Skip to content
Post Views: 4,913
“சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
மு.வ உரை: புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.”
“சரி விடுங்க என் கதையைக் கேட்டு உங்க ப்ரெண்ட் மேலே கோவமெல்லாம் பட்டுற மாட்டீகளே?!”
“..”
Advertisement
“நான் இப்படியெல்லம் யாரோடயும் பேச மட்டேன். நீங்க எங்க இரண்டு பேருக்கும் பொதுவா இருந்ததால நான் பாட்டுக்கு பேசிட்டேன். தப்பா எடுத்துகிட்டீகளோ?”
“ச்ச ச்ச நான் தானே உன்னை பேச சொன்னதே.. ஆனாலும் இந்த நூற்றாண்டில் இப்படி பொண்ணுங்களும் இருக்காங்களானு எனக்கு ஆச்சரியமா இருக்கு செங்கா!”
“எந்தக் காலமா இருந்தாலும் நமக்குப் பிடிச்சவங்களுக்காக நாம இப்படி இருக்குறதில் எந்த தப்பும் இல்லையே க்கா.”
Advertisement
“அம்மா தாயே உன்னை மாதிரி புத்தர் எல்லாமே நான் இல்லை. எங்க ஆபீஸிலேயே பெரிய ஃபெமினிஸ்ட் நான் தான் என்கிட்டேயே நீ உட்காந்து இப்படி ஒரு கதை சொல்லிட்டு இருக்க..!”
Advertisement
“அப்படினா என்ன அர்த்தம்?”
“ஃபெமினிஸ்ட்னால் பெண்ணியவாதி. அதாவது ஆண்கள் பல நூறு வருஷமா பெண்களுக்கு வரையறைத்து வைச்சுருக்குற கோட்பாடுகளை எல்லாம் உடைச்சு வரணும்னு சொல்றவ.
ஆணும் பெண்ணும் சமம் தான் யாரும் யாருக்கும் அடிமை கிடையாதுனு நம்புறவ.”
Advertisement
“என் வாழ்க்கையில் பெண்ணியத்துக்கு எதிரா எல்லாம் எதுவுமே இல்லையே க்கா?”, என்றவளை கொலைவெறியில் முறைத்தாள் ரம்யா.
“நீ இப்படியே பேசி என் பிபியை ஏத்தாத சொல்லிட்டேன்.”
“நிஜமாதேன் சொல்றேன். அவங்க என்னை எந்த விதத்திலேயும் அடக்க நினைக்கலை. சொல்லப் போனா உங்களை விட ஒரு படி மேலே போய் எனக்கு வேற வாழ்க்கை அமைச்சுக்க கூட சொன்னாங்க.”
“..”
“நான் இந்த வாழ்க்கையில் ஒட்டிக்க காரணம் அவர் மேல இருக்குற விருப்பம். இன்னொன்னு என்னை மாதிரி எல்லாரும் அவரைப் புரிஞ்சுக்க மாட்டாங்கனு ஒரு எண்ணம்.
அப்படி நான் பிரிஞ்சு போனாலும் அவர் வேற வாழ்க்கையை பார்த்து போக வாய்ப்பே இல்லைனு ஆணித்தரமா நம்புறேன். அப்பறம் எப்படி அவரு தனியா கஷ்டப்படட்டும்னு விட்டுட்டு போவேன்.”
“!!”
“அதோ அந்த மரத்தில் இருக்குற பறவையைப் பார்த்தீங்களா தினமும் அது அந்த மரத்திலேயே தான் வந்து உட்காரும்.
ஏன்னு சொல்லுங்க? அந்த மரம் அப்படி பெருசா என்ன பண்ணிடுச்சு அந்த பறவைக்கு? அது வரும் போதெல்லாம் நிழல் கொடுத்து தாங்கிக்குதுல? அம்புட்டுதேன். “
“!!”
“ஒரு வகையில் நானும் அப்படிதேன். அவுகளை நம்பி வந்துட்டேன்ங்கிறதுக்காக என்னை பாதுகாப்பான ஒரு சூழலில் வைச்சுருக்காருல அதுதேன் நான் இந்த உறவை இறுக்கமா பிடிச்சுக்க காரணம்.
எதுவும் கிடைக்காதுனு தெரிஞ்ச பிறகும் அந்த மரத்துகிட்ட இருந்து வேற என்ன வேணும்னு நினைக்க முடியும். அது கொடுக்குற நிழலைத் தவிர?”
“இது காதலா செங்கா? இல்ல உனக்கும் உன் பொண்ணுக்கும் நீ ஏற்படுத்திகிட்ட பாதுகாப்பு வளையமா?”
“காதல்னா என்னனனு எனக்குத் தெரியலை உங்க சினிமாலேயும் கதையிலேயும் வர்ற மாதிரியான காதல் எல்லாருக்கும் நிஜத்தில் கிடைக்காது க்கா.
நான் அவருக்கு தேவையானதை செய்யுறதுக்கும் சமைச்சு போடுறதுக்கும் அவருக்கு தகுந்த மாதிரி நடந்துக்குறதுக்கும் இரண்டு காரணம் தான் இருக்க முடியும்.
ஒண்ணு அவருக்கு பயந்து இதெல்லாம் பண்ணணும். நான் அவருக்குப் பயப்படலை.
அப்போ அது முழுக்க முழுக்க அன்பு மட்டும்தேன்னு எனக்குத் தோணுது.”
“உன்னைச் சின்ன பொண்ணுனு நினைச்சேன். எவ்வளவு அழகா பேசுற தெரியுமா?”
“..”
“இதெல்லாம் உன் புருஷன்ட்ட பேசிருந்தா அவன் எப்பவோ உன் கால்ல விழுந்துருப்பான்.”
“நமக்கு பிடிச்சவங்களை சுதந்திரமா விடுறது தானே நாம வைக்குற அன்புக்கு அழகு.
நான் இதெல்லாம் பண்றேன் பதிலுக்கு நீ என்ன பண்ண போறனு பேரம் பேசி அன்பை வர வைக்க முடியாது தானக்கா..”
“ம்ம் கரெக்ட் தான்..”
“என்னாச்சு ஏதோ யோசிக்குறீங்க?”
“இல்ல உன்னை முன்னாடியே சந்திச்சுருந்தா நான் டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்க மாட்டேனோனு தோணுது.”, என்றதில் செங்காந்தளின் பார்வை அவளை கனிவாய் ஏறிட்டது.
“!!”
“கூண்டுக்குள்ளே அடைச்சு வைக்குறதை விட கதவைத் திறந்து வைச்ச பிறகும் அங்கேயே இருக்க நினைக்குறது ஆகச் சிறந்த காதல்னு எங்கேயோ படிச்சுருக்கேன். இன்னைக்கு அந்த காதலை கண்ணால பார்க்குறேன் செங்கா.”, என்றதில் சிறிதான வெட்கப் புன்னகை.
“இவ்வளவு அன்பை மனசுக்குள்ளே வைச்சுகிட்டு அவன்கிட்ட கொஞ்சமாவது வெளிக்காட்டலாம்ல?”
“அதான் பண்றேனே அவருக்கு பிடிச்ச மாதிரி சமைக்குறேன் அவரு நினைக்குறதை சொல்லாமயே புரிஞ்சுக்குவேன்.”
“ஆத்தா நிறுத்து இதெல்லாம் என் கொள்ளு பாட்டி கூட பண்ணிருப்பாங்க.”
“வேற என்ன க்கா?”
“என்னனு என்னை கேட்டால் என்ன சொல்றது? அவனோட எதிர்பார்ப்பு இல்ல அவன் உன்கிட்ட இன்டேரெக்ட்டா கேட்குற எதாவது விஷயம் அது என்னனு யோசிச்சு பண்ணு.
இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி காதலை ஓகே பண்ண வைக்க செய்ய வேண்டிய வேலை நீ என்னடானால் கல்யாணம் பண்ணி புள்ளை பெத்த அப்பறம் உட்காந்து கேட்டுட்டு இருக்க..”
“நானா போய் அவர்ட்ட பேசினதே இல்லையே?!”
“அப்போ முதல்ல போய் அதை பண்ணு போ..”, என்றவள் செங்காந்தளின் கழுத்தைப் பிடித்து ஆட்டினாள்.
மதியத்திற்கு மேல் தீப்தி சற்றே தூக்க கலக்கத்தில் படுத்த ஆரம்பிக்க ருத்ரேஸ்வரனுக்கு அழைத்துக் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தாள் செங்காந்தள்.
ரம்யாவிடம் பேசியதெல்லாம் அசை போட்டவளுக்கு மனம் மொத்தமும் மாமன் தான் நிறைந்திருந்தான்.
எப்போதாவது கணவனின் மீதான அதீத தேடல் தலைத் தூக்கும் போதெல்லாம் அவளுக்கான ஒரே ஆறுதல் அந்த பாடல்.
இன்றும் வீட்டின் பின்புறத்தில் அமர்ந்திருந்தவள் மகள் விளையாடுவதைப் பார்த்த வண்ணம் நிலவு மகளின் குளிரில் பாடலில் தன்னைத் தொலைத்திருந்தாள்.
“அணைத்து நனைந்தது
தலையணைதான் அடுத்த
அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது
உனக்கெனத்தான் இடுப்பை
வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகசிறை இருப்பாயோ”
பாடல் முடியும் போது பக்கத்தில் சிறு அரவம் கேட்டு செங்காந்தள் தலையைத் திருப்பும் நேரம் ருத்ரேஸ்வரன் ஒரு படியிறங்கி அவளருகில் அமர்ந்திருந்தான்.
“எப்போ வந்தீக மாமா வண்டிச் சத்தமே கேட்கலை..”
“இப்போதேன். பாப்பா வந்து தூங்கினாளா?”
“ம்ம் அதேன் இப்போ ஒரே ஆட்டம். உள்ளுக்குள்ளே வைச்சு சமாளிக்க முடியலை.”
“ரம்யா ரொம்ப பேசுவா. உனக்கு இன்னைக்கு அங்கே போனது ஓகே தான? அவ பாப்பாவையும் கூட்டிட்டு வர சொன்னதில் மறுக்க முடியலை”
“நல்லா பேசிட்டு இருந்தாங்க. உங்க ப்ரெண்ட்னு சொன்னா நம்பவே முடியலை.”, என்றதில் லேசாய் சிரித்தான் ருத்ரேஸ்வரன்.
செங்காந்தள் கணவனையேப் பார்த்திருக்க அவள் புறம் தலையைத் திருப்பியவன் மனைவியின் கண்களைத் தான் பார்த்திருந்தான்.
“ஏன் நான் பேசாமயே இருக்குறதுனால அப்படி சொல்றியா?”
“ம்ம்.. அவுக பேசுற வாயை நிறுத்த மாட்றாக. நீங்க இரண்டு வார்த்தைக்கு மேல பேசவே மாட்டீகளே.”
“காலேஜ் போயிட்டு இருந்த வரை பேசுவேன் தான். அப்பறம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு..”
“என்னால தானோ?!”
“அப்படினு இல்ல. ஏன் நீயும்தேன் பேசுறதே இல்ல..”
“அது உங்களுக்கு பிடிக்குமோ என்னமோனு அமைதியாவே இருந்துட்டேன்.”
“பிடிச்சா நிறைய பேசுவியா அப்போ?”, என்றதற்கு செங்காந்தளிடத்தில் அமைதி தான் நிலவியது.
“நேத்து ஏதோ யோசனையில் பேசிட்டேன். எதுவும் மனசுல வைச்சுக்காத காந்தா.”
“அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் மாமா. உங்களுக்கு என்ட்ட இல்லாத உரிமையா?”, என்றதில் அவளது இடக்கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொள்ள ஒரு நொடி கையிலிருந்த சிறு சிறு ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துப் போனது செங்காந்தளிற்கு.
“வாழ்க்கையில் நிறைய தொலைச்சுட்டோம். இனியும் அப்படியிருக்க வேண்டாம்னு நினைக்குறேன்.”, என்றவனின் கரம் மனைவியின் கரத்தை அழுத்திக் கொடுக்க உள்ளுக்குள் பரவசமாய் இருந்தது பெண்ணவளிற்கு.
“ப்பா நானு..”, என்று வந்த மகள் அவள் கரத்தையும் அவர்களோடு கோர்த்துக் கொள்ள இரு சிறு கரங்களையும் தனக்குள் வைத்து பத்திரமாய் அழுத்திப் புன்னகைத்தான் ருத்ரேஸ்வரன்.
“ப்பா நீ இப்படி அம்மா பக்கத்தில் உட்காந்து பேசுறது நல்லாயிருக்கு. இப்படியே இரு இனிமே.”
“அதுக்கென்ன பேசிட்டே இருந்துட்டா போச்சு.”
“அப்போ அம்மாக்கு ஐ லவ் யூ சொல்லு ப்பா..”
“எது?? பாப்பா இதெல்லாம் எங்கே கத்துக்குற நீ..”
“காலையில ஒரு அத்தை மாமாவெல்லாம் பார்த்தோமே அவாங்க எல்லாம் எனக்கு ஐ லவ் யூ சொன்னாங்க.
ஏன் என்கிட்ட சொல்றீங்கனு கேட்டா அவங்களுக்கு எல்லாம் என்னை ரொம்ப பிடிச்சுருக்காம். அதனால சொன்னோம்னு சொன்னாங்க மா”
“..”
“உனக்கும் அம்மாவைப் பிடிக்கும் தானப்பா?”
“…”
“ப்பா சொல்லு? பிடிக்கும்ல?”
“ம்ம்..”
“அப்போ ஐ லவ் யூ சொல்லு ப்பா..”, என்று கரத்தை அவனிடத்தில் கொடுத்திருந்த படியே குதித்தாள் தீப்தி.
“பாப்பா அம்மாக்கு வேலையிருக்கு. அப்பாவோட விளையாடு”, என்றவள் எழ முயற்சித்த நேரம் தன்னுள் இருந்த அவள் கரத்தை விடாமல் அழுத்தியவனாய் மகளிடம்,
“நான் சொல்லணும்னால் அம்மாவும் சொல்லணுமே பாப்பா?”, என்றதில் மொத்தமாய் சிவந்து போனாள் செங்காந்தள்.
“அதெல்லாம் அம்மா சொல்லுவா.. நீ சொல்லுப்பா முதல்ல..”
“பேச்சு மாறக் கூடாது..”, என்றவனின் பார்வையில் சிரிப்பிருக்க செங்காந்தளோ கையை உருகி கொண்டு உள்ளே ஓடியிருந்தாள்.
குழந்தை தாயைப் பிடிப்பதற்காக உள்ளே ஓட ருத்ரேஸ்வரன் புன்னகை முகமாய் வானத்து நிலவை வெறித்திருந்தான்.
அதன் பின் செங்காந்தள் கணவனின் கண்களில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.
இரவு உணவை முடித்து தீப்தியிடம் பால் டம்ளரை கொடுப்பதற்காகத் தேட காமாட்சியின் அறையில் அமர்ந்து பாட்டியிடம் கதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“பாப்பா நேரமாகுது பாலை சாப்பிட்டு தூங்க வா..”
“ம்மா நான் ஆச்சியோட தூங்க போறேன்.”, என்றதில் செங்காந்தள் மாமியாரைப் பார்க்க காமாட்சி தான் பார்த்துக் கொள்வதாய் கூறிவிட்டார்.
இது அவ்வப்போது நடப்பது தான் ஆனால் இன்று ஏனோ இது மாமியாரின் யோசனை என்று தோன்றியது செங்காந்தளிற்கு.
ஒன்றும் கூற முடியாமல் அமைதியாய் தங்களறைக்கு வந்தவளுக்கு மனம் நிலையின்றி படபடத்தது.
இரவு உடையை எடுத்து வைத்து ஏதோ யோசனையிலேயே புடவைத் தலைப்பை இறக்கிய நேரம் ருத்ரேஸ்வரன் உள்ளே வந்திருக்க சட்டென அவள் புடவையை மேலே ஏற்றியிருந்தாள்.
வழக்கமாய் இது போன்ற நேரங்களில் அவன் தானாகவே வெளியேறி விடுவான். உடை மாற்றிய பின் செங்காந்தள் கதவைத் திறக்க அதன் பின்னே உள்ளே வருவான்.
இன்றோ அவன் சாதாரணம் போல் உள்ளே வந்து கதவையும் பூட்டி விட்டு தனது சட்டையை மாற்ற ஆரம்பித்ததில் எப்படி உணர்கிறோம் என்றே புரியாத நிலை செங்காந்தளிற்கு.
ருத்ரேஸ்வரன் தன் போக்கில் உடை மாற்றி கட்டிலில் அமர அதன் பின்னே உணர்வு பெற்றவளாய் வேகமாய் நைட்டியை அணிந்து கொண்டு விளக்கை அணைத்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
error: Content is protected !!