Skip to content
Post Views: 3,491
சரசு உள்ளே சென்றதும் ராணியைத்தான் பார்த்தான் வசீகரன். அவளுக்கும் என்ன சொல்வது என தயக்கம். பெரிய மனிதனாக கம்பீரத்துடன் அண்ணனைப் பார்த்துவிட்டு, இப்படி பார்க்க கஷ்டமாக இருந்தது.
பக்கத்தில் நிற்கும் நித்யாவைத் தான் இத்தனை நேரம் பார்த்திருந்தாள் தங்கை. வசீகரன் அவளை நிமிர்ந்து பார்த்ததும், “உட்காருண்ணா…” என்று அன்னையைப் பார்க்க சென்றுவிட்டாள் உள்ளே.
நித்யாவின் கையைப் பிடித்து அவன் அறைக்கு அழைத்து சென்றான் வசீகரன்.
சரசு நெடு நேரமாக அழுதபடியே இருந்தார். மகள் பேசியது எதுவும் அவர் காதிலும் விழவில்லை. மனதிலும் பதியவில்லை. அவருக்கு மகன் யாரோ ஒருத்தியுடன் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற கோலமே இன்னும் கண்களை விட்டு அகல மறுத்தது.
Advertisement
அதனை ஜீரணிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தார். என் பையனா… இப்படி…? என நம்ப முடியாமல் மௌனமாக அழுது கொண்டிருந்தார்.
“அம்மா அழாத. நீ அழறதால ஏதாவது மாறிட போகுதா? வீணா அழுது உடம்பை கெடுத்துக்காத” என மகள் பக்கத்திலேயே உட்கார்ந்து அவரை சமாதானப்படுத்த முயன்றாள்.
“ஏய் போடி இங்கிருந்து. வந்துட்டா புத்தி சொல்ல. எனக்கு தெரியாது பாரு எதுவும். இனிமே நான் இருந்தா என்ன…? செத்தா என்னடி…?”
Advertisement
“இதுக்கா நான் அடுப்புலயும் அனல்லயும் வெந்து, ஆசாபாசமா அவ்வளவு கஷ்டபட்டு உங்களை சீராட்டி பாராட்டி வளர்த்தேன்” என கோவத்தில் கத்தியவர், “இவன் இப்படி என் மூஞ்சுல கரிய பூசுவான்னு நினைக்கலையேடி…”
Advertisement
“இதுவரைக்கும் ஒத்த பையன் ஒரு வார்த்தை சொல்ற மாதிரி நடந்திருப்பேனா…? சரசுன்னாலே நெருப்புன்னு சொல்வாங்கடி. உங்கப்பா இல்லன்னாலும் அத்தனை கௌரவமா கட்டு செட்டா குடும்பம் பண்ணவள் நான்”.
“என்னைப் பார்த்து பயந்த பயலுவ எல்லாம் நாக்கு மேல பல்லைப் போட்டு பேசற மாதிரி பண்ணிட்டானேடி, உன் அண்ணன்” என சத்தமிட்டு அழ ஆரம்பித்தார்.
இவர் சத்தத்தை கேட்டு வசீகரன் நித்யாவை அறையிலேயே இருக்க சொல்லி விட்டு, அன்னையை காண வந்தான். வசீகரன் வந்து அம்மாவின் கையை பிடித்தான், “ம்மா…” என.
Advertisement
சரசு, அவன் பிடித்திருந்த கையை வேகமாக உதறினார். “ஏய், அவனை இங்கிருந்து போகச் சொல்லுடி. பிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன். நான் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி அவனைப் போகச் சொல்லு” என கத்த ஆரம்பித்தார்.
ராணிக்கு பயம் பிடித்தது சரசின் கூச்சலில். “ம்மா எதுக்கு நீ இப்படி கத்துற. சும்மாயிரு” என அவரை அடக்கியவள் அண்ணனை எதுவும் சொல்ல முடியாமல் பரிதாபமாக பார்த்தாள்.
வசீகரன், “அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளு…”
சரசு மகனை நிமிர்ந்து எரிப்பது போல் பார்த்தார். “என்னடா கேட்கனும். இன்னும் என்ன கேட்கனும்? அதான் எல்லாரும் கேட்கற மாதிரி பண்ணிட்டியே. பிள்ளை பிள்ளைன்னு நம்புனதுக்கு, கொள்ளிக்கட்டைய தூக்கி தலையில போட்டுட்டியே…” என்றார் ஆங்காரமாக.
“ம்ப்ச்… ம்மா… பொறுமையா நான் சொல்றதை கேளும்மா… அப்புறம் நீ பேசு. கொஞ்சம் காது குடுத்து கேளும்மா… அப்பத்தான புரியும் நான் என்ன சொல்ல வரேன்னு…” என்றான்.
“நான் ஒன்கிட்ட வந்து நித்யாவ தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிருந்தா…, நீ சரின்னு எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பியா….?”
“ஏன்டா என்னைப் பார்த்தா அரக்கி மாதிரி இருக்கா. உன்னை பெத்தவதானடா. உன் மனச புரிஞ்சுக்க மாட்டனா…? பிள்ளைங்க சந்தோஷத்துக்காகதானடா வாழ்ந்துட்டிருக்கேன்”.
ராணி, “இப்படி ஒரு நினைப்பு இருக்கற நீ, ஏன் ண்ணா…? வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண, ஒத்துக்கனும். அட்லீஸ்ட் பொண்ணு பார்க்க போறதுக்கு முன்னாடியாவது, அம்மா கிட்ட நீ இவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தெளிவா பேசியிருக்கலாம் இல்ல…”.
“தேவையில்லாம பொண்ணெல்லாம் போய் பார்த்து, கல்யாணம் வரைக்கும் வந்து, இதுக்கு என்ன பதில் சொல்ல போறே…” என்றாள் கோவத்துடன்.
வசீகரன் தங்கையை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தான். அவ்வளவுதான் வாயை ஜிப் போட்டது போல மூடிக் கொண்டாள்.
அம்மாடியோவ் கண்ணாலயே மிரட்டுறான். விட்டான் அடிச்சுருவான் போல. எனக்கெதுக்கு வம்பு என தள்ளி நின்று கொண்டாள்.
“அவளை ஏன்டா முறைக்கிற? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா? நீ இவள தான் கட்டிப்பேன்னு. என்கிட்ட ஏன்டா சொல்லல…?”
வசீகரன் இன்னும் தங்கையை முறைத்து கொண்டிருந்தான். இவள் எல்லாம் என்னை கேள்வி கேட்பாளா…? என.
அவனைப் பொறுத்த வரை அன்னையைத் தவிர யாரும் அவனை கேள்வி கேட்க கூடாது. கேட்டதும் இல்லை. அப்படி யாரும் கேட்டாலும் பிடிக்காது. பதிலும் அவனிடம் இருந்து வராது.
“என்ன சொல்லனும்? சொல்லிருந்தா நீ ஒத்துக்கமாட்டே” என்றான் அதே முறைப்புடன்.
சரசு, “ஏன்…? ஏன்…? ஒத்துக்க மாட்டேன். நீயே முடிவு பண்ணிப்பியா….?” என எகிறினார்.
“ஏன்னா அவள் ஒரு விடோ”.
என்ன என அப்படியே அதிர்ச்சியில் நெஞ்சில் கையை வைத்து உறைந்துவிட்டார் சரசு.
“ம்ம்… இதுக்குதான் சொல்லல. இதோ இதுக்கே இந்த ஷாக் குடுக்கற. அப்புறம் எப்படி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்ப நீ. ஏற்கனவே அவளுக்கு கல்யாணம் ஆகி, கல்யாணம் ஆன இரண்டே வாரத்துல கட்டனவன இழந்துட்டு வந்துட்டாள்”.
“அதுமட்டுமில்ல அவளுக்குன்னு யாருமேயில்ல. அவங்கம்மா மட்டும்தான் அவளுக்குன்னு இருந்தாங்க. அவங்களும் ஒரு வருஷத்துக்கு முன்ன இவளை தனியா விட்டுட்டு போய் சேர்ந்துட்டாங்க. போதுமா. சொல்லிட்டேன்…”.
சரசு, ராணி இருவரும் இன்னும் விழிகளை கூட அசைக்காது அவனையே பார்த்திருந்தனர்.
இந்த அண்ணனுக்கு மூளை மழுங்கிடுச்சா. சொல்லாம கொள்ளாம கல்யாணம் தான் பண்ணிட்டு வந்திருக்குன்னு பார்த்தா….? இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கே. வேற பொண்ணே கிடைக்கலையா இதுக்கு?
அம்மா இவனுக்காக எப்படி பட்ட பொண்ணை பார்த்தாங்க. ச்ச இப்படி பண்ணிடுச்சே. எல்லார் முன்னாடியும் எவ்வளவு அசிங்கம்… என பார்த்திருந்தாள் வசீகரனை ராணி.
அவன் திரும்பி அவளைப் பார்க்கவும் பார்வையை சட்டென சரசிடம் மாற்றிக் கொண்டாள் பயத்தில்.
ஆனாலும் இந்த அண்ணன் சரியான கேடி. அம்மா கிட்ட சொல்லிருந்தா நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்கன்னு முன்னாடியே கரெக்டா கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டான்.
சரசு அதற்கப்புறம் வாயே திறக்கவில்லை, சுருண்டு படுத்து விட்டார். அழுகைகூட ஓய்ந்திருந்தது. அவன் கூறியதைக் கேட்ட அதிரிச்சியிலிருந்தே இன்னும் அவர் விடுபடவில்லை. பாவம் எத்தனை அதிர்ச்சியைத் தாங்குவார்.
மகன் தன்னை ஏமாற்றியதிலேயே தாய் மனம் விண்டு போயிருந்தது. இதற்கே துவண்டு விட்டால், இன்னும் மகன் அவளோடு சேர்ந்து குடும்பம் நடத்தியதை கேட்டால் என்ன ஆவாரோ…?
இந்த தகவலே போதும் என வசீகரன் முடிவு செய்து விட்டான் போல. அதற்கு மேல் எதுவும் கூறவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று அன்னையை பார்த்தவன், தங்கையையும் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
காலையிலிருந்து ஒருவரும் உண்ணவில்லை. எந்த சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது வீடு.
அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் வசீகரன் வெளியே சென்று, எல்லோரும் சாப்பிடுவதற்கு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தான். தங்கை, அன்னை, நித்யா என எல்லோரையும் சாப்பிட அழைத்தான். சரசும் ராணியும் எட்டிக்கூட பார்க்கவில்லை.
சிறிது நேரம் காத்திருந்து பார்த்தவன், பசி தாளாமல் நித்யாவை கூட்டி வந்து சாப்பாடு எடுத்து வைத்தான் சாப்பிடச் சொல்லி. அவளுக்கும் பசி. நேற்றிலிருந்து சரியாக சாப்பிடாதது. காலை இங்கு வந்தும் சாப்பிடாதது என பசியில் இருந்தாள்.
ஆதலால் ஏதும் மறுப்பு சொல்லாமல் அமைதியாக அவனுடன் சேர்ந்து உண்டு முடித்தாள்.
எல்லாம் ஒரே நாளில் சரியாகிவிடாது என அவளுக்கும் தெரியாதா என்ன? இருந்தும் திக்…திக்.. தான் நெஞ்சுக்குள். எல்லாம் சரியாக வேண்டும் என.
புதிய மனிதர்கள். புதிய இடம் என உள்ளுக்குள் புரளும் கலவரத்தில் நெஞ்சில் பீதியுடன் இருந்தாள்.
அவளுடன் சேர்ந்து சாப்பிட்டவன், வெறுமனே வீட்டில் இருக்க முடியாமல், நித்யாவைப் படுத்து உறங்க சொல்லிவிட்டு, கடைக்கு கிளம்பி சென்று விட்டான்.
இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போதே உணவுப் பொட்டலங்களுடன் வந்தான். அவன் நினைத்தது போலவே, மதியம் அவன் செல்லும்போது என்ன நிலையில் இருந்தனரோ, அப்படியே தான் இருந்தனர். அன்னையும் தங்கையும் சாப்பிட்டார்களா என கூட தெரியாது.
நித்யா காலையில் கட்டியிருந்த பட்டு சேலையை மட்டும் மாற்றி விட்டு படுத்திருந்தாள் தூங்காமல். இவன் வந்ததும் இவனைப் பார்த்து எழுந்து உட்கார்ந்தாள்.
“வா சாப்பிடலாம்” என அழைத்துச் சென்றான். அங்கு சென்று தங்கையையும் அன்னையையும் அழைத்தான் சாப்பிட. அப்போதும் சரசு அசைவேனா என படுத்திருந்தார். காலையில் இருந்து இன்னும் எதுவும் சாப்பிடவில்லை தாயும் மகளும்.
“அம்மா எதாவது சாப்பிட்டாங்களா…?” என்றான் தங்கையைப் பார்த்து.
இல்லை என தலையசைத்தாள். எங்கே அதற்கும் திட்டுவானோ என பயம். “நானும் சொல்லிப் பார்த்துட்டேன் ண்ணா. எதுவும் சாப்பிடல. வேணாம்னு பிடிவாதம், பண்றாங்க…” என்றாள்.
சரசிடம் சென்றவன், “ம்மா… எழுந்திரு. சாப்பிட வா…” என அழைத்தான் அவரின் கைப்பிடித்து. அசையாமல் படுத்திருந்தார்.
அவ்வளவுதான் அவனுக்கு உஷ்ணமானது உள்ளுக்குள். “அம்மா சும்மா நீ இப்படியே சாப்பிடாம படுத்திருந்தேனா, நான் வீட்டுக்கே வர மாட்டேன் பார்த்துக்கோ…” என்றான் அதிரடியாக.
அந்த வார்த்தை சரசுவை எழுந்து அமர செய்தது. ஒரே மகன், சீராட்டி பாராட்டி வளர்த்தவனை அவரால் ஒரு நாளும் பிரிய முடியாது. கோவம் வந்து அவளை அழைத்து கொண்டு எங்கும் தனிக் குடித்தனம் சென்று விடுவானோ என்ற பயம் அவரை எழுந்து உட்கார வைத்தது.
இருந்தாலும் கோவத்தையும் அவரால் விட முடியவில்லை.
ராணியை சைகையாலே உணவை எடுத்து வர சொல்லி அங்கேயே அமர்ந்து உண்டார். அதன் பிறகு தான் அங்கிருந்து நகர்ந்தான்.
இந்த மட்டுமாவது அவர் பிடியில் இருந்து இறங்கி வந்தாரே என பெருமூச்சு விட்டான். ராணியும் அவருடனே அங்கேயே சேர்ந்து உண்டாள்.
அவனும் நித்யாவும் சேர்ந்து சாப்பிட்டு படுக்க சென்றனர். நித்யாவிற்கு இன்றைய ஒரு நாளுக்கே மூச்சு முட்டியது. அவளும் எவ்வளவு நேரம் அறைக்குள்ளேயே அடைந்திருப்பாள்.
அவள் வீட்டில் சுதந்திரமாக இருந்து விட்டு, இங்கு வந்து அடைபட்டு இருப்பது போல உணர்ந்தாள். காலையிலிருந்து யாரும் அவளுடன் பேசவில்லை. வசீகரன்கூட சாப்பிடுவதற்கு பேசியதுதான்.
பகலில் தனித்திருந்த பொழுதில் யோசித்து சில முடிவுகளை எடுத்திருந்தாள். இரவு வசீகரனிடம் பேசிட வேண்டும் என தனக்குள்ளேயே முடிவு செய்திருந்தாள். ஆனால் எங்கே பேச முடிந்தது. அவனது முகத்தைப் பார்த்தாலே இருக்கும் தைரியமும் போய்விடும் போல இருந்தது. காலையிலிருந்து அவ்வளவு இறுக்கமாக இருந்தான்.
பேசாமலேயே உறங்கி விட்டாள். இந்த திருமணத்தை பற்றி வசீகரன் பேசியதிலிருந்து அவளுக்குள் மன உளைச்சல் தான். சரியான தூக்கம் இல்லாதது, இன்றைய அசதி எல்லாம் சேர்ந்து அவளை தூக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.
பழக்க தோஷத்தில் விடிவதற்கு முன்பே இன்றும் விழிப்பு வந்து விட்டது. விழித்தவளுக்கு சற்று நேரம் பிடித்தது தான் எங்கிருக்கிறோம் என உணர்வதற்கு. திரும்பி பக்கத்தில் பார்த்தாள். வசீகரன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனது தூக்கத்தை கலைக்க விரும்பாதவள், அவன் தூங்கட்டும் என, எழுந்து சத்தம் போடாமல் பாத்ரூம் சென்றாள். கையோடே குளித்து விட்டு வந்து உடையை மாற்றி கொண்டவள், திரும்பி வசீகரனை பார்த்தாள். நல்ல தூக்கம். அசைவுகூட இல்லை அவனிடம்.
அவளுக்கு பசிப்பது போல இருந்தது. சூடாக டீ வைத்து குடித்தால் தேவலைப் போல இருந்தது. கதவைச் சத்தமிடாமல் திறந்து ஹாலை எட்டிப் பார்த்தாள். யாருமில்லை. மெல்ல வெளியே வந்து அறைக் கதவை சாத்திவிட்டு, சமையல் அறைக்கு சென்றாள்.
சரசு நின்றிருந்தார். அவரைப் பார்த்தும் ஷாக்காகி அப்படியே நின்றுவிட்டாள். அச்சோ இவங்க இங்கிருக்காங்கன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டனே… என நின்றிருந்தாள்.
திரும்பி போகவும் கால்கள் மறுத்து தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டது.
சில நொடிகள் அப்படியே அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். தர்மசங்கடமான நிலை. கிட்சனுக்குள்ளும் செல்ல முடியவில்லை.
திரும்பி போனால் அது வேறு ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாரோ என அங்கேயே தேங்கி நின்றிருந்தாள்.
நித்யா வந்ததிலிருந்து, சரசு அவளைத் தான் பார்த்திருந்தார். வட்ட முகம். குண்டு கன்னங்கள். மெல்லிய உதடுகள். அளவான உடல்வாகு. மாநிறம். ம்ம்.. பார்க்க நல்லாதான் இருக்கா. ஆனால் என் பையனை விட இவ ஒன்னும் பெரிய அழகு கிடையாது.
அவரது நேர் கொண்ட பார்வையில் அவள்தான் பார்வையை தாழ்த்தி கொள்ள வேண்டியதாக இருந்தது.
ஒருவேளை அவள் கைம்பெண்ணாக இல்லாமல் இருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பாரோ என்னவோ…? அவரது சிந்தனை எல்லாம் அதிலேயேதான் இருந்தது.
பெண்கள் என்னதான் நல்லவர்களாகவும், பக்குவப் பட்டவர்களாகவும் இருந்தாலும் தன் குடும்பம் தன் வீடு என வரும் போது சுயநலம் தான் முன்ன எழும் போல. ஊருக்குதான் உபதேசம் எல்லாம் போல.
ஒரு கைம்பெண்ணை மகனுக்கு மனைவியாக, தனக்கு மருமகளாக அவரால் ஏற்க முடியவில்லை.
நித்யா “அ…து டீ வைக்கலாம்..னு வந்தேன்…” என்றாள் திக்கித் திணறியபடியே.
உடனே அவரது பார்வை அவள் மீதிருந்து நகர்ந்து அங்கிருந்த பால் பாக்கெட் மேல் படிந்தது.
அவர் பார்வை போன திசையிலேயே அவளது பார்வையும் நகர்ந்தது. பாலைத்தான் பார்த்தாள். பக்கத்திலேயே பால் காய்ச்சும் பாத்திரமும் இருந்தது.
ஓஹ்…..இவங்களும் டீ வைக்க தான் வந்திருக்காங்க போல.
கிட்சனுக்குள் சென்று, அடுப்பை ஆன் செய்து பாலை காய்ச்சினாள். அடுப்பில் பால் பொங்குவது போல சரசின் மனமும் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்தது, அவளைப் பார்த்து.
இவங்களுக்கும் சேர்த்து டீ போட்டா சாப்பிடுவாங்களா… என்ற யோசனை நித்யாவுக்குள். எப்படி கேட்பது என தவித்துக் கொண்டிருந்தாள்.
இவங்க இங்க நிக்கும் போது நான் மட்டும் எப்படி…, எனக்கு மட்டும் சேர்த்துக்க முடியும். கேட்கலாமா…?
ஆனால் சரசிடம் பேசும் தைரியம் மட்டும் வரவில்லை. பால் காய்ந்ததும் டீத்தூளை கையில் எடுத்தவள், அவரைப் பார்த்து திரும்பி “உங்களுக்கும் டீ போடவா..?” .என முடிப்பதற்குள் அவர் அந்த இடத்திலிருந்து சென்று விட்டார்.
அவர் அங்கிருந்து நகர்ந்ததும், ஹப்பா… கொஞ்ச நேரத்துக்குள்ளயே கண்ணை கட்டுதுடா சாமி என நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் கையால். இன்னும் பயம் போகவில்லை அவளுக்குள். நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டிருந்தது.
இருந்தாலும் அவருக்கும் சேர்த்து டீ போட்டவள் அதை வடிகட்டி, ஒரு டம்ளரில் எடுத்து கொண்டு ஹாலில் வந்து பார்த்தாள். சரசு இல்லை. திரும்பவும் எடுத்து சென்று கேஸ் ஸ்டவ் பக்கத்தில் தட்டு போட்டு மூடி வைத்து விட்டு, அவளுக்கானதை அங்கேயே ஆற்றி குடித்து விட்டு, வசீகரனுக்கு எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. கடந்த மாதங்களாக நடந்திருந்த அவன் கல்யாண குழப்பத்தில் இழந்திருந்த தூக்கத்தை எல்லாம் ஒரே நாளில் தூங்கி தீர்த்துவிடுவது, போல உறங்கி கொண்டிருந்தான்.
டீ.. யை அங்கருந்த டேபிளில் வைத்தவள், அவன் பக்கத்தில் அமர்ந்து அவனையே விடாது பார்த்திருந்தாள்.
உங்க கிட்ட இருக்கற இந்த அழுத்தம் எல்லாம் எங்கயிருந்து வந்ததுன்னு இப்ப தான் புரியுது, அம்மாவும், பிள்ளையும் செம டெர்ரர் பீஸ்பா. கண்ணாலயே உருட்டறீங்க ஆள. ஒன்னையே சமாளிக்க முடியாது. இதுல ரெண்டு பேரா என இருந்தது அவளுக்குள்.
வெகு நாளைக்கு பிறகு அவனை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வசீகரன் வேட்டியுடன் வெற்று மார்பில் உறங்கிக் கொண்டிருந்தான். அவளது கண்கள் வழக்கம் போல் அவனது மீசையில் வந்த நின்றது. எத்தனை கட்டுப்படுத்தியும் முடியாமல் கைகள் தானாகவே மீசையை வருட ஆரம்பித்தது.
முழிப்பு வந்து கண்கள் திறந்து, அவளைப் பார்த்தவன், இமைக்கும் நேரத்தில் அவளைப் இழுத்து மேலே போட்டுக் கொண்டான். அவன் இழுத்ததில் அவன் நெஞ்சிலேயே தடுமாறி விழுந்தவள், “நான் குளிச்சிட்டேன்” என்றாள் அவசரமாக.
குளி அதுக்கென்ன இப்ப…”
“விளையாடாதீங்க. விடியவே ஆரம்பிச்சிடுச்சு…”
“விடியட்டும். நேத்துதான்டி நமக்கு கல்யாணமே முடிஞ்சிருக்கு…”
“அதுக்கு…?”
“அ..து..க்கு .தான்… நானும் சொல்றேன்…” என்றான் அவளைப் பார்த்து கண்ணடித்து… ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டே.
“ரொமான்ஸா… ஆனால் எனக்கு வரலை. ம்ப்ச் விடுங்க” என்றாள் முகத்தை சுளித்து.
“ஏன்டி.. முன்னாடியாவது நமக்கு கல்யாணம் ஆகலை. இப்ப நான் உனக்கு தாலி கட்டின புருஷன். புல் ரைட்ஸ் இருக்கு எனக்கு”
“ஓஹ் அப்படிங்களா…? அப்ப எந்த நினைப்போட போய் இன்னொரு பொண்ணை பொண்ணு பார்த்திட்டு வந்தீங்க…?” என்றாள் காட்டமாக.
“அடியேய் நமக்கு கல்யாணமே முடிஞ்சிடுச்சு. நீ இன்னும் அதை விடவே மாட்டியா…?” என்றான் எரிச்சலாக.
“எப்ப கல்யாணம் முடிஞ்சது? நீங்க இன்னொரு பொண்ணை பார்க்க போனீங்களா இல்லையா…?”
அய்யோ… என தலையில் கை வைத்துக் கொண்டான்.
இவ இன்னும் எவ்வளவு நாளைக்கு இதையே பிடிச்சி தொங்க போறான்னு தெரியலையே. வேணும்டா உனக்கு எல்லாரையும் ஏமாத்தின இல்லை, அனுபவிடா… என அவன் மனசாட்சியே அவனை கிண்டல் செய்தது.
“விடுடி அத. மாமன காலையிலேயே மூட் அவுட் பண்ணாத…” என்றான் கடுப்பாக.
அவனை முறைத்து பார்த்தாள்.
“முறைச்சா கூட அழகிதான்டி…” என கொஞ்ச ஆரம்பித்தான்.
“கையை எடுங்க மேலயிருந்து…”
நான் எங்க கைய வச்சிருக்கேன். உன் கைதான் என்னைப் பிடிச்சிருக்கு என்றான் நமுட்டுச் சிரிப்பாக. ஆம். அவன் கைகள் இரண்டையும் அவன் தலைக்கு அடியில் கோர்த்து வைத்திருந்தான்.
“உங்களை…” என சிணுங்கிக் கொண்டே அவன் மேலிருந்து எழுந்தாள்.
வசீகரன், “அச்சோ என் செல்லத்துக்கு கோவம் வந்திடுச்சோ…” என அவளை எழ விடாமல் இறுக்கிக் கொண்டு இழைய ஆரம்பித்தான்.
“விடு… விடு… என்னை” என அவள் அவனிடமிருந்து விடுபட முயன்றாலும் முடியவில்லை. அவன்தான் விடாக்கண்டனாக இருந்தானே அவனது காரியத்தில்.
தொடரும்.
error: Content is protected !!