Skip to content
Post Views: 7,720
அடுத்தநாள் மதியம் உணவு நேரத்தின்போது பொன்மணியிடமிருந்து அழைப்பு வர, “என்ன?” என்றான்.
“பெரியவங்களுக்கு தெரியாம தாலி வாங்கி போட்டுக்கிட்டதால கோபமா இருக்காங்களாம், அப்பா ரொம்ப ஃபீல் பண்ணினார்”
தன் அன்னைதான் எதாவது சொல்லியிருப்பார் என்றுணர்ந்த போதும், “அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?” என்றான்.
“வீட்டுல சொல்லிட்டு செய்ய மாட்டிங்களா?” என்றாள் ஆற்றாமையோடு.
Advertisement
“சொல்லிட்டு செய்திருந்தா என்னோட வாழ்ந்திருப்பியா?”
பொன்மணியிடம் பதிலில்லாமல் போக, “தாலி கட்டினவனெல்லாம் புருஷனாகிட முடியாது, நாங்க பிரிஞ்சிட்டோம்னு சொல்லு. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் போன் பண்ணி என்னை இம்சை பண்ணாத”
“இது சின்ன விசயமா?” என்றவளின் குரல் உடைந்திருந்தது.
Advertisement
“எத்தனை கஷ்டம்னாலும் சேர்ந்து வாழ நினைக்கிறவங்களுக்கும், இணையோட நியாயமான விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து வாழ்றவங்களுக்கும்தான் வாழ்க்கை கஷ்டமா இருக்கும். நிறைய ஸேக்ரிஃபைஸ் பண்ண வேண்டியிருக்கும்.
Advertisement
உனக்கு அப்படி எண்ணமில்லைதான? நானும் உன் விருப்பத்துக்கு சம்மதிச்சிட்டேன், இனிமேல் என்ன? உன் விருப்பப்படி வாழ்றது சின்ன விசயம்தான?”
பொன்மணி அழுகிறாள் என்று புரிய, “நீ எனக்கு இல்லைன்றதை ஏத்துக்க மனசு ரொம்ப முரண்டுது. நானே கஷ்டப்பட்டு உனக்குள்ள இருந்து என்னை மீட்க வழி தேடிட்டிருக்கேன். என்னோட வாழ விருப்பமிருந்தா மட்டும் போன் பண்ணு, இல்லைனா தயவு செய்து போன் செய்யாத” என்றான்.
பொன்மணியிடமிருந்து பதிலில்லாமல் போக, “ம்… தாலியை பத்தி சொன்னயில்ல? எங்கம்மா கேட்டா உங்க மகன் காசுல வாங்கல, என் காசுல வாங்கினேனு சொல்லு.
Advertisement
உங்கம்மா கேட்டா, அதை கழட்டி வித்துடு. உன்னோட காசும் கிடைச்சிடும், அதை டிரஸ்க்குள்ள மறைச்சி வைக்கும் சிரமமும் இருக்காது” என்று இணைப்பை துண்டித்தான்.
விலகிவிட்டால் பரவாயில்லை என்று தவித்தவளுக்கு திருனேஷ்வரனின் விலகலான பேச்சே அத்தனை வலித்தது.
தன் மீது ஆசைப்பட்டவனை ஏமாற்றம் அடைய வைக்கிறோம். வேறு யாராவது இருந்தால் இத்தனை வேதனை வராது. முன்பே தன்னால் பாதிக்கப்பட்டவனுக்கு மீண்டும் வேதனை தருகிறோம் என்று வருந்தினாளே அன்றி, இப்பொழுதும் இதை காதல் என்றெலெல்லாம் நினைக்கவில்லை பொன்மணி.
அன்று ஹோட்டலில் தாலியை உள்ளே மறைத்து போட்டிருந்ததை கவனித்தே இப்படி பேசுகிறான். தனக்கு திருமணம் ஆனதை மறைக்க எண்ணி அப்படி போடுகிறேன் என்று நினைத்துக்கொண்டான் போல.
என் கணவன் திருனேஷ்வரன் என்று சொல்ல எனக்கு தகுதியில்லை என்பதால் மறைத்து வைத்திருக்கிறேன் என்று யார் அவனிடம் சொல்வது? என்று மனதோடு வெம்பியபடி தனது மாங்கல்யத்தை எடுத்து வருடிக்கொண்டிருந்தாள் பொன்மணி.
“பொன்மணி” என்று உடன் வேலை செய்யும் ஆஷிகா அழைக்க, திரும்பியவளிடம் “உனக்கு கல்யாணம் ஆச்சா பொன்மணி? எப்போ செய்த? சொல்லவேயில்ல?” என்று பரபரத்தாள்.
இடைவெளி நேரம் என்பதால் பாதிக்கு மேல் கேண்டீனில்தான் இருந்தனர்.
“என்ன? பொன்மணிக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று வியந்தபடி அனைவரும் பொன்மணி அருகே வந்தனர்.
ஆஷிகா பொன்மணி கழுத்திலுள்ள மஞ்சள் கயிற்றினை காண்பிக்க, “எப்போ நடந்தது? ஏன் சொல்லலை?” என்று மொய்த்தனர் அனைவரும்.
“திடீர் திருமணம்” என்று சொல்ல, “உன் ஹஸ்பண்டை காட்டு” என்று மொபைலை பார்த்தனர்.
“இல்ல… அவர் போட்டோ என்கிட்ட இல்ல”
அந்த நேரம் பொன்மணியின் அன்னையிடமிருந்து அழைப்பு வர, “யாரது? உன் ‘ஹஸ்ஸா? கொடு” என்று மொபைலை பிடுங்கி அழைப்பை பார்த்து,
“அம்மாவா? அதுவும் ஓகேதான்” என்று அழைப்பை ஏற்று “ம்மா, நாங்கள்லாம் பொன்மணியோட ஒர்க் பண்றவங்க, பொன்மணி கல்யாணத்துக்கு எங்களை இன்வைட் பண்ணவேயில்லை. ஹஸ்பண்டைப் பத்தி கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா” என்று புகார் வாசித்தனர்.
மருமகன் பொன்மணி சொன்ன பொய்யால் பாதிக்கப்பட்டவன், அதன் பின்ன நடந்த சம்பவங்கள் என்று என்ன சொன்னாலும் நம் குடும்பத்திற்கு அசிங்கம் அல்லவா? என்ன சொல்வார் அஞ்சுகம்… தடுமாறிய பின்னே, “திடீர் கல்யாணம் ம்மா” என்றார் இறங்கிய குரலில்.
“ஓ… எங்களுக்கு புரிஞ்சு போச்சு, அத்தை மகனோ, மாமன் மகனோ இருந்திருப்பாங்க, நீங்க வெளில பார்த்திருப்பிங்க, பொன்மணி அழகுல மயங்குன முறை மாமன் பட்டுனு தாலியை கட்டிட்டார். இதானே நடந்தது?” என்று இவர்களாக ஒரு கதையை சொல்ல,
“ஆமாம்மா, நீங்க சொன்ன மாதிரிதான் பொன்மணி கல்யாணம் நடந்தது. சரியா கண்டுபிடிச்சிட்டிங்க. மருமகன் பொன்மணியோட மாமன் மகன்.” என்று அதற்குமேல் பேச்சை வளர்க்க விரும்பாமல் இணைப்பை துண்டித்தார் அஞ்சுகம்.
“உங்கம்மாக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லையா பொன்மணி, அவங்க குரலிலும் சந்தோசம் இல்லையே… உன் மாமன் மகன் ரொம்ப அசிங்கமா இருப்பாரா? படிக்காதவரா? இல்ல கேரக்ட்டர் சரியில்லாதவரா?” என்று கவலையோடு வினவினர் தோழிகள்.
திருனேஷ்வரனை குறை சொல்வதை சகிக்க முடியாமல் “அப்படிலாம் இல்லை” என்று அவ்விடம் விட்டு நகர முயல,
“நில்லு பொன்மணி, உன் அழகென்ன? படிப்பென்ன? பொஸிஸன் என்ன? இத்தனை இருந்தும் பிடிக்காத வாழ்க்கையை வாழப்போறியா? எந்த காலத்துல இருக்க நீ? கயிற்றை கழட்டி அவன் முகத்துல விட்டெறியறதை விட்டுட்டு எதுக்கு இப்படி பயப்படுற?” என்றனர் அக்கறையாக.
“ம்ப்ச், அப்படிலாம் ஒன்னுமில்ல, ஒர்க் பார்ப்போம்” என்று அவளிடத்திற்கு விரைந்தாள்.
“ஏன் பொன்மணி? உன் விசயத்துல நான் தலையிடக் கூடாதா? எவ்வளோ பெரிய விசயம் நடந்துருக்கு? என்கிட்ட உன் கஷ்டத்தை கூட ஷேர் பண்ணிக்கமாட்டியா? அவ்வளோதானா நான் உனக்கு? நாலு வருசம் ஒன்னா படிச்சோம், இரண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில வேலை கிடைச்சதும் சந்தோசப்பட்டியே… அதெல்லாம் நடிப்பா?”
“அச்சோ அப்படியில்ல ஆஷி, இது வேற விசயம், டைம் வரும்போது சொல்றேன், இப்போ விடேன்” என்றாள் மன்றாடலாக.
வருத்தத்தோடு ஆஷிகா அவ்விடம் விட்டு நகர, தலைமீது கை வைத்து அமர்ந்துகொண்டாள் பொன்மணி.
தாலியை கழற்றி விற்கனும் என்று எத்தனை சுலபமாக சொல்கிறான்? என்று கோபமாக நினைத்தபோதும், சேர்ந்து வாழ விருப்பமில்லை என்ற நிலையில் இதை செய்துதானே ஆகவேண்டும்.
அப்படி செய்தால்தான் திருனேஷ்வரன் வேறொரு வாழ்வில் இணைவான் என்றும் தோன்ற, ‘தேவையா இப்படி நிகழ்வுகள்? அத்தனை மறுத்தேனே… கொஞ்சமும் நிதானிக்காமல் கட்டிவிட்டானே’ என்று வேதனையாக நினைத்தாள்.
பொன்மணிக்கு சத்யப்ரகாஷிடமிருந்து அழைப்பு வரவே, ’எல்லாம் இவனால்’ என்று இணைப்பை துண்டித்து விட்டாள்…
மீண்டும் அழைப்பு வர, “என்ன?” என்றாள் கடுப்பாக.
“அவனை கல்யாணம் செய்யத்தான் என்னை அசிங்கப்படுத்தினியா? என் பொண்டாட்டிகிட்ட சொல்லமாட்டேனு என்கிட்ட சொல்லிட்டு அவகிட்ட எதுக்கு சொன்ன? அவ என்னை விட்டுட்டு போய்ட்டா. இதெல்லாத்துக்கும் காரணமான உன்னை சும்மா விடமாட்டேன்.” என்றான் கர்ஜனையாக.
“என்ன பண்ணுவ?” என்றாள் திமிராக.
“அதை செயல்ல காட்டுறேன்டீ”
“நீ செயல்ல காட்டினதுதான்டா இப்போ உன்னை சுத்துது, இன்னும் வேற செய்வியா? செய் செய்… உன் பாவத்தோட கணம் கூட கூட எனக்கு சந்தோசம்தான்.
என்னை பழிவாங்கவாவது நீ உன் குடும்பத்தை மறந்து என்னையே நினைச்சிட்டிரு. உன் பொண்டாட்டி இன்னொருத்தனை கட்டிட்டு சந்தோசமா இருப்பா” என்று சாபமிட்டு என்று இணைப்பை துண்டிக்க, அடுத்து தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.
“அப்பா”
“அந்த சத்யப்ரகாஷ் ஏது வந்தானாம்மா?” என்றார் பதட்டமாக.
“அவனுக்கு எதுக்குப்பா பயப்படுறிங்க?”
“நீயும் திருனேஷ்வரனும் சேர்ந்து ப்ளான் பண்ணித்தான் அவனை அசிங்கப்படுத்தினிங்கனு சொல்றான்ம்மா, அவன் பொண்டாட்டி அவனை விட்டுட்டு போய்ட்டாங்க, அந்த கோபத்துல உன்னை பழி வாங்க நினைக்கிறான்”
“என்கிட்டயும்தான் எகிறான். விடுங்கப்பா பார்த்துக்கலாம்” என்றாள் அசால்ட்டாக.
“அப்படிலாம் சுலபமா விடக்கூடாது பொன்மணி, மாப்பிள்ளைகிட்ட சொல்லி வை, அவனால எதாவது பிரச்சனைன்னா சொல்ல சொன்னார்தான? நான் சொல்லிட்டேன், நீயும் சொல்லு, இல்லைனா கோபப்படுவார்”
“அச்சோ… அவர்கிட்ட எதுக்குப்பா சொன்னிங்க?” என்று தவிக்க,
“பின்ன சொல்ல வேண்டாமா? என்ன பேச்சிது? மாப்பிள்ளைக்கு சங்கடம் வேணாம்னு கிறுக்குத்தனமா யோசிப்பனுதான் போன் செய்தேன். மாப்பிள்ளைக்கு போன் செய்து பேசிட்டு, எனக்கு போன் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தார் அசோகன்.
என்னடா இது சோதனை? அவர் வேற சேர்ந்து வாழ்றதா இருந்தா மட்டும்தான் போன் பண்ணனும்னு சொல்றார். அப்பா பேச சொல்றார். போன் செய்தியானு நம்மகிட்ட கேட்குறதோட விட்டா பரவால்ல, பொன்மணி போன் செய்துச்சானு அவர்கிட்டயும் கேட்டார்னா பிரச்சனையாகிடுமே’ என்று தவித்தாள்.
நீண்ட நேர யோசனைக்குப் பின்னே தென்றலுக்கு போன் பண்ணலாம் என்று அழைக்க, “என்ன பொன்மணி? இந்த நேரத்துக்கு போன் செய்திருக்க?” என்றாள் கிசுகிசுப்பாக.
“நீ ஏன் இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற?”
“மலைபோல ஒர்க் இருக்கு பொன்மணி, திருனேஷ் சார்க்கு இன்னைக்கொரு புது பிரச்சனை, செம்ம கடுப்புல இருக்கார். ஒர்க் டைம்ல போன் பேசுறது மட்டும் தெரிஞ்சது… நான் காலி, பிரேக் டைம்ல கால் பண்றேன்” என்று கட் செய்தாள்.
பின்னே தேநீர் இடைவெளியின் போது பொன்மணிக்கு அழைத்ததும், “புது பிரச்சனைனு சொன்ன? என்ன பிரச்சனை?” என படபடத்தாள் பொன்மணி.
“ஹே பொன்மணி, நீ ஏன் இவ்வளோ பயப்படுற? எத்தனை பிரச்சனை வந்தாலும் திருனேஷ் சார் போற போக்குல சரி பண்ணிட்டு போய்டுவார்” என்றாள் பெருமையாக.
தன்னை கண்டு கொள்வாளோ என “இல்ல… நம்ம சேலத்துக்காரர் இல்லையா? அந்த அக்கறைல கேட்டேன்” என்றாள்.
“நான் கூட உனக்கு எதோ பிரச்சனை, அதை சொல்லத்தான் கால் பண்ணின்னு நினைச்சேன், நீ என்னடான்னா சாரைப் பத்தி கேட்குற?”
“இல்ல… அவர் டென்ஷனா இருந்தா உங்களுக்குதான பிரச்சனை? அதனால கேட்டேன்” என்று சமாளித்தாள்.
“அப்படிலாம் மத்தவங்க மேல உள்ள டென்ஷனை எங்ககிட்ட காட்டமாட்டார் பொன்மணி” என்றவள், “இரண்டு நாளா எங்க எம்.டியோட தங்கை ஆபீஸ்க்கு வராங்க, திருனேஷ் சாரை பயங்கரமா சைட் அடிப்பாங்க.
அவங்க சாரை பார்க்கும்போது சார் முகத்தை பார்க்கனுமே… பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, உன் தங்கைக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு, சீக்கிரம் மாப்பிள்ளை பாருனு திருனேஷ் சார் எம்.டி சார்கிட்ட சொன்னார்.
வேற இடத்துல எதுக்கு பார்த்துகிட்டு? நீங்களே பண்ணிக்கோங்கனு ராஜ்குமார் சார் சொல்ல, திருனேஷ் சார்க்கு வந்ததே கோபம்… முகமெல்லாம் அப்படியே சிவந்து போய்டுச்சு பொன்மணி,
முட்டாள்… எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சுடா, கல்யாணம் ஆகலைனாலும் நான் யாரை கல்யாணம் செய்துக்கனும்னு நீயா முடிவு பண்ணுவியா?
ப்ளான் பண்ணிதான் உன் தங்கையை ஆஃபீஸ்க்கு வர சொன்னியா? சின்ன பொண்ணு மனசுல இப்படி ஆசையை வளர்க்குறியே… நீயெல்லாம் ஒரு அண்ணனானு எம்.டி சாரை வெளுத்து வாங்கிட்டார், அவங்க கேபின்ல பேசினது வெளில வரைக்கும் கேட்டுச்சுனா பாரேன்”
“லேப்பை மூடி வச்சிட்டு அரட்டை அடி, அதுக்குத்தான வந்திருக்க?” என்ற திருனேஷ்வரனின் குரல் கணீரென ஒலிக்க, “சா… சார்” என எழுந்து நின்றாள் தென்றல்.
பொன்மணியிடம்தான் பேசுகிறாள் என்றறிந்தேதான் வந்தான்.
“பிரேக் டைம்னுதான்” என்று தென்றல் பயந்து சொல்ல, “பிரேக் டைம்னா உன்னைப் பத்தி மட்டும் பேசனும், என்னைப்பத்தி யார்கிட்ட என்ன சொல்லிட்டிருக்க?” என்றான் முறைப்பாக.
“பொன்மணிகிட்டதான் சார் பேசிட்டிருந்தேன்” என்றாள் திருனேஷின் கோபத்திலிருந்து தப்பிக்கும் எண்ணத்தோடு.
“பொன்மணி உனக்கு ஃப்ரண்டா இருக்கலாம், அதுக்காக என்னைப் பத்தி அவகிட்ட பேசுவியா?”
இருபது நாள்களாக இப்படி கோபத்தை திருனேஷ்வரனிடம் கண்டதேயில்லை, வேலை சொல்லிக்கொடுக்கும்போதும் கூட கண்டிப்பு இருக்குமே அன்றி கடுமை இருக்காது.
பொன்மணி சொல்லி திருனேஷ்வரன் வேலை கொடுத்தார் ஆதலால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று நினைத்திருந்தாள் தென்றல்.
தற்போது பொன்மணியை யாரென்று கேட்டால் என்ன சொல்வாள்? விழித்து நின்றவள், “சாரி சார், இனி சொல்லமாட்டேன்” என்று சரணடைந்தாள்.
“ஒர்க் பாரு” என்றவன் தன்னிடத்திற்கு செல்ல, பொன்மணியின் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.
அசோகன் பேசி முடித்த பின்னே “சத்யப்ரகாஷை நினைச்சு பயப்பட வேண்டாம், அவனால பொன்மணிக்கு ஏதும் ஆகாது” என்றான்.
“பொன்மணிகிட்டயும் பேசியிருக்கான், அதான் பயமாகிடுச்சு, அங்கயேது வந்துட்டான்னா” என்றார் கவலையோடு.
“நான் பார்த்துக்கிறேன்” என்றவனுக்கு பொன்மணியிடமிருந்து அழைப்பு வரவே, “நைட் பேசறேன்” என்று இணைப்பை துண்டித்தவன், மீண்டும் அழைக்கிறாளா என்று பார்த்திருந்தான்.
சத்யப்ரகாஷ் விசயம் இல்லாவிட்டால் அழைப்பை ஏற்றிருக்கமாட்டான். நானில்லாமல் அவளில்லை என்பதை உணர வைக்கும்வரை பொன்மணியிடமிருந்து தள்ளியிருக்கவே நினைத்திருந்தான். ஆனால் தற்போது அதற்கான நேரமில்லை என்பதால்தான் பொன்மணியிடம் பேச காத்திருந்தான்.
இருபது நாள்களுக்குப் பிறகு பொன்மணியிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் இலகுவானது. பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் பொன்மணி அழைக்க, ஏற்றவன், “என்னோட வாழ முடிவெடுத்திட்டியா?” என்றான்.
“அதுயில்ல” எனும்போதே கட் செய்ய, மீண்டும் அழைத்தாள்.
“என்னோட வாழ முடிவெடுத்தியா?” என்றான் மீண்டும்.
இல்லை என்றால் இணைப்பை துண்டிப்பான் என, “அது பத்திதான் பேசனும், ஆனா கொஞ்சம் பொறுமையா கேட்கனும்” என்றாள் வேண்டுதலாக.
பொன்மணியிடம் பேசியதும் அவளை பார்க்கும் ஆசையை வர, “பொறுமையா கேட்க இப்போ நேரமில்ல, நைட் வீட்டுக்கு வரேன்” என்றான்.
“வீட்டுக்கா?” என இவள் அதிர, “ஆமாம், இனி பொது இடத்துல வச்சு உன்னை சந்திக்கப்போறதில்ல” என்றான் தீர்க்கமாக.
பொன்மணி அமைதிகாக்க, “என்ன பேச்சை காணோம்? எனக்கு நிறைய வேலையிருக்கு, வீட்டுக்கு வரட்டுமா? வேணாமா?” என்றான்.
“வாங்க” என்றாள் வேறு வழியின்றி.
“பொறுமையா மிட்நைட் வரைக்கும் பேசனும் சரியா?” என்று புன்னகைத்து, “நைட்டுக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன், சாப்பிடாம வெய்ட் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தவன், இரவு எட்டு மணிவரை வேலை செய்துவிட்டு, மனைவிக்கும் சேர்த்து இரவு உணவை வாங்கிக்கொண்டு கிளம்பினான் பொன்மணி தங்கியிருக்கும் வீட்டிற்கு.
error: Content is protected !!