Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அரங்கேற்ற வேளை – 22

வேளை 22

“ஏண்டா வீட்டுக்கு வராம அங்க போன?” என்று லாலா சக்தியிடம் போனில் கத்தினான். 



Advertisement

“ஊருக்குப் போகும்போது அங்க வந்து உதயாவைப் பார்த்துட்டு போறேன் டா, நீ கிளம்பி இங்க வா. என் சின்ன மாமனார் விருந்து ரெடி பண்றேன் சொல்லியிருக்கார்” என்று சக்தி சமையலறையை எட்டிப்பார்த்தபடி சொன்னான்.

அங்கே சித்ரஞ்சன் வேட்டியும், டீஷர்ட்டும் அணிந்தபடி சமையலறையில் நின்றான். 

Advertisement

Advertisement

சக்தி அலுவலக விஷயமாக சென்னை வந்திருக்க, சித்ரஞ்சனுக்கு அது முன்பே தெரியும் என்பதால் தன்னோடு வந்து தங்கிகொள்ள அழைத்தான். இரண்டு நாள் வேலை. காலை வந்து இறங்கியதுமே, தயாராகி கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் பயிற்சிக்குச் சென்றவன் மதியம் வந்தபோது சித்ரஞ்சன் வீட்டில் இருந்தான். சக்தி வந்ததால் விடுமுறை எடுத்திருந்தான். மனைவியின் அண்ணன் மகன், அண்ணன் மகளின் கணவன் என்று சக்திக்கு அவ்வீட்டில் சக்தி அதிகம். கூடவே சக்தியை சித்ரஞ்சனுக்குப் பிடிக்கும். 

சக்திக்கும் அதுவே சரியெனப்பட்டது. லாலாவும் உதயாவும் தனியாக இருக்க, இவன் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று நினைத்தான். 

Advertisement

“டேய் வேலை முடிஞ்சதும் உன் சித்தப்பா வீடுதான் பக்கமா இருந்துச்சு.” 

“அதுக்குனு கமிஷனர் ஆஃபிஸ் பக்கமாவா நாங்க வீடு பார்க்க முடியும்?” நொடித்தான் லாலா. நண்பன் தன் வீட்டில் வந்து தங்கவில்லை என்ற தாங்கல். 

“மிஸ்டர். லாலா வந்தா மட்டும் நீயா எனக்கு சமைச்சுத் தர போற? தங்கச்சியும் ஆஃபிஸ் போயிடும்னு சொன்ன, இங்கன்னா மாமனார் கவனிப்பு இருக்கும்” என்று சக்தி சிரிக்க, அதே நேரம் சித்ரஞ்சன் பழச்சாறோடு வந்தான். 

“சக்தி, இந்தா ஜூஸ்” என்று நீட்ட, சக்தி சிரித்துவிட்டான். அந்த பக்கமிருந்த லாலாவுக்கும் அது கேட்க, 

“ஏன் சித்தப்பா என்னைக்காச்சும் எனக்கு ஜூஸ் போட்டு கொடுத்தீங்களா?” என்று வம்பு செய்ய, சக்தி ஸ்பீக்கரில் போட்டான்.

“உன் அட்டகாசத்துக்கு உன்னை வேணும்னா ஜூஸா போடுவாரு” என்று சக்தி திருப்பி கலாய்த்தான். 

“முதல்ல நீ கிளம்பி வாடா, எப்போ கூப்பிட்டாலும் வரதில்ல..” என்ற சித்ரஞ்சன் மீண்டும் சமையலறை சென்றான். 

லாலாவுக்கும் சக்தியைப் பார்க்க தோன்ற, மதியத்துக்கு மேல் வகுப்புகள் இல்லை. வீட்டிலும் உதயா இல்லை. உடனே அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கிளம்பினான். 

சக்தியும் சித்ரஞ்சனுக்கு உதவ வேண்டி அவனிடம் போனான். 

“எதாவது செய்யட்டுமா மாமா?” என்று கேட்க, 

“இந்தா இந்த வெங்காயத்தை வெட்டு” என்று பச்சடி செய்ய வெங்காயத்தைக் கொடுத்தான். 

“உங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தா இப்படி கண்ணீர் சிந்த விடுறீங்களே” என்று கிண்டல் செய்தாலும், வேகமாக வேலையை செய்தான். 

பிரியாணி வெந்துகொண்டிருக்க, சிக்கன் 65 போடுவதற்கு மசாலா போட்டு வைத்திருந்த கோழித்துண்டுகளை சித்ரஞ்சன் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தான்.

“லாலா வரவும் சூடா பொரிச்சுப்போம்” என்ற சித்ரஞ்சனை மெச்சுதலாகப் பார்த்தான் சக்தி.

ஒரு மணி நேரத்தில் லாலா வந்துவிட, வந்ததும் சக்தி அவனை, 

“என்னடா கோலமிது?” என்றான் அவன் முன் நின்று. 

லாலா மழிக்கப்படாத தாடியும், சோர்ந்த தோற்றமுமாக இருந்தான்.

“மச்சான்! நம்ம ஊரு எம்.டி.சி பஸ்ல வந்தா இப்படித்தான் வரணும். பஸ்ல வந்த தூசிடா. முகம் கழுவினா சரியாயிடும்” என்ற லாலா முகம் கழுவ சென்றான்.

“ஆஹன்! மூஞ்சிக் கழுவினா மட்டும் கமலஹாசன் ஆகிடுவியா?” என்றான் சக்தி கடுப்பாக. அவனுக்கு நண்பனை இப்படி பார்க்க பிடிக்கவில்லை. 

தன்னை ஏன் இவ்வளவு வருத்துகிறான் என்ற வருத்தம் வார்த்தையாக வந்தது. 

“ஏண்டா? என் பையனுக்கு என்ன? கமலஹாசனை விட கலர் கம்மின்னாலும் அவன் எங்க வீட்டு ஹ்ரித்திக் ரோஷன்டா..” என்று சித்ரஞ்சன் சொல்ல, 

“கண்ணு தெரியாம போச்சுனு சொல்லவே இல்லையே மாம்ஸ்” என்றான் சக்தி முகம் திருப்பி. 

“விடுடா, இப்ப எல்லாம் தாடி வைக்கிறதுதானே ட்ரண்ட். பொண்ணுங்களுக்குத் தாடி வச்சாதானே பிடிக்கும், உதயாவுக்குப் பிடிச்சிருக்கும் வச்சிருப்பான். என்னடா லாலா?” என்ற சித்ரஞ்சன் கேட்க, பதில் சொல்ல வேண்டியவன் பாத்ரூம் சென்றிருந்தான்.

“எங்கடா அவன்?” என்று சித்ரஞ்சன் விழிக்க, 

“நீங்க அவனை ஹ்ரித்திக் ரோஷன் சொன்ன அதிர்ச்சியில பாத்ரூம்ல மயங்கிருப்பான்” என்ற சக்தி, தரையில் அப்படியே உட்கார்ந்தான்.

“உங்க குடும்பத்துக்கே நக்கல் அதிகம் டா” என்றபடி சமையலறைக்குள் சென்ற சித்ரஞ்சன்,

“லாலா, இங்க வாடா” என்று கத்தினான். 

“வந்துட்டேன் சித்தப்பா” என்றபடி லாலா முகம் துடைத்து செல்ல, 

“இதெல்லாம் எடுத்துட்டு வாடா” என்ற சித்ரஞ்சன், குக்கரிலிருந்து ஹாட்பாக்ஸுக்குப் பிரியாணியை மாற்றினான். 

“ஆஹா! சித்தப்ப்பாஆஆ… பிரியாணியா? நீங்க செஞ்சீங்களா??” என்று வாயைப் பிளந்தான். அவன் பாவனையில் சிரித்த சித்ரஞ்சன், 

“நாந்தான் செஞ்சேன், நீ எடுத்துட்டுப் போ. பத்து நிமிஷம், சிக்கன் 65 போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல, 

“என்ன சித்தப்பா? இவ்வளவு செய்ய தெரியுமா?” என்று ஆச்சரியப்பட்டான். முன்பே சித்ரஞ்சனின் கையால் உண்டிருந்தாலும், இத்தனை செய்ததில்லை. 

சிக்கன் 65’யோடு வந்தமர்ந்த சித்ரஞ்சன் இருவருக்கும் தட்டை வைத்துப் பரிமாறினான். பின் எல்லாவற்றையும் அவனுக்கும் பரிமாறி, புகைப்படம் எடுத்தான். 

“என்ன சித்தப்பா சாதனையைப் போட்டோ எடுக்குறீங்களா?” என்று லாலா சிரிக்க, கைப்பேசியை ஓரமாக வைத்துவிட்டு, மீண்டும் கை கழுவி வந்து லாலாவின் அருகே அமர்ந்தான் சித்ரஞ்சன். 

“சாதனைக்கு இல்லடா. வசு நான் இங்க என்ன செய்றேனு கவலைப்படுவா, சரியா சாப்பிடலனு ஃபீல் பண்ணுவா. மத்த நாளெல்லாம் இப்படி பொறுமையா உட்கார, சாப்பிட டைம் இருக்காது. சாப்பிட்டு சொல்லிடுவேன், ஆனா சில நாள் நேரமிருக்கப்ப இப்படி பண்ணுவேன். அவளும் சந்தோஷப்படுவா” என்று சித்ரஞ்சன் சொல்ல, 

லாலாவுக்கும் ‘இது நல்லாயிருக்கே’ என்று தோன்ற, உடனே உதயாவுக்குப் புகைப்படம் அனுப்பி, 

‘சித்தப்பா சமையல்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, உதயாவும் பார்த்துவிட்டு

‘எஞ்சாய்’ என்று இதய ஸ்மைலி அனுப்பியிருந்தாள். லாலா பற்கள் தெரிய கைப்பேசியைப் பார்க்க, 

“நடத்துடா மாப்ள, நடத்து” என்றான் சக்தி. 

“நீ அனுப்பலயா சக்தி?” சித்ரஞ்சன் கேட்கவும், 

“அதெல்லாம் நான் சரியா சாப்பிடுவேனு சரோஜினிக்குத் தெரியும் மாமா. நீங்க ரெண்டு பேரும் நடத்துங்க, என் ஆளு அதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டா” என்றான். 

புன்னகையுடன் இருவரையும் பார்த்த சித்ரஞ்சன், 

“ரெண்டு பேருக்கும் என் மேல அவ்வளவு பாசமாடா? நான் சாப்பிடாம சோத்துல கை வைக்காம இருக்கீங்க? சாப்பிடுங்கடா” என்று ஆச்சரியமாகவும் பாசமாகவும் சொல்ல, நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். 

“என்னங்கடா?”

“இல்ல மாம்ஸ், வாசம் தூக்கலா இருந்தாலும் சாப்பிட எப்படி இருக்குனு தெரியல. அதான் உங்கள வச்சு டெஸ்ட் பண்ண வெயிட்டீங்” என்றதும், 

“டேய் லாலா, நீயுமா? அநியாயம் பண்றீங்கடா?” என்று முறைத்த சித்ரஞ்சன், வேகவேகமாக பிரியாணியை எடுத்து உண்டான். 

“அய்யோ, சித்தப்பா! நிஜமா நாங்க பாசமா சேர்ந்து சாப்பிட வெயிட் பண்ணினோம். அவன் உங்கள கலாய்க்கிறான். உங்க சமையல் சாப்பிட்டிருக்கோமே” என்றான் லாலா. 

“பரவாயில்லை மாம்ஸ், எங்கத்த ட்ரெயினிங் நல்லா வேலை செஞ்சிருக்கு” என்று பாராட்ட, 

“ஏண்டா, என் சித்தப்பா கஷ்டப்பட்டு சமைச்சா, நீ பாராட்டெல்லாம் உங்கத்தைக்குக் கொடுக்கிற?” லாலா சித்தப்பாவுக்கு ஆதரவாகப் பேசினான். சித்ரஞ்சன் பெருமையோடு லாலாவைப் பார்க்க,

“உன் கல்யாணத்துக்கு முன்னாடி வந்தப்போ உன் சித்தப்பா ஒரு கதை சொன்னாரே ஞாபகம் இல்லை? டீ கூட போட தெரியாத உன் சித்தப்பாவை ஒரு வாரம் டின் கட்டி, டீ காஃபி போட வச்சு எங்கத்தை தானே டிரெயினிங் கொடுத்தாங்க. அப்போ அவங்களைப் பாராட்டாம, உங்காத்தா அஞ்சம்மா ட்ரெயினிங்னா சொல்ல முடியும்?” என்ற கேட்ட சக்தியின் கையில் லெக் பீஸ் இருந்தது. அவன் உண்ட விதமே உணவை விரும்புகிறான் என்று சொன்னது.

“ஓஹோ! அப்படியா சித்தப்பா?” என்ற லாலா சித்தப்பனைக் குறுகுறுவென்று பார்த்து, 

“நம்ம வீட்ல ஏன் சித்தப்பா நமக்கு சமைக்க சொல்லித்தரல, முன்னாடியே தெரிஞ்சிருந்தா இவனெல்லாம் நம்மைப் பேசுவானா? நல்லா சமைச்சு என் தங்கச்சியைக் கரெக்ட் பண்ணிட்டான். அந்த கொழுப்புல பேசுறான்” என்றபடி பிரியாணியை ரசித்து சுவைத்த லாலா, 

“நீங்க செஞ்சதை சாப்பிடதும் நானும் ஒரு நாள் இப்படி சமைப்பேன் நம்பிக்கை வந்துடுச்சு” என்று தனக்காக சந்தோஷப்பட்டான்.

சக்தியோ, “ஆஹ்ன் கண்டிப்பா! என்ன ஒரு பதினைஞ்சு வருஷம் ஆகும்” என்று சொல்லி கண்ணடிக்க, லாலா விழித்தான். 

“டேய் சக்தி!” என்று அவனை அதட்டிய சித்ரஞ்சன், லாலாவிடம் 

“ஏண்டா சமையல்ல ரொம்ப சொதப்புறியோ?”

“உங்க அண்ணன் மகனுக்கு டீ வைக்கக் கூட தெரியாது. இப்போதான் ஸார் கத்துக்கிட்டு இருக்கார். இவன் செஞ்ச ‘நான்’,  வாயிருந்தா ‘நான் நானான்னு’ சண்டைக்கு வந்திருக்கும். அப்படி கூத்தடிச்சிருக்கான் மாமா. சரோ கூட புலம்புவா, எங்க வூட்டு ஆளுங்களுக்கு வெந்நீர் வைக்கக் கூடத் தெரியாதுனு.” என்றவன் லாலாவிடம்,  

“ஏதோ எங்கத்தையால உன் சித்தப்பா இப்படி ருசியா சமைக்கிறார். எஞ்சாய்” என்றான். 

உண்மைதான்! சித்ரஞ்சனுக்குத் திருமணம் முடியும்வரை இதெல்லாம் தெரியாது. திருமணம் என்பது சந்தோஷம் மட்டுமில்லை, துணை தேடுவது, புது பந்தம் என்பதைத் தாண்டி புதிய பொறுப்புகள். 

பொறுப்புகளைப் பிரித்தும், இன்னொருவருக்கு முடியாத போது உறுதுணையாக இருத்தலும், துணையோடு போட்டி மனப்பான்மை இல்லாமல் ‘நாம்’ என்ற எண்ணத்தோடு இருப்பதும் மிக முக்கியம். இதெல்லாம் சித்தப்பா ஒரே நாளில் கற்றுக்கொள்ளவில்லை. 

காலம் கற்றுக்கொடுத்தது. வசுந்த்ரா மீதான காதல் கற்றுக்கொள்ள சொன்னது. 

அவர்கள் கடந்து வந்த அனுபவத்தின் அர்த்தம் சித்ரஞ்சன் முகத்தில் புன்னகையாக வெளிப்பட்டது. சக்தியும் லாலாவும் அவனைப் பார்க்கவும்,

“வசுவைக் கல்யாணம் செஞ்சப்போ எனக்கு உலக மகா சாதனை செஞ்ச ஃபீல் லாலா! எனக்குப் பிடிச்ச வேலை, பிடிச்ச பொண்ணு, இனிமே என் வாழ்க்கை என் கையில்லனு ஒரு அளவில்லாத சந்தோஷம். பழைய படமெல்லாம் பார்த்துக் கெட்டுப்போன ஒரு பழமைவாதி நான், தாலி கட்டினாலே உங்கத்தைக்கு என் மேல லவ்வு வந்துடும் நினைச்சேன்” என்றதும் சக்தி நக்கலாகப் பார்த்தான். 

“டேய்! அப்போ எனக்கு அறிவும் அனுபவமும் அவ்வளவுதான்! நீ சிரிக்காம சொல்றதைக் கேளு” என்று சொல்லி தொடர்ந்தான். 

“ஒன்னு லவ் சொல்ல பயந்த இதயம் முரளி பாய்ஸ், இல்லை இப்படி தாலி கட்டினா லவ் வந்துடும் நினைச்ச தற்குறி பாய்ஸ். இதான் எங்க ஜெனரெஷன். ஆனா, வசுவைக் கல்யாணம் செஞ்ச அப்புறம் நான் நினைச்சது ஒன்னு. நடந்தது ஒன்னு” 

“அதுக்கெல்லாம் நான் தயாரா இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமா போச்சு. யாரை தினமும் பார்க்கணும் நினைச்சு வாழ்ந்தேனோ, அவளைப் பார்க்கவே அவ்வளவு பயமா இருக்கும். எதாவது சொல்லிடுவாளோனு பயந்துட்டே இருப்பேன்.. அப்புறம் கொஞ்ச நாள் ஆச்சு நானும் கொஞ்சம் நல்லவன்னு உங்கத்தைக்குப் புரிஞ்சு எல்லாம் நல்லா போச்சு. ஆனாலும், நான் செஞ்ச தப்பு உறுத்திட்டே இருக்கும். இப்போ உங்க வீட்டோடு சேர்ந்தபின்னாடிதான் வசு உண்மையில ரொம்ப சந்தோஷமா இருக்கா” 

“வாழ்க்கையைப் பகிரணும்னா முதல்ல வீட்ல இருக்க வேலையைப் பகிர்ந்துக்கணும்னு புரிஞ்சது. உங்கத்தையை உனக்குத் தெரியுமே! அதை செய், இதை செய்னு அசால்ட்டா சொல்லிடுவா, நானோ எங்கம்மா அஞ்சம்மாவோடு செல்ல மகன். ஒன்னும் தெரியாம உங்கத்தைக்கிட்ட திட்டு வாங்கி, அப்படியே கத்துக்கிட்டேன்” என்றவன், 

லாலாவிடம், 

“சமையல் வரலன்னா கூட பரவாயில்லை, பாத்திரம் விளக்கு. இல்லை வீடு பெருக்கு, துணி துவைச்சுப் போடு. என்ன செய்றோம்னு முக்கியமில்லை, உன் பொண்டாட்டி கஷ்டப்படக் கூடாதுனு செய்றதுதான் முக்கியம் லாலா” என்றான் சித்ரஞ்சன். 

“அனுபவம் பேசுது” என்று அதற்கும் சக்தி பதில் பேச,  மூவரும் இப்படியாக பேசி சிரித்தபடி உண்டு முடித்தனர். உண்டு முடிக்கவும் மூவருக்குமே களைப்பு, உறக்கம் கண்ணை சுழற்றினாலும் தூங்கவில்லை. அப்படியே சாய்ந்து உட்கார்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள். 

அப்போது லாலா சித்ரஞ்சனிடம், 

“சித்தப்பா, நான் ப்ரிபேரேஷனை விடலாம் முடிவு பண்ணிட்டேன்” என்றதும் அவர் அதிர்ந்து பார்த்தார். 

“என்னடா? என்று அதிர்ந்தான். 

“ஆமா, சித்தப்பா. இதுக்கு மேல முடியாதுனு தோணுது. எதாவது வேலைப் பார்த்துக்கலாம் முடிவு பண்ணிட்டேன்.” என்றதும் சித்ரஞ்சனுக்கு வருத்தமானது.

“என்னடா பேசுற? இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்ட?” என்று சக்தி ஆதங்கமாக நண்பனைப் பார்த்தான்.

லாலாவோ சக்தியைப் பார்க்காமல், “நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு வேலை வாங்கித் தரேனு சொன்னீங்களே சித்தப்பா, இப்போ முடிஞ்சா அதை செய்ங்க. ப்ளீஸ்” என்று கேட்க, அவனை அப்படி பார்க்க சித்ரஞ்சனுக்குத் தாங்கவில்லை. 

“இதெல்லாம் யோசிச்சுதான் இந்த கோலத்துல இருக்கியா? முன்னாடி எவ்வளவு நம்பிக்கையா பேசின.. இப்போ ஏண்டா?” என்ற சக்திக்குத் தாங்க முடியவில்லை. 

லாலா எத்தனை கனவு கண்டான் என்று உடனிருந்து பார்த்தவன். அவன் உழைப்பைக் கண்ணாரக் கண்டவன். இப்போது அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போக போகிறதா? 

சக்தி லாலாவை எண்ணி வருந்த, சித்ரஞ்சனுக்கோ அவர் அப்பா, அண்ணனை எண்ணி கவலை. அவர்களுக்குத் தெரிந்தால் லாலாவை என்ன சொல்வார்களோ என்ற பயம். 

“இவ்வளவு தூரம் வந்துட்டு இப்படி பேசுறியே லாலா.. சக்தி சொல்ற மாதிரி இந்த வருஷம் மட்டும்..” என்ற சித்ரஞ்சனை முடிக்க விடவில்லை. 

உடனே மறுப்பாக தலையசைத்த லாலா, 

“இந்த தூரத்தோட நிறுத்திடணும் சித்தப்பா. இதுக்கு மேல தூரம் போயிட்டா இப்ப கொஞ்சம் இருக்க நம்பிக்கையும் போயிடும். இப்போ நான் மட்டுமில்ல, என்னை நம்பி உதயா இருக்கா.” என்ற அண்ணன் மகனை ஆதுரமாகப் பார்த்தான் சித்ரஞ்சன். 

இந்த காதல் அவன் கனவுகளைத் தடை செய்துவிட்டதோ என்று தோன்றியது. லாலா சொல்வது போல அயராத முயற்சி, தளராத பயிற்சி என்று எத்தனைப் பேசினாலும் சில நேரங்களில் சில முயற்சிகளை ஒரு கட்டத்தில் நிறுத்தியாக வேண்டும். ஒன்று வெற்றியோடு, இல்லை தோல்வியோடு எதையோ ஒன்றைத் தொட்டு நிறுத்தித்தான் ஆக வேண்டும். 

லாலா அப்படியான நிலையில் இருந்தான். இப்படியே போனால் தன் நிம்மதி போய்விடும் என்ற தெளிவு வந்திருந்தது. 

“சரிடா, பார்த்துக்கலாம். நான் தெரிஞ்சவங்க கிட்ட சொல்றேன்” என்ற சித்ரஞ்சன், அப்போதே எழுந்து சென்று பால்கனியில் நின்றபடி லாலாவின் வேலை விஷயமாகப் பேசினான். 

சக்திக்கு வருத்தமாக இருந்தாலும், லாலாவின் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை. 

“அதான் முடிவெடுத்திட்டியே, அப்புறம் என்ன ஒழுங்கா ஷேவிங் பண்ணிட்டு நீட்டா இரு” என்றான் நண்பனிடம்.

லாலா சக்தியின் கையைப் பிடித்துக்கொண்டான். 

“பயமா இருக்கு மச்சி, சித்தப்பா கிட்ட தைரியமா பேசிட்டாலும் என்ன செய்யப்போறேன்னு தெரியல, ஊர்ல இருக்கவனுங்க, நம்ம வீட்ல எல்லாம் என்ன சொல்வாங்கனு யோசிச்சாலே பயமாயிருக்கு” என்றவன் குரலில் அச்சமிருந்தது. 

அதைக் கேட்டபடி வந்த சித்ரஞ்சன், 

“டேய் லாலா! அடுத்தவங்களைப் பொருத்தவரை நம்ம வாழ்க்கை அவங்களுக்குப் பொழுதுபோக்கு. நமக்கு என்ன நடந்தாலும் அதை விமர்சனம் செய்யத்தான் போறாங்க. என்னையே பாரு, ஆசைப்பட்ட வேலையில சேர்ந்தேன். ஆசைப்பட்ட பொண்ணைக் கட்டினேன். ஆனா, நான் செஞ்ச தப்பால நானும் வசுவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழ சில வருஷமாச்சு. நீ அதை யோசிக்காத!”

“அடுத்தவங்களை விடுங்க சித்தப்பா, உங்கப்பா, எங்கப்பா? அவங்களை நினைச்சாத்தான்..” என்று லாலா சோகமாக லாலா பாட, 

“அவங்களுக்கும் அதேதான். அப்பாவுக்குப் பிடிக்காதுனு நான் அவங்களை யோசிச்சு செஞ்ச கிறுக்குத்தனம் வசுவைக் காயப்படுத்திடுச்சு. சரின்னா நம்ம யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லைனு நேர்மையா அதுக்காக நிக்கணும் லாலா. அடுத்தவங்களை யோசிச்சு தப்பு செய்யாத! சித்தப்பா இருக்கேன், பார்த்துக்கலாம்” என்று நம்பிக்கையாகப் பேசிய சித்தப்பாவை அணைத்துக்கொண்டான் லாலா. 

லாலா தன் கனவினை உதறி, புதிய பாதைக்குத் தயாராகி வர உதயா அவள் கனவின் அடுத்த படி கண்டு சந்தோஷத்தில் இருந்தாள். 

லாலா தன் முடிவை உதயாவிடம் சொல்லி புது இடத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்க, அவனை சோதிக்கவே அச்சமயம் அவன் பெற்றோர் சென்னை வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!