Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 22.1

அத்தியாயம் 22

திருனேஷ்வரனிடம் தனது மனமாற்றத்தை அறிவுருத்தவே   ராஜதுரையோடு இணைந்து நின்றார் ரூபலஷ்மி.

தனது தவறை உணராதபோது கணவனிடம் பேச, பார்க்க என்று எதுவும் பிடிக்காமல் போனது. ஆனால் தவறுணர்ந்த பின்னே, கணவனோடு இணைந்து நின்றபோது பெருமையாக உணர்ந்தார்.



Advertisement

தன்மீதுள்ள கோபத்தில் அவன் முன்னே சின்ன முகச்சுழிப்பை காட்டியிருந்தாலும் தனது நிலை என்னவாகியிருக்கும்? அப்படி அவமானத்தை தன்னால் தாங்கியிருக்க முடியுமா? என்று நினைத்து நினைத்து வெம்பினார் ரூபலஷ்மி.

தனது பாதை எத்தனை பெரிய தவறென்று நன்றாக புரிந்தது. ஆனாலும் நான் இப்படி ஆனதற்கு கணவன்தானே காரணம் என்ற எண்ணமும் மனதினுள் கணன்றுகொண்டே இருந்தது.

மன்னிப்பு கேட்டால் சரியாகும் விசயமல்ல, அதனை மாமா ஏற்கவும் மாட்டார் என்றறிவார். ஆனாலும் ரூபலஷ்மிக்கும் மனம் விட்டு மன்னிப்பு கேட்கும் எண்ணமும் வரவில்லை.

Advertisement

இவ்விசயம் கணவன், மற்றும் திருனேஷ்வரன் தவிர்த்து யாருக்கும் தெரியாதென்பது பெரும் ஆசுவாசம். ஆனாலும் திருனேஷ்வரன் நிலையில் வேறு யார் இருந்திருந்தாலும்  பெரும் அவமானத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். அல்லது தன்னை உபயோகப்படுத்தியிருப்பார்கள். இரண்டுமே தனது வருங்காலத்தை பெரிதாய் பாதித்திருக்கும்.

Advertisement

சிறு விசயத்திற்கெல்லாம் பெரிதாய் கோபப்படும் தனது மாமா எப்படி இவ்விசயத்தை பொறுமையாக கையாள்கிறார் என்பதே ரூபலஷ்க்கு புரியாத புதிராக இருக்க, இதில் திருனேஷ்வரனை மன்னித்ததோடு, அவனின் நலனுக்காக சிரத்தை எடுத்து சத்யப்ரகாஷை தண்டித்தது பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருந்தது.

அனைத்திலும் முக்கியமாக திருனேஷ்வரனோடு பேசும் தோரணை…      உறவுகளிடம் கூட இப்படி இலகுவாக பேசிப்பார்த்ததில்லை ரூபலஷ்மி. எப்படி சாத்தியம் இது?

இப்படியாக பல எண்ணங்கள் மனதினுள் ஓட, காவல்துறையில் தான்  அதிகாரி என்பதையே மறந்துபோனார்.

Advertisement

“எவ்வளோ நேரம் ரூபா உள்ள இருப்ப?” என சற்று உரக்க குரல் கொடுத்தார் ராஜதுரை.

ரூபலஷ்மியிடமிருந்து பதில் வரவேயில்லை.

“நீயெல்லாம் ஒரு டி.எஸ்.பி” என்றார் கடுப்பாக.

“டி.எஸ்.பிலாம் உங்களுக்கு பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் கிடைச்சது” என்று பதில் வர, அது இப்போதான் தெரியுமா? என்று கோபம்தான் வந்தது ராஜதுரைக்கு.

“எவ்வளோ இம்ப்பார்ட்டண்ட் ஒர்க்கை விட்டுட்டு ஒருவாரமா உன்னோட இருக்கேன்? வெளில வரமாட்டேங்குற? டோரை பார்த்து பேசுறதுக்கு நான் எதுக்கு இங்க இருக்கனும்?” என்றார் கோபமாக.

கதவு தாழ் போடாமல் லேசாய் திறந்துதான் இருந்தது. ‘யார் வெளியே இருக்க சொன்னா?’ என்று கேட்க நினைத்தபோதும் ரூபலஷ்மியால் கேட்க முடியவில்லை.

ஊரிலிருந்து வந்த நாள் இரவு தன்னை நெருங்கிய கணவனிடம், தனது பிடித்தமின்மையை காண்பித்த பிறகு இன்று வரை ரூபலஷ்மியை நெருங்கவில்லை ராஜதுரை.

திருனேஷ்வரனோடான பிரச்சனைக்கு முன்பு வரை மனைவியை நெருங்க இரவு பகலென்ற நேரமெல்லாம் கிடையாது ராஜதுரைக்கு. ரூபலஷ்மிக்கும் எந்த நேரம் அழைப்பு வரும் என்று சொல்ல முடியாது. ராஜதுரை ரூபலஷ்மியை காட்டிலும் உயர் அதிகாரி ஆதலால் அவருக்கும் ஓய்வு நேரம் என்பது மிகவும் குறைவுதான்.

விடுப்பில் வந்தாலும் திட்டமிட்ட நாள்வரை இருக்க முடியாது. அவசர அழைப்பு வந்துவிட்டால் நேரம் பார்க்காமல் கிளம்பிடுவார் ராஜதுரை.

இருவருக்கும் சேர்ந்தார்போல் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கவே, கிடைக்கும் நேரத்தில்தான் காதலை கொண்டாடுவார்கள். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட்டால் போதும். பகலும் இரவுதான் தம்பதிக்கு. என்றாவது ஓர்நாள் அலுப்பாக இருந்து ரூபலஷ்மி மறுத்தாலும் ராஜதுரை விடமாட்டார்.

அப்படிப்பட்ட கணவன்தான் இம்முறை ஒரு வாரமாக வீட்டில் இருந்தபோதும் நெருங்காமல் இருக்கிறார்.

திருனேஷ்வரனைப் பற்றி தெரிந்த பின்னும் தனது செயலை சொல்லி கணவன் தன்னை கேவலப்படுத்தவும் இல்லை. அதே நேரம் மன்னிக்கவும் இல்லை என்று புரிகிறதுதான். ஆனால் தன்னிரக்கத்தோடு கணவனை நெருங்க மனதும் இல்லை, தைரியமும் இல்லை.

அறைக்குள் வந்த ராஜதுரை “நான் கிளம்பறேன் ரூபா” என்றார்.

சட்டென கணவனைப் பார்த்தவர், சில நொடிகளிலேயே சிரத்தை தாழ்த்தினார். முட்டிக்கொண்டு வந்த அழுகையை முயன்று கட்டுப்படுத்தினார்.

ரூபலஷ்மியின் தொண்டைக் குழி ஏறி இறங்குவதிலேயே, தான் கிளம்புவதில் மனைவிக்கு விருப்பமில்லை என்று  புரிந்துகொண்டார் ராஜதுரை.

கணவன் தன்னையே உறுத்துப்பார்ப்பது புரிய, “பசங்க ஈவ்னிங் வந்ததும் தேடுவாங்களே… அவங்ககிட்ட சொல்லிட்டிங்களா?” என்றார்.

“சொல்லலை, ட்டூ த்ரீ டேஸ் கழிச்சுதான் போலாம்னு இருந்தேன், அர்ஜண்ட் ஒர்க். கிளம்பியே ஆகனும், நீ புரிய வை. நான் நைட் கால் பண்ணி பேசுறேன்”

சரி என்பதாய் தலையசைத்தவரின் கண்களில் கண்ணீர் வெளியேறியிருக்க, சிகையை அழுத்தமாக கோதிக்கொண்டு, அறைக்குள்ளேயே சிலநொடிகள் நடைபயின்று பெரு மூச்செடுத்து மனைவி அருகே அமர்ந்தார்.

ரூபலஷ்மியின் அழுகை அதிகமாக கணவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்து கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

மனைவி முகம் திருப்பியதில் கோபம் வர, “ஜெஸ்ட் ஸ்டாப் அண்ட் லுக் அட் மீ ரூபா” என்றார் கட்டளையாக.

“மாமா ப்ளீஸ் கிளம்புங்க” என்றார் பலவீனமான குரலில்.

கோபத்தில் ராஜதுரை எழுந்துவிட, அதற்கும் அதிர்வோடு பார்த்தார் ரூபலஷ்மி.

“ஷிட்” என்று பல்லை கடித்தவர், “திருனேஷ்வரன் விசயத்துல என்னோட ஆக்ட்டிவிட்டீஸ் உனக்கு ஆச்சர்யமா இருக்கு ஆமாவா? அவன் மேல கோபப்பட என்ன இருக்கு? இவ்வளோ நல்ல பையனை, மெச்சூர்டான பையனை ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறேன். அவனோட குணம் என்னை அவன் பக்கம் யோசிக்க வச்சது.

ஆனா அந்த விசயத்துல உன்மேல உள்ள கோபம் அப்படியேத்தான் இருக்கு. ஆனாலும் உன்னை முழுசா வெறுக்க முடியல. ஒருவேளை இதுதான் கருமம் பிடிச்ச காதலானும் தெரியல.

பிள்ளைகளுக்காகவும் குடும்ப கௌரவத்துக்காகவும்தான் உன்னோட காம்ப்ரமைஸ் ஆக நினைச்சேன். ஆனா நீ வந்த பின்னாடியும் அத்தனை இம்ப்பார்ட்டண்ட் ஒர்க்கையும் தட்டிக்கழிச்சிட்டு ஒரு வாரமா இங்க இருக்குறதுக்கு காரணம்…’ என சிறு இடைவெளி விட்டு, “நீதான்… நீதான் டேமிட்… புரியுதா உனக்கு?” என்றார் அதீத கோபத்தோடு.

ரூபலஷ்மியின் சிரம் இன்னும் தாழ, “உனக்குள்ள என்மேல கோபம் இருக்கா? இல்ல கில்ட் இருக்கா? இல்ல… தப்பு செய்ய தூண்டினவன் நான், நீ எதுக்கு என்கிட்ட இறங்கிப்போகனும்ன்ற எண்ணமிருக்கானு எனக்கு தெரியாது.

எனக்குள்ள நிறைய கோபம் இருக்கு. ஆனா அந்த கோபத்தோட சேர்த்து நீயும் இருக்க. நீ மட்டும்தான் இருக்க. கோபம் அதிகமாகி என் மனசுலயிருந்து நீ வெளில போறதுக்கு முன்னாடி என்கிட்ட வந்துடு.

ரொம்ப டைம் எடுத்துக்கிட்டா, உன் தப்பை நீ உணர்ந்தாலும் உனக்கு என்னோட சேரப் பிடிக்கலையோனு என் திங்க்கிங் தப்பா போக சான்ஸ் இருக்கு.” என்றதும் “மாமா” என்றார் தவிப்பாக.

“உன்னை நீயே சரி செய்துட்டு நீயா என்னை தேடி வா” என்று அறையை விட்டு வெளியேறிய ராஜதுரை, சில நொடிகளிலேயே வீட்டை விட்டும் வெளியேறினார்.

*** *** *** *** *** ***

அடுத்த நாள் காலை திருனேஷ்வரனை பிராண்டினாள் பொன்மணி.

கண்களை திறக்காமல் தூக்கத்தோடே “ம்” என்றபடி மனைவியை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டு உறங்க முற்பட “ஏங்க” என்ற மனைவியின் தவிப்பான குரலிலும், சில்லென்ற கேசம் முகத்தில் உரசியதிலும் கண்விழித்தவன் கண்களோடு மனதையும் நிறைத்தாள் பொன்மணி.

இப்படியொரு காலைப் பொழுதைத்தான் அன்றும் எதிர்பார்த்தான். மனைவியை அணைத்தபடியும் ரசித்தபடியும் “எதுக்கு இவ்வளோ சீக்கிரம் குளிச்ச?” என்றான்.

“இது சீக்கிரமா? மணி ஆறாகுது”

குறும்பு சிரிப்போடு “ஓ… விடியப்போகுதா? ஆனா இருட்டாதான் இருக்கும் போல, விடியும் முன்ன இன்னொரு” எனும்போதே கணவன் வாயை அடைத்தவள், “நான் ஆஃபீஸ் கிளம்பட்டுமா?” என்றாள் கெஞ்சலாக.

“இந்த நேரத்துக்கா? ஒன்பது மணிக்கு மேல கிளம்பினாலே போதும். நான் உன்னை டிராப் பண்றேன்” என்றான்.

இங்கிருந்து அலுவலகத்திற்கு அதிக நேர பயணம் என்று நினைத்துக்கொண்டு பொன்மணி கேட்கிறாள் என நினைத்தவனுக்கு, அவளின் தவிப்பு தற்போதுதான் புரிய, “இரு வரேன்” என்று குளியலறை சென்று வந்தவன், “என்ன பிரச்சனை உனக்கு?” என்றான் விசாரணையாக.

“இல்ல… ஆன்ட்டி அங்கிள்க்கு என்னை சகிக்க டைம் வேணும்ல? அதான்” என்றாள் தயக்கமாக.

“நீ கூடவே இருந்தாதான் சகிக்க பழகுவாங்க, இந்த நேரத்துக்கு ஆஃபீஸ்க்கு கிளம்பினா அவங்களை அவாய்ட் பண்றமாதிரி ஆகாதா?”

இப்படியொரு கோணம் இருக்கிறதா என நினைத்தவளுக்கு பதட்டமாகிட, “எதுக்கு பயப்படுற?” என்றான் அதட்டலாக.

“அவங்களை சமைக்க விட்டுட்டு நான் உள்ளேயே இருக்க முடியாது, நான் சமைச்சாலும் சாப்பிடுவாங்களா தெரியாது, என்ன பண்ணட்டும்?” என்றாள் பாவமாக.

“என்னை மட்டும் கவனி, மத்ததெல்லாம் போகப்போக பழகிடும்” என்றான் மனைவியை மடிமீது அமர்த்தியபடி.

பொன்மணி பாவமாக பார்க்க, “ஒரு முத்தம் கொடுத்துட்டு போய் டீ வை” என்றான் கட்டளையாக.

“டீ வச்சுட்டு வந்து கொடுக்கறேன்” என்று இவள் எழப்பார்க்க, “ம்ஹும்… கொடுத்துட்டு போய் டீ வை” என இவன் பிடிவாதம் செய்ய, கன்னத்தில் இதழொற்றி விலகியவளிடம், “இங்க” என்றான் நெற்றியை காண்பித்து.

“ஒன்னுதான கேட்டிங்க?”

“ஒன்னுதான்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒன்னொன்னு” என்று நெற்றியில் வாங்கி, பின்னே கண்ணிற்கு வாங்கி, பின்னே உதட்டை காண்பிக்க, “முடியாது போங்க” என்று எழத் திமிறினாள்.

மிரட்டினால் ஆகாதென்று மனைவியை புரிந்து, மிகுந்த ஏமாற்றமடைந்தது போல் பாவனை காட்டி மனைவியை விடுவிக்க, தவித்தவள் திருனேஷ்வரனின் உதட்டை நெருங்கினாள்.

“ம் சீக்கிரம்” என்க, இவள் கன்னத்தில் கொடுத்ததை போல கொடுத்து விலகினாள்.

“இதான் முத்தமா? நைட் நான் இப்படியா கொடுத்தேன்?” என முறைத்து, “ஒன்மோர் சான்ஸ்… லிப் கிஸ்க்குனு ஒரு மரியாதை இருக்கு. குடுக்குற கிஸ் என்னை பேச விடக்கூடாது. அப்படி கொடுக்கனும். கமான்…”  என்றவன் அவளிற்கு வாகாக முகத்தை காட்டினான்.

இவள் முறைக்க, “நான் கொடுத்தா கிஸ்ஸோட நிறுத்தமாட்டேன்டீ, ஒழுங்கா நீயா கொடுத்துட்டு ஓடிடு, இல்ல உனக்குத்தான் கஷ்டம்” என எச்சரிக்க, திருனேஷ்வரனுக்கு அழைப்பு வந்தது.

‘மேடம் எதுக்கு இந்த நேரம் கூப்பிடுறாங்க?’ என நினைத்தபடி மொபைலை எடுத்து அழைப்பை ஏற்று “குட்மார்னிங் மேடம்” என்றான்.

“ம்…” என்றவர், “செவன் தர்ட்டி போல வரேன்” என்று வேறெதுவும் சொல்லாமல் இணைப்பை துண்டித்தார்.

அறையில் பேச்சரவம் கேட்கவே, “டீ வைக்கிறேன், சீக்கிரம் பல்லு விளக்கிட்டு வாங்க” என்று கணவனோடு சத்தமாக பேசி தனது இறுப்பை மகனுக்கு உணர்த்தினார் செல்லம்மாள்.

“ஆன்ட்டி எழுந்துட்டாங்க, கூப்பிடுறதுக்கு முன்னாடி போய் குளிங்க” என பொன்மணி விரட்ட, ரூபலஷ்மி எந்த நேரமும் இங்கு வரலாம் என்று குளிக்க ஆயத்தமான போதும், “சொல் பேச்சு கேட்கமாட்டேங்குற, அதோட மிரட்டுற?” என மனைவியை முறைத்தபடிதான் குளிக்க சென்றான்.

பத்து நிமிடத்தில் குளித்து வெளியே வந்தவன், “டீ வைக்கப்போகலயா நீ?” என கேட்டபடி கதவை திறந்தான்.

“மூணுமாசமா குடியிருக்க, ஒரு சாமிப்படம் வாங்கி வைக்கமாட்ட திருனேசு?” என குறைப்பட்டார் செல்லம்மாள்.

“இன்னும் பத்து இருபது நாள்ல காலி பண்ணலாம்னு இருக்கேன், வேற வீடு பார்த்ததும் சொல்றேன், நீங்களே வந்து எல்லாம் வாங்கி கொடுங்க” என்றவன், “இந்நேரத்துக்கே குளிச்சிட்டிங்க, அப்பாவும் எழுந்துட்டாரா?” என்றான்.

“எழுந்துட்டார், நாங்க ஊருக்கு கிளம்பறோம், ஸ்லீப்பர் பஸ்ல டிக்கட் கிடைக்குமானு பாரு” என்றார்.

“என்னோட இருக்கத்தான வந்திங்க? அப்புறம் எதுக்கு கிளம்புறிங்க?”

“உன்னோட இருக்கத்தான் வந்தோம், இப்போ உன் பொண்டாட்டியும் இருக்கா. உன் அப்பா அந்த புள்ளையை ஏத்துக்கிட்டார். எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்.

இப்படியே இருந்துட மாட்டேன், மாறுவேன்… மாறித்தான் ஆகனும்னு எனக்கு நானே சொல்லிட்டிருக்கேன். இப்போதைக்கு இரண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கிறது சரி வராது. அதான் கிளம்ப முடிவு பண்ணினேன்” என்று வழக்கம்போல் மனதிலுள்ளதை மறைக்காமல் சொன்னார் செல்லம்மாள்.

அன்னையின் மனம் புரிந்து, “பஸ்ல வேணாம், பதினொருக்கு தட்கல்ல டிக்கட் கிடைக்குதானு பார்க்குறேன், நாளைக்கு ட்ரைன்ல போங்க” என்றான் இவனும் மறுக்காமல்.

“பஸ்லயே போறோம்டா, பதினொரு மணி வரைக்கும் காத்திருந்து டிக்கட் கிடைக்கலனா கஷ்டம்” என்றார்.

“சரி ஒன்பது மணிபோல கிளம்பலாம்” என்றவன், “பொன்மணி… வந்து டீ வை” என்று குரல் கொடுத்து, “பால் இருக்குதாம்மா? இல்லை வாங்கனுமா?” என்றான்.

“பால் வாங்கிட்டு வந்துட்டுதான் உங்கப்பாவை பல்லு விளக்க சொன்னேன்” என்றார்.

வெளியே வந்த பொன்மணியிடம் “எல்லாருக்கும் போடு” என்றான்.

கணவன் நேற்றிரவு அத்தனை சொல்லியிருக்க, வேறு வழியில்லாமல் அமைதிகாத்தார் செல்லம்மாள்.

டீ வைத்து எடுத்து வந்தவள் கணவனருகே வைத்து தனக்கு எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

இவர்கள் மூவரும் டீ  குடித்துக் கொண்டிருக்க, ரூபலஷ்மி வந்தார் வீட்டிற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!