Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அரங்கேற்ற வேளை – 9

வேளை 9 

உதயாவின் அணைப்பு லாலாவுக்கு அந்த நேரம் மிகுந்த இதமாக இருந்தது. சக்தி அழைப்பைத் துண்டித்துவிட்டு செல்லவும்தான், அவன் அழைப்பில் இருந்ததே உதயாவுக்குப் புரிந்தது. 



Advertisement

“சக்தியண்ணா கூட பேசிட்டு இருந்தீங்களா?” என்று உதயா அணைப்பினைத் தளர்த்தி நகர, லாலா விடவில்லை. மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டவன், 

“ஆமா, உங்கண்ணன் கிட்டதான் டீ போட கேட்டேன்” என்றதும் உதயாவுக்குக்  கொஞ்சம் ஆச்சரியமும் நிறைய பிரியமும் கணவன் மேல்பிறந்தது.

Advertisement

Advertisement

“யூ டூப்ல போட்டா வரப்போகுது” உதயா நமட்டுச் சிரிப்போடு சொல்ல, 

“எங்களுக்குத் தெரியாமதான். போடி” என்று சலித்தவன் தேனீரை வடிகட்டி டம்ளரில் ஊற்றினான்.

Advertisement

“யூ டூப்ல தேவையான அளவு சக்கரை, தூள்னு சொல்றானுங்க. அந்த தேவையானது தெரிஞ்சா நான் என்னத்துக்கு அவனுங்க விடியோ பார்க்கிறேன்? என் நண்பனா சரியான அளவு சரியா சொல்லுவான்” என்று பெருமையாக சொன்ன லாலா அடுத்த நொடியே,

“ஆனாலும் அந்த துரோகிக்கு நல்லா சமைக்கத் தெரியுமாம். ஒரு நாள் கூட அவன் அதை சொன்னதே இல்லை. எனக்கு ஒரு டீ வைக்கக் கூட தெரியல.” லாலா புலம்பினான். மெல்ல தேனீரை மனைவியிடம் நீட்டினான். உள்ளுக்குள் சிறு பதட்டமிருந்தது, அதைவிட மனைவிக்காக செய்தது. நன்றாக இருக்க வேண்டுமே என்ற ஆவல்.

“நீங்க போடணும்னு அவசியமிருந்திருக்காது. அத்தை, சின்ன அத்த, சரோ, ஆத்தா எல்லாரும் போட்டுக் கொடுத்திருப்பாங்க. இங்கயும் தனியா சமைச்சுச் சாப்பிடல, அதனால தெரியல. அவ்வளவுதான்.” என்று எளிதாக சொன்ன உதயா தேனீரைப் பருக சுவையாக இருந்தது.

நாவுணர்ந்த சுவையை விழிகள் சட்டென பிரதிபலிக்க, லாலாவின் மையல் பார்வை மனைவி மீதுதானே?

“நல்லாயிருக்கா?” என்றான் ஆவல் மிகுதியில்.

“ரொம்ப நல்லாயிருக்கு” என்றதும் லாலா பெருமூச்சுவிட்டவன், அவனுக்கான தேனீரை எடுத்துக்கொண்டான். ஒரு நல்ல காலை, அந்த நாளையும் நன்றாக துவங்கி வைக்கும். லாலாவுக்கும் உதயநிலாவுக்கும் அந்த நாள் அப்படியான ஒன்றாக இருந்தது. 

மூன்று நாட்கள் கடந்திருக்கும். லாலா வீட்டில் இருக்கும் நேரம் உதயா சோர்வாக இருந்தால், அவனே தேனீர் போட்டுக்கொடுத்தான். மற்றபடி அவன் கட்டுப்பாடு என்றே இருந்தான். பிரச்சனையின்றி நாட்களும் மெல்ல நகர, அன்று லாலா அறையில் படுத்திருந்தான். உதயாவுக்கு விடுமுறை. மதிய சமையல் அவள் முடிக்க, இருவரும் உண்டதும் லாலா படிக்கிறேன் என்று அவன் அறைக்குள் புகுந்தான்.

புதுமணம், புதிதாக எல்லாம் மணம் வீசவில்லை. விடுமுறை தினம், உதயாவிற்குக் கணவன் வீட்டிலிருந்தும் அவளோடு பேசவில்லை. எதிர்ப்பார்க்காதே என்று மனதை எச்சரித்து வைத்தாலும், கொஞ்சம் சோர்வுத் தாக்கியது. ஆனால் லாலாவை அவளுக்குப் பிடிக்குமே, அவன் படிக்கிறேன் என்று சொல்லி சென்றிருக்க, அவனைத் தொந்தரவு செய்யும் எண்ணமின்றி வீட்டு வேலைகள் செய்தாள். விடுமுறை என்பதால் வரும் வாரத்திற்கான மாவரைக்கும் பணி, துணிகள் அடுக்குவது என்று வீட்டு வேலைக்கு ஒன்றும் குறைவாக இல்லை. 

வெயில் தாழ்ந்து மணி  நான்கு ஆகிவிட, உதயா லாலாவுக்கும் அவளுக்கும் தேனீர் செய்தாள். கூடவே அவன் வீட்டிலிருப்பதால் சுண்டல் தாளித்தாள். எல்லாம் தயார் செய்து, லாலாவின் அறைக்கதவைத் தட்டினால் அது தானாகத் திறந்தது. 

லாலா வெறும் தரையில் படுத்திருந்தான். அவனைப் போலவே இந்தியன் ஜியாகிரபியும் மல்லாக்க கிடந்தது. அவனை சுற்றி ஒரு பக்கம் முழுக்க புத்தகங்கள் கிடக்க, தூங்கிவிட்டானோ என்று பார்த்தாள். அவள் வரும் அரவத்தில் லாலா மெல்ல தலையைத் திருப்பினான்.

“தூங்கிட்டீங்களா?” என்று கேட்க, 

“சும்மா படுத்திருந்தேன்” என்றவன் “என்ன வேணும்?” என்றான்.

“டீ போட்டேன். எடுத்துட்டு வரவா?” என்று கேட்க, அவன் தலையைசைக்க, உதயாவும் தேனீரும் சுண்டலும் எடுத்து வந்தாள். உண்டு முடிக்கவும் உதயா எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் லாலாவுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, லாலா உதயா தன்னை அப்படி கவனிப்பது கவலையாக இருந்தது. 

ஏனோ சொல்ல முடியாத பாரம் அவனை அழுத்தியது. அவன் முகம் பார்த்த உதயா, 

“என்னாச்சு? தூக்கம் வந்தா கொஞ்சம் நேரம் தூங்குகளேன். ரெஸ்ட் இல்லாம இருந்தா டயர்ட் ஆகும்” என்றாள். 

அவளும் திருமணமானதிலிருந்து பார்க்கிறாள். நாலரைக்கு எல்லாம் அவள் கணவன் எழுந்துவிடுகிறான், நாள் முழுக்க அகாடெமியில் இருக்கிறான். பின் வீடு வந்தாலும் அவனை சும்மாவெல்லாம் பிடிக்க முடியாது, புத்தகங்களோடுதான் அவன் பொழுதுகள். சினிமா, போன் என்று எதையும் அனாவசியமாகப் பார்ப்பதில்லை. பகலில் உறங்கவும் மாட்டான். 

“தூக்கம் வரல” என்றவன் குரலில் சோர்வே பிரதானமாக இருந்தது. உதயாவும் எழுந்து போக நினைக்க, 

“கொஞ்ச நேரம் கூட இரு” என்று அவள் கையைப் பிடித்தான். உதயாவின் விழிகள் வியப்பைக் காட்ட, அவன் பக்கம் உட்கார்ந்தாள். லாலா படுத்திருந்தவன் எழுந்து உதயாவின் தோளில் சாய்ந்தான்.

“என்னாச்சு?” என்று உதயா மெல்ல கேட்க 

“படிக்க மூட் இல்லை. கடுப்பா இருக்கு, அதே நார்த்ஈஸ்ட் மான்சூன், அதே சௌத்வெஸ்ட் மான்சூன். சில நேரம் அப்படியே எரிச்சலா வருது” என்றான் எரிச்சலான குரலில்.

“வேற சப்ஜக்ட் படிச்சுப் பாருங்க” என்று உதயா சொல்ல, 

“அஞ்சு வருஷம் மேல படிக்கிறேன். எல்லா சப்ஜெக்டும் அதே மாதிரிதான் இருக்கு. கொஞ்சம் நேரம் படிக்காம இருக்கலாம் நினைச்சா, எக்ஸாம் டேட் வந்து பயமூறுத்துது. இந்த பசங்களுக்கு வேற பிபிடி செய்யணும்” 

இன்னதென்று இல்லாமல் இருக்கும் இன்னலை எல்லாம் லாலா பகிர, உதயாவிற்கு கணவனை என்ன சொல்லி சரியாக்குவதென்று தெரியவில்லை.

“லாலா! நான் முன்னாடியே சொன்னேன். கொஞ்ச நாள் அகாடெமி போகாம படிக்க மட்டும் செய்யலாமில்லை. உங்களுக்கும் நிறைய டைம் கிடைக்கும், இப்படி டயர்ட் ஆக வேண்டாம்” என்றதும் தோளில் சாய்ந்திருந்தவன் பட்டென்று தலையை உயர்த்தி அவளை விட்டு நகர்ந்து சுவரில் சாய்ந்தான்.

உதயா முறைக்க, 

“போதும். அவ்வளவுதான் என் கட்டுப்பாடு” என்றதும் உதயாவின் முகத்தில் செம்மையும் சிரிப்பும் படர, 

“எனக்கெல்லாம் கட்டுப்பாடு இல்லை” என்றபடி அவன் பக்கம் நகர பார்க்க,

“ஹேய் விளையாடாத” என்றான் கண்டிப்பாக. அவன் உணர்வு புரிந்து உதயாவும் அப்படியே உட்கார்ந்தாள். 

லாலாவும் அதை யோசித்திருக்கிறான். ஆனால் வேலையும் இல்லாவிட்டால் அவன் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். வேறு வேலை செய்வதற்கு இது எவ்வளவு பரவாயில்லை என்று தோன்றியது. 

“அதெல்லாம் சரியா வராதுடி”

“ஏன்? நான் உங்களைப் பார்க்கக் கூடாதா? இப்போ நான் உங்களைப் பார்க்கிறேன், நாளைக்கு நீங்க ஆபிஸர் ஆகிட்டு என்னைப் பாருங்க” உதயா சொல்லிய விதத்தில் அவளை உள்ளங்கையில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற லாலாவுக்குப் பெருங்காதலும் பேராவலும் பெருகியது.

“எல்லாம் அப்புறம் பார்க்கலாம். நீயே யோசிச்சுப் பாரு ஒருத்தன் படிச்சு முடிச்சு நாலஞ்சு வருஷம் வேலை வெட்டிக்குப் போகலன்னா நம்ம என்ன பேசுவோம்? என் நிலைமை பரவாயில்லை, எங்கப்பா அம்மாவைப் பார்க்கணும்னு கண்டிஷன் இல்லை. சரோவுக்கு எதாவது செய்யணும்னு எனக்கு அவசியமில்லை. சில பசங்க எல்லாம் அகாடெமியில பார்க்கும்போது கஷ்டமா இருக்கும், படிக்கணும்னு ஆசையிருக்கும், கூடவே ஃபினான்சியல் சிட்டிவேஷன் நினைச்சுப் பயமாயிருக்கும். வேலை செஞ்சுட்டே படிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க. ஏதோ நான் இண்டர்வியுஸ் வரைக்கும் போயிருக்கேன்றதால இந்த வேலை செய்றேன்.” 

“எந்த வேலைக்கும் போகாம எக்ஸாம்க்கு மட்டும் படிச்சு ஒருத்தர் பாஸாகிட்டா என்ன சொல்வாங்க தெரியுமா? விடாம அதையே பிடிச்சிட்டு வைராக்கியாம படிச்சு பாஸாகிட்டாங்க சொல்வாங்க. இதே ஃபெயிலாகிட்டா வேற வேலைக்குப் போகாம திமிரா இருக்காங்கனு பேசுவாங்க.” 

“யாரோ என்னமோ பேசினா நமக்கென்ன?”

“இப்படியெல்லாம் இருக்கு சொல்றேன். ஒருத்தன் எக்ஸாம்ல பாசாகி  நியுஸ்ல வரப்போ அவனோட வெற்றிதான் எல்லார் கண்ணுக்கும் தெரியும். அப்போ எல்லாரும் அவனுக்குச் சொந்தமாகிடுவாங்க. வேலையில்லாம இருந்தா சொந்தக்காரன் கூட அன்னியமா இருப்பாங்க. என் எக்ஸாம் ஃபீஸுக்குக் கூட நான் யாரையும் டிஃபெண்ட் பண்ணி இருக்க விரும்பல உதயா. இனிமே இதைப் பத்திப் பேசாத” என்றான் கண்டிப்பாக. 

லாலா இவ்வளவும் மனதில் போட்டு வருந்துகிறானா என்ற கவலை உதயாவினுள் எழுந்தாலும், அவன் நிந்தனைகளுக்கு என்ன நிவாரணம் என்று அவளுக்கும் தெரியவில்லை. உதயா அமைதியாக இருக்க, லாலாவே பேசினான்.

“இப்போ கூட  பாரு நீட் பிஜி எக்ஸாம் போஸ்ட்போண்ட் பண்ணிட்டாங்க.”

“அப்போ இன்னும் கொஞ்ச நாள் படிக்கலாம் தானே?” என்று உதயா சொல்ல, 

“அவங்க ரெண்டாவது தடவை போஸ்ட்போண்ட் பண்ணிட்டாங்க, பிஜி படிக்கிற டாக்டர்ஸ் எல்லாருக்கும் ஃபினான்சியல் பேக்ரவுண்ட் நல்லாயிருக்கும் சொல்ல முடியாது. பன்னிரெண்டு மணி நேரம் மேல வேலைப் பார்த்துட்டு இதுக்காக கஷ்டப்பட்டு படிச்சிருப்பாங்க, ஆனா ஒரு எக்ஸாம் கூட ஒழுங்கா நடத்த முடியாம, எக்ஸாம் நடக்கிறதுக்குப் பத்தி மணி நேரம் முன்னாடி இண்டிமேஷன் தரானுங்க. இவனுங்க நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி. மொத்தமா எக்ஸாமே கதினு கிடக்குற லட்சக்கணக்கான ஸ்டுடண்ட்ஸ் நிலைமை கொஞ்சமும் யோசிக்கிறதில்லை. படிச்சா முன்னேறிடலாம்னு நினைக்கிறவங்களை கரெப்ஷன் காலி பண்ணிடுது” வருத்தமாகச் சொன்னான் லாலா.

லாலா என்ன மருத்துவ மாணவர்களுக்கு எல்லாம் சேர்த்து வருந்துகிறான் என்று உதயா நினைத்தவள், அதையே கேட்கவும் செய்தாள். 

“கரெண்ட் அஃப்யர்ஸ் மேடம்” என்றான் கணவன்.

“எனக்கெல்லாம் ஆட்சி மாறினா எவ்வளவு கடுப்பா இருக்கும் தெரியுமா? இவன் பேரு வைக்கிற திட்டத்துக்கு அவன் பெயரை மாத்துவான். டேய் நான் பாஸாகுற வரைக்கும் கொஞ்சம் சும்மா இருங்களேன் டான்னு கத்தத் தோணும். ஒரு எக்ஸாமாச்சும் ஒழுங்கா நடத்துறானுங்களான்னு கடுப்பா ஆகும். இவனுங்க மத்தியில படிச்சு பாஸாகி பச்சை இங்க்ல கையெழுத்துப் போடுறதுக்குள்ள..” என்று வாய்விட்டே புலம்பினான் லாலா.

அது நாள் வரைக்கும் லாலா சொல்வது போல் உதயா, செய்திகளில் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன என்று பார்ப்பாள். அவளைப் பொருத்தவரையில் அதுவும் ஒரு செய்தி, இத்தனை பேர் தமிழ் நாட்டிலிருந்து தேர்வானால் ஒரு திருப்தி. அவ்வளவுதான். அவளுக்கு ஒரு ஒரு தேர்வின் பின்னும் படிப்பையும் தாண்டி இத்தனை இன்னல்கள் இருக்குமென்று தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் அவளுக்குத் தேவையிருக்கவில்லை. இப்போது கணவனின் கடினங்கள் பார்க்கவும்தான், அவளுக்கு எல்லாம் தெரிந்தது. 

அவள் படித்தாள், கேம்பஸில் வேலை என்று சீரான ஒரு பயணம். கடவுள் அவளை அந்த விஷயத்தில் சோதிக்கவில்லை. லாலா சொல்வது போல், வேலைக்கே போகவில்லை என்றால் ‘திமிர்’ எனும் ஏசும் உலகம், அதே குறிக்கோளில் வென்றுவிட்டால், ‘வைராக்கியம்’ என்று மெச்சிக்கொள்ளும். 

எதார்த்தங்களுக்கும் எதிர்கால கனவுகளுக்கும் இடையேனான வாராவதியில்(பாலம்) பயணம் செய்வதுதானே வாழ்க்கை. லாலாவின் நிலை அப்படித்தானே? அவனுக்கு அப்பயணத்தில் உதயா துணையாக இருப்பாள். 

அதை லாலா உணர மறுத்தான். ஒரு பெண் கணவன் தனக்காக எது செய்தாலும் அதை பிரியத்தின் வெளிப்பாடாகப் பார்ப்பாள், ஆனால் கணவனுக்கு ‘ஆண்’ என்ற எண்ணமும் ‘நான்’ என்ற எண்ணமும் வந்துவிடும். சில பெண்களுக்கும் அதுவுண்டு. லாலாவுக்கு ‘ஆண்’ என்ற ஆதிக்கம் அவனையறியாமல் அவனுள் ஊறிப்போயிருந்தது. அது அவன் பிழையல்ல! அவனை வளர்த்தவர்களின் பிழை. 

உதயா சொல்வது போல் வேலையை விட்டு நிம்மதியாகப் படிக்கலாம். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. காலங்காலமாக பொருளீட்டல் தலைவன் செயல் என்ற எண்ணத்தில் ஊறிப்போயிருந்தான். அதே நேரம் அவனின் சுயமரியாதையும் அதில் அடங்கியிருந்தது. உதயா லாலாவின் வேலை, அதனால் அவன் படுகின்ற இடர்களை மட்டுமே யோசித்தாள். ஆனால் லாலாவின் பிரச்சனை அவன் மட்டுமில்லை. உதயாவும்தான்! 

மனைவி அருகே இருந்தும் தூரமாக தள்ளியிருக்கும் அந்த நிலை அவனைத் தளரச் செய்தது. உதயா அவன் மேல் காட்டும் பிரியத்திற்குப் பிரதிபலனாக ஒன்றுமே செய்ய முடியாமல் இருப்பது லாலாவுக்கு வருத்தமாக இருந்தது. அவளுக்கான நேரத்தைக் கூட அவனால் ஒதுக்க முடியவில்லை, அதற்குக் காரணம் அவளின் அண்மை தருகின்ற அவிஸ்தை பிடிக்கவே இல்லை. அதனால் பொழுதுக்கும் ஒரு விலகல். 

அவனுக்குப் பிடித்த வேலையில்லாத காரணத்தால், பிடித்த பெண் மனைவியாக இருந்தாலும் அவளோடு இயல்பாக வாழ மனமில்லை. எல்லாவற்றிற்குமான வேளை என்று வரும் என்று தெரியவில்லை. 

உதயா கணவனை எண்ணி கவலையில் அமைதியாக இருக்க,

“நீ ஃபீல் பண்ணாத. எல்லாம் ஒரு ஆஸ்பிரண்ட் புலம்பல்.” என்றான் புன்னகை முகமாக.

“கவலைபடாதீங்க, சீக்கிரம் உங்க விருப்பப்படி வேலை கிடைச்சிரும்” என்று நம்பிக்கையாக சொன்னாள் உதயா. நம்மையே நாம் நம்பாத சமயத்தில் பிறிதொரு உயிரின் பிரியமும் நம்பிக்கையும் நமக்குத் தருகின்ற தைரியம் இருக்கிறதே, அதனை உணர்ந்தால் மட்டுமே தெரியும். லாலாவுக்கு உதயாவின் வார்த்தைகள் அப்படியொரு தைரியம் தந்தன. அவன் திருமணம் செய்த நாள் முதலாக, அப்பாவோ தாத்தாவோ அவன் படிப்பைப் பற்றிக் கேள்விக் கேட்பதில்லை. அப்பா கூட வேறு வேலைப் பார்க்க சொன்னார். அதுவும் கூட லாலாவுக்குக் கஷ்டமாக இருந்தது. 

என் மீதான நம்பிக்கை இவர்களுக்குப் போய்விட்டது, அதனால்தான் என்னை எதுவும் கேட்பதில்லை என்ற ரீதியில் சிந்திக்கத் துவங்கி தன்னால் துவண்டான். அப்படியிருக்க மனைவியின் சொற்கள் அவனை இன்பமாக அரவணைத்துக் கொண்டன.

உதயாவிற்கு அதுவரை அவள் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எல்லாம் காணாமல் போனது போல் கணவனுக்காக வருந்தினாள். அவளின் துயரங்கள் சாதாரணமில்லை. ஆனால் அதனை ஏற்று பழகிக்கொண்டாள். வாழ்க்கை அப்படித்தான், எல்லாருக்கும் கவிதைத் தொகுப்பாக இருப்பதில்லை. சிலருக்குக் கவலைகளின் தொகுப்பாக இருக்கும். எப்படியாகினும் வாழ்தல் வரம்! அதனையுணர்ந்தவள் உதயா. அதனாலயே லாலாவை அவளால் விரும்ப முடிந்தது. 

“ஏன் லாலா? உங்களுக்கு எப்போ இந்த ஆம்பிஷன் வந்தது? எனக்கெல்லாம் வாழ்க்கையில அப்படியொரு ஆம்பிஷனே இல்லை. எது படிச்சா நல்ல சம்பளம்னு தான் என்னோட தாட், அதனால எஞ்சினியரிங் படிச்சேன். அதைப் பிடிச்சு கஷ்டப்பட்டுப் படிச்சேன், ஆனாலும் சின்ன வயசுல இருந்து அப்படியொரு ஆசை இல்லை.” என்று கணவனை, அவன் கனவை அறிய வேண்டிக் கேட்டாள். 

திருமணத்திற்கு முன்பும் இதெல்லாம் பேசியிருந்தாலும் அத்தனை தீவிரமாகப் பேசியதில்லை, லாலா அதனை விரும்ப மாட்டான் என்று தெரியும். அதைவிட அப்போது கண்ட லாலாவுக்கும், இப்போது நித்தமும் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதே. 

“எல்லாத்துக்கும் காரணம் சக்தியோட கொள்ளுத் தாத்தா” என்றதும் உதயா விழித்தாள்.

சக்திவேலின் கொள்ளுத் தாத்தா அரசு வேலையில் இருந்தபடியால் அவரின் மகனான லட்சுமணனை நன்றாகப் படிக்க வைத்தார். அதனைப் பார்த்து  வளர்ந்ததால் லாலாவின் தாத்தாவான திலகருக்கு, அவர்களைப் போல் பெயரும் புகழும் எடுக்க வேண்டுமென்றால் சர்க்கார் உத்தியோகமே குறி என்று முடிவு செய்தார். அவரால் படிக்க முடியவில்லை, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சில நிலபுலன்களை இழந்து விவசாயம் பார்த்தார் திலகர். அதனால் மகன்கள் இருவரையும் நல்ல வேலையில் அமர்த்தினார். அவரைப் பொருத்தவரையில் நல்ல வேலை என்பது அரசாங்க வேலை. அவரின் விருப்பப்படியே அவரின் இருமக்களும் நடக்க, அடுத்த தலைமுறையிடமும் அதையே எதிர்ப்பார்த்தார். 

சரோஜினியைக் கூட அவர் அரசுவேலைக்குத் தயாராக சொல்ல, அவள் மறுத்துவிட்டாள். லாலாவுக்குத் தாத்தாவுக்குப் பிடித்த பேரனாக இருக்க ஆசை, எதையும் மறுத்துப் பேசியதில்லை. 

அவனுக்குமே அப்பா, சித்தப்பாவைப் பார்த்து அந்த வேலை மேல் ஒரு தீராத ஆசை. 

“எங்க சித்தப்பா போலிஸா, அவரைப் பார்த்து எனக்கும் போலிஸ் ஆகணும்னு ஆசை வந்தது. நான் படிக்க டைம் எடுத்தாலும் நல்லா படிப்பேன், அது தெரிஞ்சு எங்க தாத்தாவும் என்னை எப்பவும் நீ பெரிய ஆபிஸர் ஆகணும்னு சொல்லி வளர்த்துட்டார். இப்போ எனக்கே என்னை வேறயா நினைச்சுப் பார்க்க முடியல உதயா. இந்த லவ் பண்றவங்க சொல்வாங்களே, அவ இடத்துல வேற யாரையும் யோசிக்க முடியலனு. எனக்கு அப்படித்தான்” என்று லாலா சொல்ல 

“கண்டிப்பா நீங்க போடுற ஹார்ட்வர்க்குப் பாஸாகிடுவீங்க லாலா. இப்படி லா லா னு சோகமா இருக்க லாலாவை எனக்குப் பிடிக்கல, லாலாலான்னு சந்தோஷமா இருக்க லாலாவை நான் பார்க்கணும். இப்போ படிக்க முடியல, பிடிக்கலன்னா ஏன் ரூம்குள்ள டென்ஷனா உட்காருறீங்க. கொஞ்சம் வெளியே வந்து ரிலாக்ஸ் ஆகிட்டு அப்புறம் படிக்கலாம்ல. வாங்க” என்று கணவனை வெளியே இழுத்துப் போனாள். 

தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பாக, லாலாவோடு உதயாவும் உட்கார்ந்து படம்பார்க்க, லாலா படம் முடியும் வரை மனைவியோடு உட்கார்ந்திருந்தான். அவளுக்கான நேரம் கொடுத்து நல்லவிதமாகவே அந்த விடுமுறை சென்றது. அன்றிரவு லாலாவின் வீட்டிலிருந்து அழைத்து மூன்று நாட்களில் தாலி பிரித்துக் கோர்க்க வேண்டும் என்றனர். இருவரும் ஊருக்குப் பயணப்பட, லாலாவுக்கு மன்னை எக்ஸ்பிரஸ் அவர்களின் ஆதி சந்திப்பை நினைவுப்படுத்த இனிதான ஒரு இரயில் பயணம்.

ஊருக்குச் சென்றதும் உதயா வீட்டிலிருந்தவர்களுக்கென வாங்கிய உடைகளைக் கொடுத்தாள். லாலாவிடம் சொல்லியிருந்தாள், அவன் கவனிக்கவில்லை. இப்போது அவள் கொடுக்கவும் அமைதியாகப் பார்த்தவன், அறைக்குள் நுழையவும், 

“அதான் நமக்குக் கல்யாணமாகிடுச்சே, இப்போ ஏன் வீட்ல உள்ளவங்களை இம்ப்ரெஸ் பண்ண நினைக்கிறடி?” என்றான் விளையாட்டாக. 

அவன் அப்படி உதயாவின் உணர்வுப் புரியாமல் பேச, அவளுக்குச் சுள்ளென்று கோபம் கிளம்பியது. இந்த முறை அதனை குறையாமல் கணவனிடம் காட்டினாள். லாலா திணறிப்போனான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!