Skip to content
Post Views: 6,977
அத்தியாயம் 14
அழைப்பு மணியை உபயோகிக்காமல் “பொண்ணுமணி, பொண்ணுமணி…” என இடைவிடாமல் கத்தினான் வெளியே நின்றபடி.
தான் தங்கியிருக்கும் இடம் தெரியாது, அருகே வந்தபின்னே போன் செய்வான் என்று நினைத்திருந்தாள் பொன்மணி. அதோடு வழக்கமாக நேரம் கழித்தே அலுவலகத்திலிருந்து கிளம்பும் திருனேஷ்வரன், இன்று வரவும் பத்து மணிக்கு மேல் ஆகும். அதற்குள் தென்றல், ஸ்வாதியை தூங்க அனுப்பிடலாம் என்றும் நினைத்திருந்தாள்.
Advertisement
நினைப்பிற்கு மாறாக திருனேஷ்வரன் குரல் இடைவிடாது ஒலிக்க, அத்தனை வேகமாக வந்து கதவை திறந்தாள் பொன்மணி.
“எப்போ வருவேனு பார்த்திட்டிருந்தியா? வேகமா வந்து கதவை திறந்த போல” என கண்ணிமைத்தபடி உள்ளே வந்தான்.
“சார்” என உண்டுகொண்டிருந்த தென்றலும் ஸ்வாதியும் எழுந்து நின்றனர் அதிர்ந்து விழித்தபடி.
Advertisement
இவர்கள் இங்குதான் தங்கியிருக்கிறார்கள் என்று திருனேஷ்வரன் அறிவான் ஆதலால், “சாப்பிடும் போது எதுக்கு எழறிங்க? உக்கார்ந்து சாப்பிடுங்க” என்று அதட்டி,
Advertisement
சர்ட்டின் மேல் பட்டனை கழற்றிவிட்டு, முழுகை சர்ட்டையும் தளர்த்தி மேலேற்றியபடி நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்து, “அந்த சேரையும் எடுத்து பக்கத்துல போட்டுட்டு தண்ணி எடுத்துட்டு வா, தாகமா இருக்கு” என்றான் உரிமையாக.
சேரை எடுத்துப்போடு பொன்மணி தண்ணீர் எடுக்க உள்ளே செல்ல, அதில் இரு கால்ளையும் வைத்து, தென்றல், ஸ்வாதி இருவரிடமும், “ஓஹ்… வீட்டு சமையலா? யார் சமைச்சது?” என்றான்.
“பொன்மணிதான் சார்”
Advertisement
“நல்லாயில்லையா? ஏன் அப்படியே வச்சிட்டிருக்கிங்க?”
“பொன்மணி எது சமைச்சாலும் நல்லா இருக்கும் சார், உங்களை இங்க எதிர்பார்க்கல, முழுங்க நினைச்சாலும் சாப்பாடு உள்ள போகமாட்டேங்குது” என்ற தென்றலுக்கு, இவரா பொன்மணியிடம் பேசியதற்கு திட்டினார் என்று பெரும் யோசனை.
பொன்மணி தண்ணீர் எடுத்து வர, வாங்கியவன் ஒரு சொம்பு நீரையும் பருகினான்.
“இவ்வளோ தண்ணி தாகம் இருந்தா எங்கையாவது குடிச்சிட்டு வரவேண்டியதுதான?” என்றாள் அக்கறையாக.
“உன் கையால வாங்கி குடிக்கிற மாதிரி வருமா?”
சின்ன விசயம், இதைப்போய் இத்தனை ஏக்கமாக சொல்கிறான் என்று பொன்மணி பார்த்திருக்க, “உனக்கு சின்ன விசயமா தோன்றது எனக்கு பெரிய விசயமா தோணுது. என்ன பண்ண?” என்றான் இலகுவாக.
ஐந்து வருட சிறை தண்டைனைக்குப் பின்னே தற்போதும் தானாக உண்டு, துவைத்து என தனியாகத்தானே இருக்கிறான் என்று பொன்மணி முகம் வாடியது.
“சும்மா சும்மா முகத்தை சுருக்காத. உன்னோட எனக்கு கிடைக்கிற டைமே ரொம்ப ரொம்ப கம்மி” என்றவன், “சரி வா” என்று எழுந்து வெளியே செல்லப்போக, எங்கே அழைக்கிறான்? இங்குதானே வர வேண்டும் என்றான்? என புரியாமல் பின்னோடு சென்று, “எங்க போறோம்?”
“உன்னோட தங்கறதுக்கு நீதான் அன்னைக்கே பர்மிஷன் கொடுக்கலயே… அதான், நான் வீடு பார்த்துட்டேன். சும்மா தொணதொணக்காம வா, பேசக் கூட தெம்பில்ல” என்றான் கட்டளையாக.
பொன்மணி நின்றேயிருக்க, “என் பொண்ணு மணியே… இன்னைக்கே வாழ ஆரம்பிச்சிடமாட்டேன், எதோ பேசனும்ன, இவங்க முன்னாடி பேச முடியாது. அதைவிட முக்கியமா எனக்கு பசிக்குது. வரியா?” என்றான் கடுப்பாக.
“ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்று மொபைல், மற்றும் பர்ஸ் எடுத்துக்கொண்டு வர, பைக்கை முறுக்கியவனின் முகத்தில் அத்தனை பொலிவு.
இவனின் பொலிவில் பேச நினைத்ததை பேசி விடுவோமா என்று அச்சம் உண்டானது பொன்மணிக்கு. பெரும் பதட்டத்தோடு பைக்கில் அமர, “தோளை பிடிச்சிக்கிட்டா குறைஞ்சிடுவியா?” என சிடுசிடுத்தபடி பயணிக்கலானான்.
பத்து நிமிட பயணத்திற்கு பிறகு ஓர் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தி, “இறங்கு” என்றான்.
பொன்மணி இறங்க, தானும் இறங்கியவன் பொன்மணிக்கு முன்னே சென்று கதவை திறந்து உள்ளே சென்று, “வா” என வரவேற்றான் சிரம் தாழ்த்தி.
பொன்மணி உள்ளே வந்ததும் கதவை தாழிட, பொன்மணியின் பதட்டம் ஏகத்திற்கும் அதிகமானது.
சமாளிக்க வேண்டுமே என யோசித்தவளுக்கு அருகிலுள்ள உணவு பொட்டலம் தென்பட, “முதல்ல சாப்பிடுங்க” என்றாள்.
“எவ்வளோ பசியா இருந்தாலும் இதை பிரிச்சு சாப்பிடறது அவ்வளோ சலிப்பா இருக்கு, இதுக்குத்தான் ஹோட்டல்லயே சாப்பிட்டுடுவேன், எல்லாம் எடுத்து பிரிச்சி வைக்கிறியா?”
திருனேஷ்வரன் சொன்னதுபோல அனைத்தும் எடுத்து வைத்து, “போய் கை கழுவிட்டு வாங்க” என்றாள்.
“அதுக்கும்தான் சலிப்பா இருக்கு, ஊட்டி விடறியா?” என்றான் முன்பை விட அதிகமான சலிப்போடு.
தன்னை அவன்பால் சாய்க்கவோ, சந்தோசத்திற்காகவோ கேட்கவில்லை என அவனின் பாவனையிலேயே புரிய, பொன்மணி கண்கள் கலங்கிவிட்டது.
“பொண்ணு மணியே… ஊட்டி விடலனாலும் பரவால்ல, தயவு செய்து அழாத” என்று திட்டியபடி கை கழுவி வந்தவன், “நீயும் சாப்பிடு” என்றான்.
“இல்ல எனக்கு பசியில்ல”
“ப்ச்… தினமும் தனியாத்தான் சாப்பிடறேன், இன்னைக்கு உன்னோட சாப்பிடலாம்னு பசியோட வந்துருக்கேன், போய் கை கழுவிட்டு வா”
இவன் வாங்கி வந்ததை உண்டால் வாழ விருப்பம் என்று நினைத்திடுவான், தனியாகவும் உண்ண மறுக்கிறான், அதீத பசியென்கிறான் என்று பொன்மணி தவித்திருக்க, “என்ன? சாப்பிடற ஐடியா இருக்கா இல்லையா?” என்றான்.
உண்ண மறுத்தால் பசியோடே கிளம்பிடுவான் என்ற பயத்தில் “சாப்பிடலாம்” என்றவள் தனக்கும் பிரித்து வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
“என்ன? இன்னைக்கு கயிறு வெளில தெரியுது? தென்றலுக்கும் ஸ்வாதிக்கும் உனக்கு கல்யாணம் ஆனது தெரியுமா?”
தெரியும் என்பதாய் தலையசைக்க, “அதை கட்டினவன் யாருனும் தெரியுமா?” என்றான்.
தெரியாது என்பதாய் தலையசைக்க, “ஓ” என்றான் ஏமாற்றம்போல.
“உங்க நல்லதுக்காகத்தான் சொல்லல”
“எனக்கு எது நல்லதுனு உனக்கு தெரியுமா?”
“எனக்கு தெரியும், உங்களுக்குத்தான் உங்க உயரம் தெரியல” என்றவள், இப்பேச்சினை பிறகு பேசிக்கொள்ளலாம் என்று, “முதல்ல சாப்பிடுங்க” என்றாள்.
“ஆக… நீ என்னோட வாழுற எண்ணத்துல இல்ல, அப்படித்தான?” என்று சோற்றிலிருந்து கையை உதற, “ப்ளீஸ்… ப்ளீஸ்… சாப்பிடுங்க” என்றாள் கெஞ்சலாக.
“வயிறு, மனசு எல்லாமும் நிறைஞ்சிடுச்சு” என்றெழுந்தவன், “உனக்கு எதோ பேசனும்ன, எனக்கு அட்வைஸ் பண்ணவா இருந்தா அது எனக்கு தேவையில்ல. வேற எதாவது பேசனும்னா சொல்லு”
உண்மையில் ராஜ்குமாரின் தங்கையை மணக்க எடுத்துரைக்கவே திருனேஷ்வரனை அழைத்திருந்தாள். ஆனால் அதை சொல்லும் தைரியம் இல்லாமல் போக, “இங்கதான் தங்கியிருக்கிங்களா? கட்டில், பாத்திரம்னு எதுவுமே இல்ல” என்றாள்.
பேச்சை மாற்ற எண்ணுகிறாள் என்று புரிந்தபோதும், “கட்டில் இருந்தா மட்டும்” என்றான் அர்த்தமாய் பார்த்தபடி.
திரும்பியவளுக்கு கண்ணீர் கரகரவென இறங்கவே, பின்னால் வந்து நின்றவன், “நீ என்னை அவாய்ட் பண்ற. எனக்கு அது புரியாம இல்ல, ஆனாலும் என் மனசு உன்னைத்தான் தேடுது.
ஒரு கட்டத்துல உன் விருப்பப்படி விலகி போனாலும் போவேன், ஆனா அப்போவும் இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துப்பேனு மட்டும் நினைச்சிடாத” என்றான் அத்தனை உறுதியாக.
பொன்மணி தவிப்பாக பார்க்க, “இந்த கண்கள் எனக்காகத்தான் உயிரை சுமந்திட்டிருக்கு” என்று அவளின் கண்களை சுட்டிக்காட்டியவன், “இந்த இதயம் என் நல்வாழ்வை பார்க்கத்தான் துடிச்சிட்டிருக்கு” என்று அவளின் நெஞ்சையும் ஒற்றை விரலால் அழுத்தமாக தொட்டே சுட்டிக்காட்ட, வெடவெடத்துப் போனாள் பொன்மணி.
“அன்னைக்கு உன் வீட்டுக்கு வரும்போது உன்னை கல்யாணம் செய்துப்பேனு நினைச்சே பார்க்கல, ஆனா அந்த நிமிஷம் உன்னை கல்யாணம் செய்துக்காம அங்கயிருந்து நகரக்கூட கூடாதுனு உறுதியா மனசு சொன்னுச்சு. நீ வேணாம்னு சொல்லியும் உன்னை கட்டிக்கிட்டேன்.
இப்போ கூட இங்க வரும்போது வயிறு மட்டும்தான் பசிச்சது. ஆனா இப்போ” என்று நிறுத்த பெரும் பதட்டத்தோடு பார்த்தாள் பொன்மணி.
“உன்னை பார்க்காத வரை ஒரு மைண்ட் செட்ல இருக்கேன், பார்த்த பின்ன எண்ணமெல்லாம் ஏகத்துக்கும் மாறுது. ஆனா உன் சம்மதம் இல்லாம சின்ன கிஸ் கூட கொடுக்கமாட்டேன், வாங்கிக்கவும் மாட்டேன். பயப்படாத” என தேற்ற, மனதளவில் வலுவிழந்தாள் பொன்மணி.
“எத்தனை வருசத்துக்கு என்னை தள்ளி வைக்கப்போறனு பார்க்கலாம். நீ என்னை விலகி இருக்கிறதுனால ஏமாற்றம் என்னவோ எனக்குத்தான். ஆனா அது என்னை விட உனக்குத்தான் அதிகமா வலிக்கும். எத்தனை வருசம் ஆனாலும் உனக்காக காத்திட்டு இருப்பேன்.
இத்தனை நாள் கட்டினவனை தள்ளி வச்சிட்டோமேனு நீதான் அதிகமா வருந்துவ. வாழ்க்கை ரொம்ப சின்னது, தேவையில்லாத விசயங்களை நினைச்சிக்கிட்டு தேவையான விசயங்களை நிறைவேத்திக்க தவறினா, நஷ்டம் நமக்குத்தான். யாருக்காகவும் காலம் நிற்காது”
“என்னால அது முடியுமானு தெரியலையே” என வருந்த, “அதை வாழ்ந்து பார்த்தாதான தெரியும்? இந்த வீட்டை நமக்காக பார்த்துருக்கேன். இங்கயிருந்து வேலைக்கு போக உனக்கும் சிரமம் இருக்காது.
என்னோட வாழ எப்போ சம்மதிப்பனு காத்துட்டிருக்கேன். காலைல காஃபி கொடுக்க, குளிக்க சொல்ல, வேலைக்கு டைம் ஆச்சுனு சொல்ல, நான் சமைக்கிறேன், நீ துணி துவை, வீட்டை பெருக்குனு என்னை அதட்டி வேலை வாங்கனு இப்படி நிறைய விசயத்துக்கு உன்னை தேடுது மனசு” என்றான்.
“ஏங்க” என்றவளுக்கு திருனேஷ்வரனை வருடிக்கொடுக்கும் ஆவல் எழ, முயன்று கட்டுப்படுத்தினாள்.
கையை பிசைந்து கொண்டிருப்பவளை பார்த்தவன் மனது ஜில்லிப்பாகிட, “என்னை நீ ரொம்ப படுத்துற, அன்னைக்கு ஹோட்டல்ல வச்சு என்னை வேணானு சொன்னப்போ அவ்வளோ கோபம் வந்துச்சு. ஆனா உன்னை நேர்ல பார்த்ததுக்கப்புறம் அந்த கோபமெல்லாம் எங்க போச்சுனே தெரியல” என்றான் பாவம்போல்.
“சாப்பாடு சாப்பிடல, இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க”
“ம்ஹும்… சாப்பிடற மூடும் போச்சு, பசியும் போச்சு, இனி ஒன்னும் உள்ள இறங்காது”
“இரண்டு வாய்தான் சாப்பிட்டிங்க, அவ்வளோ பசில வந்திங்க”
“இந்த இன்ஸ்டால்மண்ட் அக்கறை எனக்கு தேவையில்ல. என்னோட இங்க நிரந்தரமா வந்த பின்ன காட்டு” என்றவன், நேரம் பார்த்து, “தென்றல் ஸ்வாதிக்கு போன் செய்து வர லேட்டாகும்னு சொல்லு, உனக்காக முழிச்சிட்டிருக்க போறாங்க” என்றான்.
“இப்போவே மணி ஒன்பதரை”
“ஒன்பதரைதான? நாளைக்கு சன்டேதான, லேட்டா போய்க்கலாம்”
“இல்ல… லேட் நைட்ல உங்களோட போனா, ஹவுஸ் ஓனர்க்கு பதில் சொல்ல வேண்டி வரும்”
“சொல்லு… இல்லைனா என்னை கூப்பிட்டு விடு, என் பொண்டாட்டியோட வெளில போக உன் அனுமதி எதுக்குனு கேட்குறேன். என்னவானாலும் இன்னும் கொஞ்ச நேரம் இங்கதான் இருந்தாகனும், முக்கியமான வேலையிருக்கு”
“போன்ல என்னனு சொல்றது? நான் நேர்ல போயே பேசிக்கிறேன்”
“சரி வா” என்று கிச்சனுக்கு அழைத்துச் சென்றவன், “பால் காய்ச்சிடலாமா? இன்னும் கொஞ்சம் நேரம் போனா பால் கெட்டுடப்போகுது” என்றான்.
“இந்த நேரத்துக்கா? நாம இரண்டு பேர் மட்டுமா? தாலி வாங்கினதுக்கே அங்க சண்டையாம், தனியா பால் காய்ச்சினோம்னு தெரிஞ்சது… அவ்வளோதான். அதெல்லாம் வேணாம்”
“சரி நீ காய்ச்சாத, நான் பண்றேன், எனக்கு அந்த பாக்ஸை மட்டும் பிரிச்சு பாத்திரத்தை எடுத்துக் கொடு” என்றான்.
“வேணாமே”
“எதைத்தான் நான் சொல்லி கேட்டுருக்க?” என்று கோபமாக சொல்லி, பாத்திரங்கள் அடங்கிய சிறிய பெட்டியை முறையில்லாமல் பிரிக்க ஆரம்பித்தான்.
எப்படியானாலும் இன்று பால் காய்ச்சாமல் விடமாட்டான் எனப்புரிய, “விடுங்க, இப்படி பிரிச்சா பிரிக்க முடியாது” என்று தானே பிரித்து அதில் பால் காய்ச்ச தேவையான சிறிய குண்டாவை எடுத்தாள்.
error: Content is protected !!