Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 20 – part 1

அத்தியாயம் 20

மணிமேகலைக்கு கல்லூரி செல்ல எந்த தயக்கமும் இருக்கவில்லை. ஐந்தாம் மாதம் வரை அவருக்கு வயிறும் பெரிதாக தெரியவில்லை. அவர் திருமணம் ஆனவர் என்று அங்கு  உள்ள அனைவருக்கும் தெரியும் என்பதால் யாரும் பெரிதாக எந்த கேள்வியும் கேட்கவில்லை. உடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் உறுதுணையாகவே இருந்தனர்.



Advertisement

முதல் மூன்று செமஸ்டர்களை முடித்துவிட்டார். அதில் மணிமேகலை தான் கல்லூரியில் முதல் மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

ஆனால் மணிமேகலை காதில் புகை வரும் விஷயம் ஒன்றே ஒன்று தான். அது காலையிலும் மாலையிலும் மணிமேகலையை பிக்கப் ட்ராப் செய்ய வரும் வந்தியத்தவனை அனைத்து பெண்களும் சைட் அடிப்பது மட்டும்தான். குழந்தை பிறந்ததும் ஒரு செமஸ்டர் வீட்டில் இருந்து படித்து எக்ஸாம் மட்டும் எழுதுவதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

Advertisement

Advertisement

கல்லூரியில் இருந்து அன்று வீடு திரும்பும் சமயம், மணிமேகலைக்கு கைப்பேசியில் அழைத்திருந்தார் பரிமளா.

போனை காரில் உள்ள ஸ்பீக்கரில் தான் கநெக்ட் செய்திருந்தார்.

Advertisement

“மணி காலேஜ்ல இருந்து கிளம்பிட்டியா?”

“ஆமா ம்மா.. தேவ் கூட கார்ல தான் போய்ட்டு இருக்கோம்”

“மாப்பிள்ளை பாவம் மணி.. அவருக்கு தான் அலைச்சல்..”

தேவ் அதிகம் அவருடன் பேச மாட்டார். சுந்தர்ராஜனிடம் நன்றாக பேசுவார்.

“இந்த மாசம் செக்கப் எப்ப மணி? நாங்க நாளைக்கு போறோம்”

“நாங்க சனி கிழமை தான் போறோம் ம்மா.. சாம்பவி எப்படி இருக்கா? நாளைக்கு அவளுக்கு லீவ் இருக்காதே?”

“லீவ் எல்லாம் பார்க்க முடியுமா?  ஜோசியர் வியாழக்கிழமை வைத்தியரை பார்க்க போனா தான் வில்லங்கம் இல்லாம குழந்தை லட்சணமா பொறக்கும்னு சொன்னதா சாம்பவியோட அப்பா சொன்னாரு”

“என்ன கதை ம்மா இது? இப்படி கூட ஊரை ஏமாத்திட்டு இருக்காங்களா? நீங்க எதுக்கு ம்மா இதுக்கு எல்லாம் துணை போறீங்க?”

“நீ வேற ஏன் மணி.. நல்ல லட்சணமா குழந்தை பொறக்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனாலும் நான் இந்த மாதிரி மூடநம்பிக்கை எல்லாம் நம்புவேனா?”

“உங்களை எல்லாம் திருத்த முடியாது.. பாவம் சாம்பவி “

“நீயும் உங்க அப்பாவும் எப்பவுமே நான் என்னமோ ரொம்ப கெட்ட எண்ணம் உள்ள வில்லி மாதிரியே பேசுவீங்க.. குழந்தை நல்லபடியா லட்சணமா பொறக்கணும் நினைக்கிறது தப்பா.. நான் என்ன சில பேர் மாதிரி பையன் தான் வேணும் பொண்ணு வேணாம்னு சொல்றேன்னா?”

“திரும்ப திரும்ப லட்சணமான்னு ஏன் ம்மா சொல்றீங்க? ஒரு வேளை பொறக்க போற குழந்தை என்னை மாதிரி பொறக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா?”

“—————-”

இந்த நேரடி கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை.. ஒரு நிமிடமே தடுமாறினார். பின் சுதாரித்து,

“நான் உனக்கு அம்மா மணி.. பெத்தவ எங்கயாவது அப்படி நினைப்பாளா.. பொறக்க போற குழந்தையை பத்தி பேசுனா நீ எதுக்கு சம்பந்தமே இல்லாம  பேசுற.. இதுல நீ எங்க இருந்து வந்த?”

“நீங்கதான் ஒவ்வொரு முறையும் லட்சணமா.. லட்சணமான்னு அழுத்தி சொல்லிட்டு இருக்கீங்களே.. அப்பவே நான் உள்ளே வந்துட்டேன்.. வாழை பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நீங்க பேசுறது புரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்ல.. ஆனா நீங்க சொல்றதுல எனக்கு வருத்தம் இல்ல”

“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத.. நான் சாம்பவிக்கு மட்டும் சொல்லல, உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. உங்க ரெண்டு பேருக்கும் நல்ல படியா குழந்தை பிறக்கணும்னு தான் நான் நினைக்கிறேன். எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்னு தான்”

“இதுக்கு தான் மா நான் உங்களுக்கு விளக்கம் கொடுக்க எப்பவுமே முயற்சி  செய்றது இல்ல.. சும்மா பேச்சை மாத்தி மாத்தி பேசிட்டு.. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிடுறேன்.. நானும் கடவுள் கிட்ட ரொம்ப தீவிரமா வேண்டிக்குறேன்.. கண்டிப்பா என்னை மாதிரி குழந்தை ஹரி சாம்பவிக்கு பிறக்க வேண்டாம்னு.. இன்னொரு மணிமேகலை அந்த வீட்டுக்கு வேண்டாம்”

“இப்படி எல்லாம் பேசாத மணி.. நீயே உன்னை தாழ்வா நினைக்காத”

“ஹா ஹா.. இன்னுமா ம்மா நீங்க என்னை புரிஞ்சுக்கலை.. நான் இப்பன்னு இல்லை எப்பவுமே என்னை தாழ்வா நினைச்சுது இல்லை.. என்னை மாதிரி குழந்தை இங்க எங்க வீட்ல பொறக்கட்டும்.. என்னை தங்கமா தாங்குற பிள்ளைங்க வராஹி வல்லபன் இருக்காங்க.. என்னை தலை மேலே தூக்கி வச்சு கொண்டாடுற என் மாமியார் இருகாங்க.. என்னை  மனசார காதலிச்சு எம்மேலே உயிரே வச்சிருக்க என் புருஷன் இருக்காரு.. நாங்க ராணி  மாதிரி வளர்ப்போம்..

“———————–”

“அங்க சாம்பவியை போட்டு படுத்தாதீங்க.. கொஞ்சம் ப்ரீயா விடுங்கம்மா.. சரிம்மா நாங்க வீட்டுக்கு வந்திட்டோம்.. நான் அப்புறம் பேசுறேன்” என்று வைத்துவிட்டார்.

மணிமேகலை பேசியதை பரிமளா சுந்தர்ராஜனிடம் கூறி வருத்தப்பட்டார்.

‘இவ இப்ப எதுக்கு வருத்தப்படறான்னு தெரியலையே, மணி பேசியதை கேட்டு நாம தப்பு பண்ணிட்டோம்னு வருத்தப்படறாளா? இல்லை மணி இப்படி நம்மளை பேசிட்டான்னு வருத்தப்படறாளா?’ என்று யோசனைக்கு சென்றுவிட்டார்.

 சமாதானம் எல்லாம் செய்யவில்லை.

அந்த வாரம் சென்னைக்கு சென்று மகளை பார்த்து வரலாம் என்று சுந்தர்ராஜன் நினைத்திருக்க, கலங்கிய விழிகளுடன் அவரை பார்த்து நின்றாள் சாம்பவி.

சடகோபன் ஒரு பக்கம் ஹரி ஒரு பக்கம் என்று இருவரையும் சமாளிக்க வேண்டுமே என்ற பயம் அவளுக்கு.

சுந்தர்ராஜன் அழைத்து மணிமேகலையிடம் சாம்பவியை பற்றி  கூற,

“அப்பா இங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நானுமே ஆரோக்கியமா  தான் இருக்கேன்.. நீங்க சாம்பவியை பாருங்க.. மகா அக்காகிட்ட பேசி அவங்களையும் வந்து போக சொல்லுங்க.. சாம்பவி மனசு நல்லா இருந்தா தானே ப்பா பிரசவம் நல்லபடியா நடக்கும்”

“சரிம்மா.. நீ உடம்பை பார்த்துக்கோ..” எப்பொழுதையும் போல மகளின் புரிந்துணர்வில் பெற்றவருக்கு பெருமை தான்.

அடுத்த மூன்று மாதங்களும் விரைவாக சென்றது.

முதலில் மணிமேகலைக்கு வந்தியத்தேவனை உரித்து வைத்து பிறந்தாள்  அவர்களுது பெண்ணரசி.

“அம்மா நீங்க சொன்னதை கொடுத்தாச்சு.. சந்தோசமா?” என்றார் வந்தியத்தேவன், பத்தும்மா கையில் இருந்த மகளை பார்த்துக்கொண்டே.

“இருந்தாலும் இந்த மேகா ரொம்ப மோசம் டா..”

“ஏன்மா?”

“நானும் நிறைய தடவை சொல்லிட்டேன்.. மாசமா இருக்கும்போது யாரை அதிகம் பார்கிறோமோ அவங்களை மாதிரி தான் குழந்தை பிறக்கும்னு சொல்லுவாங்க.. என்னை அடிக்கடி பாரு மேகான்னு.. சரி பத்து சரி பத்துன்னு சொல்லி என்னை ஏமாத்திருக்கா..

எப்ப பார்த்தாலும் உன்னையவே வச்ச கண்ணு எடுக்காம பார்த்தா.. 

உன்னையவே உரிச்சு வச்சு இல்ல பெத்து வச்சிருக்கா பிள்ளையை..”

கிண்டலாக சொன்னாலும், மகனின் அச்சில் கையில் இருந்த பேத்தியை பார்த்து பூரித்து போயிருந்தார் பத்தும்மா.

வராஹியும் வல்லபனும் எப்படி குழந்தையை தூக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆசையாக தூக்கினார்கள் தங்கள் குட்டி சகோதரியை.

குறித்த நாளில் இருந்து இரண்டு வாரங்கள் முன்பாகவே பிரசவம் ஆனதால் சுந்தர்ராஜன் பரிமளா இருவரும் உடன் இருக்கவில்லை. 

குழந்தை பிறந்ததும் உடனே கிளம்ப தயாரானர்கள். இம்முறை சாம்பவி ஒன்றும் கூறவில்லை. தனக்காக தான் மாமனார் இவ்வளவு நாட்கள் செல்லவில்லை என்று அவளுக்கு புரிந்திருந்தது.

இவர்கள் புறப்படும் சமயம் மகா கையில் பையுடன் உள்ளே வந்தார்.

“வா வா மகா.. நீயும் ஊருக்கு வரியா? என்கிட்டே சொல்லவே இல்லை..” என்றார் பரிமளா.

“நான் சாம்பவிக்கு துணைக்கு வந்தேன் ம்மா. நீயும் அப்பாவும் வந்தப்புறம் நான் போய் மணியை பார்த்துக்கிறேன்”

சாம்பவிக்கு சுந்தர்ராஜனின் அன்பில் கண்கள் கலங்கியது. அரணாக தன்னுடன் இருக்கும் அவர் மீது பாசம் பெருகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!