Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 7.2

தன் அருகில் வந்து அமர்ந்தவள், தன்னை திரும்பி திரும்பி பார்ப்பதை உணர்ந்தவன் இதழ்களில், சிரிப்பு ஒட்டிக்கொண்டு போகவே மாட்டேன் என்றது. அவளைப் பார்த்தால் அதற்கும் சகோதரனிடம் கேலி வருமென அசையவே இல்லை.

“நீ போட்டோ எடுத்தது போதும், இங்க வா.” சகோதரனை அழைத்தவன் அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க, தலை அசைத்த சித்தார்த் முதலில், அங்கு உணர்ச்சியின் பிடியில் நின்ற திவ்யா அருகில், ஒரு நாற்காலியைப் போட்டு அவளை வம்படியாக அமர வைத்தான்.

பிறகு யாக குண்டத்தின் முன்பிருந்த தட்டில், ஒரு சாக்லேட் எடுத்து ஆரோஹி கையில் கொடுக்க, சிரிப்போடு வாங்கிக்கொண்டாள். அனைவருக்கும் அது யார் வேலை என்று தெரிந்தாலும் யாரும் எதுவும் பேசவில்லை.

“எனக்கு சாக்லேட் புடிக்காது, ஆனாலும் சாப்பிடுறேன். பசிக்கிதுல…” ஐயர் கூறிய மந்திரத்தை உச்சரித்தவன் இதழ்கள், ஒரு நொடி நிறுத்தி புன்னகைக்க, தலையைத் தாழ்த்தி மீண்டும் விட்ட வேலையைத் துவங்கினான்.



Advertisement

ஆரோஹியின் முறை வந்த பொழுது, அவள் உச்சரித்த வார்த்தை உச்சரிப்பில் ஐயரே கடுப்பாகிவிட, அவளை அருகில் அமர்ந்திருந்த அஸ்வின் தான் நிறுத்தினான்.

அதோ இதோ என்று ஒரு வழியாக அனைத்தும் முடிய, திருமாங்கல்யம் அஸ்வின் கைகளில் வந்து நின்றது, பெண்ணவளுக்கு உரிமையாகிவிட. அவனைப் பற்றி எதுவும் தெரியாமல், அனைத்தையும் தெரிந்துகொள்ள அவளது குறும்பு அவளை தைரியப்படுத்த, இத்தனை நேரம் பயத்தை மறைத்து வைத்த ஆரோஹி, கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.

அப்படி என்ன அவள் மீது அத்தனை பிடித்தமோ? எங்கிருந்து தான் வந்து திடீரென ஒட்டிக்கொண்டதோ? கலங்கிய கண்களைப் பார்க்க பிடிக்காதவன், “ஆரோஹி!” மெல்ல அழைத்தான்.

Advertisement

இத்தனை நாட்களில் பேசாது, இன்று, இவ்விடத்தில் வைத்து பேசதான் அவனுக்கு நேரம் கிடைத்தது. விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

Advertisement

“உனக்கு விருப்பம் இல்லனா, எல்லாம் இங்கையே நின்னுடும்.” இருவருக்கும் மட்டுமேயான அந்த உரையாடல், பெரியவர்கள் காதிற்கு சேராவிடினும், அந்த மௌனம், அனைவரையும் பதட்டமடைய தான் செய்தது.

இரண்டே நொடியில் பல சிந்தனைகளை மனதினுள் ஓட்டியவள், விழியோடு தலையையும் தாழ்த்தி அவனுக்கு அனுமதி கொடுக்க, அதன்பிறகு எவருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் அவளது மெல்லிய கழுத்தில், மாங்கல்யத்தை அணிவித்து தன்னையே அவளுக்கு கிரயம் எழுதிக் கொடுத்துவிட்டான் அஸ்வின் நாராயண்.

வீட்டினர் அனைவரின் மனமும் நிறைந்து போனது.

Advertisement

கடினப்பட்டு கணவன் கை பிடித்து எழுந்த நின்ற திவ்யா, ஆனந்த கண்ணீரோடு தோழிக்கு மலர்களை வாரி வாரி இறைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்க, மற்றவருக்கும் கண்கள் எல்லாம் குளிர்ந்து போனது, அந்த இளம் ஜோடியின் கண் ஜாடையில்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்களுக்கான சம்பிரதாயங்களை முடித்து, அனைவரிடமிருந்தும் விடைபெறுவதாக நின்ற மகனைக் கண்டிப்போடு பார்த்தார் மதிவர்தினி.

“இன்னும் முடிக்க வேண்டிய சம்பிரதாயம் எல்லாம் இருக்கு அஸ்வின். மதியம் சாப்பிட்ட ஒடனே போகணும்னு சொன்னா, என்ன அர்த்தம்?” மகனிடம் சண்டைக்கு நின்றார்.

“யோசிச்சு தான் பேசுறிங்களா ம்மா? எந்த சூழ்நிலைல கல்யாணம் நடந்துருக்கு? இப்போ இதெல்லாம் யோசிச்சு கூட பாக்கல நான், கிளம்புறோம் நாங்க.” என்றான் அஸ்வின் முடிவாக.

“அவன் சொல்றதும் சரிதான், போய்ட்டு வரட்டும் விடு.” மனைவியை அமைதிப்படுத்தி, “நாளைக்கு வீட்டுல விருந்துடா, மருமகளைக் கூட்டிட்டு வந்துடு.” நினைவுபடுத்தி வீட்டினர் அனுப்பி வைத்தனர்.

அன்னை வீட்டிலிருந்து அஸ்வின் வீட்டிற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்பதால், “தூங்குறதா இருந்தா தூங்கு ஆரோஹி, வீடு வந்ததும் எழுப்பி விடுறேன்.” என்றான்.

“இல்ல, நான் வழிய பாத்து வச்சுக்குறேன்.” உறங்க மறுத்து வேடிக்கை பார்த்தே வந்தவள், அசதியில் உறங்கிவிட்டாள். வீட்டை அடைந்ததும் அவளை எழுப்பி, அவளுக்கான அறையைக் காட்டி தானும் உடை மாற்றி வந்தான்.

இன்னும் பதினைந்து நாட்களில் அஸ்வின் லண்டன் செல்ல வேண்டும், ஒரு மாதத்திற்கான போட்டிக்காக. வீட்டினரிடமும் தகவலை சொல்லவில்லை, மனைவியிடமும் கூறவில்லை. அந்த பழக்கம் அவனுக்கு இதுநாள் வரை இருந்ததும் இல்லை.

அவன் அன்னை, தானே மகனைப் பற்றிய தகவலைத் தெரிந்து வைத்து, அவனிடம் பேசிவிடுவார். இப்பொழுது முன்பு போல் இலகுவாக இருக்க முடியாதே. அவனை நம்பி ஒரு பெண் வந்திருக்க, அவளிடம் தன்னைப் பற்றிய அனைத்து தகவலையும், தானே கூறிவிட வேண்டும் என்கிற எண்ணம் நேற்றே வந்துவிட்டது.

படியில் தடதடக்க வந்த ஆரோஹி, இரவு உடைக்கு மாறியிருப்பதைப் பார்த்தவன், “என்ன தூங்க போறியா?” கேட்டான்.

“இல்லையே…”

“அப்புறம் ஏன் நைட் டிரஸ்?” என்றான் அவள் உடை பார்த்தே.

“நைட் டிரஸ்னா நைட் மட்டும் தான் போடணுமா? நான் வெளிய போற நேரம் தவிர, மத்த நேரம் இப்படிதான் போடுவேன். ஏன் நல்லா இல்லையா?” மிகவும் எளிமையாக பழுப்பு நிறத்தில் இருந்தது அந்த உடை.

உடல் மொத்தமும் போர்வை வைத்து போர்த்தியது போல், தொளதொளவென இருந்த அந்த உடையை, என்ன சொல்லி குறை கூற முடியும்?

“இல்ல, நல்லா தான் இருக்கு.” என்றுவிட்டான்.

“உங்ககிட்ட ஒன்னு கேப்பேன், தப்பா நினைக்க கூடாது?” திருதிருவென விழித்து கேட்டவளைப் பார்த்து, அடக்கிய புன்னகையோடு கேட்குமாறு கூறினான்.

“உங்க கேர்ள் ஃப்ரண்ட் யாரு?”

சலிப்பானது அஸ்வினுக்கு, “இப்ப அதெல்லாம் எதுக்கு?” என்றான் கோவமாக.

அவளோ ஆர்வமாக, நன்றாக சோபாவின் நுனியில் அமர்ந்து, “அட, சொல்லுங்க கிரிக்கெட்டரே!” என்றாள் பிடிவாதமாக கதை கேட்கும் பொருட்டு.

“யவ்னி!” என்றான் சற்று இறங்கிய குரலில். “யவ்னினா… ஆக்டர் சஞ்ஜீத் பொண்ணா?” அதிர்ச்சியில் அவள் கேட்க, அவன் தலை ஆடியது.

“ஐயோ! எனக்கு அவரை ரொம்ப புடிக்கும். ப்ளீஸ்… ப்ளீஸ் கிரிக்கெட்டரே, ஒரே ஒரு தடவ அவரை மீட் பண்ண வைக்கிறிங்களா?” அவன் அருகில் யோசிக்காமல் அமர்ந்தவள், அவனிடம் கண்களைச் சுருக்கி அவன் கையைப் பிடித்து கெஞ்ச, தலையில் அடித்துக் கொள்ளலாம் என்றானது அஸ்வினுக்கு.

“லூசா நீ?” கோவத்தில் கேட்டான்.

“இதுல என்ன இருக்கு? எனக்கு அவரை பாக்கணும், ப்ராமிஸ் பண்ணுங்க.” தலையை அவள் பக்கம் திருப்பினான்.

அவளுக்கு செய்த சிகை அலங்காரம், முக அலங்காரம் மொத்தமாய் நீங்கி அவள் அவளாய் தெரிந்தாள்.

அவன் அணிவித்த பொன் தாலி, அவள் உடைக்கு வெளியில் தொங்க, கைகளில் வளையல்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்னமும் அவள் அசைவதற்கெல்லாம் அவளோடு சேர்ந்து ஆடியது அந்த கண்ணாடி வளையல்கள்.

மாறாத ஒன்றாக, அவன் சூடிய நெற்றி திலகம் மட்டுமே இருந்தது. இன்றுதான் திருமணம் ஆன பெண் இவள் என்று, யார் அடித்து கூறினாலும் நம்பவே முடியாது.

“ம்ம்ம்… பண்ணுங்க.” ஒரு கையால் அவன் கையைப் பிடித்து, மற்றொரு கையை அவன் முன் நீட்டி வீம்பு செய்தாள்.

அவள் கையைப் பிரித்தெடுத்து, “சரி, மீட் பண்ண கூட்டிட்டு போறேன். ஆனா, இனிமேல் யவ்னி பத்தின பேச்சு நமக்குள்ள வரக் கூடாது.” என்றான் கண்டிப்பாக.

ஒருவேளை அவள் எண்ணம் வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழ, “ஆன்ட்டி, உங்கள ரொம்ப ஃபோர்ஸ் பண்ணாங்களா? அவங்கள ரொம்ப லவ் பண்ணிங்களா?”

பொறுமை மொத்தமாய் காற்றில் பறந்தது அஸ்வினுக்கு. ஆனாலும் இழுத்துப் பிடித்த பொறுமையோடு அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தவன், “இங்க பாரு, உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. விருப்பம் இருக்கோ, இல்லையோ? இதுக்கு நாம இனி பழகிக்கணும்.” என்றான் மெல்லிய குரலில்.

“ஐயோ! அதுக்கு அவசியமில்லை, நான் வேணும்னா…”

அவள் என்ன பேச வருகிறாள் என்பதை அறிந்தவன் உடனே இடையிட்டு, “ஓகே, எனக்கு ஒரு முக்கியமான கால் இருக்கு. மேட்ச் பத்தின டிஸ்கஷன் பண்ணணும். நைட் பாக்கலாம், கிட்சன் அந்த பக்கம் இருக்கு, மெய்ட் யாரும் இல்ல. வேணும்ங்கிறதை குக் பண்ணிக்கோ.”

வேகமாக அவளுக்கு அறிவுரைகள் கூறி, இரண்டாவது மாடியில் இருந்த தன்னுடைய பொழுதுபோக்கு அறைக்குள் முடங்கிவிட்டான். எதை மறக்க நினைத்து முயற்சிகள் செய்தானோ, அதை மீண்டும் மீண்டும் இந்த பேதை பெண் நினைவூட்டுகிறாள்.

இதில் அவனை விட்டு விலகும் எண்ணம் வேறு உள்ளதென தெரிந்தபிறகு, ஆத்திரம் தான் வந்தது. அந்த கோவத்தைத் தணிய வைக்கும் ஒரே மந்திரம், கைகளில் மட்டைப்பந்தை ஏந்துவது என அறிந்தவன், அங்கு அவன் தயாரித்து வைத்திருந்த தானியங்கி பௌலிங் மெஷின் உதவியோடு, நேரத்தை செலவழிக்கத் துவங்கி இறுதியில் அதனை மறந்தே போனான்.

மனம் ஒரு நிலைக்கு வந்தபிறகு நேரம் பார்த்தான், ஒன்பதைத் தாண்டியிருந்தது. குளித்து கீழே வந்து பார்த்த பொழுது வாயில் கதவு திறந்திருக்க, யார் வேலை என தெரிந்து வந்து பார்த்தான்.

“யோவ்! வர்ற கோவத்துக்கு உன் மண்டைய தான் உடைக்க போறேன். அரை மணி நேரமா அட்ரஸ் தெரியல, தெரியலனு சொல்லிட்டு இருக்க. மேப் போட்டு வர வேண்டியது தானயா?”

அந்த பக்கம் ஏதோ கூற, “ண்ணா… கோவிச்சுக்காத ண்ணா… எனக்கு இந்த அட்ரஸ் புதுசு, கொஞ்சம் பாத்து வா.” இறங்கி வந்தாள் உடனே.

“யோவ்! அட்ரஸ் சரியா தெரிஞ்சா நான் ஏன்யா உனக்கு தெண்டம் போட்டு ஆர்டர் பண்ண போறேன்? கடைக்கு போய் வாங்கியிருக்க மாட்டேன்? இப்ப வர முடியுமா, முடியாதா?”

“…”

“மவனே! இப்ப நீ வரல, கன்ஸ்யூமர் கோர்ட் போவேன்.” மனைவி பேசுவதைக் கேட்டு மௌனமாக சிரித்தவன் காதில், அவளது அடுத்த வார்த்தை சிரிப்பை நிறுத்திவிட்டது.

“ண்ணா பசிக்கிது ண்ணா… மூணு மணி நேரமா தண்ணிய குடிச்சே சமாளிக்கிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!