Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 3.2

“இருக்கட்டுமே, இதுவரை உன்னோட விருப்பம் தான் எல்லாமே. இந்த ஒரு விஷயம் என் சொல் பேச்சு கேட்டுதான் ஆகணும் நீ. எனக்கு தெரியும்டா, உன்னோட குணத்துக்கும் உயரத்துக்கும் எப்படிப்பட்ட பொண்ணு கொண்டு வரணும்னு…”

அங்கு நிற்காமல் எழுந்து சென்றவரை மகனின் ஆத்திர வார்த்தைகள் நிறுத்தியது. “பாருங்க, உங்க இஷ்டப்படி எப்படி வேணாலும் பொண்ணு பாருங்க. நான் கல்யாணம் பண்ண மாட்டேன். அதையும் மீறி நீங்க சொல்றதை தான் செய்யணும்னா, உங்கள எப்படி அவாய்ட் பண்ணணுமோ, அப்டி கண்டிப்பா பண்ணுவேன். அது, இந்த வீட்டு பக்கம் தலை காட்டாம தான் நடக்கும்னா, அதுக்கும் நான் ரெடிதான்.”

தட்டை தரையில் பறக்க வீசி இருந்தவன், அதே கோவத்தோடு வீட்டை விட்டு வெளியேறியது அவன் வாகனம் செல்லும் சத்தத்தில், உள்ளே இருந்த அன்னைக்கே கேட்டது. என்றும் அன்னையிடம் அதிகம் கோவத்தைக் காட்டாமல் இருப்பவனின் இந்த அதீத ஆத்திரமான செயல், அங்கிருந்த இளையவனை வாயடைக்க செய்திருக்க, மதிவர்தினிக்கோ தன்னுடைய புதல்வன், தன்னுடைய கைகளில் இருந்து நழுவுவது போல் மனம் கனத்தது.

அன்னையின் வாடிய முகத்தைப் பார்த்து அவர் தோள் தொட்ட ஜெயந்த், “அவன் ஏதோ கோவத்துல பேசிட்டான் ம்மா.”



Advertisement

“பயமா இருக்குடா. லவ் இல்ல, வெறும் ஆசைனு சொல்றப்பவே, இவன் இவ்ளோ கோவப்படுறான். இதுல ரொம்ப முத்த விட்டுட்டா எப்படி நடந்துப்பானோனு தெரியலடா.” முகம் எல்லாம் வியர்த்து நின்ற அன்னையை, அமர வைத்து தண்ணீரைக் கொடுத்தான் ஜெயந்த்.

“அவன் விருப்பபடி விடுங்களேன்மா. அந்த பொண்ணும் நல்ல பொண்ணு தான். என்ன, நம்ம கல்ச்சர் இருக்காது. அவன் விருப்பப்படி விடுங்கம்மா.” சகோதரனின் பிடிவாதம் பார்த்து, அன்னையின் மனதை சற்று கரைக்க முயன்றான்.

“உனக்கு தெரியாதா ஜெயந்த், அவனை பத்தி? அவன் காலேஜ் படிக்காம ஓடி வந்த முக்கியமான ரீசன் கிரிக்கெட்னு நினைக்கிறியா? நார்த் இந்தியன் கல்ச்சர் செட் ஆகல, சாப்பாடு பிடிக்கலனு தான் ஓடி வந்ததே. கிரிக்கெட் எல்லாம் ஒரு சாக்கு.

Advertisement

அதுக்கு அப்புறம் தான் அவனுக்கு கிரிக்கெட் மேல ரொம்ப விருப்பம் வந்ததே. ரெண்டு வருஷம் தாக்கு பிடிக்காதவன், எப்படிடா லைஃப் லாங் இருப்பான்? மேலோட்டமா பாத்துட்டு பிடிச்சிருக்குனு தொங்குறான் உன் அண்ணன். அவதான் வேணும்னு என் கண்ண பாத்து சொல்லலடா அவன்.

Advertisement

அங்கையே வீக்னஸ் அடிக்கிதா? இதுல வீட்டுக்கே வர மாட்டானாமே. இருக்கட்டும், இருக்கட்டும்… நான் பாத்து கட்டி வைக்கிற பொண்ணு பின்னாடி நாயா சுத்த போறான் பார். அன்னைக்கு வச்சுக்குறேன், அவனை…” சபதமெடுத்து அறைக்குள் முடங்கிக்கொண்டார் மதி.

இங்கு அன்னையிடம் பேசியதை எண்ணி எண்ணி உறக்கம் தூரம் போனது அஸ்வினுக்கு. இரவெல்லாம் கண் விழித்து விடியலில் உறக்கம் தழுவ, அவன் காலை பொழுது புலர்ந்ததே எட்டு மணிக்கு தான்.

எழுந்ததும் நேரத்தைப் பார்த்தவன் அரக்க பறக்க வீட்டை விட்டு மைதானம் நோக்கி விரைந்தான். செல்லும் வழியில் தான் கைப்பேசியை வீட்டில் மறந்துவிட்டு வந்தது நினைவிற்கு வந்தது.

Advertisement

அடுத்த வாரம் இந்தியா, இங்கிலாந்து அணியினருக்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்த இந்திய அணியும் இன்று முதல், பயிற்சியை துவங்க உள்ளது. காலை பத்து மணிக்கு மைதானம் வந்தடைய வேண்டும் என்கிற, இந்திய பயிற்சியாளரின் கட்டளையை நிறைவேற்ற ஓடினான்.

சோதனைக்கென்றே பாலத்தில் சென்ற அவனது வாகனம் திடீரென நின்றுவிட ஐயோ என்றானது.

ஊரின் மத்தியில் நின்றுவிட்டது. இறங்கி வாகனத்தில் என்ன கோளாறு என்பதை கூட கவனிக்க முடியவில்லை. எந்த பக்கம் பார்த்தாலும் ஜன கூட்டம், வாகன நெரிசல் தான்.

இப்பொழுது கீழே இறங்கினால் அவ்வளவு தான், அவனே ஒரு பிரளயத்தை உருவாக்கிவிடுவான். அருகில் கார்ட்ஸ் நான்கு, ஐந்து பேர் இருந்தாலே ரசிகர்களின் பாச பிணைப்பிலிருந்து வெளிவர சிரமமாக இருக்கும். இதில் தனியாக வெளியே வந்தால்? ம்ஹூம்… சரி வராது.

மக்கள் நெரிசலில் சூழ்ந்து மாட்டிக்கொள்ள விரும்பாமல், விழித்துக்கொண்டு ஸ்டியரிங் வீலிலே படுத்துக்கொண்டான். மூளை பல்வேறு விதமாக சிந்தனையை செய்துகொண்டிருந்தது.

‘பரவாயில்லை, சுற்றி வரும் மக்களை சமாளித்து ஒரு ஆட்டோவை பிடித்து சென்றிடலாமா?’ என கண்ணாடி வழியே திரும்பி பார்த்தான். செல்லும் வாகனங்களில் ஒரு சில மட்டுமே ஆட்டோக்கள், அல்லது அவையும் ஆட்களை சுமந்து செல்ல செய்வதறியாது தடுமாறினான். நேரம் வேறு கடந்துகொண்டே செல்கிறது.

எத்தனை அழைப்புகள் தன்னுடைய கைப்பேசிக்கு வந்தனவோ என்கிற யோசனை, அவனை மொத்தமாய் மூழ்கடித்திருக்க, அவனது ஜன்னல் தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். அங்கு நின்றதோ ஒரு பெண்.

முகத்தை அவளது ஹெல்மெட் மூடியிருக்க, கண்களில் விஷம புன்னகை தெரிந்ததோ? அஸ்வினுக்கு பயம், பொதுமக்கள் தன்னை அறிந்துகொண்டனரோ என்று.

நிச்சயம் அந்த கருப்பு கண்ணாடியைத் தாண்டி அவன் முகம் வெளியில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க, என்ன இது? அவன் யோசனை முடியும் முன்பே, அந்த பெண் தன்னுடைய கைப்பேசியில் ஏதோ எழுதி அந்த கண்ணாடியை ஒட்டி வைத்தாள். சற்று நெருங்கி வந்து உற்று பார்த்தான்.

‘யோவ் கிரிக்கெட்டரே… நீ என்னயா இங்க?’ என இருந்த எழுத்துகளைப் பார்த்ததும் தான், அது யார் என்றே புரிந்தது. உண்மை தெரிந்த உடனே, “ஏய்… ஏய்… மரியாதை, மரியாதை…” பாவம், அவன் கத்துவது வெளியில் நிற்கும் அவளுக்கு சென்று சேரவே இல்லையே.

கதவைத் திறக்கவே சென்றுவிட்டான் சண்டையிட. ஆனால் உடனே சுற்றம் உணர்ந்து அமைதியாகிவிட, அடுத்த செய்தியை நீட்டினாள். ‘என்ன, திருட்டு பூனை மாதிரி ஒளிஞ்சிட்டு நிக்கிறிங்க? கதவைத் திறக்கல, நீங்க தான்னு ஊருக்கே சொல்லிடுவேன்.’ பச்சையாக மிரட்டி வந்த மிரட்டல், கச்சிதமாக வேலை செய்தது ஆணிடம்.

இவளுடைய கைப்பேசியை வாங்கியாவது எவரிடமாவது தகவலைக் கூறிவிடலாம் என்றெண்ணியவன், வேறு வழியே இல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்து கூலர்ஸ் அணிந்து சிறிதளவே கண்ணாடியைத் திறந்தான்.

அவனைப் பார்த்ததும் கேலி சிரிப்பு ஆரோஹி முகத்தில் உருவாக, “அட நம்ம அய்யாசாமி!” கை தட்டி சொன்னவளைப் பார்த்து முறைத்தான்.

“என்ன சார் திட்டுறீங்களோ?” பெண்ணவள் இழுக்க, “திட்டிட்டாலும்…” அவனும் இழுத்து நிறுத்தினான், கண்களை மட்டும் அவள் முகத்திலிருந்து எடுக்க முடியாமல்.

ஏதோ அந்த முகத்தில், அந்த கண்ணில் சொல்ல முடியாத உணர்வு இருந்தது. அது என்ன, என்ன என அலசி ஆராயும் நிலையில் அவன் நேரமும் காலமும், இல்லையென்றாலும் ஆராய்ந்தான். ஆராய்ந்துகொண்டே இருந்தான். நின்றபாடில்லை அவன் ஆராய்ச்சி.

தேடினேன என தொடங்கிய பயணம் தொலைந்தேன் என்னும் நிலையில் தான் அந்த கருவிழிகளுக்குள் சிக்கிவிட புரிந்த நொடி, சட்டென கண் சிமிட்டி மீண்டு வந்தான்.

“என்னாச்சு வண்டிக்கு?”

“இது என் வண்டினு உனக்கு எப்படி தெரியும்?” அவள் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டு நின்றான்.

“அதான் அன்னைக்கு பாத்தேனே… நைட்டுக்கும் வண்டிக்கும் வித்தியாசமே தெரியாம மறைஞ்சு நின்னுச்சே இந்த இருட்டுக்குட்டி.” வஞ்சப்புகழ்ச்சி பாடியவள் கண்கள், அந்த இருட்டுக் குட்டியை ரசித்துக் கொண்டிருந்தது.

ஏனோ வாகனங்கள் என்றால் அவளுக்கு அத்தனை பிடித்தமாய் உள்ளது. அதிலும் கருப்பு நிறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். கண் சிமிட்டாது பார்ப்பவள் மனம், அதனைப் பிடித்து குழந்தையின் கன்னத்தைக் கொஞ்சுவது போல் கொஞ்ச தோன்றும்.

“ஏன்மா, அவன் அவன் இருக்குற பிரச்சனைல நீ வேற. போ ம்மா…” சலிப்போடு கண்ணாடியை அவன் மூடிவிட, மீண்டும் தட்டி திறக்க வைத்தாள் பெண்.

“அப்டி என்ன பிரச்சனை?”

“வண்டி ஸ்டார்ட் ஆகல என் தெய்வமே. மொபைலும் வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன்.” விடுவதாக இல்லை அவள் என்றறிந்தவன், அவளிடமே உதவி கேட்கலாமா என்ற எண்ணத்தோடு பார்க்க, பெண்ணுக்கும் புரிந்து போனது.

“இது பீக் ஹவர், வண்டி எதுவும் அவ்ளோ சீக்கிரம் ஃப்ரீயா வராது. பேசாமா வரிங்களா, நான் ட்ராப் பண்றேன்?”

சிரிப்போடு ஆசையாக கேட்டவள், வாகனத்தின் முன்னால் தள்ளி அமர்ந்துகொண்டு அவனைப் பார்த்தாள். தலையில் அடித்துக் கொள்ளலாம் என தோன்றியது அஸ்வினுக்கு.

“இப்டி வந்தா ஊருக்கே நான் தான்னு தெரியும்.”

“ஆமா இவரு பெரிய அப்பாடக்கர். இவர் கண் அசைவுல ஊரே இவர் பக்கம் வந்து நிக்கும். ஹெல்மட் போட்டுக்கோங்க கிரிக்கெட்டரே…”

தன்னுடைய தலையில் இருந்த ஹெல்மட்டை சுட்டிக்காட்டும் வகையில், தலையை தலையை ஆட்டி கூறினாள். அவளையும் அந்த ஹெல்மட்டையும் பார்த்தவன் பார்வை, அவள் வாகனத்தில் விழ மனம் சிரித்தது. சிரித்த மனதை கேலி செய்தபடியே விதி அவனை அதே வாகனத்தில் தான் கடத்தியிருந்தது.

பேரிடர் வரிசையில் துவங்கிய அவனது வாழ்க்கையின் நாட்களில், அந்த நாளும் ஒன்று. என்ன, எதிர்காலத்தில் நினைத்து பார்த்தால் அந்நாள் இனிமையை தளும்ப தளும்ப நிரம்பியிருக்க கூடும்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!