49.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,155
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 49.1
.
“ஏந்திங்க அப்பா”, தன் வயிற்றில் அமர்ந்து தன்னை உலுக்கிக் கொண்டிருக்கும் மகளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்த கௌதமன், “காக்கா குருவி கூட முழிச்சிருக்காது. அதுக்குள்ள என்ன வேல இது பேபி?” என்றான், கண்களில் வழியும் தூக்கத்தை விரட்ட மனம் இல்லாதவனாய்.
Advertisement
“அப்பா, டூ தேஸ் ஆச்சா?” எனத் தன் குட்டி விரல்கள் இரண்டை அப்பாவின் முகம் முன் நீட்ட, நீட்டிய விரல்களைப் பிடித்து செல்லமாகக் கடித்தான் தகப்பன்.
Advertisement
“அப்பாக்கு யம்மி ஸ்னாக்” எனக் கௌதமன் விரல்களைக் கடிக்க, கெக்கபிக்க எனக் குழந்தை சிரிக்க ஆரம்பித்தாள். மலர்ந்து சிரிக்கும் மகளோடு விளையாட ஆரம்பித்தான் தகப்பன்.
Advertisement
“பசிதா? இந்தாங்க” என ஒவ்வொரு விரலாக அப்பாவின் வாயில் திணிக்க, அவனும் ஒவ்வொன்றாகக் கடித்து விழுங்கி ஏப்பம் விட, “நானு நானு” என அப்பாவின் விரல்கள், கை, மூக்கு, கன்னம் எனக் கடித்து விளையாட ஆரம்பித்தாள் யாழி. என்ன… கௌதமனை போல் இவள் கடி, கிச்சுகிச்சு மூட்டாது அவ்வப்போது கூராய் சதையில் இறங்கவும் செய்தது.
Advertisement
தன் விக்கி மாமாவைப் பார்க்கும் ஆசையில் விடியும் முன்பே எழுந்த குழந்தை விடியும் வேளை அப்பாவின் மார்பில் படுத்து உறங்கியிருந்தாள். மகளின் தலை, முதுகு என வருடிக் கொண்டிருந்தவனை நிறைத்திருந்தாள் யசோ.
அவளின் குரல் கேட்க மனம் ஆசை கொண்டது. கட்டில் அருகில் இருந்த மேசையைத் துழாவிய கரத்தில் பட்டது அவன் கைப்பேசி.
அவன் அசைவில் மகள் அசைந்தாள். கையில் எடுத்த கைப்பேசியை உயிர்ப்பிக்காது மெத்தையில் போட்டான். மகளைத் தன்னோடு கட்டிக் கொண்டு கண்கள் மூடினான் கௌதமன். அதற்காகவே காத்திருந்த நித்திராதேவி அவனை கரம் விரித்து அணைத்துக் கொண்டாள்.
நேரம் கடந்தது. அழைப்பு மணி அப்பாவையும் மகளையும் எழுப்ப, மகளோடு எழுந்து வந்தான் கௌதமன். அரவிந்தன் நின்றிருந்தார்.
“வாங்க ஐயா… வாக்கிங் முடிச்சுட்டு வர்றீங்களா?” என அவரை வீட்டினுள் அழைத்தான்.
“இல்ல பா உள்ள வரல… சும்மா எட்டி பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்றவர் வாயிலில் நின்று கொண்டார்.
“தனியாவா வாக்கிங் போனீங்க?”
“எப்பவும் போறது தான? என் ஃப்ரெண்டு ஃபோன் போட்டிருந்தான், அவன்ட்ட பேசிட்டே வந்ததுல மனசு பூரா அடச்சு வச்சிருந்த பாரம் எல்லாம் இறங்கி ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,” என்றவர் அத்தோடு நிறுத்தாது, தோழனோடு பேசியதை ஓரிரு வாக்கியத்தில் அடக்கினார்.
“தாத்தா” என அவரிடம் பாயப் போன மகளிடம், “தாத்தாக்கு கைல வலி பேபி. தாத்தாவால தூக்க முடியாது” என மகளைக் கீழே இறக்கி விட்டான் கௌதமன்.
அரவிந்தன் இதயத்தை நீவி விடாது இருந்தால், இவன் இதயத்தின் விருப்பத்தையும் இறக்கி வைத்திருப்பான். அவர் பாரம் இறங்கி இருக்க, இவனுக்கு இதயம் கனத்தது.
“வலிதா தாத்தா…” என உதட்டைப் பிதுக்கிய மகள், அறைக்குள் ஓடிச் சென்று அலமாரியில் இருந்த வலிநிவாரணி தைலத்தைத் தூக்கி வந்தாள்.
அதைத் தானே அப்பா தலைவலிக்குத் தேய்ப்பார் என்ற எண்ணத்தில், “வலி போயிலும் தாத்தா” என அதை அரவிந்தன் கையில் கொடுத்தாள்.
இதோ… இந்தக் குணம் தானே, இரத்த சம்பந்தமே இல்லாது போனாலும், அரவிந்தனால் இவர்களை விடமுடியவில்லை.
“காலை டிஃபனுக்கு இட்டிலி மாவு இருக்கு. சாம்பார் வச்சிடுறேன். பாப்பாக்கு மதிய சாப்பாட்டுக்கு எதுவும் செய்யாத. மதியமா நான் போய் கொடுத்துட்டு வரேன்” என்றவர், “கிளம்பி வாங்க” என வீட்டை நோக்கி நடந்தார்.
செல்லும் அவரையே விழி அகற்றாது பார்த்து நின்றிருந்தான் கௌதமன். இவர்களோடு தனக்கு என்ன பந்தம்? இவருக்காக… இவரின் உடல்நலனுக்காக ஏன் தனக்குள் ஒரு பதற்றம்? யசோவின் தகப்பன் என்பதாலா? இல்லை… இவரை முதன்முதலாக மகாபலிபுரத்தில் பார்த்த அன்றே இவரின் மீது ஏதோ ஒரு பிடித்தம் தோன்றியதே.
சற்று முன்பு, அவர் அவன் தலையில் இறங்கிய இடியால் கூட அவர் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தையும் மரியாதையையும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“அப்பா பிக்கி மாமாட்ட போவாமா?” என்ற கேள்வி கௌதமனை மீட்டு வர, “ம்ம்ம் போலாம். ஸ்கூல் போயிட்டு வந்ததும் போலாம். அதுக்கு முதல்ல பல்தேய்க்கணும், குளிக்கணும், சாப்பிடணும்… வேற என்ன செய்யணும்?” என மகளோடு செல்லம் கொஞ்சிக் கொண்டே கிளம்பச் சென்றான்.
காலை ஒன்பதைத் தொட்டிருந்தது அப்பாவும் மகளும் விளையாட்டு விடுதியை வந்து சேர. “லன்ச் யாழியோட தாத்தா வந்து தருவாங்க. இன்னைக்கு நான் வரக் கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். மலர் வரமாட்டாங்க. நான் வர வரைக்கும் பார்த்துக்கோங்க” என யாழியின் ஆசிரியையிடம் கூறியவன்,
“அப்பா வர வரைக்கும் ஆண்ட்டி கூட விளையாடிட்டு இருக்கணும் சரியா?” எனவும், “ஓகே அப்பா. அப்பா வந்தப்பளம் பிக்கி மாமா பாக்லாம்” என உற்சாகமாகத் தந்தையை வழி அனுப்பி வைத்தாள் குட்டி யாழினியாள்.
தன் பிக்கி மாமனைக் காணப்போகும் உற்சாகம் மகளிடமிருந்து தகப்பனுக்குத் தொற்றிக் கொண்டது போலும், கௌதம் முகத்திலும் புன்னகை அப்பிக் கொண்டது.
நல்ல மனநிலையில் ‘செட்’டிற்கு சென்றவனுக்கு நாள் ஒன்றும் அப்படிப் பிரமாதமாக இல்லை. பத்தரை மணிக்கு ஏழரை ஆரம்பமானது… அதாவது முதலாவது “ஆக்ஷன்” ஆரம்பித்தது.
“ஆக்ஷன்”, “கட்”, “ஆக்ஷன்…”, “கட்” என இன்னும் எவ்வளவு நேரம் இதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? கதாநாயகன், நல்ல நடிகன் தான். ஆனால் இன்று அவனுக்கு என்னதான் ஆனதோ?
பழகிய குதிரைக்கும் அவனுக்கும் இன்று மோதிக் கொண்டது. அவனைக் கீழே தள்ளுவதிலேயே முனைப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது குதிரை. அவனும் அதுவும் ஒன்று சேர்ந்து நடிப்பதை விடுத்து இயக்குநரின் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொண்டிருந்தனர். கௌதமன் பெருமூச்சோடு ராஜீவனைப் பார்க்க அவனும் உதட்டைப் பிதுக்கினான்.
மதியம் வரை இதுவே நீண்டது. இயக்குநர் எரிச்சலின் உச்சத்தை அடைந்தார். ஏதேனும் கூறிவிட்டால், நாயகன் கோபித்துக் கொண்டு கிளம்பிவிடுவான். அதன்பின் அவன் காலில் விழுந்து அவனை மலை இறக்க வேண்டும் என்பதால் விருப்பமே இல்லாது நாசுக்கைக் கைபிடிக்க வேண்டியதாகப் போனது.
“அந்த குதிரக்கு என்ன எழவுன்னு பாருங்கடா” என வாய் பேச முடியாத குதிரையிடம் தன் எரிச்சலை காட்டினார் இயக்குநர். படக் குழு பெருமூச்சு விட்டது.
“உடம்பு முடியல. மூக்கும் நமநமன்னு இருக்கு. தொண்டையும் வலிக்குது. ஃபீவர் மாதிரி இருக்கு. பிரேக் வேணும். நாலு நாள் போகட்டும், எக்ஸ்ட்றா டைம் போட்டு அப்பறம் நடிச்சு தரேன்” எனச் சிவக்க ஆரம்பித்த கண்களோடு கதாநாயகன் கிளம்பிவிட, இயக்குநர் மறுப்பாக எதுவும் கூறாது, “பேக் அப்” எனக் கூறிக் கிளம்பிவிட்டார்.
இயக்குநரின் தலைவலிக்கான மருந்து கிடைத்துவிட்டது. ‘பேக் அப்’ எனக் கிளம்பிவிட்டார். இனி வாசுதேவன் பாடு. பணம் வாங்குபவனுக்கு வலிக்குமா? இல்லை பணம் போடுபவனுக்கு வலிக்குமா?
தன் செயலாளர் மூலமாக விஷயம் கேள்விப்பட்ட வாசுதேவன், “இவனுங்களோட…” எனத் தலையில் கைவைத்தார். கதாநாயகன் மருந்து உண்டானா… தூங்கி விழித்தானா… உடல் சரியானதா என்ற தலைவலிகள் வாசுதேவன் தட்டுக்கு இடம் மாறியது.
இன்று கரு மேகம் இல்லாததால் வானம் பளிரென இருந்தது. கடந்த ஒரு வாரமாக குளிர்ந்திருந்த திருச்சி, மீண்டுமாக கோடை வெப்பத்தால் புழுங்கி வழிந்தது.
திடீர் திடீரென மாறும் சீதோஷ்ணம் பலரின் மூக்கைப் பதம் பார்த்திருக்க, கௌதமனின் கங்காரு குட்டியும் மூக்கைத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள். சளியாக அது உருவெடுக்காது இருக்க வேண்டும் என்பது கௌதமனின் வேண்டுதல்.
“பார்த்துக்கோ கௌதமா” என இயக்குநர் கிளம்பிவிட, நண்பர்கள் நிதானமாகத் தேநீரோடு அமர்ந்தனர். “இந்த மாசத்தோட ஷூட் முடிஞ்சிடும்ன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவன்.
“அடுத்து ரிலீஸ் ஆகபோற பட பிரமோஷனுக்காக நம்ம ஹீரோ, முகேஷ் துபாய் போரதுக்குள்ள இத முடிக்கிறதா இருந்துது. ஏற்கனவே பத்து நாள்கிட்ட வரல. இப்போ திரும்பவும் சளி பிடிக்க போகுதுன்னு பிரேக்.
இந்த மாசக் கடைசிக்குள்ள முடியாது. துபாய் போயிட்டு வந்த பிறகு முழுமூச்சா முடிப்பாரா இருக்கும்.” என இவன் எண்ணத்தைக் கூறினான்.
“முடிப்பாரா?”
“முதல் முதலா இவருக்கு பிரேக் கொடுத்ததே அப்பா தான். அதனால முகேஷுக்கு அப்பான்னா ஒரு தனி மரியாதை. இழுத்தடிக்க மாட்டார். அப்பான்னு இல்ல, இவர் ரொம்ப டிசிப்பிளின்ட். இப்போ ஃபேமிலில கொஞ்சம் பிரச்சினை.
அவருக்கு அம்மா மட்டும் தான். அவங்களுக்கும் உடம்பு முடியல போல… அதுதான் பேலன்ஸ் பண்ண முடியாம கஷ்டப்படுறார். அடுத்தவங்க உழைப்பையும், நேரத்தையும், அவங்க பணத்தையும் வீணாக்கமாட்டார்” எனத் தன் தோழனான முகேஷிற்குப் புகழ் ஆரம் சூட்டினான் கௌதமன்.
“நீ சொன்னா சரி தான்” எனப் புன்னகைத்தான் ராஜீவன்.
பேசிக்கொண்டிருந்தவர்கள் மூக்கைப் பதம் பார்த்தது சிகரெட் நாற்றம். ராஜீவன் முகம் சுளித்ததோடு நிறுத்திக் கொண்டான். ஆனால், கௌதமனுக்கு கோபம் சட்டென வந்தது.
“யார்டா அது இங்க ஸ்மோக் பண்றது?” எனச் சத்தம் எழுப்பினான். தீப ஆராதனையோடு நல்ல வார்த்தைகளால் அர்ச்சனையை முடித்தவனை நம்பாத பார்வை பார்த்தான் ராஜீவன்.
‘யார் டா நீ?’ எனப் பார்த்தவனை, ‘என்ன?’ என்ற இவன் பார்வை எதிர்கொண்டது.
‘இல்லை’ எனும் விதமாகப் புன்னகைத்தவன், கையில் இருந்த தேநீரை வாய்க்குள் இறக்கினான். விக்ரம் சொல்லிக் கேட்டிருக்கிறான் கௌதமனை பற்றி. அவன் உருவகப் படுத்தியிருந்தவனுக்கும் இவனும் ஒற்றுமையைத் தேடித் தோற்றான் ராஜீவன்.
“நீயும் அவனும் ஆப்போசிட் போல்ஸ்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, உனக்கும் அவனுக்கு பெருசா எந்த வித்தியாசமும் இல்ல. அத நினைச்சு சிரிச்சேன்” என்றான் ராஜீவன்.
கௌதமன் எதுவும் கூறவில்லை. விக்ரம் கூறுவது போல், நான் முழுவதுமாக சந்திரமுகியாகவே மாறிவிட்டேனோ? ஏனோ அவனுள் எழுந்த எண்ணத்தை எதிர்க்கத் தோன்றவில்லை. சிரிப்பு வந்தது கௌதமனுக்கு.
கௌதமன் கரத்தில் இருந்த தேநீரைப் பார்த்த ராஜீவன், “இந்த பிளாக் டீ கூட அவன் கிட்ட இருந்து தான் பழகினேன். உன்ன மாதிரியே அவனும் சக்கரக் கூட போட்டுக்க மாட்டான். இனிப்பு, டெஸ்ஸர்ட்ல மட்டும் இருந்தா போதும்ன்னு சொல்லுவான். என்னமோ இப்போ எல்லாம் உன் கூட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அவன் தான் நினைவுக்கு வரான்” என்றான்.
அந்த ‘அவன்’ யார் எனக் கௌதமன் கேட்கவில்லை. ஆனால், அவனைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினான்.
“ரொம்ப கிளோஸ் என்ன?” என்றவனுக்கு, ‘ஆம்’ என்பதாகத் தலையசைத்தான் ராஜீவன். இல்லாத ஒருவனைப் பற்றி அறிந்துகொள்ள ஒருவனுக்கு ஆர்வம், மற்றவனுக்கு அவனைப் பற்றி அசைபோடுவதில் வாஞ்சை.
“உடம்ப கோவில் மாதிரி பார்த்துக்கணும்ன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன். அப்படின்னா என்னன்னு அவன பார்த்து தெரிஞ்சுகிட்டேன். எதுலயும் சுத்தம் பார்ப்பான். உடம்புக்கும் மனசுக்கும் கெடுதல்ன்னா, அத திரும்பிக் கூட பாக்க மாட்டான், என் வீர். தப்புன்னு தோணினா சட்டுன்னு திட்டிடுவான்.
இப்போ நீ சத்தம் போட்ட மாதிரி. உன் ஃப்ரெண்டுட்ட கேளு… அவன் தான் அடிக்கடி வாங்குவான்” என எதையோ நினைத்து நீண்ட புன்னகையை உதரவிட்டான்.
கௌதமன் அமைதியாக ராஜீவன் முகம் காட்டும் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டிருண்டிருந்தான்.
“படிப்பில நாட்டமே இல்லாம கடனேன்னு படிச்சிட்டு இருந்த எனக்குள்ள இருந்த திறமைய வளர்த்துவிட்டவன் அவன் தான். அவன் என் வாழ்க்கையில் வராம போயிருந்தா, இந்த ராஜீவன் யாருக்குமே தெரியாத ஒரு மனுஷனா இருந்துட்டு போயிருப்பேன்” என்றான்.
“எப்ப எனக்கு ஒண்ணுனாலும் முதல் ஆளா நிப்பான். நான் அவனுக்குன்னு இருந்ததே இல்ல. அவனோட ஃப்ரெண்ட் ஒருத்தி மேல எனக்கு கண்ணுமண்ணு தெரியாத காதல்.
உலகத்தோட அத்தன இனிமைகளையும் எனக்கு காட்டினவ நரகத்தையும் காட்டினா. எழுந்துக்கவே முடியாத அடி. அவன் அப்போ என் கூட நிக்கலனா, அப்படி ஒரு வலில இருந்து எழுந்து நின்னுருக்கவே மாட்டேன்.”
கூறிக் கொண்டிருந்த ராஜீவனுக்கு அது வெறும் செய்தியாக மாறியிருக்க, கேட்டிருந்தவனுக்கு வலித்தது. அவன் வலிகளை உணர்ந்த வலி.
“அவன் தாத்தா இறந்த போது தனியா நின்னான். இனி மேல் உன்ன எதுக்கும் தனியா விடமாட்டேன்னு சத்தியம் செய்தேன். ம்ப்ச்!”
இவ்வளவு நேரம் இருந்த முகபாவம் முற்றிலும் மாறியது. உஷ்ணம் பரவி ராஜீவனின் முகம் சிவந்தது. “அவனுக்கு பிரெயின் டூமர். அந்த மலைக்குப் போயிருக்கவே கூடாது. நினைவில்லாம கிடந்தவனுக்கு நீ பிளட் கொடுத்தியே… அந்த டிரிப்… அதுதான் அவனுக்கு எமனாயிருக்கும்ன்னு நினைக்கிறேன். இல்லாட்டா அவனுக்கு எப்படி பிரெயின் டியூமர் எல்லாம்?
என் வீர் தான் அவன் உடம்ப அவ்வளவு ஆரோக்கியமா வச்சிருப்பானே. அந்த பொண்ணு அவன பிடிச்சுட்டு விழுந்ததுக்குப் பதிலா என்னை பிடிச்சுட்டு விழுந்திருக்கலாம்! என் வீர்… என்னை விட்டுப் போயிருக்க மாட்டான்”
கௌதமனுக்கு வீரின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவே, உணர்ச்சிவசப்பட்டு சூனியத்தை வெறித்துப் பேசிக் கொண்டிருந்தவன் அனைத்தையும் கொட்டிவிடட்டும் என அமைதி காத்தான்.
“அவன் நிச்சயத்துக்கு அவனோட இருக்க முடியல. என்ன ஃப்ரெண்டுன்னு உனக்கு தோணுது இல்ல? உன் விக்ரம் உனக்கு இருந்த மாதிரி நான் என் வீருக்கு இருக்கவே இல்ல.
ஆப்பரேஷன் முடிஞ்சு டிஸ்சார்ஜ் ஆகி, முழுசா ரெக்கவர் ஆகிற வரைக்கும் கூடவே இருப்பேன்னு சொன்னேன். ஆனா அவன் வலியில துடிச்ச போது அவனோட நான் இருக்கவே இல்ல. கடைசியா அவன் முகத்தைக் கூட பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கல” எனக் கலங்கி நிற்பவனிடம் கூற கௌதமனுக்கு ஆறுதல் வார்த்தைகள் ஆயிரம் இருந்தன.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இதுவல்லவே. ஆட்கள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்க, தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கினான் கௌதமன்.
அவர்களின் மோன நிலையை அலைபேசி கெடுத்தது. அழைப்பை ஏற்றுப் பேசி வைத்தான் கௌதமன். யோசனையில் அமர்ந்திருந்தவன் தோளைச் சுற்றி கரம் போட்ட கௌதமன், “விக்ரம்” என்றான். கௌதமனின் முகம் பார்க்காது, “ஓஹ்” என்றான் ஜீவன்.
“உனக்கு ஃபோன் போட்டானாம். நீ எடுக்கலையாம்” என்றான் கௌதமன்.
“ம்ப்ச்”
“அடுத்த நாலஞ்சு நாளைக்குத் தான் ஷூட்டிங் இல்லையே. நீயும் எங்களோட சென்னை வாயேன் டா. நேரம் சரியா அமைஞ்சா எனக்கும் உங்கிட்ட சில விஷயம் மனம் திறந்து பேசணும்” என அழைத்தான்.
“ப்ச்” என அலுத்துக் கொண்டவனுக்கு விக்ரமை பார்க்கும் எண்ணமில்லை. அக்கா வீட்டிற்குச் செல்லும் ஆசையும் இல்லை. அவள் தான் இவனுக்குத் திருமணம் முடித்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் அல்லவா நிற்கிறாள்.
“உனக்கு வீர் எப்படியோ அப்படித் தான் டா விக்கிக்கு நான். ஸ்கூல் படிக்கும் போதுல இருந்தே ஆரம்பிச்ச நட்பு எங்களது. வீர் அட்மிட் ஆன அதே ஹாஸ்பிட்டல்ல தான் நானும் அட்மிட் ஆகி இருந்தேன். உடல் பூரா வலி. அடுத்தவன் கைய எதிர்பார்த்து வலியோட ஒரு வாழ்க்கை. உயிர் போனா போதுங்கிற மனநிலைல இருந்தேன்.
அவனோட ரெண்டு ஃப்ரெண்சும் மிக மிக மோசமான நிலையில இருக்கும் போது அவன் மனநில எப்படி இருக்கும்? பிழைச்சிடுவான்னு நினைச்ச வீருக்கு பிரெயின் டெத் ஆனாது அவனால தாங்கவே முடியல.
முதல் முதலா விக்ரம் அழுதது அன்னைக்குத் தான். அதுக்கு நடுவுல, வலி தாங்க முடியாம நானும் என்னைச் சாக விடுங்கன்னு கேட்டுட்டு இருந்தேன். இந்தச் சூழல்ல, என்னை எப்படியாது காப்பாத்த முடியாதான்னு போராடிட்டு இருந்தவனுக்கு உன் நினைப்பு வராம போனதுல அவன் தப்பு எங்கடா?
வாழ்க்கை ரொம்ப ஷார்ட் டா மச்சான். எப்போ வேணா என்ன வேணும்னாலும் ஆகலாம். அனுபவிச்சு தெரிஞ்சவங்கடா நாம. உன் கோபம் நியாயமானது தான். ஆனாலும் இந்த கோவத்தைத் தூக்கி சுமக்கிறனால ஏதாவது மாற போகுதா சொல்லு? மன்னிச்சு விடுடா அவன.”
கௌதமன் கூறியது சரி என்றே பட்டது ராஜீவனுக்கு. தூக்கிச் சுமந்த நட்பே இன்று இல்லை. விக்ரம் மீதான கோபத்தைச் சுமந்து மட்டும் என்ன காணப் போகிறானாம்?
“ம்ம்” என முடித்துக் கொண்டான்.
“அப்போ மாலதியோட பேபி ஷவருக்கு வா. என் கை பிடிச்சு வளர்ந்த என் தங்கை அவ. நீ வந்தா, அவன விட நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்” என வாஞ்சையோடு அழைப்பவனிடம் எப்படி மறுப்பது? சரி என்றான்.
விக்ரமின் தங்கை, மாலதியின் ஒன்பதாம் மாதச் சீமந்தம். இரண்டாம் பிரசவத்திற்கு இதெல்லாம் வேண்டாம் என்றதை விக்ரம் கேட்டுக் கொள்ளவில்லை.
மாலதியின் கணவன், மனைவியின் பிரசவத்திற்குப் பிறந்த வீட்டிற்கு அனுப்ப மறுத்த பின்னும், சீமந்தம் வைத்தே தீருவேன் என விக்ரம் பிடிவாதம் பிடித்து நடத்துகிறான்.
முதல் வளைகாப்பின் போது கௌதமன், கடுமையான உடல் உபாதையால், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, துக்கத்தின் பிடியில் இருந்த விக்ரம் தங்கையின் விழாவைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இன்று எல்லாம் சரியாகி இருக்க, தங்கள் வீட்டின் புது வரவை கொண்டாடிக் கொண்டிருக்கிறான் விக்ரம்.
“இன்னைக்கு நானும் என் மகளும் கிளம்பறோம். நீயும் எங்களோடயே வாயேன்” என ராஜீவனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு நேராகக் குழந்தையின் விளையாட்டு கூடம் சென்றவனைப் பார்த்து யாழினியாள் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள்.
‘தூக்கு’ என்பது போல் கைகள் இரண்டையும் தகப்பன் முகத்திற்கு நேராகத் தூக்கிக் கொண்டு, “பாட்டி வீத்துக்கு போவாமா? பிக்கி மாமா பாலாமா?” எனக் கண்கள் மின்னக் கேட்டு நின்ற குழந்தையை அள்ளி வாரிக் கொண்டான் கௌதமன்.
அவளின் பிக்கி மாமா காலையில் அழைத்து, “தங்க பாப்பா பேக் பண்ணிட்டீங்களா?” எனக் கேட்டதற்கு, “தங்கா இல்ல… ஆலி பேபி” எனத் திருத்தி, “கூல் முஞ்சதும் கால்ல வலோம்” என்றிருந்தாளே.
கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா போவாம்” எனத் தகப்பன் கன்னத்தில் முத்தமிட்டாள் யாழி. களைத்திருந்த கௌதமனுக்கு அருவிக்குள் நின்ற குளுமை. மூச்சை ஆழ இழுத்தவன், “போலாம். உன் விக்கி மாமாவும் உன்ன பாக்க ஆசையா காத்திருக்காங்க.” என்றான் புன்னகை முகமாக.
தங்கள் உலகில் மூழ்கியிருந்த அப்பா மகளை வாஞ்சையோடு பார்த்து நின்றிருந்தான் ராஜீவன். இவன் அறிந்திருந்த கௌதமனுக்கும் இன்றைய கௌதமனுக்குமான மாற்றத்தின் காரணம், கைக்குள் அடங்கி நிற்கும் இந்தக் குட்டி சொர்க்கம் தானோ? காலம் யாருக்கு எதை வைத்திருக்கிறதோ?
“இவங்க ஜீவன் மாமா. விக்கி மாமா மாதிரி இவங்களும் அப்பாவோட ஃப்ரெண்ட்” என ராஜீவனை மகளுக்கு அறிமுகப்படுத்த,
அப்பாவின் தோளைச் சுற்றிக் கைபோட்டு, ஒய்யாரமாகக் கௌதமனின் கரத்தில் அமர்ந்திருந்த குட்டி அழகி, “அலோ லீவன் மாமா, ஐ ஆம் ஆலி பேபி கௌமனன்” என கை நீட்ட, பார்த்தவன் அசந்து தான் போனான்.
குட்டி யாழியின் கரம் பற்றி குலுக்கியவனைப் பார்த்து கிளுக்கிச் சிரித்த குழந்தை அவன் மனதைக் கொள்ளை அடித்தாள்.
“பிக்கி மாமா நானுக்கு லொம்ப பிலிக்கும். நானுக்கு பிக்கி மாமா லெட் பாவால வச்சுக்காங்க. லெண்டு பேலும் லெட் டிரெஸ் போலுவோம்.” எனத் தன் மாமனின் புரணத்தையும் சேர்த்தே வாசித்தாள் குழந்தை.