ஐந்து வருட சிறை வாழ்க்கையில் மனதளவிலும், உடலளவிலும் பல துன்பங்களை அனுபவித்திருக்கிறான் திருனேஷ்வரன்.
திருனேஷ்வரன் நிலையில் வேறு ஒருவராக இருந்திருந்தால் இவ்வழக்கிலிருந்து விடுதலை ஆவதற்கு பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் திருனேஷ்வரனுக்கு அப்படியில்லை போல. எப்பொழுதும் போல அன்றாட வேலையை செய்துகொண்டிருந்தான். ஏதேதோ சிந்தனையில் முகமும் வாட்டமாக இருந்தது.
திருனேஷ்வரனின் ஆர்வமின்மையை கவனித்த நல்லுள்ளம் கொண்ட காவலர் ஒருவர் “அட என்னப்பா நீ? ஜெயில்ல இருக்கவங்கள்லாம் என்னைக்குடா இந்த நரகத்துலயிருந்து போவோம்னு இருக்காங்க. நீ என்னவோ சொர்கத்துலயிருந்து கிளம்புறதை போல கவலை பட்டுட்டிருக்க?” என்று சலித்துகொண்டார்.
Advertisement
சிறு புன்னகையை மட்டுமே அவருக்கு பதிலாக தந்தவன் தனது வேலையில் கவனமானான்.
Advertisement
சற்று நேரத்தில் அவசர அவசரமாக காவலர்கள் அவரவர் வேலையை பார்க்க செல்ல, காவல்நிலையத்தின் ஆய்வாளர் வருகிறார் என்று புரிந்துகொண்டான் திருனேஷ்வரன்.
டி.எஸ்.பி ரூபலஷ்மியின் கட்டளைக்குப் பணிந்து அவ்வப்போது திருனேஷ்வரன் நலம் விசாரிக்க வரும் ஆய்வாளர்தான் தற்போதும் வந்துகொண்டிருந்தார்.
ரூபலஷ்மியின் கவனம் என்று திருனேஷ்வரன் மீது பட்டதோ அன்றிலிருந்துதான் சிறையில் திருனேஷ்வரனுக்கான உடல்வலி குறைய ஆரம்பித்தது.
Advertisement
ஐந்து வருடங்களுக்கு முன்னே பதினாறு வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக் கைதியாக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டான் திருனேஷ்வரன்.
பெண்ணை கற்பழித்தவன் திருனேஷ்வரன் இல்லை. ஆனால் இவ்வழக்கில் கேமராவில் பதிந்துள்ள உருவத்திற்கும் திருனேஷ்வரனின் உருவத்திற்கும் பெரிதாக வேறுபாடு இல்லாததால் திருனேஷ்வரன் குற்றவாளியாக கருதப்பட்டான்.
திருனேஷ்வரன் பிடிபட்ட செய்தி கேட்டதும் உண்மை குற்றவாளி உஷாராகினான். தனது பணபலத்தை வைத்து திருனேஷ்வரன்தான் குற்றவாளி என்று நிரூபிக்க முயற்சி செய்தான்.
அதன் பலனாக குற்றத்தை ஒப்புகொள்ள திருனேஷ்வரன் அடித்து துன்புறுத்தப்பட்டான். ஒப்புகொள்ளவில்லை என்றால் கொல்வார்கள். அவ்வளவுதானே? உயிர் போனால் போகட்டும். ஆனால் இப்படி குற்றத்தை மட்டும் ஒப்புகொள்ளவே கூடாது என்று திடமாக முடிவெடுத்தான் திருனேஷ்வரன்.
செய்யாத குற்றத்திற்கு தான் தண்டனை அனுபவிப்பதோடு, உண்மை குற்றவாளி வெளியே இருந்தால் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்வு சீரழியுமோ என்று நினைத்ததாலேயே பல துன்பங்களை அவன் சந்திக்க வேண்டியிருந்தது.
கொலை குற்றவாளி என்றால் கூட இத்தனை வேதனை பட்டிருக்கமாட்டான். கற்பழிப்பு வழக்கு என்பதே பெரும் அசிங்கம், அதிலும் பனிரண்டாம் வகுப்பின் ஆரம்பத்திலிருக்கும் பள்ளி செல்லும் பெண்ணை கற்பழித்திருக்கிறோம் என்ற குற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை திருனேஷ்வரனால்.
இந்நேரம் ஊரில் அனைவரும் எப்படி சாடுவார்கள்? இவனுக்கும் ஓர் தங்கை இருக்கிறது, அவளை இப்படி யாரேனும் செய்தால் என்றல்லவா பேசுவார்கள்? இப்படி மகனைப் பெற்றதற்கு செத்திருக்கலாம் என்று பெற்றோரையும் பேசிப்பேசியே வன்மம் தீர்ப்பார்களே… என்ற மனவலியே திருனேஷ்வரனை நிலையிழக்கச் செய்திருந்தது.
செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க காவலர்கள் அடித்தபோதெல்லாம் தங்கையின் நினைவும் பெற்றோரின் நினைவுமே சிந்தையில் நிற்க, குற்றத்தை ஒப்புக்கொள்ள கூடாது என்ற நிலையில் திடமாக இருந்தான் திருனேஷ்வரன்.
இதற்கு மேல் அடித்தால் செத்துவிடுவான் என்ற நிலை வரவே, திருனேஷ்வரனின் தங்கையின் விபரத்தை சொல்லி, “ரொம்ப அழகா இருப்பாளாமே” எனறு வக்கிரத்தோடும் ரசனையோடும் சொல்லி, விசாரிக்க அழைப்பதாக பயமுறுத்தினார்கள்.
இவ்வழக்கிலிருந்து எப்படி தப்பிப்போம் என்பது மாறி, தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்துவிடுவார்களோ? என்ற பயம் மனம் முழுதும் வியாபிக்க, குற்றத்தை ஒப்புகொள்ளவும் முடியாமல், அதேநேரம் ஒப்புகொள்ளவில்லை என்றால் தங்கையை நினைக்க மனமும் பதறியது.
இப்படிபட்ட கையறு நிலையில் இருந்த நேரத்தில்தான் ரூபலஷ்மி வந்தார். திருனேஷ்வரன் குற்றவாளி அல்ல. அவன் முகத்தைப் பார்த்தால் அப்படி செய்தவன் போல் தெரியவில்லை என்றார்.
தன்னை காக்க வந்த காவல் தெய்வமாக பார்த்தான் ரூபலஷ்மியை. தான் குற்றவாளி அல்ல, உண்மை குற்றவாளி தண்டிக்கப்படவில்லை போன்றவைகளை விடவும், தனது தங்கைக்கு இனி துன்பம் வராது என்ற நம்பிக்கையே திருனேஷ்வரனுக்கு பெருத்த ஆசுவாசத்தை கொடுத்தது.
ஆம்… ரூபலஷ்மி திருனேஷ்வரனிடம் பேசிய விதம் அத்தனை கனிவாக இருக்கவே, முதன்முதலாக காக்கி உடைக்குள் கருணையை கண்டதும் திருனேஷ்வரனின் மனம் எல்லையில்லா நிம்மதி அடைந்தது.
ரூபலஷ்மி இங்கே பணியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவரின் கட்டுப்பாட்டில் அடங்கும் பகுதிக்குள் என்னென்ன அசம்பாவிதங்கள் நடந்திருக்கிறது? ரௌடிகளின் பெயர் மற்றும் அடையாளங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் பெரிய மனிதர்கள் யார் என்பதை தீர விசாரித்திருந்தார்.
அப்படி தெரிய வந்ததுதான் திருனேஷ்வரன் மீதான குற்றச்சாட்டு வழக்கு. பெண்ணை கற்பழித்துவிட்டு ஒப்புகொள்ள மறுக்கிறான் என்று திருனேஷ்வரனைப்பற்றி விளக்கினர் காவலர்கள்.
தவறு செய்தவன் எப்படி ஒப்புகொள்வான்? பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு குற்றவாளியை அடையாளம் காட்ட தெரியுமானு கேட்க வேண்டியதுதானே? ஒருவேளை அந்த பொண்ணுக்கு அடையாளம் தெரியலைனாலும் டி.என்.எ டெஸ்ட் எடுத்தா தெரியப்போகுது.
இவையெல்லாம் இவர்களுக்கும் தெரியும். ஆனாலும் குற்றவாளி ஒப்புகொள்ள மறுக்கிறான் என்பதையே திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். எனில் யாரையோ காப்பாற்ற தீவிரமாக முயல்கிறார்கள் என்று தெளிவாக புரிந்தது ரூபலஷ்மிக்கு.
“பாதிக்கப்பட்ட பொண்ணு இப்போ எப்படி இருக்கா?” என்றார்.
“அந்த பாப்பா வெளியுலகத்துக்கு பயந்து படிக்கவே போகமாட்டேனுட்டா, ஸ்பெஷல் டாக்டர்க்கிட்ட அழைச்சிட்டு பேய் கவுன்சிலிங் கொடுத்துருக்காங்க. இப்போ நல்லா இருக்காங்க மேடம், ஆனா அந்த பொண்ணுகிட்ட இனி விசாரிச்சா மனதளவுல பாதிப்படைவானு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்றார் காவலர்.
அப்பொழுது திருனேஷ்வரன் வழக்கோடு சேர்த்து இன்னும் பல வழக்குகள் அவசரமாக கண்டுபிடிக்க வேண்டியிருப்பதால், திருனேஷ்வரனின் வழக்கைப் பற்றிய பேச்சினை விடுத்து மற்ற வழக்குகளின் சம்பவங்களை கேட்டறிந்து கிளம்பினார் ரூபலஷ்மி.
அதன்பின்னே பத்து நாள்கள் கழித்த பின்னேதான் திருனேஷ்வரனை மீண்டும் பார்த்தார் ரூபலஷ்மி.
திருனேஷ்வரனை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அந்த நேரம் வேறொரு வழக்கிற்காக நீதிமன்றம் வந்திருந்தார். திருனேஷ்வரனின் முகத்திலிருந்த வேதனை ரூபலஷ்மியை யோசிக்க வைத்தது.
திருனேஷ்வரனுக்கான விசாரனை நேரம் வரவே காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான். என்ன நடக்கிறது என்று பார்க்க ரூபலஷ்மியும் அங்கே இருந்தார்.
விசாரணை கூண்டிற்குள் சென்று நிற்கும்வரை இருந்த திருனேஷ்வரனின் முகபாவனை வேறு. கூண்டிற்குள் நிறுத்தியதும் அவனின் முகத்தில் புதிய மாற்றத்தைக் கண்டார் ரூபலஷ்மி.
ஆம் திருனேஷ்வரனின் நடையிலேயே அவன் எத்தனை துன்பறுத்தப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்திருந்தார் ரூபலஷ்மி. காவலர்கள் சொல்லிக்கொடுத்ததைப் போல் சொல்லாவிடில் இன்னும் எத்தனை விளைவுகளை சந்திக்க வைப்பார்கள் என்றும் ரூபலஷ்மிக்கு தெரியும்.
ஆனால் இவை அனைத்தையும் மீறி திருனேஷ்வரனின் முகம் குற்றத்தை ஒப்புகொள்வதைப் போல தெரியவில்லையே என்ற யோசனை மட்டுமல்லாமல், அவனின் தைரியமான முகத்தால் மெச்சுதலும் உண்டாக திருனேஷ்வரனையே பார்த்திருந்தார் ரூபலஷ்மி.
ஆம்… ரூபலஷ்மி நினைத்ததைபோலத்தான் திருனேஷ்வரன் பேசினான். நான் குற்றமற்றவன், அப்படி இழிவான செயலை செய்யும் அரக்கனல்ல, என் பெற்றோர்கள் என்னை அப்படி வளர்க்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணை நினைத்தால் வேதனையாக உள்ளது. அந்த பெண்ணை பயமுறுத்தித்தான் இப்படி சொல்ல வைத்திருப்பார்கள்.
நான்தான் குற்றவாளி என்பதற்கு மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. அதை இவர்களால் பெறவும் முடியாது. ஏனெனில் நான் குற்றம் செய்யவில்லை. செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள், துன்புறுத்தவும் செய்கிறார்கள்.
என் உடலை ஆராய்ந்தால் நான் எத்தனை துன்புறுத்தப்பட்டிருக்கிறேன் என்பது மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களுக்கு தெரியவரும்” என்று நிமிர்வாகவே சொல்லி,
தன்னை துன்புறுத்திய காவலரைப் பார்த்து, “உண்மை குற்றவாளி இவருக்கு வேண்டப்பட்டவன் போல. அதனால்தான் அவனை காப்பாற்ற என்னை பணையமாக்க நினைக்கிறார்” என்றான் தைரியமாக.
திருனேஷ்வரன் வழக்கை கையாண்ட ஆய்வாளருக்கும், இரு காவலர்களுக்கும் பயத்தில் வியர்த்துப்போனது. பின்னே… நீதிபதியிடம் இப்படி சொன்னாலே பல விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். அதோடு டி.எஸ்.பி ரூபலஷ்மியும் அல்லவா வளாகத்தினுள் இருக்கிறார்.
எவ்வித ஆதாரமுமின்றி அவ்வீதியில் நடந்த சென்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே எப்படி சந்தேகிப்பீர்கள்? அதோடு விசாரணைக்கென அழைத்து வந்தவனை இப்படி துன்புறுத்தலாமா? இனி திருனேஷ்வரனை துன்புறுத்தக்கூடாது என்று காவலர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, முறைப்படி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை ஆதாரத்தோடு சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கின் வாய்தா தேதியை அறிவித்து கிளம்பினார் நீதிபதி.
ரூபலஷ்மியைப் பார்த்துப் பதறிய ஆய்வாளர் “மேடம் அவன் பொய் சொல்றான் மேடம், இவன் போட்டோவை காட்டினதும் பாதிக்கப்பட்ட பொண்ணு இவன்தான் கற்பழிச்சானு சொன்னுச்சு” என்று திணறியபடி சொல்லும்போதே ரூபலஷ்மி தீர்க்கமாக முறைக்க, காவலர்கள் அமைதியாகினர்.
திருனேஷ்வரன் இத்தனை அழுத்தமானவன் என்றோ, இப்படி தைரியமாக உண்மையை உடைத்துப் பேசுவான் என்றோ நினைக்கவேயில்லை காவல்துறையினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி திருனேஷ்வரன்தான் தவறிழைத்தவன் என்று வாக்குமூலமும் வாங்கியிருந்தனர். இதற்கு மேல் உன்னால் தப்பிக்க முடியாது. ஒழுங்காக நாங்கள் சொல்வதை போல் நீதிபதியிடம் சொன்னால் சிறையில் சித்திரவதை இல்லாமல் இருக்கலாம். இலையேல் உடம்பை சிதைச்சிடுவோம் என்று பயமுறுத்தியிருந்தனர்.
இதற்கு முன் இப்படி நடந்ததும் இல்லை. இவர்கள் என்ன சொல்லி கொடுக்கிறார்களோ அதைத்தான் விசாரணைக் கைதி சொல்வான்.
டி.எஸ்.பி மேடம் திருனேஷ்வரன் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தால் தனது வேலையே கூட போகும் வாய்ப்பிருக்கவே செய்வதறியாது நின்றிருந்தனர் காவலர்கள்.
“உன்னைப் பார்த்தா தப்பு செய்தவனைப் போல தெரியல. ஈவ்னிங் ஸ்டேஷனுக்கு வருவேன். உனக்கு தெரிஞ்ச உண்மையை சொல்லனும்” என்று திருனேஷ்வரனிடம் சொல்லி,
காவலர்களிடம் “இனி அவன்மேல கை வச்சிங்க…” என்று எச்சரித்தும், “நான் வரும்போது உண்மை குற்றவாளி ஸ்டேஷன்ல இருக்கனும்” என்று உத்தரவிட்டும், தான் நீதிமன்றத்திற்கு வந்ததற்கான வேலையை பார்க்கச் சென்றார் ரூபலஷ்மி.
சொன்னது போலவே மாலை ஐந்து மணிபோல் திருனேஷ்வரன் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார் ரூபலஷ்மி. உதறலெடுத்தது ஆய்வாளருக்கும் காவலருக்கும்.
“அக்யுஸ்ட் எங்க?” என்றார் ஆய்வாளரிடம்.
“மேம்… திருனேஷ்வரன்தான்” எனும்போதே, கையால் பேசாதே எனும் செய்கை செய்து, திருனேஷ்வரனைப் பார்த்தார்.
“மேடம்… அந்த பொண்ணை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எங்க வீட்டு வழியாத்தான் ஸ்கூலுக்கு போகும். ஆனா நான் பேசினதில்லை.
இந்த பொண்ணுதான் பாதிகப்பட்டிருக்கானு அந்த பொண்ணோட வாக்குமூல வீடியோவைப் பார்த்துதான் எனக்கு தெரியவந்தது. கற்பழிச்சவன் எதையோ சொல்லி மிரட்டித்தான் அப்படி சொல்ல வைத்திருப்பான்” என்றான்.
“உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?”
“அப்படி ஏதும் ஐடியா இல்லை மேடம். ஆனா அந்த பொண்ணு ரெகுலரா ஒரு ஸ்டேஷனரி கடையில ஸ்னேக்ஸ், பென்சில், பேனா இப்படி வாங்கும். அங்க நியர்பையா இருக்க கேமராவில செக் பண்ணினா அந்த பொண்ணை ஃபாலோ பண்ணினவன் யாருனு தெரிய வாய்ப்பிருக்கும்.
தப்பு செய்யிறவன் ஒரு சில நாளாவது நோட்டம் விட்டுருப்பான். அப்படி ஏதும் க்ளூ கிடைக்கலைனா அந்த பொண்ணுக்கு தைரியம் சொல்லி தப்பு செய்தவனை அடையாளம் காட்ட சொல்லலாம்” என்றான்.
“உன்னைப் பத்தியும், அந்த நேரம் அங்க எதுக்காக வந்தேனும் சொல்லு” என்றார் ரூபலஷ்மி.
சென்னைல இருந்தாலும், சேலத்துல இருந்தாலும் தினமும் மார்னிங் ஜாகிங் போகும் பழக்கம் எனக்கிருக்கு. நான் ஜாகிங் போகும் டைம்ல அந்த பொண்ணு டியூசனுக்கு போகும்.
நான் ஜாகிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது ஸ்கூலுக்கு போய்டிருக்கும். இப்படித்தான் அந்த பொண்ணோட டெய்லி ஸ்கெட்யுல் எனக்கு தெரிய வந்தது என்றான் திருனேஷ்வரன்.