Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 24

அத்தியாயம் 24

 

“அப்பப்பா.. கடவுளே என்னை காப்பாத்துப்பா.. இந்த காதலிக்கறவங்க தொல்லை தாங்க முடியலைப்பா” என்று சத்தமாக முனுமுனுத்து கொண்டிருந்தார் பத்தும்மா அங்கே போனில் பேசிக்கொண்டிருந்த ஹரியை பார்த்துக்கொண்டே.

 



Advertisement

ஹரியும் சாம்பவியும் ராசியாகி விட்டனர். என்ன செய்ய, ஹரியால் இந்த ஆண்டு வேலையை மீண்டும் விட முடியாது. அங்கே சாம்பவியும் மெட்டர்னிட்டி லீவ் முடிந்து கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். குழந்தையை பரிமளாவும் சுந்தர்ராஜனும் பார்த்துக்கொள்கிறார்கள்.

 

சனி ஞாயிறு ஹரி கும்பகோணம் சென்று மனைவி மகனுடன் இருந்துவிட்டு வருகிறான். ஹரியும் சாம்பவியும் இப்பொழுது கைபேசியில் தங்கள் நேசத்தை வளர்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

 

Advertisement

சாம்பவி கல்லூரிக்கு சென்றிருக்கும் சமயம் பேரனை பார்த்துவிடலாம் என்று வந்த சடகோபனுக்கு சுந்தர்ராஜன் மட்டுமே தரிசனம் கொடுத்தார்.

 

“இது என்ன சம்பந்தி நியாயம்? நானும் மாப்பிள்ளையும் சேர்ந்து தானே எல்லாம் செஞ்சோம். மாப்பிள்ளைக்கு மட்டும் பிள்ளையை காட்டிட்டீங்க.. இது எல்லாம் ஓரவஞ்சனை..”

Advertisement

 

“ஓரவஞ்சனையும் இல்லை ஓவர்வஞ்சனையும் இல்லை.. எல்லாம் சாம்பவி முடிவு தான். அவன் பொண்டாட்டி கைல கால்ல விழுந்து சமாதானம் செஞ்சிருக்கான்.. நீங்க சாம்பவிக்கிட்ட பேசி சமாதானம் ஆக பாருங்க.. சாம்பவி சொல்லாம குழந்தையை நீங்க பார்க்க அனுமதிக்க முடியாது”

 

அவரை பார்த்தால் பரிமளாவிற்கே பாவமாக போய்விட்டது.

 

“இங்க பாருங்க அண்ணே, நீங்க ராஜத்துக்கிட்ட சொல்லி சாம்பவி கிட்ட பேச சொல்லுங்களேன்” என்றார் ஒரு யோசனையாக.

 

“உக்கும்..” என்றார் சுந்தர்ராஜன் நமட்டு சிரிப்புடன்.

 

ராஜம் கணவருடன் பேசுவதை நிறுத்தி இருந்தார். சமைப்பது துவைப்பது என்று அவரது எல்லா வேலைகளையும் செய்துவிடுவார். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. சடகோபன் திட்டியும் பார்த்துவிட்டார் கெஞ்சியும் பார்த்துவிட்டார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

 

மகா மருத்துவமனையில் கடுமையாக பேசியபின் “நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் அவர் இஷ்டப்படி தான் அவருக்கு நடக்கணும்” என்று சுந்தர்ராஜனிடம் ராஜம் அழுது புலம்ப, அவர் சொன்ன யோசனை தான் இது. ஆனால் இது மற்றவர்களுக்கு தெரியாது.

 

“சும்மா இருங்கங்க.. அவரும் பாவம் தானே.. ஏதோ தெரியாம செஞ்சுட்டாரு.. பேரனை பார்க்க ஆசை இருக்காதா?”

 

“இங்க பாரு பரிமளா, சாம்பவி சொல்லாம யாரும் ஷ்யாமை பார்க்கமுடியாது. அவ்வளவு தான்”

 

“சாட்சிக்காரன் கால்ல விழறதுக்கு சண்டைக்காரங்க கால்ல விழுந்துடலாம். நீங்க சாம்பவிக்கிட்ட பேசுங்க அண்ணே..” என்றார் பரிமளா சடகோபனிடம்.

 

“சரிம்மா” என்று அவர் சென்றுவிட்டார்.

 

சாம்பவியை கல்லூரியில் சென்றே பார்த்தார். எப்பொழுதுமே இறங்கி வந்து பேசி பழக்கமில்லை.. பேரனை பார்க்கும் ஆசையில் மகளிடம் தயக்கமாக மன்னிப்பு கேட்டார்.

 

“எதுக்குப்பா மன்னிப்பு எல்லாம்? விடுங்க..” என்றாள் சாம்பவி.

 

“அப்ப நான் பேரனை பார்க்க வரவா?”

 

“ஒரு வேலை எனக்கு பொண்ணு பொறந்திருந்தா? அப்ப இவ்வளவு ஆர்வம் இருந்திருக்காது இல்ல.. எனக்கு பொண்ணு பொறந்திருக்குன்னு நினைச்சுக்கோங்க..” என்று கூறி அவர் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.

 

“நான் இறங்கி வந்தா எல்லாரும் ரொம்ப தான் ஆடுறாங்க” என்று மீண்டும் அவர் சுயரூபம் தலை தூக்க, வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

 

‘நான் என்ன தப்பு செஞ்சேன், எனக்கு ஆண் வாரிசு இல்லை.. என் பொண்ணுக்காச்சும் இருக்கட்டும்னு தானே முயற்சி செஞ்சேன்..’ என்று பொருமிக்கொண்டே இருக்கிறார்.

 

“உங்க அப்பா எல்லாம் திருந்த மாட்டார் பார்கவி” என்று ராஜம் சின்ன மகளிடம் வருத்தப் பட்டுக்கொண்டார்.

 

அங்கே நிலவரம் அப்படி என்றால்,

 

ஹரி ஃபோனும் கையுமாக இருக்க.. அதை பார்த்து தான் பத்தும்மா புலம்பிக் கொண்டிருந்தார்.

 

“ஏன் ம்மா அவனே இப்ப தான் அவன் வைஃபோடு ராசி ஆகி இருக்கான். நீங்க ஏன் அவனை வெறுப்பேத்திட்டு இருக்கீங்க” என்று கூறிக்கொண்டே வந்தார் வந்தியத்தேவன்.

 

“மச்சானை சொன்னதும் பொறுக்கமுடியாது டா பம்ப்கின் உங்க அப்பாவுக்கு… ஏன் தெரியுமா?” என்றார் மடியில் அமர்ந்திருந்த பேத்தியிடம்.

 

“ஏன்?”

“ஏன்?”

“ஏன்?”

 

என்று மூன்று குரல்கள்.

 

இது என்ன டா இத்தனை ஏன் என்று வந்தியத்தேவன் திரும்பி பார்க்க, வீர்யா, வராஹி, சம்பவ் மூவரும் தான்.

 

“சின்ன பசங்க இருக்கிறப்ப இது என்னம்மா பேச்சு..”

 

“டேய் சின்ன பசங்க முன்னாடி நீயும் உன் மச்சானும் காதலிக்கலாம் அதை நான் சொல்லக்கூடாதா?”

 

“அதானே, கரெக்ட் கேள்வி பத்தும்மா” என்றாள் வீர்யா.

 

“நீ என்னடான்னா மேகி மேகின்னு நூடுல்ஸ் கிண்டிட்டு இருக்க.. இவன் என்னடான்னா ஷாம்பூ ஷாம்பூன்னு ஷாம்பூ வித்துட்டு இருக்கான், நானும் மூனு நாளா ஒரு விஷயம் கேட்டுட்டு இருக்கேன். காது கொடுத்தாச்சும் கேட்டியா?”

 

“பத்தும்மா அது அப்புறம் என்னன்னு பார்ப்போம், இப்ப நானா எதுக்கு மச்சானுக்கு சப்போர்ட் பன்றாங்குனு சொல்லுங்க..” என்றாள் வீர்யா.

 

“இன்னிக்கு உங்க எல்லாருக்கும் வேற வேலை இல்லையா, நான் தான் மாட்டுனேனா?”

 

“அதுவா.. ஹரி அவன் பொண்டாட்டியோட போன்லே இருந்தா தானே இவன் இவன் பொண்டாட்டி கூட சுத்த முடியும்.. இல்லைனா அவன் அக்கா அக்கான்னு சுத்த, மேகாகிட்ட இவனால் பேச முடியாது இல்ல?”

 

“போங்க பத்தும்மா.. இவ்வளவு மொக்கையா ஒரு ரீஸனா.. நான் உங்க கிட்ட வேற லெவல்ல எக்ஸ்பெக்ட் பண்ணேன்..”

 

“இவங்களை எல்லாம் வச்சுக்கிட்டா, இவ்வளவு தான் வருது வீரு.. என்ன செய்ய? அதான் நான் நம்ம எல்லாம் சேர்ந்து ட்ரிப் போலாம்னு கேட்டுட்டு இருக்கேன் .. கண்டுக்கவே இல்லை” என்றார் சோகமாக.

 

“நானா.. போலாம் நானா” என்றாள் வராஹி ஆசையாக.

 

வராஹி கேட்டதும் உடனே,

 

“உனக்கு போகணும்னா போலாம் வரா..” என்றார் வந்தியத்தேவன் உடனே.

 

“பார்றா.. பெத்த அம்மா கரடியா கத்தினாலும் ஒன்னும் வேலைக்கு ஆகலை.. இப்ப பொண்ணு கேட்டதும் உடனே ஓகேவாம்..” என்று நொடித்துக் கொண்டார். ஆனால் முகத்தில் புன்னகையே.

 

மணிமேகலை அனைவருக்கும் பஜ்ஜியோடு வந்தார்.

 

“எங்க போறோம்? எப்ப போறோம் தேவா?” என்றார் அவரும் ஆசையாக.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வல்லபனும் ரகுவும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

 

“எங்கே போலாம் நீங்களே சொல்லுங்க ம்மா” என்றார் பத்தும்மாவிடம்.

 

“குட்டி பம்ப்கினையும் தூக்கிட்டு போற மாதிரி ஒரு இடத்துக்கு போலாம்”

 

“நானா, ட்ரெக்கிங் போய் ரொம்ப நாளாச்சே..” என்று வல்லபன் கூற,

“ஆமா நானா.. ஆமா நானா” என்று பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்.

 

ட்ரெக்கிங் பாப்பாவை வச்சுக்கிட்டு கஷ்டமாச்சே என்று அவர் மனைவியை பார்க்க, நாம தான் இத்தனை பேர் போறோமே, மாத்தி மாத்தி தூக்கிக்கலாம் என்றார் அவர் சமாதானமாக.

 

சரி என்று அந்த வாரமே ஒரு நாள் செல்லும் இடத்தை தேர்வு செய்தனர்.

 

“ஹரி நான் ஊருக்கு போறேன் இந்த வாரம்” என்று கூற,

 

“ஷாம்பூவை அடுத்த வாரம் பார்க்கலாம்.. இந்த வாரம் சீகைக்காய் வச்சு அட்ஜஸ்ட் பண்ணு ஹரி” என்று பத்தும்மா கூற, ஹரி முகம் போன போக்கை பார்த்து அனைவரும் கொல்லென சிரித்து விட்டனர்.

 

காலையில் மிகவும் உற்சாகமாக அனைவரும் கிளம்பினார்கள். ரகுவும் வல்லபனும் பெரிய பிள்ளைகள் என்பதால் விரைவாக வந்தியத்தேவனுடன் மலை ஏறினார்கள்.

 

பத்தும்மாவுடன் வீர்யா வராஹி சம்பவ் மூவரும் சேர்ந்து அலப்பறைகளை கூட்டிக்கொண்டு வந்தனர். மணிமேகலை தான் இவர்களை மேய்த்துக்கொண்டு வந்தார்.

 

ஹரி பம்ப்கினை அழகாக ஓர் பேக்கில் மாட்டிக்கொண்டு தூக்கி கொண்டு வந்தான்.

 

ஆனால் சற்று நேரத்திலே களைத்து விட்டான். அவனுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை அல்லவா? மூச்சு வாங்கியது. இதை கவனித்து வந்தியத்தேவன் மகளை வாங்கிக்கொண்டார்.

 

மெதுவாக சென்ற மாமனைவிட, வேகமாக செல்லும் அப்பாவுடன் குஷியாக சவாரி செய்தது குட்டி பம்ப்கின்.

 

“என்ன ஹரி ஏறிடுவியா?” என்றார் மணிமேகலை கவலையாக.

 

“சின்ன பசங்க எல்லாம் ஏறும்போது நான் மாட்டேனா? பாப்பாவை வச்சு ஏறுனதுனால தான் .. இல்லைனா நான் எல்லாம் அசால்ட்டா ஏறிடுவேன்” என்று பந்தாவாக சமாளித்தான்.

 

வல்லபன் ரகு இருவருடனும், அவர்களுக்கு ஈடு கொடுத்து வந்தியத்தேவன் முன்னே சென்றுவிட்டார்.

 

ஹரியும் மேகாவும் வருவதால் மற்றவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று கொஞ்சம் விரைவாக சென்றுவிட்டார்.

 

அங்கே ஒரு சிறு ஓடை ஒன்று ஓடியது. அதை தாண்டி பின் மேலே ஏற வேண்டும். பத்தும்மாவுடன் நால்வரையும் அதை தாண்ட வைப்பதற்குள் மணிமேகலைக்கு களைப்பாக போய் விட்டது.

 

முடியாது பயமா இருக்கு என்று மாறி மாறி கூறினார்கள். ஒவ்வொருவருக்கும் சமாதானம் சொல்லி இப்படி கால் வைக்கணும் இப்படி குதிக்கணும் என்று கூறி அழைத்து வந்தார்.

 

“அடுத்த தடவை உங்க நாலு பேரையும் கூட்டிட்டே வரக்கூடாது.. படுத்துறீங்க” என்று அவர் கடுப்படித்ததை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டே வந்தனர்.

 

கொஞ்ச தூரம் சென்றதும் தான் ஹரியை காணும் என்று கவனித்தார் மணிமேகலை.

 

தனியாக யாரும் செல்லக்கூடாது என்பது தான் ட்ரெக்கிங் செல்லும்போது முதல் விதியே.

 

மணிமேகலைக்கு கொஞ்சம் பயமாய் போனது.

 

“ஹரி ஹரி” என்று குரல் கொடுக்க, ஹரியை காணும்.

 

“டென்ஷன் ஆகாதே மேகா.. அந்த ஓடையை தாண்டமா நின்றிருப்பானோ?” என்றார் பத்தும்மா.

 

“சரி நீங்க நாலு பேரும் இங்கவே உக்காருங்க நான் போய் அவனை கூட்டிட்டு வந்திடறேன்” என்று இவர்களை அமர வைத்து கையில் இருந்த ஸ்னாக்ஸை எடுத்து கொடுத்தார். இல்லை என்றால் இவர்கள் அமைதியாக இருப்பது கஷ்டம் அல்லவா?.

 

பின் மணிமேகலை வந்த வழியில் மறுபடியும் கீழே சென்றார்.

 

பத்தும்மா சொன்னதை போலவே ஹரி அந்த பக்கம் தான் நின்றுகொண்டிருந்தான். முகமெல்லாம் வேர்த்து பயந்து காணப்பட்டான்.

 

“டே ஹரி.. ஹரி கண்ணா.. இங்க பாரு” என்று குரல் கொடுத்து கொண்டே மணிமேகலை அங்கே சென்றார்.

 

“அக்கா அக்கா” என்று குழந்தையாக அழும் குரலில் கூறவும், சிறு வயது நியாபகம் வந்தது விட்டது மணிமேகலைக்கு.

 

“பயப்படாதே ஹரிக்கண்ணா அக்கா இருக்கேன் இல்ல.. இரு நான் வரேன்” என்று இரண்டு ஜம்பில் அந்த பக்கம் அவனருகில் குதித்திருந்தார்.

 

‘ஆங்’ என்று ஆச்சர்யமாக அக்காவை பார்த்து நின்றான் ஹரி.

 

“நாங்க போகும்போது உன்னால வர முடியலைன்னா குரல் கொடுக்க வேண்டியது தானே. தனியா இப்படி எல்லாம் நிக்க கூடாது..” என்று கூறி “இந்த கல்லுல கால் வச்சு ஒரு ஜம்ப் செஞ்சு அந்த கல்லுக்கு போ, அப்புறம் அந்த பக்கம் ஜம்ப் பண்ணு” என்று விளக்கம் கூறினார்.

 

“அக்கா பயமா இருக்கு..”

 

“இப்ப நான் குதிக்கிறதை பாரு” என்று மீண்டும் அந்த பக்கம் சென்றுவிட்டார்.

 

“ஆங்..”

 

அவனது பாவனையில் கலகலவென சிரித்தார் மணிமேகலை.

 

“அக்கா நீ சூப்பர் அக்கா..”

 

“சரி இப்ப வா..”

 

“தண்ணிகுள்ள விழுந்திட்டா?”

 

“அதுலாம் விழுக மாட்ட. விழுந்தாலும் ஆழம் இல்லை..”

 

அவனுடன் போராடி ஒருவழியாக அவனையும் அழைத்தது சென்றார்.

 

ஹரிக்கு இது புது வித அனுபவமாக இருந்தது. சாம்பவியுடன் மீண்டும் ஒருமுறை இப்படி வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

 

பல வருடங்களுக்கு பிறகு அக்காவின் ஹரி கண்ணா என்ற அழைப்பு மணிமேகலையின் மன்னிப்பை உணர்த்தியது.

 

திரும்பி வருகையில் தேங்க்ஸ் க்கா என்று மணிமேகலையின் கைகளை பிடித்துக்கொண்டு அவளை விடவே இல்லை.

 

வந்தியத்தேவன் உர்ரென்று வந்தார்.

 

அவரை ஓட்டிக்கொண்டே வந்தது நால்வர் குழு.

 

குழந்தைகள் முன்பு வந்தியத்தேவனும் மணிமேகலையும் மிகவும் ஜாக்கிரதையாக தான் பேசினார்கள் முதலில். பத்தும்மா தான் “மிக மோசமான உதாரணமா அவங்க அப்பா அம்மா பிரிவை பார்த்த குழந்தைங்களுக்கு இயல்பான அன்பான கல்யாண வாழ்க்கை பத்தி தெரியணும். அப்ப தான் அவங்களுக்கு நாளைக்கு அப்படி ஒரு வாழ்க்கையை நாமும் வாழணும்னு ஆசை வரும். ஒட்டி உரசி கொஞ்சி குலாவுவது தப்பு.. ஆனா ஒரு எல்லையோடு கணவன் மனைவிக்குள்ள உள்ள அன்பும் அரவணைப்பும் காட்டுவது தப்பில்லை” என்று கூறி இருந்தார்.

 

பத்தும்மாவின் சரியான வழிகாட்டுதலில் இவர்கள் வாழ்வு சொர்க்கம் தான்.

ஹரியும் ஒரு வருடம், வாழ்க்கையை படித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு என்றே நம்பினான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!