Skip to content
Post Views: 7,047
அத்தியாயம் 16:
சந்தியா சென்றதும் ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டான் ஸ்ரீதர்.
மங்கை பாட்டி கல்பனாவிடம் “ஆமா, நீ யார வைரத்தையே பாக்காதவன்னு சொல்லிட்ருக்க. நிச்சயத்துல அந்த சந்தியா பொண்ணு போட்ருந்தாளே அதெல்லாம் அவங்க பரம்பரை வைர நகைங்க. பல தலைமுறையா கைமாறி இவளுக்கு இப்ப வந்துருக்கு. உன் பிசாத்து நெக்லஸ் அஞ்சு லட்சம் இருக்குமா. நம்ம இந்த மூணு தலைமுறையாதான் வைரத்தைலாம் பாக்குறோம். அவங்க ரொம்ப தலைமுறைக்கு முன்னாடியே அதெல்லாம் பாத்துட்டாங்க. பாரம்பரியமான குடும்பம் அவங்களுது. எங்க பேரன் கை காட்றான்னா, யாரு என்னன்னு விசாரிக்காம கட்டி வச்சிடுவோமா. ஆமா உனக்கு எங்க அதெல்லாம் புரிய போகுது. உனக்கு மனுஷங்கள்ளையே வைரத்தை கண்டுபிடிக்க தெரியல. உன்னட்ட போய் பேசிட்ருக்கேன் பாரு” என்று சென்றுவிட்டார் மங்கை.
தாத்தா எழுந்தவர் “அந்த பொண்ணு கரெக்டாதான் சொல்லிட்டு போயிருக்கா. நீதான் லோ க்ளாஸ். நான்தான் தெரியாத்தனமா உன்ன என் பையனுக்கு கட்டி வச்சி, இன்னைக்கு என் பேரனோட வாழ்க்கையை வீணடிச்சிட்டேன்” என்று சென்றுவிட்டார்.
Advertisement
சோபனாவும் அவள் கணவனும் ஒன்றும் சொல்லாமல் சென்றனர். கல்பனா இப்பொழுது நிவியைத்தான் பார்த்தார்.
“ஒன்னும் கவலை படாதீங்க அத்தை. எது எப்படியோ அவ கண்டிப்பா அத்தானுக்கு பொருத்தம் கிடையாது. அதைத்தான் புரிஞ்சுகிட்டு அவளும் எனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போனா” என்றாள் நிவி.
சந்தியா நினைத்தது சரிதான். நிவி காலையில் அவள் வீட்டிலிருந்து பக்கத்திலிருக்கும் அவள் மாமா வீட்டுக்கு யாரும் இல்லாத போது சந்தியா செல்வதை பார்த்துவிட்டு அங்கு வந்தாள்.
Advertisement
அப்பொழுது சந்தியா கல்பனாவின் அறைக்கு செல்வதை பார்த்துவிட்டு இவளும் உள்ளே சென்றாள். சந்தியா ரெஸ்ட் ரூமிற்குள் இருப்பதை தெரிந்து கொண்டவள் கண்களில், ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த நகை பட்டது. அவசரமாக யோசித்தவள், நகையை எடுத்து சந்தியா பேகில் வைத்து விட்டு, ரூமை விட்டு வெளியே வந்து கேமராவில் சிக்காதவாறு பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு சென்று விட்டாள். கல்பனாவிடம் போன் செய்து செய்ய வேண்டியதை கூறிவிட்டாள். பிறகு அனைவரும் கோயிலில் இருந்து வரும்போது ஒன்றும் தெரியாதது போல் அவர்கள் பின்னாலேயே வந்துவிட்டாள்.
Advertisement
ஆரம்பத்திலிருந்தே நிவியும், கல்பனாவும் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு சேர்ந்துதான் திட்டம் போட்டு கொண்டிருந்தனர். இன்று அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. நிவிக்கு ஸ்ரீதர் என்றால் மிகவும் விருப்பம். இவள் விருப்பத்தை ஸ்ரீதரிடம் கூறுவதற்கு முன்பே அவன் சந்தியாவை விரும்புவதை பெரியவர்களிடம் சொல்லிவிட்டான். அவர்கள் நிவியைத்தான் நீ கல்யாணம் செய்ய வேண்டும் என்று கட்டாய படுத்தியும் முடியாதென்று கூறியதால், அதற்கு பிறகு தன் விருப்பத்தை அவனிடம் சொல்ல அவள் ஈகோ இடம் கொடுக்கவில்லை. அதற்குத்தான் தானாகவே இந்த திருமணம் நிற்பதற்கான வேலைகளை பார்த்துவிட்டாள்.
ஆட்டோவில் ஏறி சந்தியா வீட்டுக்கு செல்வதற்குள்ளாகவே கல்பனா போன் செய்து செல்வத்திடம், இந்த திருமணம் நடக்காது என்று கூறிவிட்டார். என்னவோ ஏதோ என்று பதறி போய் இருந்தவர்கள் சந்தியா வந்ததும் என்ன விஷயம் என்று கேட்டதுதான் தாமதம். இவ்வளவு நேரம் தைரியமாக இருந்த சந்தியா தாங்க முடியாமல் பத்மாவின் மடியில் படுத்து அழுக ஆரம்பித்து விட்டாள்.
அவளை சிறிது நேரம் அழவிட்டவர்கள் பிறகு விசாரித்து நடந்ததை தெரிந்து கொண்டார்கள்.
Advertisement
“நா செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களாப்பா” என்றாள் சந்தியா.
“கண்டிப்பா இல்லடாம்மா. உன்ன கட்டாயப்படுத்துன எங்க பேர்லதான் தப்பு” என்றுவிட்டார் செல்வம். பத்மா ஒன்றும் சொல்லாமல் தன்னால்தான் எல்லாம் என்று அழுதார்.
மறுநாள் காலையே தாத்தா பாட்டி மற்றும் ஸ்ரீதரின் அப்பா சந்தியாவின் வீட்டுக்கு வந்தனர்.
மங்கை பாட்டிதான் சந்தியாவிடம் “நீ அவசரப்படறம்மா. இதே நேத்து நடந்த விஷயம் கல்யாணத்துக்கு பிறகு நடந்துருந்தா இப்படி சட்டுன்னு முடிவெடுத்துருப்பியா நீ” என்றார்.
சந்தியா அதற்கு ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். தாத்தாதான் “விடு மங்கை. அவளுக்கு ஸ்ரீதர் மேல ஆழமான பிடிப்பு இல்ல. அதான் சட்டுனு தூக்கி போட்டுட்டா” என்றார்.
அதற்கு சந்தியா “உண்மைதான் தாத்தா. விரும்பி என்ன கல்யாணம் பண்ணிக்க கேட்ட உங்க பேரனுக்கு என் மேல அந்த பிடிப்பு இருந்ததா” என்றதும் வாயடைத்து போனார் வேணு கோபால்.
“உன்ன சந்தேகப்பட்டு கேக்கலம்மா. நீ எதுக்குதான் நேத்து கல்பனா ரூம்குள்ள போன” என்றார் மங்கை. அதற்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சந்தியா.
பத்மாதான் விஷயத்தை கூறினார்.
“உங்க வீட்டுக்கு வந்தபிறகு சந்தியாக்கு பீரியட் வந்துருக்கும்மா. ஹேண்ட் பேக்ல நாப்கின் இருக்கும். அதனால பேக ரூமுக்குள்ள எடுத்துட்டு போயிருக்கா” என்றதும் என்ன சொல்வதென்றே புரியவில்லை அனைவருக்கும். பாட்டி சந்தியாவை பார்த்து “நேத்து என் வீட்ல உனக்கு நடந்தது ரொம்ப அநியாயம்ம்மா. என் பேரன வேண்டான்னு முடிவெடுத்துட்ட. அவன சபிச்சிராதம்மா. அவன் முட்டாளா இருக்கலாம், ஆனா நல்லவன்மா” என்றார்.
சந்தியா தாத்தாவை பார்த்து “கல்யாணம் முடிவு பண்ண நாள்ல நிவிக்கும் சீனியருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருங்க தாத்தா” என்றதும் அவளை மூவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
“ஆமா தாத்தா. உங்க பேரன் மேல எனக்கு பிடிப்பு இல்லன்னீங்க. ஆனா நிவிக்கு சீனியர் மேல அந்த பிடிப்பு அதிகமா இருக்கு. அதான் அவங்க இந்த அளவுக்கு இறங்கிருக்காங்க” என்றதும் பாட்டியும் ராகவனும் அதிர்ந்து போனார்கள். தாத்தாவிற்கு நேற்று சந்தியா நிவியை பார்த்த பார்வையிலேயே அவளுக்கு இதில் எதோ சம்பந்தம் இருக்கிறதென்று புரிந்தது.
“என்னம்மா சொல்ற. நா எதோ இது கல்பனா பண்ண வேலைன்னுல்ல நினைச்சேன்” என்றார் பாட்டி.
அதற்கு சந்தியா ஒன்றும் பதில் கூறாததால் மூவரும் கிளம்பினர். ராகவன் பத்மா செல்வத்திடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.
“மன்னிச்சிடுங்க. இத தவிர என்ன பேசறதுன்னு தெரியல எனக்கு. உங்க பொண்ணு எங்க இருந்தாலும் நல்லாருப்பா. அதை மட்டும் சொல்றேன்” என்றார்.
மூவரும் கிளம்பினார்கள். தாத்தா சந்தியாவின் தலையில் கை வைத்து “உன் அருமை தெரிந்து உன்னை போற்றும் குடும்பம் உனக்கு கிடைக்கும்மா. சந்தோசமா இருப்ப” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
செல்வம் கல்யாணம் நின்ற விஷயத்தை சுந்தர மூர்த்தியிடம் கூப்பிட்டு சொன்னதும் முழுதாக என்ன நடந்ததென்று கேட்டவர், நாங்க இப்பவே வரோம், என்ன கேக்க யாரும் இல்லன்னு நினைச்சிட்டாங்களா, நியாயத்தை கேட்டே ஆக வேண்டும் என்று நின்றார். செல்வம் எவ்வளவு கூறியும் அவர் சமாதானம் ஆகாததால் சந்தியா மொபைலை வாங்கி பேசினாள்.
“என்ன மாமா”
“ஏன் கண்ணு . அந்தம்மா அவ்ளோ பேச்சு பேசிருக்காங்க. உன் மேல இல்லாத பழியெல்லாம் சொல்லிருக்காங்க. எப்படி அப்படியே விடறது. நீங்க அங்க தனியா இருக்கதொட்டு உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைச்சி போட்டாங்களா”
“மாமா. என்ன நம்ப வேண்டியவர் நம்பல. அந்த வீட்ல வேற யார் என்ன நினைச்சாதான் எனக்கு என்ன மாமா”
“அதுக்காக அப்படியே விட சொல்றியா கண்ணு. உன்மேல போட்ட பழியையாவது இல்லன்னு நிரூபிக்கணுமா இல்லையா”
“அத அன்னைக்கே என்னால ப்ரூவ் பண்ணிருக்க முடியும் மாமா. ஆனா ஸ்ரீதர் யோசிக்கவே இல்ல. உடனே நம்பிட்டார். அதுக்கு பிறகு ப்ரூவ் பண்றதெல்லாம் தேவையில்லாத வேலையா பட்டது. இப்ப போய் நம்ம ப்ரூவ் பண்ண போனாலும் ஸ்ரீதர் என்னட்ட ஈஸியா மன்னிப்பு கேட்டுட்டு திரும்ப கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேப்பாரு. அது இனிமே என்னால கண்டிப்பா முடியாது மாமா”
“ஏன் கண்ணு மன்னிச்சாத்தான் என்ன. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி வாழ்க்கைய ஈஸியா தூக்கி போட்டரிங் இப்ப உள்ள புள்ளைங்க”
“எது மாமா சின்ன விஷயம். எவ்ளோ பிரச்சனை, யாருன்னால பிரச்சனன்னாலும் பையனுக்கும் பொண்ணுக்கும் அடிப்படை புரிதல், ஒருத்தர் மேல ஒருத்தர் ஆழமான நம்பிக்கை இருந்தா, எல்லாத்தையும் ஈஸியா கடந்துடலாம். மூணு வருசமா என்ன பாத்து எதோ ஒரு நல்ல எண்ணம் எம்மேல தோணுனதுனாலதான் என்ன விடாம கல்யாணம் பண்ணிக்க கேட்ருக்காரு. ஆனா ஒரே மாசத்துல அந்த எண்ணத்தை ஒரு பொண்ணு மாத்தி விட்ருக்கா. எல்லாத்தையும் விட முட்டாளோட வாழறது ரொம்ப கஷ்டம் மாமா”
“சரி கண்ணு . இந்த பழியோட கல்யாணம் நின்னு போயிருக்கே. நாளைக்கு வேற இடத்தில பொண்ணு கேட்டு வாரவங்க இதையே பேசி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லி போட்டாங்கன்னா”
“வேண்டாம்ன்னா போகட்டும். எல்லாருட்டையும் நிரூபிச்சிட்டே வாழ்ந்துட்ருக்க முடியாது மாமா. என்ன பாத்து , பேசி, என் மேல நம்பிக்கை வந்தா கல்யாணம் பண்ணிக்கட்டும். இல்லன்னா போகட்டும். ஊரு உலகத்துல உள்ளவங்க அபிப்ராயத்துக்காகவெல்லாம் வாழ முடியாது மாமா. நம்ம மனசாட்சிக்கு சரின்னு படணும்”
“ஆனாலும் உனக்கு துணிச்சல் அதிகம்தேன் கண்ணு”
” ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்,
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’ ன்னு பாரதியார் சொல்லிட்டு போயிருக்கார் மாமா. அது படி வாழணும்ன்னு நினைக்கிறவ நான்”
“ஆனா கண்ணு. சொந்த பந்தம், சொத்து பத்தெல்லாம் விட்டு போட்டு அந்த ஊர்ல போய் உக்காந்துருக்காரேன்னு உன்ர அப்பாரு மேல எனக்கு கோவம்தேன். ஆனா உன்ன அருமையா வளத்துருக்காரு. அதுக்காக அவரை மன்னிச்சி போடலாம்”
“சரி விடுங்க மாமா. நீங்க ஒரு பையன பெத்து வச்சிருந்தீங்கன்னா எனக்கு இந்த கஷ்டம் வந்துருக்குமா. உங்களுக்கு பையன் மட்டும் இருந்துருந்தான்னா இன்னேரம் கரெக்ட் பண்ணி தூக்கிருக்கலாம்”
“என்ன கண்ணு இப்படி சொல்லி போட்ட. எனக்கு சிங்க குட்டி மாதிரி ரெண்டு அண்ணா பசங்க இருக்காங்க”
“மாமா உங்கள கூட மாப்ள சிங்கம் மாதிரி இருப்பாருன்னு சொல்லித்தான் எங்க அத்தைக்கு கல்யாணம் பண்ணாங்களாம் . நானும் அந்த மீசைய பாத்து ஏமாந்துட்டேன். கல்யாணம் பண்ணி போனபிறகுதான் தெரிஞ்சது. அந்த வீட்ல ஏற்கனவே அப்பா சிங்கம் , அண்ணா சிங்கம்ன்னு ரெண்டு சிங்கங்கள் இருக்குது. அந்த சிங்கங்களுக்கு முன்னாடி நம்ம சிங்கம் கர்ஜிக்கவே செய்யாது. கர்ஜிக்கலன்னா கூட பரவால்ல, வாய கூட தொறக்காது. மண்டைய மண்டைய மட்டும்தான் ஆட்டும். அத பாத்துதான் தெரிஞ்சது நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டது சிங்கம் இல்ல ஆடு அப்படீன்னு, அத்தை என் நிச்சயத்துக்கு வந்தப்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க மாமா. சிங்கமான நீங்களே இப்படின்னா உங்க சிங்க குட்டிங்க எப்படி இருக்கும்னு புரியுதுங் மாமா. அதனால சும்மா குடுத்தாக்கூட உங்க சிங்க குட்டிங்க எனக்கு வேணாம் மாமா” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் சந்தியா.
“அடங். அப்படியா சொன்னா உன்ர அத்தை. இன்னைக்கு வீட்டுக்கு போய் இருக்கு அவளுக்கு.” என்று அந்த பக்கம் மீசையை முறுக்கினார் சுந்தரம்.
“விடுங்க மாமா. வீரனுங்க வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்” என்று சிரித்து கொண்டே போனை வைத்தாள் சந்தியா.
போனை வைத்த சந்தியா செல்வத்திடம் “அப்பா நீங்க ஏன் நம்ம ஊரைவிட்டு வந்தீங்க. நம்ம ஊர்ல நம்ம சொந்தங்களோட வாழற வாழ்க்கை தனிதான். நா கூட எனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா நல்லாருந்துருக்கும்ன்னு இந்த ரெண்டு நாளா யோசிச்சிட்ருக்கேன். இப்ப பாருங்க. மாமா உடனே வரேன்னு சொல்றாரு. இதல்லாம் உறவுகளோடு பலம்ப்பா” என்று நெகிழ்ந்து போய் கூறினாள் .
அப்பொழுதுதான் ஊரோடு சென்று விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தார் செல்வம்.
சந்தியாவின் கல்லூரியிலும் இந்த செய்தி பரவி சில பேர் இளக்காரமாகவும், சில பேர் பரிதாபமாகவும் விசாரித்தனர். கேலி கிண்டல்களை கடந்து சென்ற சந்தியாவிற்கு பரிதாபத்தை கடப்பதுதான் சிரமமாக இருந்தது. வெளியில் சிரித்தாலும், சாதாரணமாக காட்டி கொண்டாலும் சந்தியா மனதில் வலி இருப்பதை தெரிந்து கொண்ட செல்வம்தான் ஊருக்கு சென்றுவிடலாம் என்று தீர்மானமாக முடிவெடுத்தார்.
கதையை கூறி முடித்து அமைதியாக அமர்ந்திருந்த சந்தியாவிடம் “எப்டி சந்தியா இவ்ளோ தைரியாமாயிருக்க. நானா இருந்தா அந்த மாதிரி சுச்வேஷன்ல ஒன்னு பயந்து அழுவேன் இல்ல மயக்கம் போட்ருப்பேன்” என்றாள் கௌரி.
“நாம தப்பு பண்ணலன்னு நமக்கு தெளிவா தெரியும் போது எதுக்கு பயப்படணும். முக்கியமா இக்கட்டான நேரத்தில பயமோ, கோபமோ படக்கூடாது. ரெண்டுமே புத்திய மழுங்கடிச்சிரும் கௌ. அதும் பொண்ணுங்க எந்த சூழ்நிலையிலும் பதறாம நிதானமா இருக்கணும். நாலு திசையில்லாம எட்டு திசையிலேந்தும் யோசிக்கணும். இல்லன்னா நம்மள ஈஸியா யூஸ் பண்ணிட்டு போய்டுவாங்க”
“ம் நீ சொல்றது உண்மைதான். ஆனா எல்லாருக்கும் அந்த பக்குவம் தைரியம் இருக்கறது இல்ல”
“இல்லைன்னா வளத்துக்கணும் கௌ”
“அதுசரி உனக்கு நிச்சயம் நின்னப்ப கஷ்டமா இல்லையா”
“அம்மா அப்பா நினைச்சு ரொம்ப கஷ்டமாதான் இருந்தது. தேவையில்லாத மனகஷ்டம் தான அவங்களுக்கு. நல்ல வேளையா நிச்சயம் முடிஞ்சுருந்தாலும் ஸ்ரீதர் மேல விருப்பம் வரல எனக்கு. விருப்பம் வரமாதிரி அவர் நடந்துக்கவும் இல்லன்னு வச்சுக்கயேன். ஒரு வகைல எதிலருந்தோ தப்பிச்ச மாதிரி ஒரு நிம்மதிதான். ஆனா நா ரொம்ப யோசிச்சு வருத்தப்பட்ட விஷயம் இதுதான். ஸ்ரீதர் குடும்பம் பக்கத்திலேயே அவங்க அத்தைங்க வீடும் இருக்கிறதால எப்போதும் பெரிய குடும்பமா தெரிவாங்க.
இங்க நானும் அப்பா அம்மா மட்டும் தனியா இருக்க மாதிரி இருக்கும். நமக்கு தட்டி கேக்க யாரும் இல்ல, அதான் நம்மகிட்ட இவ்ளோ ஈஸியா விளையாடிட்டாங்க அப்படின்னு தோணிடுச்சு. அந்த சமயம் மாமா கால் பண்ணி நாங்க வரோம்ன்னு சொன்னார் பாரு, உண்மையிலேயே சொந்த பந்தத்தோட அருமையெல்லாம் அப்பதான் புரிஞ்சது எனக்கு. அப்பாவும் அப்படிதான் பீல் பண்ணாங்க. நாம சந்தோசமா இருக்க வரையிலும் நமக்கு உறவுகளோட அருமை பெருசா தெரியறதில்ல. ஆனா ஒரு கஷ்டம் வரும்போது அதுல பங்கு போட்டுக்க யாரும் உறவுகளே இல்லன்னா அப்பதான் நம்ம வாழ்க்கைல இவ்ளோ நாள் என்ன பண்ணோம், என்ன சாதிச்சோம்ன்னு தோணிடும்ன்னு சொன்னவர் பிறகுதான் யோசிச்சு இங்க வர முடிவு பண்ணாரு”
“அதற்கு பிறகு ஸ்ரீதர பாக்கலையா நீ”
“இல்ல. அவருக்கும் நிவிக்கும் கல்யாணம் நடந்துடுச்சுன்னு கேள்விப்பட்டேன். அதுக்கு பிறகுதான் நா இங்க வந்துட்டேனே. ஆனா தாத்தா சொன்னது உண்மை கௌ. எனக்கு ஸ்ரீதர பிடிச்சிருந்தா இவ்ளோ சீக்கிரம் தூக்கி போட்ருக்க முடியாது. அது இப்ப உங்கண்ணா மேல காதல் வந்தபிறகுதான் புரியுது. இப்ப என்ன ஆனாலும் யார் குறுக்க வந்தாலும் உங்கண்ணாவ என்னால விட்டு கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் சந்தியா.
error: Content is protected !!