Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 4

அத்தியாயம் 4:

சந்தியாவும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆதியின் பின்னே அவசரமாக சென்றாள். அணிந்திருந்த சட்டையை கழட்டி கௌரியிடம் கொடுத்துவிட்டு பனியனுடன் மாட்டிடம் சென்றான் ஆதி.

அவனை வாயை பிளந்து பார்த்து கொண்டே கௌரியின் அருகே சென்று நின்றாள் சந்தியா.

முதலில் கன்றின் கால்கள் சிறிதாக வெளியே வந்தது. பிறகு நன்றாக வெளி வந்தவுடன் ஆதியும் மாடசாமியும் சேர்ந்து  கன்றின் கால்களை பிடித்து இழுத்து லாவகமாக வெளியே எடுத்தனர்.



Advertisement

மாடசாமிதான் சிவகாமியிடம் “வெள்ளிக்கிழமை கிடேரி கண்ணு போட்ருக்குங் ஆத்தோ” என்றான்.

சிவகாமி கௌரியை மாட்டிற்கு கஞ்சி வைக்க சொல்லி அனுப்பினார். அவர் சென்று மாட்டிற்கு போடுவதற்காக விளக்கெண்ணையும் மஞ்சளும் எடுத்து வந்தார். மாடசாமி மூங்கில் தழை பறிக்க சென்றான். 

ஆதி கன்று குட்டியை குளிக்க வைத்து மாட்டிடம் சென்று பால் குடிக்க வைத்தான். முதலில் தடுமாறிய கன்று, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே எழுந்து பால் குடித்தது.  

Advertisement

சிவகாமி சந்தியாவிடம் குங்குமத்தை கொடுத்து கன்று குட்டிக்கு வைக்க சொன்னார். ஆதியும் சிவகாமியும் சேர்ந்து மாட்டிற்கு மருந்து தடவி கொண்டிருந்தனர். திடீரென்று ஆதி சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

Advertisement

சிவகாமியும் , உள்ளிருந்து கௌரியும் வந்து ஆச்சரியம் ப்ளஸ் சந்தோசமாக ஆதியை பார்த்தனர். பிறகுதான் எதை பார்த்து சிரிக்கிறான் என்று பார்த்தவர்கள் தாங்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

அங்கு சந்தியாதான் கன்று குட்டிக்கு பொட்டு வைப்பதாக சொல்லி  காமெடி பண்ணி கொண்டிருந்தாள். விரலில் குங்குமத்தை எடுத்து தூரமாக நின்று கொண்டு கன்றின் நெற்றியில் வைக்க போனவள், கன்று துள்ளி ஓடுவதை பார்த்து பயந்து அதற்கு எதிர் புறமாக அவள் ஓடினாள்.

குட்டி நின்றதை பார்த்து திரும்பவும் வைக்க போனவள், அது துள்ளியதை பார்த்ததும் மறுபடியும் ஓடினாள். இதுவேதான் திரும்ப திரும்ப நடந்து கொண்டிருந்தது. பாவமாக திரும்பி இவர்களை பார்த்தாள் சந்தியா. 

Advertisement

சிரித்து கொண்டே அவள் அருகில் சென்ற கௌரி கன்று குட்டியின் கழுத்தை பிடித்து கொண்டே “வாய் மட்டும் இவ்ளோ நீளம் பேசறவ, அரைமணி நேரத்துக்கு முன்னாடி பிறந்த குட்டிய பாத்து இப்படி பயப்படற”

“குட்டி பாப்பாவா இருந்துகிட்டு இது என்ன இப்படி ஓடுது கௌ. ஆனா நம்ம மனுஷ பயலுக எழுந்து நடக்க மட்டும் ஒரு வருஷம் ஆகுது” என்றவள் விரல் நுனியில் குங்குமத்தை எடுத்து கன்றின் நெற்றியில் வைத்தாள். அது ஒட்டவே இல்லை.

சந்தியாவின் தலையில் குட்டிய கௌரி “நீ என்ன பிரைடல் மேக்கப்பா போடற” என்று சொல்லிக்கொண்டே கை முழுவதும் குங்குமத்தை அள்ளி கன்றின் நெற்றியில் பூசிவிட்டாள். பிறகு கன்றின் முதுகு கால்கள் என்று கௌரி சொல்லி கொடுத்தவாறு வைத்து விட்டாள் சந்தியா.

அவர்களை பார்த்து கொண்டே ஆதி சிவகாமியிடம் “நா குளிக்க போறேனுங்ம்மா. ஒரு காஃபி போட்டு குடுங்” என்று விட்டு உள்ளே சென்றான். 

நஞ்சு கொடி போடும்வரை மாட்டை கௌரியை பார்த்து கொள்ள சொன்ன சிவகாமி, காஃபியை போட்டுவிட்டு சந்தியாவை அழைத்து ஆதியிடம் கொண்டு போய் கொடுத்து வர சொன்னார்.

மாடிக்கு சென்று அவன் அறையை தேடியவள், திறந்திருந்த ஒரு அறையை எட்டி பார்த்தாள். இரண்டு ஜன்னல்கள் கொண்ட பெரிய அறை. நான்கு பேர் படுக்குமளவு தேக்கு கட்டில். பெரிய ட்ரெஸ்ஸிங் டேபிள். பிறகு ஒரு டேபிள் சேரில் லேப்டாப்பும் புக்கும் அடுக்கியிருந்தது. இன்னொரு பக்கம் கதவு வழியாக பெரிய பால்கனி தெரிந்தது. அதில் சேர்ஸ் டீப்பாய் கிடந்தது. பெரிய மர ஊஞ்சல் மாட்டியிருந்தது. பால்கனியின் ஒரு பக்கம் நிறைய பூச்செடிகள் இருந்தது.

கண்ணாடியின் முன் நின்று தலை வாரி கொண்டிருந்த ஆதி திரும்பி கேள்வியாக இவளை பார்த்தான்.

“அத்தை காஃபி கொடுத்து விட்டாங்க” என்றவளிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு தேங்க்ஸ் சொல்லிவிட்டு திரும்ப போனவனிடம், “பாஸ் ஒரு சின்ன ரெக்யுஸ்ட்” என்றாள் சந்தியா.

என்ன என்று கேள்வியாக பார்த்தவனிடம் “சிரிச்சா அழகா இருக்கீங்க. அதனால அடிக்கடி கொஞ்சம் சிரிங்க பாஸ்” என்றாள்.

அவள் பேசியதை கிரகித்து ஆதி திரும்ப முறைக்க ஆரம்பிப்பதற்குள் ஜூட் விட்டு விட்டாள் சந்தியா.

இவ என்ன நினைச்சுகிட்டு இருக்கா என்று மனதில் திட்டி கொண்டிருந்தவனை ஜன்னல் பக்கத்தில் இருந்து வந்த சத்தம் கலைத்தது.

எட்டி பார்த்தால் கன்று குட்டியை கொஞ்சியவாறு சந்தியா போஸ் கொடுக்க கௌரி மொபைலில் போட்டோ எடுத்து கொண்டிருந்தாள். 

எல்லோரும் சொல்வது போல மிகவும் அழகான பெண்தான் என்று அவளை பார்த்தவன் தலையை உலுக்கி கொண்டு, கீழிறங்கி வந்து அரிசி மில்லிற்கு கிளம்பி விட்டான்.

மதியம் சாப்பாடு நேரத்திற்கு ஈஸ்வர மூர்த்தி வீட்டுக்கு வந்தார். மாடியிலிருந்து பெண்கள் சத்தம் வருவதை கேட்டவர்,சிவகாமியிடம் “கௌரி கண்ணு வந்துருக்காட்ருக்கு சிவகாமி”

“ஆமாங், அவ மாமன் புள்ளையும் வந்துருக்கு” என்றவர் அவர்களை கீழே அழைத்தார். கீழிறங்கி வந்த சந்தியாவை பார்த்து ஈஸ்வர மூர்த்தி “வா கண்ணு” என்றழைத்தார். அவரை பார்த்து “வணக்கம் மாமா” என்று கை குவித்தாள்.

“நல்லா இரு கண்ணு. எங்க ஊர உனக்கு புடிச்சிருக்கா கண்ணு”

“புடிச்சிருக்கு மாமா. இந்த ஊர விட உங்க வீட்ட ரொம்ப புடிச்சிருக்கு”

“அப்படியா நெம்ப சந்தோசம் கண்ணு. அப்ப கௌரி புள்ளையும் நீயும் இங்கனவே தங்கி போடுங்ளேன்”

“வேணாங் பெரியப்பா. அப்புறம் இந்த வீட்டையே வித்து போடுவா இவ” என்று கௌரி கூற சிரித்து பேசிக்கொண்டே மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

பிறகு ஈஸ்வரமூர்த்தி ஓய்வெடுக்க அறைக்கு சென்று விட்டார்.

கௌரி அந்த வீட்டில் சந்தியாவுக்கு ஒவ்வொவொன்றாக காட்டி கொண்டிருந்தாள். அவர்கள் சின்னவர்களாக இருக்கும் போது விளையாடிய பொம்மைகள், மர வேலைபாடுள்ள பல்லாங்குழி, பித்தளையில் செய்த தாய கட்டை என்று காட்டினாள். அந்த வீட்டை சுற்றி பார்க்கவே அரை நாள் ஆனது.

பழைய ஆல்பங்கள் அனைத்தையும் காட்டினாள். பிறகு ஆதி அறையோடு இருந்த பால்கனிக்கு சென்றார்கள். அந்த பால்கனிக்கு அறையின் வாசலில் இருந்து வராண்டா வழியாக சுற்றி கொண்டும் செல்லலாம்.

அப்படி சென்றவர்கள் ஊஞ்சலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை மிக பிடித்தது சந்தியாவிற்கு.

மாலையானதும் எழுந்து கீழே வந்தவர்களுக்கு சீம்பால் காய்ச்சி கொடுத்தார் சிவகாமி. அப்பொழுது சரியாக வீட்டுக்கு வந்த அருணும் அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டான்.

அதை சுவைத்து பார்த்த சந்தியா “வாவ். யம்மி. என்ன ஸ்வீட் இது கௌரி”

“ஹா ஹா இது சீம்பால் சந்தியா. புதுசா கண்ணு போட்ட மாட்டுட்ட இருந்து கறக்கிற பாலை காச்சினா இப்படித்தான் இருக்கும்”

“சூப்பரா இருக்கு. அத்தை எனக்கு இன்னும் வேணும்” என்று அவள் கேட்டவுடன் அருணும் “அம்மா எனக்கும் வேணும்” என்று போட்டிக்கு கேட்டான்.

இதே போல் போட்டி போட்டு சாப்பிட்டு வீட்டில் வேறு யாருக்கும் இல்லாமல் காலி செய்தார்கள்.

அப்பொழுது ஆதி வந்து டைனிங் டேபிளில் இவர்களுடன் அமர்ந்தவன் “காஃபி கொடுங்ம்மா” என்றான்.

காஃபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் “சீம்பால் இருக்கும்ங்களேம்மா” என்று கேட்டான்.

அதை கேட்டு நைசாக இடத்தை காலி செய்தான் அருண். சிவகாமிதான் ஆதியிடம் “நாளைக்கு சாப்பிடலாம் கண்ணு” என்றார்.

“சரிங்ம்மா” என்றுவிட்டு எழுந்து சென்றான் ஆதி.

கௌரிதான் “எப்பொழுதும் கேக்காத அண்ணாவே கேக்கிறாங்க. ரெண்டு மாடும் சேந்து அண்ணாக்கு வைக்காம காலி பண்ணிட்டீங்க” என்று சந்தியாவை  திட்டி கொண்டிருந்தாள்.

அதை கேட்ட சந்தியா எழுந்து சென்று மூடியிருந்த ஆதியின் கதவை தட்டினாள். வெள்ளை வேட்டி சட்டையை மாற்றிவிட்டு ஷார்ட்ஸ் டீசர்டில் இருந்தான் ஆதி. 

அட பாருடா , வெளியில போகும்போதுதான் மண்ணின் மைந்தர் மாதிரி வேட்டி சட்டை போல.

மாடர்ன் ட்ரெஸ்ஸும் இவருக்கு சூப்பராத்தான் இருக்கு என்று யோசித்து கொண்டிருந்தவளை சொடக்கிட்டு கலைத்தவன் “என்ன” என்றான்.

“சாரி” என்றாள் சந்தியா.

“எதுக்கு”

“இல்ல உங்க ஷேர் அந்த மில்க் ஸ்வீட்டை நானும் அருணும் சேந்துதான் சாப்ட்டோம்” என்றவள் கூறியதை கேட்டு 

“பரவால்ல நா நாளைக்கு சாப்பிடுக்கிறேன்” என்றான் ஆதி. 

“அதுக்கும் சாரி. நாளைக்கும் எல்லா பாலும் எனக்குதான் வேணுன்னு அத்தைட்ட சொல்லிட்டேன். சோ நாளைக்கும் உங்களுக்கு இருக்காது. முக்கியமா இந்த அருணாக்கு கிடையவே கிடையாது” என்று சொல்லியவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தவனின் பக்கத்தில் சென்றவள் “அப்புறம் முக்கியமா ஒரு மேட்டர்” என்று சீரியஸாக கூறினாள் சந்தியா.

என்னவென்று பார்த்தவனிடம் “உங்களுக்கு இந்த டிரஸ் விட வேட்டி சட்டைதான் சூப்பர். அதும் நீங்க வேட்டி மடிச்சு கட்ற ஸ்டைல் இருக்கே…” என்று சொல்லிவிட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் சந்தியா.

“இவளை…” என்று பல்லை கடித்தவாறே முறைத்து கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன். ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்பிவிட்டனர் சந்தியாவும் கௌரியும்.

இரவு ஆதியும் அருணும் சாப்பிடும்போது சிவகாமி “புள்ளைங்க இருந்ததோட்டம் இன்னைக்கு வீடு கலகலன்னு இருந்தது” என்றார்.

“ம்கூம் அந்த சந்தியா இருக்க இடம் சந்த கடைதான். நல்ல வேளை நா இன்னைக்கு தப்பிச்சு போட்டேன்” என்றான் அருண்.

“நாளைக்கு விடியால  சீம் பால் சாப்பிட வந்து போடறேன் அத்தைன்னு சொல்லி போட்டு போயிருக்கு. முக்கியமா உனக்கு தர கூடாதுன்னு சொல்லிருக்கு” என்று சிரித்தார் சிவகாமி.

“ஓ அப்ப நாளைக்கு அலாரம் வச்சு எழுந்திரிச்சு போடணுங்ம்மா. அது வாரத்துக்கு முன்ன எனக்கு கொடுத்து போடுங்க “

“ஏன் கண்ணு  அதோட போட்டி போட்ற. நல்ல புள்ள. இன்னைக்கு வெள்ளி கிழமை அது நம்மட வீட்டுக்கு வந்த நேரம் மாடு கிடேரி கண்ணு போட்ருக்கு பாத்தீல்லோ . நல்ல ராசியான புள்ள”

இவ்வளவு நேரம் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த ஆதி “அம்மா அந்த புள்ளைகிட்ட போய் இதாட்ட பேசி போடாதீங். ஏற்கனவே பேங்க்ளூர்ல நடந்த பிரச்சனைல ராசி கீதுன்னு நிறைய பேச்சு கேட்டிருக்கும் அது” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான் ஆதி.

சிவகாமியும் அருணும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள்.

“பாத்தீங்ளாம்மா . அக்கறைய”

“ஆமாஞ் சாமி. நெம்ப நாளுக்கு பொறகால உன்ற பொறந்தவன் இன்னைக்கு வாய் விட்டு சிரிச்சான் கண்ணு” என்று இன்று நடந்தவற்றை அருணிடம் பகிர்ந்து கொண்டார் சிவகாமி.

அருணும் யோசனையாக எழுந்து படுக்க சென்றவன், காலையில் சொன்ன மாதிரி அலாரம் வைத்து எழுந்து வந்து ஏழு மணிக்கெல்லாம் டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டான்.

வாசல் தாழ்வாரத்தில் ஈஸ்வரமூர்த்தியும், சுந்தரமூர்த்தியும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். அப்பொழுது சந்தியாவும் கௌரியும் வந்தார்கள்.

“வாங்க கண்ணுங்ளா” என்று வரவேற்றார் ஈஸ்வர மூர்த்தி.

“என்ன புள்ளைங்ளா. இந்நேரத்துக்கே வந்து போட்டிங்” என்றார் சுந்தரம்.

“ஏன் மாமா. நீங்க கூடத்தான் காலையிலேயே உங்கண்ணன பாக்க வந்துட்டீங்க. நாங்க எதாவது கேட்டோமா. எங்களுக்கு நிறைய வேலையிருக்கு. உங்ககிட்ட நின்னு வெட்டி நாயம் பேசிட்ருக்க எங்களுக்கு நேரம் இல்ல மாமோவ்” என்று கௌரியை இழுத்து கொண்டு உள்ளே சென்றாள் சந்தியா. 

சுந்தரத்திடம் எப்பொழுதுமே இப்படித்தான் பேசுவாள் சந்தியா. அவள் பேசியதை கேட்டு சிரித்தார் ஈஸ்வரன். 

“இந்த புள்ளையோட ஐயனாத்தா பொட்டாட்ட இருப்பாங்ண்ணா . இந்த புள்ள என்ன பேச்சு பேசி போட்டு போகுது பாருங்” என்றார் சுந்தரம்.

உள்ளே சென்ற சந்தியா நேராக கட்டுத்தரைக்கு சென்றாள் கன்று குட்டியை பார்க்க. கௌரி டைனிங் டேபிளில் தலை வைத்து திரும்பவும் தூங்க ஆரம்பித்து விட்டாள்.

“என்ன குள்ள கத்திரிக்கா . உன்ன தூங்க விடாம கூட்டிட்டு வந்துடுச்சா அந்த அராத்து”

“ஏய். அவ என்ர பெஸ்ட்டியாக்கும். அவள நீ ஏதும் பேசாத”

அந்த நேரம் ஆதியும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். வயலுக்கு செல்வதற்கு முன் நீராகாரம் குடிப்பதற்காக வந்திருந்தான்.

அப்பொழுது ஒரு பாத்திரத்தில் சீம்பால் எடுத்து வந்த சிவகாமி முதலில் ஆதிக்கு கொடுத்தார். அவன் வேண்டாம் என்றுவிட்டு நீராகாரம் கேட்டான். 

“அப்ப அண்ணாவோட பாலும் எனக்கு தானுங்ம்மா வேணும்” என்றான் அருண் உள்ளே வரும் சந்தியாவை பார்த்து கொண்டே. அப்பொழுது அவன் மொபைல் அடித்தது. எடுத்து பார்த்தால் சந்தியா நம்பரில் இருந்து கால் வந்து கட் ஆனது. அடுத்து வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பியிருந்தாள். 

“ஸ்நேகமான ஸ்னேகா 

நான் வரவா உனக்கு உறவா “

என்று அனுப்பியிருந்ததை பார்த்ததும் “எனக்கு சீம்பால் வேணாங்ம்மா. எல்லாத்தையும் நம்ம சந்தியாக்கே கொடுத்துடுங்க. அவதான நம்ம விருந்தாளி” என்றுவிட்டு எழுந்து சென்றான் அருண்.

மோவாயில் கைவைத்து அவனை ஆச்சரியமாக பார்த்தார் சிவகாமி. கௌரி சந்தியாவை சந்தேகமாக பார்த்தாள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!