“என்ன ம்மா இது? இந்த வீட்ல ஒரு ரூம் தானே இருக்கு. இங்க எப்படி தங்குறது?” என்று சிடுசிடுத்தான் ஹரி.
கிளம்புவதற்கு முன்பே சுந்தர்ராஜன் அது சின்ன வீடு, அங்க வந்து வசதி பத்தலைன்னு எல்லாம் சொல்ல கூடாது என்று கூறி இருந்தார். அப்பொழுது அம்மாவும் மகனும் காதிலே வாங்கிகொள்ளாமல் இப்பொழுது இங்கே வந்து ஆரம்பிக்கவும் கடுமையாக அவர்களை முறைத்து பார்த்தார் சுந்தர்ராஜன்.
Advertisement
அதற்குள் மணிமேகலை சுட சுட காஃபி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்.
“இப்படி சொல்லி சொல்லி தான் பதினேழு வருஷம் அடுப்படிக்குள்ளவே அடைச்சு வச்சிட்டாங்க..”
“——————–”
சாம்பவி என்ன பதில் சொல்வது என்று விழிக்கவும்,
“நீ ஏன் அதுக்கு இப்படி முழிக்கிற? நான் சாதாரணமா தான் சொன்னேன். அப்புறம் சொல்லு சாம்பவி, எப்படி இருக்கு மேரேஜ் லைஃப்?” என்று மணிமேகலை பேச்சை மாற்றினார்.
“ஜாலியா தான் போகுது. உங்க தம்பியோட குணம் தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். என்ன இப்ப ஹரியும் எங்க அப்பாவும் ஒரு கட்சி.. ஹரியை தனியான்னா சமாளிச்சிடுவேன். ஆனா எங்க அப்பாவோட சேர்ந்துட்டா கொஞ்சம் கஷ்டமா இருக்கு”
“ஹரியை தனியா சமாளிக்கிறதே கஷ்டம்தான்.. நீ எப்படி சமாளிக்கிற? “
“அதுக்கு எங்க அம்மா சுலபமா ஒரு ஐடியா கொடுத்தாங்க.. அது சூப்பரா வேலை செய்யுது” என்றாள் சாம்பவி ரகசிய குரலில்.
“என்ன ஐடியா” என்றார் மணிமேகலையும் அதே ரகசிய குரலில்.
“இந்த அல்டாப் மாமனார் மருமகன் கூட்டணியை கலைக்க, மாமா கூட என்ன கூட்டணி அமைச்சுக்க சொன்னாங்க.. இப்ப எங்க அதிரடி மாமனார் மருமகள் கூட்டணியை என்ன செய்றதன்னு தெரியாம அவங்க தான் முழிபிதுங்கி நிக்குறாங்க… லைஃப் கிரிக்கிட் மேட்ச் மாதிரி சும்மா சூப்பரா போகுது”
“ஹா ஹா ஹா.. எங்க அப்பாவா? உங்க அப்பாவா? சபாஷ் சரியான போட்டி”
“நீங்க இவ்வளவு நல்லா பேசுறீங்க.. அத்தை நீங்க அதிகமா பேச மாட்டீங்கன்னு சொன்னாங்க..”
“அது இப்ப இருக்கிறது எங்க அத்தை வெர்ஷன் 2.0, சித்தி” என்றாள் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த வராஹி.
“நீ எப்படி படிக்கிற டா? அண்ணா மாதிரி நீ ஸ்போர்ட்ஸ் எல்லாம் போறது இல்லையா?” என்று வராஹியோடு பேச்சு கொடுக்க அராம்பித்தாள் சாம்பவி.
பேச்சும் சிரிப்புமாக காலை உணவு தயார் ஆகிவிட்டது. காலை உணவிற்கு பூரியும் கிழங்கும்.
“என்ன மணி வெறும் கிழங்கு மட்டும் இருக்கு, எப்பவுமே கூட புதினா சட்னி செய்வோமே நம்ம வீட்ல?” என்றார் பரிமளா.
“இல்லம்மா, இங்க ஒரு டிபன் ஒரு தொட்டுகை தான்” என்று முடித்துக்கொண்டார் மணிமேகலை.
பரிமளா ஆவென்று பார்த்து அமர்ந்திருந்தார். அவரது பாங்கு எப்பொழுதும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பேசுவது தான். அவர் இப்படி கேட்டால் முன்பானால், ஒரு நிமிஷம் என்று கூறி அப்பொழுதே சட்னி அரைத்து கொண்டு வந்து வைத்து விடுவாள் மகள்.
காலை உணவு முடிந்து அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்த நேரத்தில் பத்மப்ரியா வந்தார்.
“வாங்க பத்து” என்று உற்சாகமாக வரவேற்றார் மணிமேகலை.
அவரிடம் அம்மா அப்பா தம்பி தம்பி மனைவி என்று அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.
ஊரில் யார் வந்தாலும் ஹரியும் பரிமளாவும் மணிமேகலையை ரூமிற்குள் அனுப்பி விடுவார்கள். இங்கானால், உற்சாகமாக வந்தவரை வரவேற்று அவரிடம் இவர்களை அறிமுக படுத்தும் மணிமேகலை புதிதாக தெரிந்தார்.
பத்மா அம்மாவும் ஐந்து நிமிடங்களிலே அனைவருடனும் இயல்பாக பேச ஆரம்பித்துவிட்டார்.
“அப்புறம் மேகா, இன்னும் கிளம்பலையா?” என்றார் மணிமேகலையிடம்
“எங்கே?” என்று புரியாமல் அவர் விழிக்கவும்,
வராஹி தான், “அத்தை இன்னிக்கு புத்தக கண்காட்சி கடைசி நாள். பத்தும்மா கூட நாம போறதா சொல்லி இருந்தீங்களே?” என்றாள் வராஹி.
“புத்தக கண்காட்சியா? அதுக்கு எதுக்கு மணியை கூப்பிடறீங்க? மணி பெருசா புத்தகம் எல்லாம் வாசிக்க மாட்டாளே?அதுவும் இல்லாமல் நாங்க எல்லாரும் வந்திருக்கோம். ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறதனால, எங்க கூட இருக்கணும்னு அவளுக்கு ஆசை இருக்கும் இல்லையா?” என்றார் பரிமளா பாசமாக.
“உக்கும்.. இவங்க கிட்ட இருந்து பல வருஷம் கழிச்சு இப்ப தான் தப்பிச்சு வந்திருக்கு என் பொண்ணு.. இதுல இவங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குமாம்.. பார்த்தியா மருமகளே உன் மாமியார் சாதுர்யத்தை” என்று சுந்தர்ராஜன் மருமகளிடம் முனுமுனுத்தார்.
“நீங்க வேணா நிவேதா அக்காகூட போய்ட்டு வாங்க பத்து” என்றார் மணிமேகலை மெல்ல.
“ஒரு ரெண்டு மணி நேரம் தானே மேகா ஆகும். வா போய்ட்டு வந்திடலாம்”
“இல்ல பத்து, இன்னும் சமையல் செய்யலை” என்று மணிமேகலை இழுக்கவும்,
“நீ இப்படி சொல்றதை கேட்டு உங்க அம்மா மனசு என்ன பாடு படும்?” என்றார் பத்மப்ரியா சோக குரலில்.
“எதுக்கு இந்த அம்மா நம்மளை சொல்லுது” என்று பரிமளா அவரை பார்க்க,
“நீங்க ஒன்னும் விசனப்படாதீங்க.. எனக்கு நீங்க நினைக்கிறது புரியது”
“என்ன நினைக்கிறன்.. நான் ஒன்னும் நினைக்கலை”
“இப்ப தானே சொன்னீங்க, பல மாசம் கழிச்சு பொண்ண பார்க்க வந்து இருக்கீங்கன்னு.. அப்ப உங்க கையால பொண்ணுக்கு பிடிச்சதை எல்லாம் சமைச்சு கொடுக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல. அது புரியாம இந்த மேகா அவ சமைக்கிறேன்னு சொல்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கும் தானே? அம்மாவா உங்க பொண்ணுக்கும் பாட்டியா பேர பிள்ளைகளும் ஒரு வேலையாவது சமைச்சு போடணும்னு உங்களுக்கும் ஆசை இருக்குமா இல்லையா?”
“இதற்கு இல்லை என்று பதில் சொல்ல முடியாதே? என்ன செய்றது?” என்று பரிமளா விழிக்க..
“இவளுக்கு எங்க தங்கச்சசி பொண்ணுக்கு பிடிச்சது எல்லாம் தெரிய போகுது?” என்றார் சுந்தர்ராஜன் இடக்காக.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வீர்யா ‘ஹாய் தாத்தா’ என்று வந்து சேர்ந்தாள்.
“என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க? ஒரு தாயோட மனசு உங்களுக்கு புரியாது. மேகாக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்கும்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?”
“என்னங்க நான் சொல்றது சரிதானே?” என்றார் மறுபடியும் பரிமளாவிடம்.
“சரி தான்…”
“ஏம்மா, சாம்பு நீயும் வர்றீயா?” என்றார் அடுத்து சாம்பவியிடம் திரும்பி.
மணிமேகலை வராஹியை அழைத்து கொண்டு கிளம்ப சென்றுவிட்டார்.
சாம்பவிக்கும் இவர்களுடன் செல்ல ஆசையாக இருக்கவே நானும் வர்றேன் என்று இணைந்து கொண்டாள்.
வீர்யா, வராஹி, மணிமேகலை, சாம்பவி, பத்மப்ரியா என்று அனைவரும் கிளம்பி தயாராக இருக்க, வந்தியத்தேவன் வந்து அனைவரையும் அழைத்து சென்றார். ஊரில் இருந்து போன வாரம் அவர்களது இன்னோவா காரை கொண்டு வந்திருந்தார்.
“நானும் வர்றேன் என்று கிளம்பிய சுந்தர்ராஜனை, பாவம் அவங்க தனியா எப்படி சமைக்க முடியும்? நீங்க உதவி செய்யுங்க” என்று கழட்டி விட்டுவிட்டனர்.
அவர்கள் எல்லாரும் புறப்பட்டதும்,
“என்னங்க நீங்க பேசாம இருக்கீங்க.. அந்த அம்மா பாட்டுக்கு இவ்வளவு பெரிய மெனுவை போட்டுட்டு டாட்டா காட்டிட்டு மணியையும் கூட்டிட்டு கிளம்பிடுச்சு..”
“நீ தான் சரின்னு மண்டையை ஆட்டுன.. அதான் நிஜாமாலுமே உனக்கு பொண்ணு மேல பாசம் வந்திருச்சு.. அதான் நீ ஒத்துக்கிட்டேன்னு நான் அமைதியா இருந்தேன்..”
“பாசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன சம்பந்தம் ?”
“உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு பரிமளா? அதுவும் நீ வைக்குற பருப்பு உருண்டை குழம்புக்கு ஈடே இல்லை.. எனக்கும் உன் கையால சாப்பிடணும்னு ஆசையா இருக்கு..”
“சரி சரி.. நான் என்ன இருக்குனு பார்க்குறேன்.. இல்லாத ஐட்டம் எல்லாம் நீங்க கடைக்கு போய் வாங்கிட்டு வாங்க..”
இங்கே நடக்கும் எதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று காதில் ஹெட் போன்ஸ் மாட்டிக்கொண்டு ரூமிற்குள் சென்று படுத்துகொண்டான் ஹரிப்ரசாத்.
அதன் பிறகு பரிமளா விரும்பியே சமைக்க ஆரம்பித்தார். சுந்தர்ராஜன் அவரை சீண்டாமல், அவருடன் இணக்கமாகவே பேசி கொண்டு அவர் கூறிய உதவிகளை செய்து கொடுத்தார்.
“அப்படியே அந்த வீர்யா பொண்ணு வீட்டுக்கும் போன் பண்ணி எல்லாரையும் கூப்பிடுங்க. அவங்க வீட்ல நீங்க எல்லாம் அடிக்கடி சாப்பிடறதா சொன்னீங்களே? இன்னிக்கு நம்ம வீட்ல சாப்பிட கூப்பிடுவோம்”
“சரி, அப்புறம் அந்த அம்மாவோட மகன் தான் கூட்டிட்டு போயிருக்காரு. அவரையும் கூப்பிடுவோம்.. “
“சரி..”
உடனே சுந்தராஜன் அழைத்து அனைவரையும் சாப்பிட இங்கு வருமாறு அழைத்தார்.
பரிமளா சுந்தராஜன் இருவரும் சேர்ந்து ப்ரமாதமாக விருந்தை சமைத்து முடித்தனர்.
புத்தக கண்காட்சியில் சாம்பவி மணிமேகலை பத்தும்மா மூவரும் கதை புத்தகங்கள் பிரிவிற்குள் நுழைந்தனர். வந்தியத்தேவன் வீர்யாவையும் வராஹியையும் அழைத்துக்கொண்டு சிறுவர்கள் பிரிவிற்கு வந்தார்.
வராஹி ஆசையாக புத்தகங்களை பார்த்துக்கொண்டிருக்க, வீர்யா ‘தெரியாம இவங்களோட வந்துட்டோமோ? அதான் இந்த சம்பவ் வரலைன்னு உஷாரா கலண்டுக்கிட்டான் போல’ என்று யோசித்துக்கொண்டு ஓரமாக நின்று வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹலோ மேடம்.. என்ன நீ ஒன்னும் பார்க்கலையா?”
“எனக்கு பாட புத்தகம் படிக்கிறதே அலர்ஜி.. இதுல வேற புக்ஸ் வேறயா?”
“அது அப்படி இல்ல வீர்யா, நீ வா, நான் உனக்கு ஏத்த மாதிரி புக்ஸ் காட்டுறேன்” என்று அவளை அழைத்து கொண்டு நகைச்சுவை, விடுகதை, பஸ்ஸெல்ஸ், அவர்கள் வயதுக்கேற்ற காமிக்ஸ், கதை புத்தகம், என்று எல்லாம் காண்பித்தார்.
வராஹிக்கும் அவளது ரசனைக்கு ஏற்ற மாதிரி காண்பித்தார். இப்ப உங்களுக்கு பிடிச்ச புத்தகங்களை எடுங்கள் என்று கூறிவிட்டு ரகுவுக்கும் வல்லபனுக்கும் அவரே புத்தகங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்தார்.
“வரா இந்த மிலிட்டரி அங்கிள் பரவாயில்ல.. நல்லவரு தான்” என்றாள் வீர்யா அங்கே இருந்து கிளம்புகையில்.
“ஆமா வீரு, எனக்கும் அப்படி தான் தோணுது”
பை நிறைய புத்தகங்களுடன் சலசலவென பேச்சோடு வீடு திரும்பினார்கள்.
இவர்கள் வரும் நேரம் வல்லபனும் ரகுவும் வந்து விட்டார்கள். அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
“சாப்பாடு ரொம்ப அருமையா இருக்குங்க” என்று பத்தும்மா மிகவுமே பாராட்டினார் பரிமளாவை.
அதிலே அவருக்கு ஜில்லென்று இருந்தது.
நிவேதாவும், “நான் செய்ற குழம்பு இவ்வளவு ருசியா வராது ம்மா, அப்புறமா எனக்கு ரிஸிபி சொல்லுங்க” என்றார்.
“எங்க அம்மா சமையல் தான் எனக்கு பிடிக்கும். ஆனா பரிமளா வைக்கிற இந்த குழம்பு மட்டும் எங்க அம்மா செய்றதை விட நல்லா இருக்கும்” என்றார் சுந்தர்ராஜன்.
அனைவரும் பாராட்டி கூற மணிமேகலை மட்டும் அமைதியாகவே உண்டார்.
பரிமளா மகள் எதாவது செல்வாளா என்று நொடிக்கொரு முறை மகளை நோட்டம் விட்டார்.
கண்கள் கலங்கி கொண்டு வந்தது மணிமேகலைக்கு.
அனைவர் முன்பும் அழ கூடாது என்று கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அமைதியாக உண்டார்.
கடைசியாக அனைவர்க்கும் பாயசத்தை கிண்ணத்தில் கொண்டு வந்துகொடுத்தாள் சாம்பவி.
“என்ன பாட்டி இது? பருப்பு பாயசம்.. பால் பாயசம் தானே சொன்னோம்” என்றாள் வீர்யா.
“அதானே” என்றார் பத்தும்மா.
“மணிக்கு பருப்பு பாயசம் தான் பிடிக்கும்” என்றார் பரிமளா.. சொல்லும்போது ஏனோ அவரது குரலும் கரகரத்தது.. எத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் கையாலே மகளுக்கு பிடித்ததை செய்திருக்கிறார்.
மணிமேகலையின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் இறங்கிவிட்டது.
உணவை முடித்துக்கொண்டு சற்று நேரத்தில் அனைவரும் பரிமளாவிற்கு நன்றி கூறி கிளம்பிவிட்டனர்.
சாம்பவியின் பெரியப்பா மகன் திருமணம் சென்னையில் மறுநாள். அதற்காக தான் ஹரியும் சாம்பவியும் வந்திருந்தது.
அன்று இரவு இவர்கள் இருவரும் மட்டும் செல்வதாகவும் மறுநாள் பரிமளா சுந்தர்ராஜன் செல்வதாகவும் ஏற்பாடு. அதன் படி மாலையே சாம்பவியும் ஹரியும் புறப்பட்டுவிட்டனர்.
இரவு மணிமேகலை பரிமளா வராஹி மூவரும் ரூமிற்குள் படுத்துகொண்டார்கள்.
தாத்தாவும் பேரனும் ஹாலில் படுத்துகொண்டார்கள்.
வராஹி தூங்கும் வரை அம்மாவும் மகளும் அமைதியாகவே படுத்திருந்தனர்.
அதன் பின், “பாயசம் ரொம்ப நல்லா இருந்துச்சும்மா, தேங்க்ஸ்” என்றார் மணிமேகலை மெல்ல.
பரிமளாவிற்கு பேச்சே வரவில்லை. மெல்ல மகள் மீது கை போட்டு “தூங்கு டா” என்றார்.