Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அந்தியூரான்

அந்தியூரான் -3
 விசாலாட்சியை அமுதன் அழைத்து வந்து, இத்துடன் ஒரு மாதம் கடந்து விட்டது.விசாலாட்சியின் தாய், மகள் தீடீரென வந்து நிற்கவும் மகிழ்ந்து போனாள். மகளைக் கண்ட களிப்பில் சில நொடிகள் நின்றவர் பிறகு தணிகாசலம் இல்லாமல் அமுதனுடன் வரவும், சிறு பொறி தட்ட என்னவோ ஏதோவென்று பயந்து.
 ‘வா விசாலாட்சி! எங்க மாப்புல தம்பி? அமுதன் கூட நீ எப்படி?’ மகளிடம் கேள்விகளை தொடுக்க பதில் மகனிடம் இருந்து வந்தது.
 ‘அவர் வரல இனி வரவும் வேணாம் என்றான் அமுதன்’ மகனின் பேச்சில் பெரும் பதட்டம் சூழ.


Advertisement

 ‘ஏன்? என்ன ஆச்சு? எதுக்கு அமுதன் இப்படி பேசுறான்?’ என்ற கேள்விகளை அடுக்கி கொண்டே போக.
 அதற்கு மேல் பொறுமையற்று வெடித்து விட்டான் அமுதன் ‘படிச்சு படிச்சு சொன்னேன் எத்தனை வசதி இருந்தாலும்,இரண்டாந்தாரமெல்லாம் வேணான்னு யாரு கேட்டா? இப்போ தனுச்சு நிக்கிறது இவதான்’ என்று தாயிடம் கத்தி விட்டு செல்ல. மகன் பேச்சில் அவருக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.தனுச்சா!… ஏன்?, யார் தவறு? எதில்? என்று யோசிக்க முடியவில்லை.
 மரகதம் நொடியும் தாமதிக்காமல் தனது அண்ணனிடம் சென்று விட்டார்.அவருக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவர் தான். அதுவும் போக இந்தத் திருமணத்தை வம்படியாகச் செய்து வைத்தவரும் அவர் தான்.எனது நண்பன், நல்ல குடும்பம்,வசதி என்று அத்தனை பேசி தன்னையும், அமுதனையும் கரைத்தது முத்து தான்.இப்போது அவர் தானே இதற்கு வழி செய்ய வேண்டும்

Advertisement

 முத்துவிடம் மரகதம் செய்தியை சொல்ல.தங்கை சொன்ன செய்தி அவருக்கு அதிர்ச்சியை குடுத்தது, ‘நான் வந்து விசாலாட்சி கிட்ட பேசுறேன் மரகதம். கொஞ்சம் அவகாசம் குடு. நடப்பு என்ன? நடந்தது என்ன? ஏதுன்னு? தெரியாம எதுவுமே முடிவு பேச முடியாது’ என்று பேசி தங்கையை அனுப்பி இருந்தார்.

Advertisement

 இப்பொழுது!..
 “விசா!.. விசா!.. உரக்க குரல் குடுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அமுதன். அமுதனின் குரல் கேட்டுக் கூடத்திற்கு வந்து நின்ற தங்கையை தொடர்ந்து தாயும் வர,இருவரையும் பார்த்து கொண்டே நாற்காலியில் அமர்ந்தான்.
 “என்ன அண்ணா?”

Advertisement

 “வேலை செய்ற இடத்தை மாத்த போறேன்” என்றான் மொட்டையாக அதில் அவன் சொல்ல வருவது புரிய பெரிதாக அலட்டி கொள்ளவில்லை விசாலாட்சி.
 “நல்லது வேற எங்க வேலை? என்ன கம்பெனி?” என்ற கேட்ட தங்கையை நிமிர்ந்து பார்த்தவன்.
 “அதே துணி தரம் பிரிகிற வேலை தான். இந்த இடமும் நல்ல வளர்ந்து வர இடமாதிரி தான் தெரியுது நல்லா விசாரிச்சுட்டேன் .நான் ஏன் இப்போ வேலை மாறுறேன்னு புரியுதா விசா?” என்றதும் ஒரு பெருமூச்சுடன் அமுதனை பார்த்தால், இந்த அரிவை படு தெளிவு போலும்.
 “அண்ணா! நீ சொல்லவே வேணாம் எனக்கு புரியுது.நானா பண்ண கல்யாணம் இல்ல, நீங்க சொன்னீங்க பண்ணிக்கிட்டேன்.அவங்க போன்னு சொன்னாங்க வந்துட்டேன். இப்போ நீ என்ன சொல்ல வர அதையும் நான் செய்யிறேன்” என்ற தங்கையைப் பரிதாபமாகப் பார்த்து வைத்தான் அமுதன்.
 அவனுக்கு தங்கையை பற்றி அவளது குணத்தைப் பத்தி நன்கு தெரியும்.அத்தனை திடமான பெண்.முகத்தில் இல்லாத முதிர்ச்சி பேச்சில் நன்கு தென்படும்.அதே போல் என்ன சொன்னாலும் கேட்டு கொள்ளும் பிள்ளை.அப்படி இருக்கும் தங்கைக்குத் தாங்கள் நியாயம் செய்ய வேண்டும் என்று ஒரு அண்ணனாக அல்லாடி நின்றான்.
 அதுவும் போக இந்த ஒரு மாதத்தில் தணிகாசலத்திடமிருந்தும், அவனது குடும்ப உறவுகளிடம் இருந்தும் எந்த ஒரு தகவலும் இல்லை.அதுவே அமுதனின் கோபத்துக்கும், இந்த முடிவுக்கும் முக்கிய காரணம்.முறையாகப் பெண் கேட்டு கட்டி கொடுத்திருக்கிறோம்.
 அதே போல் அந்தப் பெண்ணை அனுப்பியதற்கு முறையாகக் காரணம் சொல்லி அனுப்பி வைத்திருக்க வேண்டும் அல்லவா.அன்று இல்லையென்றாலும் இந்த ஒரு மாத காலத்தில் ஏதோ ஒரு நாளில் வந்து பேசியிருக்கலாம் தானே.
 மரகத்திருக்கும் இந்த இடம் நெருடல் தான்.இப்போது மகனும், மகளும் பேசி கொள்வதைப் பார்த்து பதறி “அமுதா! மாமா கிட்ட பேசலாம் கொஞ்சம் பொறுமையா இருடா நம்ப பிள்ளை வாழ்க்கை” தாயின் பேச்சில் சுள்ளெனக் கோபம் வர.
 “இன்னும் என்னத்த பேச போறீங்க. உங்க அண்ணன் வீட்டுக்கு நடையா நடந்து இத்தனை நாள் பேசி வச்சது போதும். நல்ல பேசுனீங்க போங்க” என்றவனைக் கலவையாகப் பார்த்து வைத்தார் மரகதம்.மகள் வாழ்க்கை வேண்டி அவரும் நாளுக்கு இரு முறை கணக்கில் அண்ணனிடம் சென்று முறையிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்,ஆனால் முத்துவால் திடமான ஒரு உறுதியை கொடுக்க முடியவில்லை.
 அண்ணனின் தவிப்பையும், தாயின் கவலையையும் கண்டவள்,”அண்ணா! அம்மாவை பேசி என்ன ஆக போகுது? இனி உனக்கு என்ன தோணுதோ அதை செய்.நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்?”என்றவள் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் உள்ளே சென்று விட்டாள்.
 அவளுக்கும் கவலை,பெரும் ஆதங்கம்,சிறு கோபம் எல்லாம் உண்டு,ஆனால் யாரிடம் அதையெல்லாம் காட்டுவது என்று தான் தெரியவில்லை. காட்டி என்ன பயன் அதுவும் புரியவில்லை. தந்தை இல்லை தாயின் அரவணைப்பு மட்டுமே கொண்டு மாமன் நிழலில் வளர்ந்தவள்.அமுதனும் சரி, அவளும் சரி எதிர்பார்ப்பு என்ற ஒன்றே வைத்து கொள்வதில்லை.இது தாயின் படிப்பினை போலும்.
 எதிர்பார்ப்பு இருந்தால் மட்டுமே ஏமாற்றம் இருக்கும் என்பதால் பிள்ளைகளுக்கு அதனை நன்கு பதிய வைத்திருந்தாள் மரகதம்.அதனால் தான் இந்தச் சூழலை அழகாகக் கையாண்டு நின்றனர் அண்ணனும்,தங்கையும்.
 பெற்றவர்கள் இப்படி! உற்றவன் நிலை? கணவன் என்றவனைத் திருமணம் செய்த போது கொஞ்சம் உற்றுப் பார்த்தது.அதன் பின் அவனது நிழல் கூட எப்படி என்று அறியாது போனால் அரிவை.அவளுக்குத் தெரிந்தது மூன்றே ஜீவன்கள் சிவராமன், சிவகாமி, செல்வகுமாரி.அதிலும் பேச்சு, நெருக்கம் என்றால் குமாரி மட்டுமே.சிறு, சிறு சீண்டல் செய்து அவளிடம் வம்பு செய்வது மிகவும் பிடிக்கும்,
 ஆனால் அவளிடமும் விசாலாட்சி நெருக்கமா என்பது கேள்வி குறி தான்.குறுகிய காலத்தில் எதைத் தான் கணிப்பது தடுமாறி நின்றாள் விசாலாட்சி.அனைத்தும் மனதுக்குள் வைத்து பூட்டி கொண்டு வெளியில் திடமாக நின்றாள்.
 இது மரகதத்தின் வளர்ப்பு. ‘தகப்பன் இல்லாத பிள்ளைகள் தறி கெட்டு..’ என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருந்தாள்.அண்ணன் நிழல் கொண்டு இருந்தாலும் அவருக்கு என்றும் பாரமாக இருந்ததில்லை.
 பிள்ளைகளும் அதுக்கு தக்கன நடந்து கொண்டனர்.தன் பிள்ளைகளையும் அவரைச் சுமக்க விடவில்லை.அந்த உறுதியில் தான் அழகாக வளர்ந்து நின்றனர் அமுதன் மற்றும் விசாலாட்சி.இங்கு நிலை இப்படி இருக்க..
 அங்கே தணிகாசலத்தின் வீட்டில்…
 “பாட்டி விசா எப்போ வருவா?” என்று தினமும் பாடும் பல்லவியை இன்று சிறு அழுகையுடன் பாடி வைத்தாள் குமாரி” இத்தனை நாள் சாதாரணமாகக் கேட்டு வைத்தவள் நாட்கள் போக அழுது கொண்டே கேட்க.சிவகாமி பேத்திக்கு காது கொடுக்கவில்லை.
 “பாட்டி விசா! விசா!” என்று ஒரு கட்டத்தில் ஓவென்று அழுக.அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கத்தி வைத்தாள் சிவகாமி,
 “அவளை கண்டா தான் உனக்கு ஆகலையே? சண்டை கட்டுறானு உன் அம்மாச்சி காரி கிட்ட சொன்ன தானே.அப்புறம் எதுக்கு அவ உனக்கு? அவ வர மாட்ட” மகனின் வாழ்க்கை ஒருபுறம், மகள்களின் அரசியல் ஒரு புறம். இதில் பேத்தி வேறு படுத்தி வைக்க வெடித்து விட்டாள் சிவகாமி.
 மனைவியின் குரல் கேட்டு வேகமாக அந்த இடத்துக்கு விரைந்த சிவராமன் “சிவகாமி புள்ளைய என்னத்துக்குப் பேசி வைக்கிற” வேகமாக வந்து அழுகும் பேத்தியை அனைத்துக் கொண்டார்.
 “எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்.எதுக்கு அந்தப் பொண்ணைக் கட்டி வச்சீங்க? அந்த பொண்ணு சாபத்தை வாங்கி வைக்கவா?”கண்ணில் கனல் வீச கோபமாகப் பேசி வைத்த மனைவியை இயலாமையாகப் பார்த்த சிவராமன்.
 “கொஞ்சம் பொறுமையா இரு சிவகாமி நான் முத்து கிட்ட பேசுறேன்?”
 “ஓ!.. இனி தான் பேச போறீங்களா? நீங்கெல்லாம் ஆறு பொட்ட பிள்ளை பெத்த தகப்பன் மாதிரியா பேசுறீங்க? அந்தப் புள்ள வீட்டை விட்டு போயி எத்தினி நாள் ஆகுது சொல்லுங்க பார்ப்போம்?”சிவராமன் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் அடித்தே வைத்திருப்பாள் போலும் அத்தனை ஆவேசமாக இருந்தாள் சிவகாமி.
 “ப்ச்! உன் மகன் நான் பார்த்துக்குவேன் தலையிட வேணான்னு பிடியா நிக்கிறான் சிவா!”
 “உங்க மகனுக்கு எதை வேணாமா? பேச்சையா? அவளையா?”
 “ப்ச்! என்ன பேச்சு இது சிவா?” மகன் போதாதென்று சில நாட்களாக பேத்தியும், மனைவியும் படுத்தி வைக்க மனம் சோர்வாக இருந்தது. அவரது சிவா என்ற அழைப்பில் அன்பை மட்டும் கண்ட சிவகாமி இன்று சோர்வை கண்டு அமைதியாகி போனார். சில நொடிகள் மௌனம் கொண்ட சிவகாமி மீண்டும் மெதுவாக.
 “இல்ல எனக்கு ஒன்னுமே புரியலைங்க. அவன் கிட்ட பேசி தான் கல்யாணம் பண்ணி வச்சோம்.கல்யாணம் பண்ணிட்டு போனவன் தான், மாசத்துக்கு வந்தான் வரும் போது அந்தப் புள்ள கிட்ட பேசி கூட நான் பார்த்ததில்லை.மகளுக்கு வேண்டி தான் கல்யாணம் யோசனை பண்ணி இருந்தாலும்.
 அந்தப் பொண்ணுக்கு நியாயம் பண்ண வேண்டாமா? எனக்குத் தெரிஞ்சு விசாலாட்சி அருமையான புள்ள.இந்த மூணு மாசத்துல அந்தப் பொண்ணு முகத்துல சிறு சுணக்கம் கூட வெளிய காட்டிக்க மாட்ட.இவன் பண்ணுற கூத்துக்கு உங்க பேத்திங்க கூடத் தாக்கு பிடிக்க முடியாது.ஏதோ இந்தப் பொண்ணுனால அமைதியா இருக்கு”.ஒரு பெண்ணாக அதுவும் ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்ற தாயாக சிவகாமியால் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 “வேணா பாருங்க உங்க அலட்சியத்துக்கு அந்தப் பக்கம் இருந்து பெருசா அடி விழ போகுது அப்போ தெரியும்”இத்தனை மகளைக் கரையேத்தி கொள்ளு பேத்தி கொண்டவருக்கு இது தெரியாதா என்ன? சிவகாமி சொல்வது போல் அவருக்கும் பயமாகத் தான் இருந்தது.
 “உங்க பொண்ணை ஒரு மாசம் கல்யாணம் பண்ணி பொறந்து வீட்டுல எதுவுமே சொல்லாம அண்ணன் காரன் கூட அனுப்பி வச்சா சும்மா இருப்பீங்களா சொல்லுங்க? அதுவும் அந்தப் பையன் அமுதன் அன்னைக்குப் பேசுன விதமும். விசாலாட்சியை அழைச்சுட்டு போன விதமும் எனக்குச் சரியா படலை.
 என்னமோ பண்ணுங்க யாருக்கு என்ன விதி போட்டு இருக்கோ அதான் நடக்கும்.ஆறுக்கு ஒன்னு வைரமா குடுத்து,இப்படி அது சீப்பட்டு தனுச்சு நிக்கவா” என்றவர் கண்கள் கலங்க விருட்டெனத் தனது அறைக்குள் சென்று விட்டாள் சிவகாமி.
 மனைவி சென்றதும் இன்னும் தனது இடுப்பை கட்டி கொண்டு தேம்பி கொண்டிருக்கும் பேத்தியின் முதுகை தடவி கொடுத்தவர்.சிறுது நேரம் அப்படியே நின்று விட்டு.பிறகு பேத்தியை அழைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தவர் பேத்தியை மடியில் தாங்கி கொண்டு
 “அம்மாடி அழுக கூடாது சாமி”
 “தாத்தா விசாம்மா” என்றவள் மீண்டும் அழுக.அவள் அம்மா என்றதும் புருவம் சுருங்கி பேத்தியை பார்த்தார்.ஏன் என்றால் அவள் அம்மா என்று அழைத்து கேட்டது இது தான் முதல் முறை போலும்.இந்த பிரிவுக்குக் காரணமே இந்த உறவின் பரிமாணம் தவுறுதல் தானே.
 அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது போல் தான் பேச்சின் திசை. ராணி கூட அத்தனை பேசி வைத்தாள் சிவராமனிடம், ஆனால் இப்போது குமாரி விசாலாட்சிக்கு ஏங்கி நிற்பதை பார்த்ததும் பெரும் குழப்பமாக இருந்தது மெல்ல பேத்தியிடம் பேச்சு குடுத்தார்.
 “ஏன் சாமி? உங்களுக்கு  விசா அம்மாவ புடிக்குமோ?”
 “ரொம்ப” தேம்பலுக்கு இடையே சொல்லி வைத்தவளை அதிர்ந்து பார்த்தார் சிவராமன்.
 “அப்புறம் ஏன் உங்க அம்மம்மா கிட்ட விசாம்மா சண்டை கட்டுறாங்கன்னு சொன்னீங்க?”
 “அப்போ நாங்க சண்டை தான் போட்டோம் தாத்தா அதான் அம்மம்மா கிட்ட சொன்னேன்”
 “அம்மாடி என்ன சொல்ற?”
 “ஆமா தாத்தா விசா தான் என்னை வம்பு செய்வாங்க, ஆனா நல்லா பார்த்துப்பாங்க சண்டை போட்டாலும் தூங்கும் போது சமாதானம் ஆகிடுவோம். ப்ச்! தாத்தா!..அவங்களும் இல்லாம, அப்பாவும் இல்லாம என்னால தூங்க முடியல தாத்தா” என்று மீண்டும் அழுது வைத்தாள்.அவளைப் பொறுத்த வரையில் விசாலாட்சிக்கும் தனக்குமான உறவை சொல்லி வைத்தாள்.
 அதற்கு மேல் அவளுக்கு தங்களது பின்னைப்பை எடுத்து காட்ட தெரியவில்லை போலும்.இதுவே போதும் என்று எண்ணிய சிவராமன் மீண்டும் பேத்தியிடம் பேசவில்லை.
 “சரிடா நான் அப்பா கிட்ட பேசி அம்மாவ சீக்கிரம் கூட்டிட்டு வர சொல்லுறேன்.இப்போ நம்பத் தோப்புக்குப் போலாம் வா!” என்றவர் குழந்தையின் மனநிலையை மாற்ற அவளை அழைத்துச் சென்றார்.உடனே தனது நண்பனுடன் பேச வேண்டும் என்று எண்ணியும்  கொண்டார்,ஆனால் அவர் எண்ணிய போது காலம் கொஞ்சமே கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.
 ஆம் சிவகாமி சொன்னது போல் அமுதன் கொஞ்சம் வேகமாகவே செயல் பட்டுக் கொண்டிருந்தான். தங்கைக்கும் தனக்கும் ஒரே இடத்தில் வேலையை வாங்கி விட்டு.முதல் வேலையாக விசாலாட்சியையும் தனது தாய் மரகதத்தையும் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி சென்று விட்டான் அமுதன்.தாய் மாமனிடம் கூடத் தகவல் சொல்லி கொள்ளவில்லை.
 மரகதம் மகனின் செயலில் நெருடல் கொண்டு வாக்கு வாதம் செய்ய.‘அப்போ உங்களுக்கு நாங்க முக்கியமில்லை’ என்று கேட்டு, அவரது வாய் அடைத்து கூட்டி சென்று விட்டான்.அக்கம் பக்கம் புழக்கத்தில் உள்ளவர்களிடம் கூட எதுவும் சொல்லி செல்லவில்லை.’இது என்ன இப்படி?’ என்று விசா எண்ணி வைத்தாலும் அண்ணன் பேச்சை தட்டாமல் அவன் காட்டிய வழியில் சென்றாள்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!