Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 7.1

சுற்றிலும் வெறுமை, எங்கும் இருளை விஞ்சும் அமைதி, முற்றிலும் பயம். இரவில் வெளிச்சத்தைத் தேடும் வண்டுகளாய் அமைதியினைத் தேடி தவித்திருந்த அவன் ஏக்கத்தை, இரவின் காற்றோசை கூட அசைக்கவில்லை.

மனமெங்கும் பயம் வியாபிக்க, உடலை சற்று தளர்த்த, அந்த ஈரமான புல்வெளியில் வெறும் பாதங்களோடு நடைபயிலும் சிறுவனின் ஆர்வத்தில், தன்னுடைய எட்டுக்களை பார்த்துக்கொண்டே நடந்தான். இந்த இரண்டு வாரங்களில் அவன் வாழ்க்கையின் மாற்றம் சொல்லில் அடங்காதது.

எங்கிருந்தோ திடீரென காற்றின் உபயத்தால் இழுத்து வரப்பட்ட மேகம், பாரபட்சம் பாராது மழையினை அடித்து வீழ்த்தியிருக்க, அதன் தாக்கமாய் இன்னமும் படபடக்கும் இதயம் போல தான் அவன் நிலையும்.

ஆனால் அவன் வாழ்க்கை அந்த புயல், மழையோடு நிற்கப்போவதில்லை, அதன்பிறகு வரும் வானவில்லாய் வளைந்து அவன் வீட்டினுள் புகுந்து, வண்ணத்தைப் பரப்பவிருக்கின்றது. விடிந்தால் திருமணம்! அந்த நினைவே உடலை சிலிர்க்கச் செய்தது.



Advertisement

“எப்பா டேய்… முடியலடா சாமி!” தலையை அழுத்தமாக கோதி வாய் விட்டு புலம்பினான். எதிரணியினரை ஒற்றை அர்த்த புன்னகையோடு கதிகலங்க வைப்பவன் நிலை, இன்று பரிதாபத்திலும் பாவமானது.

சிரிப்பிற்கே பஞ்சமாய், யவ்னியிடம் என்ன பேச போகிறோம் என யோசித்து யோசித்தே, இரண்டு வாரங்களைத் தயக்கத்தோடு கழித்துவிட்டான். மதி ஒரே முடிவாக உடனே திருமணம் என பிடிவாதம் பிடித்துவிட்டார். எவ்வளவோ ராகவ் பேசி பார்த்தும் அசைந்தாரில்லை.

“அவன் சரி சொல்றப்பயே முடிக்கணும்.” என்றுவிட்டார்.

Advertisement

அவனுக்கே இந்நிலை என்றால், ஆரோஹி சொல்லவே வேண்டாம். அன்று மருத்துவமனையில் பேயறைந்தாற் போல் அப்படியே நின்றுவிட்டாள் அந்த இரவு முழுவதும். ஆண்கள் மூவருக்குமே அவள் நிலை பாவமாக இருந்தது. வந்த வழியே சென்றவளை சித்தார்த் கெஞ்சி இருக்க வைத்து, காலையிலே தகவலை திவ்யாவிடமும் மாறனிடமும் கூறிவிட்டனர்.

Advertisement

இரண்டோர் முறையே பார்த்திருந்தாலும், அந்த பெண்ணின் குணம் ஐந்தே நிமிடத்தில் தெரிந்துவிடும் வாயாடி அவள். அவளது அமைதியையே திரும்பி திரும்பி அடிக்கடி பார்த்த அஸ்வினுக்கு, கழுத்து வலியே வந்துவிட்டது.

“பாவமா இருக்குடா! ஃபோர்ஸ் பண்ண வேணாம் சொல்லு.” சகோதரனிடம் தூது அனுப்பி வைத்தான். ஆனால், அவனே அந்த நேரம் அஸ்வினுக்கு எதிரி தான். தன் பங்கிற்கு அவளை விழுந்து விழுந்து கவனித்தான்.

அதன்பிறகு பாதி நாள் திவ்யா, ஆரோஹியை சமாதானம் செய்து, மிரட்டி, மதியின் நிலையை எடுத்துக் கூறி என… மூச்சே நின்றுவிட்டது அந்த தம்பதிக்கு.

Advertisement

முடியவே முடியாது என அடம் பிடித்தவளை, இறுதியாக மதியின் கண்ணீர் தான் கரைத்தது. நிர்பந்திக்கப்படுகிறோம் என்கிற உண்மை உரைத்தாலும், சூழ்நிலை கைதியாக்கி இருவரையும் ஒரே நேர்கோட்டில் விதி நிற்க வைத்தது.

அமைதி என்றால் என்னவென்றே தெரியாதவளை, பல குரலோசைகள் அமைதி படுத்திவிட்டது.

“இன்னும் நீ தூங்கலையா அஸ்வின்? ரூமுக்கு போடா.” என்றான், அவர்கள் வீட்டின் நாயினை வாக்கிங் அழைத்து சென்று வந்த சித்தார்த்.

“நீங்க பண்ணி வச்சிருக்க வேலைக்கு தூக்கம் ஒன்னு தான் கேடு…” சகோதரனைப் புறக்கணித்து அந்த டாபர் நாய் கழுத்தைப் பிடித்து கொஞ்ச, அது அஸ்வினிடம் சந்தோசமாக தாவியது.

“இன்னைக்கு தூங்குனா தான் நாளைக்கு வேலை பாக்க முடியும்.”

“அடிங்க… உதை விழும்டா!”

“நல்லதுக்கே காலம் இல்ல. சரி, அண்ணிகிட்ட பேசுனியா?” புருவம் உயர்த்தி கிசுகிசுத்தான்.

“பேசுற நிலைமைல நானும் இல்ல, அத கேக்குற நிலைமைல அவளும் இல்ல. நான் அவளை இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ பாத்தேன்டா. பேசுவா… ரொம்ப பேசுவா… அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கூட நீயும் பாத்த தான? அதான் அவளோட உண்மையான குணம். உண்மை தெரிஞ்சு அவ அமைதியா இருந்தது ஏதோ உறுத்துது தெரியுமா?” பூட்டி வைத்த குமுறல்கள் எல்லாம் ஆள் கிடைக்கவும் வெளியே வந்தது.

“ஒருத்தர் அழுகுறது எல்லாத்துக்கும் தெரிஞ்சிடும்டா. ஆனா அமைதி, அவங்க நெருங்குனவங்களுக்கு தான் தெரியும். நீ அவங்களை நெருங்கிட்ட குமாரு…” ஒரு மார்க்கமாக கூறினான் கேலி செய்யும் எண்ணத்தோடு.

“கேனை மாதிரி பேசாதடா! நானே யவ்னிகூட எப்படி பேசுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்…”

சித்தார்த், “அப்போ உனக்கு கல்யாணம் பிரச்சனை இல்ல?”

சகோதரனை உன்னிப்பாக கவனித்து கேட்டான். அஸ்வின் பார்வை இருளை வெறித்தது, “ஒரு வருஷம் பழகிருக்கேன்டா. மத்தவங்க மாதிரி ஏனோ தானோனு பேசவும் இல்ல, பழகவும் இல்ல. இதை அடுத்த கட்டத்துக்கு எப்ப வேணாலும் எடுத்துட்டு போகலாம்னு தோனிருக்கு. அதுக்கான முயற்சி தான் ரெண்டு பக்கமும் இல்ல. அந்த தயக்கம் கூட நல்லது தானோனு இப்ப தோனுது.” என்றவன் இரு நொடி மௌனத்திற்கு பிறகு,

“என்னோட ஆதாயத்துக்காக அவளை யூஸ் பண்ணிட்டேன்னு யவ்னி நினைச்சிட்டா, என்ன பண்றது சித்தார்த்?”

சகோதரனை நெருங்கி வந்து, “கிஸ் பண்ணிருக்கியா?”

தான் என்ன பேச இவன் என்ன பேசுகிறான் என நொந்தே போனான் அஸ்வின், “நான் என்ன சன்யாசியா?” என்றவனுக்கு குற்றவுணர்வு மேலும் அதிகமானது. தலையை அழுத்தமாக கோதி ஆத்திரத்தை அடக்கினான்.

“அப்போ அதை தாண்டி…?”

“நான் கேவலமானவன் தான், அதுக்குன்னு கேடுகெட்ட கேவலமானவன் இல்ல.”

மெச்சுதலாக சகோதரனை வருடிய சித்தார்த்தின் பார்வை, “ஆமான்னு சொல்லிருந்தா, இனிமேலும் இந்த கல்யாணத்தை நானே நடக்க விட்ருக்க மாட்டேன். உனக்காக சொல்றேன்னு நினைக்காத அஸ்வின், என் அண்ணி அவ்ளோ நல்லவங்க.

யாருக்காகவோ இல்ல, அவங்களுக்காக அந்த பொண்ணுகிட்ட பேசு. இன்னைக்கு வேணாம், ரெண்டு நாள் போகட்டும். உண்மைய சொல்லு, புரிஞ்சுப்பாங்க. அதையும் மீறி அவங்களுக்கு கஷ்டம் இருக்கும் தான். உங்க ரிலேஷன்ஷிப், வாழ்க்கையவே வெறுத்து டிப்ரஷனுக்கு போகுற அளவெல்லாம் இல்ல, ஃப்ரியா விடு, ஓகேவா?”

தலையை அசைத்து கேட்டுக்கொண்டான். சகோதரன் முதுகில் இரண்டடி அடித்தவன், “போய் படுடா கிரிக்கெட்டரே!” வீட்டினை நோக்கி நடந்தவனைப் பார்த்த அஸ்வின் முகத்தில் அதிர்ச்சி சிரிப்பு.

“சித்தார்த்…?” கேள்வியாக இழுத்தான் அஸ்வின்.

“உன்னோட கல்யாணம் எப்டியோ? ஆனா அதுக்கு அப்புறம் இருக்க வாழ்க்கை கண்டிப்பா கலர்ஃபுல் தான்.” கண்ணடித்து சென்ற சகோதரனின் வார்த்தை, அஸ்வின் மனதின் எங்கும் ஊடுருவி சென்றது இன்பமாய்.

சட்டென மனம் இறகாகியது அஸ்வினுக்கு. நிலாவை துணைக்கு அழைத்து ஊர்வலம் சென்றவன், கால்கள் தோய்ந்த பிறகே அறையினுள் முடங்கினான்.

மெத்தையில் படுத்தது தான் நினைவில் இருந்தது, அடுத்த நாள் விடிந்ததும் தெரியவில்லை, இப்பொழுது ஹோமகுண்டத்தின் முன்னால், மின்னல் வேகத்தில் கிளம்பி அமர்ந்ததும் தெரியவில்லை.

“தம்பி மந்திரத்தை சொல்லுங்க.” ஐயர் நினைவுபடுத்தவும் தான், மீண்டும் விட்ட வேலையைத் துவங்கினான். பார்வை மட்டும் நிலையில்லாமல் அன்னையைத் தேடிக்கொண்டே இருந்தது.

“அண்ணி வந்துடுவாங்கடா, வேணாம் வேணாம்னு சொல்லிட்டு, இப்ப என்னமா தேடுறான் என் அண்ணன்?” சித்தார்த் கூற, அவனோடு நின்ற மாறனுக்கு சிரிப்பு எட்டி பார்த்தது.

இவனிடம் பேசி புரிய வைக்க முடியாது என அஸ்வின் அமைதியாகினான். ஆனால் கண்கள் அந்த வெறுமையான வீட்டினை அளந்தது. எவரும் இல்லை, வீட்டின் பணியாட்களுக்கு கூட அன்று விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டார், மகனின் ஒரே கோரிக்கையை நிறைவேற்ற.

அவர்களது திருமணம் பற்றிய தகவல் இன்னும் சில நாட்களுக்கு பிறகு, தானே வெளியில் தெரிவிப்பதாய் கூறிவிட்டான். அதன் பொருட்டு தான், விருப்பமே இல்லாமல் மகனின் திருமணத்திற்கு உறவுகள் எவரையும் அழைக்காது, மிகமிக எளிமையாக திருமணத்தை ஏற்பாடு செய்தனர் ராகவ், மதி தம்பதியினர்.

கழுத்தில் மாலையும் புது வேஷ்டி, சட்டை என அமர்ந்திருந்த சகோதரனை, வளைத்து வளைத்து தன்னுடைய புதிய கேமராவை பயன்படுத்தி, தன் திறமையை வெளிப்படுத்தும் முயற்சியில் இருந்தான் சித்தார்த். அவன் எடுத்த புகைப்படங்களின் அழகைப் பார்த்த அஸ்வினுக்கு சலிப்போடு சிரிப்பும் வந்தது.

“டேய் போதும்டா…” சிரிப்போடு பெரியவன் தலையை உயர்த்தி பார்க்க, ஒயிலாய் வந்த பெண்ணவள் தோற்றம் தான் கண்ணை நிறைத்து நின்றது.

அடர்நீல நிற ரவிக்கை முழுதும் அழகிய வேலைப்பாடுகளால் நிறைந்திருக்க, அந்த அழகிய நீல நிறத்தை போட்டி போட்டு தங்க நிறத்தில் இரட்டை வண்ணத்தோடு ஜொலித்த அப்புடவையில், பூக்களும் கொடிகளும் சரிக்கு சரியாக படர்ந்திருக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் அழகிய மொட்டுகளும் இப்பொழுது பூக்கவா என்ற கேள்வியோடு வெடித்து மலர தயாராய் நின்றது.

அடர்த்தியாக தங்கத்தால் நெய்திருந்த அந்த புடவையின் பார்டரில், தோகை விரித்து ஆடும் மயில்கள் கூட, அவளது ஜொலிக்கும் முகத்தின் அழகைப் பார்த்து நடனத்தை மறந்து சமைந்துவிட்டன.

ஏனோ அந்த புடவையின் ஜொலிப்பை விட, தாமரை மேல் அமர்ந்து, இரண்டு கஜங்களை துணையாய் நிறுத்தி, வைரத்தாலும் நவரத்தினத்தாலும் மின்னிய பொன் மஹாலக்ஷ்மியை, விஞ்சியது அவளது அந்த தேஜஸ். அன்று பார்த்த சோகம் இல்லை, அவனை போலவே இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு முன்னேற தயாராகிவிட்டாள் போலும்.

ஒரே ஒரு நகை கழுத்தில், கைகளில் இரண்டு வளையல்கள் மட்டுமே… பச்சை மரகத கற்கள் தொங்கும் கனத்த அந்த காதணி எப்படித்தான், அந்த சிறிய காதில் இடம் பிடித்ததோ? புடவையை பிடித்து நடக்க சிரமத்தோடு வந்தவள் மூக்கு, சிவந்து வியர்த்து தெரிந்தது.

அவளைப் பார்த்து வழக்கம் போல புன்னகை வந்தது அஸ்வினுக்கு. அன்னையிடம், “என்ன ம்மா?” என்றான் புன்னகை மாறாமல்.

“உன் பொண்டாட்டிக்கு பசிக்கிதாம்டா.”

“அண்ணி இருங்க, நான் சுட சுட ஜிலேபி எடுத்துட்டு வர்றேன்.”

அஸ்வினுக்கு மாறாக சித்தார்த் ஓட்டம் எடுக்கும் முன்பே, “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்டா, முகூர்த்தத்துக்கு நேரமாச்சுனு தான், நானே அவளை புடிச்சு வச்சிருக்கேன்.” மருமகளை வம்படியாக மகன் அருகே அமர்த்தியவர், அவள் கழுத்தில் அழகிய ரோஜாக்கள், தாமரை மலர்கள் தொடுத்த மாலையை அணிவித்து, அவள் அழகிற்கு மேலும் ஜொலிப்பை கூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!