Skip to content
Post Views: 1,969
அத்தியாயம் 11
அசோக் அதன் பின் அவளை விக்டோரியா பீக் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். இம்முறையும் அவன் லோக்கல் டாக்ஸியை புக் செய்திருந்ததால் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தில் அது விக்டோரியா பீக்கை சென்றடைந்தது பொழுது புலர்ந்து ஒரு மணி நேரம் தான் இருக்கும். காலை 07:00 மணி என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை. அவசர அவசரமாக ட்ராமிற்கு தான் முன்னரே புக் செய்திருந்த ஆன்லைன் சீட்டை காண்பித்து ட்ராமில் நுழைய அங்கே ஏற்கனவே ஸ்டான் நின்றிருந்தான். அவன் வைஷ்ணவியைக் கண்டதும் புன்னகைத்து அவள் அருகில் வந்து நலம் விசாரித்தான். ராஸ் தீவில் அவளிடம் நடந்துக் கொண்ட விதத்தில் அவனுக்கு வைஷ்ணவி மேல் அனுதாபம் உண்டாகி இருந்தது. அசோக் ஸ்டானின் அனுசரணைக்கு ஒரு புருவ உயர்த்துதலுடன் தன்னுடைய விசாரிப்பை முடித்துக் கொண்டான். ட்ராம் இருபுறம் மலையின் பசேல் மரங்கள் தெரிய பயணித்தது. அதன் பின் நாற்புறமும் கண்ணாடி இருந்த ட்ராமில் ஏழு நிமிடத்தில் விக்டோரியா பீக்கை சென்றடைந்தனர் அங்கிருந்து ஹாங்காங் தீவை பார்ப்பதற்கு அழகோ அழகு. வானுயர்ந்த கட்டிடங்கள் கண் முன் மிக அழகாக விரிந்தது. மலையுச்சி மேல் இருந்த கேலரியா பீக் திடலில் கண்ணாடி திண்டு முன்னிருக்க அதன் மேல் கை ஊன்றி கீழிருந்த நகரத்தின் அழகையும் அதனை சூழ்ந்திருந்த ஆழியின் அழகையும் ரசித்து நின்றிருந்த வைஷ்ணவியின் அருகில் வந்து நின்றான் ஸ்டான். ஸ்டானைப் பார்த்ததும் மெலிதாகப் புன்னகைத்து அவள் நிற்க அசோக் அவளுக்கு தண்ணீர் பாட்டில் வாங்கி வரச் சென்றிருந்தான்.
“எப்படி இருக்கு டிராவல் ஹேன்ட்?”
ஸ்டான் ஆங்கிலத்தில் வினவ வைஷ்ணவி புன்னகைத்துப் பதில் பேசினாள். ஆங்கிலத்தில் தொடர்ந்தது அவர்களது உரையாடல்.
Advertisement
“ம் நல்லாருக்கு உங்க பிரண்டு வரலையா?”
அவள் கேட்க
“வந்திருக்கான். அதோ அங்க பர்ச்சேஸ்”
Advertisement
அவர்கள் பேச புதிதாக ஒரு வெளிநாட்டு பெண் ஸ்டானின் அருகில் வந்து நின்றுப் பேசினாள்.
Advertisement
“ஹாய் மிஸ்.வைஷ்ணவி நான் லிடியா. ஸ்டான் கொலிக்”
வைஷ்ணவி அவளது முகத்தை நினைவுகூர முயன்றாள். உடன் வந்த பன்னிரண்டு ஜோடிகளில் அவளைப் பார்த்த நினைவு வந்தது.
ஸ்டான் லிடியா இருவரும் பேசிக் கொண்டே இருக்க அசோக் வந்திருந்தான்.
Advertisement
வைஷ்ணவி அசோக் வந்ததும் அவர்களது பேச்சு தடைப்பட ஸ்டான் அவர்களிடம் இருந்து விடைப் பெற்றான். அசோக் ஸ்டானைத் தீர்க்கமாகப் பார்த்து விட்டு வைஷ்ணவியை நோக்கினான்.
“என்னவாம்?”
அசோக் கேட்க,
“சும்மா டிராவல் பத்தி விசாரிச்சாங்க”
அசோக்கின் பார்வையில் தீவிரம் குறையாதே ஸ்டான் சென்ற வழிப் பார்த்திருக்க கூட்டம் அதிகம் வரத் தொடங்கியது.
அசோக் அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் லயன்ஸ் பெவிலியன் சென்றான். சீனக் கட்டிடத்திற்கே உரிய வடிவமைப்பில் படர்ந்த கூம்பு போன்ற கூரை அழகு சேர்க்க முன்னே முற்றத்தில் நின்று கீழே ஹாங்காங் நகரத்தின் அழகை ரசிக்க வகை செய்யப்பட்டு இருந்தது.

வைஷ்ணவி கூட்டத்தில் ஜோடியாக சுற்றிக் கொண்டு இருந்த காதலர்களைக் கண்டதும் வருணின் நினைவுகள் காயம் செய்யத் தொடங்கியது.
“ஏ வைஷூ. இது நம்மோட லவ்வர்ஸான பர்ஸ்ட் ஆனிவர்ஸரி”
அவன் எழுதிய காகிதமும் இரு பீங்கான் கப் இதய வடிவில் வரைந்திருந்த இரு டீசர்ட் இருந்தது.
அன்று வைஷ்ணவிக்கு அவன் காதல் சொன்ன தினம் என்ற நினைவு கூட இல்லை. அவள் முகம் முழுவதும் மகிழ்வும் மெலிதான குற்ற உணர்வுமாக நிற்க வருணின் முகம் வாட்டமாகி நொடியில் சரியானது.
“இட்ஸ் ஓகே வைஷூ. எனக்கு கிஃப்ட் வேணாம். ஒரு கிஸ் போதும்”
வருண் சொல்ல மெலிதாக புன்னகைத்து அவன் தோளில் சாய்ந்த நினைவு வர வைஷ்ணவியின் முகம் இறுக்கமானது. மணி பத்தை நெருங்கியிருந்தது.
“வைஷூ இங்க மேடம் டசௌட்டஸ் மெழுகு சிலை மியூசியம் இருக்கு போலாமா?’
அசோக் கேட்க தன் நினைவுகளின் வேதனையை அவன் மீது சினமாக அள்ளித் தெளித்தாள் வைஷ்ணவி.
“எதுக்கு இப்பவே மணி பத்தாயிட்டு இனி ஊர் சுத்திட்டு மறுபடியும் உன் கூட லோ லோனு அலையச் சொல்றீயா? இப்பவே எனக்கு தலை வலிக்குது”
அசோக் புருவத்தைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.
“இப்ப எதுக்கு இப்படி கத்தற? சீனிப் பட்டாசு இல்ல நீ சரியான அணுக்குண்டு”
அசோக் சொல்லி விட்டு வேகமாக நடக்க வைஷ்ணவி கத்தினாள்.
“என்ன இப்பவும் தனியா அம்போனு விட்டுட்டு போவே அதானே”
அவளது சத்தத்தில் சுற்றியிருந்த நான்கு சீனர்கள் அவளை நோக்கித் திரும்ப அசோக் அவளை நோக்கி வந்தான். அவளை மறுபடியும் தனியே செத்தாலும் விட்டுட்டு போக மாட்டேன் என்று சொன்ன வரிகள் நினைவு வந்தது அவனுக்கு.
“அம்போனு விடலை ஆட்டோனு விடலை. வந்து தொலை”
அசோக் சொல்ல வைஷ்ணவி இறுக்கமான முகத்தோடு அவனிடமிருந்து சற்றுத் தள்ளி நடந்தாள். அவளது செய்கையைக் கண்டு அசோக் பேசினான்.
“பார்த்து, பார்த்து அப்படியே ஓரமா நடந்து அந்த பாதாளத்தில விழுந்துடாதே”
வைஷ்ணவிக்கு தன்னுடைய நடையும், எதிரே தெரிந்த பள்ளத்தாக்கும் அவனுடைய கேலியும் நினைத்து அவளையும் மீறி சிரிப்பு வந்தது. அவனை நோக்கித் திரும்பினாள். அசோக் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நோக்கி புன்னகையுடன் வந்தான். வைஷ்ணவி அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
‘நான் கூடை நிறைய அமிலச் சொற்களை கொட்டினாலும் இவனால் எப்படி காயம் கொள்ளாதவாறே கை நிறைய புன்னகைப் பூக்களை நீட்டி நிற்க முடிகிறது’
வைஷ்ணவி அசோக் பற்றிய நினைவுகளின் கேள்விகளில் ஆழ்ந்து இருக்க அசோக் பேசினான்.
“வா வா கிளம்பலாம். என்னால வெடிக்கற சீனிப் பட்டாசை வைச்சுட்டு சீனா முழுக்க சுத்த முடியாது”
அசோக் சொல்லி விட்டு நகர்ந்தான். இருவரும் நடந்து டிராம்ப் செல்லும் இடத்திற்கு வர கீழே ட்ராம்பில் செல்ல அதிக கூட்டம் இருக்க வைஷ்ணவி அவனைப் பார்த்து முறைத்தாள். அசோக் குரலை செருமிக் கொண்டுப் பேசினான்.
“டவுன் ஹில் நடக்க முப்பது நிமிசம் தான் ஓல்ட் பீக் ரோடு இங்க தான். நின்னுட்டே இருந்தா லேட் ஆகும்”
வைஷ்ணவி அங்கே டிக்கெட் எடுத்தவர்களே ட்ராம்பில் செல்ல ஒரு மணி நேரம் பிடிக்க அசோக் சொல்வது தான் நல்லது என்பதாக முடிவு செய்து அவனுடன் நடந்தாள். இனிமையான ஏமாற்றங்களின் முகவரி, இதயத்தை காயம் செய்யாது நேசிக்கும் இதமான மனிதர்களின் பொய்களே. அசோக் அவள் வாழ்வில் அத்தகைய பொய்களின் மொத்த குத்தகைக்காரன்.
நம்பவே கூடாது என அவன் முன் எத்தனை முறை எல்லை வகுத்து நின்றாலும் ஒரு கேலியில் ஒரு புன்னகையில் அதை நீர்ப்பட்ட கோலமாக அழித்து விடும் வித்தைக்காரன் அவன்.
வைஷ்ணவி மீண்டும் அவனுடன் நடந்தாள். அரைமணி நேர நடையில் வைஷ்ணவியின் கால்கள் தொய்வுற தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை குடித்து குடித்தே நடந்தாள். அசோக் ஒவ்வொரு முறையும் இதோ வந்துடுச்சு இதோ வந்துடுச்சு என்று சொல்லியே அழைத்து வர அவள் பொறுமை இழந்து நிற்கையில் அந்த திசைக்காட்டியில் ஓல்ட் பீக் ரோட் என எழுதப்பட்டிருந்தது. அசோக் தண்ணீரை அவளது கையில் இருந்து வாங்கிக் குடித்து விட்டு அவளை நோக்கிச் சாவகாசமாகக் கேட்டான்.
“இப்ப நாம எங்கிருக்கிறோம்? சொல்லு? இப்ப நாம எங்கிருக்கிறோம்? ஓல்ட் பீக் ரோட் ல”
வைஷ்ணவி பொறுமை இழந்து கத்தினாள்.
“பெரிய டோரா புஜ்ஜி. டேய் கால் வலிக்குதுடா முடியலை என்னாலே!”
அவள் வெடிக்கும் குரலில் பேச அசோக்
“இந்தா தண்ணீ குடி” எனக் கொடுக்கையில் அந்த தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து மீதமிருந்த தண்ணீரும் முழுவதுமாகக் கொட்டியிருந்தது. வைஷ்ணவி சினத்தின் உச்சியில் அவனை நோக்க,
“இன்னும் முப்பது நிமிசம் தான் கீழே போயிடலாம்” அசோக் சமாதானக் குரலில் வைஷ்ணவியிடம் பேசினான்.
‘ஒழுங்காக அங்கேயே நின்றிருந்தால் கூட ஒரு இருபது நிமிசம் தான் எச்சா நேரமாகியிருக்கும் இவனை’
வைஷ்ணவி பத்ரகாளியாக மாறி அவனைத் துரத்த மலை இறக்கமான பாதையில் அசோக் வேகமாக கீழே ஓட வைஷ்ணவி துரத்தினாள்.
“டேய் ஓடாதே! நில்லு!”
அவள் இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்கள் சூழ்ந்த சாலையில் ஓட பத்து நிமிடத்தில் மூச்சு வாங்க நின்றாள். வளைவான பாதை என்பதால் அசோக் முன்னே இருக்கிறானா எனத் தெரியாது நின்றாள். அந்த வழியில் ஒரு கடை கூட இல்லை. இது வரை வந்த பாதைகளில் எல்லாம் கடைகள் இருந்தது. தாகம் தவிக்க கடைசித் தண்ணீரையும் அவன் கொட்டி விட்ட நினைவில் அவள் எரிச்சலாகி நிற்க அசோக் குரல் டோரா புஜ்ஜி பாணியில் ஒலித்தது.
“குள்ள நரி! உங்க கண்ணுக்குத் தெரியுதா ! நீங்க அதைப் பார்த்தீங்களா?”
அதைக் கேட்டதும் வைஷ்ணவி கோபமாகக் கத்தினாள்.
“ஏ புலிமூஞ்சி நீ எங்க சுத்துனாலும் என்கிட்ட தான் வந்தாகணும். நீ மட்டும் என் கையில சிக்கின?!!”
“நல்லது நீங்க சிறப்பா ஓடினீங்க”
அசோக் குரல் மீண்டும் கேட்க வைஷ்ணவி வெறிக் கொண்டவள் போல் ஓடினாள். இறக்கமான பாதை என்பதால் ஓடிய வேகத்தில் இருபது நிமிடத்திலேயே கீழே வந்திருந்தாள். அசோக் அங்கே புன்னகையுடன் நின்றிருந்தான்.
“ஏ சீனிப் பட்டாசு மணி பதினொன்னு கூட ஆகல கீழே வந்தாச்சு வா சீக்கிரம் பன்னிரண்டு மணிக்குள்ள போகணும்ல”
அவன் சொல்லிய வேகத்தில் கால் டாக்ஸி வந்திருக்க வைஷ்ணவி பற்களை வெறுவிக் கொண்டு காரில் ஏறினாள். அந்த டிரைவர் முன் நாகரீகம் கருதி அசோக்கிடம் எதுவும் சண்டை இடவில்லை அவள்.
அந்த வண்டி தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்லும் என அவள் கண்ணயந்திருக்க அந்த கால் டாக்ஸி சென்று இறங்கிய இடம் டங் சுங் ஸ்டேசன். வைஷ்ணவி கண் விழித்தவள் ஹோட்டல் அங்கு இல்லாதிருக்க அசோக்கைப் பார்த்தாள். அது ஒரு சப்வே போலிருக்க அவளது பார்வையில் சந்தேகம் முளைத்து இருந்தது. மீண்டும் ப்ளைட்டை மிஸ் பண்ண வைப்பானோ என்ற பயம் இருந்தது.
“இங்கிருந்து கேபிள் காரில் தான் போகணும். சீக்கிரம் வா”
அசோக் சொல்ல வைஷ்ணவி கேட்டாள்.
“டிக்கெட்”
“அதெல்லாம் எடுத்தாச்சு வா வா”
அசோக் சொல்ல சற்று முன் அவன் சொன்ன எதையும் நம்ப மாட்டேன் என்று சொன்னதையே மறந்தவளாக கேபிள் காரில் ஏறினாள். அது நீரையும் நிலத்தையும் கீழே தன் கண்ணாடியில் ஓவியம் ஆகக் காட்டி அவர்களை அழைத்துச் சென்றது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு முறை நிற்பதும் ஏறுவதும் ஆக கேபிள் கார் பயணிக்க வைஷ்ணவி கீழே தெரிந்த நிலத்தின் அழகைக் கூடும் மட்டும் ரசித்து முடிக்க இருபத்தைந்து நிமிடத்தில் டியா டன் புத்த ஆலயத்தை வந்தடைந்திருந்தனர். மணி சரியாக பதினொன்று நாற்பது.

அதைப் பார்த்ததும் அசோக் செய்த தகிடுத்தாளம் புரிய வைஷ்ணவி அழும் குரலில் கேட்டாள்.
“டேய் உனக்கு மனசாட்சியே இல்லையாடா? இங்க இப்ப கூட்டிட்டு வந்திருக்க. 12 மணிக்கு ஹோட்டல் ல இருந்து போகணும் டா, மறுபடியும் ஓட ஓட பறக்க முடியாது டா”
சினத்தில் அவளது குரலில் ஏகத்துக்கு மரியாதை இறங்கியிருக்க அசோக் அதை முற்றிலும் அனுமதித்தவனாகப் பேசினான்.
“லே ஓவர் டைம் முடியறதுக்குள்ள போயிடலாம் வைஷூ. அதான் லக்கேஜ் எல்லாம் ஆல்ரெடி ட்ரான்ஸ்வர்ட் தானே. ஜஸ்ட் இருநூறு ஸ்டெப்ஸ் தான் வைஷூ. இப்படியே ஓடிட்டு இப்படியே வந்திடலாம். இவ்வளோ பெரிய புத்தர் சிலையை பார்க்காம போனாத் தெய்வக் குத்தம் ஆகிடாதா?”
அசோக் சொல்ல உதடு பிதுக்கி அழ நினைத்த மனதை கடினப்பட்டு அடக்கி வைஷ்ணவி பேசினாள்.
“நீ என்ன வேணா பண்ணித் தொலை. இதுக்கு மேலே எதாவது பேசின நான் கொலை கேஸ்ல உள்ளப் போகவும் தயாராகிடுவேன்”
அசோக் அதைக் கேட்டதும்,
“இவ்ளோ தூரம் வந்துட்ட, இப்படியே”
அவன் முடிப்பதற்குள் வைஷ்ணவி அவனை எரிக்கும் கண்களில் பார்க்க அசோக் அதை ஓரக் கண்ணால் பார்த்து அமைதியே உருவாக
“புத்தம், சரணம் , கச்சாமி”
என்று சத்தமாக சொல்லி படிகளில் நடந்தான். வைஷ்ணவி பெருமூச்சுடன் மேலே புத்தர் சிலையைப் பார்த்தவள் வாய்க்குள் முனகினாள்.
“இந்த பைத்தியக்காரனுக்கு நல்ல புத்தி கொடுத்து, இனிமே பொய் பேசாம இருக்கிற வாயைக் கொடுக்கிறதுக்காவே படி ஏறி வரேன். இவன் கூட மீதி ட்ராவல் கொலையில முடியாம இருக்கிறதுக்கு எனக்கு பொறுமையைக் கொடுங்க புத்த சாமி புத்தம் சரணம் கச்சாமி.”
வைஷ்ணவி சொல்லி விட்டு அழும் தருவாயில் ஏற இறுதியில் அந்த புத்த சிலையைத் தரிசித்த போது மனதில் இருந்த வலி கோபம் எல்லாம் மறந்தேப் போயிருந்தது. பற்றற்ற வாழ்க்கைத் தாண்டி மனதில் அமைதி நிலவவே புத்தர் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. மனது இதமாக வைஷ்ணவி திரும்பினாள் அசோக் சற்று தள்ளி நின்று அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவள் மனம் லேசானதும் அவளருகே வந்தவன்.
“எப்படி மனசு லேசாகி இருக்கா? எதாவது ஒரு பாரம் உன்னை அழுத்திட்டே இருந்தா, இந்த நொடி இந்த திருத்தலத்தில் விட்டுட்டு முழுக்க முழுக்க உன் வருத்தத்துக்கு காரணமானவங்களை மன்னிச்சிட்டு வா. அதுக்கு தான் உன்னைக் கூட்டிட்டு வந்தேன்”
அசோக் சொல்லி கீழிறங்க வைஷ்ணவியின் கண்களில் கண்ணீர் துளி வழிந்தோடியது.
‘தன்னால் வருணை முழுவதுமாக மன்னித்து மறக்க முடியுமா? ஏதோ ஒரு காட்சி ஏதோ ஒரு இசை ஏதோ ஒரு செய்கை அவன் நினைவுக் காயத்தை ஆறாதே இருக்கச் செய்யுமா?’
அவள் புத்த சந்நிதியில் கண்ணீருடன் நின்றிருக்க அதை நிகழ்த்திக் காட்டும் வல்லமை உடையவன் மெல்ல வழியும் அவள் கண்ணீரை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். வைஷ்ணவி லயன்ஸ் பெவிலியனில் காதலர்களைக் கண்டதும் வருண் தந்த காதலின் வலி உணர்ந்துக் கத்தியது எதற்கு என்று அப்போதே உணர்ந்து இருந்தான். அவள் மட்டும் அவனுக்கு எவ்விதத்திலும் விளங்கிக் கொள்பவளாகவே இருந்தாள். அவள் மௌனம் அவள் சிரிப்பு அவள் அச்சம் அவள் கண்ணீர் அத்தனைக்கும் பின்னான பொருள் தனக்கு ஏன் இவ்வளவு தெளிவாக புரிகிறது அதிமுக்கியமாக அது ஏன் தன் இதயத்திற்கு அவ்வளவு நெருக்கமாகிறது அவனும் குழப்ப நிலையிலேயே நின்றிருந்தான். புத்தரின் போதி மரம் காதலாகி உணர்த்துமோ? இல்லை கற்பனையாகி உதிருமோ?

கவிதை
தடுமாறுகிறேன் நான்
தாங்குவதற்கு நீ வேண்டாம்!
வலியில் விம்முகிறேன் தான்
விழி நீர் துடைக்க நீ வேண்டாம்!
தனிமை தின்கிறேன் நான்
அருகில் அணைத்துக் கொள்ள நீ வேண்டாம்!
இவ்வளவு சொல்லியும் அருகே நின்று
காதல் வலித் தாங்கும் நீ எனும்
பெரும் போதை நிலைக்குமா
என்ற கேள்வியிலேயே..
நீ வேண்டாம்!
error: Content is protected !!