Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 6.2

மகனிடம் அமைதி தான், “இல்ல, நீ ரொம்ப பிஸி. சரி ஓகே! அந்த பொண்ணு விஷயம் உன் அம்மாவுக்கு தெரிஞ்சு எவ்ளோ நாள் ஆச்சு? இப்பவரை ஒரு வார்த்தை என்கிட்ட பேசுனியாடா? அப்போ வீட்டுக்கு பெரிய மனுஷன்னு நான் எதுக்கு இருக்கேன்?” ராகவ் பேச, மகன் அன்னையை முறைத்தான்.

“என்னை எதுக்குடா முறைக்கிற?”

“நீங்க தான எல்லாத்துக்கும் காரணம். எனக்கு இந்த கல்யாணம் வேணாம், அவ்ளோ தான்.” என்றான் பிடிவாதம் குறையாமல்.

மனைவியிடம் சண்டைக்கு நின்ற மகனை ஆத்திரம் பெறுக பார்த்தவர், “இங்க பேசுடா, நான்தான உங்கிட்ட கேள்வி கேட்டேன்?”



Advertisement

மகனோ தந்தையை எதிர்த்து பேச முடியாமல் தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டான், “டார்ச்சர் பண்றீங்க ப்பா.” என்றான் பொறுக்க மாட்டாமல்.

அவன் நிலையும் புரியதான் செய்தது. ஆனாலும் ஆரோஹி போன்ற பெண்ணை, அவன் வாழ்க்கையில் கொண்டு வந்தே தீர வேண்டும் என்கிற மதியின் பிடிவாதம், கணவனையும் கட்டி போட்டுவிட்டது.

“நல்லது பண்ணணும்னு நினைச்சா டார்ச்சரா உனக்கு?” பொறுக்க முடியாமல் மதிவர்தினி மகனிடம் கேட்டார்.

Advertisement

“எது நல்லது? எனக்கு புடிக்கல புடிக்கலனு சொல்ல சொல்ல, ஒரு விஷயத்தை என் மேல திணிக்கிறதா? ரொம்ப பண்றீங்க ம்மா…”

Advertisement

ராகவ், “சரி திணிக்கிறதாவே இருக்கட்டும், பொண்ணையே பாக்காம புடிக்கலனு நீ கூவிட்டு இருக்குறது, எந்த விதத்துல சரினு நினைக்கிற?”

அஸ்வின், “பொண்ண பாக்கவே புடிக்கலைனு அர்த்தம். அங்க ஒரு பொண்ணுகூட பழகிட்டு, இங்க இன்னொரு பொண்ண கல்யாணத்துக்கு பாக்குற அளவுக்கு, என் குணம் கெட்டு போகல ப்பா.”

ராகவ், “டேட், பழக்கம்னு சொல்றியே தவர, அந்த பழக்கத்துக்கு ஒரு பேர் உன்னால வைக்க முடியுமா?”

Advertisement

“அதை நானே இன்னும் முடிவு பண்ணல ப்பா. எனக்கு டைம் எங்க குடுக்குறீங்க? உங்க இஷ்டத்துக்கு நீங்களா முடிவெடுத்து என்கிட்ட தகவல் சொல்றிங்க.”

மதிவர்தினி, “பாத்திங்களா… இதை தான் சொன்னேன், அவனோட மனசு இன்னும் அந்த பொண்ணு பக்கமே போகல. ஏதோ புடிச்சிருக்குனு பழகுறான். இல்ல, ரொம்ப பிடித்தம் தான்னு ஸ்ட்ராங்கா இருந்தா, இந்நேரம் அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்லிருப்பான்ல?” கணவரிடம், தான் மகனை அறிந்ததிலிருந்து எடுத்து கூறினார்.

“பழகுன ஒடனே புடிச்சிருக்குன்னு சொல்ல, இது என்ன முட்டாள் தனமான அரேன்ஞ்ட் மேரேஜா?” அன்னையைப் பார்த்து குரலை உயர்த்தி கத்திவிட்டான் அஸ்வின்.

“அஸ்வின்…” ராகவ்வின் கண்டன குரல் இருவரையும் சென்று சேரவில்லை.

அதற்குள் மதி மேலும் மகனிடம், “என்ன ஒடனே? ஒரு வருஷம் மேல உங்களுக்குள்ள பழக்கம் இருக்கு. இந்த ஒரு வருஷம் போதாதா சரி வருமா, இல்லையானு முடிவெடுக்க? இத்தனை மாசம் இல்லாத ஒரு ஃபீலிங்ஸ், இனிமேல் வரும்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா? இது வெறும் அட்ராக்ஷன் தான்.”

அஸ்வின், “ம்மா அட்ராக்ஷன் அது இதுனு அசிங்கமா பேசாதீங்க.” பற்களைக் கடித்து குரல் தாழ்த்தி எச்சரித்தான்.

“உண்மை பேசுனா கோவம் வருதா? ஒரு வருஷமாகியும் உன் மனசுல நிரந்தரமான இடம் பிடிக்காதவளை புடிச்சு, நீ தொங்கிட்டு இருக்குறது எனக்கு புடிக்கல. நானும் தான் பாத்திருக்கேனே அவளை அந்த பார்ட்டில.

பக்கத்துல தான் இருந்தா, ஒரு வார்த்தை மரியாதைக்கு கூட பேசல என்கிட்ட. அவ வேணாம் உனக்கும், இந்த வீட்டுக்கும். உனக்கு புடிக்கலனாலும் நான் சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும்.” அழுத்தம் நிறைந்த குரலில் இதை தவிர, உனக்கு வேறு வழியில்லை என்று கூறி நிறுத்தியிருந்தார் மதி.

“உங்கள எல்லாம் உங்க அப்பா அந்த குடிகாரனுக்கே கட்டி குடுத்திருந்தா, அப்போ தெரிஞ்சிருக்கும் என்னோட கோவம். ஈஸியா இங்க வந்து உக்காந்துட்டீங்கள்ல, அப்றம் எப்படி அடுத்தவனோட கஷ்டம் புரியும்?”

மதியின் முகம் சட்டென இருட்டிவிட, தான் பேசியதன் வீரியம் இன்னும் விளங்காமல் அடங்காத சினத்தோடு நின்ற மகனை, நீர் நிறைந்த விழிகளோடு அதிர்ந்து பார்த்திருந்தார் மதி.

“அளவுக்கு மீறி பேசுற அஸ்வின். அவ வீட்டுல நின்னு அவளை பேச உனக்கென்னடா உரிமை இருக்கு? உன் இஷ்டப்படி தான இருப்ப? போ, உனக்கு புடிச்சதையே செய். நாளைக்கு கல்யாணம்னு சொன்னா வந்து நிக்கிறோம்.

அதைவிட்டு என் பொண்டாட்டிய பேசுற வேலை வச்சிக்காத. குடிகாரனுக்கு கட்டி வச்சிருக்கணுமாம்ல? அவனை சுட்டு என் மதிய தூக்கிட்டு வந்துருப்பேன்டா. எந்த எல்லைக்கும் போற அளவு அவ மேல எனக்கு பாசம் இருந்துச்சு. பேச வந்துட்டான், அவனையும் என்னையும் கம்பேர் பண்ணி…”

மகனை சரமாரியாக திட்டிவிட்டு, இன்னும் அசையாமல் நின்ற மனைவியின் கை பிடித்து தங்கள் அறைக்குள் இழுத்து சென்றுவிட்டார்.

சித்தார்த்தும் தன் பங்கிற்கு சகோதரனை முறைத்து, “யாருக்காகவோ என் அம்மாவை பேசுன, அண்ணன்னு கூட பாக்க மாட்டேன், கொன்னுடுவேன்.”

விரல் நீட்டி எச்சரிக்கை செய்த சித்தார்த்தும் அன்னையைத் தேடி சென்றுவிட, அனைவரின் புரிதலற்ற பேச்சும் செயலும் அதிகம் தன்னை தாக்கியதாக உணர்ந்த அஸ்வின், வாகனத்தை எடுத்து கண் போன போக்கில் சுற்றி திரிந்தான்.

மனம் அமைதியான நிலைக்கு வரவே, சில மணி நேரங்கள் பிடிக்க, அதன்பிறகு தான் அன்னையின் கலங்கிய தோற்றம் மகனை வதைத்தது. அளவிற்கு அதிகமாக தன்னை நினைத்தே கூனி குறுகி, உடனே அன்னையைப் பார்க்க வீட்டிற்கு விரைந்தான்.

வீட்டின் வாயிலை காவலர் திறந்துவிட, உள்ளே சில அடிகள் நகர்ந்த அஸ்வினின் வாகனம் தடுமாறி நின்றது அவன் கைகளில். சில அடி தூரத்தில் வீட்டின் வாயிலில் தந்தையும் சகோதரனும், அன்னையைக் கைகளில் தூக்கி வாகனத்தில் ஏற்ற, பதறிய அஸ்வின் வேகமாக இறங்கி அவர்களை நெருங்கினான்.

தந்தையின் முகம் இருளடைந்து காட்சியளிக்க, சித்தார்த் கன்னத்தில் கண்ணீரின் தடயம் காட்சியளித்தது. பின்னிருக்கையில் கண்களை மூடி கிடந்த மதியின் தோற்றமே, அவர் சுயநினைவின்றி கிடப்பது தெரிய, உயிரே நடுக்கம் கண்டது அஸ்வினுக்கு.

“ம்மா…” வார்த்தைகள் உருவாக மறுக்க, இதழ்கள் மட்டுமே அசைந்தது ஒலி எழுப்ப முடியவில்லை.

சகோதரனிடம் என்ன நடந்ததென கேட்க வர, அவனது கைகள் தடுமாறி வாகனத்தின் முன் இருக்கையின் கதவைத் திறக்க கூட, சிரமப்பட்டு நிற்பதைப் பார்த்தவன் அவனைத் தடுத்து, தானே ஓட்டுவதாக கூற, எதுவும் பேசாமல் வழிவிட்டு சென்றான்.

வாகனம் அந்த அமைதியான தார் சாலையில் மின்னல் வேகத்தில் மருத்துவமனையை அடைந்துவிட்டது. உடனே சிகிச்சை நடைபெற துவங்க, தந்தையிடம் சென்று என்ன நடந்ததென கேட்டான்.

அவர் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சகோதரனிடம் நின்றான், “ரூம் உள்ள வந்து ஒரு வார்த்தை பேசலடா, அமைதியாவே இருந்தாங்க. எவ்ளோ பேசியும் கொஞ்சம் கூட அசையல. கண்ணை மூடி படுத்துட்டாங்க. இப்ப திடீர்னு நெஞ்சு வலிக்கிதுனு சொல்லிட்டு, மயங்கி விழுந்துட்டாங்க.”

சித்தார்த் கூறியதைக் கேட்டு கை கட்டி, தலை கவிழ்த்து மௌனமாய் நின்றவன் நெஞ்சம், சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து நின்றது.

அவனது வாழ்க்கையின் விருப்பங்களை எல்லாம், அவன் மனம் அறிந்து தந்தையை எதிர்த்து போராடி, அவனுக்கான பாதையை வகுத்து கொடுத்தவரின் இந்த நிலை, தன்னால் தான் என்று எதிரில் இருந்த அந்த சிகப்பு விளக்கு, அவனுக்கு நினைவு படுத்திக்கொண்டே கொன்றது.

வேதனை சூழ்ந்த இதயத்தில், சகோதரன் வார்த்தைகள் வேறு ஊசியாய் நெஞ்சத்தில் இறங்கியது.

“எதுக்குடா இங்க நிக்கிற? உனக்கு தான் அவங்க இங்க இருக்குறதே புடிக்கலல… எவ்ளோ பெரிய வார்த்தை பேசுற, அவங்க இல்லனா இந்நேரம் உனக்கு புடிக்காத இந்த பிஸ்னஸ் தான் பாத்துட்டு இருந்துருப்ப.”

இன்னமும் தலை உயர்த்தாமல் நின்ற அஸ்வினைக் கடந்து, அப்பொழுது வெளியே வந்த மருத்துவரை நெருங்கி ஓடினான்.

“மைல்ட் அட்டாக் மாதிரி இருக்கு. இப்ப அவங்க ஓகே தான், பட் ரொம்ப கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க.” குடும்பத்தினர் முகமே செத்துப் போனது. ராகவ்வுக்கு தன்னுடைய அடித்தளமே ஆட்டம் கண்ட உணர்வு.

மதியை பார்க்க அனுமதி கிடைக்க, உள்ளே சென்றவர்களை, மிகவும் சோர்ந்து, கண்கள் சொருக படுத்திருந்த மதியின் தோற்றம் பெரிதும் கலங்கடித்தது. ராகவ் மனைவியின் கையை எடுத்து கன்னத்தோடு அழுத்தி கண் மூடி அமர்ந்து விட்டார்.

அந்த அறையில் பெரும் அமைதியே நிலவ, சில நிமிடங்களில் கண் விழித்த அன்னையின் அருகே, தரையில் மண்டியிட்டு வாய் விட்டு அழுதுவிட்டான் சித்தார்த்.

“உங்களுக்கு என்ன ம்மா, லட்சுமி ஆன்ட்டி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்ல? நான் பண்ணிக்கிறேன்.” என்றான் அன்னையை மட்டும் மனதினில் நிறுத்தி. தலை நிமிராமல் சகோதரன் வார்த்தையைக் கேட்ட, அஸ்வினின் சித்தம் பெரிதும் அடி வாங்கியது.

அவனுக்கு தெரியுமே, சகோதரனின் காதலைப் பற்றி. மூன்று வருடங்களுக்கு மேல் காதலை பொத்தி பொத்தி வளர்க்கிறான். ஏன், இவன் தோளில் சாய்ந்து, மனம் கலங்கி அழுத நாளின் நினைவு இன்னமும் நினைவிருக்கிறது.

“தம்பி…” உணர்ச்சியில், குரல் கமறி வந்த அன்னையின் வேதனை தாளாதவன்,

“எனக்கு சம்மதம் ம்மா.” இறங்கி வந்த அவன் குரல், அந்த அமைதியான அறையிலும் அனைவரது செவிகளையும் அடைந்தது.

அதிர்ந்து மூவரும் அவனைப் பார்க்க, வந்ததில் இருந்து இப்பொழுது தான் விழி உயர்த்தி குற்ற உணர்ச்சியோடு அன்னையைப் பார்த்தான். தொண்டை அடைத்தது, கண்களில் உயிர்ப்பில்லாமல் பார்க்கும் அன்னையை நோக்கவே.

சிரமப்பட்டு வார்த்தைகளை உருவாக்கினான், “நீங்க சொல்ற… பொண்ணை… நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…”

“கடமைக்கும் செண்டிமெண்ட்டுக்கும் மயங்கி, நீ எடுக்குற முடிவால, ஒரு பொண்ணோட வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல.” அவனைத் திரும்பி பார்க்காமல் கோவத்தைக் காட்டினார் ராகவ்.

அன்னையிடம் வந்தவன், அவர் பாதங்களுக்கு நெருக்கமாக அமர்ந்து அவரது காலைப் பிடித்துக் கொண்டான், “என் அம்மாவுக்கு தெரியும், அவங்க பையனை பத்தி. அவங்க ஃபிரண்ட் பொண்ணை தவர, இனி அவங்க பையன் வாழ்க்கைல யாருக்கும் இடம் குடுக்க மாட்டான்னு…”

தலையை அவர் பாதத்தில் அழுத்தி வைத்து, கண்ணீர் துடைத்தவன் அவர் முகம் பார்த்து, “நம்புறீங்க தான ம்மா?” பத்து வயது சிறுவனாய் இருந்த பொழுது, மன்னிப்பு வேண்டும் சிறுவனாய் அஸ்வின் தெரிந்தான்.

விழிகளில் நீர் படலம் உருவாக, துடித்த இதழ்களில் சிரிப்பை படரவிட்டு, ‘ஆமாம்’ என தலை அசைத்தார் அந்த அன்னை.

மதிவர்தினியை சுற்றி அவர் மக்கள் அனைவரும் உணர்ச்சி மிகுதியில் அமர்ந்திருக்க, அந்த சூழலை மிருதுவாக்க கதவைப் படாரென திறந்து உள்ளே வந்த ஆரோஹி,

“என்ன ஃபேமிலி மட்டும் தான் அலவ்டாம்ல? அப்போ நான் யாராம்? என்ன ஆன்ட்டி, நல்ல ஹாஸ்பிடல் பாத்து சேர மாட்டிங்களா? இங்க எல்லாம் காட்டானுங்களா இருக்கானுங்க. லூசு பயலுக…”

தொடர்ந்து உள்ளே அனுமதிக்காமல் அவள் கையைப் பிடித்து வெளியேற்றுவதில் குறியாய் இருந்த, அந்த வார்ட் பாயின் கையை உதறியவள் அவனை தீயாய் முறைக்க, மீண்டும் அவளைப் பிடித்து வெளியே நிறுத்தும் வேலையைத் தீவிரமாய் பார்த்தான் அவன்.

நால்வரின் பார்வையும் அவளை அதிர்ச்சியோடு பார்க்க, முதலில் சுதாரித்த மதியின் உடல் சோர்வெல்லாம் எங்கு மறைந்ததோ, “டேய்! அவளை விடுடா… அவ என் மருமக!”

சிந்தாமல் சிதறாமல் திருமண தகவலை, மணமக்கள் அல்லாது கணவனுக்கும் மருமகளை அறிமுகப்படுத்தி விட்டார்.

இதில் அப்பொழுது தான் அவர் பேசுவதன் அர்த்தம் புரியாமல் விழித்த ஆரோஹி, அஸ்வினைப் பார்த்ததும் உறைந்துவிட, அவளை விட அவன் விக்கித்து நின்றான்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!