Skip to content
Post Views: 6,772
“முதல்ல போய் டீ வை” என்று, “போய் கை கால் கழுவிட்டு வா திருனேசு” என்றார் வில்வராஜ்.
இவன் சென்று முகம் கழுவி வர, டீ யை கொடுத்தார் செல்லம்மாள். காலண்டரில் நல்ல நேரம் பார்த்த வில்வராஜ் “ஒன்பது மணிக்கு போய் மருமகளை அழைச்சிட்டு வரலாம் செல்லம்” என்றார்.
“அப்பா அதெல்லாம் வேணாம்ப்பா. நான் கூப்பிட்டிருந்தாலே அவ வந்திருப்பா. அம்மாக்கு பிடிக்காதோனுதான் அவங்க வீட்டுல விட்டேன், உங்க இரண்டு பேருக்கும் சம்மதம்னா நானே பொன்மணியை கூட்டிட்டு வரேன்”
“சம்மதமில்லாமலா அவளுக்கு சமைச்சி போட்டேன்?” என செல்லம்மாள் முறைக்க, “ஊருக்கு வரேனு சொன்னதும் சந்தோசப்பட்டிங்க. ஆனா பொன்மணியை கூட்டிட்டு வான்னு சொல்லலையே”
Advertisement
“கிழவனாட்டம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிப்பியா? நீ வேற அவ வேறயா? வான்னு சொன்னா இரண்டு பேரையும்தான் சொல்றேன்னு அர்த்தம்” என்றார் கோபமாக.
சிரித்தவன், “சரி விடுங்க, ஈவ்னிங் போய் கூட்டிட்டு வரேன்” என்றான் இலகுவாக.
“மூணு பேரும் போலாம் திருனேசு” என்றார் வில்வராஜ்.
Advertisement
“வேணாம்ப்பா… உங்களை அந்தளவுக்கு சங்கடப்படுத்த எனக்கு விருப்பமில்ல. நீங்க பொன்மணியை ஏத்துக்கிட்டா போதும். போகப்போக எல்லாம் தன்னால சரியாகிடும்” என்றான்.
Advertisement
“இல்ல, உங்கப்பா சரியாத்தான் சொல்றார். முதல் முதல்ல அழைச்சிட்டு வரோம். நாங்களும் வரோம். இப்போ வேணாம்னுட்டு அப்புறம் குற்றம் சொல்லுவ. காலத்துக்கும் சொல்லாகிடும், என் பேரப்பிள்ளைங்ககிட்ட சொல்லி பழிவாங்கினாலும் வாங்குவ” என்றார் செல்லம்மாள்.
அன்னையை முறைத்தவன், “இப்போ ஒரு பேச்சு, அப்புறம் ஒரு பேச்செல்லாம் பேசமாட்டேன், நான் தண்டனை அனுபவிக்கனும்னு ப்ளான் பண்ணி அவங்க ஏதும் செய்யல.
மிரட்டலுக்கு பயந்து அவங்க பொய் சொன்னாங்க. என் கெட்ட நேரம் நான் மாட்டிக்கிட்டேன். ஆனாலும் அதனால நீங்க பட்ட அவமானங்கள் ரொம்ப அதிகம். நடந்த விசயங்களை அவ்வளோ சீக்கிரம் மறக்க முடியாதுதான்.
Advertisement
என் நலனுக்காக பொன்மணி எடுத்துக்கிட்ட முயற்சியும், பட்ட அவமானங்களும் என்னை அவ பக்கம் சாய்ச்சிடுச்சும்மா. அவளால நாம பட்ட அவமானங்களுக்கு பதிலா உன் உயிரை கொடுனு சொன்னாக் கூட யோசிக்காம கொடுத்துடுவாம்மா.
இந்த நிமிஷம் வரைக்கும் உங்களுக்காகத்தான் யோசிக்கிறா. நீங்க கூப்பிட்டாத்தான் வரனும்னு அவ இல்ல, நான் கூப்பிட்டாலும் வருவா. நீங்க திட்டினாலும் வாங்கிக்குவா.
என்னாலதான் அவ படுற அவஸ்த்தையை பார்க்க முடியாது… அவ குற்றவுணர்ச்சியை சரி பண்ணி என்னை அவ புருசனா நினைக்க வைக்கிறதுக்குள்ள எவ்வளோ பாடு? பழசை நினைக்க வேண்டாம்னு சொல்றேனே தவிர, எனக்காக அவங்ககிட்ட உங்களை இறங்கிப் போக சொல்லலம்மா” என்றான்.
“பேசி முடிச்சிட்டியா?” என முறைத்து, “எது எப்படின்னாலும் இப்போ அவ என் மருமக. அவளால நம்ம வம்சம் தழைக்கப்போகுது. அதுக்கான கௌரவத்தை கொடுத்துதான் ஆகனும்.
இப்போ விட்டுட்டு கர்ப்பம் ஆன பின்ன போனா நல்லா இருக்குமா? இதெல்லாத்துக்கும் மேல சின்ன குழந்தைங்ககிட்டயிருந்து பொம்மையை பிடிங்கி வச்சிக்கிட்ட மாதிரி அவ இல்லாம உன் மூஞ்சை பார்க்க சகிக்கல. ஒன்பது மணிக்கு போலாம். அவ்வளோதான்” என்றார் கட்டளையாக.
எதே… விளையாட்டு பொம்மையை பிடிங்கி வச்சிக்கிட்ட மாதிரி இருக்கேனா? என இன்பமாய் அதிர்ந்த திருனேஷ்வரன் முகம் ஜொலிக்கவே, “அங்கயேது போன் பண்ணி சொல்லிடாதடா, சாப்பிட சொல்லிடப்போறாங்க. சொல்லாம போலாம். தண்ணி, டீ குடிச்சிட்டு அழைச்சிட்டு வரலாம்” என்றார்.
தனக்காக என்றாலும் பொன்மணியை ஏற்றுக்கொண்டதே பெரிய விசயமாக இருக்க, அவளின் குடும்பத்தை அன்னையால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
தனக்காக சகிக்கிறார் எனப்புரிந்தவன் மனம் நெகிழவே சரியென்பதாய் தலையசைத்தான் மலர்ந்த முகத்தோடு.
*** *** *** *** ***
வீட்டிற்குள் வராமல் மருமகன் சென்றதில் வருத்தம் என்றபோதும் இனி எல்லாம் சரியாகும் என்று நம்பிக்கை பிறந்தது அசோகன் அஞ்சுகத்திற்கு.
பெரிய மகளோடான வருத்தத்தையெல்லாம் விடுத்து, சின்ன மகளின் மகிழ்வான வாழ்வைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார் அஞ்சுகம்.
ஐந்து மாதங்களாக தினமும் விசாரிப்பார்தான். ஆனாலும் நேரில் கேட்டறிவது தனி இன்பத்தை கொடுத்தது.
“ம்மா… சொன்னதையே எத்தனை முறை சொல்றது?” என்று பொன்மணி சலிக்க, “ரொம்ப கோபம் வரும்போல. ஃபர்ஸ்ட் டைம் அவரோட சென்னை போனப்போ கூட மிரட்டித்தான் கூட்டிட்டு போனார்னு அப்பா சொன்னார். இப்போவும் அப்படித்தானா?” என்றார்.
“கோபம் வரும்தான். ஆனா நியாயமான கோபமா இருக்கும். எல்லா நேரமும் அப்படி இருக்கமாட்டார்ம்மா. ரொம்ப ஜாலி டைப்” என்றாள்.
“நம்மளால பட்ட கஷ்டத்துக்கு ஒருமுறை கூட கோபப்படலயா பொன்மணி?” என்றார் வேதனையோடு.
“அதைப் பத்தி நினைச்சாதான்ம்மா கோபப்படுவார்” என்று உண்மையை சொல்லி அன்னையை தேற்றினாள்.
மகிழ்ந்த அஞ்சுகம் “எதோ ஐ.டி கம்பெனினு தெரியும், என்ன வேலை பார்க்குறார்?” என்றார்.
கணவன் செய்யும் வேலைகளை விளக்கி, “சரியான டேலண்ட்ம்மா. நான்லாம் அவர் முன்னாடி ரொம்ப கம்மி. தமிழ் இங்கிலீஸோட ஜெர்மன், ஹிந்தியும் சரளமா பேசுவார். எழுத படிக்கவும் தெரியும்.
என் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் ஸ்வாதி, தென்றல் இருக்காங்கள்ல்ல? அவர் ஒர்க் பண்ற கம்பெனிலயே வேலை வாங்கி கொடுத்துருக்கார். நல்ல சேலரி. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தனியா பிஸ்னஸ் பண்ண ப்ளான் பண்ணியிருக்கார்” என்றாள் பெருமையாக.
பொன்மணிக்கு இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும் என்பதால், “இரண்டு நாள்தான் இருக்கப்போற? ஸ்வீட் செய்யிறேன், சென்னைக்கு எடுத்துட்டு போ, அங்கையாவது மருமகன் சாப்பிடட்டும். நீ போய் குளி, நான் சமையல் பார்க்குறேன்” என்று சமையலறை புகுந்தார்.
அன்னைக்கு சிரமம் வேண்டாமென, “நிறைய செய்யாதம்மா, ஸ்வீட் ரொம்ப கம்மியாதான் எடுத்துப்பார். வீட்டுல இருக்கும்போது அவருக்கு பிடிச்சதை கேட்டு செய்து கொடுப்பேன்.” என்று குளிக்கச் சென்றாள்.
குளித்து வந்த மகளோடு பேசியபடி உணவுண்டனர் மூவரும்.
தந்தையின் வேதனை தீர்த்தே சென்னை கிளம்ப வேண்டும் என, “கலைக்கு என்னப்பா பண்ணலாம்னு இருக்கிங்க?” என்றாள்.
“இருக்கிறதை மூணா பிரிக்கலாம்னு சொன்னா ஒத்துக்கமாட்டேங்குறாடா, என் தங்கைக்கு போட்ட நகைகளை கணக்கு பார்த்து, இத்தனை வருசம் கழிச்சு திரும்ப சொத்து கொடுக்கனுமானு கேட்குறா.
சரி போட்ட நகைக்கு ஏத்தமாதிரி சொத்தை குறைச்சு கொடுக்கலாம்னு சொன்னா அதுக்கும் சம்மதிக்கமாட்டேங்குறா. இந்த சொத்துக்கு பாத்தியமானவங்க நீயும் அவளும் மட்டும்தானாம், யாருக்கோன்ற மாதிரி வேணும்னா கொஞ்சம் அமௌண்ட் கொடுக்கலாம்னு சொல்றா” என்றார் வேதனையாக.
“அம்மா சொன்னாங்கப்பா. அவ சொன்னானு நீங்க ஏன் கவலைப்படுறிங்க? எப்படிபட்ட சூழல்ல என்னை அத்தை வீட்டுல விட்டிங்க? பெத்த பிள்ளைக்கும் மேல பார்த்துக்கிட்டவங்களுக்கு எவ்வளோ கொடுத்தாலும் ஈடாகுமா? இதெல்லாம் அவளுக்கு புரியாது” என்றவள்,
“சொத்தை மூணா பிரிக்காதிங்கப்பா, நாலா பிரிங்க. எங்களுக்கும் அத்தைக்கும் கொடுத்துட்டு நீங்க என்ன பண்ணுவிங்க?” என்றாள்.
“சொத்தை வச்சிக்கிட்டு நாங்க என்னடா பண்ணப்போறோம்?”
“சூழ்நிலை எல்லாருக்கும் மாறும்ப்பா. இப்படி கணக்கு போட்டு வாங்குறவ… பின்னாடி யாரைப் பார்ப்பா? எதுவும் ஈஸியா கிடைச்சிட்டா வேல்யூ தெரியாம போய்டும்.
இத்தனை வருசம் கஷ்டப்பட்டு படிக்க வச்சது பத்தாம இனி பிள்ளைகளை எதிர்பார்க்கனும்ன்ற நிலைமை உங்களுக்கு வேண்டாம். நாலுல ஒரு பங்குதான் கலைக்கு. இஷ்டம்னா வாங்கிக்கட்டும், வாங்கிக்கலைனா அவளுக்குத்தான் நஷ்டம்னு புரிய வைப்போம்”
“எப்படிடா புரிய வைக்கிறது? எப்படி சொன்னாலும் ஏத்துக்கமாட்டேங்குறாளே, மாசமா இருக்க பிள்ளைகிட்ட என்னால கடுமையா நடந்துக்க முடியலையே” என்றார் வருத்தமாக.
“அம்மா சொல்லித்தான்ப்பா எனக்கு தெரியும். இதை சொல்லக்கூட எனக்கு கால் பண்ணல” என்று வருந்தியவள்,
“இந்த டைம்ல கேட்டாத்தான் வேலையாகும்னு ப்ளான் பண்ணித்தான் கலை பேசுறா. நீங்க வீக் ஆகிடாதிங்கப்பா”
ஐம்பது பர்சன்ட் சொத்து தாத்தா சம்பாதிச்சது. இந்த வீடும், மெயின்ல இருக்க இரண்டு கடையும் நீங்க கட்டினது. அந்த கடையும் தாத்தா வாங்கி போட்ட நிலத்துல கட்டினதுதான? கேஸ் போட்டா அத்தைக்கும் உங்களுக்கும் பூர்வீக சொத்து சம பங்கா பிரியும். உங்களுக்கு பிரியிறதுலயிருந்துதான் எங்களுக்கு இரண்டு பாகமா பிரியும்னு சொல்லுங்க.
ஆரம்பத்துல ஏத்துக்கமாட்டா, நாம நம்ம பிடியிலயே நின்னா கணக்கு போட்டு பார்த்துட்டு கண்டிப்பா சம்மதிப்பா. இல்லைனா உள்ளதும் போய்டும்னு புரிய வைக்கலாம்” என்றாள்.
“இதுக்கு அத்தை சம்மதிக்காதுடா, உங்களையும் அவ பெத்த பிள்ளையாத்தான நினைக்கிறா, உங்களோட பங்கு போட நினைக்குமா?” என்றார் தங்கையைப் புரிந்து.
“நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைப்போம்ப்பா, கலையை திருந்த வைக்கனு கேட்டா அத்தை சம்மதிப்பாங்க, அத்தைகிட்ட நான் பேசிக்கறேன்” என்றாள்.
பெரிதாய் தீர்வு கிடைத்த நிம்மதி கிட்டியது அசோகனுக்கு.
“சரிடா… கொஞ்ச நேரம் போய் படு, நைட்டெல்லாம் ட்ராவல் செய்தது டையர்டா இருக்கும்” என்றார்.
பொன்மணிக்கும் கணவனோடு பேச வேண்டியிருக்க, “சரிப்பா” என்று தனதறை செல்ல எழ, “பொண்ணுமணி” என்ற திருனேஷ்வரனின் குரல் ஓங்கி ஒலித்தது.
கணவன் குரல் கேட்டதும் பொன்மணியினுள் பெரும் பரபரப்பு. “மாப்பிள்ளை அஞ்சுகம்” என்று பரபரத்தவாறு அசோகன் கதவை திறந்துவிட்டார்.
திருனேஷ்வரனின் பெற்றோரை எதிர்பார்க்காத அசோகனுக்கு பேச்சு வரவில்லை. அப்படியே அதிர்ந்து நின்றார். “என்னங்க? உள்ள கூப்பிடுங்க” என்று வாயிலருகே அஞ்சுகம் வர, மருமகனின் பெற்றோரைப் பார்த்து அவரும் பிரம்மித்து நின்றார்.
பின்னோடு வந்த பொன்மணி “வாங்க ஆன்ட்டி” என்றாள் திணறலாக.
பிறகுதான் “வாங்க வாங்க…” என்று வணங்கி வரவேற்றார் அசோகன்.
தாம்பூலத் தட்டோடு உள்ளே வந்தார் செல்லம்மாள். மகன் திருமணத்திற்கு பின்னும், கலைசெல்வியின் திருமணத்திற்கு பின்னும் அத்தனை பேசினோமே என்று எந்த குற்றவுணர்வும் இல்லை செல்லம்மாவிற்கு.
செய்யாத குற்றத்திற்கு மகனும் தங்களும் பட்ட அவமானங்களுக்கும் வேதனைக்கும் முன்னே தான் பேசியதெல்லாம் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது.
ஆனாலும் இனி இவர்களின் குடும்பத்தைப் பற்றியோ, பழசை பற்றியோ பேசும் எண்ணமில்லை. மகனின் நல்வாழ்விற்காக, சந்தோசத்திற்காக அனைத்தும் மன்னிக்க முயன்று தன்னை தேற்றித்தான் இங்கு வந்தார்.
அசோகன், “தண்ணி கொண்டு வாடா” என்றார் மகளிடம்.
“உக்காருங்க” என்று சோபாவை காண்பித்தார் அஞ்சுகம்.
மூவரும் அமர்ந்ததும் பொன்மணி தண்ணீர் கொண்டு வர, வாங்கிப் பருகினார் வில்வராஜ்.
“டீ வை அஞ்சுகம்” என்று அசோகன் சொல்ல, “லட்டும் தேங்காபோலியும் காலைல செய்தேன், கிச்சன்ல இருக்கு, போய் எடுத்து வா பொன்மணி” என்றார் அஞ்சுகம்.
பொன்மணி எடுத்து வர, மறுக்காமல் ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர் வில்வராஜும் செல்லம்மாவும். பின்னே திருனேஷ்ரவனிடம் நீட்டியபோது, “சொல்லவேயில்ல?” என கணவனுக்கு மட்டும் கேட்கும்படி உதட்டை அசைத்தாள் பொன்மணி.
“அம்மாதான் சஸ்பன்ஸா போலாம்னு சொன்னாங்க” என்று மனைவி ரகசியமாக கேட்ட கேள்விக்கு சத்தமாய் பதிலளித்தான் திருனேஷ்வரன்.
“நான் போய் டிபன் செய்யிறேன்” என்று அஞ்சுகம் கிச்சன் செல்ல எத்தனிக்க, “வேணாம் அஞ்சுகா. இப்போதான் சாப்பிட்டோம். மருமகளை அழைச்சிட்டு போக வந்துருக்கோம்” என்றார் செல்லம்மாள்.
“சரிங்க” என்ற அஞ்சுகம் “வா பொன்மணி” என்று மகளை உள்ளே அழைத்துச் சென்றார். கலைசெல்வியின் திருமணம் நல்லபடியாக நடக்கும் என்ற ஆசையில் பொன்மணிக்கும் பட்டுப்புடவை எடுத்திருந்தார் அஞ்சுகம்.
தற்போது அதனை எடுத்து “இதை கட்டிக்கோ பொன்மணி” என்று நகைகளை எடுக்கலானார்.
“ம்மா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு, சிம்ப்பிளா போறேனே” என்று பொன்மணி கெஞ்ச, “ம்ப்ச்… ஊர் கண்ணு மொத்தமும் உன்மேலதான் இருக்கும். சிம்ப்பிளா போனா மருமகனுக்கு மரியாதையா இருக்குமா? சீக்கிரம் கட்டு” என்றார் அதட்டலாக.
மன்னிப்பு வேண்ட அத்தனை ஆர்வம் அசோகனுள். ஆனால் தற்போது கேட்பது பழசை கிளறுவது போல் ஆகும் என்பதாலும், பழசை பேசினால் திருனேஷ்வரனுக்கு பிடிக்காது என்று மகள் சொன்னதாலும் அமைதியாக அமர்ந்திருந்தார்.
பொன்மணி தயாராகி வர, தான் கொண்டு வந்த தட்டிலிருந்து பூவை எடுத்து நீட்டினார் செல்லம்மாள். வாங்கி வைத்துக்கொண்டாள் பொன்மணி.
திருனேஷ்வரனும் புடவை வாங்கி கொடுத்திருந்தான். அதனை அலுவலகத்திற்கு அணிந்து செல்லும் பழக்கம் இல்லை என்பதால் வீட்டில் மட்டும் அணிந்து காட்டினாள்.
அப்பொழுது அத்தனை நேர்த்தியாக அணியவில்லை. தற்போது போல் சிகையை நிறைத்திருக்கும் மல்லிகையும் அன்று வைக்கவில்லை. அதனாலோ என்னவோ புடவையில் முதல் முறையாக பார்ப்பது போல் இருந்தது திருனேஷ்வரனுக்கு.
தங்கநிற ஜரிகையோடு பன்னீர்ரோஜா நிற பட்டுப்புடவையில், அதற்கேற்ற நகைகளோடு ஜொலித்த மனைவியை ரசித்துப்பார்த்தான் திருனேஷ்வரன்.
error: Content is protected !!