Skip to content
Post Views: 6,567
செல்வதுரை, “என்ன மீனா யோசிச்சுட்டிருக்க……?”
மீனா, “இன்னும் எவ்வளவு நாள்தான் தள்ளிப் போடறது….? சின்னவனுக்கு கல்யாணத்தை முடிச்சிட்டோம்னா….. நல்லாயிருக்கும்னு யோசனையா இருக்குங்க.
“ம்ம்… நீ சொல்றதும் சரிதான். எனக்கும் ஒரு யோசனையிருக்கு. சொன்னா கோச்சுக்க மாட்டியே…. என்றார் பூடகமாக”.
“என்னன்னு சொல்லுங்க….”
Advertisement
“நான் சொல்றத டென்ஷன் ஆகாம பொறுமையா….. கேளு. எனக்கு… என் தங்கச்சி பொண்ண… நம்ம தேவாக்கு கேட்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கு…?”
மீனா அவரை முறைத்தார்.
“ம்ப்ச்… இன்னும் பழசையே நினைச்சிட்டிருக்காத மீனா. உனக்கே தெரியும். என் தங்கச்சின்னா எனக்கு எவ்வளவு உசுருன்னு. ஏதோ கால நேரம், இத்தனை காலம் பிரிஞ்சிருக்க வேண்டியதா ஆயிடுச்சு. ரோகிணியோட பொண்ணை பார்க்கறப்ப எல்லாம்…., என் தங்கச்சிய பார்க்கற மாதிரியே இருக்கு. ரோகிணியோட பழைய மாதிரி சேர மாட்டமான்னு நெஞ்சுக்குள்ள அவ்வளோ தவிப்பிருக்கு எனக்கு”.
Advertisement
………………………..
Advertisement
“ம்ம்…. எப்படியெல்லாம் வளர்த்தேன் என் தங்கச்சிய…. கல்யாணம்ற பேர்ல இரண்டு பேரும் பிளவுபட்டு நிக்கறோம்… தனி தனியா…” என்று பெருமூச்சு விட்டார் வேதனையுடன் செல்வதுரை.
“நீங்க சொல்றத பார்த்தா… நாந்தான் இதுக்கு காரணம்ற மாதிரியிருக்கு. என்னவோ உங்களையும் உங்க தங்கச்சியையும் நாந்தான் பிரிச்சேன்ற மாதிரி சொல்றீங்க”.
“ச்ச ச்ச…… என்ன பேசறே…….? நான் எப்போ அப்படி சொன்னேன். நீ ஏன்…. அப்படி நினைக்கிறே….?”
Advertisement
“வேற நீங்க பேசறத பார்த்தா அப்படிதான் இருக்கு. கல்யாணத்துக்கு முன்ன என் தங்கச்சி மேல எவ்வளவு பாசமாயிருந்தேன்னு சொன்னா என்ன அர்த்தம்….?”
“ம்ப்ச்…… நான் ஒன்னு சொன்னா……… நீ ஒன்னு புரிஞ்சுக்கறே. நான் சொன்னது, அவள் கல்யாணம் பண்ணி போறதுக்கு முன்னாடி இங்க இருக்கும்போது….. நான் அவள் மேல எவ்வளவு பாசமா இருந்தேன். அதைதான் சொன்னேன்”.
“உங்க தங்கச்சி கல்யாணம் பண்ணி போனதுக்கு அப்புறமும்… உங்கள பாசமாயிருக்க வேணாம்னு, யார் தடுத்தா………? இருக்க வேண்டியது தான….” என முறுக்கிக்கொண்டார்.
“ஹா….. ஹா….. பொம்பளைங்களுக்கு எவ்வளவு வயசானாலும்…. இந்த பொஸசிவ்னஸ் மட்டும் போகாதே. சும்மா சொல்லகூடாது…. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் கழிச்சுகூட என்னை உன்னால விட்டுதர முடியல. தங்கச்சி மேல உசுரா இருந்தேன்னு சொன்னதுக்கேவா…” என கலகலத்து சிரித்தார் மனைவியைப் பார்த்து.
“ம்க்கும்… இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல…” என மீனா தனது கழுத்தை வெட்டி செல்வதுரைக்கு பழிப்பு காட்டி முகத்தை திருப்பிக் கொண்டார்.
“சும்மா சொல்லக்கூடாதுடி…. நீ இப்படி முறுக்கிக்கும்போதுதான் எனக்கு என்னன்னமோ தோணுது…”
“அய்ய…. பேச்சைப்பாரு. பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்சானாம். கொஞ்சமாவது உங்களுக்கு வயசாவதுன்னு நினைப்பிருக்கா மனசுல…” என்று நொடித்தார் கணவனைப் பார்த்து.
“ஹா…. ஹா…. யாரு சொன்னா எனக்கு வயசாயிடுச்சுன்னு. என்னப்பார்த்தா உனக்கு கிழவன் மாதிரியா இருக்கு… ம்ம் மாமன பாருடி…” என மீசையை முறுக்கிக்கொண்டே… தனது கை ஆர்ம்ஸை தூக்கி தட்டி காட்டிக் கொண்டே மையலுடன் “ம்ம்… இப்ப சொல்லு” என புருவத்தை ஏற்றி இறக்கினார் கண்களில் சில்மஷத்துடன்.
செல்வதுரையின் செய்கையில் மீனாவுக்குதான் வெட்கமானது. “போதும் உங்களைப் பத்தி ஜம்பம் அடிச்சது. முதல்ல கையை கீழ இறக்குங்க. யாராவது வரப் போறாங்க…” என்றார் மீனா. ஆம் இருவரும் இரவுணவை முடித்துகொண்டு வெளிவாசலில் காற்றோட்டமாக இருக்கும் என்று கயிற்று கட்டிலை எடுத்து போட்டுகொண்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
செல்வதுரை. “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நம்ம தேவாக்கு என் தங்கச்சி பொண்ணை கட்டலாமா…?”
“விட்டுப்போன உறவ மறுபடியும் தொடரனுமான்னு இருக்கு… எனக்கு.”
“ஏன் அப்படி பேசற…. மீனா…? உன் வாயால அப்படி சொல்லாத. இங்கிருக்க வரைக்கும் ரோகிணிய கூடப்பொறந்த பொறப்பு மாதிரிதான பார்த்துகிட்ட. அப்புறம் ஏன் உன் நினைப்பு இப்படி போகுது. இதை உன்கிட்ட இருந்து, நான் எதிர்பார்க்கல….”
மீனா, “நான் எதுவும் தப்பான அர்த்தத்துல சொல்லலங்க. அப்பவும் இப்பவும் சூழ்நிலை ஒரேமாதிரியாவாங்க இருக்கு. அப்ப அவள் நம்ம பொண்ணு மட்டும்தான். இப்ப இன்னொரு வீட்டு பொண்ணு. அவன்றது அவளைச் சார்ந்த அவள் குடும்பத்தையும் சேர்த்துதான…”
“அவங்க மாமியார்பத்தி நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிஞ்சுக்கனும்னு இல்ல. அந்தம்மாகிட்ட ரோகிணிக்கு கல்யாணம் ஆன புதுசுல ரோகிணி பட்டதெல்லாம் உங்களுக்கு மறந்து போயிடுச்சா..? எதை செஞ்சாலும் குத்தங்குறை சொல்லியே நம்மள மூக்கை உடைப்பாங்க. தெரிஞ்சோ தெரியாமயோ திருநாவுக்கரசு ரோகிணிய விரும்பின விஷயம் தெரிஞ்சதுல இருந்து அந்தம்மா போக்கே மாறிப் போயிடுச்சு”.
“ரோகிணி வீட்டுகாரர் அதை பெருந்தன்மையா எடுத்துகிட்டாலும் இந்தம்மா என்னவோ… அவளை அந்த பாடு படுத்துச்சு…. அதெல்லாம் மறந்துட்டீங்களா….?”
“மறுபடியும் இதெல்லாம் தேவையான்னுதான் இருக்கு எனக்கு. அப்படி நீங்க சொல்றபடியே நம்ம தேவாவுக்கும் உங்க தங்கச்சி பொண்ணுக்கும் கல்யாணம் நடந்துச்சுன்னா… நல்லது கெட்டதுக்கு சேர வேணாமா…? இரண்டு குடும்பமும் வரபோக இருக்க வேண்ணாமா…? நினைக்கும்போதே மலைப்பா இருக்கு….” என பெருமூச்சுவிட்டார் மீனா.
செல்வதுரை, “விடு வயசானவங்க…, அவங்கள பார்த்தா………. ஆகுமா. என் தங்கச்சிக்கும் மனசுல நம்மளபத்தின எண்ணம் இல்லாமலா இருக்கும். இவ்வளவு நாள்தான் ஒட்டாம இருந்தாச்சு. இனிமேலாவது பழசை மறந்து எல்லாம் உறவாயிருக்கலாமே. ரோகிணிக்கும் நம்மள விட்டா யாரு இருக்காங்க…? உறவுன்னு சொல்லிக்க”.
மீனா, “அப்படி நினைக்கறவ இத்தனை நாள் நம்ம வீட்டுக்கு வந்தாளா…..? இல்ல பார்க்கற விசேஷத்திலயாவது நம்மோட பேசினாளா…..? அவள்தான ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்னு விலகியிருக்காளே….?”
செல்வதுரை, “அவள் மட்டுந்தான் விலகியிருந்தாளா….? அவள் விலகனதையே சாக்கா வச்சு நாமளும்தான, அவளை கண்டுக்காம அப்படியே விட்டுட்டோம். இவ்வளவு பேசற நீ எத்தனை தடவை நாத்தனாரோட பேசவோ…, இல்ல அவள் வீட்டுக்கு போகவோ செஞ்ச…. சொல்லு”.
……………………
செல்வதுரை, “நம்ம பேர்லயும் தப்பிருக்கு. ஏதோ அந்த நேரத்து கோவம்…, சண்டை…, பேசாம இருந்தோம். அதுக்கம்புறம் நாம பேசியிருக்கனும். ஒரு அண்ணனா என் கடமைய செய்ய முயற்சி எடுத்திருக்கனும்.. நானும் புத்தி கெட்டதனமா இருந்துட்டேன்……….. இப்ப அதையெல்லாம் நினைச்சா எனக்கே வேதனையாயிருக்கு”.
“என்னதான் இருந்தாலும்…, ஒரு அண்ணனா….. என் கடமையில இருந்து நான் தவறியிருக்க கூடாதுல்ல. அப்பாவுக்கு அப்புறம் என்னைதான அவள் அந்த ஸ்தானத்தில வச்சு பார்த்தாள்…” என கலங்கினார் செல்வதுரை.
அப்பா அம்மா இருந்த வரைக்கும் அவளுக்கு எல்லாம் சரியா செஞ்சாங்க. இப்ப நான் தவறிட்டனோன்னு எனக்கு அந்த உறுத்தல் உள்ளுக்குள்ளே இருந்துட்டிருக்கு மீனா. அண்ணன்ற கடமையிலே இருந்து நான் தவறிட்டேன். அவளுக்கு தாய் வீடுன்னா அது நாந்தானே….” என வருந்தினார் செல்வதுரை.
அவளுக்கும் உள்ளுக்குள்ள வருத்தம் இருக்கும். அம்மா அப்பா இருந்தா நம்மள கவனிச்சிருப்பாங்கன்னு…… நிச்சயம் எங்கப்பா அம்மா ஆத்மா என்னை மன்னிக்காது என கண்கலங்கினார் செல்வதுரை.
கணவர் கண் கலங்குவதைப் பார்த்த மீனாவுக்கு மனம் கரைந்தது. “ம்ப்ச்… என்னங்க இதுக்கு போய் அழுதுட்டு,,,” என செல்வதுரையின் கையை பிடித்து அழுத்திய அவருக்கும் கண்ணீர் இறங்கியது கன்னத்தில் கணவரைப் பார்த்து.
என்ன வார்த்தைகள் சொல்லி கணவனை தேற்றுவது என மீனாவுக்கும் தெரியவில்லை. எனவே மௌனம் வந்து இடையில் புகுந்தது இருவருக்குமிடையே. அவரவர் அவரவர் போக்கில் சிந்திக்க தொடங்கினர் அமைதியாக.
செல்வதுரையின் மனதில், மகனுக்கு தங்கையின் மகளை கட்டுவதன் மூலமாவது தங்களது உறவை மீட்டுவிட வேண்டும் என்ற ஆதங்கம் எழுந்தது.
மீனாவின் மனதில், கணவர் சொல்வது உண்மையென்றாலும்….. நாத்தனாரின் பெண்ணை மகனுக்கு கட்ட இன்னும் யோசனையாகதான் இருந்தது.
மீனா, “இது நீங்க மட்டும் முடிவு பண்ற விஷயம் இல்லையே. சின்னவனுக்கு பிடிக்கனும். முதல்ல உங்க தங்கச்சி மாமியார் இதுக்கு ஒத்துப்பாங்களா…”
“அந்த அம்மா சும்மாவே சலங்கை கட்டின மாதிரி ஆடுவாங்க. இப்ப இவ்வளவு நாள் ஒட்டு உறவு இல்லாம இருந்துட்டு, திடீர்னு போய் பொண்ணு கேட்டா கொடுப்பாங்களா…? எல்லாத்தையும் யோசிக்கனும் இல்ல…”
செல்வதுரை, “நீயே இவ்வளவு யோசிக்கும் போது.., நான் யோசிக்காமயா இருப்பேன். முதல்ல சின்னவன்கிட்ட பேசி, அவனுக்கு ஓகேவான்னு கேட்போம். அப்புறம் நேர்ல போய் பேசுவோம். எனக்கென்னவோ… ரோகிணி வீட்டுக்காரர் ஒத்துப்பாருன்னுதான் தோணுது”.
…………………….
செல்வதுரை, “அவர் சம்மதம் இருந்தா….. அவங்க அம்மா வாயை திறக்க மாட்டாங்க”.
மீனா, “கல்யாணம்ன்றது எல்லாரும் ஒத்துமையா…. சந்தோஷமா இருந்து பண்ணவேண்டிய விஷயம். ஏன் இப்படி…. ஒன்னொத்துக்கும் பயந்து பயந்து பண்ணனும்”.
………………………..
மீனா, “இதோட முடிஞ்சிருமா…? இன்னும் காலத்துக்கும், வரப்போற விசேஷத்துக்கு எல்லாம்… அந்த அம்மாவ நினைச்சு பயந்துட்டே இருக்கனுமே…?”
செல்வதுரை, “இப்படி நினைச்சுதான் இதுவரைக்கும் தள்ளிப்போட்டேன். இனி என்ன ஆனாலும் பரவாயில்லைன்னுதான் வைராக்கியமா இருக்கேன் மீனா. நீ எனக்கு சப்போர்ட்டா இருந்தா போதும். தடங்கல் சொல்லாத” என்றார் மனைவியை இறைஞ்சுதலாக பார்த்து.
எந்த மனைவிக்குதான் புருஷன் இப்படி அனுமதி கேட்டு வேண்டி நிக்கும்போது மறுக்க தோணும். மீனா மட்டும் இதற்கு விலக்கா…?இருந்தும் மீனாவின் மனதில் இன்னும் சில குழப்பங்களும் இருந்தது. கணவருக்காக வேண்டி மகனின் வாழ்க்கையை சிக்கலாக்கி விடுவோமோ… என்ற பயமும் அடி நெஞ்சில் துளிர்விட துவங்கியது. ஆனால் அதை அவர் வெளியில் காட்ட தயங்கினார்.
சிந்தனையிலிருந்து விடுபட்ட மீனா கணவரை பார்த்து “ஹ்ம்ம்… அப்ப நீங்களே… எல்லாம் முடிவு பண்ணிட்டு… சும்மா என்கிட்ட ஒப்புக்கு ஒரு வார்த்தை கேட்டிருக்கீங்க. நடத்துக்கங்க… நடத்துக்கங்க….” என முறுக்கிக் கொண்டார் செல்லமாக
இருட்டில் மீனாவின் முகத்தில் இருந்த கிண்டல் மொழியை சரியாக பார்க்க முடியாத செல்வதுரையோ, அச்சோ கோச்சுகிட்டா போலயே. என்ன சொல்லி சமாளிக்கறது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்.
மீனாவுக்கு செல்வதுரை தடுமாறுவதைப் பார்த்து சிரிப்பு வந்தது. இருந்தும் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்.
பாவி மனுஷா… நல்லா கல்லுளிமங்கன் மாதிரி, இத்தனை நாளா இதையெல்லாம் மனசுல போட்டு பூட்டி வைச்சிருந்திருக்காரு. மூச்சு விட்டாரா….. என்கிட்ட.
சின்னவனுக்கு பொண்ணு பார்க்கலாமான்னு… கேட்டதும்… மனசில இருக்குறதெல்லாம் வரிசையால்ல வருது…. என பொறுமலும் இருந்தது மீனாவின் மனதுக்குள்.
மனித மனம் எல்லாம் கலந்த கலவைதானே. நல்லதும் கெட்டதும் கலந்திருப்பது விதிக்கப்பட்டதுதானே. இதில் எது கூட எது குறைய என்பதில்தான் விஷயமே. எப்போது… எதற்கு… எப்படி.. வெளிப்படும் என்பது விசித்திரமே. யாராலும் கணிக்க முடியாத விந்தையிலும் விந்தை கொண்டது நம் மனித மனக்குரங்கு.
மீனாவுக்கு ரோகிணியுடன் உறவாட முடியவில்லையே என்ற கணவரின் வருத்தம் புரிந்தாலும், உள்ளூர நெருடலாகதான் இருந்தது, நாத்தனாரின் பெண்ணை மருமகளாக கொண்டுவருவதற்கு. இரண்டு மருமகள்கள் வந்தும்…, இதுவரை எந்த சச்சரவுகளும் இல்லாமல் போய் கொண்டிருக்கும் குடும்பத்தில், இதனால் எந்த பிரச்சினையும் வந்து விடுமோ….. என்ற பயமும் யோசனையும் இருந்தது.
செல்வதுரையோ எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தியே தீர வேண்டும் என முடிவே செய்துவிட்டார் மனதில்.
செல்வதுரைக்கு எப்போதும் எடுத்த காரியத்தை தள்ளிப்போடும் பழக்கமே இல்லை. ஆதலால்தான் தொழிலில்கூட அவர் மேன்மேலும் வளருவது. நினைத்ததை உடனே செயல்படுத்திவிட வேண்டும் அவருக்கு.
அவர் நினைத்தபடியே தேவநாதனிடம் விருப்பம் கேட்டு, இதோ தங்கை மகளை தனது மகனுக்கு பெண் கேட்பதற்காக தங்கையின் வீட்டிற்கு வந்திருந்தனர்..
நீண்ட காலம் கழித்து, தங்கையின் வீட்டிற்கு வருவதால் இங்கே சந்தர்ப்ப சூழ்நிலை… வரவேற்பு எப்படியிருக்குமோ….. என கலக்கம் கொண்டு அவரும் மீனாவும் மட்டும் கிளம்பி வந்திருந்தனர்.
தங்கை வீட்டின் விருப்பம் அறிந்த பிறகு…, அனைவரையும் அழைத்து வரலாம் என முடிவு செய்திருந்தனர். இதுவும் மீனாவின் யோசனைதான்.
திடுதிப்பென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் அண்ணனும் அண்ணியும் வந்து நின்றதைப் பார்த்ததும் ரோகிணிக்கு ஒருபக்கம் சந்தோஷத்தில் அழுகை வந்ததென்றால்…., மறுபுறம் அச்சமும்…., கலக்கமும் சேர்ந்தே வந்தது.
இத்தனை காலத்திற்கு பிறகு, இவர்கள் வந்ததை வைத்து மாமியார் ஏதாவது பேசுவாரோ……… என அடிவயிறு கலங்கியது. கணவர் வேறு என்ன பேசுவாரோ… என பயமாகவும் இருந்தது மனதில்.
“வந்தவங்கள வா…ன்னு கூட கூப்பிடா….ம வாசலோட அனுப்பிடலாம்னு யோசிச்கிறியோ…” என்றார் மீனா ரோகிணியைப் பார்த்து.
அண்ணனையும் அண்ணியையும் பார்த்த அதிர்ச்சியில் பேச்சற்று அப்படியே நின்றிருந்த ரோகிணி, மீனாவின் பேச்சில் தெளிந்து…, “அய்யோ அண்ணி…, அப்படிலாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க”.
“திடுதிப்புன்னு… உங்கள பார்த்த சந்தோஷத்துல கையும் ஓடல. காலும் ஓடல. அதான்… அப்படியே நின்னுட்டேன். கோச்சுக்காதீங்க ண்ணி” என முகம் மலர்ந்து வாய் நிறைய சிரித்தவர், ” வாங்க… அண்ணே, வாங்க அண்ணி உள்ள வாங்க….” என வாசலில் நின்றவர்களை ஓடிச்சென்று கைப்பிடித்து அழைத்து வந்தார்.
“உட்காருங்க ண்ணே……. உட்காருங்க அண்ணி……. எப்படியிருக்கீங்க….? பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க…?” என விசாரித்து கொண்டே…., உள்ளே சென்று சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். பேச்சுக்குரல் கேட்டு உள்ளே படுத்திருந்த லஷ்மி வெளியே வந்தவர், எதிர்பாராத வரவாக இவர்களைப் பார்த்து அங்கேயே தேங்கி நின்றார். செல்வதுரை மற்றும் மீனாவைப் பார்த்த க்ஷண நேரத்தில் அவர் முகத்தில் ஒரு ஒவ்வாமையும், வெறுப்பும் கலந்த அதிர்ச்சி வந்து மறைந்தது.
இவர் வந்து நின்ற அரவத்தில் மாமியாரைக் பார்த்த ரோகிணிக்கு உள்ளுக்குள் திக்… திக்கென இருந்தது. வந்தவர்களை ஏதாவது பேசி சண்டையிடுவாரோ… என எண்ணி பயந்துகொண்டே அவரை பார்த்து நின்றிருந்தார் கண்களால்.
ஆனால் செல்வதுரைக்கு அந்த கலக்கம் எல்லாம் இல்ல போல. லஷ்மியை பார்த்ததுமே சிரித்து பேச ஆரம்பித்துவிட்டார். “வாங்க அத்தை.. ஏன் அங்கேயே நின்னுட்டீங்க…? எப்படியிருக்கீங்க…? உடம்புலாம் எப்படியிருக்கு…” என எழுந்து நின்று சாதாரணமாக பேச ஆரம்பித்துவிட்டார் லஷ்மியிடம்.
“லஷ்மி, ம்ம்……. எனக்கென்ன குறைச்சல். அதான் குத்துக்கல்லாட்டம் நல்லாதான இருக்கேன். என்னடாப்பா அதிசயமா இருக்கு. காத்து இந்த பக்கம் வீசுது. ஒருவேளை தங்கச்சி இருக்காளா……. போய் சேர்ந்துட்டாளான்னு பார்க்க வந்தியா…?”
“அய்யோ……. ஏன் அத்தை…..? இப்படி பேசறீங்க…..? உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்னுதான் வந்தோம்”.
“அதிசயமால்ல…….. இருக்கு, இத்தனை வருஷமா இல்லாத அக்கறை இப்ப என்னடாப்பா…….. புதுசா….. வந்திருக்கு?”
இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் முழித்தார் செல்வதுரை.
வேணும் உங்களுக்கு. சொன்னனே கேட்டீங்களா….. என கணவரையே பார்த்திருந்தார் மீனா.
இருந்தாலும் மனம் பொறுக்காமல்.., “அப்படியே எவ்வளவு காலம்தான் இருக்க முடியும் சித்தி. நீரடிச்சு நீர் விலகுமா…….? நேத்து இன்னைக்கு வந்த உறவா,,,,,,,, இவங்க உறவு. தொப்புள்கொடி பந்தமில்லையா……. சித்தி. கூடப்பொறவள பார்க்காம… பேசாம… எத்தனை காலம் அப்படியே இருந்துட முடியும்?”.
“பெரியவங்க உங்களுக்கு தெரியாதது இல்ல. முப்பது வருஷம் சேர்ந்து இருந்தவங்களும் இல்ல. முப்பது வருஷம் பிரிஞ்சு இருந்தவங்களும் இல்லன்னு சொல்லுவாங்க…..”
“ஏதோ புத்தி கெட்ட தனமா இத்தனை காலம் இருந்துட்டோம். அதுக்காக எங்க வீட்டு பொண்ணை அப்படியே விட்டுட முடியுமா….?”
செல்வதுரை மனைவியின் சமாதான பேச்சை காதில் வாங்கி கொஞ்சம் ஆசுவாசுமானார். ஹப்பாடா… என இருந்தது அவருக்கு. லஷ்மியைக் கண்டாலே அவருக்கு பயமும் உண்டு உள்ளுக்குள். யார் எவர் என்றெல்லாம் பார்க்கமாட்டார் லஷ்மி. பட்டென்று குதர்க்கமாக பேசிவிடுவார். அது நாலு பேர் கூடி இருக்கும் சபையாக இருந்தாலும் சரி. ஆதலால் லஷ்மி என்றாலே… பார்த்துதான் வார்த்தையை விடுவார் செல்வதுரை.
இன்று லஷ்மியை சமாளிக்க வேண்டி மீனா பேச ஆரம்பித்ததும் மனைவியை எண்ணி எப்போதும் போல் இப்பவும் உள்ளுக்குள் சிலாகித்து கொள்வதற்குள் அடுத்த அம்பு எய்ய ஆரம்பித்திருந்தார் லஷ்மி.
லஷ்மி, “நல்லா உறவாடுங்க…டியம்மா… உங்களை யாரு வேணாம்னு… கட்டி போட்டு வச்சிருக்கறது. தேவைப்படும்போது பொறந்த வீட்டு உறவா வந்து நிக்காம…, திடுக்குனு வந்து குதிச்சிருக்கீங்களேன்னுதான் கேக்கறேன்….” என நீட்டி முழக்கினார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என செல்வதுரைக்கும் தெரியவில்லை. மீனாவுக்கும் புரியவில்லை. அவர் சொல்வதும் சரிதானே. இத்தனை நாட்களாக வந்து பார்க்காதவர்கள் திடீரென வந்து நின்றால்.., ஏதோ விஷயம் இருக்கிறது……… என ஊகிக்க தோணாதா…? அந்த அளவு கூடவா அவருக்கு விவரம் தெரியாமல் இருக்கும். அதனால்தான் போட்டு வாங்கினார் பேச்சிலேயே. ஏதாவது துப்பு கிடைக்குமா…? என.
லஷ்மி சரியாகத்தானே கணித்திருக்கிறார். அவருடைய அனுபவம் அப்படி. கிராமத்து பெண்மனி. எத்தனை பேரை கடந்து வந்திருப்பார் தனது வாழ்க்கையில். இவர்களும் சும்மா ஒன்றும் வரவில்லையே. தங்கள் மகனுக்கு பெண் கேட்டுதானே வந்திருக்கிறார்கள். “திருடனுக்கு தேள் கொட்டியது போல” இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
அவர்களைப் காப்பாற்றுவது போல, சரியாக அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த வேல்முருகன், வீட்டின் உள்ளே நுழைந்தார். வீட்டிற்கு உள்ளே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து சில நொடிகளேயானாலும் புருவங்களை சுளித்து கேள்வியாக தயங்கி நின்றவர், டக்கென்று சுதாரித்து உள்ளே நுழைந்தார்.
மனதில் இவங்க எங்க….? இங்க. என்ற கேள்வியும்…. திகைப்பும்…… இருந்தாலும், அதை வெளியில் காட்டாமல், சமாளித்து, “வாங்க…. என முனுமுனுத்து சிறு தலையசைப்புடன் வரவேற்றார்.
ரோகிணி கணவனின் முகத்தையே பயம் கலந்த தவிப்புடன் பார்த்து நின்றார். அவரது மனம் பொங்கி எழும் கடல் அலைகளைப்போல இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒருபக்கம் கூடப்பிறந்த அண்ணன். இன்னொரு பக்கம் கட்டிய கணவன். யாருக்கு பார்ப்பார்…? ஆயிரம் சச்சரவுகள் இருந்தாலும், பிறந்த வீட்டு மனிதர்களை இவர்கள் அசிங்கப்படுத்திவிட கூடாதே என மனம் பதைத்து நின்று கொண்டிருந்தார் பேயறைந்தமாதிரி.
வேல்முருகனின் முகத்திலிருந்து எதுவும் ரோகிணியால் கிரகி்க்க முடியவில்லை. இவர்கள் வந்தது பிடிக்கவில்லையா…? அல்லது சாதாரணமாக பேசுகிறாரா…? என எதையும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. பாவம் அலமலந்துதான் நின்று பார்த்தார் மாமியாரையும் கணவனையும்.
ஆனாலும் மனதில் சின்ன ஆசுவாசம். ஏன் வந்தீங்க…? எங்க வந்தீங்கன்னு சண்டையிட்டு வெளியே துரத்தாமல் வா… ன்னாவது கூப்பிட்டா…ரேன்னு தன்னை சமன்படுத்தி நின்றிருந்தார் ரோகிணி.
அண்ணன் அண்ணியை பார்த்ததிலிருந்து, வேல்முருகன் வீட்டிற்கு வந்து இவர்களைப் பார்த்தால் என்ன நடக்குமோ…? என மனதிலேயே கலங்கி நடுங்கி கொண்டிருந்த ரோகிணிக்கு இப்பொழுதுதான் சற்று உயிர் வந்தது.
வேல்முருகன் வந்து லட்சுமியின் பக்கத்தில் உட்கார்ந்ததும், செல்வதுரை அவருடன் பரஸ்பர நலனை விசாரித்து.. பேச ஆரம்பித்தார்.
மீனாவுக்கு கண்கள் எல்லாம் நாத்தனாரின் மேல்தான். தாங்கள் வந்ததிலிருந்து ரோகிணியின் முகத்தில் எழுந்த எண்ணிலடங்கா பய உணர்வுகளையும், தடுமாற்றத்தையும், நடுக்கத்தையும் பார்த்திருந்த மீனாவுக்கு, நாத்தனாரைப் பாரத்து பாவமாக இருந்தது. இவளே கெடுத்துகிட்டா இவள் வாழ்க்கைய. ஒழுங்கா என் தம்பிய கல்யாணம் பண்ணியிருந்தா.. ராணி மாதிரி வச்சிருந்திருப்பான் என்ற எண்ணந்தான் இன்னும் அவருக்கு. இத்தனை காலமாகியும்… இன்னும் அதனை நினைக்காமல் இருக்கமுடியவில்லை அவரால்.
நிச்சயாமானதுக்கு அப்புறம் மாப்பிள்ளைய மாத்தவேணாம். அது நியாயமில்லை…… நேர்மையில்லனு பேசி…… இப்ப யார் வாழ்க்கை வீணா போச்சு. பொறந்து வீட்டுக்குகூட நிம்மதியா வந்து போக முடியுதா…..?
இவ்வளவு காலம் இங்க வாழ்ந்தும் அடிமை மாதிரி, இன்னும் மாமியாருக்கும்… வீட்டுக்காரருக்கும், பயந்து பயந்தே… சாக வேண்டியிருக்கு. எல்லாம் அவளா தேடிகிட்டது அவள் வாங்கிட்டு வந்த வரம் அப்படி என மனதிற்குள்ளேயே வருத்தப்பட்டுக்கொண்டார் நாத்தனாருக்காக.
தொடரும்.
error: Content is protected !!