Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 2.1

அத்தியாயம் 2

திருனேஷ்வரனின் தந்தை பெரியளவில் முதலாளி என்றெல்லாம் இல்லை. காமலாபுரம்(சேலம்) அவனின் சொந்த ஊர். அங்கே பூர்வீக காடு உள்ளது. திருனேஷ்வரனின் பாட்டி தாத்தா விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால் விவசாயத்தில் பெரிதாய் வருமானம் இல்லாமல் போகவே, விவசாயத்தை நம்பி தனது மகன் இருந்தால் அவனின் எதிர்கால வாழ்வு நன்றாக இருக்காது என்றெண்ணி படிக்க வைத்தனர்.



Advertisement

ஆனால் திருனேஷ்வரனின் தந்தைக்கு படிப்பில் பெரிதாய் நாட்டமில்லாமல் போகவே பத்தாம் வகுப்பிற்கு பின்னே வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

சேலத்தில் உள்ள பெரிய ஜவுளிக்கடையில் பணிக்கு சேர்ந்தார். சில வருடங்களுக்கு பின்னே தனியாக துணி விற்க ஆரம்பித்தார். சைக்கிளில் ஆரம்பித்த வியாபாரம், மோட்டார் சைக்கிள் என்று மாறி, சிறிய கடை வைக்கும் அளவிற்கு வளர்ந்தார். சில வருடம் கழித்து, சிறிய வீட்டை கட்டினார்.

கட்டியது சிறிய வீடென்றாலும், இச்சிறு வயதில் மகன் கட்டியது மாடி வீடல்லவா? விவசாய நிலம் இருந்தபோதும் பல காலமாக ஓட்டு வீட்டில் வசித்தவர்களுக்கு மாடிவீட்டில் வசிக்கிறோம் என்பது மிகப்பெரிய சாதனையாக இருந்ததோடு, தங்கையின் திருமணத்திற்கு தனது சேமிப்பிலிருந்து கணிசமான தொகையை பெற்றோரிடம் கொடுத்து பெற்றவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார் திருனேஷ்வரனின் தந்தை.

Advertisement

மகளுக்கு மனம் முடித்து இரண்டு வருடம் கழித்து மகிழ்வோடு பெண் பார்க்க ஆரம்பித்தனர் மகனுக்கு. வில்வராஜின் அன்பான குணத்திலும் கடுமையான உழைப்பிலும் ஈர்க்கப்பட்டு, பிறத்தியில் பெண் தேடுவீர்களா என்று உரிமை சண்டை போட்டு தனது மகளான செல்லம்மாளை மணம் முடிக்க கேட்டுக்கொண்டார் வில்வராஜின் அத்தை.

Advertisement

அத்தையின் வேண்டுகோளில் தனது தந்தைக்கும் விருப்பம் எனப்புரிந்த வில்வராஜ் செல்லமாவின் விருப்பத்தை கேட்க சொன்னார்.

பின்னே அனைவரின் ஆசியோடு வில்வராஜ் செல்லம்மாள் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்து நான்கு வருடம் கழித்துதான் திருனேஷ்வரன் பிறந்தான். அவனிற்கு பின்னே பத்து வருடம் கழித்துதான் திருனேஷ்வரனுக்கு தங்கை பிறந்தாள்.

மகன் பெரியவனாகிவிட்டான் என்று செல்லமாளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள பெரும் சங்கடம்தான். ஆனால் பெண்பிள்ளை மீதான கணவனின் ஆசைக்காக மகளாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு கருவை சுமந்தார்.

Advertisement

செல்லம்மாளின் வேண்டுதல் வீண் போகவில்லை. வெண்பா பிறந்தாள். மகளை கொண்டாடி தீர்த்தார் வில்வராஜ். மகள் பிறந்த பின்னே நிறைய செல்வம் சேர்க்க நினைத்து வியாபாரத்தை பெரிதாக்கினார்.

ஆனால்  வில்வராஜ் நினைத்தது போல வியாபரம் ஆகவில்லை. முதலீடு முடக்கமானது. சேமிப்பிலிருந்து முதலீடு போட்டதால் கடன்காரர்களுக்கு பதில் சொல்லும் நிலை வரவில்லை.

எனவே பின்வரும் விளைவுகளை யோசிக்காமல் கடன்வாங்கி முதலீடு செய்ய நினைத்தார். செல்லம்மாள் ஒப்புகொள்ளவில்லை. பேராசை வேண்டாம். நஷ்டம் நிகழ்ந்தால் நம்மால் தாங்க முடியாதென்று சொல்லிப் பார்த்தார்.

வில்வராஜ் கேட்டால்தானே? மனைவிக்கு தெரியாமல் கடன் வாங்கி நிறைய ஆடைகளை இறக்குமதி செய்தார். ஆனால் வியாபாரம் முதலீட்டை கூட எடுக்கவில்லை.

ஐந்து மாதம் சமாளிக்க முடிந்தது. அதன் பின்னே அன்றாட தேவைக்கே பணமில்லாமல் போனது.

இந்த நிலையில் வருமானம் சீராகும் வரை நான் வேலைக்கு போகிறேன் என கணவனிடம் அனுமதி கேட்டார் செல்லம்மாள். மனைவியை வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை என்றபோதும், நிலை தாழ்ந்த பின்னே கடன் கொடுக்கவும் ஆளில்லாத சமயத்தில் வீண் பிடிவாதம் வேண்டாம் என்று நிதர்சனத்தை உணர்ந்து செல்லம்மாள் வேலைக்கு செல்ல அனுமதித்தார் வில்வராஜ்.

தனியார் பள்ளிக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார் செல்லம்மாள்.

பணி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னும் திருனேஷ்வரனிடம் நேரம் செலவிட முடியாத நிலைதான் செல்லம்மாவிற்கு. ஆம்… காட்டு வேலை கூட செய்திடலாம். உன் மகளை பார்த்துக்கொள்வது பெரும் சிரமமாக இருக்கிறது என்பார் மாமியார்.

பால் மணம் மாறாத ஐந்து மாத குழந்தை அல்லவா? தன்னை பிரிந்திருப்பது குழந்தைக்கும் சிரமம். அறுபதை தாண்டியிருக்கும் மாமியாருக்கும் குழந்தையை பார்த்துக்கொள்வது சிரமம் எனப்புரிந்தது செல்லம்மாவிற்கு.

பணி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தால் வெண்பாவை பார்த்துக்கொள்வதற்கும், வீட்டு வேலை செய்வதற்குமே நேரம் சரியாக இருந்தது செல்லம்மாவிற்கு.

சிறு வயதிலிருந்தே காலையிலும், மாலையிலும் திருனேஷ்வரன் அன்னையோடுதான் பள்ளிக்கு செல்வான். அதிக நண்பர்கள் கூட கிடையாது. விளையாட்டு, படிப்பு, என அனைத்தும் அன்னையோடுதான் செய்வான்.

எந்நேரமும் அன்னையோடு ஒட்டிக்கொண்டிருந்த திருனேஷ்வரனுக்கு ஏக்கமாகி போகவே படிப்பில் கவனம் குறைந்தது.

இது செல்லம்மாவிற்கும் புரிந்தது. ஆனால் மகனோடு முன்புபோல் நேரத்தை செலவிடமுடியாத சூழ்நிலை இருக்கவே, மகனின் எதிர்கால வாழ்வை நினைத்து விடுதியில் சேர்க்க ஆலோசித்தார் கணவனிடம்.

தான் படிக்காததால்தானே இத்தனை சிரமம்? இப்படி சிரமம் மகனுக்கு வரக்கூடாது. அவன் அதிகாரி வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மனைவியின் யோசனைக்கு சம்மதம் தெரிவித்தார் வில்வராஜ்.

விடுதியின் சூழல் பிடிக்கவேயில்லை திருனேஷ்வரனுக்கு. அன்னை தன்னை கவனிக்கவில்லை என்றாலும், வீட்டில் அங்குமிங்கும் கண்முன்னே நடமாடிக்கொண்டிருப்பார். தற்போது பார்க்கக்கூட முடியாத நிலையை அறவே வெறுத்தான்.

பேச்சு வரவில்லை என்றபோதும் பள்ளிவிட்டு வந்ததும் தன்னைப் பார்த்து ஆனந்தமாக சிரிக்கும் மழலை மணம் மாறாத தங்கையின் தரிசனத்திற்காகவும் ஏங்கிப்போனான்.

விடுதி வேண்டாம் என்று பிடிவாதம் செய்தான் திருனேஷ்வரன். இரண்டு நாள் சொல்லிப்பார்த்தார். பின்னே கெஞ்சினார். திருனேஷ்வரன் பிடிவாதம் தளரவில்லை. அழுதே கரைந்தான்.

வீட்டின் சூழ்நிலையை சொல்லி, அம்மா நிலையை நீயே புரிஞ்சிக்கலைனா நான் என்னதான் பண்ணட்டும்? என்று செல்லம்மாவும் அழவே, அன்னையின் அழுகையை சகிக்க முடியாமல் விடுதிக்கு செல்ல சம்மதித்தான்.

முதல் இரண்டு மாதம்வரை வார இறுதியில் மகனை காண செல்வார்கள் வில்வராஜும், செல்லம்மாவும். பின்னே படிப்படியாக அதுவும் குறைய ஆரம்பித்தது.

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறைகளுக்கு வீட்டிற்கு வருவதோடு சரி. உணவு சரியாக கொடுக்கிறார்களா? விடுதி மாணவர்களால் ஏதும் தொல்லை இருக்கிறதா? என்று விசாரிப்பார்கள்.

அதிலெல்லாம் பிரச்சனை இல்லை. விடுதியில் தங்கியிருப்பதுதான் பிடிக்கவில்லை என்பான் திருனேஷ்வரன். மகனின் வாடிய முகத்தில் மனம் தவித்தாலும் ஆறுதல் சொல்வார்களே அன்றி மாற்று வழி செய்யவில்லை பெற்றோர்.

பத்தாம் வகுப்பிற்குமேல் திருனேஷ்வரனுக்கும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள விசயங்கள் இல்லாமல் போனது. அவ்வப்போது மதிப்பெண்களை பகிர்வான். பனிரண்டாம் வகுப்பிற்கு பின்னே  கல்லூரிப் படிப்பை சென்னையில் சென்று படித்தான்.

நான்கு வருடங்களுக்கு பிறகு அங்கேயே பிரபல கம்பெனியில் வேலை கிடைக்கவும் படிப்பை முடித்தும் கூட பெற்றோரோடு சேர்ந்து வசிக்கும் வாய்ப்பில்லாமல் போனது.

லட்சத்தில் சம்பளம், ஆனால் இவனின் செலவு மிகக்குறைவுதான் ஆகையால் பெரும்பகுதியை பெற்றோரிடம் கொடுத்துவிடுவான். வில்வராஜிற்கும் செல்லம்மாவிற்கும் பேரானந்தம்தான்.

இரண்டு வருடம் வேலைக்கு சென்றவனுக்கு அடுத்த பெரிய வாய்ப்பாக பல மடங்கு சம்பள உயர்வில் வேறொரு இடத்தில் வேலை கிடைத்தது.

திருனேஷ்வரன் எண்ணிய இலக்கை அடைய சில வருடங்களிலேயே தனது குடும்பத்தை மேல்தட்டு வர்கத்தினருக்கு இணையாக உயர்த்திவிடலாம், முக்கியமாக தந்தையை துணிக்கடை வியாபாரத்திலிருந்தும், அன்னையை பள்ளி ஆசிரியை பணியிலிருந்தும் ஓய்வு பெறச்செய்யலாம் என்ற மகிழ்வோடு இருந்தான்.

இரண்டு வருடத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்கியதுமே பெற்றோரை ஓய்வெடுக்க வலியுறுத்தினான். மகளுக்கு பனிரண்டு வயதாகிறது, இதுவரை ஏதும் சேர்த்து வைத்த தில்லை. வரவிற்கும் செலவிற்குமே போதாத குறையாக இருக்கிறது.

இனியாவது மகளுக்கு சேமிக்க ஆரம்பிக்கனும். தற்போது நீ கொடுக்கும் பணம் பேருதவியாக இருக்குமென்றாலும் பெற்றோர்களாக எங்களுக்கு அந்த கடமை இருக்கிறது. உடம்பில் தெம்பிருக்கும்வரை உழைக்கிறோம் என்றுவிட்டனர்.

இனி இப்படியான சாக்குபோக்கு சொல்ல முடியாத அளவிற்கு தனது சம்பளம் உயரப்போகிறது. இனி பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கைக்கு நிறைய சேர்க்கவேண்டும் என்ற பல ஆசைகளில் மிதந்தான்.

நல்ல விசயத்தை கைப்பேசியில் பேசினால் நன்றாக இருக்காது. நேரில் சென்றுதான் சொல்லவேண்டும் என்று ஊருக்கு வந்தான்.

பத்து நாள்கள் பெற்றோருடன் மகிழ்வோடு இருந்தான். நாளை சென்னை சென்று சில வேலைகளை முடித்து டெல்லி சென்றால் மீண்டும் ஊருக்கு வர பல மாதங்கள் ஆகும் என்பதால் காலையிலேயே பால்யகாலத்து நண்பனை பார்க்க சென்றிருந்தான்.

அன்றெல்லாம் நண்பர்களோடு இருந்தான். அடுத்தநாள் காலை சில அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக கிளம்பியவன், மதியம்போல் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான்.

தெருவே களேபரமாக இருந்தது. திருனேஷ்வரன் விசாரித்ததில் பக்கத்து தெருவில் வசிக்கும் பொன்மணி எனும் சிறு பெண்ணை  யாரோ கற்பழித்துவிட்டார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமணையில் இருக்கிறாள். போலீஸ் குற்றவாளியை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றனர் அக்கம் பக்கத்தினர்.

சிறு வயதிலிருந்தே விடுதியில் படித்தவன் ஆதலால் பக்கத்து தெருவில் வசிக்கும் பொன்மணியை சட்டென நினைவிற்கு வரவில்லை திருனேஷ்வரனுக்கு.

ஆனாலும் சிறு பெண் என்றதும் பதறியவனாய், “அச்சோ” என்று வருந்த, திருனேஷ்வரனிடம் வந்த காவலர்கள் திருனேஷ்வரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசயம் திருனேஷ்வரனின் பெற்றோருக்கு தெரிய வரவே, “என் மகன் அப்படிபட்டவன் இல்லைங்க, அவனை விட்டுடுங்க” என்று மன்றாடினார்கள்.

செல்லம்மாவின் அழுகையெல்லாம் அங்கே ஒரு பொருட்டாகவே இல்லை. காவலர்களால் துரத்திவிடப்பட்டார் வீட்டிற்கு. அதன்பின்னே நடந்த கசப்பான சம்பவங்கள் திருனேஷ்வரனை உயிரோடு வதைத்தது எனலாம்.

சிறுமியின் கற்பழிப்பு வழக்கில் பலப்பல மாற்றங்கள்… முதலில் கற்பழிப்பு நடந்திருக்கிறது என்றனர், பின்னே கற்பழிப்பு நடக்கவில்லை, முறையற்ற தீண்டல்கள் மட்டுமே நடந்திருக்கிறது என்றனர்.

குற்றத்தின் கோணம் மாறுபட்ட போதும் திருனேஷ்வரனால் தண்டனையிலிருந்து தப்ப முடியவில்லை. இதோ திருனேஷ்வரனின் தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவந்து ஒருவாரம் ஆகிறது.

இன்னும் சேலத்திற்கு செல்லவில்லை. பெற்றோரிடம் கைப்பேசியிலும் கூட பேசவில்லை. டி.எஸ்.பி ரூபலஷ்மியின் உதவியோடு தனியாக வசிக்கிறான்.

உணவு, உடை, தங்க இடம் என அனைத்து வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்தவர் ஆதலால் அவர் மீதான கசப்பையும் திருனேஷ்வரனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வரவே, அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்க மேடம்” என்றான் வழக்கமான பணிவோடு.

மகள், மகன் படிக்கும் பள்ளியின் பெயரை சொல்லி, “டிரைவர் திடீருனு லீவ் கேட்டுட்டார், பசங்களை கொஞ்சம் பிக்கப் பண்ணிட்டு வந்துடுறிங்களா?” என்றார் கோரிக்கையாக.

ரூபலஷ்மியின் இப்படி பேச்சு திருனேஷ்வரனுள் கலவரத்தை உண்டாக்கியது. சிறையில் அந்த பெரியவர் சொன்னது சரியாக இருக்குமோ என்று யோசிக்க அச்சோ என்றானது.

ஒருவேளை அப்படி இருந்தால் மேடமை எப்படி சமாளிப்போம் என்ற பெரும் கவலை எழ, ரூபலஷ்மியின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் இருந்தான்.

“என்ன திருனேஷ்வரன்? எனக்கு ஹெல்ப் பண்ணமாட்டிங்களா?” என்ற குரலில் சுதாரித்தவன், “ச்சே ச்சே… அப்படிலாம் இல்லைங்க மேடம். உங்க பசங்க யார்னும் தெரியாது, என்னையும் அவங்களுக்கு தெரியாது, அதோட என்கிட்ட டூவீலர் ஏதும் இல்லையே, அதான் எப்படி கூட்டிட்டு வரதுனு யோசிச்சிட்டிருந்தேன்” என்றான்.

ரூபலஷ்மி அனைத்தும் ஏற்பாடு செய்திருப்பார் என்றறிவான். ஆனால் பதில் சொல்லி ஆக வேண்டுமே என இவ்வாறு சமாளித்தான்.

திருனேஷ்வரன் நினைத்தது போலவே ரூபலஷ்மி ஏற்பாடு செய்திருந்தார். “இதெல்லாம் யோசிக்காம இருப்பேனா திருனேஷ்வரன்? இன்னும் அஞ்சு நிமிஷத்துல குகன் பைக் கொண்டுவந்துடுவார்” என்றவர், திருனேஷ்வரன் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்காமல், “நான் ஒரு முக்கியமான வேலைல இருக்கேன். பசங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு மெஸேஜ் பண்ணுங்க” என்று இணைப்பை துண்டித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!