Skip to content
Post Views: 1,340
விழாக் காணுமே வானம் 08
வத்சலா ராகவன் – மது ஹனி
“பிரிந்தோம் சந்தித்தோம்;
மீண்டும் பிரியவோ? இணையவோ?”
Advertisement
பிரமை பிடித்ததைப் போல அசையாமல் நின்று கொண்டிருந்த ஸ்வாதி போன் ஒலிக்கவும் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
திரை மங்கலாக தெரிய அப்போது தான் தனது விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். விழிநீரை சுண்டி விட்டு போனைப் பார்க்க ரங்கநாதன் தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
Advertisement
“கிளம்பிட்டீங்களா கண்ணா”
Advertisement
“இதோ கிளம்பிட்டே இருக்கோம் பா” என்றபடியே அரவிந்தை தேடினாள்.
‘கூடவே தானே வந்தான். எங்கே போய்விட்டான்’
“என்னடா குரல் ஒரு மாதிரி இருக்கு. அர்ஜூன் வந்திருந்தானா” அப்பா இதமான குரலில் கேட்டார்.
Advertisement
“ம்ம்ம்” என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது அவளால்.
“உன்னை ஏதாவது சொல்லிட்டானா” அவர் கேட்டதும் அவசரமாக மறுத்தாள்.
“இல்லப்பா. அவன் ஒன்னும் சொல்லல”
அதற்கு மேல் அவளை எதுவும் கேட்காமல் சீக்கிரம் வந்திவிடும்படி கூறி போனை வைத்துவிட்டார் ரங்கநாதன்.
மணி என்ன என்று போனை ஆன் செய்து பார்க்கவும் தான் அவளுக்கு உரைத்தது. அவள் போனின் ஸ்க்ரீன் சேவர். பார்த்திருப்பாரோ!!!
ஏழு வயதில் அவளும் அர்ஜூனும் சாம்பியன்ஷிப் கோப்பையைப் பிடித்துக் கொண்டிருந்த படம் தான் அவளது போன் ஸ்கரீனாக எப்போதும் இருந்து வந்தது. மொபைலை மாற்றினாலும் அவளது ஸ்க்ரீன் சேவராக வேறு ஒரு படத்தை அவள் வைத்ததே இல்லை. அது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஆனால் முதல் முறையாக வேறு ஒரு படம் அவள் ஸ்க்ரீன் சேவராக இடம் பிடித்துக் கொண்டிருந்ததே! இந்த ஒரு வருடமாக அவள் ஸ்க்ரீன் சேவர் படத்தை மாற்றி வைத்திருப்பது அவளது தந்தைக்குக் கூட தெரியாது.
இப்போது அவளது ரகசியம் வெளிப்பட்டு இருக்குமோ. தெரிஞ்சா தெரியட்டுமே! என அலட்சியமாக சிலுப்பிக் கொண்ட போதும் அவளையும் அறியாமல் அவளின் விரல்கள் ஸ்க்ரீன் சேவர் படத்தை மெல்ல வருடிக் கொடுத்ததுக் கொண்டிருந்தது.
“போகமாலா” என்று அரவிந்த் அவள் தோளை தட்டவும் காரில் ஏறி அமர்ந்தாள்.
“கூடவே தானே வந்துட்டு இருந்த. எங்கே காணாம போயிட்ட” என்று கேட்டாலும் அவள் மனம் அவன் அச்சமயம் அங்கே இல்லாமல் போனதை தான் விரும்பியது.
“பிஸ்னஸ் பார்ட்னர் கூட பேசிட்டு இருந்தேன்” என்றவன் எப்போதும் போல் கலகலப்பாய் வம்பிழுக்காமல் அமைதியாய் வந்ததை ஸ்வாதி கவனித்தாள்.
அவள் கண்முன் வைஷாலியின் கலகலப்பான முகம் வந்து போனது.
அர்ஜூன் ஸ்வாதி இருவரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த போதும் அவள் பார்வை அடிக்கடி அரவிந்த் பக்கம் சென்று மீள்வதை ஸ்வாதி கவனித்து விட்டிருந்தாள்.
அதை மனதில் கொண்டு அருகில் காரோட்டிக் கொண்டிருந்தவன் மேல் பார்வையை செலுத்தினாள் ஸ்வாதி.
“உன் மேரேஜ் ரிசப்ஷன் அப்போ பார்த்தது தான். இன்னிக்குத் தான் மறுபடி பார்க்கிறேன்”
அரவிந்த்தின் திருமணம் நடைபெற்ற போது முக்கியமான போட்டியின் காரணமாக ஸ்வாதியால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இதே ஹோட்டலில் நடைபெற்ற அவனது ரிசப்ஷனுக்கு ஸ்வாதியும் அர்ஜூனும் ஒன்றாக வந்திருந்தனர். அன்று மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகாத்தோடும் வைஷாலியை அவர்களுக்கு அரவிந்த் அறிமுகம் செய்து வைத்து நினைவிருந்தது.
அதற்குப் பின் இவர்கள் வாழ்வில் புயல் வீச அதிலேயே உழன்று கொண்டிருந்தவள் அரவிந்த் வைஷாலி பிரிந்து விட்டதை பாட்டி சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த போதும் அதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
ஸ்வாதி அரவிந்த்தின் உறவினள் என்றில்லாமல் ஒரு ரசிகையாக ஸ்வாதியையும் அர்ஜூனையும் வைஷாலி கொண்டாடியது ஸ்வாதியின் மனதை அசைத்தது.
அவள் சேர்ந்து நிற்கச் சொல்லி தோளில் கை போடச் சொன்னதும் அதை செயல்படுத்தியதும் ஸ்வாதிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. வைஷாலியின் மீது ஸ்வாதியின் மனம் பிரேமை கொண்டது.
ஸ்வாதி சொன்னதற்கு எந்த பதிலையும் தராமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அரவிந்த். மற்ற சமயமாக இருந்தால் எனகென்ன வந்தது என்று கடந்து சென்று விட்டிருப்பாள். ஆனால் இப்போது அப்படி விட முடியவில்லை அவளால்.
“டென்னிஸ் அவங்களுக்கு ரொம்ப பிடிக்குமாமே. டென்னிஸ் பத்தி மட்டும் தான் ரைட் அப் எழுதுவாங்களாமே” ஸ்வாதி சொல்ல அரவிந்திடம் அதற்கும் பதில் இல்லாமல் போனது.
அதற்கு மேல் எப்படிக் கேட்பது என்று ஸ்வாதிக்கு தெரியவில்லை. அவள் அமைதியாகவே வந்தாள். ஆனால் அந்த அமைதி அரவிந்த்தின் மனதில் குடிபுக அடம் பண்ணிக் கொண்டிருந்தது.
அவளை அங்கு பார்ப்போம் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. மணப்பெண் வைஷாலியின் நெருங்கிய சினேகிதி என்பது அவர்களை வாழ்த்தச் சென்ற போது தான் தெரிந்தது.
அர்ஜூன் ஸ்வாதி இருவரைக் கண்டதும் அவள் உற்சாகமாக அவர்களோடு பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டே தான் இருந்தான். ஆனால் அவன் பார்க்காத பொழுதுகளில் அவன் மீது அவளின் பார்வை படிந்து கொண்டிருந்தது என்று அவன் அறியாமல் போனான்.
கிளம்பிச் செல்லும் போது ஸ்வாதியை முன்னே நடக்கவிட்டு அவளை இன்னொரு முறை பார்த்துவிட மாட்டோமா என சற்றே பின் தங்கியவனை அவனது பிஸ்னஸ் பார்ட்னர் பிடித்துக் கொண்டார்.
அவரோடு பேசிக் கொண்டிருந்த போதே அவரின் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த வைஷாலி அவர்கள் அருகில் வந்தாள்.
அரவிந்த் அங்கு நின்று கொண்டிருப்பதை அவள் கவனித்திருக்கவில்லை.
“அரவிந்த் நாளைக்கு டின்னருக்கு உங்க மனைவியோட வீட்டுக்கு வாங்களேன். அப்படியே கூர்க் ப்ராஜக்ட் பத்தி டிஸ்கஸ் செய்யலாம்” அரவிந்தின் பிஸ்னஸ் பார்ட்னர் இயல்பாக அவர்களை விருந்துக்கு அழைத்தார்.
“உங்க மனைவி” அந்த வார்த்தையைக் கேட்டதுமே இருவரின் மனதிலும் மெல்லிய அதிர்வலைகள்.
“இவங்களுக்கு பிஸ்னஸ் தவிர வேறே எதுவுமே தெரியாது. எப்போ பாரு பிஸ்னஸ் தான். ஈவனிங் போலவே வந்திடுங்க வைஷாலி என்னோட போட்டோகிராபி கலக்ஷன் எல்லாம் பார்க்கலாம்” அவரின் மனைவி அழைப்பு விடுக்க வைஷாலிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அரவிந்த்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவனும் அப்போது அவளையே பார்க்க அந்தப் பார்வையில் என்ன கண்டாளோ. மெல்லத் தலையைக் குனிந்து கொண்டாள்.
“ஒரு முக்கியமா பேமிலி இஷ்யூ சால்வ் செய்ய தான் சென்னை வந்திருக்கோம். இன்னொரு முறை டின்னருக்கு வருகிறோம். பிஸ்னஸ் பற்றி பிறகு டிஸ்கஸ் செய்யலாம்” என்று அவர்களிடம் கூறி விடைபெற்றவன் வைஷாலியின் பக்கம் பார்வையை செலுத்தினான்.
அவளையும் சேர்த்து அவன் பதில் சொன்னது அவளுக்கு இதமாக இருந்தது.
“இங்க உன்னைப் பார்த்தது கூட ஒரு விதத்தில நல்லதா போச்சு. ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. சோ கேஸ் பைல் செய்திடலாம்ன்னு லாயர் சொன்னார்” அவன் சொல்ல அவளோ திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
‘பேமிலி இஷ்யூ என்று இவன் சொன்னது இதைத் தானா’. அஸ்தமனத்தில் வாடி நிற்கும் சூரியகாந்தியைப் போல அவன் சொன்ன வார்த்தைகளில் அவள் மனம் துவண்டு போனது.
அவள் ஏதேனும் சொல்வாள் என்று ஒரு நொடி தாமதித்து அங்கேயே நின்றான் அரவிந்த். ஆனால் அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் அவள் மௌனமாக இருக்கவும் ஒரு வித ஏமாற்றத்தோடு அங்கிருந்து விரைந்து அகன்றான்..
ஸ்வாதி அரவிந்த் இருவரும் வீட்டிற்கு திரும்ப பத்தாகி விட்டிருந்தது.
“ஏம்மா இவ்வளவு லேட்” ரங்கநாதன் மகளைப் பார்த்து கேட்க
“என்னோட பிஸ்னஸ் பார்ட்னர் பிடிச்சு வச்சுட்டார் மாமா. அதான் லேட். அவகிட்ட கேட்டு வைக்கிறீங்க. அப்புறம் ஆங்க்ரி பர்ட் என்னை ஷூட் பண்ணிடும்” கலகலப்பாக அரவிந்த் சொல்லவும் ஸ்வாதி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“சரி சரி ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்றவர் “அம்மா நாளைக்கு லாயர் வரச் சொல்லிருக்காங்க. காலையில சீக்கிரம் போகணும்” என ஸ்வாதி அரவிந்த் முன்னிலையிலேயே சொல்லிவிட்டார்.
“எதுக்குப்பா லாயரைப் பார்க்க போகப்போறீங்க” ஸ்வாதி ஒன்றும் புரியாமல் கேட்டாள்.
ரங்கநாதன் எதுவும் பேசாமல் அன்னையைப் பார்த்தார். அந்தப் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு கொண்டாள் ஸ்வாதி. சில நொடிகள் அங்கே மௌனம் நிலவ
“ஏதாச்சும் பதில் சொல்ல போறீங்களா இல்லையா” கோபாமாகக் கத்தினாள்.
“இப்போ எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்க. இனிமே விளையாட போறதில்லன்னு பன்னிரண்டாம் தேதி பிரஸ் மீட் வச்சு சொல்லப் போறியாமே. அதுவும் பீச் வீட்டிலே. அதுதான் செட்டில்மன்ட் எல்லாம் செய்திடலாம்ன்னு முடிவு பண்ணிருக்கு” பாட்டி கோபத்தில் வாயை விட்டு விட்டார்.
“ஓஹ் அதுக்குள்ளே விஷயம் வந்து சேர்ந்தாச்சா. பிரஸ் மீட்டுன்னு தானே சொன்னேன். விளையாடப் போறதில்லன்னு சொன்னேனா” வரிந்து கட்டிக் கொண்டு பாட்டியிடம் சண்டை போட்டாள்.
“பாட்டி கூட எதுக்கு ஆர்கியூ செய்துட்டு இருக்க ஆங்க்ரி பர்ட். நாளைக்கு பிரஸ் மீட்ல மாமாவை யாரும் கேள்வி கேட்டுவிட கூடாது இல்லையா, அது தான் லீகலா எல்லாத்தையும் செட்டில் செய்திட மாமா நினைச்சிருப்பார்” அரவிந்த் ஒரு பிஸ்னஸ்மேன் எனும் முறையில் இப்படியாக இருக்க வேண்டும் என்று யோசித்து அதையே கூறினான்.
“அப்பா என்னப்பா செட்டில்மன்ட்” ஆற்றாமையில் அமிழ்ந்து ஒலித்தது அவள் குரல்.
“ப்ராபர்ட்டி செட்டில்மன்ட் கண்ணா” ஸ்வாதிக்கு ப்ராபர்டி விஷயம் எல்லாம் ஒன்றும் தெரியாது என்பதால் அதை பற்றி அவள் கண்டுகொள்ள மாட்டாள் என நினைத்து மேலோட்டமாகச் சொன்னார் ரங்கநாதன்.
“என்ன ப்ராப்பரடிபா. அதுக்கும் பிரஸ் மீட்கும் என்ன சம்பந்தம்” ஸ்வாதி விடுவதாய் இல்லை.
“பீச் ஹவுஸை தான் மாமா சொல்றார்” அப்படித் தானே என்று ரங்கநாதனிடம் கேட்டான்.
“அரவிந்த். ஷட் அப். பீச் ஹவுஸில் தலையிடாதே” ஸ்வாதி கோபத்தில் கத்தினாள்.
“ஏன் நான் உன் கசின் ப்ரதர் தானே. நான் தலையிட கூடாதா” ஸ்வாதி அவ்வாறு சொல்லவும் அரவிந்த் வாதம் செய்தான்.
“நான் உன் கசின் சிஸ்டர் தானே. உன் மேரேஜ் லைப்ல நான் தலையிட்டு கொண்டா இருக்கேன்” வைஷாலியை பார்த்ததன் தாக்கத்தில் ஸ்வாதி ஏதேச்சையாக கோபத்தில் கொட்டிவிட அது அரவிந்த்தை பலமாக தாக்கியது.
“ஸ்வாதி” பாட்டி கோபமாக அவளை அதட்டினார்.
“என்னை மட்டும் அதட்டு. அது தானே உனக்கு தெரியும்” என்றவள் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“லேட் ஆகிருச்சு. எல்லோரும் போய் தூங்குங்க” ரங்கநாதன் சற்றே கடுமையான குரலில் சொல்லவும் அமைதியாக தனது அறைக்குச் சென்ற அரவிந்தை ஸ்வாதி தடுத்தாள்.
“எனக்கு வைஷாலி நம்பர் வேணும். பிரஸ் மீட் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்” எனவும் மௌனமாக அவளைப் பார்த்தான்.
“உன்கிட்ட அவங்க நம்பர் இல்லைனா பரவாயில்ல” என்று அவள் விலகிச் செல்ல, மொபைல் பார்க்காமலே வைஷாலியின் போன் நம்பரை வேகமாக சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.
பிரிந்து ஒன்றரை வருடம் ஆகியும் மனப்பாடமாக வைஷாலியின் நம்பரை நினைவு வைத்திருக்கிறான் என்பது ஸ்வாதிக்கு மட்டுமல்ல பாட்டிக்கும் ரங்கநாதனுக்கும் ஆச்சரியம் தான்.
அன்றிரவு வீடு வந்து சேர்ந்து வெகு நேரமான பின்பும் கூட மகாலக்ஷ்மியின் மனம் வேதனையிலேயே உழன்றது.
“அத்தை, எதுக்கு இப்படி அப்செட் ஆகி இருட்டிலே உட்கார்ந்திருக்கீங்க” அர்ஜூன் அவரின் அருகே வந்து அமர்ந்தான்.
“இங்க பாருங்க அத்தை. போனை என்கிட்டேயிருந்து வாங்கினவங்க அவ கையில கொடுத்திருக்கணும். இல்லை வாங்காமலே விட்டிருக்கணும். நீங்களும் அவளை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினச்சா எப்படி” அத்தையிடம் வாதிட்டான்.
“என்கிட்ட அவ வீம்பா இருந்ததை அப்போவே மறந்துட்டேன். ஆனா ஒரு யோசனையும் இல்லாம பிரஸ் மீட்டுன்னு சொல்லி வச்சிருக்கா.என்ன செய்ய காத்திருக்காளோ” என்று ஆதங்கப்பட்டார்.
பால்கனியில் இருந்து எழுந்து வீட்டினுள் சென்று போனை கையில் எடுத்து பேசினார். அவர் பேசியது அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அவரின் முகம் சற்றே தெளிவடைவதை பார்த்தவன் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.
மார்கழி மாத குளிர் அவனை வருடிச் சென்றது.
“இதெல்லாம் ஒரு ஊரா. இப்படிக் குளிருது. எங்க பார்த்தாலும் வெள்ளை வெள்ளையா பனி வேறே” உலகமே ஸ்விட்சர்லாந்தை சொர்க்கம் என்று கொண்டாட அங்கிருந்து எப்போது கிளம்புவோம் என்று ஸ்வாதி காத்திருந்தது அவனுக்கு நினைவு வர அவன் முறுவலித்தான்.
‘இந்த உலகத்திலேயே பெஸ்ட் பிளேஸ் எது தெரியுமா. நம்ம பீச் ஹவுஸ் தான்’ என்பாள்.
நம்ம தோட்டம், நம்ம வீடு, நம்ம அகடமி என அவளுக்கு சொந்தமானதை எல்லாம் அவனுக்கும் சொந்தமாகினாள்.
“உன் அங்கிள் என்ன சொல்றார்” என்பாள் அவள் தந்தையை. ஒரு முறை பாட்டி ‘என் மகன்’ என்று சொன்னதுக்கே அதெப்படி என் மகன்னு சொல்லலாம் அவர் என் அப்பா என்று போர்க்கொடி பிடித்தவள் இயல்பாக உன் அங்கிள், உன் பாட்டி என்றாள்.
அங்கேதான் நான் சறுக்கி விட்டேனோ? அங்கேதான் நான் தவறி விட்டேனோ?” மெலிதாக ஒரு உறுத்தல் அவனுக்குள்ளே.
“நான் தோளில் கை போட்டதும் அது தான் சாக்குன்னு எப்படி நெருக்கமா ஒட்டிக் கொண்டு விட்டாள்” அவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
அக்காட்சியைக் காண ஆவல் பிறந்தது. அடுத்ததாக எப்போது வைஷாலியை பார்க்க முடியும் என்பதும் புரியவில்லை.
சிறிது நேரம் யோசித்தவன் கைப்பேசியை எடுத்து அழைத்தான் அவனை. ஒரே முறை ஒலித்தவுடனேயே அவனது போன் எடுக்கப்பட்டு விட,
“எனக்கு வைஷாலி நம்பர் வேணுமே” ஹலோ கூட சொல்லாமல் கேட்டான் அர்ஜூன்.
மறுமுனையில் நீண்டதொரு மௌனம் நீடித்தது.
தொடரும்
error: Content is protected !!