Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அருவங்காடு

அருவங்காடு – 2

திருமணம் நடந்த இரவு அவளின் அப்பாவுக்கு நடந்த எந்த விஷயமும் இந்த்ராவுக்கு தெரியவில்லை. அர்த்த ராத்திரியில் அற்பனுக்கு வாழ்வு வருமோ இல்லையோ அவளுக்கு இரவு பதினொன்றரை மணிக்கு கழுத்தில் தாலி ஏறியது.. இருண்ட வாழ்விற்கான முதல் அடி.. ஹ்ம்ம்.. முதல் படி..



Advertisement

விட்டேத்தியாக வீடு வந்து சேர்ந்தாள். உள்ளுக்குள் பொங்கிய அழுகையும், அதிர்ச்சியும், கால் வலியும் அவளை தூக்கத்தில் அழுத்தியது. ஐந்துக்கு எட்டு என்ற இந்த்ராவின் வீட்டின் குளியலறை அளவு இருக்கும் இடம் அவர்களுக்காக  ஒதுக்கப்பட்டது. ஆனந்தனிடம் பேசுவதற்கு அவளுக்கு நிறைய இருந்தாலும், கதவை ஒட்டி வெளியில் படுத்திருக்கும் மணவாளன், அமரா, ஆனந்தனின் அண்ணன் செழியன் என்று அத்தனை பேர் காதுக்கும் கேட்கும் என்பதால் வாயை மூடிக்கொண்டாள். கூடவே கண்களையும்.. 

இரவு இருளை அழுத்தி மூடியிருந்ததால் அந்த வீடு இருந்த இடம் பற்றி அவள் அறிந்திருக்கவில்லை.

Advertisement

Advertisement

விடியலில் அமராவுடன் வாசல் கதவை திறந்த போதுதான், அவளுக்கு சற்றும் பழக்கமேயில்லாத புது இடம் அது என்று புரிந்துக் கொண்டாள். 

கழிப்பறை வசதியில்லாத வீடு என்பதால் புதர்ப்பகுதிக்கு அழைத்துச் சென்றாள் அமரா. பன்றிகளின் உறுமும் சத்தமும், சுற்றிலும் மனித நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் அவளுக்கு அந்த இடம் பழக்கமாகவில்லை. 

Advertisement

முடைநாற்றமும், ஒருபக்கம் சாக்கடை நாற்றமும் குமட்டியது. 

வரும் வீதிகளில் இறைச்சிகளை சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொண்டிருந்த பெண்களின் பார்வை வித்தியாசமாக அவள் மேல் படிந்தது. அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தி போகாத அவளின் உடலும், நிறமும், பார்வையும்  அவர்களுக்கு வித்தியாசமான எண்ணத்தை தான் தந்திருக்கும்.‌

அதையெல்லாம் கடந்து வீடு வந்தவளுக்கு அழுகையாக வந்தது. 

அப்பாவின் வீடும், அண்மையும் அவளுக்கு தூரமாக போய்விட்டது உறுதியாக தெரிந்தது. இதுவரை அவளை அழைக்க யாரும் வரவில்லை என்பது தெரிந்ததால்.. 

இந்த சூழலில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என்று யோசித்தாள்.. மணவாளனின் மீது நம்பிக்கை சற்று இருந்தது. எப்படியும் ஊருக்கு போய் அப்பாவை கூட்டி வருவார் என்று தோன்றியது. 

ஆனால் அவளுள் இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியிருந்தது அன்றிரவு. இதுவரை அவள் அப்பாவை மரியாதையாக பேசியவர்.. வாய்க்கு வந்தபடி பேசினார். 

“அவ்ளோ பேர் போய் பேசறோம். உங்கப்பா கொஞ்சம் கூட விட்டுக்குடுக்கல. அவளாதான போனா.. இனி என் மூஞ்சியில் அவ விழிக்கவே கூடாது.இனி என் பொண்ணே இல்லன்னு சொல்லிட்டார்..நாங்க என்ன பண்ண முடியும். கூடவே உங்க சொந்தக்காரங்களும் இன்னும் ஏத்தி விடறாங்க” மணவாளன் சொன்னதும் அப்பா இதுவரை வந்து பார்க்காததின் அர்த்தம் புரிந்தது. 

“மாமா.. அப்பா என்னை தப்பா தான் புரிஞ்சிட்டு இருக்கார். இருங்க.. நான் ஜெயராமன் அங்கிள் வீட்ல இருந்து லேண்ட் லைனுக்கு கால் பண்றேன்.. அவர்ட்ட நான் பேசினா புரிஞ்சுப்பார்.” அவள் கிட்டத்தட்ட கெஞ்சினாள்.

“அமரா.. கூட்டிட்டு போய்ட்டு வா..” மணவாளன் எங்கோ பார்த்தபடி சொன்னார். ஆனந்தன் படுத்துக் கொண்டே அவளை பார்த்து ‘போய்வா’ என்றான். 

இந்த்ராவின் வீட்டு தொலைபேசி அலறியது அவள் மனம் போலவே.. ஆனால் அவள் பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை என்பதை போலவே அது எடுக்கப்படாமல் இருந்தது..

“இத்தனை முறை போடற.. இன்னுமா உங்க வீட்ல யாரும் எடுக்கல..” ஜெயராமன் மனைவி கோசலா கேட்டார். 

“தெரியல ஆண்ட்டி.. பேசாம அப்பாவை நேர்ல போய் பாத்துட்டு வரலாம்னு நினைக்கிறேன்..” 

“எதுனாலும் உங்க மாமானார்ட்ட சொல்லிட்டு போ.. தனியா போய் மாட்டிக்காத” 

“ம்ம்..” 

‘அங்கு போய் நான் மாட்டப்போகிறேனா..? இங்குதான் வந்து நான் மாட்டியிருக்கிறேன்.’ என்று நினைத்துக் கொண்டு வீடு வந்தாள். 

பகல் முழுக்க போராடிய மனம். இரவில் சோர்வில் துடித்தது. இது தானாக எடுத்த முடிவு இல்லை‌ என்பதை எப்படி வீட்டிற்கு புரிய வைப்பது? இனி தன் வாழ்வு என்ன ஆகும்..? யோசித்து யோசித்து அவளுக்கு தலை வலித்தது. 

அறைக்கு வந்ததும், மனதுக்குள் இருந்த கோபம் கண்மண் தெரியாமல் ஆனது.. 

அதுவரை யாரிடமும் அதிர்ந்து கூட பேசியதில்லை‌.. அதுதான் பிரச்சினை. எதுவும் கேட்கும் முன் எல்லாம் கிடைக்கும் வாழ்வு. எதற்கும் வெளியாட்களிடம் போய் நின்றதில்லை. அக்கம் பக்கம் வீட்டுக்கு கூட போனதில்லை. நான்கு சுவற்றுக்குள் நல்லவர்களுடன் மட்டுமே வாழ்ந்தவளுக்கு, மனித மனங்கள் வேறுபட்டவை என்று தெரிந்துக் கொள்ள வாய்ப்பிருந்ததில்லை. 

ஆனந்தனுடன் சண்டை பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. சிறிது யோசித்தாள். வெளியில் கேட்டால் கேட்கட்டும் என்று தைரியம் வந்தது.

“எதுக்கு இப்படி பண்ணீங்க.. உங்களால் தான இவ்வளோ பிரச்சினை. எங்கப்பாவை எந்த நிலைமையில் விட்டுட்டு வந்துருக்கேன் தெரியுமா.. அவர் என்னை எவ்ளோ தப்பா நினைச்சிருப்பார்.. அதனால்தான் என்னை பொண்ணே இல்லைன்னு சொல்லியிருக்கார். என்னால் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல.. நாளைக்கு காலைல எங்கப்பா வீட்டுக்கு நான்‌ போறேன்.. எப்படியாவது போங்க எல்லாரும்.. எனக்கு சுததமா இந்த இடமும் பிடிக்கல.. எதுவும் பிடிக்கல..” 

“இந்த்ரா.. பொறுமையா இரு. அப்பா, உன்னை புரிஞ்சுப்பார். ஏன் நாங்களாம் உன்னை நல்லா பாத்துக்க மாட்டோம்னு நினைக்கறியா..? இதை விட்டா நாம வாழ்க்கைல ஒன்னு சேர்ந்திருக்கவே முடியாது. பெரியவங்க கோபம்லாம் கொஞ்ச நாளுக்கு தான்..எல்லாம் மாறும்..” அவள் கைகளை பிடித்து சொன்னான் ஆனந்தன். 

“எனக்கு நிஜமாவே புரியல. எதுக்கு இந்த அவசர கல்யாணம்?. அப்பா பேர் பேப்பர்ல வந்திருக்குன்னு சொன்னதால தான் நான் வந்தேன். ஆனா இப்படி மிரட்டி, ஏதேதோ சொல்லி கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டீங்க. எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லாத நிலைமைல தனியா விட்டுட்டு வந்திருக்கேன். எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா?” 

“அதெல்லாம் அக்கா பாத்துப் பாங்க.. கொஞ்ச நாள் போகட்டும்.. கோபம் குறைஞ்சதும் போய் பேசலாம்.” 

“நான் சொல்றது புரியவே இல்லையா..? எதுக்கு தேவையில்லாத இந்த பிரச்சினை.. நாமளே உருவாக்கிட்டு.. அவங்க கோபம் குறையனும்னா?” 

அவனிடம் பதிலில்லை. இருகால்களுக்கு இடையில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதாள். அவளை சமாதானப்படுத்தும் முயற்சியை கூட ஆனந்தன் எடுக்கவில்லை. 

விடியல் அவளின் மன ரணத்தை போல் சிவந்து விடிந்திருந்தது. குளியலுக்கும் அருகில் இருக்கும் வாய்க்காலுக்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கு அமராவுடன் சென்றாள். எப்படியாவது இன்று திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்ற முடிவோடு திரும்பி வந்தாள். 

 

ஆனால் அவள் வருமுன், அவளின் துணிகள் இருந்த பெட்டி அவள் முன் இருந்தது. கூடவே அவள் அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்த ஆறுமுகம் நின்றிருந்தார். 

“அண்ணா.. “ அழுதுக் கொண்டே அவர் முன் நின்றாள். 

“என்னம்மா இப்படி பண்ணிட்ட.. அப்பாக்கு எவ்ளோ கஷ்டம்.. என்னமோ போ. உங்க சொந்தமெல்லாம் உன்னை அவ்ளோ வெறுப்பா பேசறாங்க.. வீட்டுக்கு வந்தா தொலைச்சிடனும்னு சொல்றாங்க.. தேவையா உனக்கு.. அப்பாவை அந்த நிலைமையில் விட்டுட்டு வர உனக்கு எப்படி மனசு வந்துச்சு..? பெத்தவங்க சாபத்தில வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாதும்மா…” 

“அண்ணா.. நான் அப்படி பண்ணுவேன்னு நினைக்கிறீங்களா.. வாங்க இப்பவே ஊருக்கு போலாம். நான் வந்து அப்பாட்ட எல்லா உண்மையும் சொல்றேன்.. அவர் புரிஞ்சுப்பார். மத்தவங்க என்ன வேணா பேசிட்டு போகட்டும்..” 

“ஹ்ம்ம்.. இப்ப போய் என்ன பண்ண போற..? அப்பாக்கு வேற உடம்பு முடியல. அக்காதான் உங்க பெரியப்பா வீட்டுக்கு, அப்பாவை அழைச்சிட்டு போய்ட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் கிளம்பறேன்..உன் துணிலாம் கொடுத்து விட்டாங்க. வச்சிக்க.. பத்திரமா இரு..” 

உறைந்து தான் நின்றாள். கடைசி அஸ்திரமும் அவள் மேலே எய்யப்பட்டது.

“என்ன புத்தி இந்த பொண்ணுக்கு.. எப்படி வளர்ந்த பொண்ணு.. இப்படி வந்து கிடந்து சீரழியனும்னு விதி..” முனங்கிக் கொண்டே சென்றார்.. 

இந்த்ரா சிறு பிள்ளையாக இருந்த போது, அன்றாட கூலியாக மின்சாரத்துறைக்கு  வேலைக்கு வந்தவர் அவர். 

வீட்டில் காலையில் வந்து அவரால் முடிந்த உதவியை செய்வார். இத்தனை வருடங்களாக கூடவே இருந்து அவளை பார்த்தவர்.. அவர் முன் கூட தான் எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகியாக தெரிகிறோம்.. கூனிக்குறுகி நின்றாள். 

தான் இங்கிருந்து வெளியே போவோம் என்று இருந்த கடைசி நம்பிக்கையும் உடைந்தது. 

‘எவ்வளவு அசிங்கப்பட்டு இருந்தால் அப்பா ஊரை விட்டு போய் இருப்பார்..’ 

இப்போது யோசித்து என்ன பிரயோஜனம்..? 

ஒரு நாளில் கூட வாழ்க்கை தடம் புரளும். எடுத்து வைக்கும் அடியில் கவனமில்லை என்றால் அப்படித்தான் தலைகீழ் மாற்றங்கள் விளையும். 

எதற்கு இந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கேள்வி இளம் வயதில் வந்து விடாமல் இருக்க சுய காலில் நிற்க வேண்டுமே தவிர, சுய காதலில் நிற்க கூடாது. தன் மீது இருக்கும் அளவு கடந்த நம்பிக்கையும் சில சமயம் காலை வாரி விடும். 

 திருமணத்திற்கு முன் அவளுக்கு, எப்படி இருந்தாலும் அவனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அவன் வசதிக்கோ, அழகுக்கோ, படிப்பிற்கோ தான் அதிகப்படி என்ற லேசான கர்வம் அவளுக்குள் இருந்தது. 

பெண்ணியம் வளர்ந்த நாட்களில், சர்வ சாதாரணமாக வீசி எறியப்படும் கேள்வி, “அவனை திருத்துவது தான் உன் வேலையா?” என்பது.. ஆனால் ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்த பெண்களின் மனதில் இன்றும் மனதின் எந்த மூலையிலாவது, தனக்கு உரிமையானவனை எப்படியாவது சரி செய்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கும். அது முற்றிலும் தகர்ந்து போகும் போது தான் அது எவ்வளவு பெரிய தவறு.. தன் வாழ்க்கையை எப்படி பணயம் வைத்து இருக்கிறோம் என்பதும் புரியும்..

கிடைத்தற்கு அரிய பொருள் யாருக்காவது கிடைத்தால் பொக்கிஷமாக வைத்துக் கொள்வார்கள் என்று தான் நினைத்தாள். ஆனால் அந்த பொக்கிஷமும் சிலருக்கு பணமாக மாற்ற தான் உபயோகப்படுமே தவிர பத்திரமாக பார்த்துக் கொள்ள உபயோகப்படாது. 

இப்போது இந்த்ரா தன்னை பற்றி யாரிடம் சொன்னாலும் அவளை பற்றி தான் தவறாக நினைப்பார்கள். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு காத்திருக்காமல் இருபது வயதில் காதல் என்ன வேண்டி இருக்கிறது..? என்று கேட்டால் பதில் சொல்வதற்கு அவளிடம் எந்த காரணமும் இல்லை.

காதல் வந்த போது , ஆனந்தனை பற்றி முழுதாக தெரியாது அவளுக்கு. ஆனாலும் ஒரு வேலையில் தொடர்ந்து இருக்க மாட்டான் என்று இரண்டு வருடங்களில் அறிந்துக் கொண்டாள். கேபிள் வேலை, பெட்ரோல் பங்க் வேலை, தினசரி வட்டி வசூல் கணக்கு, அன்றாட வியாபாரம் கைமாற்றி விடுவது என்று பல வேலைகள். 

சில நேரங்களில் அமராவுக்கு பணம் கட்ட, சுய தேவைக்கு என்று இவளிடம் கூட பணம் வாங்குவான். ஆனால் அதைப் பற்றி அப்போது இந்த்ரா கவலைப்பட்டது இல்லை. எப்படியும் அப்பா சம்மதத்தோடு திருமணம் நடந்து விடும். எத்தனையோ பேருக்கு வேலை வாங்கி தந்து அவர்கள் வீட்டில் விளக்கேற்றியவர் தன் வாழ்க்கையும் பார்த்துக் கொள்வார்..ஆனந்தன் வேலைக்கு போகவில்லை என்றாலும், தான் நல்ல வேலைக்கு போய் விடுவோம் என்று நினைத்தாள். ஆனால் இப்படி எக்குத்தப்பாக வந்து மாட்டுவோம் என்று கனவா கண்டாள்..?

இப்போது பயம் வேர்விட்டு விருட்சமாகி நின்றது. இருவருக்கும் வேலை இல்லாமல், வீட்டிற்கு பாரமாகி நிற்கிறோமே என்று.. 

ஆனால் அடுத்த மாதமே ஒரு என்.ஜி.ஓக்கு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது..  வாரம் முழுதும் வேலை‌.. சுற்று வட்டாரங்களுக்கு தினமும் செல்ல வேண்டும்.. 

எந்த சூழலில் தான் பொருந்தி போக மாட்டோம் என்று நினைத்தாளோ.. அந்த ஒரு மாதத்தில் அத்தனையும் மாறி இருந்தது.

தனக்கு கீழே உள்ளவர்கள் கோடி,  நினைத்துப் பார்த்து நிம்மதி ஆகு என்ற கண்ணதாசனின் வரிகள் அவளுக்கு சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையை பார்த்து  தெள்ளத்தெளிவாக புரிந்தது. 

இனி இதுதான் பயணம் என்று தெரிந்த பின் நடக்க ஆரம்பித்து தான் ஆக வேண்டும் என்று வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். 

ஆறு மாதங்கள் அவள் கண்முன் ஓடியிருந்தது. பேருந்தும் அருவங்காட்டில் நின்றது.

இறங்கியதுமே இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தொலைவில், இத்தனை அழகான இடம் இருக்கும் என்று அவள் அறிந்திருக்கவில்லை.

இரு புறங்களும் அடர்ந்த மலை. பசுமை போர்த்திய புல்வெளி. அடர்த்தியான மலைத்தொடர். கரும்பச்சையில் வண்ணம் தீட்டி வைத்திருந்தது போன்ற மரங்கள்.. கீழே இருந்து பார்க்க, பார்க்க ஆசையாக இருந்தது அவளுக்கு.

பழங்குடிகள் அந்த மலையில் வசிக்கிறார்கள் என்று அவளுடன் வேலை பார்க்கும் சூப்பர்வைசரான நடராஜன் சொலலியிருந்தார். 

அழகு நிறைந்திருந்தாலும், அந்த  பகுதியில் வனவிலங்குளால் அவர்களுக்கு ஆபத்து வராதா என்று யோசித்தாள். 

ஆனால் இந்த அழகான மலைக்கும், மலையில் வசிக்கும் அந்த பழங்குடிகளுக்கும் தான் பின்னாட்களில் ஆபத்து வரப்போகிறது என்று அவர்களுக்கும் தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை.  

சமீபமாக தான் பணமும், படிப்பும் அவர்களுக்கு அறிமுகமாகியது. அது கூட தங்களை போலவே அடைந்து கிடந்து, அங்கேயே அடுத்த தலைமுறை வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என்று தான் ஊருக்குள் வர தயாரானார்கள். இவளை போன்ற என்ஜிஓக்களில் வேலை பார்த்தவர்களின் பெரும் முயற்சி அது. நடையாய் நடந்து அவர்களின் பயம் போக்கி, வெளியுலக வாழ்க்கையை அவர்களுக்கு புரிய வைத்திருந்தார்கள். 

தேனும், திணை மாவும், மரவள்ளியும், நரிப்பயறும் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை ஊரிலிருந்து மலைக்கு வாங்கி செல்வார்கள். அதுகூட பேருந்து  போகும் பாதையில்லை. நடந்து நடந்து தடம் பதித்த ஓரடி பாதை.

அருவங்காடு, போந்தை, நாராயணகுப்பம், இளையான்குடி என்று  கீழே நான்கு சிற்றூர்கள்.. அதுவும் குக்கிராமங்கள் தான். மேலே பழங்குடியினர் எப்படியோ, அதிலிருந்து கொஞ்சம் நாகரிக பழக்கங்களை பழகிய மலையடிவார மக்கள் இவர்கள்.

அங்கிருந்த ஒரு தொடக்கப் பள்ளிக்கு தான் பழங்குடிகள் தங்கள் பிள்ளைகளை இந்த ஓராண்டாக கூட்டி வந்து, படிக்க வைத்து கூட்டிப் போகிறார்கள்.  

நடராஜன் சொல்லியதெல்லாம் மனதில் ஓடவிட்டப்படியே ஒரு வீட்டின் முன் வந்து நின்றாள். 

அதே நேரம் தாழ்ந்து இருக்கும் தட்டி மூடிய தலைவாசலை கடந்து வெளியே வந்தாள் வெண்ணிலா. 

மலைக்கும், ஊருக்கும் தொடர்பில்லாத பால் நிறம்.. அதனாலேயே அவள் பிறந்ததும் வெண்ணிலா என்று பெயர் வைத்தார்கள். 

“மா..இங்க வேலாண்டி வீடு எது.?” குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள் வெண்ணிலா.. முதலில் இந்த்ராவை பார்த்ததும் பிடித்து விட்டது அவளுக்கு. 

“இது தான். வாங்க.. உள்ள வாங்க..” என்று அழைத்தாள். 

தலையை குனிந்து தான் வீட்டிற்குள்ளேயே நுழைய வேண்டும். நுழைந்ததும் ஓலைப்பாயில் படுத்து இருந்தார் வேலாண்டி. எண்பது வயதிருக்கும். சுருங்கிய தோல். ஆனால் திடகாத்திரமான உருவம். மெல்ல எழுந்து அமர்ந்தார். 

“யாரும்மா..வாங்க.. உள்ள வாங்க..” கண்களின் மேல் கைவைத்து பார்த்து அழைத்தார். 

“நான் இந்த்ரா தாத்தா. ஃபாரஸ்ட்கார் வீட்டு மருமக.. இப்போ அரட்டவாடி ஆபிஸ்ல இருந்து கணக்கெழுத வந்திருக்கேன். வீட்ல தான் உங்களை பாக்க சொல்லியிருந்தாங்க.” 

“அட.. அப்படியா. உங்க மாமனாருக்கு மாமனார் தான் இந்த ஊரெல்லாம் ரோடு, பஸ், கரெண்ட் வசதில்லாம் செஞ்சு குடுத்தது. இப்போ உங்க மாமனார் தான் எந்த பிரச்சினையா இருந்தாலும் பாத்துக்கறார். நாலு ஊரும் அவரை நம்பித்தான் இருக்குது. இதான் வெண்ணிலா.. என் பேத்தி. இவளை கூட்டிட்டு போ. ஊர் முழுக்க காமிப்பா. வெண்ணிலா.. அக்காக்கு சூடா எதாவது போட்டு குடு. அப்புறமா கூட்டிட்டு போ. மா.. சாப்பிட இங்க வந்துடனும் மதியானத்துக்கு.என்ன.. ?” ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். 

“வாங்க” என்று வெளியில் இந்த்ராவை அழைத்து வந்து திண்ணையில் அமர வைத்தாள் வெண்ணிலா. அங்கு ஓரமாக இருந்த அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்தாள்.

“வெண்ணிலா.. படிக்கறியா..” சுற்றிலும் அந்த பகுதியை   பார்த்துக் கொண்டே கேட்டாள் இந்த்ரா. 

“இல்ல அண்ணி.. பனிரெண்டாவுது முடிச்சுட்டு வீட்ல தான் இருக்கேன்.” 

அவளின் அண்ணி என்ற வார்த்தையில் திடுக்கிட்டு திரும்பினாள் இந்த்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!