Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கரை தாண்டா அலைகள்

அலை-2

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்

மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

கணவனுக்கு காபி கொடுத்து வந்த செங்காந்தள் மகளைப் பள்ளிக்கு கிளப்புவதற்காக அறைக்குள் சென்றிருந்தாள்.

போர்வை ஒரு புறமும் தான் ஒரு புறமும் என உறங்கிய மகளைப் பார்த்து புன்னகைத்தவளாய் அவளருகில் சென்று அமர்ந்து தலையை வருடினாள்.



Advertisement

“தீபு பாப்பா எழுந்துரு தங்கம். ஸ்கூலுக்கு போகணும்ல.”

“ம்மா.. இன்னைக்கு நான் லீவ்..”, என்றவள் தாயை தன்னருகில் படுக்க வைத்து இடையோடு கட்டிக் கொண்டாள்.

“தங்க பிள்ளை அம்மா சொன்னா கேட்பாளே.. எந்திரி டி.”

Advertisement

“…”

Advertisement

“ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தா சாயிந்திரம் நீ கேட்ட வெங்காய பக்கோடா போட்டு வைச்சுருப்பேன்.”

“நிஜமா?”

“நிஜமா டி ராசாத்தி..”, என்றவள் மகளின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

Advertisement

அதில் புன்னகைத்த வண்ணம் சிறியவள் எழுந்து அமர தானும் எழுந்து புடவையை சரி செய்து கொண்டவளாய் மகளை அப்படியேத் தூக்கியிருந்தாள்.

வீட்டின் பின்பக்கத்தில் ஐந்து நிமிடம் கோழி ஆடுகளை வேடிக்கைப் பார்த்த படி பல்லைத் தேய்த்தால் தான் மகளை விரைவாக கிளப்ப முடியும் என்பதால் அங்கு அழைத்துச் செல்ல அவள் தண்ணீர் வடிய போட்டிருந்த துணிகளை எல்லாம் ருத்ரேஸ்வரன் உலர்த்தி முடித்திருந்தான்.

“ப்பா…”, என்று மகள் தந்தையிடம் ஓட எப்போதும் போல் கணவனின் பின்னே ஓடிய மனதையும் விழியையும் கடினப்பட்டு நகர்த்தி உள்ளே சென்றாள் செங்காந்தள்.

கணவனின் பேச்சு வார்த்தைகள் தான் குறைவே தவிர அவளுக்கான அத்தனை விதமான உதவிகளையும் எவ்வித தயக்கமுமின்றி செய்து கொடுப்பான் ருத்ரேஸ்வரன்.

மகள் இனி சீருடையிட்டு உணவை முடிப்பது வரை அவன் பொறுப்பு தான்.

அவள் கருவுற்ற காலத்திலுமே அவளுக்கு வேண்டியது பிடித்தது என அவளிடம் கேட்டு வாங்கி வந்து கொடுப்பான்.

மனமொத்த தம்பதிகளாய் மனம் விட்டு பேசி வாழவில்லையேத் தவிர என்றும் அவனது ஆண்மையை அவள் மேல் திணிக்க நினைக்காத ஒருவன் தான் தன் கணவன் என்பதிலேயே பெரும் பிரியம் பெண்ணவளுக்கு.

“செங்கா…”

“இதோ வரேன் அத்தை..”, என்றவள் வாசலில் சீயக்காயை காய வைக்க எடுத்து வைத்துக் கொண்டிருந்த காமாட்சியிடம் சென்றாள்.

“சொல்லுங்க அத்தை..”

“எத்தா அந்த சிவசாமி பேத்தி கல்யாணம் இன்னைக்குத் தானே?”

“ஆமா அத்தை.”

“இரண்டு பேரும் போயி வந்துருங்க. ஒண்ணும் கிளம்பினாப்புல தெரியல?”

“பாப்பாவை ஸ்கூலில் விட்டுட்டு வந்து போறோம் அத்தை. இல்லைனால் லீவு போடணும்னு அழுவா.”

“அதுவும் சரிதேன். அப்பறம் மதியானமா போய் இதை அரைச்சு வந்துருவோம் என்ன நல்லா காய்ஞ்சுதேன் இருக்கு.”

“சரி அத்தை நானே போயிட்டு வந்துருவேன்.”

“இந்த ராணி எங்கன இருக்கா? கனகா வீட்டில போய் முதல் பாலை வாங்கிட்டு வானு ஆயிரம் வாட்டி சொன்னாலும் கேட்குறதில்ல.”

“நான் காலையிலேயே வாங்கிட்டு வந்துட்டேன் அத்தை. ஆகாஷ் ராத்திரி தூங்கவே நேரமாக்கிட்டான். அதான் கண்ணசந்துருப்பா.”

“ம்ம் அவளை விட்டு கொடுத்துருவியா நீயி. சரி போய் வேலையைப் பாரு.”, என்றவருக்கு புன்னகைத்து உள்ளே வந்த நேரம் தந்தையும் மகளுமாய் உணவு மேசைக்கு வந்திருந்தனர்.

“ம்மா புது சோப்பு வாசனை பாரு..”, என்று மகள் நீட்டிய கரத்தை வாசம் பிடித்த வண்ணம் மகளிடம் புருவத்தையும் கண்களையும் விரித்து புன்னகைத்தாள்.

இருவருக்குமாய் செங்காந்தள் உணவைத் தட்டில் வைக்க ருத்ரேஸ்வரன் உண்ண ஆரம்பித்தவுடன் மகள் அருகில் அமர்ந்தவள் இட்லிகளைப் பிய்த்து தட்டில் போட்டாள்.

“ப்பா..”

“ம்ம்?”

“என் க்ளாசில் தனலெட்சுமினு ஒருத்தி இருக்கா.”

“ஆமா சொல்லிருக்கியே..”

“அவ சொல்றா அம்மா அழகாயிருக்காங்களாம். அவங்க வளையல் பொட்டு சேலை எல்லாம் நல்லாயிருக்காம்.”, என்றதில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள செங்காந்தள் சட்டென பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“அப்படியா?”

“ஆமா.. அப்பறம் தான் நானும் பார்த்தேன். அம்மா ரொம்ப அழகாயிருக்கா இல்ல?”

“…”

“ப்பா உன்ட்ட தான் கேட்குறேன். சொல்லு.”

“ம்ம் ஆமா..”

“உன்னை விடவும் அம்மா தான் ப்பா அழகு.”, என்றதில் செல்லமாய் மகளை முறைத்தான் ருத்ரேஸ்வரன்.

“நிஜமா தான் நீயே பாரு.”, என்றவள் இடது கையால் தந்தையின் முகத்தை தாயின் புறம் திருப்பியிருந்தாள்.

“பாப்பா போதும் போதும். நேரமாகுது பாரு. சீக்கிரம் சாப்பிட்டு முடி.”, என்றவள் வேலை இருப்பதைப் போன்று சமையல் கட்டிற்குள் சென்றிருந்தாள்.

உணவை முடித்து மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டு விட்டு ருத்ரேஸ்வரன் அறைக்குள் வந்த நேரம் பட்டுப்புடவைக் கட்டி தயாராகியிருந்தவள் தலைக்கு மல்லிச் சரத்தைச் சூட்டிக் கொண்டிருந்தாள்.

“போய் ஓரெட்டு தலையை காட்டிட்டு கிளம்பிரணும். தோப்பில் லோட் ஏத்தணும்.”

“சரிங்க மாமா போலாம்.”, என்ற படி மொய் கவரை அவனிடம் கொடுக்க சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அதனுள் வைத்து சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

“சர்வா எங்கே காலையிலேயிருந்து காணும்?”

“அவுக ராத்திரி வீடு வரவேயில்லங்க மாமா.”, என்றதில் புருவம் சுருக்கியவனாய் வெளியே வர லிங்கா சரியாய் உள்ளே நுழைந்தான்.

“லிங்கா சின்னவன் ராத்திரி வீட்டுக்கே வரலையாமே எங்கே போனான்?”

“தெரியலை ண்ணே. நானும் போன் போட்டு பார்த்தேன் எடுக்கலை. அந்த வீணா போனவனுங்களோட எங்கேயாவது போயிருப்பான். நான் என்னனு பார்க்குறேன்.”

“சரி எனக்கு என்ன ஏதுனு போன் போட்டுச் சொல்லு.”

“ம்ம் சரி ண்ணே.. மதினி இந்தாங்க வாழை ஏத்துன காசு.”

“நான் உள்ளே வைச்சுரேன் அத்தான். அத்தைட்ட எம்புட்டுனு சொல்லிருங்க.”

“சரி மதினி.”, என்றவனிடம் விடை பெற்று வாசலுக்கு வந்து காமாட்சியிடம் கூறிக் கொண்டு கிளம்ப எத்தனிக்க அவர் எப்போதும் போல் எதிரில் யார் வருகிறார் என்று பார்த்து இருவரையும் கிளம்பச் செய்தார்.

கணவனின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவள் அவனது தோளை அழுத்தமாய் பற்றிக் கொண்ட படி புடவையை சரி பார்த்து நன்கு பிடித்துக் கொண்டாள்.

இருவரும் மண்டபத்திற்குள் நுழைந்த நேரம் எதிர்படும் அனைவரும் வணக்கம் வைத்து ருத்ரேஸ்வரனிடம் பேசிச் செல்ல செங்காந்தளுக்கும் புன்னகை முகமாய் உபசரித்துச் சென்றனர்.

மணமகன் வீட்டார் செங்காந்தளின் தாய் தந்தைக்கும் சொந்தமாய் இருக்க அவர்களும் வந்திருந்தனர்.

“வணக்கம் மாப்பிள்ள.. எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் மாமா. நீங்க எப்படியிருக்கீங்க. அத்தை நல்லாயிருக்கீங்களா? பள்ளிகொண்டான் எப்படியிருக்கான்?”

“நாங்க நல்லாயிருக்கோம். அவனும் நல்லாயிருக்கான். அவன் பொண்டாட்டி வழியில் வேற கல்யாணம் ஒண்ணு இன்னைக்கு அதேன் அங்கே போயிருக்காங்க.”

“ஓ நல்லது. காந்தா நீ பேசிட்டு இரு. கிளம்பும் போது கூப்பிடுறேன்.”, என்றதற்கு தலையசைத்து தாய் தந்தையோடு அமர்ந்தாள்.

“செங்கா எப்படியிருக்க? பார்த்து மாசமாச்சே? பிள்ளையை கூட்டி வரலையா?”

“இல்ல மா தொழில் முறை பழக்கம் தானே அதான் ஸ்கூலுக்கு போட்டும்னு அனுப்பிட்டோம். நான் நல்லாயிருக்கேன் நீங்க எல்லாரும் எப்படியிருக்கீங்க”

“இருக்கோம் டி. உன் அண்ணிகாரி படுத்துற பாடு தான் உனக்குத் தெரியுமே காசு காசுனு போட்டு உன் அண்ணனைப் பாடா படுத்துறா.

இரண்டும் கொஞ்சமும் திருந்தல. இன்னைக்கு கல்யாணத்துக்கே புது புடவை என்ன ரவிக்கை என்ன.

உன் வீட்டில இல்லாத பணமா ஆனால் மப்பிள்ளையை பாரு எம்புட்டு அடக்கமா எல்லாருட்டேயும் நடந்துகிடுதாக.

ஆனால் உன் அண்ணன் என்னவோ டெல்லிக்கே ராஜாவாட்டம் தான் தலைகீழா நிக்கான்.”

“விடும்மா எல்லாம் தெரிஞ்ச கதை தானே. நீ எதாவது பேசி வாங்கி கட்டிக்கிடாத.”

“நல்லா சொல்லு செங்கா. புலம்பிகிட்டே கிடக்கா. எம்புட்டுச் சொன்னாலும் புத்திக்கு உரைக்கலை.”

“சரிப்பா நீங்க கத்தாதீக அம்மைக்கு ஏதோ மனசு ஆத்தாமை. விடுங்க.”

“ஏன் டி நீ ஒரு இரண்டு நாள் வந்து தங்கலாம்ல பேத்தியை பார்க்கணும்னு எங்களுக்கும் இருக்காதா..”

“வாரேன் மா. இங்கேயே வேலை சரியா இருக்கு.”

“என்னவோ டி உன் மச்சினன் பொண்டாட்டி பாதி நாள் ஆத்தா வீட்டுக்கு போயிடுதா இல்லையா பிள்ளையை வைச்சே நேரத்தை கடத்திடுதா. நீதேன் பாடு பாக்குற..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மா. வேலைக்கு தான் பொன்னி இருக்காளே. சமையலுக்கு மட்டும் தேன்”

“என்னவோ போ.”, என்ற நேரம் ருத்ரேஸ்வரன் அவர்கள் அருகில் வந்து போகலாம் எனும் விதமாய் மனைவியிடம் தலையசைத்தான்.

“மாப்பிள்ளை வீட்டுக்கு வாங்களேன். இவளும் வந்து மாசமாச்சு..”

“வேலை சரியா இருக்கு அத்தை. இவளையும் பிள்ளையையும் அனுப்பி வைக்குறேன். நான் வந்து கூப்பிட்டுக்குறேன்.”, என்றவன் மனைவியோடு மேடையேற வரிசையில் அவர்களுக்கு முன்னிருந்த பெண் செங்காந்தளைப் பார்த்தவுடன்,

“செங்கா மதினி நல்லாயிருக்கீகளா? பார்த்து எம்புட்டு நாள் ஆச்சு. என்ன வேணா சொல்லுங்க கட்டுன மடிப்பு கசங்காம இருக்க உங்களாலதேன் முடியும்.”

“போதும் டி மூச்சு வாங்கிக்கோ.”, என்றவள் மெலிதாய் சிரித்தாள்.

“எங்க ருத்ரா அண்ணனுக்காகவே பிறந்தவுக நீங்க. இரண்டு பேரும் வீட்டுக்கு போய் சுத்தி போடுங்க. நானே கண்ணு வைச்சுப்புட்டேன்.”, என்றவள் திருஷ்டி சுத்தி சிரித்து நகர்ந்தாள்.

அனைவரிடமும் விடைபெற்று வெளியே வந்து ருத்ரேஸ்வரன் வண்டியை உயிர்பிக்க செங்காந்தள் அவனிடம்,

“என்னைய அந்த துணிக்கடையில வீட்டுருங்க மாமா. நான் வீட்டுக்கு போயிக்குறேன்.”

“வேலை கிடக்குனு சொன்னேனே. எதுவும் அவசரமா?”

“இல்ல அது.. நானே..”

“தனியா எல்லாம் போகாத நானே சாயிந்திரம் வந்து கூட்டிப் போறேன்.”

“சரி மாமா..”, என்றவள் அதற்கு மேல் வாதாடாமல் வண்டியில் அமர்ந்து கொண்டாள். வீட்டு வாசலில் மனைவியை இறக்கி விட்டவன்,

“என்ன வேணும்னு சொல்லு நானே வாங்கிட்டு வந்துரேன்.”, என்றதும் தயங்கியவள் அக்கம் பக்கம் பார்வையைச் சுழற்றி நிற்க அவனே புரிந்து கொண்டவனாய்,

“சரி சாயிந்திரம் போவோம் பாப்பாவையும் ரெடி பண்ணிரு.”

“சரி..”, என்றவளின் முகமெல்லாம் ஒரு வித சிலிர்ப்பில் இருப்பது நன்றாகவே தெரிய அவள் நகர்ந்த பின் மிக மெலிதான புன்னகை அவனிடத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!