Skip to content
Post Views: 5,474
“இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
மு.வ உரை: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.”
மாலை கூறியது போல சீக்கிரமாக வந்து மனைவியையும் மகளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் ருத்ரேஸ்வரன்.
கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி அவன் இறங்கியதும் அவனது கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டாள் செங்காந்தள்.
Advertisement
அதைக் கவனித்தவன் மனைவியின் முகம் பார்க்க பூரண நிலவென ஜொலித்தது அவளின் முகம். மகளை இடப்பக்கம் ருத்ரேஸ்வரன் தூக்கிக் கொள்ள வலக் கையைப் பிடித்த படி அருகில் மனைவியோடு உள்ளே நுழைந்தான்.
நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்தப் பிறந்தநாளைக் கொடுத்ததற்கு பலமுறை முருகப் பெருமானுக்கு நன்றி கூறினாள்.
பிரகாரத்தைச் சுற்றி வந்து அமர தன் கையிலிருந்த திருநீறை கணவனின் நெற்றியில் வைத்து விட்டு மகளுக்கும் வைத்து விட்டாள்.
Advertisement
“இந்த மூக்குத்தி நிஜமாவே ரொம்ப அழகாயிருக்கு காந்தா உனக்கு.”
Advertisement
“சும்மா சொல்றீக மாமா. உங்களுக்கு சுத்தமா பிடிக்காதுனு அத்தை சொல்லிருக்காக.”
“மூக்குத்தி எனக்குப் பிடிக்காதுதேன்.”
“!!”
Advertisement
“ஆனால் உன் முகத்தில் அது ரொம்ப நல்லாயிருக்கு.”
“நம்ம இண்டு பேருமா ஒரு போட்டா கூட எடுத்ததில்லல மாமா.”
“அதுக்கென்ன எடுத்துட்டா போச்சு.”, என்றவன் மகளை மடியில் வைத்துக் கொண்டு மூவரையுமாய் சுயமி எடுத்துக் கொள்ள தீப்தி பெற்றோரைத் தான் புகைப்படம் எடுப்பதாய் கூறி அவர்களின் எதிரில் நின்றாள்.
செங்காந்தள் அழகாய் புன்னகைத்திருக்க ருத்ரேஸ்வரன் அவளது தோளைச் சுற்றி தன் கரத்தை வைத்து லேசாய் தன்புறம் சாய்த்திருந்தான்.
அந்நேரம் அங்கு வந்திருந்த செங்காந்தளின் தாயும் தந்தையும் இதைக் கவனித்த வண்ணம் அவர்கள் அருகில் வந்திருந்தனர்.
“செங்கா..”
“ம்மா..”
“வாங்க மாமா..”
“உங்க பிறந்தநாள்னு அர்ச்சனை பண்ண வந்தோம் மாப்பிள்ள..”
“நாங்களும் அதேன் வந்தோம் அத்தை.”, என்ற மருமகனைப் பார்த்து நிறைவாய் இருந்தது பெரியவர்களுக்கு.
சில நிமிடங்கள் நால்வருமாய் பேசியிருந்து விட்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாராகினர். இரவு ஏழு மணியை நெருங்கியிருக்க ஆள்நடமாட்டம் குறைந்த அந்த சாலையில் மிதமான வேகத்தில் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான் ருத்ரேஸ்வரன்.
அவன் முதுகில் தலை சாய்த்துக் கொண்டவள் அவனது இடுப்பைச் சுற்றி தனது கரத்தை வைத்து இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
ருத்ரேஸ்வரன் ஒன்றும் பேசாமல் பக்கவாட்டில் தலை திருப்பி பார்க்க செங்காந்தள் அமைதியாய் தலை தாழ்த்திக் கொண்டாள்.
வீட்டிற்குள் நுழைந்த நேரம் காமாட்சி வாசலில் அமர்ந்திருக்க தீப்தி அவரிடம் ஓடியவள்,
“ஆச்சி நான் இன்னைக்கு அம்மா அப்பாவோடதேன் தூங்க போறேன்.”, என்று குதிக்க கணவனும் மனைவியும் அமைதியாய் உள்ளே செல்ல காமாட்சியோ,
“காரியம் கெட்டுது. வாடி என்கிட்ட இன்னைக்கு ஆச்சி உனக்கு புதுக்கதை வைச்சுருக்கேன்.”
“கதையெல்லாம் வேண்டாம் நான் அம்மாவோடதேன் தூங்குவேன்.”
“இங்கே பாரு டி உன் கூட படிக்குறவுகளுக்கு எல்லாம் தம்பி தங்கச்சி அக்கா எல்லாம் இருக்கா?”
“ஓ இருக்கே..”
“அதே மாதிரி உனக்கும் தம்பியோ தங்கச்சியோ வேணுமா வேணாமா?”
“வேணும் ஆச்சி. தம்பி பாப்பா நல்லாயிருக்கும்ல?”
“ம்ம் அப்போ என்கூட வந்து தூங்கு. இல்லைனால் ஒண்ணும் கிடைக்காது.”, என்றதை கதவின் மறுபுறமிருந்து கேட்ட செங்காந்தள் கணவனின் முகத்தைப் பார்க்க முடியாதவளாய் அறைக்குள் ஓடியிருந்தாள்.
ருத்ரேஸ்வரனுக்கோ சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் இருந்தது.
இருந்தும் கடினப்பட்டு அதை மறைத்தவனாய் வெளியே எட்டிப் பார்த்து தாயை முறைத்தான்.
“ம்மா பிள்ளைகிட்ட என்ன பேச்சு பேசிட்டு இருக்க?”
“அட போடா என் கஸ்டம் எனக்கு. சாப்பிட்டு தான வந்தீக போய் படு போ.
வந்துட்டான் எனக்கு பாடம் எடுக்க.”, என்றதில் தலையில் அடித்துக் கொண்டவனாய் உள்ளே சென்றிருந்தான்.
செங்காந்தள் ஜன்னலின் வழி நிலவை வெறித்திருக்க முகம் மொத்தமும் வெட்கத்தில் மலர்ந்து கிடந்தது.
அறையின் விளக்கு எரியாமல் நிலவொளியில் அவளின் மஞ்சள் முகம் தெளிவாக தீட்டப்பட்ட ஓவியமாய் மிளிர்ந்தது.
ருத்ரேஸ்வரன் அவளருகில் சென்று அவளைப் பார்த்தபடி ஜன்னல் சுவரில் முதுகு சாய்த்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.
வண்டியில் வரும் போதிலிருந்தே மனைவியின் மனநிலை அவனுக்குப் புரிந்திருந்தது தான்.
இருந்தும் கடினப்பட்டு தானாக அவளை நெருங்காமல் அப்படியே நின்று அவளைப் பார்த்திருந்தான்.
“அழகு அதிகமாகி போயிருக்கே.. என்ன விசயம் காந்தா..”
“மாமா, அத்தை பாப்பாட்ட போய் இப்படி பேசிட்டாகளே..”
“பாப்பாவுக்கும் தம்பி பாப்பா வேணுமாம். என்ன பண்ண?”
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். ஆனால்..”
“ஆனால்?”
“என் மாமா வேணும்..”, என்றவள் தானாகவே அவன் மீது மொத்தமாய் தன்னைப் பதித்த படி நிற்க ருத்ரேஸ்வரன் கண்கள் விரித்தான்.
தன் மீதான அவளின் ஆசை அவன் அறிந்தது தான் ஆனாலும் இந்த விஷயத்தில் நேற்று, தான் கேட்கதற்காக அவளாகவே தன்னிடத்தில் வருவாள் என்பதை அவன் நினைக்கவில்லை.
இருவரின் கரங்களும் இணையை இடுப்போடு சுற்றியிருக்க செங்காந்தளின் பார்வை மொத்தமும் கணவனின் கண்களிலேயே இருந்தது.
அவள் மீதான உணர்வுகள் வெளிப்படாத போதே அவனை கிறங்கடித்த பார்வை இப்போது பல மடங்காய் உள்ளுக்குள் சிலிர்ப்பை கொடுத்தது.
“இந்த பார்வை ரொம்ப பைத்தியமாக்குது டி..”
“என்னைப் புரிஞ்சுக்க இத்தனை வருசம் ஆச்சா உங்களுக்கு?”
“மடப் பயலா இருந்துருக்கேன். நீ தண்டனை கொடு இனி ஒழுங்கா இருப்பேன்.”
“ஒரு தண்டனைதேன்..”
“என்ன?”
“எனக்கு.. எனக்கு மொத்தமா என் மாமா வேணும். யாருக்காகவும் எதுக்காகவும் தள்ளிப் போக மாட்டேன்.”, என்றவள் சட்டையைப் பிடித்து அவனை இன்னுமாய் தன்புறம் நெருக்கினாள்.
கடினப்பட்டு அமைதி காத்தவனின் கரம் மனைவியின் முகத்தை இரு கைகளுக்குள்ளும் அழுத்திக் கொள்ள பட்டும் படாமல் இருந்த உதடுகளின் இடைவெளியை அவளே நிரப்பியிருந்தாள்.
அவன் எதிர்பார்த்த அவன் மீதான அவளின் ஆசைகளை மொத்தமாய் கொட்டித் தீர்த்திருந்தாள் செங்காந்தள்.
வெளிப்டையாய் வாய் வார்த்தையாய் கொட்டித் தீர்க்கப்படாத அவளின் காதல் அவனிடத்தில் தன்னை ஒப்புவித்தலில் முழுதாய் பகிரப் பட்டிருந்தது.
எண்ணிக்கையில் அடங்காத முத்தங்களும் அவன் கரத்தை விலக்க விரும்பாத விரல் அழுத்தங்களுமென அவள் விழி வழி அவன் எவ்வளவு அழகானவன் என்பதை உணர்த்திக் கொண்டேயிருந்தாள்.
அவன் மீதான நம்பிக்கையும் அவன் தன்னை சரியாக மட்டுமே புரிந்து கொள்வான் என்ற அவளின் புரிதல்களுக்கும் சாட்சியாய் அவளின் மாமா எனும் விழிப்புகளும் அத்துமீறல்களும்.
தன்னவளின் அளவு கடந்த அன்பில் நனைந்தவனுக்கு அவளை இத்தனை நாட்கள் வதைத்ததற்கான பிராய்சித்தமாய் அவள் இழந்ததையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடும் வேகத்தில் மொத்தமாய் தன்னவளை ஆக்கிரமித்திருந்தான்.
உடலில் துளி திரானி இல்லாதவர்களாய் ஒருவரையொருவர் பார்த்திருக்க அறையின் இருளில் மினுமினுத்த அவளின் மூக்குத்தியில் மீண்டும் மீண்டும் தனது முத்தத்தைப் பதித்து விடுவித்தான்.
“இப்படி கண்மண் தெரியாமயா அன்பு வைப்ப என் மேல?”
“வைக்கலாம். தப்பில்ல..”, என்றவளின் தடித்திருந்த உதடுகளை மென்மையாய் வருடினான்.
“காலையில் உங்க டைரியில் நீங்க எழுதி வைச்சுருந்ததைப் படிச்சேன் மாமா.”, என்றதில் என்னவென்பதாய் மனைவியை ஏறிட்டான்.
“இல்ல வேணும்னு பார்க்கலை. புடவை எடுக்கும் போது கீழே விழுந்ததில் நேத்து நீங்க எழுதி வைச்சுருந்தது கண்ணில் பட்டுச்சு.”, என்றதுமே எதை அவள் கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டவன் புன்னகையோடு அவளைக் கீழே தள்ளி பக்கவாட்டில் திரும்பிய வண்ணம்,
“படிச்சதை சொல்லு..”, என்றதற்கு இடவலமாய் தலையசைத்தாள் செங்காந்தள்.
“நீதான ஆரம்பிச்ச ஒழுங்கா சொல்லு டி..”
“..”
அவள் அமைதியை கலைக்க இடுப்பில் லேசாய் அழுத்திக் கிள்ளியவனின் கரத்தைப் பற்றிக் கொண்டவளாய் மெல்லிய குரலில்,
“உலகின் ஒட்டுமொத்த காமத்தையும் கண்டறிய
கண்டறிந்து களைத்த பின்னும் உடல் பிரியாதிருக்க
பிரியா நொடியில் கண்களால் கவியெழுத
அதனால் எழும் செந்தூர வெட்கமதை
கண்டு திருப்தி கொள்ள
இப்படியான என் அத்தனை அத்தனை
ஆசைகளுக்கும் தேவை அவளொருத்தியே!”
என்று முடித்தவள் முகத்தை மொத்தமாய் அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.
ருத்ரேஸ்வரன் லேசாய் விலக என்னவென அவள் தலை நிமிர்த்தியதில் எழுந்து அமர்ந்தவன் அவளின் பாதத்தை இறுகப் பற்றியிருந்தான்.
“மாமா என்ன பண்றீக நீங்க!!”, என்றவள் பதறிப்போக அவனோ வெகு நிதானமாய் கரத்தை நகர்த்தாமல்,
“மனசார மன்னிப்பு கேட்குறேன் டி. சத்தியமா கடந்த காலத்தை மறக்குற அளவுக்கு ஒரு வாழ்க்கையை உனக்கு கொடுப்பேன்.
நான் எழுதியிருந்தது என் மனசில் இருந்து வந்த வார்த்தைதேன்.
என்னோட எல்லா ஆசைக்கும் தேவை நீ ஒருத்தி மட்டும்தேன் காந்தா.
அதை ரொம்ப நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.”, என்றவன் அப்படியே குனிந்து அவளது பாதத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்திருந்தான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
காமாட்சி தனது ஒரு வயது பேத்தி கீர்த்தியை இடுப்பில் வைத்து உணவு ஊட்டிக் கொண்டிருக்க ஆகாஷும் தீப்தியும் பள்ளிக்குத் தயாரகிக் கொண்டிருந்தனர்.
ராணி குழந்தைகளுக்கான மதிய உணவு டப்பாவை எடுத்து வைத்துக் கொண்டிருக்க லிங்கமூர்த்தி வாசலில் இருந்து வண்டி ஹாரனை ஒலிக்க விட்டான்.
“சித்தப்பா நாங்க வந்துட்டோம்.”, என்ற தீப்தி ஆகாஷை இழுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.
“இந்தா டி தீப்தி ரிப்பன் கட்டாம போற பாரு..”, என்ற படி சர்வஸேவரனின் மனைவி விஜி வாசலுக்கு ஓடி வந்தாள்.
“தேங்க்ஸ் சித்தி டாட்டா…”, என்று குழந்தைகள் கையசைக்க விஜி உள்ளே வந்த நேரம் அறையிலிருந்து சர்வேஸ்வரன் அவளைப் பிடித்து இழுத்திருந்தான்.
“ஏங்க அத்தை வெளியிலேதேன் இருக்காக என்ன பண்றீக?”
“கையில சிக்காம ஓடிகிட்டே இருந்தா வேற என்ன பண்ண?”
“பிள்ளைக ஸ்கூலுக்கு போற நேரம்ங்க..”
“நமக்கு புள்ளை வர்றதுக்கு வழியை பார்க்கலாம்னால் இவுக இரண்டு பேரும் விட மாட்டாக போல”, என்றதில் விஜி குலுங்கிச் சிரித்தாள்.
“அண்ணனும் மதினியும் எப்போ வாராகளாம்?”
“இப்போ வர்ற நேரம்தேன். ட்ரெயின் லேட்டாம்.”
“ஆனாலும் இந்த அம்மா பண்றது ரொம்ப ஓவர்தேன். எப்பவும் மூத்த மருமவளுக்கு தனி இடம்.”
“சிநேகிதி கல்யாணத்துக்கு போய் தானே ஆகணும்ங்க..”
“கல்யாணம் முடிஞ்சு அவுகளே ஹனிமூன் போயிருப்பாக டி. இவுகளை இன்னும் காணும்.”
“அக்காவும் மாமாவும் ஆனாலும் ஓவர் லவ்வாதேன் இருக்கு.
உங்களுக்கு இப்படி ஒரு அண்ணனா?”, என்றவள் விளையாட்டாய் உதடு சுழிக்க இன்னுமாய் அவளை கதவோடு நிறுத்தியவனாய்,
“எங்க அண்ணன் விட்டுப் போன காலத்துக்கும் சேர்த்து இப்ப வாழுறாரு டி. நான்தேன் இப்போ இருந்தே உன்னை ஒழுங்கா கவனிக்குறேனே.”, என்ற நேரம் வாசலில் ருத்ரேஸ்வரனும் செங்காந்தளும் பேசும் சத்தம் கேட்டது.
ரம்யாவின் திருமணத்திற்காக இருவருமாய் சென்னை செல்ல வேண்டியதாய் இருக்க காமாட்சி குழந்தைகளை எல்லாம் அலைகழிக்க வேண்டாம் என இருவரையும் மட்டும் அனுப்பி வைத்திருந்தார்.
திருமணம் முடிந்து இரு தினங்கள் நண்பர்களோடு ஊர் சுற்றி விட்டு இப்போது தான் உள்ளே நுழைந்தனர் காதல் ஜோடி.
“வா டி செங்கா. கல்யாணமெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?”
“ஆமா அத்தை. ரம்யா க்கா உங்களை விசாரிச்சாக.”
“ம்ம் பக்கத்துலேயா இருக்கு நினைச்சா நான் போகவும் வரவும். சரித்தா நீ போய் குளிச்சு சாப்டு.”
“..”
“ருத்ரா இரண்டு நாள் கணக்கெல்லாம் எழுதி வைச்சுருக்கேன். நீ அப்பறம் பார்த்துக்கோ..”
“சரிம்மா..”, என்றவன் கைகளில் இளைய மகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைய கட்டிலில் அமர்ந்து புடவைத் தலைப்பை சுற்றிய படி கணவனைப் பாவமாய் பார்த்திருந்தாள் செங்காந்தள்.
“இப்படி முழிக்காத டி. அம்மா அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க.. அதுவும் உன்னை என்ன சொல்லப் போறாக சொல்லு?”
“மாமா ராணியும் விஜியும்.. எனக்கு வெட்கமா இருக்கு மாமா..”, என்றதில் உதடு மடித்து புன்னகையை அடக்கினான் ருத்ரேஸ்வரன்.
“இப்போ என்ன பண்ண முடியும்?”, என்றதில் கணவனை கையில் அடித்தவள் அப்படியே அமர்ந்த படி அவன் வயிற்றில் முகம் சாய்த்துக் கொண்டாள்.
“அளவில்லாம காதலிச்சா இப்படிதேன்.”, என்றவன் கேலி பேச அவளோ எவ்வித யோசனையுமின்றி,
“பரவால்ல நான் வருசத்துக்கு ஒண்ணு கூட பெத்துக்குவேன் அப்போ..”, என்றதில் மகளை கட்டிலில் விட்டு விட்டு மனைவியை அணைத்து உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
“நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன் இரு.”, என்றவன் தாயை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
“என்ன டி ஆளை அனுப்பி கூப்பிட்டு விடுற? என்ன விசயம்?”
“..”
“அலைச்சல் ஒத்துகிடலையா? என்னத்துக்கு இப்படி முழிக்குற?”
“அத்தை.. நாள் தள்ளிப் போயிருக்கு..”, என்றதில் மகனைப் பார்க்க அவன் சாதாரணம் போல் நின்றிருந்தான்.
“கிறுக்கி இதோட இப்படியா அலைஞ்சுட்டு வருவ. கொஞ்சமும் பயமில்லையா இரண்டு பேருக்கும்?”
“..”
“முதல் வேலையா டாக்டரைப் போய் பார்த்துட்டு வாங்க.”, என்றவர் மருமகளுக்கு நெட்டி முறித்து வெளியே சென்றிருந்தார்.
ருத்ரேஸ்வரன் புன்னகையோடு வெளியே செல்ல ராணியும் விஜியும் உள்ளே வந்திருந்தனர்.
“அக்கா ஆனாலும் இதெல்லாம் அநியாயம்.”, என்றதில் முகத்தை மூடிக் கொண்டாள் செங்காந்தள்.
“எங்க இரண்டு பேருக்கும் நீங்க முந்திகிட்டீக..”, என்ற ராணியைப் பார்த்து விழி விரித்தவளாய்,
“நிசமாவா ராணி?”
“அதெல்லாம் இல்ல ஆனால் நாங்களும் எதிர் பார்த்துட்டுதேன். இருக்கோம்.”
“..”
“எனக்கென்னவோ முப்பது வயசு ஆகுறதுக்குள்ளே வருசத்துக்கு ஒண்ணு பெத்துக்குற ஐடியால இருக்கீகளோனு தோணுது.”, என்ற விஜியின் வாயை மூடியிருந்தாள் செங்காந்தள்.
“இது எதிர்பாராதது விஜி. எனக்கே ஒரு மாதிரிதேன் இருக்கு.”
“அக்கா இதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு. அதுவுமில்லாம வயசும் தெம்பும் இருக்கும் போது ஏன் கவலைப் படுறீக. “, இப்படியாய் அனைவரும் அவளின் மனநிலை உணர்ந்து ஆதரவாய் பேசி நகர்ந்திருக்க அவளோ எப்போதும் போல் கணவனைத் தான் தேடினாள்.
ருத்ரேஸ்வரன் குளித்து முடித்து வந்து மனைவியின் வயிற்றில் வாஞ்சையாய் கை வைத்து அழுத்திக் கொண்டான்.
“இதுவாவது உங்களை மாதிரி பையனா இருக்கணும் மாமா.”
“எந்த பிள்ளையா இருந்தாலும் உன் குணத்தில் பிறந்தா போதும் டி எனக்கு.”, என்றவனை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவளாய் இறுகக் கட்டிக் கொண்டாள்.
அலைகள் எப்போதுமே கரையைத் தாண்ட நினைப்பதில்லை. காரணம் அதன் எல்லை தெரியாத பயமல்ல…
கரையைக் காயப்படுத்தக் கூடாதென்ற காதல் தான்.
செங்காந்தளின் காதல் கரை தாண்டா அலைகள் போன்றது.
சத்தமில்லாதது, கரையை உடைக்காது, யாரையும் காயப்படுத்தாது அதே நேரம் தன்னை எக் காரணம் கொண்டும் நிறுத்திக் கொள்ளாது.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அமைதியாய் தெரிந்தாலும் உள்ளுக்குள் அது முட்டி மோதுவது அலை மட்டுமே அறிந்த ரகசியம்.
செங்கா கரையை அடையாத அலையல்ல. அவள் கரையைத் தெரிந்து கொண்டே, அதைத் தாண்ட வேண்டாம் என்று முடிவு செய்த அலை.
இங்கு அநேக மனைவிகளின் காதல் இப்படித்தான். வெளிப்டுத்தாது வாதாடாது ஆனால் ஏதோ ஒரு வடிவில் அன்பைத் திணித்துக் கொண்டே தான் இருக்கும்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் ருத்ரேஸ்வரன்கள் வெகு அரிது. இசைக்கருவியும் பெண்ணும் ஒன்று தான்.
புரிந்தவர்களுக்கு மனதை மயக்கும் இசை. புரியாதவர்களுக்கு பெரும் இரைச்சல்.
இசையால் நிறைந்த இனிய வாழ்க்கையை வாழ கணவர்கள் மனைவியின் சொல்லப்படாத காதலைப் புரிந்து கொண்டாலே போதுமானது.
******** முற்றும் ********
error: Content is protected !!