Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 14.2

“இதெல்லாம் வாங்கி வச்சு இருபது நாளுக்கு மேல ஆகுது, ரொம்ப டஸ்ட்டா இருக்கு, கழுவி தா” என்று சிங்க்கை காண்பித்தான்.

“வேணாம்னாதான் செஞ்சே ஆகனும்னு நிக்குறது, ஒரு சாமி படம் இல்லை, உப்பு, மஞ்சள் கூட இல்ல, அதுவும் நைட் நேரத்துல… இப்படியா பால் காய்ச்சுவாங்க?” என்று முணகியவாறு பாத்திரத்தை கழுவி திருனேஷ்வரனிடம் நீட்டினாள்.

“சரி… இப்போ காய்ச்ச வேணாம், நாளைக்கு எல்லாம் வாங்கி முறையா காய்ச்சலாம், நீயும் முறைப்படி இங்க வந்துடுறியா?”

“நீங்களும் நானும் மட்டும் செய்யிறதுதான் முறையா?” என்றாள் வருத்தமாக.



Advertisement

“ஓ… என் அப்பாம்மா உன் அம்மாப்பா எல்லாரும் இருக்கனுமா? அப்போ எனக்காக எதையும் பார்க்கமாட்ட? அப்படித்தான?”

“பார்க்காமத்தான் உங்களோட வந்துருக்கேனா?” என்றவளுக்கு குரல் கமற, சற்று கோபம் குறைந்தவன், “கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது. வெறுமனே பார்க்குறதுக்கே இத்தனை பெருமை” என்று, மின் அடுப்பை பிரித்து வைத்து பாலை வைக்கப்போக,

உணவை பிரித்து சாப்பிடவே சலிப்படைந்தானே என, அவனோடு தர்கம் செய்வதை நிறுத்தி, “நான் பார்க்குறேன்” என்றாள்.

Advertisement

“ம்” என்று சம்மதித்து திட்டில் அமர்ந்து பொன்மணியையே பார்த்திருந்தான்.

Advertisement

திருனேஷ்வரனின் பார்வை பெரும் சங்கடத்தை உண்டாக்க, “சர்க்கரை, டம்ளர்லாம் வாங்குனிங்களா?” என்று அவனின் கவனத்தை கலைக்க முயற்சித்தாள்.

“ம் இருக்கு, அதுல” என்று இன்னொரு பையை காண்பித்து, “டீசன்ட்டா பார்க்குறதுக்கே பர்மிட் பண்ணலைனா, ரொம்ப அன்டீசண்ட்டா பார்ப்பேன் பார்த்துக்கோ” என அதட்டினான் ரசனையாக.

பதில் பேச முடியாமல், டம்ளர் சர்க்கரையை எடுக்கலானாள்.

Advertisement

“பால் பொங்குது… பாரு பாரு” என்று சொல்ல, பால் பொங்கி வழிந்த பின்னே அடுப்பை அணைத்து தயாராக வைத்திருந்த டம்ளரில் பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் வரை ஆற்றி திருனேஷ்வரனிடம் கொடுக்க, “அங்க போலாம் வா” என்று ஹாலுக்கு வந்தான்.

பொன்மணி பின்னோடு வர, பின்னே “அங்க போலாமா?” என்று அங்கிருந்த தனியறைக்கு சென்றவன், “இங்க ஃபேன் இல்லன்றதை மறந்துட்டேன், உக்கார முடியாது போல, வா ஹாலுக்கே போலாம்” என்று மீண்டும் ஹாலுக்கு வந்தவன், “இது நல்லாயிருக்கு பொண்ணுமணி” என்றான் கண்ணிமைத்து.

“எது?”

“என் பின்னாடி நீ வரது. எனக்காக பால் எடுத்துட்டு வரது”

“என்ன இது? சின்ன பிள்ளையாட்டம்?”

“ம்… எனக்கும் இது சின்னப்புள்ளத்தனம்னு புரியுது. நீதான் என்னை ஆம்பளையாக விடமாட்டேங்குறியே” என்றவன், “ஆனாலும் இதுலயும் எவ்வளோ சந்தோசம் இருக்கு தெரியுமா? உனக்கு அதெல்லாம் புரியாது” என்றான்.

“பால் குடிங்க” என்று நீட்டினாள்.

“நீ குடிச்சிட்டு கொடு”

இவள் பாதி ஊற்றிக்கொண்டு மற்றொரு டம்ளரில் திருனேஷ்வரனுக்கு கொடுக்க, “குடிச்சிட்டு கொடுனுதான் சொன்னேன், வேற டம்ளர்ல ஊத்திக்கொடுனா சொன்னேன்?” என்று முறைப்போடு வாங்கிக் குடித்தான்.

இவளும் குடிக்க, இரண்டு சிப் குடித்தவளிடத்திலிருந்து அதனை பிடுங்கியவன், “எனக்கு பத்தல, நீ போய் வேற கலக்கிக்கோ” என்று சின்ன சிரிப்போடு குடிக்க ஆரம்பிக்க, அவ்விடம் நிற்க முடியாமல் கிச்சன் வந்திருந்தாள்.

அடுத்த நிமிடத்திலிருந்தே “பொண்ணுமணி… பொண்ணுமணி” என்று கத்திக்கொண்டேயிருக்க, வேறு வழியில்லாமல் சமையலறையிலிருந்து வெளியே வந்தவளிடம் “நீ ஒரு பக்கம் நானொரு பக்கம் இருக்கவா உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்?” என்றான் முறைப்பாக.

“என்னை பேசவே விடமாட்டேங்குறிங்க, எதுக்கு கூப்பிட்டேன்னே மறந்துடும்போல”

“அந்த சத்யப்ரகாஷ் நாயை நான் பார்த்துக்கிறேன், அவனைப் பத்தி பேசி டைமை வேஸ்ட் பண்ணாத” என்றவனுக்கு அழைப்பு வந்தது தங்கையிடமிருந்து.

“வெண்பா” என்றான் நிறைந்த அன்போடு. சில நொடிகளுக்கு முன்னே திருனேஷ்வரனின் முகத்திலிருந்த கோபம் பனிபோல் விலகியிருந்ததோடு, நிறைந்த அன்போடும் மலர்ந்த முகத்தோடும் பேசிக்கொண்டிருந்தவனின் பாவனையில் பிரம்மித்துபோனாள் பொன்மணி.

“இல்ல வெண்பாம்மா, சாரிடா, இந்த வாரம் வரமுடியாது, ப்ராஜக்ட் ஒர்க் போய்ட்டிருக்கு, இன்னும் இருபது நாளுக்குள்ள முடிச்சாகனும். நாளைக்கும் ஒர்க் இருக்கு. டைட் ஸ்கெட்யுல் முடிஞ்சதும் கண்டிப்பா வரேன்”

“வீடியோ காலா? சரி வா” என்று இணைப்பை துண்டித்து அழைப்பு விடுக்க, “இப்படி சிரிச்ச முகத்தை ரொம்ப வருசம் கழிச்சு பார்க்குறேன், இப்படியே இருங்கண்ணா, அழகா இருக்கு” என பாராட்டினாள் வெண்பா.

“அழகாவா இருக்கேன்?” என இன்னும் விரிந்த புன்னகை புரிந்தவன், “உன் அண்ணியை பார்க்கனும்னல்ல? இதோ பாரு” என்று பொன்மணிபுறம் திருப்பினான் மொபைலை.

பொன்மணிக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லாமல் தனித்திருக்கிறாள் என்று திருனேஷ்வரன் சொன்னதில் உண்டான கவலை பறந்தோட, “வாவ் அண்ணி…. அண்ணா கூடதான் இருக்கிங்க. தேங்க்ஸ் அண்ணி, அண்ணா சின்ன வயசுலயிருந்தே தனியா இருக்காங்க.

ஹாஸ்டல் வாழ்க்கைனா என்னானு இப்போதான் தெரியுது. எப்படித்தான் அண்ணா ஆறாவது படிக்கும்போதுலயிருந்து  சமாளிச்சாங்களோ? சாப்பாடு பிடிக்காம, தானே துவச்சி, ஸ்கூல் கிளம்பனு என்னென்ன கஷ்டப்பட்டாங்களோனு தினமும் நினைப்பேன்.

அப்போதான் அப்படினா, இப்போ கல்யாணம் ஆகியும் தனியா இருக்காங்களேனு ரொம்ப கவலையா இருந்தது. இனி அந்த கவலை இல்ல, நீங்க பார்த்துக்குவிங்க” என்றாள் ஆர்பரிப்பாக.

பொன்மணிக்கு குற்றவுணர்வாகிட, இதழ்களை சின்னதாய் விரித்தாள் மிகுந்த சிரமப்பட்டு.

“என்ன சாப்பிட்டிங்க? அண்ணாக்கு என்ன பிடிக்கும்னு கூட எனக்கு தெரியாது அண்ணி. நான் குழந்தையா இருக்கும்போதே அண்ணா ஹாஸ்டலுக்கு போய்ட்டாங்க” என்றவளை இடைமறித்து,

“நீ சாப்பிட்டியா வெண்பாம்மா?” என்றான்.

இன்றுதான் தனிமை கிடைத்திருக்குமோ? நாம் தொல்லை தருகிறோமோ? என்று யோசித்தவள், “சாப்பிட்டேண்ணா, இன்னைக்கு எக்ஸாம்னால நேத்தே லேட்நைட்தான் தூங்கினேன், உங்களை பார்த்துட்டு தூங்கலாம்னு கால் பண்ணினேன்,

உங்களோட சேர்த்து அண்ணிகிட்டயும் பேசியாச்சு. பார்த்தாச்சு. வெண்பா செம்ம ஹேப்பி. காலைல கால் பண்றேண்ணா, குட்நைட் அண்ணி” என்று இணைப்பை துண்டித்தாள் வெண்பா.

“எப்போலயிருந்து ஹாஸ்டல்ல படிச்சிங்க?”

“அதை தெரிஞ்சு என்ன பண்ண போற? வெண்பா சொன்னதும் பரிதாபப்பட வேண்டாம். உன்கிட்ட நான் எதிர்பார்க்குறது அதில்ல” என்றான் சிறு கோபத்தோடு.

“எனக்கு உங்களை அப்படி பார்க்கவே வரமாட்டேங்குது” என்றாள் பாவமாக.

உள்ளுக்குள் சிரித்தாலும் முகத்தை கடுமையாக வைத்தபடி, “எப்படி?” என்றான் புரியாவதவன் போல.

“புருஷனா” என்றதும் விரிந்த புன்னகை புரிந்தவன், “கேட்கவே நல்லா இருக்கு, திரும்ப சொல்லேன்” என்றதும் பெரும் சங்கடத்தோடு தலைகுனிந்தாள் பொன்மணி.

மிக நெருக்கமாக வந்து நின்றவன், “கஷ்டப்பட்டெல்லாம் என்னை புருஷனா பார்க்க வேண்டாம், நீ என் பொண்டாட்டின்ற அங்கீகாரத்தை மட்டும் கொடு, மத்தது தன்னால நடக்கும்” என்றான் நிறைந்த காதலோடு.

“அங்கீகாரமா? நான் உங்களுக்கு கொடுக்கனுமா? எதுக்கு இப்படி பெரிய பேச்சு பேசுறிங்க? உங்களை அங்கீகரிக்கிற தகுதி எனக்கிருக்கா?”

“உன் தகுதிக்கு என்ன குறைச்சல்?” என்றான் முறைப்பாக.

“நல்லாதானே இருந்திங்க? எதுக்கு இவ்வளோ கோபம்? முகம் சிவக்குறதை பார்த்தா நிஜமா எனக்கு பயமா இருக்கு”

“உன் தகுதிக்கு என்ன குறைச்சல்? எதை உன் தகுதினு நினைக்கிற? சொல்லுடீ” என்றான் இன்னும் கோபத்தோடு.

திருனேஷ்வரனின் கோபத்திற்கான அர்த்தம் புரிய, விதிர்த்துப்போனாள் பொன்மணி. “இல்ல… நான் அவனை நினைக்கல” என்றாள் பெரும் திணறலாக.

“அன்னைக்கு அவனை நீ ஃபீல் பண்ணுனியா?”

“ச்சீய்” என்றாள் மிகுந்த அருவருப்போடு.

“அப்போ எதுக்குடீ என்னை தள்ளி வைக்கிற?”

“இல்ல… நான் சொன்ன பொய்யாலதான உங்க” என்றவளின் பேச்சு திருனேஷ்வரனின் பார்வையில் தன்போல் நின்றது.

“ஏன் நிறுத்திட்ட? சொல்லு, நீ சொன்ன பொய்யால என் வாழ்க்கை போச்சு, அது இதுனு பழைய ஓட்ட ரெக்கார்டை ஓட விடு” என்றான்.

“உங்களுக்கு ஓட்ட ரெக்கார்டா தெரியுதா? அஞ்சு வருசமா செத்து பிழைச்சிட்டிருக்கேன். உங்களுக்கு செய்த துரோகத்துலயிருந்து என்னால மீண்டு வர முடியலையே. நான் என்ன பண்ணட்டும்?” என்றாள் வேதனையாக.

“அதைத்தான் உன் கேரக்டரை உடைச்சு சரி பண்ணிட்டியே”

“நீங்க தப்பு செய்யலன்னு மட்டும்தான் ப்ரூஃப் பண்ணினேன், என்னால இழந்த அஞ்சு வருசம், மன உளைச்சல், உடல்வலி, இதுக்கெல்லாம் எதாவது பதில் இருக்கா?

அன்னைக்கு கோர்ட்டுக்கு வந்தப்போ நடக்கவே முடியாம வந்திங்களாம், அப்பா சொன்னதும் செத்துடனும் போல இருந்துச்சு. உங்களை நல்லவனு எப்படியாவது ப்ரூஃப் பண்ணனும், அதை செய்யாம சாகக்கூடாதுனு நினைச்சேன்.

ஆனா அப்போ எப்படி செய்யனு எனக்கு தெரியல, அக்காக்கு எதாவது ஆகிடுமோனு பயம். என் பயத்துக்கு நீங்க பலியாகிட்டிங்க. யார் என்ன சொன்னாலும் என்னை சமாதானம் செய்துக்க முடியலையே” என்று அழுதாள் மனமுடைந்து.

திருனேஷ்வரன் அமைதியாக இருக்க, பத்து நிமிடத்திற்கு மேல் அழுது கரைந்து திருனேஷ்வரனைப் பார்க்க, “முடிச்சிட்டியா?” என்றான்.

பொன்மணி தலைகுனிய, “நீ எதையும் மறக்காத. சமாதானமும் செய்துக்காத. கிளம்பு, உன்னை உன்னிடத்துல விட்டுடறேன்” என்றான்.

பொன்மணி பார்வை உண்ணாமல் விடுத்த உணவில் பதிய, கண்களோடு மனதும் கலங்கியது மீண்டும். சாப்பிட சொன்னால் கோபப்படுவான் என்று அறிந்தபோதும், “சாப்பிட்ட பின்னாடி போலாம்” என்றாள்.

“என் பொறுமையை சோதிக்காதடீ”

“நீங்க சாப்பிடாம இங்கயிருந்து கிளம்பமாட்டேன்” என்றாள்.

திருனேஷ்வரன் முறைக்க, “ப்ளீஸ்…” என்றாள் மன்றாடலாக.

“உன்கிட்ட எனக்கான தேவை சாப்பிட வைக்கிறது மட்டுமா?” என்றான்.

இல்லை என்பதாய் தலையசைக்க, “வேணாம்னு மறுக்க மறுக்க தாலி கட்டினோமே… என்னை பிடிக்க உனக்கு டைம் கொடுக்கனும்னுதான் விலகியிருக்கேன். ஆனா நீ… இப்படியே விலகியிருந்து என் நினைப்பை மாத்திடலாம்னு நினைச்சிட்டிருக்க.

எத்தனை வருசம் ஆனாலும் நீ நினைக்கிறது கண்டிப்பா நடக்காது. உன் நினைப்புலயே சாவேனே தவிர, வேற ஒருத்தி கையைப் பிடிச்சிட்டு மீண்டு வருவேனு மட்டும் நினைச்சிடாத” என கோபமாய் கத்தியவன்,

“வா போலாம், எனக்கு வேலையிருக்கு” என்றான் தளர்வாக.

இத்தனை வேதனையோடும், பசியோடும் திருனேஷ்வரனை அனுப்பி வைக்க மனமில்லாமல் போக, “பொறுமையா மிட்நைட் வரைக்கும் பேசனும்னு சொன்னிங்க, வந்து ஒரு மணிநேரம் கூட ஆகல, கிளம்பலாம்னு பிடிவாதம் பண்ணுறிங்க” என்று சொல்ல, “வேணாம்டீ… ஒழுங்கா வந்திடு” என்றான் மிரட்டலாக.

இவனுக்கு பதிலளிக்காமல், தென்றலுக்கு அழைத்தவள், “தென்றல், எனக்காக ஒன் ஹார் வரைக்கும் வெய்ட் பண்ணுங்க, அதுக்கு மேல ஆகிடுச்சினா காலைல வரேன், நீங்க லாக் பண்ணிட்டு தூங்குங்க” என்றாள்.

திருனேஷ்வரன் இமைக்காமல் முறைக்க, “வெண்பா வேற உங்களை நல்லா பார்த்துப்பேனு நம்பிட்டிருப்பா. சாப்பிட கூட வைக்கலனா அவ மனசு கஷ்டப்படாதா?” என்றாள் சன்னக்குரலில்.

திருனேஷ்வரன் அமைதியாகவே இருக்க, நாமே ஊட்டி விடலாம் என்று கை கழுவி வந்து உணவினை பிசைந்தவள், “இது ஆறிப்போய்டுச்சு, ஒரு மாதிரி நல்லாயில்ல, வேற ஆர்டர் பண்றேன், உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்றாள்.

“சொல்லமாட்டிங்களா? சரி நானே பண்றேன்” என்று மொபைலை எடுத்தவள், “இன்னைக்குத்தான பால் காய்ச்சியிருக்கோம்? அதனால வெஜ் சாப்பிடலாம், நாளைக்கு நான்வெஜ் சமைக்கறேன்” என்றவள், “சாப்பாடுதான் வேணுங்களா? இந்த நேரத்துக்கு கிடைக்குமா தெரியலையே?” என்றாள்.

அதற்கும் திருனேஷ்வரன் அமைதியாகவே இருக்க, “நீங்க தங்கியிருக்க இடத்துல சமைக்க பாத்திரம் இருக்கா? அங்க போலாமா?” என்றவள்,

“அங்க போக லேட்டாகும்னா நான் தங்கியிருக்க வீட்டுக்கே போலாமா? அங்க சமைக்க எல்லாமும் இருக்கு, பத்து நிமிஷத்துல செய்துடுவேன்” என்றாள்.

“போலாம் வா” என்றான்.

சம்மதித்த போதும் திருனேஷ்வரனின் முகம் இறுகியே இருக்க, “இல்ல, அங்க போனதும் என்னை விட்டுட்டு கிளம்பிடுவிங்க, இங்கையே சாப்பிட்டு போலாம், நான் ஆர்டர் பண்றேன்” என்று மொபைலை எடுக்கவே,

“நான் சாப்பிட்டேன்னா எல்லாம் சரியாகிடுமா?”

மொபைலில் உணவை ஆர்டர் செய்தபடி, “சரியாகாது, இனி சரி செய்யப்பார்ப்போம்” என்றாள் தலைகுனிந்த நிலையிலேயே.

“எப்படி சரி செய்வ? என்னை பார்க்காமலேவா?”

“இப்போதைக்கு நீங்க என்னை பாருங்க, பின்ன நானும் பார்ப்பேன்” என்றாள் சின்னக்குரலில்.

தன் மனதை இத்தனை வெளிப்படுத்தியும் தன்னைப் பற்றி யோசிக்கவில்லையே என்று பொன்மணி மீது அவ்வளவு கோபம் திருனேஷ்வரனுக்கு.

இனி சற்று நேரம் இவளோடு இருந்தாலும் அவள் மறக்க முடியாதபடி எதையாவது செய்திடுவோம் என்றுதான் கிளம்ப நினைத்தான்.

இதோ… அவள் சற்று இறங்கி வந்ததும் முன்பிருந்த கோபம் போய், அவள்புறம் சாயும் மனதை திட்டியபடி அவளிடம் சென்றவன், “உன் விசயத்துல ரொம்ப வீக்கா இருக்கேன். இது நல்லதுக்கு இல்லடீ, எதாவது செய்து என்னை சரி பண்ணு” என்றவன் தனது கையை விரிக்க அவனுள் ஒன்றினாள் பொன்மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!