Skip to content
Post Views: 7,338
அத்தியாயம் 23
ஊருக்கு வர சொல்லி ஆறு மாதமாக கெஞ்சிக்கொண்டிருக்கிறார் செல்லம்மாள். ஊருக்கு செல்ல வேண்டும் என்றுதான் திருனேஷ்வரனும் நினைக்கிறான்.
ஆனால் அன்னை தன்னை மட்டுமே அழைப்பது வருத்தத்தை உண்டாக்க சேலம் செல்வதை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்தான்.
Advertisement
பொன்மணி அங்கே இருப்பதால் சென்னை செல்ல வில்வராஜிற்கும் செல்லம்மாவிற்கும் தயக்கம்.
குற்றவுணர்விலிருந்து மீள்வதற்காக மகளை தங்கை வீட்டில் விட்டிருந்த போதும், வேலை கிடைத்த பின்னேயும் கூட இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது மகளை காண சென்றிடுவார்கள் பொன்மணியின் பெற்றோர்.
பெற்றோரை பார்க்க பொன்மணி கேட்டபோது, என்னால் தனியா இருக்க முடியாது, அவர்களை இங்கு வரச்சொல் என்றுவிட்டான் திருனேஷ்வரன். அவரை தனியா விட்டுட்டு வர முடியாது. இப்போ ரொம்ப பிஸியா இருக்கார். நீங்க சென்னை வாங்கப்பா என்று பொன்மணி பெற்றோரை அழைத்தாள்.
Advertisement
திருமணமான அன்றே சத்யப்ரகாஷால் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே தனக்கு அழைக்கும்படி அக்கறையாக சொன்னது, இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் ஒரு நாள் கூட உங்களால்தான் நான் சிறையில் இருந்தேன் என்ற வார்த்தை வந்ததில்லை.
Advertisement
மகள் மீதுள்ள அன்பால் பழைய விசயத்தை கிளறுவதில்லை. என திருனேஷ்வரனின் குணங்களை நன்கறிந்திருந்தார் அசோகன்.
ஆனாலும் இரு குடும்ப உறவும் சுமூகமாக இல்லாத நிலையில் மகளை காண்பதற்கு செல்ல மனம் நெருடவே, மகள் அழைத்த போதும் அசோகன் அஞ்சுகமும் சென்னை செல்லவில்லை.
Advertisement
அசோகனும் அஞ்சுகமும் இத்தனை மாதங்கள் எல்லாம் மகளை காணாமல் இருந்ததேயில்லை. இதில் பெரிய மகளின் எண்ணம் மனதை காயப்படுத்த, சின்ன மகளை பெரிதாய் தேடியது அசோகனின் மனது.
சிறு வயதிலிருந்தே பொன்மணி நிதானம்தான். தாய் தந்தை நலன் கருதியே அனைத்தையும் யோசிப்பாள். அதனாலேயே கலைசெல்வியை விட பொன்மணி மீது ப்ரியம் அதிகம் அசோகனுக்கு.
வழக்கமாக பொன்மணிக்கு மதிய நேரத்தில் மட்டுமே அழைத்து பேசுவார் அசோகன். திருனேஷ்வரனோடு வாழ ஆரம்பித்த பின்னே ஞாயிற்று கிழமை மகளுக்கு அழைக்கமாட்டார்.
காலையிலிருந்து நான்கு முறை அழைத்துவிட்டார். இரண்டு முறை தவிர்த்த போதும், இரண்டு முறை பேசினாள். வழக்கம்போல் அல்லாமல் பேச வேண்டும் என்பதற்காகவே ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.
தந்தைக்கு தன்னை காணும் ஆவல் வந்துவிட்டது என்று புரிய, சேலம் செல்ல ஆலோசிக்க வேண்டி மாலை வீட்டிற்கு வந்ததும் கணவனுக்கு அழைத்தாள்.
திருனேஷ்வரன் அழைப்பை ஏற்கவில்லை. இரவு ஏழு மணிவரை காத்திருந்து, பின்னே வழக்கம்போல் சமையல் செய்ய கிச்சன் சென்றாள் பொன்மணி.
அழைப்பு மணி ஒலிக்கவும் ஆர்வமாக கதவை திறந்தாள். கையில் மாவு இருக்கவே, “சமைக்க ஆரம்பிச்சிட்டியா?” என்றான்.
“இப்போதான் மாவு எடுத்தேன், இனிதான் சப்பாத்திக்கு ரெடி பண்ணனும், பசிக்குதுங்களா? பத்து நிமிஷத்துல ரெடி பண்ணிடறேன்” என படபடத்தாள்.
“எதுக்கு இத்தனை பரபரப்பு? மணி ஏழுதான ஆகுது? எனக்கு பசியில்ல” என்றவன் கதவை தாழிட்டு அணைத்துக்கொண்டு “சேலம் போலாமா?” என்றான்.
கண்களை அகல விரித்தவள், “நிஜமாவா? நானும் அதை கேட்கத்தான் போன் செய்தேன்” என்றாள்.
“ம்… பத்து மணிக்கு பஸ், டிக்கட் புக் பண்ணிட்டேன், சமையல் செய்யாத, வெளில சாப்பிட்டுக்கலாம், குளிச்சிட்டு வந்ததும் கிளம்பலாம்”
திருனேஷ்வரனுக்கு வீட்டு சமையல்தான் பிடிக்கும் என்பதால் “இல்ல, இங்கையே செய்திடறேன், கால்மணி நேரம்தான் ஆகும், பத்து மணிக்குதான பஸ்?” என்றாள்.
“வேணாம், சமையலோட நிறுத்தமாட்ட, கிச்சன் க்ளீன் பண்ணனும்னு சொல்லுவ, டைமாகிடும். நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள அம்மா, வெண்பாக்கு வாங்கின நகையை எடுத்து வை, உன் அப்பாம்மாக்கு எதாவது வாங்கிட்டு போக டைம் சரியா இருக்கும்” என்று மனைவியை விடுவித்து குளிக்க சென்றான்.
பின்னோடு சென்றவள், “எத்தனை நாள் இருக்கப்போறோம்? உங்களுக்கு டிரஸ் எதாவது எடுத்து வைக்கனுங்களா?” என்றாள்.
“எனக்கு டிரஸ் அங்க இருக்கு, உனக்கு வேணும்னா எடுத்து வை, இரண்டு நாள்தான் இருக்கப்போறோம்” என்றான்.
சேலம் செல்வதில் பொன்மணிக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். கூடவே பயமும், தவிப்பும் இருந்தது. ஆன்ட்டி தன்னை அழைக்கமாட்டார்கள், அவர்கள் அழைக்காமல் இவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லமாட்டார்.
ஆக… தன் வீட்டுக்குதான் செல்ல வேண்டும், இவர் அவர் வீட்டிற்கு செல்வார். இப்படி சூழல் வேண்டாம் என்றுதான் ஆறு மாதங்களாக சேலம் செல்வதை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் அறிவாள்.
இன்று திடீரென கிளம்ப நினைத்திருக்கிறார், ஒருவேளை அவரின் அன்னை தன்னையும் அழைத்திருப்பாரா? என யோசித்திருக்க, திருனேஷ்வரன் குளித்து வந்தான்.
“என்ன அப்படியே உக்கார்ந்திருக்க? ஏதும் பேக் பண்ணலையா?” என்றான்.
“இதோ பண்ணிடறேன்” என்று எழவே, கட்டிலில் அமர்ந்து பொன்மணியையும் அமரச் செய்து, “என் அம்மா அவ்வளோ ஈஸி கிடையாதுதான். ஆனாலும் கெட்டவங்க இல்ல.
நாம நினைக்கிறதுதான் சரினு நினைச்சிட்டு எதாவது செய்வாங்க. பேசுவாங்க. அது தப்புனு தெரியும்போது ரொம்ப வருந்துவாங்க. பயப்படாம கிளம்பு” என்றான் தன்மையாக.
“அப்பாக்கு இரண்டு நாள் பத்தாதே” என கெஞ்சலாக பார்க்க, “இரண்டு நாள் பத்தாதுனு இங்க வர சொல்லு. உன் கூடவே வச்சிக்கோ. ஆனா சேலத்துல இரண்டு நாள்தான் இருக்க முடியும். மன்டே கண்டிப்பா ஆஃபீஸ் வந்தாகனும்” என்று கட்டளையிட்டு கிளம்ப ஆயத்தமானான்.
அவளிடம் இருந்த சிறிய பையைப் பார்த்து, “எல்லாம் எடுத்து வச்சிட்டியா? லக்கேஜ் ஏதும் இல்லையா?” என்றான்.
“இரண்டு நாள்தானே இருக்கப்போறோம்? எனக்கும் அங்க டிரஸ் இருக்கு. ஜுவல்ஸ்க்காகத்தான் இந்த பை” என்றவளிடம் நகையை வாங்கி தனது பையில் பத்திரப்படுத்தி, “கிளம்பலாம்” என்றான்.
“பத்து மணிக்குத்தானே பஸ்? மணி எட்டுதான் ஆகுது. ஒன்பது மணிக்கு கிளம்பலாம்” என்றாள் சின்னக்குரலில்.
மனைவியை அணைத்துக்கொண்டவன், “அங்க போனா தனியா இருப்பேனு யோசிக்கிறியா? பகல்ல கூட சமாளிச்சிடுவேன், நைட் கண்டிப்பா எனக்கு கஷ்டம்தான். இரண்டு நாள்தானே? அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். வா போலாம், உன் பேரண்ட்ஸ்க்கு எதாவது வாங்கனும்ல? அதுக்கு டைம் சரியாகிடும்” என்றான்.
எம்பி கணவன் கன்னத்தை சற்று வலிக்கும்படியே கடித்து “அப்பாம்மாக்கு ஏதும் வாங்க வேண்டாம். அப்பாக்கு நான் பக்கத்துல இருந்தா போதும்” என்றாள்.
“ஸ்…” என கன்னத்தை தேய்த்துக்கொண்டவன், “இந்த பக்கம்” என்று மறு கன்னத்தை காண்பித்தான்.
அங்கேயும் கடித்து வைக்க, “போதுமா? இல்ல வேற எங்கையும் கடிக்கனுமா?” என்றான் குறும்பாக.
இவள் அடிக்கப்போக, மனைவி கையைப் பிடித்தவன், “வேணாம்டீ… கிளம்பிடலாம். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் நல்லவனாகிடுவேன், அப்புறம் சேலம் போறது கேண்சல் ஆகிடும்” என மிரட்ட, “இதோ கிளம்பிட்டேன்” என்று வெளியேறினாள்.
சிரித்தபடி வீட்டைப் பூட்டி “வா” என பொன்மணியின் கையைப் பிடித்தபடி கிளம்பினான்.
அரிபரியில்லாமல் நிறைய பேசியபடி உணவகத்திற்கு சென்று உண்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் பேருந்து நிலையம் வந்துவிட்டார்கள்.
அன்னைக்கு அழைத்து காலை வருவதாக தகவல் கொடுத்தான். செல்லம்மாவிற்கு சந்தோசம் தாளவில்லை. கணவனிடம் பகிர்ந்தார். மகனை வரவேற்றார். மருமகளை வரவேற்கக்கூடாது என்றெல்லாம் இல்லை. மகன் தன்னிலையை புரிந்து தானாக அழைத்து வருவான் என்று அவனின் அறையை சுத்தம் செய்து வைத்தார்.
பொன்மணிக்கு அலுவலக வேலை செய்யும்போது எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. ஆனால் திருனேஷ்வரனுக்கு அப்படியில்லை. வார இறுதியில் வீட்டில் இருக்கும்போதும் வேலை செய்துகொண்டுதான் இருப்பான். ஆனால் பொன்மணி கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதில் கொடுத்துக்கொண்டே வேலை செய்வான்.
கிடைக்கும் நேரமெல்லாம் வேலை பார்ப்பான். ஆனால் வேலைப் பளுவை ஒருநாளும் பொன்மணியிடம் காண்பித்ததில்லை.
பொன்மணி உதவி செய்ய கேட்டாலும், ‘ஆஃபீஸ்க்கும் போய்ட்டு வீட்டுலயும் வேலை செய்யிறல்ல? உன்னை விட எனக்கு வேலை கம்மிதான். நீதான் என்னைவிட சூப்பர்” என்று பாராட்டி, அவளின் வேண்டுகோளை நிராகரித்திடுவான்.
இதோ தற்போதும் கூட நள்ளிரவு வரை பேசிக்கொண்டுதான் பயணம் செய்தான். பொன்மணிக்கு தூக்கம் வருகிறது என்று உணர்ந்த பின்னேதான் தனது தோள் மீது சாய்த்தபடி உறங்க சொல்லி தானும் கண்மூடினான்.
சரியாக நான்கு மணிக்கு “பொன்மணி” என்று அவளின் கன்னம் தட்டி எழுப்பி, “இன்னும் டென் மினிட்ஸ்ல இறங்கனும்” என்றான்.
‘ம்‘ என்று கண்ணைத் தேய்த்து தூக்கத்தை விரட்டி இறங்கத் தயாரானாள். பிறகு பேருந்து நிலையத்திலிருந்து டேக்ஸி பிடித்து காமலாபுரம் பயணித்தனர்.
செல்லம்மாள் என்ன சொல்வாரோ? அவர் வீட்டை கடந்துதானே தன் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று பொன்மணி முகத்தினில் அத்தனை தவிப்பு.
செல்லம்மாள் அவர் குடும்பத்தோடு தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பொன்மணி எதிர்பார்க்கவில்லை. அது நடக்கும்போது நடக்கட்டும் என்றுதான் நினைத்திருக்கிறாள்.
தன்னை கொண்டு கணவனிற்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் இவளின் பெரிய கவலை.
தனது வீட்டை கடந்து டேக்ஸி பொன்மணி வீட்டை நோக்கி பயணிக்கவே, பிறகுதான் “ஏங்க.. நீங்க என்னோட வந்தா ஆன்ட்டி” என்று இவள் சொல்ல, பார்வையால் அடக்கியவன், “உன்னை உன் வீட்டுல விட்டுட்டு என் வீட்டுக்குத்தான் போறேன்” என்றான்.
அதற்கும் பரிதவித்தாள். “ம்ப்ச்… இறங்கு. உன் அப்பாவை எப்படி சர்ப்ரைஸ் பண்ணனும்னு யோசிப்பியா? இப்போவும் என்னையே பார்த்துக்கிட்டு” என கடுகடுக்க, கார் சத்தம் கேட்டு வெளியே வந்தார் அஞ்சுகம்.
“பொன்மணி” என வியந்து விழித்தவர் கண்களில் கண்ணீர் பெருகியது. மகளை அணைத்து தனது ஏக்கத்தை தணித்த பின்னே, “வாங்க தம்பி, நல்லாயிருக்கிங்களா?” என்றார்.
“நல்லாயிருக்கேன். பொன்மணியை கூட்டிட்டு போங்க, நான் ஈவ்னிங் வரேன்” என்று தன்மையாகவே சொல்லி, மனைவியிடம் பார்வையால் விடைபெற்று டேக்ஸிக்கு பணம் கொடுத்து, “அந்த ஃபர்ஸ்ட் கார்னர்ல என்னை இறக்கி விட்டுடுங்க” என்று மீண்டும் காருக்குள் ஏறி தன் வீட்டிற்கு வந்தான்.
காரினுள் இருந்து இறங்குவதற்குள் கதவை திறந்த செல்லம்மாள், “வா திருனேசு, அஞ்சு நிமிஷம் முன்னாடி கார் சத்தம் கேட்டுச்சு, எழுந்து வந்து கதவை திறக்கலாம்னு நினைச்சேன், நம்ம வீட்டுக்கிட்ட நிக்கல, வேற யாரோ போல, நீ வர இன்னும் நேரமாகும்னு நினைச்சேன்” இடைவெளி இல்லாமல் பேசி,
“இரண்டு பேரும் இங்கையே நில்லுங்க” என்று மீண்டும் உள்ளே செல்ல எத்தனிக்க, “நான் மட்டும்தான்ம்மா வந்துருக்கேன்” என்றான்.
“அப்போ கொஞ்சம் முன்னாடி கார்ல போனது நீங்கதானா? அவளை வீட்டுல விட்டுட்டு வந்தியா?”
ஆமாம் என்பதாய் தலையசைக்க, “ஏன்டா?” என ஆற்றாமையோடு கேட்டு உள்ளே சென்றுவிட்டார் செல்லம்மாள்.
இவன் உள்ளே செல்ல, “மருமக வரலையா திருனேசு?” என்றார் வில்வராஜ்.
“வந்துருக்காப்பா, அவளை அவ வீட்டுல விட்டுட்டு வந்தேன்”
“கேட்டிங்களாங்க? நாம அவளை ஏத்துக்கிட்டது இவனுக்கு தெரியாதா? தெரிஞ்சே இப்படி பண்றான்” என கலங்கினார் செல்லம்மாள்.
error: Content is protected !!