Skip to content
Post Views: 7,835
ரூபலஷ்மி இணைப்பை துண்டித்ததும் வீட்டின் முன்னே பைக் சத்தம் கேட்டது.
தன்னிடம் சொல்லியிருந்தால் நானே சென்று பைக்கை எடுத்து வந்திருப்பேனே என்று நொந்துகொண்டிருக்க, அழைப்புமணி ஒலித்தது.
திருனேஷ்வரன் வெளியே வரவும், “மேடம் பைக் கீ கொடுக்க சொன்னாங்க சார்” என்று சாவியை நீட்டினார் கான்ஸ்டபிள் குகன்.
“என்னங்கய்யா சார்னெல்லாம் சொல்றிங்க? உங்களை விட நான் ரொம்ப சின்னவன், திருனேஷ்வரனு சொல்லுங்க ப்ளீஸ்” என்றான்.
Advertisement
“பரவால்லைங்க சார்” என்று திருனேஷ்வரனின் கையில் சாவியை திணித்து வேறெதுவும் பேசாமல் கிளம்பியிருந்தார் குகன்.
கான்ஸ்டபிளிடம் பைக்கை கொடுத்தனுப்பியிருப்பதால் சங்கடம் மாறி தற்போது கோபம் வந்தது திருனேஷ்வரனுக்கு. அதுவும் குகன் தன்னை சார் என்று அழைத்ததில் பெரும் சங்கடம் ஆனதோடு, இந்த சிக்கலில் இருந்து வெளிவர வேண்டுமானால் தனக்கான பாதையைப் பற்றி விரைந்து யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
சற்று நேரத்திற்கு பிறகு, எதுவாகினும் தற்போது மேடம் சொன்ன பணியை செய்யாமல் இருக்க முடியாதென்று ரூபலஷ்மி சொன்ன பள்ளிக்கு சென்றான்.
Advertisement
பள்ளி நேரம் முடிந்து சோர்வாகவும், மகிழ்வோடும், கதைகள் பேசியபடியும் என பலவிதமான பரிணாமங்களில் மாணவர் செல்வங்களைப் பார்த்ததும் திருனேஷ்வரனின் மனம் இலகுவானது.
Advertisement
தனது பையை தூக்கமுடியாமல் தரையோடு இழுத்தபடி வந்துகொண்டிருந்த குழந்தையிடம் சென்றவன், “குட்டிம்மாக்கு பேக் தூக்க முடியலையா?” என்றான் குழந்தையின் உயரத்திற்கு குனிந்தபடி.
“ம்.. தொம்ப வெய்ட்டா இக்கு” என்றது மழலையில்.
“அச்சோ…” என வருந்தியவன், “உங்களை கூட்டிட்டு போக யார் வருவாங்க?” என்றான்.
Advertisement
“ஆத்தோமேன்”
“ஓ… ஆட்டோல போவிங்களா? சரி வாங்க நான் கூட்டிட்டு போய் விடறேன்” என்று குழந்தையையும் பையையும் தூக்கிக்கொண்டவன், குழந்தை காட்டிய ஆட்டோமேனிடம் சென்று “ஓரெட்டு க்ளாஸ்ல வந்து கூட்டிட்டு போகக்கூடாதா பாஸ்? எல்.கேஜ் படிக்கிற குழந்தை… எப்படி இரண்டு பேகை தூக்கிட்டு இவ்வளோ தூரம் வரும்?” என்றான் சிறு அதட்டலாக.
திருனேஷ்வரனின் உயரம், கூரிய பார்வையை நோட்டமிட்ட ஆட்டோ ஓட்டுனர், போலீஸாக இருக்குமோ? இல்லையேல் குழந்தையின் உறவினராக இருக்குமோ என்ற பயத்தில், “இனிமே க்ளாஸ்க்கு போய் கூட்டிட்டு வந்துடுறேன் சார்” என்றார் தன்மையாகவே.
“ம்” என்று குழந்தையின் பையை உள்ளே வைத்து, குழந்தையையும் அமர வைத்து பைக் நின்றிருக்கும் இடத்திற்கு வந்ததும், “ஹாய் அண்ணா…” என்றவள் “ஸ்…” என தவறான வார்த்தையை சொல்லியதுபோல் பாவனை செய்து, “ஹாய் சார்… ஐயம் யுகதி, இவன் என் தம்பி யுகன். எங்களை அழைச்சிட்டு போக வந்தவர் நீங்கதானே? உங்க நேம் திருனேஷ்வரன். ஆமாவா?” என்றாள் சரியாக.
“ம்… திருனேஷ்வரன்தான். எப்படி கண்டுபிடிச்சிங்க?” என்றான் வியப்பாக.
“சிக்ஸ் ஃபீட்க்கு மேல இருக்கும் உங்க ஹைட், லென்த்தி ஐபுரோ, கையில் இருக்கும் சுருள் முடி” என சொன்னவள், “ஆனா நீங்க இவ்வளோ கலரா இருப்பிங்கனு அம்மா சொல்லல, ஆனாலும் நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்திங்களா?” என்றாள் தன்னைத்தானே மெச்சியபடி.
“ஹம்…” என தானும் மெச்சியவன், “நீங்க எப்படி கண்டுபிடிச்சிங்க?” என்றான் யுகனிடம்.
“இந்த பைக் எங்க அம்மம்மா எங்கப்பாக்கு வாங்கி கொடுத்தது, அப்பா இப்போ ஊர்ல இல்ல. இந்த பைக்கிட்ட நீங்க வரவும், அம்மா உங்களைத்தான் அனுப்பி விட்டுருக்காங்கனு கண்டுபிடிச்சேன்” என்றான் புத்திசாலியாக.
“வாவ் சூப்பர்… சரி வாங்க போலாம்” என்று பைக்கில் அமர்ந்து இருவரையும் பின்னே அமர வைத்து கிளம்பினான். பத்து நிமிட பயணத்திற்கு பின்னே ரூபலஷ்மியின் வீட்டிற்கு வந்தவன், “இறங்குங்க” என்றான்.
“உள்ளே போங்க ஸார், இங்கயிருந்து பேக் தூக்கிட்டு நடக்குறது கஷ்டம்” என்றாள் யுகதி.
“ஓகே… ஆனா அண்ணா சொல்லனும், இல்லைனா அங்கிள் சொல்லனும். சார் சொல்லக்கூடாது… சரியா?” என்றான்.
“ம்ஹும்… அண்ணா, அங்கிள்னெல்லாம் சொல்லக்கூடாதுனு அம்மா காலைலயே சொல்லிட்டாங்க. அம்மா கொல்லிக்கொடுத்தபடி சார்தான் சொல்லுவேன்” என்றாள் பிடிவாதமாக.
காலைலயே சொன்னாங்களா? அப்போ இன்னைக்கு நான் பிக்கப் பண்ணனும்னு காலைலயே முடிவு பண்ணிட்டாங்களா என மனதில் நினைத்தபடி பைக்கை வீட்டின் முன்னே நிறுத்தினான்.
பணியாள் வந்து இருவரின் பையையும் வாங்கிக்கொண்டதும், இவன் அவரிடம் பைக் சாவியை நீட்ட, “மேடம் உங்களை உள்ள வர சொன்னாங்க சார்” என்று சாவியை வாங்காமல் உள்ளே சென்றார்.
திருனேஷ்வரனுக்கும் ரூபலஷ்மியை பார்க்க வேண்டியிருக்க, உள்ளே சென்றான்.
“வாங்க சார், உக்காருங்க, மேடம் இப்போ வந்திடுவாங்க” என்றார் பணிப்பெண்.
யுகனும் யுகதியும் அவ்வரவர் அறைக்கு சென்றிருந்தனர். திருனேஷ்வரன் நின்றேயிருக்க, “உக்காருங்க சார், மேடம் வந்தா என்னை திட்டுவாங்க” என்றார் பணிப்பெண்.
வேறுவழியின்றி திருனேஷ்வரன் அமர, “என்ன சாப்பிடுறிங்க? காபி, டீ, ஜுஸ்?” என்றார்.
“ஏதும் வேணாம்க்கா” என்றான்.
“அச்சோ என்னை போய் அக்கானுகிட்டு” என பதறியவர், “நீங்க ரொம்ப முக்கியமானவர்னு மேடம் சொன்னாங்க, ஜுஸாவது எடுத்து வரேன் சார்” என்று கெஞ்சலாக சொல்லி உள்ளே சென்றவர் ஐந்து நிமிடத்தில் பழரசத்தோடு வந்தார்.
வாங்கியவன் முன்னேயிருந்த டீபாவில் வைத்துவிட்டு ரூபலஷ்மியின் வரவிற்காக காத்திருந்தான். பத்து நிமிடம் கழித்து ரூபலஷ்மி வெளியே வந்தார்.
ரூபலஷ்மியை கண்டதும் திருனேஷ்வரன் எழ முற்பட, “உக்காரு, உக்காரு” என்று தானும் எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்து, “ப்ளாக் காஃபி” என்றார் பணிப்பெண்ணிடம்.
பணிப்பெண் கிச்சன் சென்றதும், “மேடம்” என்ற திருனேஷ்வரனை இடை மறித்து, “நான் பேசிடறேன்” என்று, தனியார் கம்பெனியின் பெயரை சொல்லி, “உங்களைப் பத்தி எல்லாமும் சொல்லியிருக்கேன், நான் சொன்னதுக்காக மட்டும் அவங்க வேலை கொடுக்கல, முன்னாடி எங்க வேலைசெய்திங்கனு எல்லாமும் சொன்னேன். உங்க டேலண்ட்டுக்காகத்தான் கொடுத்திருக்காங்க. மன்டே போய் ஜாயின் பண்ணிடுங்க” என்றார்.
“கம்பெனிக்கு வேலைக்கு போற மனநிலைல நான் இல்லை மேடம். எதாவது பட்டறைக்கு போலாம்னு இருக்கேன், நேத்து ஒரு பட்டறைல கேட்டுட்டும் வந்திருக்கேன்” என்றான் ரூபலஷ்மியின் உதவியை மறுக்கும் நோக்கோடு.
“நீங்க தப்பு செய்யலலையில்ல? அப்புறம் எதுக்கு உங்களை நீங்களே கீழ பார்க்குறிங்க? பட்டறைக்கெல்லாம் போக வேண்டாம். இந்த கம்பெனிக்கு போங்க” என உரிமையாக அதட்டினார்.
“இல்லங்க மேடம்” எனும்போதே, “இந்த கம்பெனியில வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதுவும் இன்டர்வியூ கூட வைக்காம அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க.
இப்படிலாம் நான் யாருக்காகவும் ரெக்கமண்ட் பண்ணினது இல்லை. எங்க டிபார்ட்மண்ட் ஆளுங்களால உங்க வாழ்க்கை பாழாகியிருக்கிறதால என்னால முடிஞ்ச ப்ராயச்சித்தமா இதை பண்ணியிருக்கேன். இப்போ வேண்டாம்னு சொன்னா என்னை தப்பா நினைப்பாங்க” என்றார்.
தன்னை எப்படியாவது இந்த வேலைக்கு அனுப்புவதே ரூபலஷ்மியின் நோக்கம் எனப்புரிய, கோபம்தான் வந்தது திருனேஷ்வரனுக்கு.
“என்னைக் கேட்காம எதுக்கு மேடம் ரெக்கமண்ட் பண்ணுனிங்க? ஏற்கனவே எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கிங்க, எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு” என்றான்.
இயல்பாக பேச முயற்சிக்கிறான் என்று தெரிந்தபோதும் திருனேஷ்வரனின் முகச்சிவப்பிலேயே அவனின் கோபம் புரிந்தது ரூபலஷ்மிக்கு. ஆனாலும் திருனேஷ்வரனை விட முடியவில்லை.
“கில்ட்டியா யோசிக்க என்ன இருக்கு? எப்படின்னாலும் உங்களுக்குனு ஒரு கரியர் வேணும்ல? என்னதான் நீங்க நல்லவன்னாலும் அதெல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க…
இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்திங்கனு கேட்பாங்க. ஜெயில்ல இருந்தேனு சொன்னா… அதுவும் போக்சோல உள்ள போய் வந்தேனு தெரிஞ்சா எந்த கம்பெனியிலும் நிம்மதியா வேலை பார்க்க முடியாது” என்றார் புரிய வைக்கும் நோக்கோடு.
“அது எனக்கும் தெரியும் மேடம், அதுனாலதான் பட்டறைல வேலைக்கு கேட்டிருக்கேன் நீங்க செஞ்ச உதவியை என் உயிர் இருக்கும்வரை மறக்கமாட்டேன், அதுக்காக உங்களை டிபண்ட் பண்ணி இருக்கவும் எனக்கு பிடிக்கல, ப்ளீஸ்… என் கரியரை நான் பார்த்துக்கிறேன் மேடம்” என்றான் கோரிக்கையாகவே.
“நான் ஜஸ்ட் ரெக்கமண்ட்தான் செய்தேன், நீங்க செய்யிற வேலைக்குத்தான் சம்பளம் கொடுக்கப்போறாங்க. இது எப்படி என்னை டிபண்ட் பண்ணியிருக்குறதா ஆகும்?” என்றவர்,
திருனேஷ்வரனோடு வழக்காட பிடிக்காமல், “ஜுஸ் வேண்டாமா? காபி, டீ, வேற எதாவது போட சொல்லட்டுங்களா?” என்று பணிப்பெண்ணை அழைக்க, ரூபலஷ்மி கேட்ட தேனீரோடு வந்தார் சந்திரா.
திருனேஷ்வரன் “எனக்கு ஏதும் வேண்டாம் மேடம்” என்றான்.
“ஆறடி உடம்புக்குள்ள கொஞ்சம்போல ஜுஸ் குடிச்சா ஒன்னும் ஆகிடாது. குடிங்க” என்றார் உரிமை முறைப்போடு.
இதுதான் திருனேஷ்வரனுக்கு இன்னும் கவலையாகிப்போனது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? நான் மறுக்கிறேன் என்று புரிந்தும், இவர் இஷ்டத்திற்கு நம்மை வளைக்கப்பார்க்கிறார் என்று மருகிக்கொண்டிருந்தான் மனதிற்குள்.
யுகன், யுகதி வெளியே வர, “பசங்ககிட்ட என்னை சார்னு சொல்ல சொல்லியிருக்கிங்க, எனக்கு அது பிடிக்கலங்க மேடம், அண்ணா இல்லைனா அங்கிள்னு கூப்பிட சொல்லுங்க” என்றவன், சந்திராவை சுட்டிக்காட்டி, “இந்தக்காவும் சார்னு சொல்றாங்க, பைக் கீ கொடுக்க வந்தவருக்கு நாற்பது வயசு பக்கம் இருக்கும். அவரும் சார்னு சொல்றார்” என்றான் கோபத்தோடு.
பின்னே ரூபலஷ்மி என்ன சொல்ல வந்தாரோ… அவருக்கு முன்னே பேச முந்தியவன், “என் பேரண்ட்ஸ்க்கு நான் விடுதலை ஆனதே இன்னும் தெரியாது. அங்க நிலைமை என்னனு பார்க்கனும். சேலம் போனேன்னா எப்போ வருவேன் தெரியாது. நான் கிளம்பறேன் மேடம்” என்று எழுந்தவன் ரூபலஷ்மியின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினான்.
“பைக் எடுத்துட்டு போறிங்களா? இல்ல… டிரைவர்கிட்ட கொடுத்தனுப்பவா?” என உரக்க குரல் கொடுக்க, திரும்பிப்பார்த்தவன், “பைக் வேண்டாம் மேடம்” என்று அழுத்தமாக சொல்லி வெளியேறினான்.
error: Content is protected !!