Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 8

போலீஸ் ஜீப் மடிப்பாக்கத்தை ஒட்டியுள்ள அந்த ஏரியாவின் உள் நுழைந்தது.  “இந்த ஏரியாதானா நல்லா கேட்டுட்டீங்களா செல்வா…”

“ஆமாம் ஸார், இந்த தெரு தான்”.

“இதுக்கு முன்ன நாங்க வந்தப்ப, அவன்க யாரும் வீட்டுல இல்ல.  அக்கம் பக்கம் விசாரிச்சப்ப, அந்த பசங்க பகல்ல ரொம்ப வீட்டுல இருக்கமாட்டானுங்கன்னு சொல்றாங்க”.

“இராத்திரி நேரம் தான் வருவான்க.  பாட்டு சத்தமா.., எப்பவாவது சத்தமா கேட்கும், எங்களுக்கு ஒன்னும் பெரிசா தெரியாதுன்னு கழன்டுகிறாங்க.  சரியா பதில் சொல்ல மாட்டேன்றாங்க யாரும்.  எது கேட்டாலும் மழுப்பற மாதிரியே பேசறாங்க ஸார்”.



Advertisement

“அந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு வீட்டு வாட்ச்மேன் மட்டும் இந்த பொண்ணுங்க கம்ப்ளைன்ட் பண்ண மாதிரிதான் சொன்னாரு”.

“அந்த பொண்ணுங்க சொல்லறது சரிதான் ஸார்.  இப்பதான் புதுசா குடி வந்திருக்கானுங்க, நைட்டானா தண்ணிய போட்டுட்டு ராவடி பண்றான்க. எப்பப் பார்த்தாலும் ஒரே கூச்சல், பாட்டுன்னு சத்தமாதான் இருக்கும்”.

“நான் கூட ஒரு நாள் சொல்லி பார்த்தேன், சவுன்டை கம்மியா வைங்க அக்கம் பக்கம் தூங்க வேணாமான்னு.  அதுக்கு, இதோ வந்துட்டாருடா நாட்டாமை,  உன் வேலையை பார்த்துட்டு போ பெரிசு, என்ன சரக்கு வேணுமா….ன்னு கிண்டல் பண்றான்க.  நமக்கு ஏன் வீண் பிரச்சினைன்னு வந்திட்டேன்னு சொன்னார்”.

Advertisement

“ம்ம்… கம்ப்ளெய்ன்ட் பண்ணவர் பேர் என்னன்னு சொன்னீங்க?”

Advertisement

“ராகவன் ஸார்.  இங்க சென்னையிலதான் தங்கி வேலை பார்க்கறதா சொன்னார்.  அவரோட தங்கச்சி பேர் காயத்திரி.  அந்தப் பொண்ணோட சேர்ந்து இன்னும் இரண்டு பொண்ணுங்கன்னு, மூனு பேரும் இங்க தனியா வீடெடுத்து தங்கி வேலை பார்க்கிறாங்க”.

“இவன்க வந்த புதுசுல கண்டுக்காம தான் இருந்துருங்காங்க,  போக போக இவனுங்க அராஜகம் தாங்க முடியாம ஹவுஸ் ஓனருக்கு போன் போட்டு சொல்லிருங்காங்க, அவரும் அவன்க குடியிருக்கற விட்டோட ஓனருக்கு போன் போட்டு சொல்லியிருக்காரு”.

“இந்த பொண்ணுங்களும் ஒரு தடவை அந்த பையன்களோட ஓனருக்கு போன் பண்ணி இவன்க அட்டகாசத்தை பத்தி சொல்லியிருக்காங்க.  அவர் அந்த பசங்ககளை கண்டிச்சு பேசியிருப்பாரு போல”.

Advertisement

“அன்னைக்கு இராத்திரியே, நைட் இரண்டு மணிக்கு மேல, குடிச்சிட்டு இவங்க காம்ப்பௌன்ட் எகிரி குதிச்சு வந்து சத்தம் போட்டிருக்கானுங்க”.

‘’ஏய் எவடி அவள் தைரியம் இருந்தா இப்ப வந்து பேசுங்கடின்னு, ஒரே அட்டகாசம் பண்ணியிருக்கானுங்க”.

“இந்த பொண்ணுங்க பயந்துட்டு, காயத்திரின்ற பொண்ணோட அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லியிருக்காங்க, அவர் தான் ஸ்டேஷன் வந்து கம்ப்ளெய்ன்ட் பண்ணது”.

“கம்ப்ளெய்ன்ட் பண்ண அன்னைக்கே வந்து பார்த்தோம், அவன்க யாரும் இல்லை.  சரி மறுபடியும் ஏதாவது தொந்தரவு பண்ணா சொல்லுங்கன்னு வந்திட்டோம்”.

“நேத்து மறுபடியும் ஏதோ பிரச்சினை பண்ணியிருக்காங்கன்னு, இன்னிக்கு காயத்திரியோட அண்ணன் ராகவன் போய், ஏன்டா இப்படி பண்றீங்கன்னு? கேட்டிருக்காரு.  அதுக்கு அவன்க அடாவடியா மரியாதையில்லாம ஏதோ பேச, இவரும் பதிலுக்கு பேசி சண்டையாயிடுச்சுன்னு சொன்னார்”.

“அவன்க உன்னால என்ன முடியுமோ, பார்த்துக்கோ போயான்னு, சொல்லி சத்தம் போட்டிருக்கானுங்க, ஸார்”.

அஸ்வத், “ராகவன் நேர்ல வந்தாரா இன்னைக்கு”.

“ஆமா ஸார்.  காலையிலேயே வந்திருந்தாரு ஸ்டேஷனுக்கு.  ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தாரு.  நீங்க வர லேட்டாகும் கிளம்ப சொல்லுன்னதால, அவரும் கிளம்பிட்டார், ஸார்”.

“ம்ம்… இந்த வீடா?”

“ஆமாம் ஸார்”.

“ராகவன் இங்க இருக்காரா? போன் பண்ணி கேட்டுட்டீங்களா?”

“ஆமாம் ஸார், இங்க இருக்கேன்னு சொன்னாரு”.

“போன் போட்டு, அவர வர சொல்லுங்க செல்வா.  வண்டியை ஓரமா நிறுத்திக்கோங்க”. செல்வா போன் செய்து ராகவனை அழைத்தார்,

செல்வாவின் போனை அட்டென்ட் செய்துகொண்டே ராகவன்  வீட்டிலிருந்து வெளியில் வந்தான்.

அஸ்வத் போலீஸ் வாகனமான இன்னோவாவிலிருந்து இறங்கி, அதன் மேலேயே சாய்ந்து நின்று கொண்டான்.  அவனது கண்கள் முழுவதும் ராகவன் கம்ப்ளெய்ன்ட் செய்த வீட்டையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.  பார்க்க டீசன்டான ஏரியா மாதிரி இருக்கு.  இங்கயே இந்த அராஜகம் பண்றான்களா என யோசித்துக் கொண்டிருந்தான்.

ராகவன் வெளியே வந்ததும், “இன்ஸ்பெக்டர் ஐயா வந்திருக்காங்க, வாங்க” என செல்வா ராகவனை அஸ்வத்திடம் அழைத்து வந்தார்.

ராகவன் இவனை நோக்கி வந்து வணக்கம் கூறியதும், ஆமோதிப்பாக தலையசைத்த அஸ்வத், “சொல்லுங்க ராகவன், என்ன பிரச்சினை?” என விசாரித்தான்.

ராகவன், “ஸார் பக்கத்து வீட்டுல நாலு பேச்சிலர்ஸ் தங்கியிருக்காங்க, தினமும் இராத்திரியானா வீட்லயே தண்ணி அடிச்சிட்டு, சத்தம் போடறது, மியூஸிக் சவுன்டா வைச்சிட்டு, இரண்டு மூனு மணி வரைக்கும் ஆட்டம் போடறதுன்னு, ஓவர் டிஸ்டர்பன்ஸ் ஸார்.   டெய்லி இதை பொறுத்துக்க முடியாம, அவங்க ஹவுஸ் ஒனருக்கு கால் பண்ணி சொன்னோம்.  அவரும் இவன்களை கூட்டு கண்டிச்சிருக்காரு”.

“அவர் கண்டிச்சன்னைக்கு இராத்திரியே, என் சிஸ்டர் இருக்கற காம்பௌன்ட் உள்ள வந்து அசிங்கமா பேசி கத்திருக்கானுங்க”.

“அவன்க பிரச்சினை பண்ண அடுத்த நாள், என் சிஸ்டர் போன் பண்ணி என்கிட்ட சொல்லிட்டாங்க.  நானும் உடனே ஸ்டேஷன் வந்து கம்ப்ளெய்ன்ட் பண்ணேன்”.

“அன்னைக்கே செல்வா ஸார்கூட வந்து பார்த்தாங்க, அவன்க யாரும் இல்லை, நாளு நாளா எங்க போனாங்கன்னே தெரியலை, ஒருத்தனும் வரலை. நானும் டெய்லி ஈவ்னிங் வந்து கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு போனேன்.  ஒன்னும் பிரச்சினையில்லன்னு இருந்தேன்.  நேத்து இராத்திரி, மறுபடியும் கேட்டுக்குள்ள வந்து நின்னு கத்தியிருக்கானுங்க.  இங்க பக்கத்தில இருந்தவங்களாம் கூட பார்த்திருக்காங்க, ஸார்”.

“இதுல தினமும் குடிச்சிட்டு,  ட்ரிங்ஸ் பண்ண காலி பாட்டிலை என் சிஸ்டர்ஸ் இருக்கற காம்பௌன்ட்ல அடிச்சு உடைக்க வேண்டியது. இதெல்லாம் நான் போய் கேட்டா மரியாதை இல்லாம தெனாவெட்டா பேசறான்க, ஸார்” என்று நடந்ததை சுருக்கமாக சொன்னான்.

“இப்ப இருக்கான்களா… வீட்ல” என்றான் அஸ்வத்.

“இல்ல ஸார்.  வீடு பூட்டியிருக்கு” என்றான் ராகவன்.

“வாங்க போய் பார்க்கலாம்…” என்று அவர்களை அழைத்துக் கொண்டு, அந்த பேச்சிலர்ஸ் குடியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தான்.

வீடு பூட்டியிருந்தது.  “செல்வா, பக்கத்தில போய் விசாரிச்சு பாருங்க, அப்படியே அந்த வாட்ச்மேன் சொன்னிங்க இல்ல.  அவரும் இருக்காரா பார்த்து அழைச்சிட்டு வாங்க…” என்றான் அஸ்வத்.

“சரிங்க ஸார்” என செல்வா அங்கிருந்து சென்றார்.

அஸ்வத், அங்கிருந்தே இரு வீட்டுக்கும் உள்ள இடைவெளியை ஆராய்ந்தான்.   இருவீட்டுக்கும் இருந்த இடைவெளி மிகவும் குறுகியதாகவே இருந்தது. ஒரு வீட்டு ஐன்னலை திறந்தால் அடுத்த வீட்டு ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டின் உள்ளே நடப்பதை பார்க்கலாம். அருகருகில் இருப்பதால் சத்தமும் அதிகமாக கேட்க வாய்ப்பு உள்ளது.  வீட்டின் இருபக்கமும் சென்று ஆராய்ந்து விட்டு வந்து மறுபடியும் இன்னோவாவின் அருகில் நின்று கொண்டான்.

செல்வா வாட்ச்மேனையும், கூட இன்னும் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களையும் விசாரித்தான்.  அவர்களுடைய வாக்குமூலமும் ராகவனை ஒத்தே இருந்தது.  அவர்களிடம் அந்த பேச்சிலர்ஸ் வந்தால் உடனே ஸ்டேஷனுக்கு போன் செய்ய சொல்லி, அவர்களை அனுப்பி வைத்தான்.

“சரி ராகவன்.  நான் பார்த்துக்கறேன்.  நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதிங்க.  காலையில நீங்க வந்தப்ப கோர்ட்டுக்கு ஒரு வேலையா போயிருந்தேன்.  அங்கேயே எனக்கு லேட்டாயிடுச்சி. இல்லன்னா காலையிலேயே வந்திருப்பேன், டோன்ட் வொர்ரி, நான் பார்த்துக்கறேன்.  ம்ம்….” என்றான் அஸ்வத் ராகவனைப் பார்த்து ஆறுதலாக தலையசைத்து.

“ஓகே ஸார்.  கொஞ்சம் சீக்கிரம்…” என ராகவன் தயங்கி இழுத்தான்.

“கவலைப்படாதீங்க ராகவன்.  எனக்கு உங்கள புரியுது. நான் கவனிச்சுக்கறேன் அவன்கள” என தைரியமளித்தவன், “நான் கிளம்பறேன்” என இன்னோவாவின் கதவைத் திறந்தான்.

அதற்குள் அவன் செல்போன் அடிக்க ஆரம்பித்தது.  போனை எடுத்து அட்டென்ட் செய்தவன் திறந்த இன்னோவா கதவை சாத்திவிட்டு, அதன் மேலேயே சாய்ந்து நின்று பேச ஆரம்பித்தான்.

வீட்டிற்குள் சென்ற ராகவன் பெண்களிடம் தைரியமாக இருக்கும்படி சொல்லிக்கொண்டு, வீட்டிலிருந்து வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றான்.  அவன் பின்னாடியே பெண்கள் மூவரும் வெளியே வந்து நின்றனர்.

ராகவன் அவனது டூவீலரின் அருகிலேயே நின்று கொண்டு தங்கையிடம் பத்திரமாக இருக்குபடி சொல்லியவாறு பேசிக் கொண்டிருந்தான்.

கூடவே அவளது தோழிகளும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களிடமும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.  அவர்களும் அவன் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர்.

போன் பேசிக் கொண்டிருந்த அஸ்வத்தின் பார்வை அந்த பெண்கள் மேலேயே நின்றுவிட்டது.  அருந்ததியை அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை. லெகின்ஸ், டாப், டாப்பின் மேல் ஷால் என போட்டு நின்றிருந்தாள்.  தலை முடியை தூக்கி கொண்டையிட்டிருந்தாள். முகம் பார்க்கவே டல்லாக இருந்தது.

அவளைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் முகம் மலர்ந்து ஹனி… என்று உதடு வரை வந்த வார்த்தையை சட்டென்று சுதாரித்து, டேய் என்னடா பண்ற என தன்னையே தலையில் தட்டிக் கொண்டான்

டக்கென செல்வா தன்னை கவனித்துவிட்டாரா  என திரும்பி பார்த்தான்.  நல்லவேளை அவர் அந்த பக்கமாக நின்று கொண்டு மும்முரமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

அவளா… அது?  இவள் இங்கயா தங்கியிருக்கா…? என ஆர்வமாக அருந்ததியையே பார்த்து நின்றான்.

டேய் அடங்குடா, அவளே அங்க சோகமா நின்னுட்டிருக்கா, நீ இங்க இப்ப தான் லவ்வரை பார்த்த எபெக்ட் குடுக்கற என்று அவன் மனசாட்சி அவனை அடக்க முயன்றது.

ஆமால்ல.  அன்னைக்குகூட அக்கா கிட்ட கோயில்ல பேசும்போது, ஏதோ ப்ரண்ட்ஸ்ங்களோட தங்கியிருக்கறதா சொன்னாளே.  இங்க தானா…?

ஓஹ்… இதனால தான் இன்னைக்கு ஸ்கூலுக்கு வரலையா என்று, அவனது கால்கள் அவனறியாமல் அவளை நோக்கி நகர ஆரம்பித்தது.  இரண்டடி எடுத்து வைத்தவன் நின்று விட்டான்,  எல்லோரும் அவளை சூழ்ந்து இருக்கும் போது, அவளிடம் தனியாக சென்று என்னவென பேசுவது.

ராகவன் அவர்களிடம் பேசிவிட்டு, அங்கிருந்து பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.  ராகவன் சென்றதும் பெண்களும் உள்ளுக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டனர்.

அஸ்வத் அதுவரை அவர்களைத்தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். சிறிது நேரம் யோசனையாக அங்கேயே நின்று பார்த்திருந்தவன், வண்டியை எடுக்க சொல்லி கிளம்பிவிட்டான்.

“செல்வா…”

“ஸார்…”

அஸ்வத் செல்வாவிடம் சில உத்தரவுகளை பிறப்பித்தவன், “கவனமா பார்த்து பண்ணுங்க செல்வா…” என்றான்.

“ஸ்யூர் ஸார்” என்ற செல்வா மனதில் அய்யோ..சாதாராணமா இவர் கிட்ட மாட்னாலே பின்னியெடுத்திடுவாரு.  இவன்களை என்ன செய்ய போறாரோ.  சொல்லவே வேணாம்.  வச்சி செய்ய போறார் இவன்கள” என தான் இருந்தது.

விசாலினி திருநெல்வேலிக்கு சென்றதும், இங்கிருந்து வாங்கிச் சென்ற அர்ச்சனாவின் ஜாதகத்தை அஸ்வத்தின் ஜாதகத்தோடு சேர்த்து எடுத்துப் போய் ஜோசியரிடம் காட்டி பொருத்தம் பார்த்து வந்திருந்தார்.  அதைப் பற்றி பூஜாவிடம் பேசுவதற்காக அவளுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தார்.

“ஜாதகம் பொருந்தி வந்திருக்கு பூஜா.  பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்குன்னு சொல்லியிருக்காங்க”.

பூஜா, “அம்மா, அஸ்வத் கிட்ட பேசாம, நீயா எதுவும் முடிவு பண்ணாத.  ஏற்கனவே நீ சொல்லாம பண்ண வேலைக்கு அவன் என்ன சொல்ல போறான்னு, நானே பயந்துட்டிருக்கேன். நீ பாட்டுக்கு எதையாவது பண்ணி வைக்காத.  இதுல அவன் சம்மதம் இல்லாம தான் பொண்ணு பார்க்க போனோம்னு, எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகுமோன்னு, அது வேற டென்ஷனா இருக்கு”.

விசாலி, “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.  நீ வீணா பயப்படாத.  நான் பேசறேன் அவன்கிட்ட”.

“முதல்ல அவன்கிட்ட பேசுமா.  அவனுக்கு பொண்ணை பிடிச்சதுக்கு அப்புறம், என் மாமியார் கிட்ட, பொண்ணு வீட்ல எல்லாம் சொல்லலாம்.  அவசரப்படாத”.

“சரி.  நான் அவன் கிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்ணறேன்”, என்று வைத்து விட்டார்.

பூஜாவுக்கு டென்ஷனானது.  இந்த அம்மா சொல்ல சொல்ல கேட்காம, அஸ்வத்துக்கு தெரியாம பொண்ணை பார்க்கறது, ஜாதகம் பார்க்கறதுன்னு, டென்ஷன் பண்றாங்க.  இன்னும் அவனுக்கு தெரிஞ்சா என்ன குதிக்க போறான்னோ… நம்மல வேற நடுவுல இழுத்து விட்டுட்டாங்க, என உள்ளுக்குள் புலம்பிக் தவித்தாள்.

விசாலினியும் மகளுக்கு பேசிய உடனேயே போனில் அஸ்வத்தை அழைத்துவிட்டார்.  தாங்கள் சென்று பெண் பார்த்து வந்த விவரத்தை அவனிடம் பொறுமையாக கூறினார்.

அடுத்து அவர், அவர்கள் இருவருக்கும் ஜாதகம் பார்த்தது, அது பொருந்தி வந்தது பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

“உனக்கு வாட்சப்பில் பொண்ணோட போட்டோ அனுப்பி வைச்சிருக்கேன்.  பார்த்துட்டு சொல்லு, உனக்குப் பிடிச்சிருந்தா, மேற்கொண்டு பேசலாம்.  இல்லனா, பூஜாவை அழைச்சிட்டு போய் வேணாலும் நேர்ல பார்த்துட்டு வரயா?  நீ போறேன்னா பொண்ணு வீட்ல முன்னாடியே கூட்டு தகவல் சொல்லனும்” என்றார் மகனிடம்.

அஸ்வத் கோவப்பட்டு போனிலேயே கத்த ஆரம்பித்துவிட்டான்.  “என்னம்மா பண்றீங்க?  யார கேட்டுட்டு இதெல்லாம் செஞ்சீங்க?  உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுவீங்களா?  இதுல ஜாதகம் தான் பார்த்தீங்கன்னா, பொண்ணு வேற போய் பார்த்திருக்கீங்க”.

அஸ்வத்துக்கு எங்கே தெரியபோகுது, பெண் பார்த்து விட்டுதான், ஜாதகமே பார்த்தார்கள் என்று.

“நீங்க மட்டுமில்லாம அக்கா மாமியாரையெல்லாம் கூட்டுட்டு போயிருக்கீங்க.  அப்பா எப்படி ஒத்துகிட்டார் இதுக்கு.  என் கிட்ட சொல்லனும், கேட்கனும்னு, உங்க யாருக்கும் தோணவே இல்லையாமா?  இதுல அக்கா வேற உங்களோட கூட்டு.  நேர்ல பார்க்கும் போது கூட ஒன்னும் இதைபத்தி சொல்லவே இல்ல”  என்று ஆத்திரப்பட்டான்.

மகனுக்கு அசருபவரா அவர்.  நானும் விட்டேனா பார் என்று “டேய் அவளை எதுவும் சொல்லாதடா.  நான் தான் இதை ஏற்பாடு பண்ணேன்.  அவள் உன்கிட்ட கேட்டுட்டு தான் செய்ய சொன்னா.  நான் உன்கிட்ட சொன்னா, ஏதாவது சொல்லி என்னை வேணாம்னு தடுத்துடுவேன்னு தான், செஞ்சுட்டு சொல்லிக்கலாம்னு, சொல்லலடா.  ஏன் இவ்வளவு கோவப்படற? கல்யாணமா முடிவு பண்ணிட்டேன். பொண்ணுதான பார்த்திருக்கோம்” என்றார் அசால்ட்டாக.

“ஓ… அதை வேற முடிவு பண்ணுவீங்களா?  என்கிட்ட சொல்லாம கொள்ளாம.  கல்யாணம் யாருக்கு…?  எனக்கு தானா….?” என்றான் நக்கல் கலந்த எரிச்சல் த்வனியில்..

“இப்ப என்னடா நடந்திடுச்சு…?  ஏன்டா இப்படி காயற…?  அதான் உன் கிட்ட சொல்லிட்டு தான இருக்கேன்…?”

“எப்ப…?  எல்லாம் நீங்களே முடிவு பண்ணி, பொண்ணு பார்த்து, ஜாதகம் பார்த்து, டிசைட் பண்ணிட்டு…  ம்ம்…”

“ப்ச்… இப்ப என்னடா பண்ணனுன்ற…?” என்றார் சலிப்பாக.

“ம்ம்…. எதுவும் பண்ண வேணான்றேன்.  எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணுங்கன்னு சொல்றேன்.  புரியுதா உங்களுக்கு” என்றான் கடுப்பாக.

“ஏன்…? ஏன் ஸ்டாப் பண்ணனும்?  டேய்… என்னடா..பேசறே? எப்பவும் இப்படியே முட்டுக்கட்டை போட்டுட்டே இருந்தா, எப்பதான்டா கல்யாணம் பண்றதா இருக்கே….?”

“நான் உங்ககிட்ட முன்னாடியே தெளிவா சொல்லிட்டேன்,  நானே சொல்றேன்.  எனக்கு டைம் குடுங்கன்னு…”

“அந்த டைம் எப்ப தான்டா வரும்?  எவ்வளவு நாள்டா…?  வருஷம் பாட்டுக்கு போயிட்டேயிருக்கு.  உன்னோட வயசுப் பிள்ளைகளுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தையும் இருக்கு.  நீ என்னன்னா இன்னும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கவே ஒத்துக்க மாட்டேன்ற” என்றார் ஆற்றாமையாக.

“அம்மா… நானே உங்களுக்கு சொல்றேன்.  இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க…”

“அஸ்வத் எதுக்காக கல்யாணத்தை தள்ளி போடறே..?. இந்த பொண்ணு போட்டோவ பாருடா.  பொண்ணு நல்லாயிருக்கா.  நல்ல குடும்பமும் கூட.  வசதியும் இருக்கு.  எதுக்கு வேணாம்னு சொல்றே…? காரணம் சொல்லு…?”

என்னவென்று சொல்லுவான்?  நான் காதலில் விழுந்து விட்டேன்.  இன்னும் என் விருப்பத்தையே அவளிடம் சொல்லவில்லை.  அவளைதான் திருமணம் செய்ய விருப்பபடுகிறேன், என்றா…?

“இல்ல மா.  ரீசன் எதுவும் கேட்காதீங்க.  இப்ப எனக்கு விருப்பமில்லை. இந்த சம்மந்தத்தை நீங்களே பேசி ஸ்டாப் பண்ணிடுங்க”.

“பூஜா மாமியார் சொல்லிதான் இந்த வரனே பார்த்தேன், இப்ப திடுதிப்புன்னு, என் பையன் வேணாம்னு சொல்றான்னு சொன்னா, அவங்க என்னடா நினைப்பாங்க?  இல்ல எனக்கு என்ன மரியாதை இருக்கும் அவங்ககிட்ட?  எல்லாம் உன் இஷ்டமா…?”

“அம்மா என்ன பேசறீங்க, அவங்களுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது.  தெரிஞ்சுதான் பேசறீங்களா…?  இது என்னோட வாழ்க்கை மா. நீங்க என்னை கேட்காம செஞ்சுட்டு, என்னை குத்தம் சொல்லாதீங்க”.

“அப்ப நான் உனக்கு எதுவுமே செய்ய கூடாதாடா…? அந்த உரிமை எனக்கு இல்லியா….” என்றார்.  எப்படி சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன்றானே என்ற ஆதங்கத்துடன்.

“அம்மா எதுக்கு எதை கூட்டு சேர்க்கறீங்க.  இதுல எங்கயிருந்து உரிமை போகுது உங்களுக்கு…? என்னோட கல்யாணம்ன்றது என்னோட லைப்மா. அதை நான் எனக்கு பிடிச்ச மாதிரி அமையனும்னுதானே விரும்புவேன். ப்ளீஸ்… சொன்னா புரிஞ்சுக்கோங்க மா” என்றான் மன்றாடலாக.

விசாலினிக்கு மனது பாரமானது.  மகன் சொல்வது சரியாக இருந்தாலும் இன்னும் எவ்வளவு நாள் திருமணத்தை தள்ளிப் போடுவது என மகனிடம் கோவமாக முறுக்கிக்கொண்டு, “இப்ப அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?  கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லட்டுமா…?” அந்த பெண் படித்து கொண்டுதானே இருக்கிறாள் என மனதில் வைத்து கேட்டார்.

“இல்லயில்ல” என பதறியவன் “அப்படி எதுவும் சொல்லிடாதீங்க.  அவங்கள நமக்காக வெயிட் பண்ண வேணாம்னு சொல்லிடுங்க…” என்றான் தெளிவாக.

விசாலினியும் ஒன்றும் சொல்லாமல் கோவத்துடனேயே போனை வைத்துவிட்டார்.

அன்றே போன் செய்து பூஜாவின் மாமியார் கனகாவிடம் ஜாதகம் பார்த்தோம் எங்களுக்கு பொருந்தி வரவில்லை, நீங்களே பெண் வீட்டில் சொல்லி விடுங்கள் என்று சொல்லியும் இருந்தார்.

பூஜாவிடமும் அவன் பேசியதையெல்லாம் சொல்லி குறைபட்டிருந்தார்.  அவள் “நான் அப்பவே சொன்னேன் இல்ல.  என் பேச்சை நீ கேட்கவேயில்ல. இனி அவனை கேட்காம, எதுவும் செய்யாதம்மா.  இது மட்டும் என் மாமியாருக்கு தெரிஞ்சது, அவங்க என்னை பேசியே கொன்றுவாங்க” என்றிருந்தாள்.

பூஜாவின் மாமியாரும் பெண் வீட்டாரிடம் விசாலினி கூறியது போலவே சொல்லிவிட்டார்.

பெண் வீட்டார் பார்த்த இடத்தில் ஜாதகம் பொருந்தி வந்திருக்கு என கூறியிருந்தார்கள்.  விசாலினிக்கு சொன்னது போலவே பத்துக்கு ஒன்பது பொருத்தம் உள்ளது என கூறியிருந்தனர்.  ஆதலால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.   அடுத்து என்னன்ன என்று கூட மனதில் திட்டமிட்டு தயார் நிலையில் இருந்தனர்.

அவர்களுக்கும் அஸ்வத்தை போட்டோவில் பார்த்ததுமே பிடித்துவிட்டது. அவன் வீட்டினரையும் பிடித்திருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களது பெண் அர்ச்சனாவுக்கு அஸ்வத்தை ரொம்ப பிடித்திருந்தது.  பெண்ணின் பிடித்தத்தை முன் நிறுத்தியே அவர்கள் மனதளவில் தயாராகயிருந்தனர்.

பூஜாவின் மாமியார் கனகா போன் செய்து ஜாதகம் பொருந்தவில்லை என சொல்லியதுமே, அவர்கள் புரிந்துகொண்டனர்.  சரி, அவர்களுக்கு இச்சம்மந்தத்தில் விருப்பம் இல்லை என்று விட்டு விட்டனர்.

ஆனால் அர்ச்சனாவை எல்லோரும் கருத்தில் கொள்ள மறந்தனர்.  அவள்  தானுண்டு, தன் படிப்புண்டு என சும்மாயிருந்தவளை, கல்யாணத்துக்கு நல்ல வரன் வந்திருக்கு, மாப்பிள்ளை நல்ல இடம் போட்டோ பார்.  மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா…?

ஜாதகம் பார்த்துட்டோம்.  இரண்டு பேருக்கும் பொருந்தி வந்திருக்கு. எப்படியும் இந்த இடம் கூடிடும் என அவளை உசுப்பேத்தி விட்டுட்டு,  பொசுக்கென்று இல்ல மாப்பிள்ளை வீட்ல ஜாதகம் பொருந்தி வரலன்னு, வேணாம்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னால், ஏதோ குழந்தை கையில் மிட்டாயைக் கொடுத்து பிடுங்கியது போல் இருந்தது அவளுக்கு.

அஸ்வத் போட்டோவை பார்த்ததிலிருந்து அவனைத் தான் மனதில்  மணாளனாக நினைத்திருந்தாள். அஆ

அஸ்வத் யாரிடமோ கண்களுடன் சேர்ந்து, முகமும் மலர சிரித்து பேசிக் கொண்டிருப்பது போல இருந்த அவனது உருவத்தை போட்டோவில் பார்த்ததிலிருந்து, அவன் மேல் அவளுக்கு ஆசை வந்திருந்தது மனதில்.

இப்போது இவன் உனக்கில்லை என்றதும் ஏமாற்றமாக உணர்ந்தாள்.  ஏன் வேணாம்னு சொல்லிட்டாங்க? அவங்க அளவுக்கு நான் அழகாயில்லையா?  அவருக்கு மேட்சாயிருக்கமாட்டேனா? என கண்ணாடியைப் பார்ப்பதும், யோசிப்பதும் என தன்னையே குழப்பிக் கொண்டிருந்தாள்.

பேசாம அவர் கிட்டயே போன் பண்ணி கேட்டுடலாமா? என கூட சிந்திக்க தொடங்கியிருந்தாள் மனதில்.

ம்கூம்.. போன்லாம் வேணாம்.  நேர்லயே மீட் பண்ணி பேசிடுவோமா…?  அய்யோ என்னன்னு அவர்கிட்ட போய் கேட்கறது.  என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க மறுத்திட்டீங்கனா கேட்க முடியும்…?  அசிங்கமாயிருக்காதா?  தப்பா நினைச்சிட்டார்னா….?

வீட்ல அம்மா அப்பாவுக்கு நான் அவர்கிட்ட பேசுனது தெரிஞ்சதுனா, கஷ்டமாயிடாதா…? என்று செய்தி வந்த ஒரு வாரமாக மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்.

அவனை நினைக்காமல் இருக்கவும் முயற்சி  செய்து பார்த்தாள்.  ம்கூம்… முடியவில்லை.  மறக்கவேண்டும் என நினைக்க நினைக்கதான் இன்னும் அவன் நினைவு அதிகமானது அவளுக்குள்.  முடியாமல் தவித்தாள்.  இறுதியில் அவனிடம் பேசிவிடுவது என  முடிவு செய்து அவனுக்கு போன் செய்து விட்டாள்.

அன்று பெண் பார்க்க வந்திருந்த போது இவளுடைய போட்டோவை அஸ்வத்துக்கு வாட்சப் செய்ய சொல்லி விசாலினி கொடுத்திருந்த, அஸ்வத்தின் பர்சனல் நம்பருக்கு அழைத்திருந்தாள்.

அஸ்வத்தக்கு புதிய எண்ணில் இருந்து போன் வந்ததும் யார் இது வெறும் நம்பர் மட்டும் டிஸ்ப்ளேல வருது என்று யோசனையாக எடுத்தவன், “ஹலோ” என்றான்.

அஸ்வத்தின் குரலை போனில் கேட்டதும், இத்தனை நேரம் இருந்த தைரியம் எல்லாம் வடிந்தது போலானது அர்ச்சனாவுக்கு.  குரலே எழும்ப வில்லை தொண்டையிலிருந்து.  தயக்கத்துடன் அச்சமும் சேர்ந்துகொண்டது அவளுக்கு.

எதிர்புறமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால்,  லைன் கட் ஆயிடுச்சோ என போனை எடுத்துப் பார்த்தான் அஸ்வத்.

எதிர்புறத்தில் கால் செய்தவர்கள் லைனில் இருக்கிறார்கள் என உறுதியானதும்  மறுபடியும் “ஹலோ…. லைன்ல இருக்கீங்களா” என்றான் சத்தமாக.

அர்ச்சனா எச்சிலை கூட்டி விழுங்கி தைரியத்தை வரவைத்து, “ஹ…லோ…” என்றாள் மெல்ல திணறியபடி.

“ம்ம்..சொல்லுங்க…” என்றான்.

“அ..து  நா..ன்  அர்ச்..ச..னா  பேசறேன்”.

அவனும் யார் இது அர்ச்சனா என நெற்றியைத் தேய்த்து யோசனையானான்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!