Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedவசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 27

அடுத்த பதினைந்து நிமிடத்தில் வேல்முருகனும், ரோகிணியும், லஷ்மியும் வந்திருந்தனர்.  செல்வதுரை சென்று அவர்களை வரவேற்று அழைத்து வந்தார்.

அதைக்கண்டு மீனாவுக்கு உள்ளுக்குள் புகைந்தது.  இன்னும் இந்த மனுஷன் இளிச்சுட்டு, கூழை கும்பிடு போடறத நிப்பாட்டல.  அதனாலதான் அவர் மதிக்கவே மாட்டேன்றார்.

மாபிள்ளைக்கு அப்பாவா…. கம்பீரமா இருக்க வேணாமா…..?  என மனதிலே எரிந்தது அவருக்கு.  செல்வதுரை நல்முறையில் வரவேற்று பேசினாலும் வேல்முருகன் எதற்கும் வாய்திறக்கவில்லை.  எல்லாவற்றிற்கும் தலையசைப்பு சைகை, ஒற்றை வார்த்தையிலேயே பதில் கூறிக் கொண்டிருந்தார்.

நாச்சியப்பன் பிரேமாவுக்கு இவர்களுக்குள் இருக்கும் எந்த உள்குத்தும் தெரியாது என்பதால், நாச்சியப்பன் உரிமையாகவே….. “ஏன்டா இங்க இருந்துட்டு மூணாவது மனுஷன் மாதிரி, பங்ஷன் நேரத்துக்கு கரெக்டா வரே…” என்றார் வேல்முருகனைப் பார்த்து.



Advertisement

மீனாவும் இருந்த எரிச்சலில் வாயை வைத்துகொண்டு சும்மாயிருக்காமல், “நல்லா கேளுங்க…. நியாயமா… இது பொண்ணு வீட்ல செய்ய வேண்டிய பங்ஷன்.  எனக்கென்னன்னு இப்படி யாரோ மாதிரி வந்தா எப்படி…?” என்றார்.

ரோகிணிக்கும், அஞ்சனாவுக்கும் ஐயோ… என்றிருந்தது.  ரோகிணி திரும்பி கணவரைப் பார்த்தார்.  ஏதாவது கோவப்படுவாரோ…. என பயம் வந்துவிட்டது அவருக்கு.

வரவேமாட்டேன் என்றவரை சரிகட்டி அழைத்துவந்த கஷ்டம் அவருக்குதானே தெரியும்.  வந்த உடனே இந்த அண்ணி வாய வச்சுட்டு சும்மாயிருக்காம… அவரை கோவப்படுத்தறாங்களேன்னு….. பார்த்திருந்தார்.

Advertisement

அஞ்சனா திரும்பி தேவநாதனைப் பார்த்தாள்.  அவனுக்கும் மீனா பேசியது சங்கடமாக இருந்தது.  இத்தனை பேர் எதிரில் என்ன சொல்வது என தெரியாமல் முழித்து நின்றான்.

Advertisement

செல்வதுரை மனைவியை எரிப்பது போல் பார்த்தார்.  மீனாவுக்கு கணவரின் பார்வையில் பயம் எழுந்தாலும், அலட்சியமாக இருந்தார்.  இத்தனை வருட திருமண பந்தத்தில் செல்வதுரையுடனான உறவில் எந்த விரிசலும் எழுந்ததில்லை.

இந்த திருமணத்தினால் எழுந்த மனக்கசப்புகளால்…… செல்வதுரைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த உரசலில் வேல்முருகனின் மீது கடுப்பில் இருந்தார்.  அதுபத்தாது என்று செல்வதுரை தங்கை வீட்டினரை வலியக்க சென்று வரவேற்று உபசரித்தது, இன்னும் புகைச்சலை கிளப்பியிருந்தது.

அவருக்கு ஒரு சான்ஸ் கிடைக்கவும்…., வாயை வைத்துகொண்டு சும்மாயிருக்காமல் கேலியாக சிரித்து கொண்டே பேசுவதுபோல் சந்தில் சிந்து பாடியிருந்தார் மீனா.

Advertisement

லஷ்மி திரும்பி செல்வதுரையை ஒரு பார்வைதான் பார்த்தார்.  உன் பொண்டாட்டி வாயை அடக்கல…  நானும் பேசவேண்டியிருக்கும் என இருந்ததுபோல லட்சுமியின் பார்வை.

அவ்வளவுதான் செல்வதுரைக்கு பயம் வந்தது.  அய்யோ இந்த அத்தை ஆரம்பிச்சா…..? அவ்வளவுதான்.  வாய அடக்குறாளா…? என மீனாவை வறுத்துக் கொண்டிருந்தார் மனதில்.

லஷ்மியின் ஒரு பார்வையிலேயே அலண்டு போயிருந்தார் செல்வதுரை.  இந்த பொம்பளைங்க நடுவுல மாட்டிட்டு… என்னால முடியல சாமி என புலம்ப ஆரம்பித்துவிட்டார்

“ஹி… ஹி… அது ஒன்னும் இல்லங்க….  கல்யாணம்தான் சிம்பிளா நடந்துடுச்சு.  அட்லீஸ்ட் இந்த பங்ஷனாவது எல்லாரையும் இன்வைட் பண்ணி, நல்லா பெருசா பண்ணலாம்னு எங்க வீட்ல விருப்பப்பட்டாங்க.  அது முடியாம போனதுல கொஞ்சம் வருத்தம்.  அதான்…” என சிரித்துக்கொண்டே பிரேமா நாச்சியப்பனிடம் பேசி சமாளித்தார் செல்வதுரை.

பிரேமா அதை நல்ல முறையிலேயே எடுத்துக்கொண்டார்.  “ஓஹ்… ஆமாம்.  அஞ்சுகூட…. எனக்கு லீவ் இல்ல ஆன்ட்டி, அதனாலதான் சென்னையிலேயே வச்சுட்டோம்னு சொன்னாள்.   அதனால என்னங்க… அஞ்சனாவோட வளைகாப்பு பங்ஷன…, நல்லா கிராண்டா பண்ணிடுங்க” என்றார் சிரித்துக்கொண்டே பிரேமா.

பிரேமா இப்படி சொல்லவும், எல்லோரும் திரும்பி அஞ்சனாவையும் தேவநாதனையும்தான் பார்த்தனர்.

அவனுக்கு எல்லார் பார்வையிலும்….. ம்க்கும்…. இப்படியே முட்டிட்டு இருங்க….. எல்லாம் நடந்த மாதிரிதான்… என்ற மைன்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அஞ்சனா வந்து அப்பாவின் கைகளைப் பிடித்துகொண்டு, “ப்பா…” என கலங்கி நின்றாள்.  எங்கே கோவமாகி எழுந்து சென்று விடுவாரோ… என பயமாக இருந்தது அவளுக்கு.

பெண்ணுக்கு, திருமணத்திற்கு  பிறகு தந்தை தனக்காக வந்திருப்பதே பெருத்த நிம்மதி, சந்தோஷம் மனதில் இத்தனை நேரம்.  இதில் இவர்கள் ஏதாவது பேசி அவரை மேலும் சங்கடப்படுத்தினால் அவளும்தான் என்ன செய்வாள்.

எதுவும் செய்வதறியாமல், தந்தையின் கைகளை பிடித்து நின்றாள் அந்த பேதை.  பெண்களின் நிலை சில சமயம் பாவம்தான்போல. பிறந்த வீட்டையும் விட்டுக்கொடுக்க முடியாமல், புகுந்த வீட்டையும் பகைத்துக் கொள்ள முடியாமல், எந்த பக்கம் பேசுவது என தெரியாமல், முழி பிதுங்கி, இரண்டு பக்கமும் மொத்து வாங்குவது ஏனைய குடும்பங்களில் நடப்பதுதானே.

இதோ அதுபோலதான் அஞ்சனாவின் நிலைமையும் இருந்தது.  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் என்பார்களே அதுமாதிரி மனதில் தவித்து நின்றாள் பெண்.

மகளின் முகத்தைப் நிமிர்ந்து பார்த்த தந்தைக்கு என்ன தோன்றியதோ…?  பெண்ணிடம் தனக்கான தவிப்பை கண்டதும், அத்துணையும் மறைந்துதான் போனது அந்த பெற்றவருக்கு.

அவளையே சில நொடிகள் பார்த்தார். இதுவரை உம்மென்று இருந்தவர், மகளின் கலக்கமான முகத்தை பார்த்ததும் தனது வேகத்தையும் கோவத்தையும் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார்

 மகளுக்காகதானே வந்தார்.  அவளைப் பார்ப்பதற்காக தானே தன் வீம்பு சுயகௌரவம் எல்லாவற்றையும் ஒத்திவைத்துவிட்டு வந்திருந்தார்.  இப்போது மகளின் முகத்தில் தவிப்பை பார்த்ததும் அவளின் மனது புரிந்ததுபோல பெற்றவருக்கு.  அமைதியாக இருக்க முயன்றார்.

திருமணத்திற்கு பிறகு மகளைப் இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது.  என்னவோ நீண்ட காலம் மகளைப் பிரிந்திருந்த உணர்வு நெஞ்சுக்குள்ளே வாட்டியிருந்தது தந்தையை.

தன்னை, தன் வார்த்தையை மதிக்கவில்லை என்ற வேகத்தில், மகளிடம் திருமணத்திற்கு பின்பு சரியாக பேசாமல் இருந்தார்.

மகளைப் பார்த்து பேச மனது உந்தினாலும், பாழாப்போன வீம்பும் வெட்டி கௌரவமும் அவரை விட்டேனா என்றது.

இதோ மகளின் விசேஷத்தை சாக்கு வைத்து வந்துவிட்டார் பெண்ணைப் பார்க்க.  இன்னும் மருமகனின் மேல் கோவமிருக்கதான் செய்தது.  அது ஒருவகையில் பொறாமை என சொன்னால்கூட பொருந்தும்.

ஆம்.  இத்தனை காலம் தந்தையின் வார்த்தையை மீறாது, பெற்றவரின் மீது உயிராக இருந்த பெண், இன்று மருமகனுக்காக தன்னை விட்டுக்கொடுத்துவிட்டாளே என வருத்தம் இருந்தது.

தூக்கி வளர்த்த மகள் தன்னைவிட மருமகன் மீது அன்பாக இருப்பது ஒரு வகையில் சந்தோஷம் என்றாலும் தன்னைவிட மகளுக்கு நேற்று வந்தவன் முக்கியமாகி விட்டானா என பொறாமையும் எட்டிப்பார்க்கதான் செய்தது.

இது பெரும்பாலும் மாமியார் மருகளுக்குள் நடக்கும் எங்கேயும்.  ஆனால் இங்கு தலைகீழாக மாமனார் மருமகனுக்குள் நடந்துகொண்டிருக்கிறது.

இப்போதும் அவருக்கு மனதில் இந்த எண்ணம் எழாமல் இல்லை.  பெண் மட்டும் என் பேச்சைக் கேட்டு, நான் பார்த்த மாப்பிள்ளையை கட்டியிருந்தால், இதையெல்லாம் எப்படி ஜாம் ஜாம்னு ஊர் மெச்ச செஞ்சிருப்பேன்.  இப்படி எல்லார் கிட்டயும் பேச்சு வாங்க வச்சிட்டாளே என மனது வலிக்கதான் செய்தது, மீனாவின் பேச்சில்.

திருமணத்தைகூட விமரிசையாக நடத்தவேண்டும் எனதான் அவர் மனதுக்குள் கோட்டை கட்டியிருந்தார்.  நிறைவேறியதா… என்ன?  இதுவரை பெண்ணின் திருமணத்தில் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லையே என்ற வருத்தம் மனிதரை வாட்டதான் செய்தது.  இருப்பது ஒரே மகள்.  அடுத்த பிள்ளை இருந்தால்கூட இத்தனை வருத்தம் இருந்திருக்காதுபோல அவருக்கு.

அவரது ஆசையெல்லாம் கரைந்து காணாமல் போயிருந்தது அடிக்கிற காற்றில்.  அவர் எண்ணம் எதுவும் பலிக்கவில்லை.  இந்த பங்ஷனாவது தனது வீட்டில் வைத்து, கிராண்டாக எல்லோரையும் அழைத்து விருந்து வைக்க நினைத்துதான் லஷ்மி மூலம் பேச வைத்தார்.

அதிலும் மண்விழுந்ததுபோல், மாப்பிள்ளை வீட்டில் ஒத்துவரவில்லை.  மகளின் புகுந்த வீட்டினரைப் பார்க்கவோ, பேசவோ விருப்பம் இல்லாததால்தான், இங்கு வரவேமாட்டேன் என மறுத்ததும்கூட.

மகள் மற்றும் வீட்டினரின் வலுக்கட்டாயத்தில்தான் வந்திருந்ததுகூட.

அஞ்சனா தன்னை சமாளித்து தந்தையைக் கைபிடித்து எழுப்பினாள்.  “வாங்க ப்பா…. அங்க டைனிங் டேபிள்ல வந்து உட்கார்ங்க.  நான் காபி எடுத்துட்டு வரேன்…” என அவரை சகஜமாக்க எண்ணி எழுப்பி  அழைத்து சென்று உட்கார வைத்தாள்.

அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்த கார்த்திக்கும், விவேக்கும் சட்டென்று எழுந்து, அவருக்கு உட்காருவதற்கு வழிவிட்டு நகர்ந்து நின்றனர்.  ரோகிணியும் அவருடனே வந்து உட்கார்ந்து கொண்டார்.

இறுக்கமான சூழ்நிலையை மாற்ற எண்ணி கார்த்திக்கும் விவேக்கும் வேல்முருகனுடன் பேச்சு கொடுத்து…, அவரை இயல்புக்கு கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

லஷ்மி ரோகிணியிடம், “நல்ல நேரத்துல ஆரம்பிக்க வேணாமா…?  நீயும் வந்து அப்படியே உட்கார்ந்துட்டா எப்படி…?” என சொன்னது மருமகளிடம் என்றாலும், பார்வை மீனாவின் மீதுதான் அழுத்தமாக பதிந்திருந்தது.

அங்கு விசேஷத்திற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் மீனா விட்டேத்தியாக உட்கார்ந்திருந்தது, அவருக்கு கோவத்தைக் கொடுத்தது.  செல்வதுரையையும் திரும்பி முறைத்தார்.

அதில் லஷ்மியின் கொந்தளிப்பு எல்லாம் கேள்வியாக தொக்கி நின்றது. எதிரியைத் தாக்கத்துடிக்கும் கூர்வாள்போல.  அவரது பார்வையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல், செல்வதுரை மருமகள்களைப் பார்த்து, “ஆரம்பிங்கமா… எழுந்து என்ன வேணும்னு பாருங்க….” என்றார்

வீடு தேடி வந்து பெண் கேட்டு திருமணம் நடத்தி கொண்டால் மட்டும் போதுமா…?  அத்துடன் எல்லாம் முடிந்ததா…?  மற்றவைகளை சீர் செய்ய வேண்டாமா…?  அந்த பொறுப்பு உனக்கு இல்லையா…? என லஷ்மி  பார்வை செல்வதுரையை பந்தாடியது.

வேல்முருகன் மகள் கொடுத்த காபியை குடித்து கொண்டே, டிரைவருக்கு கால் செய்து, கொண்டு வந்த பொருட்களை எல்லாம் மேலே எடுத்து வரச் சொன்னார்.  அவர் பேசியதைக் கேட்டதும், கார்த்தியும், விவேக்கும் எழுந்து கீழே சென்றனர், காருக்கு.

டிரைவருடன் சேர்ந்து எல்லா மூட்டைகளையும்….., எடுத்து வந்து பரப்பினர் கார்த்தியும், விவேக்கும்.

அஞ்சனா…. இவ்வளவு மூட்டையா எனப் பார்த்தவள், திரும்பி ரோகிணியைப் பார்த்தாள்.

மகளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்த மூட்டைகளை எல்லாம் பிரித்து கொண்டு வந்திருந்தவற்றை எல்லாம் எடுத்து வெளியே வைத்தார்.  அஞ்சனாவை அழைத்த ரோகிணி, “இங்க நாங்க பார்த்துக்கறோம்டா.  நீ போய் முகூர்த்த புடவைய கட்டிட்டு வாடா.  இந்தா இதுல பூ, கொஞ்சம் ஜுவல்ஸ், எல்லாம் இருக்கு.  போட்டுட்டு வா.  நிஷா நீயும் கொஞ்சம் அவளுக்கு ஹெல்ப பண்ணுடா…” என்றார் சிரித்த முகமாகவே மகளிடம்.

இருவரும் அஞ்சனாவின் அறைக்கு சென்றனர் தயாராவதற்காக.

“என்னடி கோவம் என்மேல…” என்றாள் அஞ்சனா.

“என்ன கோவமா….?  கேப்படி… அதுகூட உனக்கு மறந்துடுச்சா…?  இருக்கும் இருக்கும்.  என்ன அம்மணிக்கு… புருஷன தவிர்த்து எங்களலாம் ஞாபகத்திலயே வரலயோ…?” என்றாள் கிண்டலாக.

“ச்சீ… நான் என்ன கேட்டா…?  நீ என்ன பேசறே…?” என நிஷாவின் முதுகில் ஒரு அடி போட்டாள்.

“பார்ரா… வெட்கத்தை.  பார்த்துடி…. கொஞ்சமாவது எங்களையும் அப்பப்ப ஞாபகம் வச்சுக்கோ.  உங்க ஆத்துகாரர நினைக்கறேன்னு எங்கள மறந்துடாத…”

“உத வாங்கப்போற…நீ.  நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி…”

“உங்க கல்யாணத்துக்கு வந்தப்பவே உன்னையும் அண்ணனையும் பெங்களூர் கூட்டுட்டுதான போனேன்.  அதுக்கப்புறமும் இரண்டு தடவை போன் பண்ணி கூட்டனா இல்லையா… வந்தியாடி…?” என முறைத்தாள் அஞ்சனாவை.

“ஓ… அதான் கோவமா….?  ம்ப்ச்… வரேன்…டி.  இன்னும் இங்கயே எனக்கு செட்டாகல” என்றாள் இழுத்துக்கொண்டே நிஷாவிடம்.

“ஏன்…?  உன் மாமியார் இன்னும் ஏதாவது பிரச்சினை பண்றாங்களா…?”

“ம்ப்ச்… பிரச்சினைன்னு சொல்ல முடியாது.  இதோ இப்ப பேசனாங்களே, அத மாதிரி டக்குன்னு எதையாவது பேசிடுவாங்க…”

“அதான.  இதெல்லாம் இந்த காதுல வாங்கி, அந்த காதுல விட்டுடனும்.  அதையே மண்டைல போட்டு குழப்பிட்டிருந்தனா… அடுத்தடுத்து பார்க்க வேணாமா…?  விடு எல்லாம் அதுவே ஒரு நாள் சால்வ் ஆகும்”.

“ம்ம்… நானும் அப்படிதான் மனச தேத்திக்கறேன்.  இருந்தாலும் அத்தை சட்டுனு இது மாதிரி வார்த்தைய விடும்போது கஷ்டமாயிடுது.  என்ன பண்ண சொல்ற…?”

“விடு அஞ்சு.  இது எல்லாம் பெரியவங்க பிரச்சினைன்னு ஒதுக்கி தள்ளு.  நீ உன் புருஷன மட்டும் இப்பத்திக்கு பாரு.  அவர் உன்கிட்ட நல்லாதான நடந்துக்கறாரு”.

“ம்ம்…  அவரால எனக்கு எந்த இஷ்யுவும் இல்ல”.

“அப்புறமென்ன.  ஜாலியா என்ஜாய் பண்ணுவியா….  இதெல்லாம் நீ பின்னாடி நினைச்சாலும், திரும்ப வராத மொமண்ட்ஸ்.  லைப் என்ஜாய் பண்ணு.  பெரிசுங்க அவங்களே முட்டி மோதி வரட்டும்.  நீ எதுவும் கண்டுக்காத”.

“சரி…டி பெரிய மனுஷி…” என நிஷாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளியவள், “அதுசரி என் மேட்டர் இருக்கட்டும் அங்க என்னாச்சு….?  உன்னோட பதி உன் பேச்சைக் கேட்டு ஒழுங்காயிருக்காரா…?  இல்ல பார்ட்டி… பிரண்ட்ஸ்னு….” என இழுத்தாள் அஞ்சனா.

“ச்ச…. ச்ச… அதெல்லாம் செல்லம் என் பேச்சை கேட்டு சமத்தா இருக்கு.  இல்லனா விட்டுடுவேனா…?”

“ஹா… ஹா… அந்த அளவு அவரை மிரட்டி வச்சிருக்கியாடி….?”

“தோடா…. அப்படியே மிரட்டிட்டாலும், பயந்துட்டுதான் மறுவேலை பார்ப்பார்.  இனி இந்த மாதிரி பண்ணீங்க உங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்னேன்.  அதோட ஆள் சைலன்ட்”.

“ஹா… ஹா… பாவம்டி உமா”.

“ம்கூம்.  இதுலலாம் நோ பாவம்.  சில விஷயத்துல இப்படிதான் நான்”.

“ம்ம்…. தெளிவுதான்” இவளுக்கு இருக்க தைரியம் எனக்கு ஏன் இல்லாம போச்சு…?

அஞ்சனா நிஷாவிடம் பேசிக்கொண்டே சேலையை உடுத்திக்கொண்டு தலைவாரி, பூ வைத்து, தயாராகி கொண்டிருந்தாள்.

ரோகிணியை பார்த்து… பார்த்து… வளர்ந்ததால் அவரது குணம்தான் அஞ்சனாவுக்கும் வந்திருந்ததுபோல.

சொல்லி கொடுக்கவில்லை என்றாலும், பிள்ளைகள் பெற்றவர்களை பார்த்துதானே வளர்கிறார்கள்.

எந்த கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும், எல்லோரையும் அனுசரித்து இலகுவாகவே அதை கடக்க முயல்பவரைப் பார்த்து, திருமணத்திற்கு பின்னான காலகட்டங்களில் அஞ்சனாவும் அடுத்தவர் மனம் நோகாமல் இலகுவாகவே நடக்க பழகியிருந்தாள் தன்போல.

இதுதான் தாயைப் போல பிள்ளை.  நூலைப் போல சேலை என்பதா…?

சில சமயம் எதிராளிக்கு இது கோழைத்தனமாக தெரியும்.  இருந்தாலும் குடும்பத்தில் விரிசல்கள் வராமல் இருக்க இதைதவிர வழியில்லை.  விட்டுக்கொடுத்தவர் கெட்டதாக சரித்திரம் இல்லை.

கீர்த்தி ரோகிணியுடன் வந்து உட்கார்ந்து, அவருக்கு உதவ ஆரம்பித்தாள்.  காஞ்சனா அருகில் வந்து நின்றாலும், எதையும் செய்யவில்லை முற்படவில்லை.  அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீனா எதிலும் தலையிடாமல் அமைதியாக பார்த்து அமர்ந்திருந்தார்.  அவருக்கு மனதில் ரோகிணி தன்னை மதிக்கவில்லை என்ற ஆதங்கம். தன்னிடம்  பேசவில்லையே என்ற மனக்குமுறல் இருந்தது.

திருமணத்தில்கூட ரோகிணி அண்ணியிடம் பட்டும்படாமல்தான் பேசினார்.  ரோகிணியின் மனதில் இன்னும் மீனா பேசியதெல்லாம் ஆறாத வடுக்களாகதான் அரித்துக்கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!