நிவேதாவும் நிரஞ்சனும் ஊரில் இருந்து திரும்பி வந்த மறுநாள் வீர்யா பெரிய பெண் ஆகி இருந்தாள். பெரிய அளவில் விசேஷத்தை செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை. எனினும் ஊரில் இருந்து வீர்யாவின் பாட்டி தாத்தா மாமா அத்தை என்று அனைவரும் வந்திருந்தார்கள். மணிமேகலை, பத்தும்மா இன்னும் அக்கம் பக்கம் இரண்டு வீடுகள் என்று ஒரு சிறிய விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
Advertisement
மணிமேகலை நிவேதாவிற்கு மிகவும் உதவியாக இருந்தார். உடன் பிறந்த சகோதரி போல துணை நின்றார். வராஹி வீர்யாவுடன் தான் இருந்தாள். ஒவ்வொரு பெண்ணும் பருவம் எய்தும் சமயத்தில் தாயை தானே தேடுவாள். மணிமேகலைக்கு வராஹியை நினைத்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. வராஹியிடம் பக்குவமாய் இப்பொழுதே சொல்லி வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
அன்று இரவு ஒரு அன்னையாய் அண்ணன் மகளிடம் பேசினார். “ஒவ்வொரு பெண்ணுக்கும் இது நடப்பது இயற்கை வரா.. நீ அதுக்காக எல்லாம் பயந்துக்க கூடாது. அந்த சமயத்துல அத்தைகிட்ட சொல்லணும் சரியா”
Advertisement
Advertisement
“எனக்கு பயம் எல்லாம் இல்லை அத்தை. வீர்யா என்கிட்டே இதை பத்தி சொல்லி இருக்கா அத்தை.. ஸ்கூல்ல கூட எங்க மிஸ் சொல்லி இருக்காங்க”
“சரி டா.. நானும் சொல்லி வைக்கணும் இல்ல..அதான். சரி வா தூங்கலாம் “
Advertisement
அதானே, வீர்யாவை விட வாராஹியை யாரால் பார்த்துக்கொள்ள முடியும்.. மணிமேகலைக்கு எப்பொழுதும் இவர்கள் நட்பு பெரும் ஆச்சர்யமாக இருக்கும். ஒரே வயது பெண்கள் தான் இருவரும். ஆனால் எப்பொழுதும் வீர்யா வராஹியை நட்பென்னும் சிறகுகளுக்குள் பொத்தி வைத்து பாதுகாப்பது போல தோன்றும் மணிமேகலைக்கு.
இந்த கொண்டாட்டத்தில் பத்தும்மா கொடுத்த ஒரு வாரம் கெடுவை பற்றி மணிமேகலை மறந்தே போயிருந்தார்.
வந்தியத்தேவனோ மணிமேகலையுடன் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.
அன்று காலை வந்தியத்தேவன் பத்தும்மாவிடம்,
“அம்மா இந்த வாரம் டாக்டரை பார்க்க போகணும் இல்ல.. நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கவா?” என்றார்.
“இது எல்லாம் நியாபகம் இருக்கு, நான் கேட்டதை செய்ய மட்டும் நியாபகம் இல்ல இல்ல உனக்கு?”
“என்னம்மா நீங்க இரண்டு பேத்தியும் ஒரு பேரனும் வேணும்னு கேட்டா அது உடனே வருமா? எல்லாத்தையும் ஒன்னுக்குள்ள ஒன்னு போட்டு குழப்பக்கூடாது.. நம்ம டாக்டரை பார்க்கிறதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“நான் ஏற்கனவே நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் புக் பண்ணிட்டேன்”
“ஓ”
“என்னடா ஓ? நான் சொன்ன விஷயம் என்னாச்சு?”
“இல்லம்மா எப்படி சொல்றது.. எப்ப சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. தனியா சந்திக்கிற மாதிரி சந்தர்ப்பம் வர்றதுக்காக காத்திட்டு இருக்கேன்..”
“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..” ன்னு பாட்டு பாடிகிட்டு உட்கார வேண்டியது தான்.
“எதுக்கு ம்மா இப்படி அவசரப்படறீங்க? கொஞ்சம் பொறுமையா கூட டீல் பண்ணலாமே..”
“என்னமோ எனக்கு இந்த விஷயத்துல பொறுமையா இருக்க முடியல தேவ்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே,
“பத்து…பத்து..” கீழே இருந்து மணிமேகலை அழைக்கும் குரல் கேட்டது.
“இருங்க ம்மா நான் போய் என்னன்னு கேட்குறேன்..” என்று வேகமாக வந்தியத்தேவன் சென்று,
“என்ன மேகா?” என்றார் மாடியில் இருந்து கீழ் நோக்கி.
‘என்னமோ என்னை பொறுமையா இருக்கலாமேன்னு சொல்லிட்டு இவன் என்ன இந்த ஓட்டம் ஓடறான்’ என்று வந்தியத்தேவனுக்கு கேட்கும்படி முனுமுனுத்து கொண்டே அவரும் எழுந்து வந்தார்.
“காய் வாங்க போறேன்.. பத்துக்கு என்ன வேணும்ன்னு கேட்டு சொல்லுங்க”
அதற்குள் பத்தும்மாவும் வெளியே வந்துவிட்டார்.
“இப்ப தான் மேகா என்ன வேணும்னு தேவ் கிட்ட சொல்லி இருக்கேன். அவன் சொல்லுவான்.. நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறேன்”
“டேய் எனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டேன்.. அவ கிட்ட நீயே சொல்லிடு” என்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.
“உங்க கிட்ட சொல்லிட்டாங்களா? நீங்களும் காய் வாங்க தான் போறீங்களா? நானே வாங்கிட்டு வர்றேன்.. சொல்லுங்க பத்துக்கு என்ன வேணுமாம்”
வந்தியத்தேவனுக்கு சிரிப்பாக வந்தது. மாடியில் இருந்து சத்தமாக அவர் அம்மாக்கு என்ன வேணும்னு சொல்ல முடியுமா? “இந்த அம்மாவோட..”
“எதுக்கு தேவ் கார்ல.. தெருமுனையில் தானே கடை இருக்கு?”
“இல்ல நாம் மார்க்கெட் போகலாம்”
பக்கத்தில் தானே என்று சாதாரண உடையில் இருந்தவர், வேறு உடைக்கு மாற வேண்டுமா என்று தன்னையே குனிந்து பார்த்துக்கொண்டார் மணிமேகலை.
“இந்த டிரஸ் நல்லா தான் இருக்கு.. மார்க்கெட் போனாலும் அங்கேயும் காய்கறி தானே வாங்கபோறோம். வா மேகா ..”
இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.
“பசங்க ஸ்கூல் போயாச்சா?” என்று பேச்சை ஆரம்பித்தார் வந்தியத்தேவன்.
“கிளம்பிட்டாங்க.. இன்னிக்கு தான் வீர்யா ஒரு வாரம் கழிச்சு ஸ்கூலுக்கு போறா.. அதனால வரா இன்னிக்கு தான் ஹாப்பியா ஸ்கூல் போறா..”
“ரெண்டு பேரும் நல்ல ப்ரண்ட்ஸ் இல்ல..”
“நல்ல இல்ல.. ரொம்ப ரொம்ப நல்ல.. எனக்கு கூட அவங்களை பார்த்து ஒரு சமயம் பொறாமையா இருக்கும்..”
“நீயும் எங்க அம்மாவும் கூட தான் க்ளோஸ்ஸா இருக்கீங்க”
“ஆமா தேவ்.. என் வாழ்க்கையில எனக்கு கிடைத்த பெஸ்ட் ப்ரண்ட் பத்து தான்..”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன? நம்ம வீட்டுக்கிட்டவே காய் நல்லா தான் இருக்கும்.. எதுக்கு இவ்வளவு தூரம் வரணும்?”
“உன் கூட கொஞ்சம் பேசணும் அதான்..”
மணிமேகலை முகத்தில் மென்முறுவல்.. சின்ன பதட்டம்..
“நான் என்ன பேசப்போறேன்னு எனி கெஸ் மேகா?”
“ஓரளவுக்கு நிச்சயமாவே தெரியும்.. சொல்லுங்க..”
“தெரியும்னா நான் கேட்காமலே கேள்விக்கான பதிலை சொல்லாலமே..”
“எனக்கு இது ஒரு வித கனவு.. சின்ன வயசுல என்கிட்ட யாராவது இப்படி கேட்க மாட்டாங்களானு சில சமயம் ஏக்க பட்டிருக்கேன்..”
வந்தியத்தேவன் பதில் சொல்லாமல் புன்னகைத்து கொண்டார்.
இருவரும் காரை பார்க் செய்துவிட்டு இறங்கி மார்கெட்டுக்குள் நடக்க தொடங்கினார்கள்.
“நான் இது வரைக்கும் யார்கிட்டயும் இப்படி சொன்னது இல்ல மேகா.. அதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு..”
இப்பொழுது மணிமேகலை பதில் சொல்லாமல் புன்னகைத்து கொண்டார்..
வந்தியத்தேவன் முதலில் வெங்காயம் வாங்க செல்ல திரும்ப, “கடைசியா வெங்காயம் வாங்கிக்கலாம்.. இல்லனா வெயிட் தூக்கிட்டே நடக்கணும்..” என்றார் மணிமேகலை.
“ஓ.. சரி.. “
“உங்களுக்கு காய் எல்லாம் வாங்க தெரியுமா?”
“இதுல தெரிய என்ன இருக்கு.. சின்ன வயசுல அப்பா கூட மார்க்கெட் போயிருக்கேன்.. அப்பா கூட காய் வாங்க போறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்பா பார்த்து பார்த்து காய் வாங்குவாங்க. ஆனாலும் நாங்க வாங்கிட்டு வர காய் எல்லாம் ‘சரி இல்லை’ன்னு அம்மா வேணும்னே குறை சொல்லுவாங்க..
உனக்காக போய் வாங்கிட்டு வந்தேன் பாரு.. இனிமே நீயே வாங்கிக்கோன்னு அப்பா கோவிச்சுப்பாங்க.. ஆனா மறுபடியும் அப்பா தான் காய் வாங்க போவாங்க..”
அப்பொழுது குண்டு குண்டாய் அவர் கவனத்தை ஈர்த்தது மஞ்சள் பூசணிக்காய். அதில் செய்யும் அல்வா அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.
“மேகா, அங்கே பாருங்க மஞ்ச பூசணிக்காய்.. அது வாங்குவோம்..” என்று வேகமாக அந்த கடை நோக்கி சென்றார்.
ஒரு முழு பூசணிக்காயை எடுத்து பார்த்தார்.
“இவ்வளவு பெருசா.. கட் பண்ணி வாங்கிப்போம் தேவ்..”
“இருக்கட்டும் முழுசாவே வாங்கிப்போம்..” என்று கூறி அந்த கடைக்கார பெண்மணியிடம், “அக்கா நல்ல இனிப்பா இருக்கிற காயை பார்த்து எடுத்து கொடுங்க” என்றார்.
“இந்தாங்க தம்பி.. இதை எடுத்துக்கோங்க.. நறுக்கினீங்கனா மாம்பழம் கணக்கா தித்திப்பா இருக்கும்..எங்க தோட்டத்துல விளைஞ்ச காய் தம்பி” என்று அவரே ஒரு காயை கொடுத்தார்.
நான்கு ஐந்து கிலோ எடை இருக்கும்..
அதை வாங்கிக்கொண்டு திரும்பி கொஞ்ச தூரம் சென்றதும்,
“மேகா.. நாம சேர்ந்து இனி ஒன்னா ஒரு வாழ்க்கையை வாழ்வோமா? நல்லது கெட்டது அனைத்திலும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா கை கோர்த்து நடப்போமா? நாம ரெண்டு பேரும் இப்படி காலம் பூரா சேர்ந்து ஒன்னா காய் வாங்க வரலாமா?” கேட்டுக்கொண்டே கையில் இருந்த மஞ்ச பூசணியை மணிமேகலையிடம் கொடுத்தார்.
மணிமேகலை முகத்தில் அழகான புன்னகை பூத்தது.. கொஞ்சம் கொஞ்சமாக அந்த புன்னகை மலர்ந்து விரிந்தது.
‘காய்கறி மார்க்கெட் நடுவில், கையில் பூசணிக்காயை கொடுத்து இப்படி யாருமே ஒரு ப்ரோபோசல் செய்திருக்க மாட்டாங்க.. நல்லா வளர்த்து வச்சிருக்காங்க பத்தும்மா பிள்ளையை’ என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.
“என்ன மேகா, பதில் சொல்லாமல் சிரிச்சிட்டே வர்றீங்க.. உங்களுக்கு எப்படி உங்க கிட்ட நானே சொல்லணும்னு ஆசை இருந்துச்சோ எனக்கும் உங்க வாயால பதில் கேட்கணும்னு ஆசையா இருக்கும் தானே..”
மணிமேகலை நின்று வந்தியத்தேவனை திரும்பி நேருக்கு நேர் பார்த்தார்.
“எனக்கு சம்மதம் தேவ்.. மனப்பூர்வமான சம்மதம்..”
தெளிவாக.. தைரியமாக.. திடமாக.. தீர்க்கமாக.. தனது பதிலை கூறினார் மணிமேகலை.
அதன் பிறகு பேசாமலே நடந்தனர்.. கண்ணில் பட்ட காய்கறிகளை எல்லாம் வாங்கி கொண்டார்கள். பூசணிக்காயை மட்டும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்த படி மணிமேகலை கையில் வைத்திருந்தார். மற்ற காய்கறிகள் நிறைந்த பைகளை வந்தியத்தேவன் பிடித்துக்கொண்டார்.
“மேகா.. இந்த காய் எல்லாம் சமைச்சு முடிக்கவே ஒரு மாசம் ஆயிடும்.. போதும் வா கிளம்புவோம்” என்றார் கைகளில் இருந்த பைகளை காட்டி.
“ஆமா, பத்து என்ன வேணும்னு உங்க கிட்ட சொன்னதா சொன்னாங்களே.. அதை வாங்கிட்டோமான்னு மட்டும் பார்த்துக்கோங்க.. கிளம்புவோம்..”
“அவங்க என்ன கேட்டாங்கன்னு தெரியுமா?”
“என்ன கேட்டாங்க? எதுவா இருந்தாலும் இந்த மார்க்கெட்ல கிடைக்கும் போலயே..”
“அது எல்லாம் இங்க கிடைக்காது. நீ வா நான் கார்ல போகும் போது சொல்றேன்”
“அப்படி என்ன கேட்டிருப்பாங்க “ என்று மணிமேகலை யோசித்து கொண்டே வந்தார். வில்லங்கமா தான் எதாவது கேட்டிருப்பாங்க என்றும் நினைத்துக்கொண்டார் தோழியாய்.
காரில் ஏறியதும்,
“அவங்ககுக்கு இரண்டு பேத்தியும் ஒரு பேரனும் வேணுமாம்..”
“ஆங்.. மூனா?”
என்று வாய் பிளந்து அமர்ந்து விட்டார் மணிமேகலை..
அந்த அழகில் சொக்கி தான் போனார் வந்தியத்தேவன்.
“என்ன மேகா.. உன் பத்து கேட்டதை சொன்னதும் இப்படி பேசாமலே வர?”
“அது வந்து.. மூனு கொஞ்சம் அதிகமா தெரியல?”
“ஏற்கனவே ஒரு பேரன் ஒரு பேத்தியா, வராஹி வல்லபன் ரெண்டு பேர் இருக்காங்க.. இன்னும் ஒன்னு தானே.. அதுக்கு எதுக்கு இந்த ஷாக்..”
“தேவ்..” அதற்கு மேலே மணிமேகலைக்கு பேச்சே வரவில்லை.
கண்கள் கலங்கியது.. கைகள் லேசாக நடுங்கியது.. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு போனார்..
‘எத்தனை நல்ல மனிதர்கள் பத்துவும் தேவ்வும்.. இவர்கள் என் வாழ்க்கைல வர தான் இத்தனை வருஷம் கடவுள் என்னை காத்துட்டு இருக்க வைச்சாரோ?’
“எதுக்கு இவ்வளவு ஷாக்.. நீ எங்களை பத்தி என்ன நினைச்சிட்டு இருந்த?”
“நீங்க அவங்களை நம்ம கூட வச்சுக்க எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டீங்கனு எனக்கு தெரியும்.. அதான் நான் மனப்பூர்வமான சம்மதம் சொன்னேன்.. ஆனா இப்படி உரிமை உறவு ரெண்டும் கொடுத்து ஏத்துப்பீங்கன்னு நான் நினைக்கலை..”