலாலையும் தனக்கு துரோகம் செய்ய முடியாது இருந்திருக்கிறார்.. அவரின் மனம் முழுவதும் நான் மட்டும் தான் இருக்கிறேன் என நினைத்து பெரும் உவகை கொண்டவரை திருச்செல்வத்தின் குரல் கலைத்தது..

 

நம்ம மவ பொறக்கும் போது எப்படி இருப்பா தெரியுமா.. அப்படியே ரோசா பூவாட்டம் இருப்பா பவளம்.. என விழிகள் மின்ன திருச்செல்வம் கூற.. பவளம் தன் கணவரையே விழி எடுக்காது பார்த்தார்..

Advertisement

 

அவரின் பேச்சிலிருந்தே அதி அவருக்கு எவ்வளவு முக்கியம் என பவளத்திற்கு புரிகிறது.. ஆனாலும் ஏன் அவளை பிரிந்தார்.. இதனை எல்லாம் தன்னிடம் முன்பே சொல்லியிருக்கலாமே என அவர் மீண்டும் தனக்குள் மூழ்க.. திருச்செல்வம் அவரை கலைத்தார்..

 

தன் மகளை முதன் முதலில் தன் கரத்தில் ஏந்திய தருணத்தை பெரும் மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறி கொண்டிருந்தார்.. 

 

*******************************

 

வெண்மை நிற துவாலையில், பன்னீர் ரோஜாவை பாலில் அரைத்த நிறத்தில்.. ஒரு பூக்குவியலை சுற்றி கொடுக்க.. சகோதரர்கள் இருவரும் அப்பூமகளின் அழகில் சொக்கித்தான் போனார்கள்..

 

குழந்தையை முதலில் திருச்செல்வம் தான் வாங்கினார்.. அவளை வாங்கும் போதே அவர் உடலிலும் மனதிலும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட.. தன்மகள் என பெருமையும் பூரிப்பும்மாக, குழந்தையின் நெற்றியில் மென் முத்தம் வைத்தார்… தந்தையின் மீசை முடி குத்தியதில் அவள் சற்று முகத்தை சுருக்க.. அதன் அழகில் இருவரும் மயங்கினர்..

 

அச்சோ என்ற தங்கத்துக்கு வலிக்குதாடா.. ஐயா மீசைய எடுத்துடடுட்டுமா.. என திருச்செல்வம் கொஞ்சலாக கேட்க..

 

அவரின் குட்டியம்மணி முறைத்தாள்..

 

அச்சோ பாத்திங்களா ண்ணே குட்டி தங்கம் முறைக்கிறத என மகிழ்ச்சியும் பெருமையுமாக திருச்செல்வம் சொல்ல, திருநாவுக்கரசு விழிகள் கசிய இருவரையும் பார்த்தார்.. 

 

நம்ம மக பார்க்க அம்மா போல இருக்காளடா.. என திருநாவுக்கரசு கேட்க.. திருச்செல்வம் மகிழ்ச்சியாய் தலையசைத்தார்..

 

தன்மகள் என் ரத்தத்தில் உதிர்த்த மகள்.. என மனதினுள் ஆயிரம் முறை பெருமிதப்பட்டுக்கொண்டார்..

 

மூன்று நாட்கள் தன் தம்பியோடனே இருந்தார், திருநாவுக்கரசு..

 

வந்த மறுநாளில் கிளம்புவதாகத்தான் இருந்தார்.. ஆனால் குட்டி மலர் தன் கண்ணசைவில் அவரை கட்டிப்போட்டு விட்டாள்..

 

மூன்று நாள் கழித்தும் மனதே இல்லாமல் தான் அங்கிருந்து சென்றார்..

 

மேட்டுபாளையத்தில் அமிர்தவல்லியும் கலையரசியும் திருநாவுக்கரசுவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்..

 

திருநாவுக்கரசு வந்து பெண் குழந்தை என்ற சொன்னதும் தான் தாமதம் அமிர்தம் உடனே பூஜையறைக்கு சென்று அணைத்து கடவுள்களுக்கும் நன்றி தெரிவித்தார்.. அவரின் ஒருவருட வேண்டுதல் நிறைவேறி விட்டது..

 

அடுத்து சில வருடங்களிலே தன் வயிற்றிலும் குழந்தை ஜனிக்கும் என நிம்மதி கொண்டார்..

 

*************************

 

குழந்தை பிறந்த பத்து நாட்களில் மணிமேகலையை வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டார்கள்..

 

மணிமேகலையின் அத்தை மணிமேகலையை பார்த்து கொள்ள.. திருச்செல்வம் அவருடன் கார்மெண்ட்ஸ்சில், கடைநிலை ஊழியராக வேலை செய்யும், ஒரு நடுத்தர வயது பெண்மணி கணகாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.. அவர் உதவியுடன் குட்டி அதியை தானே பார்த்து கொண்டார்.. திருச்செல்வம்..

 

கணகா கணவனை இழந்து ஒற்றை மகனுடன் வாழ்ந்து வருபவர்.. எத்தனை வயதினராக இருந்தாலும் கைம்பெண் என தெரிந்து விட்டாலே சில கழுகு கூட்டங்களின் பார்வை அவர்கள் மேல் ஆழமாக விழுந்து விடுகிறது.. அதுவும் இல்லாதவர்கள் என்றால் மேலும் இளக்காரம் தான்..

 

கணகா அப்படித்தான் வேலை பார்க்கும் இடத்தில் பல இன்னல்களை அனுபவித்து கொண்டிருந்தார்.. வேலை வேண்டாம் என விடுவதற்கு அவரின் வறுமை விடவில்லை..

 

வேலையை விட்டுவிட்டால் அடுத்த வேலை அவர் மகனிற்கு சாப்பாடு.. என பலதை நினைத்து பல்லை கடித்து கொண்டு இருந்தார்..

 

அப்பொழுது தான் திருச்செல்வம் அவரை பிள்ளையை பார்த்து கொள்ள கேட்க.. பெருமகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.. திருச்செல்வத்தை ஒருவருடமாக பார்க்கிறாரே.. கடைநிலை ஊழியராக இருந்தாலும் பார்த்தவுடன் சிரித்து இருவார்த்தை நலம் விசாரிக்காமல் செல்ல மாட்டார்.. அதனால் அவர் மேல் உள்ள நம்பிக்கையில் வந்தார்.. 

 

பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் தந்தையின் கரத்தில் தான் இருப்பாள் குட்டி அதி.. 

 

தங்கமயிலு.. செல்ல குட்டி, அம்முலு குட்டி, குட்டியம்மணி என விதவிதமாக தன் மகளை கொஞ்சி கொண்டிருந்தார்.. திருச்செல்வம்..

 

மகளும் கை காலை அசைத்தவாறு பொக்கை வாய் சிரிப்புடன் தந்தையின் கிள்ளை மொழியை கேட்டவாறு விழி அகலாது அவரை பார்த்து கொண்டிருப்பாள்.. 

 

தங்கமயிலு ஐயாவ பாக்குறாங்களா.. இந்த ஐயன தங்கத்துக்கு பிடிச்சிருக்கா? ம்ம்ம்ம் என அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து உரச.. குழந்தையின் பிஞ்சு விரல்கள் திருச்செல்வத்தின் கன்னத்தை தடவ.. அதில் கோடி பூக்களின் வருடலையும், அது தரும் மகிழ்வையும் உணர்ந்தார் திருச்செல்வம்.. 

 

அப்பொழுது.. தம்பி பிள்ளைக்கு பேரு வைக்கலைங்களா.. என கணகா சிரிப்புடன் கேட்க.. திருச்செல்வம் மகளை பார்த்தார்..

 

அதெல்லாம் நான் ஏற்கனவே யோசிச்சு வச்சுட்டேன் க்கா.. ஒரு நல்ல நாள் பார்த்து கோவிலுக்கு போய் வைக்கணும்னு நெனச்சேன்..

 

இன்னைக்கு நல்ல நாள்தான் இன்னைக்கே வச்சுடலாம்ல தம்பி என கணகா சொல்லவும்..

 

அன்றே மணிமேகலை அவரின் அத்தை மற்றும் கணகாவை அழைத்து கொண்டு சிவன் கோவிலிற்கு சென்றார்..

 

தன் குலதெய்வமான அம்மையையும் அப்பனையும் மனதில் வேண்டி கொண்டு, தன் மகளுக்கு அதிமதுராந்தகியம்மை என பெயரிட்டார் திருச்செல்வம்..

 

தந்தையின் செல்லமாய் மிளிர்ந்தாள் அதி.. அவளை அவர் மதுக்குட்டி என்று அழைத்தால் போதும் எச்சில் ஒழுக அவரை பார்த்து சிரிப்பாள்.. 

 

அதிக்கு இரு மாதம் நடக்கும் பொழுது, மேட்டுப்பாளையத்தில் பவளத்திற்கும் திருச்செல்வத்திற்கும் திருமணம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தன..

 

ஐயா சின்னவன் போயி ஒரு வருசம் மேலாச்சுங்க.. ஆனா ரெண்டு தடவைத்தான் ஊருக்கு வந்துருக்கான்.. நாம அவனுக்கு கால்கட்டு போட்டாத்தான் வீடு தாங்குவான் போல.. என மரகதம் வருந்தவும்.. அம்மையப்பன் இருவருக்கும் திருமணத்திற்கு நாள் குறித்தார்..

 

திருச்செல்வம் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய சூழ்நிலை..

 

திருமணம் முடிந்தவுடன் பவளத்திடம் அனைத்தையும் கூறிவிட வேண்டும் என்ற உறுதியுடன், மகளை பிரிய மனமின்றி சென்றார்..

 

அமிர்தவல்லி மகிழ்வுடன் அவனை வரவேற்றார்.. தங்கையின் திருமணத்திற்கான அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தார்.. 

 

திருமணம் நல்ல படியாக முடிந்தது.. ஆனால் பத்து நாட்களில் மறுபடியும் சென்னைக்கு சென்று விட்டார் திருச்செல்வம்..

 

அதிக்கு ஆறுமாதம் இருக்கும் பொழுது, மணிமேகலை கிருஷ்ண குமாரை மணந்து மும்பைக்கு சென்று விட.. கைகுழந்தையுடன் மேட்டுப்பாளையத்திற்கே வந்து விட்டார் திருச்செல்வம்..

 

*****************************

 

திருச்செல்வம் பவளத்தின் திருமணம் எவ்வித குறையும் இன்றி, அவர்களின் குலதெய்வ கோவிலில் மிக விமர்சையாக நடந்தேறியது..

 

ஒரு வருடமாக தன்னவனை காணாது பசலை நோய் கண்ட தலைவியாய் வாடிகொண்டிருந்தவளுக்கு, விரைவில் தங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க போகிறது என்ற செய்தி கேட்டவுடனே, அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டிருந்தது.. 

 

இனி மாமன் தன்னுடன் தான் இருப்பார் என அவள் மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்க.. ஆனால் திருச்செல்வமோ வேறொன்றை நினைத்து கொண்டிருந்தார்..

 

பவளம் கன்னங்களின் வெட்க மின்னல்கள் பூக்க.. மணக்கோலத்தில் தலை குனிந்து அமர்ந்திருக்க.. அவளை ஆசையாக பார்த்திருந்தார் திருச்செல்வம்..

 

இன்று இரவு தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பே மதுகுட்டியை பற்றி அனைத்தையும் கூறிவிட வேண்டும் என நினைத்த திருச்செல்வம்.. எவ்வித அலைபுறுதலமின்றி தன் மனதிற்கினியவளின் கழுத்தில் மூன்று முடிச்சுட்டார்..

 

மொட்டை மாடியின் தனிமையில் திருநாவுக்கரசு திருச்செல்வம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

 

மதுகுட்டி நினைப்பாவே இருக்குண்ணே.. அவ எல்லாத்துக்கும் என்னைத்தான் தேடுவா.. என்ன பன்றாளோ தெரியல என திருச்செல்வம் புலம்ப.. திருநாவுக்கரசுவின் மனதிலும் குட்டி மலரின் நினைவுகள்..

 

பதினைந்து நாளிற்கு ஒரு முறை சென்னை சென்று விடுவார் திருநாவுக்கரசு.. அவரால் அதற்கு மேல் தன் குட்டி மலரை காணாமல் இருக்க முடியவில்லை..

 

அண்ணே பவளத்துகிட்ட எல்லாம் சொல்லிடலாம்ன்னு இருக்கேண்ணே என திருச்செல்வம் கூற.. திருநாவுக்கரசு தம்பியை அதிர்வாக பார்த்தார்..

 

என்றா சொல்ற..?

 

ஆமாண்ணே..

 

ஏன்டா.. இப்படியொரு முடிவு? என இன்னும் அதிர்வு விலகாமல் கேட்டார் திருநாவுக்கரசு..

 

இப்ப இந்த முடிவை எடுக்கலைன்னா பின்னாடி ரொம்ப வருத்தப்பட வேண்டியதா இருக்கும்னு தோணுது.. 

 

நம்ம குடும்பத்துக்கு இது தெரிய வேண்டாம்ன்னு நினைச்சோமேடா.. 

 

உண்மைதான்.. முன்னாடியே தெரிஞ்சா எனக்கும் பவளத்துக்கும் கண்ணலாம் பண்ண மாட்டாங்கன்னு அதுக்கு ஒத்துக்கிட்டேன்.. ஆனா இப்போ எனக்கும் பவளத்துக்கும் கண்ணாலம் ஆகிடுச்சு.. இப்ப யாரும் எங்களை பிரிக்க முடியாது இல்ல.. என்றவர்.. 

 

அதனால கண்டிப்பா நான் மொதல்ல பவளத்துக்கிட்ட சொல்லி சமாதானம் படுத்திட்டு, அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்ல போறேன் ண்ணே.. என கூறினார்.. 

 

அப்பொழுதும் திருநாவுக்கரசு முகம் தெளிவில்லாமல் இருக்க.. திருச்செல்வம் அவரை ஆழ்ந்து பார்த்து, சில கேள்விகளை கேட்க, அதில் திருநாவுக்கரசுவின் முகமும் மனதும் தெளிந்தது.. அவரும் திருச்செல்வத்தின் முடிவிற்கு சம்மதம் சொன்னார்.. 

 

அண்ணே இப்ப நான் இதை சொல்லலனா, என்ற மக எப்பவுமே இந்த வீட்டுக்குள்ள நுழைய முடியாது..

 

என்ன மாதிரி மணிமேகலைக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு.. என்ற மவள அவங்களுக்கு என்னைக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் ண்ணே.. என்ற மதுகுட்டி என் கூட தான் இருக்கனும்.. அதுக்கு இப்பவே நான் எல்லார்கிட்டயும் உண்மைய சொல்றது தான் நல்லது.. என திருச்செல்வம் தீர்க்கமாக சொன்னார்.. ஆனால் இன்னும் சில வருடங்களில் தன் மகளை தாமே மணிமேகலையிடம் சேர்ப்போம் என கனவிலும் அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.. 

 

திருநாவுக்கரசும் யோசித்தார்.. அதி இவ்வீட்டு வாரிசாக வளர வேண்டுமெனில் அதற்கு அனைவருக்கும் உண்மை தெரிய வேண்டும்..

 

அதை இப்பொழுது சொல்வது தான் சரியாக இருக்கும்.. யாராலும் அப்பிஞ்சை மறுக்க முடியாது அல்லவா.. அதிலும் அப்புச்சியும் அம்மத்தாவும் தங்கள் மகளை போல் இருக்கும் குட்டி மலரை எப்படி வெறுப்பார்கள்.. என நினைத்தார்.. திருநாவுக்கரசு.. 

 

ஹ்ம்ம்.. நீ சொல்றதும் சரிதான் திரு.. நம்ம மவ நம்மக்கூட தான் இருக்கனும்.. என அவரும் உறுதியாக சொல்ல..

 

உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியமா பிடிச்சுருக்கு.. என கோபத்தோடு கேட்டவாறு அங்கு வந்தார் கலையரசி..

 

அவர் ஆரம்பம் முதல் அண்ணன் தம்பிகளின் பேச்சுக்களை கேட்டு கொண்டுதான் இருந்தார்.. 

 

திருநாவுக்கரசும் திருச்செல்வமும் எதுவும் பேசாது அமைதியாக நிற்க, அதில் மேலும் கோபம் கொண்டார் கலையரசி..

 

என்ன ண்ணே, ரெண்டு பேரும் தெரிஞ்சுதான் பேசுறீங்களா.. இந்த விசயம் மட்டும் நம்ம குடும்பத்துக்கும் சொந்த பந்ததுக்கும் தெரிஞ்சா, நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்..

 

இன்னைக்கு தான் அண்ணனுக்கு கண்ணாலம் ஆகிருக்கு.. நாளைக்கே அவரு ஒரு கைக்குழந்தைய தூக்கிட்டு வந்து, இது என் குழந்தைன்னு சொன்னா ஊர் வாய் சும்மாவா இருக்கும்.. என படபடவென பொறிய, திருச்செல்வம் இறுக்கமாக நின்றார்..

 

அண்ணே சின்னண்ணே தான் புரியாம பேசுதுன்னா நீயும் அதுக்கு ஒத்து ஊதிக்கிட்டு கிடக்க.. என பெரிய சகோதரனிடம் முறையிட..

 

ப்ச் அதுக்காக என்ன பண்ண சொல்ற கலை.. அப்படியே நம்ம குடும்ப வாரிசை விட்டுட சொல்றியா.. இல்ல கடைசி வரைக்கும் திருவ அங்கையும் இங்கையும் அலைய சொல்றியா..

 

அந்த பொண்ண பத்தி கொஞ்சமாச்சும் நினச்சு பாத்தியா.. அவ எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்பா.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா.. என திருநாவுக்கரசு கோபமாக கேட்க.. கலையரசி கையை பிசைந்தார்..

 

வீட்டுல உள்ள எல்லார்க்கிட்டயும் உண்மைய சொல்லிட்டு மதுகுட்டிய நான் அழைச்சுட்டு வரப்போறேன் கலை.. கையோட மணிமேகலைக்கும் இன்னொரு கண்ணாலம் பண்ணனும் என உறுதியாக திருச்செல்வம் சொல்ல.. அதில் திருநாவுக்கரசுவிற்கும் மாற்று கருத்து இல்லை..

 

கலையரசி இருவரையும் ஒரு நிமிடம் பார்த்தவர்.. சரி ண்ணே உங்க விருப்பம்.. இதுக்கு மேல நான் பேசுறதுக்கு எதுவும் இல்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த இடத்துல இருக்குற சந்தோஷம் போகப்போகுது.. நம்ம குடும்பத்து ஆளுங்க இடிஞ்சு போய் உட்கார போறாங்க.. என வருத்தத்துடன் கலையரசி சொல்ல.. இருவரும் அதில் உள்ள உண்மையில் சற்று நேரம் மௌனமாக நின்றனர்.. 

 

அண்ணே நீங்க, என்னை தப்பா நெனச்சாலும் சரி.. இப்போவும் சொல்றேன்.. இந்த விஷயத்தை மறைக்கிறது தான் நல்லது..

 

பவளத்த பத்தி கொஞ்சமாச்சும் நினச்சு பாத்தியா.. இந்த ஒரு வருசமா உன்னை பாக்காமா அது எப்படி இருந்துச்சு தெரியுமா.. இப்போ தான் அவ முகத்துல சந்தோசம் தெரியுது.. என்னதான் நீ சமாதானம் சொன்னாலும்.. உனக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆகி ஒரு பொண்ணு இருக்குன்னு தெரிஞ்சா, அது என்ன பண்ணும்னே சொல்ல முடியாது.. நீ அந்த பொண்ண தொடாமையே புள்ள பெத்து இருந்தாலும், மணிமேகலை உன்னோட முதல் மனைவிங்கிறதும்.. அந்த குழந்தை உங்க ரெண்டு பேருக்கும் தான் பொறந்ததும்ங்கிறதும் உண்மை தானே.. அது என்னைக்கும் மாறப்போறது இல்லைல்ல.. என திருசெல்வத்தை பார்த்து கேட்டார்.. 

 

இல்ல சொல்லியே தீருவேன்னா கொஞ்ச நாள் ஆறப்போடுங்க.. சொந்த பந்தம் எல்லாம் போயிக்கட்டும்.. நம்ம வீட்டு மனுசங்க மட்டும் இருக்கும்போது பக்குவமா சொல்லுங்க.. உங்க வாரிசை மட்டும் நினைக்காம நம்ம குடும்பத்து மனுசங்களையும் நினச்சு பாருங்க.. என இருவரின் முகம் பார்த்து பொறுமையாக சொன்னவர், அதற்கு மேல் எதுவும் பேசாது கீழே சென்று விட்டார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!