Skip to content
Post Views: 1,699
வேளை 21
சக மனிதனின் உடனிருப்பு என்பது ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆதிகாலம் முதலே குழுவாக வாழ்ந்த வழமை கொண்டவன் மனிதன். அதுவும் பிரியமான ஒரு உடனிருப்பு என்பது சிலருக்கு எளிதாக கிடைக்கும், சிலருக்கோ எட்டாக்கனி.
Advertisement
லாலாவுக்கு உதயா அப்படி எளிதாய்க் கிடைத்தவள். அதற்காக, உதயாவை லாலா எளிதாக நினைக்கவில்லை. அவளை அவன் மனத்தில் உயர்ந்த ஒரு இடத்தில் வைத்திருக்கிறான்.
அந்த இடத்திற்குச் செல்ல தனக்கு இன்னும் தகுதி இல்லை என்ற மறுகலே அவனுக்கு மன உளைச்சல் கொடுத்தது.
Advertisement
Advertisement
சமத்துவமே காதலின் சாரம்! அதில் நீ பெரிதா, நான் பெரிதா என்ற கேள்விக்கே இடமில்லை.
லாலா உள்ளுக்குள் தினமும் உடைந்துக்கொண்டிருந்தான், பயந்தான்.
Advertisement
“இப்படியே இருந்திடுவேனோன்னு பயமா இருக்கு உதயா”
அதுவரை கண்ணீரோடு இருந்தவனின் கரகரப்பான குரல் உதயாவை அசைத்தது.
அந்த வார்த்தைகளை விட அவன் அதை சொன்னவிதம் அவளை கவலைக்குள்ளாக்கியது.
“என்னாச்சு லாலா? எதுவும் பிரச்சனையா?”
“நாந்தான் பிரச்சனை” விரக்தியைத் தொட்டது அவன் குரல். அழுகையில் முடிந்து ஆறுதல் தேட தொடங்கிய பாவனையில் அவன் குரல். இன்னும் அவன் அணைப்பிலே இருந்தாள் உதயா. அவளின் கைகள் அவன் முதுகை இதமாய் வருடிக்கொடுக்க, அவனோ பற்றுதல் போல அவளைப் பிடித்திருந்தான்.
“ப்ச், என்ன பேச்சு இது?”
“சரி, பேசல போ” என்று குழந்தை போல் அவன் கோபம் கொண்டான்.
முகம் திருப்பியவனின் முதுகைத் தன் பக்கம் திருப்பி, கன்னத்தை இருகரத்தாலும் துடைத்தவள் ஆறுதலாக அவனை அணைத்துக்கொண்டாள்.
அறைக்குள் பரவிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் உதயா லாலாவின் கண்களுக்குத் தேவதையாக தெரிந்தாள்.
என்ன நைட்டி அணிந்த தேவதை. அவனுக்குத் தேவையான தேவதை!
உதயாவின் கண்களில் காதல், பரிவு, ஆறுதல் என்று லாலாவிற்கு வேண்டிய அத்தனையுமிருந்தது. ஆனால், உதயாவுக்கு வேண்டியது தன்னிடமிருக்கிறதா என்ற தன்னிரக்கம் அவனை கண்மூட வைத்தது.
“லாலா! நீங்க உங்களை பிரச்சனைன்னு நினைக்கிறதை விடுங்க. அப்போதான் உண்மையா பிரச்சனை இருந்தா சரி செய்ய முடியும். என்ன?” என்று கேட்டு, அவன் கன்னம் பற்றிட, அந்த அன்பு என்னமோ செய்தது.
நெஞ்சம் பிசையும் உணர்வு! அன்பின் ஏற்பு கூட சில நேரங்களில் பாரம் தந்துவிடுகிறது. எப்போதும் கணக்கீட்டு அன்பினை கொடுக்க முடியாது. அதுவும் கணவன் மனைவி உறவில் நித்தமும் சமத்துவத்தைக் கடைபிடிக்க முடியாது. அவ்வுறவில் இருவரும் இணைந்தால் மட்டுமே முழுமை இருக்கும்.
“இதான் உதயா எனக்குக் கஷ்டமா இருக்கு” என்ற லாலாவின் குரல் அந்த கஷ்டத்தை உதயாவுக்குக் கடத்துவதாக இருந்தது.
லாலாவுக்கு தன்னந்தனி காட்டில் கரும்புகை சூழ தனியே நிற்கும் உணர்வு.
“நான் இருக்கேன் லாலா” என்று எதையும் கேட்காது மீண்டும் உதயா அவ்வார்த்தைகளிய உதிர்க்க, உதயா உதிர்த்த வார்த்தைகளில் லாலாவினுள் சிறு மலர்வு.
“வீட்ல சொன்னாங்கனு படிக்க ஆரம்பிச்சேன் உதயா, தாத்தாவுக்காக, அப்பாவுக்காக. அவங்க பார்வையில என்னால குறைஞ்சுப் போறதை நினைக்கவே முடியல. சொல்லப்போனா எப்பவும் நான் எது செஞ்சாலும், தாத்தாவை அப்பாவை நிறைய யோசிப்பேன். பயமா, பாசமா, மரியாதையா எல்லாமா தெரியல. ஆனா அவங்களை மீற கொஞ்சமும் தைரியமே எனக்கிருந்தது இல்லை”
“நியாயமான விஷயங்களுக்குக் கூட அவங்களை எதிர்த்ததில்லை. இப்பவரை நானும் சக்தியும் ஸ்கூல்ல இருந்தே ப்ரண்ட்ஸ்னு வீட்ல சரோ, சித்தி, சித்தப்பா தவிர யாருக்கும் தெரியாது. ஏன்னா சக்தி வீட்டை எங்க தாத்தாவுக்குப் பிடிக்காது”
அவன் பேச பேச அமைதியாக தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் உதயா. அவளின் மென்விரல்கள் லாலாவின் விரல்களோடு உறவாடின. அந்த விரல்களின் ஸ்பரிசம் லாலாவுக்கு அவன் பேச்சைக் கேட்பதை உணர்த்தின.
“நம்ம லவ்வை கூட சித்தப்பா வீட்ல சொன்னார். அவங்க மேல பயம்ன்றதை விட அவங்க பார்வையில நான் எப்பவும் கீழா போய்ட கூடாதுன்ற பயம் இன்னும் என்னை விட்டுப் போகல. காலேஜ் முடிச்சதுல இருந்து க்ளாஸ் போய் இப்போ ஆறேழு வருஷம் ஆகிடுச்சு. இன்னும் ஒரு வேலை கிடைக்கல..”
“லாலா..” என்றவளின் பேச்சை தலையசைத்து மறுத்தவன் தொடர்ந்தான்.
“எனக்கும் ஒரு காலத்துல அப்பா, சித்தப்பா மாறி ஆகணும்னு ஆசையிருந்தது. அது என்னோட ஆசையான்னு இப்போ யோசிச்சா, இல்லை. தாத்தாவோட ஆசையை நான் என்னோடதா வளர்த்துக்கிட்டேன். முதல் ரெண்டு வருஷம் ஒரு வேகம் இருந்துச்சு, புதுசா படிக்கிறோம்னு ஒரு ஆர்வமிருக்கும். அதோட படிச்சு யுபிஎஸ்சி எக்ஸாம்ல ப்ரீலிம்ஸ் க்ளீயர் பண்ணினேன். மெயின்ஸ் பாஸ் ஆகலன்னாலும் விடாம ரெண்டு வருஷம் ட்ரை பண்ணினேன்”
“அது வருஷத்துக்கு ஒரு தடவ வரதாலயும் கூடவே அதுல வேகன்சி கம்மின்றதாலயும் என் கோச்சிங் செண்டர்ல மத்த எக்ஸாம்ஸும் எழுத சொன்னாங்க..” என்றவன் தொடர்ந்தான்.
“ஆரம்பத்துல தீவிரமா படிச்சேன். ஆனா சுத்தமா முடியல, நாளாக நாளாக பயம் அதிகமாகிடுச்சு. அடுத்த அட்டெம்ட் ப்ரிலிம்ஸ் கூட க்ளியராகல. சக்தி ஒரே வருஷம் படிச்சு எஸ்.ஐ ஆகிட்டான். நானே ஐபிஎஸ் ஆக லேட்டாகும்னு மோட்டிவேட் பண்ணி படிச்சேன். மூணாவது தடவயும் ஃபெயில்”
“எங்க தாத்தா மறுபடி ட்ரை பண்ண சொன்னாலும், அப்பா வேற எக்ஸாம் படிக்க சொல்ல. UPSC, TNPSC, SSC, RRB, NABARD, IBPS’ன்னு இருக்க எல்லாத்தையும் எழுதினேன். அதுவரைக்கும் இப்படி எக்ஸாம் இருக்கான்னு கூட தெரியாது. சிலதுல ப்ரிலிம்ஸ், மெயின்ஸ், ஒன்னு ரெண்டுல இண்டர்வியுன்னு போய் கடைசியில ரிசல்ட் என்னவோ ஃபெயில்தான்”
“ஓவர் ஆல் கட் ஆஃப் வந்தா செக்ஷனல் கட் ஆஃப் வராது. ஏண்டா படிக்கிறோம்னு தோணும், கூடவே சென்னையில தங்கி படிக்கிறதால சாப்பாடு செட் ஆகாது. ஊர்லயே படிக்கலாம்னா சொந்தக்காரனுங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. நான் என்ன செஞ்சா என்னடான்னு கத்த தோணும்”
“கவர்மெண்ட் எக்ஸாம்க்குப் படிக்கிறோமா இல்லை கவர்மெண்ட் குப்பைத் தொட்டியான்னே சந்தேகம் வந்துடும். போறவன் வரவன் எல்லாம் அட்வைஸ் பண்ணுவான்”
லாலா இதற்கு முன்னும் இப்படி பேசியிருக்கிறான். ஆனால் இன்று உடைந்து போய் அவன் உள்ளத்தை சொன்னான். அவனது உள்ளத்தின் பாதுகாப்பின்மை, எதிர்க்காலம் குறித்த அச்சம், சுற்றத்தாரின் பேச்சு, குடும்பத்தினர் எதிர்ப்பார்ப்பு என்று எல்லாம் அவனை பாம்பாக சுற்றி வளைத்து இறுக்கின.
உதயாவுக்கு அவனுக்கு அகராதியில் எந்த வார்த்தையை எடுத்து வாஞ்சையாக ஆறுதல் சொல்லவென தெரியவில்லை. ஆனால் எச்சொல்லும் அவனைக் காயப்படுத்தக் கூடாது என்ற கவனம் மட்டும் நிறைய இருந்தது.
“இப்போ சுத்தமா முடியலடி! இன்னும் எத்தன நாள். ஒரு மூணு நாலு வருஷம் எழுதலாம். ஆனா இப்படியே எழுதி கிடைக்கலன்னா…நான் என்ன ஆவேன்? முப்பது வயசாகிடுச்சுன்னா எங்க வேலைக்குப் போவேன்? இந்த மென்டார் வேலை எத்தனை நாளைக்கு? டெல்லில ராஜேந்தர் நகர் மாதிரி, சென்னையில அண்ணா நகர் ஆகிடுச்சு. ஒரு தெருவிடாம ஒரு ஐ.ஏ.எஸ் அகாடமி”
“யாருக்காக இல்லைனாலும் உனக்காக, உன்னை நல்லா வச்சுக்கணும்னு நானும் என்னை புஷ் பண்ணி படிக்கிறேன். இருந்தாலும் இத்தனை வருஷம் அதையே படிச்சு பைத்தியமாகிடுவேனோன்னு பயமா இருக்கு. சிலர் அஞ்சாறு வருஷம் கழிச்சு நல்ல போஸ்டிங் போறாங்க. ஆனால், அது ரொம்ப கம்மி. என்னோட படிச்சவங்க எல்லா நல்ல வேலையில இருக்காங்க. என்னால ஸ்கூல், காலேஜ் ப்ரண்ட்ஸ் யாரோடயும் பழையபடி பேச முடியல… எனக்கே என்னோட தோல்வி தினமும் தெரியுது.”
“இதுல குழந்தை வந்து, என்னால ஒன்னுமே செய்ய முடியலன்னா நான் நிச்சயம் தாங்க மாட்டேன் உதயா. அப்புறம் எதுக்குடா கட்டின, கட்டிப்பிடிச்சன்னு கேட்காத, உன்னை விட்டுட்டா மறுபடி நீ கிடைக்க மாட்டன்னு பயம்” என்றவன் குரலில் இன்னும் அச்சம் மிச்சமிருந்தது.
அதுவரை லாலாவின் வாழ்க்கை, அவன் வீட்டுப்பெரியவர்கள் காட்டிய வழியில்தான் இருந்தது. இப்போது அவன் தனித்து விடப்பட்டிருக்க, என்ன செய்வது என்ற பயம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய பயம். நிகழ்காலம் கொடுக்கின்ற அழுத்தம் என்று தனக்குள் போராடிக்கொண்டிருந்தான்.
அந்த போராட்டத்தில் உதயாவையும் இழுத்துவிட்ட குற்றவுணர்வு அவனுக்கு அதிகமிருந்தது.
“உனக்குப் பிடிச்சதை எல்லாம் செய்யணும்னு எனக்கு அவ்வளவு ஆசை உதயா. வீட்ல உள்ளவங்களுக்கு ஒன்னும் செஞ்சதில்லை, அட்லீஸ்ட் உன்னையாச்சும் நானே பார்த்துக்கணும் ஆசைப்படுறேன். ஆனா, ஒவ்வொரு தோல்வியும் எனக்கு இனிமே ஒன்னுமில்லையேன்னு என்னைப் போட்டு படுத்துது” என்றவன் விரக்தியோடு அவளிடமிருந்து விலகி விட்டத்தை வெறித்தான்.
“தோத்துட்டேன், தனியா இருக்கேன். இதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை லாலா. நீங்க எக்ஸாம்ல ஃபெயிலான வாழ்க்கையில ஒன்னுமில்லனு அர்த்தமில்லை. வாழ்க்கையை ஒரே ஒரு எக்ஸாம் தீர்மானிக்கிறதில்லை”
“இதை மாதிரி நூறு மோட்டிவேஷன் வீடியோ பார்த்துட்டேன் உதயா, நீ வேற” என்றான் கடுப்பாக.
“ப்ச், இப்படி பேசாதீங்க லாலா. லாலான்ற மனுஷனை நான் விரும்புறேன், அவனோட வெற்றி, தோல்வி ரெண்டும் எனக்கும் ஒன்னுதான். வெற்றி, தோல்வி வச்சு என் பாசம் மாறாது!” என்றவள் பக்கம் வேகமாக திரும்பி லாலா பதில் சொல்ல வர, சட்டென்று கையால் அவன் வாயை முடினாள் உதயா.
“நீங்களும் உங்களை அப்படித்தான் பார்க்கணும் லாலா. மத்தவங்க கண்டிப்பா எதாவது சொல்வாங்கதான், சொல்லாம இருக்க மாட்டாங்க. எத்தனை பேர் வேலையில சிறப்பா இருந்துட்டு, சொந்த வாழ்க்கை நல்லா இல்லாம இருப்பாங்க? சிலருக்கு சொந்த வாழ்க்கை நல்லாயிருக்கும், வேலை சரியா இருக்காது. அப்பவும் உலகம் எதாவது பேசத்தான் செய்யும்”
“உங்கப்பா, சித்தப்பா கவர்மெண்ட் வேலைக்குப் போனதால நீங்களும் போகணும்னு கட்டாயமில்லை. இப்போ லவ் ஃபெயிலர் ஆச்சுன்னா அதையே நினைச்சு லைஃப் முடிச்சிக்கணும் சொல்வீங்களா?” என்று உதயா கேட்க, லாலாவின் தலை மறுப்பாக அசைந்தது.
“அப்படித்தான்! எங்கப்பா கடன் வாங்கி கட்ட முடியாம இறந்துபோனார். அதையே நினைச்சுட்டு இருந்திருந்தா எங்களால இன்னிக்கு வாழ முடியுமா?” என்ற உதயாவின் கரத்தைப் பற்றியவனுக்கு வார்த்தைகள் வற்றிய நிலை.
ஆனாலும் சொல்ல நினைத்தான்.
“அதான் உதயா, எனக்கு இன்னும் கில்ட் கொடுக்குது. அவ்வளவு கஷ்டப்பட்ட உன்னை, நானும் சேர்ந்து கஷ்டப்படுத்துறேன்..” என்ற லாலாவை எப்படி உதயாவால் வெறுக்க முடியும்?
“நீங்க அப்பப்போ சொதப்பினாலும் எனக்கு உங்களை தெரியும் லாலா. ஒரு விஷயம் முயற்சி செஞ்சு பார்த்துட்டு கிடைக்கலன்னா விடுறது தப்பில்லை. யாரையும் யோசிக்காதீங்க, நீங்க விடுறதால உங்களுக்கு முடியலன்னு இல்லை. இனியும் அதை தொடருறது உங்களுக்கு சந்தோஷம் தரலன்னா ஏன் அதை செய்யணும்? நீங்க படிச்ச படிப்புக்கு வேற ஜாப் போகணுமா போங்க. கோர்ஸ் எதாவது படிக்கணுமா படிங்க” என்று உதயா சொன்னதும் லாலாவிற்கு தேவதைகள் நைட்டியும் அணிவார்கள் என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.
ஆனால் அவனோ Disappointment in a T-shirt போல தன்னை உணர்ந்தான்.
“ஒரே ஒரு வாழ்க்கை லாலா, அதை இப்படி யோசிச்சு, உங்களை வருத்தி ஏன்? வீட்ல நீங்க நல்லா இருந்தாலே சந்தோஷப்படுவாங்க. அவங்க சொல்றதைக் கேட்டா சந்தோஷப்படுவாங்கன்றது கூட சர்வாதிகாரம் தானே? வாழ்க்கை ரேஸ் இல்லை, இப்ப இப்ப இதை செஞ்சே ஆகணும்னு யார் கண்டுபிடிச்சா? எனக்கு நீங்க சந்தோஷமா இருந்தா போதும் லாலா” என்று உதயா சொல்ல சொல்ல, லாலாவிற்கு உதயாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பேராவல் பெருகியது.
அவனால் வகுப்புகள் எடுத்தபடி தொடர்ந்து படிக்க முடியவில்லை. மிகுதியான அழுத்தம் கொடுத்தது. அதுவும் வயது ஏற ஏற வாழ்க்கை மீதான பயம் அதிகரித்தது. சில சமயம் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று தோன்றினாலும், சிறு சறுக்கல் கூட பெரும் பாதிப்பை உண்டு செய்தது.
எந்த தேர்விலும் தேறாமல் போனால், இதுவரை செய்த முயற்சிகளுக்கு என்ன பயன்? என்ற பெரும்கேள்வி அவனிடம்.
Sunk cost fallacy என்று ஆங்கிலத்தில் உண்டு. ஏற்கெனவே செய்த மூதலிடு, நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாம் செய்யும் செயலில் எதிர்காலமே இல்லாமல் இருந்தாலும், மனரீதியாக அதனை தொடர நினைப்போம். பணம், நேரம், உறவுகள் என்று இது எல்லாவற்றிக்கும் பொருந்தும். லாலாவின் நிலைமை அப்படியே.
அவனைப்போல நிறைய இளைஞர்களின் நிலை அது! 800 காலியிடம் உள்ள பணிகளுக்கு, எட்டு இலட்சம் பேர் விண்ணப்பிக்கையில் முயற்சியே செய்தாலும், முதல் எண்ணூறு இடங்களில் வர மிகுதியான முயற்சி வேண்டும், கூடவே துளியளவு அதிர்ஷ்டமும்.
“சாரி உதயா, உன்னை நிறைய ஹர்ட் பண்ணிடுறேன்” என்று லாலா சொல்ல, உதயா அந்த நேரம் எதையும் சொல்லி அவனை காயப்படுத்தவில்லை. அமைதியாக அவன் கரத்தைத் தட்டிக்கொடுத்தாள்.
“இப்போ தூங்குங்க லாலா” என்ற உதயாவும் சிறிது நேரத்தில் உறங்கிப்போக, லாலா உறங்க நேரமெடுத்தது.
மனத்திற்குள் அத்தனை யோசனை. இருபதுகளின் இறுதியில் வந்து நின்றபின்னே அடுத்து வேறு பாதையில் செல்லலாமா? செல்ல முடியுமா? என்ற குழப்பம்.
இருபதுகளின் இறுதி என்பது எல்லாவற்றிற்குமான இறுதியா? ஏற்கெனவே தன் குழப்பங்களை அவளிடம் பகிர்ந்ததில் இன்னும் உடைந்திருந்தான் லாலா. தன் சோகங்களையும், குழப்பங்களையும் மட்டுமே அவளுக்குத் தருகிறோமே என்ற வருத்தம் மேலோங்கியது.
எப்படியோ உறங்கி எழுந்தவன் காலை விழிக்கையில் உதயா அருகில் இல்லை. மெல்ல எழுந்ததும் பக்கத்தில் இருந்த அலைப்பேசியைப் பார்க்க, அவனது நண்பன் சக்தியிடமிருந்து குறுஞ்செய்தி. நாளை சென்னை வருவதாக சொல்லியிருந்தான். லாலாவிற்கு சந்தோஷமாக இருந்தது.
அன்று உதயாவிற்கு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இன்று தேவதையின் உடை சுடிதாராக இருந்தது. அதில் சக்தி வரும் விஷயம் சொல்ல மறந்தான்.
“என்ன உதயா? இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட?” என்ற லாலா தண்ணீரைப் பருகினான்.
“ஆஃபிஸ்ல க்ளையண்ட் மீட்டீங் இருக்கு. ஸோ கண்டிப்பா நேர்ல வரணும் சொல்லிட்டாங்க லாலா. நீங்க கடையில சாப்பிடுங்க, சாரி. நான் ஆஃபிஸ்ல பார்த்துக்கிறேன்” என்ற உதயாவின் அருகே வந்தவனை அவள் ஆராயும் பார்வை பார்த்தாள்.
உள்ளே என்ன வைத்து மறுகுகிறான் என்ற கவலை அப்பட்டமாக தெரிந்தது.
உதயாவின் கன்னத்தைப் பற்றியவன்,
“நீ நான் பேசினதை நினைச்சு கவலைப்படாத, கொஞ்ச நாள் ஆனா சரியாகிடுவேன். கொஞ்சம் டைம் கொடு உதயா” என்றவன் அவளை இறுக்கி அணைத்தான்.
அவள் முகத்தை நேராகப் பார்த்தவனின் ஒற்றைக்கரம் அவள் கன்னத்தைத் தாங்கிப்பிடித்திருந்தது.
“உலகத்துல நான் ஒன்னுக்குமே லாயக்கில்லன்னு நினைக்கிறப்போ நீதான் உதயா என்னை காப்பாத்துற. ஐ லவ் யூ! உன் காதல்தான் எனக்கு நம்பிக்கைக் கொடுக்குது. உன்னோட நம்பிக்கையிலதான் என் நம்பிக்கை வாழுது” என்றான் ஆத்மார்த்தமாக.
தன் லாலாவுக்கு இப்படியெல்லாம் பேச வருமா என்று உதயாவுக்கு ஆச்சரியம் எழுந்தது. அதே நேரம் அவளின் துறுதுறு லாலாவை நினைத்து ஏங்கினாள். காலத்தின் கட்டாயமாக லாலா மாறிப்போயிருந்தான்.
உதயாவின் சந்தோசம் அலுவலகத்திலும் தொடர்ந்தது. அவளுக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்க, அத்தனை வருட உழைப்பின் அங்கீகாரம் மகிழ்வை கொடுத்தது.
லாலாவிடம் சொல்ல கைப்பேசியை எடுத்தவள், முடிவை கைவிட்டாள். வேண்டாம், ஏற்கெனவே தன்னை நினைத்து வருந்துகிறான். நிச்சயம் தன்னை தாழ்வாக நினைப்பான் என்று உதயா சொல்லாமல் மறைத்தாள்.
அன்பெனும் இருமுனை கத்தியைக் கையாள முடியாமல், லாலாவை அறியாது காயப்படுத்தினாள் உதயா.
error: Content is protected !!