Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 6

அத்தியாயம் 6

 

“அதுக்காக? இப்படியா? எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு இதைப் போய் பார்க்க வேண்டியதா போச்சேன்னு!” என்று பல்லவி லதாவிடம் சொல்ல, சிறு புன்னகையுடன் தான் அவளைப் பார்த்திருந்தார் லதா.


Advertisement

 

“நான் பார்த்த மாதிரி நீங்க எப்பவும் பார்த்துடாதீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்ல. இதென்ன ஃபாரினா எப்படி வேணாலும் இருந்துக்க?” என்று பல்லவி இன்னும் பொங்கிக் கொண்டிருந்தாள்.

Advertisement

Advertisement

 

“பல்லவி! அவங்க கல்யாணம் பண்ணிக்க போறவங்க. எப்படியும் இருந்துட்டு போகட்டுமே! அதுவும் லாவண்யா அஞ்சு வருஷம் ஃபாரின்ல தான் இருந்து படிச்சு முடிச்சு வந்திருக்கு!” என்றார் அவள் கோபத்தில் சமாதானமாய் லதா.

Advertisement

 

“அஞ்சு வருஷம் தானே? குறைஞ்சது அந்த பொண்ணுக்கு இருபது இருபத்து அஞ்சு வயசு இருக்குமா? மீதி இருபது வருஷமும் நம்மூர்ல வளந்த பொண்ணுக்கு இப்படி பப்ளிக்ல கட்டிபிடிக்க எப்படி முடியுது?” என்றாள்.

 

முகமெல்லாம் அதை தான் பார்த்துவிட்ட அதிர்ச்சியும், தான் பார்த்ததை அந்த பெண்ணோடு கீர்த்திஸ்வரனும் பார்த்துவிட்ட அசூயையும் என இப்பொழுது கொஞ்சம் கோபமே வந்துவிட்டது.

 

“அவ அப்படி தான் பல்லவி. பேச்சும் படபடனு யோசிக்காம பேசிடுவா. அவளோட சுபாவம் அது!” என்று லதா இன்னும் எடுத்து சொல்ல,

 

“அச்சோ நீங்க இன்னும் இடம் கொடுத்தா முழுங்கி ஏப்பம் விட்டுருவாங்க. உங்க பையனும் தான் இப்படி நடுவீட்டுல கட்டிக்கிட்டு….“ என்றவள் லதா கைப்பிடித்ததில் என்னவென்று அவரைப் பார்த்து அவர் பார்க்கும் வாசல் பக்கமும் பார்த்தவள் அங்கே நின்ற ஈஸ்வர் முறைப்பில் அதிர்ந்து,

 

“நான் இல்ல!” என்று லதாவின் கட்டிலுக்கு பின் சென்று ஒழிந்து கொண்டாள்.

 

“நீ இன்னும் கிளம்பலையா ஈஸ்வர்?” லதா சிரித்துவிட்டு மகனிடம் கேட்க,

 

“நீங்க இன்னும் டேப்லெட் போடலையே!” என்றான் உள்ளே வந்து.

 

“பல்லவிகிட்ட கேட்டு பத்து நிமிஷத்துல போட்டுக்குறேன் ஈஸ்வர்!” என்றவர் சொல்லில் இங்கிருந்தே கட்டிலுக்கு பின் பார்த்து முறைத்தான் அவன்.

 

“அவ சின்ன பொண்ணு டா. மனசுல தோணுறதை சொல்லிட்டா!” என்று சொல்லி சிரித்து,

 

“கேட்டுட்டியா நீ?” என்று கேட்டவருக்கும் இன்னும் சிரிப்பு தான் வந்தது பல்லவி கண்களை உருட்டி சொல்லிய விதத்தில்.

 

சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து அன்னை கையில் வைத்தவன், 

 

“இதை பார்க்கவா வந்தா? சொல்லி வைங்க!” என்றான் அன்னையிடம் கோபமாய்.

 

“அதானே! நான் என்ன இதை பார்கவா வந்தேன்? நீங்க ஏன் காமிச்சிங்க?” முணுமுணுவென்று மறைந்து பின்நின்றே அவள் சொல்ல,

 

“அங்க என்ன முணுமுணுப்பு?” என மீண்டும் கீர்த்திஸ்வரன் சத்தம்.

 

“சரி டா. போ!” என்ற அன்னை சொல்லில் அவர் முகத்தில் தெரிந்த இளக்கத்தில் என அமைதியாய் அவன் வெளியேற, அவன் காலடி ஓசையை கவனித்து நின்றவள்,

 

“ஹை! என் காசு!” என ஓடி வந்து எடுத்துக் கொண்டாள் லதாவிடம் இருந்து.

 

“அவன் எப்ப உன்கிட்ட வாங்கினான்?“ லதா கேட்க,

 

“உங்களுக்கு ஹாஸ்பிடல்ல மெடிசின் வாங்கின காசு இது. அதுவும் மூணு நாளா கொஞ்சம் கொஞ்சமா தர்றார்” என்று பல்லவி சொல்ல,

 

“வட்டியோட கேட்ருக்கலாம்ல?” என்று அதற்குமே சிரித்தார் லதா.

 

“ம்ம்க்கும். உள்ளதை வாங்கவே மூணு நாள் ஆச்சு” என்ற பல்லவி,

 

“என்ன நீங்க எல்லாத்துக்கும் சிரிக்குறிங்க?” என்றாள்.

 

“வேற என்ன பண்ண சொல்ற? நீ சொன்னதை அவன் கேட்டுட்டான் போல. அதான் சிரிப்பு வந்துடுச்சு. என்னவோ நல்ல மூட்ல இருக்க போய் எதுவும் சொல்லாம போறான்!” என்றார்.

 

“நல்ல மூடா! ஏன் வராது. அந்த பொண்ணு செஞ்ச வேலைக்கு வர தானே செய்யும்!” என்ற பல்லவிக்கு இப்பொழுதும் லாவண்யா செயல் சுத்தமாய் பிடிக்கவில்லை.

 

“அது அவங்களுக்குள்ள பல்லவி. ரெண்டு வருஷமாச்சு அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசிவச்சு. அதுவும் அப்ப ஈஸ்வர் கூட படிப்பு முடிக்கல. அவனுக்கு அப்போ இதுல இன்ட்ரெஸ்ட் இல்ல. இந்த வயசுலயேவானு குதிச்சான். அவனோட அப்பா தான் பிடிவாதமா இது தான் பொண்ணுன்னு சொல்லவும் இவனும் என்னவும் பண்ணுங்கன்னு விட்டுட்டான். ஆனா கல்யாணம் இப்ப கிடையாதுன்னு அவனும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான்!” என்று லதா முழுதாய் சொல்ல,

 

“கல்யாணம் மட்டும் தான் கிடையாது. போல!” முணுமுணுவென்றாள் பல்லவி.

 

“சாரி! ஆனாலும் ஓவரா தான் பேசிட்டேன். உங்ககிட்டயே நான் இப்படி பேசியிருக்க கூடாது. உங்க பையனும் வேற கேட்டாச்சு. கோவம் வர தான் செய்யும் என் மேல!” என்று தான் அதிகமாய் தலையிட்ட எண்ணத்தில் அவள் சொல்ல,

 

“உனக்கு தோணினதை தானே சொன்ன? பரவால்ல!” என்றார் அவர்.

 

அத்தனை பெரிய வீடு. வீட்டில் அம்சமாய் மகாலட்சுமியாய் லதா. என அந்த வீட்டை லதாவைக் கொண்டே பார்த்தாள் பல்லவி.

 

பெரிய பெரிய வசதி படைத்த வீடுகளில் எல்லாம் அதன் வாரிசுகள் ஒழுக்கமாய் இருப்பதில்லை என்ற ஒரு அளவீடு உண்டு.

 

இந்த வீட்டைப் பொறுத்தவரை அப்படி இல்லை என்று பல்லவி நினைத்திருக்க, இந்த லாவண்யாவின் செயலில் அவ்வளவு கோபம். முதல் பார்வையிலேயே அவளின் மேல் ஒரு பிடித்தமின்மை பல்லவிக்கு.

 

காதல் என்றே இருக்கட்டுமே அதற்கென்று இப்படியா என்று தான் தோன்றியது.

 

‘நீ தான் குறுக்கால போன பல்லவி. அந்த பொண்ணு அவன் மட்டும் இருக்குறதா நினைச்சு கூட ஹக் பண்ணிருக்கலாம்ல?’ உள்ளம் கேட்க, அந்த நேரம் லாவண்யா செயலைக் கண்டு சட்டென்று திரும்பி நடந்த சமையல் செய்யும் பெண் தேவியையும் கண்டிருந்தாள் பல்லவி.

 

யாரையும் அந்த லாவண்யா சட்டை செய்யவில்லை என்று புரிந்தது அப்போது. லதா போன்ற பெண்மணி இருக்கும் வீட்டிலா என்று தான் மனம் கொந்தளித்தது.

 

‘அவங்களே அதை சாதாரணமா தான் எடுத்துக்குறாங்க. இது தான் இப்ப பஷேன். நீ கொஞ்சம் சும்மா இரு!’ என மூளைக்குள் அவ்வளவு ஓட்டம். அதில் தான் அமைதியானாள் பல்லவியும்.

 

“உனக்கு எப்படி சொன்னா புரியும் தெரியலையே பல்லவி!” என்ற லதா,

 

“ஈஸ்வர் தான் எனக்கு முக்கியம். அவன் இல்லைனா இன்னைக்கு நான் இங்க இந்த வீட்டுல இப்படி இருந்திருப்பேனானு எனக்கு தெரியல. அவனுக்காக நான் என்ன வேனா செய்வேன். கல்யாணப் பேச்சை அவன் எடுக்காத வரை அவங்க அப்பாவும் பேச மாட்டாங்க. லாவண்யா தான் எனக்கு மருமகன்னா ஈஸ்வரை எப்படி பார்த்துப்பேனோ அதே மாதிரி தான் அவளையும் பார்த்துப்பேன். ஈஸ்வர் பார்த்துப்பான் எல்லாத்தையும்!” என அவருக்கு அவர் மகன் எவ்வளவு முக்கியம் என சொல்லிவிட, அதை ரசித்து கேட்டாலும்,

 

“ஓஹ்! அம்மா புள்ளைனு சொல்லுவாங்கல்ல? அதே மாதிரி நீங்க மகன் புள்ளையா?” என்றாள் கிண்டலாய்.

 

“அவனுக்கு நான் முக்கியம்னா எனக்கும் அவன் தானே முக்கியம்? அதை சொல்றேன் டா. இவங்க அப்பாகிட்ட இருந்து என்னை காப்பாத்துறதே ஈஸ்வர் தான்!” என்றார்.

 

“அதென்ன அப்பாகிட்ட இருந்து அம்மாவை காப்பாத்தறது? மாமா என்ன அவ்வளவு கோவக்காரங்களா?” பல்லவி கேட்க,

 

“பாரேன்! பேசிப் பழகாத மாமாவைக் கூட மாமானு உரிமையா கூப்பிட வருது. ஆனா அத்தைனா மட்டும் அந்த இடத்துல ஒரு கேப் விட்டுடுற இல்ல?” என்று கேட்டபின் தான் தான் பேசியதே உணர்ந்தாள் பல்லவியும்.

 

காலை மகேஸ்வரன் அந்த அறைக்குள் வந்த பொழுதே பல்லவியும் அமைதியாய் நின்றிருக்க,

 

“என்னங்க! எதாவது வேணுமா?” என தன்மையாய் தான் கேடிருந்தார் லதா கணவனிடம்.

 

“ஆமா! வேணும்னு சொன்னாலும் இந்த காலை வச்சுக்கிட்டு ஓடி வந்து பண்ணிட போற பாரு” என்ற மகேஸ்வரன் முறைப்பில் இவர் என்ன இப்படி பேசுகிறார் என்பதை போல பார்த்தாள் பல்லவி.

 

‘அதானே பார்த்தேன்!’ என்பதாய் பார்த்திருந்தார் லதா.

 

“ஈஸ்வர் தான் போய் பாருங்கனு ஒத்த காலுல வெளில நிக்குறான். இப்ப நான் பார்த்தா மட்டும் உனக்கு உடனே சரியாகிற போகுதா? உன் விஷயத்துல மட்டும் ஈஸ்வர் அறிவு எங்க போயிடுமோ!” என வேண்டாத பேச்சு தான் மகேஸ்வரனிடம்.

 

அறைக்குள் நின்ற பல்லவியையும் அவர் மதிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை அவள் லதாவிற்கான வேலையாள். வெளியே லாவண்யா முன் பேசியதற்கே கீர்த்திஸ்வரன் கோபம் கொண்டிருக்க, இங்கு அவர் பேசியதை கேட்டிருந்தால் நிச்சயம் தந்தைக்கு தான் சேதாரமே.

 

“ஆண்ட்டி!” என அறைக்குள் அதே நேரம் வந்திருந்தாள் லாவண்யாவும்.

 

“வா லாவண்யா! எப்படி விழுந்து வச்சிருக்கா பாரு. பார்த்து நடக்க தெரியல. இதை சொன்னா ஈஸ்வரும் சேர்ந்து என்னை தான் பேசுறான்!” என்று மகேஸ்வரன் கூற,

 

“பார்த்து போயிருக்கலாமே ஆண்ட்டி!” என்றவள்,

 

“நடக்க முடியாதா? அதுக்காக தான் ஆள் வச்சிருக்கீங்களா?” என்று கேட்க, லதாவிற்கே ஆயாசமானது லாவண்யாவின் பேச்சு.

 

ஆனாலும் மருமகளாய் வரவிருப்பவள் ஆகிற்றே! அதனால் அமைதியாய் செல்லும் நிலை. கூடவே அருகிலேயே கணவன் வேறு!.

 

“இது பல்லவி லாவண்யா! இவரோட தங்கச்சி பொண்ணு. ஹெல்ப்க்காக கூட இருக்குறா. வேலைக்கு எல்லாம் இல்ல!” என தன்மையாய் எடுத்து சொல்ல, மகேஸ்வரன் வாய் திறக்க நினைக்கும் நேரம் அறைக்குள் வந்திருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

“பார்த்தாச்சா போலாமா?” என்று கேட்டு.

 

லாவண்யாவிற்கு அப்படி ஒன்றும் லதா அளவிற்கு யோசிக்க வேண்டியது இல்லையே!

 

“எல்லாம் ஒண்ணு தானே ஆண்ட்டி! உங்களை பார்த்துக்குறது தானே இந்த பொண்ணோட வேலை!” என்று லாவண்யா சொல்லிய போது பல்லவி முகமுமே மாறியது.

 

ஓங்கி ஒரே ஒரு அறை கொடுத்தால் என்ன எனும் வேகம் தான். வேண்டுமென்றே சொல்வது தெளிவாய் புரிந்தாலும் பல்லவி எதுவும் பேசாமல் நிற்க,

 

“காபி கப் கூட எடுக்கலையா? இப்படி அவங்க பக்கத்துல வச்சா இன்ஃபெக்ஷன் ஆகாதா?” லாவண்யா கேட்க,

 

“அதை நீ தேவி அக்காகிட்ட இல்ல கேட்கணும் லாவண்யா?” என்றிருந்தான் ஈஸ்வர்.

 

“யார் பார்த்தா என்ன?” லாவண்யா சொல்ல, பல்லவிக்கு கூட வாய் துறுதுறுவென்று வந்துவிட்டது.

 

“நீ இங்க சும்மா தானே இருக்க லாவண்யா. பேசாம அம்மா கூட இருந்து பார்த்துக்கோயேன். உன் அளவுக்கு இவங்களுக்கு தெரியலையோ என்னவோ?” பட்பட்டென்று பதில் வந்தது என்னவோ ஈஸ்வரிடம் இருந்து தான்.

 

“நானா? நான் எப்படி? எனக்கு இது ஒரு வேலையா?” லாவண்யா சொல்ல, அப்பொழுதும் முகம் மாறாமல் தான் அமர்ந்திருந்தார் லதா.

 

“தென் நீ கிளம்பலாம் லாவண்யா. நானும் அப்பாவும் வர்றோம்” கொஞ்சமும் யோசிக்காமல் பேசியவனை அத்தனை கோபமாய் பார்த்த லாவண்யாவை சளைக்காமல் பார்த்து வைத்தான் ஈஸ்வர்.

 

மகேஸ்வரனுக்கு தான் பொறுக்கவே இல்லை. இப்படி பேசுகிறானே என்று.

 

“அவளுக்கு என்ன டா தேவை இப்படி வீட்டோட கிடந்து கால் ஒடிஞ்சவளை பார்த்துக்கனும்னு. என்ன பேசுற நீ? யார் யாருக்காகவோ லாவண்யாவை போய் பேசிட்டு இருக்க நீ. புரிஞ்சு தான் பேசுறியா?” என மகேஸ்வரன் கேட்க,

 

“நீங்களும் கிளம்பலாம். நேரமாகிடுச்சு!” என்றவன் மணியைப் பார்த்துவிட்டு நிற்க,

 

“வரவர ரொம்ப தான் ஆடுறான்!” என்றவர் விட்டுப் பிடிக்க நினைத்து அங்கிருந்து நகர்ந்தார்.

 

அப்படி அவர் பின்னேயே சென்ற ஈஸ்வர் பின் நியாபகம் வந்தவனாய் பல்லவியிடம் பணம் கொடுக்க என்று மீண்டும் உள்ளே வந்த போது தான் பல்லவி பேசியதைக் கேட்டதும் முறைத்து நின்றதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!