அகல்கவி 04

அகல்கவி சிலையமுதே 04
Advertisement
அன்று திருமணநாளும் வந்தது..
விடியற்காலையிலேயே திருமணம் நடக்கவிருக்கும் மண்டபத்திற்கு பெண் வீட்டாற்கள் வந்துவிட, சாரதாவும் மேகலையும் நாடியில் கை வைத்து சுற்றிமுற்றி ஆச்சரியப் பார்வைப் பார்த்தனர்.
Advertisement
Advertisement
“அண்ணி, என் அண்ணனுக்கு இருக்குற கஞ்சதனத்துக்கு இம்புட்டு பெரிய மண்டபத்த புக் பண்ணியிருக்காரா? என்னால நம்பவே முடியல” என்று குறையாத ஆச்சரியத்தோடு கேட்க, “க்கும்!” என்று நொடிந்துக்கொண்டார் மற்றவர்.
“அய்யோ என்ன சாரதா நீ! உங்க அண்ணனாச்சும் மண்டபத்துல வைக்கிறதாச்சும்.. இது மாப்பிள்ளையோட சொந்த மண்டபமாம், சொல்லப்போனா இந்த கல்யாணத்தோட மொத்த செலவும் அவருதான் பார்க்குறாராம். உங்க அண்ணன் பண்றதா இருந்தா வீட்டுல இருக்குற பூசை அறையிலயே விட்டா கல்யாணத்த நடத்தியிருப்பாரு”
Advertisement
மேகலை சொல்லிச் சிரிக்க, திடீரென பின்னால் ஒரு செருமல் சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தில் இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க, அங்கு மூக்கு விடைக்க அவர்களை முறைத்துக்கொண்டு நின்றிருந்தார் முத்துப்பாண்டி.
அதில் சாரதாவுக்கும் மேகலைக்கும் பக்கென்று இருக்க, விட்டால் போதுமென்று அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டனர்.
அடுத்த கொஞ்ச நேரத்தில், மாப்பிள்ளை வீட்டாற்களும் வர தன் வீட்டு ஆண்களோடு அவர்களை வரவேற்கச் சென்ற யுவனுக்கு அந்த மாப்பிள்ளையை பார்த்ததுமே முகம் அஷ்டகோணலாக சுருங்கியது.
நான்கைந்து முடிகளோடு சொட்டைத்தலையும் பெரிய தொப்பையும் கொஞ்சமும் அந்த சிறுபெண்ணிற்கு பொருத்தமில்லாத ஒருவனை காணக் காண இவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
“வாங்க மாப்பிள்ளை.. வாங்க வாங்க..” என்று முத்துப்பாண்டி தன் மொத்த பல் வரிசையையும் காட்டி இழித்தபடி மருமகனை வரவேற்க, ‘அவன சொல்லி குத்தமில்ல, இந்த பெரிய மனுஷன மொதல்ல அடிக்கணும் ச்சே!’ என்று உள்ளுக்குள் குமுறிக்கொண்டான் யுவன்.
அடுத்தடுத்தென்று சில சடங்குகளும் ஆரம்பிக்க, அறைக்குள் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகமாக தயாராகிக்கொண்டிருந்தாள் அகல்யா.
“ஏய் அகல், கொஞ்சமாச்சும் சிரிடீ! மாப்பிள்ளை உனக்காக பட்டணத்துலயிருந்து மேக்கப் ஆர்டிஸ்ட்ட கொண்டு வந்திருக்காரு. இப்படியொரு வாழ்க்கை யாருக்கும் அமையும்?” என்று அவளின் தோழிகளில் ஒருத்தியான ஆர்த்தி சிலாகித்து சொல்ல, அகல்யாவோ அவளை வெறுமை நிறைந்த ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
அந்த பார்வையிலிருந்த வலியை உணர்ந்த அகல்யாவின் நெருங்கிய தோழி துர்காவோ ஆர்த்தியை முறைத்துவிட்டு எதேர்ச்சையாகத் திரும்ப, அங்கு தன்னை கண்ணாடியில் பார்ப்பதும் திரும்பி அகல்யாவை பார்ப்பதுமாக தடுமாறிக்கொண்டிருந்த மித்ராதான் அவள் விழிகளில் தென்பட்டாள்.
“அங்க பாருடீ அகலு, உன் கல்யாணத்துல கூட உன்ன விட அவ அழகா இருக்கணும்னு எம்புட்டு வேலை பார்க்குறா.. இவ நெஜமாவே உன் அக்காதானா!”
என்று துர்கா எரிச்சல் மண்டிய குரலில் கேட்க, அப்போதுதான் மித்ராவை கவனித்த அகல்யாவுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது.
அவள் பக்கென்று சிரிக்க, திடீரென அவளின் புன்னகையை முடக்குவது போல கதவு தட்டப்பட்டது.
மித்ராவோ வேகமாகச் சென்று கதவைத் திறந்து தன் முன்னால் நின்றிருந்தவரை அதிர்ந்துப் பார்த்துவிட்டு அகயல்யாவை பார்த்து சிரித்தாள்.
அவளுக்கோ தன் அக்காவின் சிரிப்பிற்கான காரணம் சுத்தமாகப் புரியவில்லை.
“யாரு மித்து?” என்று கேட்டுக்கொண்டே வந்த அகல்யாவும் வாசலில் நின்றிருந்தவரை புருவத்தை நெறித்து புரியாமல் பார்த்தாள்.
திருமணத்தை பேசி முடித்த நாளிலிருந்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை ஒரு தடவையாவது அவள் பார்த்தால்தானே!
கிட்டத்தட்ட நாற்பதை தொடவிருக்கும் அந்த புது மாப்பிள்ளை சண்முகமோ அவளைப் பார்த்து வெட்கப்பட்டு சிரிக்க, அவர் பார்வைக்கான அர்த்தம் புரியாமல், “சொல்லுங்க அங்கிள், என்ன வேணும்?” என்று கேட்டாள் அவரை பரிதாபமாக பார்த்தபடி.
அவளின் அழைப்பில் சண்முகத்திற்கு முகம் அவமானத்தில் கறுத்துவிட்டது.
அவனோ அவளை எரிச்சலாக ஒரு பார்வைப் பார்க்க, தன் தங்கையின் செயலில் வெளிப்படையாக தலையிலடித்துக்கொண்டாள் மித்ரா.
“என்ன அகலு அங்கிள்னு சொல்ற.. கட்டிக்க போறவரோட ஃபோட்டோ கூட நீ பார்க்கலையா?” என்று முழங்கையால் அவளை இடித்து கடிந்துக்கொண்டவள், “ஏய் வாங்கடீ போகலாம், அவங்க தனியா பேசிக்கட்டும்” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற, அகல்யாவின் தோழிகளும் வேறு வழியில்லாமல் அவள் பின்னாலேயே சென்றனர்.
அடுத்தகணம் அறைக்குள் நுழைந்து அவன் கதவைத் தாழிட, அகல்யாவுக்கு அருவருப்பா அசௌகரியமா என்று என்ன உணர்வென்றே தெரியாத ஒரு நிலை.
அவனை பார்ப்பதை விட்டு அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “ஹெலோ அகல்யா, நான்தான் சண்முகம்” என்று அவளை நெருங்கியபடி சொன்னான் அவன்.
அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தவள், “எதுன்னாலும் கல்யாணத்துக்கப்பறம் பேசிக்கலாம், த.. தயவு செஞ்சு வெளியில போங்க” என்றாள் திக்கித்திணறி.
அவளுடைய உடல் நடுக்கமும் தடுமாற்றமும் ஏனோ அவனை மயக்க, அவனுடைய பார்வை எல்லை மீறியது.
கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவளை மேலும் நெருங்கி, “கல்யாணத்துக்கப்பறம் என்ன அகல்யா பேச இருக்கு, அப்பறம் செயல்லதான் பேச்சே..” என்று நா கூசாமல் பேசிவிட்டு அவளை பார்க்க, அவனை அருவருக்கும் பார்வைப் பார்த்தாள் அவள்.
சண்முகமோ அவளின் பார்வையை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவளை நெருங்க, இருவரின் ஜோடிப் பொருத்தமோ குரங்கு கையில் பூமாலை போலத்தான் இருந்தது.
“மாமா சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன், நீ ஒன்னும் யோசிக்காத அகல் கண்ணு! விவாகரத்துக்கு போட்டாச்சு, சீக்கிரம் விவாகரத்து கிடைச்சிடும். அதுக்கப்பறம் அவ பக்கமும் போக மாட்டேன்” என்று அவன் பேசிய வார்த்தைகளுக்கான அர்த்தம் அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
“யா.. யார விவாகரத்து?, நீங்க என்ன சொல்றீங்க?” அவள் புரியாமல் கேட்க, “என் மொத பொண்டாட்டி, என்ன தெரியாத மாதிரி கேக்குற?” என்றானே அவன் சாதாரணமாக.
அகல்யாவுக்கு தலையில் பெரிய இடியாய் இறக்கியது போலிருந்தது.
தலையைத் தாங்கிக்கொண்டு அவள் அப்படியே அமர்ந்துக்கொள்ள, அடுத்த இரண்டு நிமிடங்களில் உள்ளே என்ன நடந்ததோ!
கதவைத் திறந்து வெளியே வந்தவனின் முகம் சிவந்து இறுகிப்போய் இருக்க, சரியாக தகவலறிந்து அகல்யாவைத் தேடி வந்தான் யுவனாதித்.
அவனைப் பார்த்ததுமே யுவனுக்கு பிபி எகிறியது.
“நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று அவன் காட்டமாகக் கேட்க, பதில் பேசாமல் நகர்ந்துச் சென்றான் மற்றவன்.
இவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
புருவ முடிச்சுகளோடு உள்ளே சென்றவன், கைகளைப் பிசைந்தபடி அறைக்குள் பதற்றமாக நின்றிருப்பவளைப் பார்த்து “அகலு, அவன் ஏதாச்சும் சொன்னானா, உனக்கு ஒன்னு இல்லையே?” என்று கேட்டான் அவளுக்கும் மேல் பதற்றத்தோடு.
“அது.. அது ஒன்னு இல்ல மாமா” என்று அகல்யா சொல்லிவிட்டு திரும்பிக்கொள்ள, அவள் முன்னே சென்று நின்றவன் அவள் நெற்றியில் கழுத்தில் என யோசனையோடு புறங்கையை வைத்துப் பார்த்தான்.
“உடம்பு சூடா இல்ல, நல்லாதான் இருக்க. அப்பறம் ஏன் உன் முகமே ஒரு மாதிரியா இருக்கு. என்கிட்ட மறைக்காத அகல், அந்த ஆளு என்ன சொன்னான்?” அவனுடைய வார்த்தைகள் கோபத்தோடு வர, பெண்ணவளோ அவனையே இமை வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
யுவனுக்கும் அவள் பார்வையிலிருந்த வித்தியாசம் புரியாமலில்லை.
ஏக்கம் வலி என ஏதோ ஒன்றை அவள் விழிகள் அவனுக்கு உணர்த்த முயற்சிக்க, ஆடவனும் ஒருகணம் சிலையாகித்தான் போனான்.
உடனே தன் பார்வையைத் திருப்பிக்கொண்டவன், “அது.. அது வந்து.. சீக்கிரம் ரெடியாகு! ஏதாச்சும் பிரச்சனைன்னா என்னை கூப்பிடு” என்றுவிட்டு வெளியேறிவிட, தொப்பென்று இருக்கையில் அமர்ந்தவளுக்கு விழிகளிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.
இத்தனை நாட்கள் தனக்குள்ளே அனைத்தையும் புதைத்து வைத்திருந்தவளுக்கு நேரம் நெருங்க நெருங்க தன் உணர்வுகளை மறைப்பது என்னவோ பெரும் பாடாகத்தான் இருந்தது.
அடுத்த கொஞ்ச நேரத்தில் திருமணத்திற்காக மண்டபம் தயார் செய்யப்பட்டு ஹோமகுண்டத்தின் முன்னே அமர்ந்திருந்தான் சண்முகம்.
புரோகிதரோ மந்திர வார்த்தைகளை சொல்லி ஆரம்பிக்க, சொந்தபந்தங்களும் மண்டபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கூடத் தொடங்கினர்.
யுவனுக்கு என்னவென்று புரியாத ஒரு உணர்வு.
அவன் மனம் எதையோ உணர்த்துவது போல அவனுக்கு உறுத்திக்கொண்டிருக்க, நெற்றியை நீவி விட்டவாறு நின்றிருந்தவனுக்கு மித்ரா அழைத்த அழைப்புக்கள் கூட காதில் விழவில்லை.
“மாமா… யுவா…” அவள் அழைத்து களைத்துப் போய் அவனை உலுக்கப் போக, திடீரென “யுகன்…” என்ற ஒருவரின் குரலில் பதறியபடி திரும்பிப் பார்த்தான்.
அங்கு ஒரு பெண் ஓடும் தன் குழந்தையை, “டேய் யுகா நில்லு.. யுகா..” என்று அழைத்த வண்ணம் துரத்திக்கொண்டிருக்க, யுவனாதித்தனின் முகம் அப்பட்டமான வலியை பிரதிபலித்தது.
அதைக் கண்டுகொண்ட மித்ரா அவன் கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுத்து, “நீங்க ஓகேதானே மாமா?” என்று கேட்க, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு வரவழைக்கப்பட்ட புன்னகையோடு தலையாட்டினான் யுவனாதித்தன்.
அவன் நடப்புக்கு வந்ததை உணர்ந்தவள் கைகளைப் பிசைந்தபடி, “மாமா நா.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணு.. அது…” என்று ஏதோ சொல்ல வர, அவனோ அவள் இதழில் விரல் வைத்து அவள் சொல்ல வந்ததை தடுத்தான்.
“நீ என்ன கேக்க போறேன்னு புரியுது மித்து, நமக்கு எப்போ கல்யாணம்னு தானே! ஊருக்கு போனதுமே சீக்கிரம் எனக்குன்னு ஒரு வேலைய தேடிக்கிறேன், அப்பறம் நம்ம கல்யாணத்துக்காக பணத்த ஒதுக்கணும், முடிஞ்சளவுக்கு லோன் பக்கம் போகாம சிம்பிளா நம்ம கல்யாணம் நடக்கணும்”
அவன் சொல்லிக்கொண்டே போக, அவள் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை.
எதையோ தீவிரமாக யோசித்தபடி நின்றிருந்தவள், “புரியுது..” என்று மட்டும் சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலகிப் போக, அவள் முகம் போன போக்கை அவனும் கவனிக்காது தான் போனான்.
சரியாக மாப்பிள்ளையை அழைப்பதற்கான நேரமும் வர, மணமகன் அறைக்கு முன் ஒரே சலசலப்பு.
இங்கு வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்த முத்துப்பாண்டியும் சங்கரபாண்டியும் சலசலப்பு வந்த திசையை புரியாமல் பார்த்துவிட்டு அத்திசைக்கு விரைய, மறுகணம் அதிர்ந்துவிட்டனர்.
“என்ன மாப்பிள்ளை இப்படி இருக்கீங்க, முகூர்த்த நேரம் நெருங்கிருச்சு. இன்னும் ரெடியாகாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று முத்துப்பாண்டி கேட்க, சண்முகமோ எந்த பதிலும் சொல்லவில்லை.
அவனுடைய சொந்தங்களும் கேட்டு கேட்டு களைத்துப் போய் பதில் வராத கடுப்பில் நின்றுக்கொண்டிருக்க, தன் பொருட்களை எடுத்துக்கொண்டவன், “இந்த கல்யாணம் நடக்காது, வாங்க போகலாம்” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
முத்துப்பாண்டிக்கு தூக்கி வாரிப்போட்டது.
“கல்யாணம் நடக்காதுன்னா என்ன அர்த்தம், தாலி கட்டுற நேரம் வரைக்கும் வந்தாச்சு, அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி யோசிக்காம நீங்க பண்றது சரியா? இந்த கல்யாணத்துக்காக எம்புட்டு செலவு பண்ணியிருப்போம். மரியாதையா பதில் சொல்லிட்டு போங்க..”
சங்கரபாண்டி குடும்ப கௌரவத்திற்காகப் பேச, சண்முகமோ அவரை அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்தான்.
நா நுனி வரை சொல்ல வந்ததை சொல்லாமல் விழுங்கிக்கொண்டவன், “அந்த பொண்ணு உடுத்திருக்குற சேலையில இருந்து மண்டபம் வரைக்கும் என் காசுதான். நானே அதை பத்தி யோசிக்காதப்போ உங்களுக்கு எதுக்கு.. ஒழுங்கா கெளம்புற வழிய பாருங்க” என்றுவிட்டு தன் சொந்தங்களை அழைத்துக்கொண்டு செல்ல, நடப்பது புரியாமல் விதிர்த்துப் போய் நின்றிருந்தார் முத்துப்பாண்டி.
“டேய் யுவா, மாப்பிள்ளை கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு குடும்பத்தோட கெளம்புறாரு. சீக்கிரம் போய் ஏதாச்சும் பண்ணு..” என்று சாரதா பதற்றப்பட, யுவனுக்கு மனதிலிருந்த ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போலத்தான் இருந்தது.
‘அப்பாடா!’ என்று அவன் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ள, மேகலையோ பொன்னியின் முகத்தைதான் உற்று உற்று கவனித்துக்கொண்டிருந்தார்.
“என் பொண்ணு வாழ்க்கை போச்சே! அய்யோ… இப்போ நான் என்ன பண்ணுவேன்..” என்று ஒரு பக்கம் முத்துப்பாண்டி வேதனையில் கத்தினாலும், பொன்னியின் முகத்தில் மட்டும் பதற்றத்திற்கான அல்லது வருத்தத்திற்கான சாயல் கொஞ்சமும் இல்லை.
அப்போதுதான் மித்ரா விடயத்தை சொல்லி அகல்யாவை எல்லார் முன்னும் அழைத்து வர, மகளின் கரத்தைப் பற்றி வேதனையில் குமுறினார் முத்துப்பாண்டி.
“மண்டபம் வரைக்கும் வந்து உன் கல்யாணம் நின்னு போச்சேம்மா.. இனி எவன்ம்மா உன்னை கட்டிப்பா! கடவுளே… ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைய கொடுத்த?” அவர் கிட்டத்தட்ட அழுதேவிட, வந்திருந்த சொந்தபந்தங்களும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர்.
“இந்த பொண்ணோட ராசி அப்படி! எதுவும் வெளங்காது..”
“இப்படியொரு மாப்பிள்ளையே இவள வேணாம்னு விட்டிருக்கான்னா இனி எவன் கட்டிக்க போறான்?”
“அப்பன்காரன் கொஞ்சமாச்சும் தானதர்மம் பண்ணி உதவியிருந்தா கடவுள் ஏதாச்சும் நல்லது வச்சிருந்திருப்பாரு.. அவனே கஞ்சனாச்சே! அவனுக்கு தேவைதான்”
ஊர் மக்கள் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேச, இறுகிய முகமாக தரையை வெறித்திருந்தாள் அகல்யா.
விழிநீர் விழவா வேண்டாமா என்பது போல நுனியில் நின்றுக்கொண்டிருக்க, “அகலுக்கு இருக்குற ஒரே முறை மாமன்னா அது யுவன்தான், அவங்களா மனசு வச்சா ஏதாச்சும் நல்லது நடக்கும்” என்றார் பொன்னி சட்டென்று
மொத்தப் பேரும் அவரை திடுக்கிட்டுப் பார்க்க, யுவனாதித்தனும் இத்தகைய வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை.
“பொன்னி, என்ன பேசுற நீ? தெரிஞ்சுதான் பேசுறியா” என்று முத்துப்பாண்டி அதட்ட, “நான் என்னங்க தப்பா சொல்லிபுட்டேன், யுவா இவளுக்கு முறைமாமன்தானே, இப்படியொரு சூழ்நிலையில அவன் வாழ்க்கை கொடுக்க மாட்டானா என்ன! நாம சினிமாவுல பார்க்காததா என்ன..” என்று தைரியத்தை வரவழைத்து கேட்டார் பெரியவர்.
இப்போது அவர் கணவரின் பார்வையும் யுவனின் புறம் திரும்ப, மித்ரா ஏதோ பேச வாயெடுக்கும் முன் கத்த ஆரம்பித்துவிட்டார் சாரதா.
“இதெல்லா கொஞ்சம் கூட நல்லா இல்ல, இதென்ன சினிமாவா? அவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழுற வாழ்க்கைதானே நல்லா இருக்கும். ஒரே பாட்டுல எல்லாம் புருஷன் பொண்டாட்டி ஆகிற முடியாது. அதுமட்டுமில்லாம யுவாக்கு மித்ராதான் மனைவியா வர போறா.. அண்ணனுக்கு கூட தெரியும். கூடிய சீக்கிரம் அவங்களுக்கு நிச்சயதார்த்தம் வைக்கிறதுக்கு முடிவு பண்ணியிருக்கோம்.
எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு புள்ளைங்களோட மனச கலைக்க பார்க்குறீங்களா.. கொஞ்சம் டுபாய்ல வேலை பார்த்துட்டு வந்துட கூடாதே டுபாய் மாப்பிள்ளைக்கு ஆசைப்பட வேண்டியது.. க்கும்!”
பேச வேண்டியதை பேசி முடித்து முகவாயை தோளில் இடித்தபடி அவர் நொடிந்துக்கொள்ள, யுவனாதித்தனோ எதுவும் பேசவில்லை, அமைதியாக நின்றிருந்தான்.
அவனுடைய பார்வையோ மித்ராவின் மீதே நிலைத்து நின்றிருந்தது.
அவளோ யுவனின் பார்வையை எதிர்கொள்ள மறுத்து தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நின்றிருக்க, அவள் முகத்தில் கொஞ்சமும் பதற்றத்தை காணாது குழம்பிப் போனான் யுவனாதித்தன்.
-Sheha zaki
