Skip to content
Post Views: 1,261
உடலை இறுக்கிப் பிடித்த லோங் ஸ்லீவ் டீஷர்ட்டும், முழங்கால் வரையான வெள்ளை ஜீன்சுமாக கிரௌண்ட்டில் துள்ளிக் கொண்டிருந்தாள், சாருலதா.
அவளின் இளமைத் துள்ளலுக்கு ஏற்றாற்போல் காற்றோடு சரசம் புரிந்து கொண்டிருந்த போனிடைல் முதுகைத் தாண்டி தொங்கி, அவளின் சௌந்தர்யத்துக்கு மென்மேலும் அழகு சேர்த்தது.
அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்த முடிக் கற்றையைக் காதோரம் ஒதுக்கி விடுவதும், இதழ் குவித்து விசிலடித்தபடி தன் சினேகிதியைக் கடுப்பேற்றுவதுமாக படுகூலாகத் தான் இருந்தாள் அவள்.
Advertisement
இறுதி ஷாட்! ஒரே துள்ளலில் எதிரே இருந்தவள் பறக்க விட்ட ஷட்டில் காக்கை தரையோடு திடீர் முத்தமிட வைத்தவள், “யாஹூ!!” என வெற்றிக் களிப்பில் கூச்சலிட,
“இந்த முறையும் ஜெயிச்சிட்ட!” என முகம் வாடத் தன் தோல்வியை ஒத்துக் கொண்டாள், நந்தினி.
“சரிடி, அடுத்த முறை நீ என்ன ஜெயிக்காமலா போய்டுவ!” எனச் சாவதானமாக தோள் குலுக்கிக் கொண்டாள், சாரு.
Advertisement
“ஏன் சொல்ல மாட்ட, இதயே தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்லுவ! சரி தான், உயிர் தோழியாச்சே அப்படினு ஒரு வாட்டியாவது விட்டுத் தந்திருந்தா குறைஞ்சா போய்டுவ?”
Advertisement
“நா நா நா படி (buddy)! இந்த பிரெண்ட்ஷிப்பு.. சிச்சுவேஷன்ஷிப்புலாம் விளையாட்டுக்கு செட் ஆகாது. அதுவுமில்லாம இதுல இன்னொரு விஷயமும் இருக்கே..” என்றாள், கள்ளத்தனமான கடைக்கண் பார்வையுடன்.
அதை உணர்ந்தவளாக, “சரி வந்து தொலை!” என கடுகடுத்தாள், நந்தினி.
மாதமொரு முறை இருவரும் சேர்ந்தாடும் பூப்பந்தில் தோற்று விட்டால் அடுத்து வரும் ஒரு வாரச் செலவு முழுக்க அவர்களுடையது தான் என்பது பெட்! போன மாதத்தில் இரண்டாம் வாரம் முழுவதுமாக நந்தினியின் கைப்பையைக் காலி செய்தவள் இந்த முறையும் கண் சிமிட்டியபடி சிரித்துக் கொண்டிருக்க,
Advertisement
“உன்னை நம்பி இந்த வாட்டியும் தலையாட்டி இருக்கக் கூடாதுடி, தப்பு தான்! தப்பு தான்!” என தலையிலடித்துக் கொண்டாள் நந்தினி.
“போன பஸ்ஸுக்கு கை காட்ட கூடாது செல்லோ, நானெல்லாம் டியூட்டி டியூட்டினு ஓய்வில்லாம ஓடிக்கிட்டு இருந்த காலகட்டத்துல – ஈவிரக்கம் பார்க்காம மண்ணைக் கவ்வ வைச்சூ… என் பர்ஸை காலி பண்ணுன ஆளு தானே நீயி! இப்போ இப்படிலாம் மனசுடைஞ்சு பேசக்கூடாது, ஆமா!” என அவளின் கழுத்தில் கை போட்டுக் கொண்டு நடந்தாள், சாருலதா.
உண்மை தான், மாதம் ஒரு முறை, இரு திங்கள்களுக்கு ஒரு தடவை என பூப்பந்து விளையாடுவது இருவரின் கல்லூரி காலப்பழக்கம்! அதில், தவிர்க்க முடியாத நாட்கள் தவிர இன்று வரை எந்த மாற்றமும் இல்லை.
இதன் மூலம் மன அழுத்தங்களும், வெளிப்படையாக கூறிக் கொள்ளாத கவலைகளும் கரைந்து போவதாக சாருலதா எத்தனையோ தடவைகள் எண்ணியதுண்டு!
சாருலதா என்றும் சுத்தம் பற்றிய விடயத்தில் கறார் பேர்வழி ஆகையால் ரோட்டோர கடைகளிலோ, அவசர உணவுகளிலோ நந்தினியின் பணம் கரையாது.
ஒருபடி மேல் போய், ஷாப்பிங் மால்.. மினி ட்ரிப்.. பேன்ஸி ஐட்டம்ஸ் என சற்று பெரிய கணக்கில் வழித்தெடுத்து விட்டு பல்லைக் காட்டுவாள்.
நந்தினியும் ஒன்றும் அவளுக்குக் குறைந்தவளில்லை. பெட்’டில் தோற்றுப் போய் சாருலதா அப்பிராணியாய் நின்றிருந்த நேரமொன்று, அவளின் கார்டை தேய்த்து புது மாடல் ஐஃபோன் வாங்கி எடுத்த சரித்திரமும் இருக்கிறது.
இவ்வளவல்ல, சொல்லப் போனால் தனியாக ஒரு புத்தகமே எழுதி விடலாம் என்கின்ற அளவுக்கு இருவரின் அலப்பறை கண்ணை கட்டத் தான் செய்கிறது.
களைப்பாக இருக்கிறதெனக் கூறி அன்று சீக்கிரமே நந்தினியிடம் விடைபெற்றுக் கொண்ட சாருலதா, அடுத்த இரு நாட்களில் டியூட்டி முடிந்த கையோடு நந்தினியை இழுத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றதுவும், அங்கே அவளின் கார்ட் தேய்க்கப்பட்டு பல ஆயிரங்கள் நீரோடு கலந்ததுவும் வேறு கதை!
“அடியே! மாசக் கடைசிடி. இப்படி பண்ணிட்டியே! மீதி நாட்களை கழிக்க பிச்சை தான் எடுக்கணும் போலருக்கு..” – இது நந்தினியின் புலம்பல்.
“ஆமா, அதில்ல! இன்னும் ரெண்டு நாளைல உனக்கு சலரி டேட் இல்ல?” என அப்போது தான் நினைவு வந்த தோரணையில் சாருலதா பேச்சை ஜவ்வென இழுத்தாள்.
அதற்கு மேல் அங்கே நின்றிருக்க நந்தினி என்ன பைத்தியமா? ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு சிட்டெனப் பறந்திருந்தாள்.
“ஹாஹா!” என சத்தமாகச் சிரித்தபடி திரும்ப,
“என்ன சின்னம்மா, இந்த முறையும் உங்க பிரெண்ட்டு தோத்துட்டாங்க போல..” என்றார் செக்யூரிட்டி, சன்னமாக முறுவலுடன். பல வருடங்களாக வேலை பார்ப்பவருக்கு இளசுகளின் இந்த விளையாட்டைப் பற்றி நன்கு தெரியும்.
“இல்லயா பின்ன.. நான் யார்னு தெரியும்ல?” என இல்லாத காலரை இழுத்து விட்டபடி முன்னேறி நடந்தவள் நின்று திரும்பி குறும்பாகக் கண் சிமிட்ட,
“அதுசரி!” என கலகலத்தார், பெரியவர்!
சாருலதா அவரது பேத்தி வயது இருப்பாள். செல்வமாகட்டும்! அழகாகட்டும்! அறிவாகட்டும்! குறையின்றி எல்லாம் நிறைவாகக் கொட்டிக் கிடந்தாலும் உள்ளே வரும் போதும், அவரைக் கடந்து வெளியே செல்ல நேரிடும் போதும் இரண்டு வார்த்தைகள் பேசத் தவறியதில்லை. குறைந்தபட்சம் ஒரு முறுவலையாவது பரிசளிப்பாள்.
மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருக்கும் கர்வமோ, அகம்பாவமோ அவளிடம் துளியும் இருப்பதாய் தெரியவில்லை! அதற்காகவே அவளை நிரம்பப் பிடிக்கும் செக்யூரிட்டிக்கு.
ஒரு கையால் அலைபேசியைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தபடி நுழைவாயிலுக்கும், வீட்டுக்கும் இடையிலான கற்கள் பதித்த நடைபாதையில் நடந்தவளின் பார்வை தோட்டத்தில் மேய்ந்தது.
பொதுவாக இந்த நேரத்தில் அவளது மாமனார் வீட்டுத் தோட்டத்து ராட்சத மாமரத்துக்குக் கீழிருக்கும் கல் இருக்கையில் தான் ஓய்வாகச் சாய்ந்திருப்பார். அவரின் ‘அன்றைய நாளைப்’ பற்றி விசாரித்தபடி இனிப்பும், பலகாரத் தட்டுமாக அருகோடு அமர்ந்து அளவாளவிக் கொண்டிருப்பாள், திலோத்தமை!
ஆனால் கடந்த நாலைந்து நாட்களாக திலோவை அடிக்கடி காணக் கிடைத்தாலும் மாமனாரைக் காண சந்தர்ப்பம் கிட்டவில்லை. அவரைப் பற்றி விசாரிக்கும் அளவுக்கு சாருலதாவுக்கும் நேரம் இருக்கவில்லை.
இன்றும் இருவரையும் தோட்டம் பக்கம் காணவில்லை என்றதும் மனம் பிசைந்தது.
“எங்க போயிருப்பாரு?” என தன்னிடமே கேட்டுக் கொண்டபடி உள்ளே நுழைகையில், கூடத்தில் அமர்ந்திருந்த திலோத்தமை கமலமாக மலர்ந்து சிரித்தாள்.
“எப்போவும் ஏழு மணியோட வீட்டுக்கு வந்துடுவ! இன்னைக்கு என்ன ஆளையே காணோம்னு ஹால்லயே உட்கார்ந்திருந்தேன். இப்படி வாயேன்..” என சோபாவைத் தட்டி அருகே அழைத்தாள். என்றுமே அவளது அன்புக்கு சாருலதா அடிமை தான்!
“ஷாப்பிங் போயிருந்தேன் ஆன்ட்டி..” எனக் கூறியபடி கையிலிருந்த பைகளைத் தூக்கிக் காண்பித்தவள்,
“உங்க கிட்ட பேசவே நேரம் கிடைக்கல ஆன்ட்டி, ஐ மிஸ்டு யூ..” என பிதுங்கிய உதடுகளும், கசங்கிய முகமுமாகக் கூறியபடி அருகே அமர்ந்து திலோவின் தோளில் தலை சாய்த்தாள்.
“என்னைப் பார்த்ததும் தான், மிஸ்டு யூ.. ஐ வாஸ் லுக்கிங் ஃபார் யூனு கதை அளப்ப! நான் என்ன வேற வீட்டுலயா இருக்கேன்? மாடியிறங்கி வந்தா நான் டவுன்ஸ்டெயார்ஸ்ல எங்கயாவது தானே சுத்திக்கிட்டு இருக்க போறேன்.. ” – திலோவின் குரல் கமறியது. இருப்பினும் தோள் சாய்ந்திருந்தவளின் தலை கோதிக் கொடுக்க மறக்கவில்லை.
“டியூட்டில பிஸியா இருந்துட்டேனே ஆன்ட்டி! லாஸ்ட் சண்டே நந்து கூட பாட்மிண்டன் ப்ளே பண்ணிட்டு வந்து உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தா உடம்பு ஊகூம் சொல்லிடுச்சு. அப்படியே தூங்கிட்டேன்..”
“இப்போவும் டயர்டா இருக்கேல சாரும்மா? போய் சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வரியா.. ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடுவோம். தனியா சாப்பிட மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கும்மா..”
ஏனோ.. திலோவின் குரல் தன்னிடம் இறைஞ்சுவதாக உணர்ந்தவள் மறுப்பின்றித் தலை அசைத்து விட்டு எழுந்து கொண்டாள்.
‘தனியா சாப்பிட ஒரு மாதிரியா இருக்கு’ என்ற வரி அவளை யோசனை வயப்படுத்தியது.
‘ஆன்ட்டி ஏன் தனியா சாப்பிடணும்? மாமா எங்க போய்ட்டாரு..’ என இயல்பாக எழுந்த வினாவுக்கான பதிலை இரவுணவின் போது அறியலாம் என நினைத்துக் கொண்டாள்.
நினைத்தாற் போலவே அதை வெளிப்படையாக கேட்கவும் செய்தாள்.
அவளறிய, இந்த நேரத்திலெல்லாம் அவர் வீட்டில் தான் இருப்பார். டியூட்டி முடித்து விட்டு வந்து மேல்மாடியோடு அடைந்து கொண்டாலும் அவரின் கனத்த குரல் அவ்வப்போது செவி மோதிக் கொண்டே இருக்கும். அவள் பார்வை டைனிங் ஹாலைத் தாண்டி அவர்களின் படுக்கை அறை வரை பயணித்தது.
“அதை ஏன் கண்ணு கேட்கறே? எல்லாம் இந்த வேலுசாமியோட பையனால வந்தது! எதை செஞ்சாலும் கவனம்னு ஒன்னு இருக்க வேண்டாமா..” – திலோ பெருமூச்செறிந்தாள்.
“வேலுசாமி நம்ம மாமா கடையில வேலை பார்க்கற செக்யூரிட்டி தானே ஆன்ட்டி?”
“ஆமா சாரும்மா!”
“என்ன நடந்துச்சு?”
வாயருகே கொண்டு சென்ற உணவை மீண்டும் தட்டில் போட்டு விட்டு நடந்ததைக் கூறலானாள், திலோ.
“வேலுசாமிக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்ல. உடம்பு சரியாகுற வரைக்கும் என் பங்குக்கு என் பையன் வருவானுங்க ஐயானு சொன்னதும், ரொம்ப நாளா வேலை பார்க்கற மனுஷன் அப்படிங்குற உணர்வுல உன் மாமாவும் சரினு சொல்லிட்டாரு. என்னைக் கேட்டு தான் அதையும் சொன்னாரு!
அப்பறம் கடைக்கு லோடு கொண்டு வர்ற வண்டியை அவனே ஓட்டறதா சொல்லவும், நல்ல திடகாத்திரமான பையன் தானேனு மாமா அவனை அவர் கூட கூட்டிட்டு போனாரு.
வர்ற வழியில ஒரு காரை இடிச்சுத் தள்ளிட்டான் சாரும்மா..”
“எ.. என்ன!!”
“ஆமா, யாருமில்லாத ரோடு தானேனு ஹை ஸ்பீடுல வண்டி ஓட்டுனது பத்தாதுனு ஆக்சிடண்ட் ஆகியும் வண்டிய நிறுத்தாம வந்திருக்கான்னா பாரேன், பின்னோடு உன் மாமா வந்ததால நல்லதா போச்சு. இல்லனா இந்நேரம் கார்ல இருந்தவங்களுக்கு என்ன நடந்து இருக்குமோ..”
கூறும் போதே திலோவின் உடலில் ஒரு நடுக்கம்.
“ஆன்ட்டி ரிலாக்ஸ்!” என அவளை அமைதிப்படுத்த முயன்றவாறே பெரிதாக மூச்சை இழுத்து வெளியேற்றிய சாருலதா,
“இப்போ அவங்க எப்டி இருக்காங்க?” என்றாள், கலவரம் மூண்ட முகபாவனையுடன்.
“பெரியவங்க ரெண்டு பேருக்கும் அடி பெருசா இருந்தாலும் உடம்புல பலம் இருக்குறதுனால எப்படியோ தப்பிச்சிட்டாங்க. அதுலயும் அந்த அம்மாவுக்கு பெட் ரெஸ்ட் மஸ்டுனு சொல்லிருக்காங்களாம்.
ஆனா அந்த சின்ன பையன், ஆறேழு வயசு தான் இருக்குமாம்னு மாமா ரொம்ப வருத்தப்பட்டாரு. கால் போய்டுச்சாம்! காயம் ஆறினாலும் எழுந்து நடக்குறதுக்கான சாத்தியப்பாடு ரொம்ப கம்மினு சொல்லிருக்காங்க.
எல்லாம் இந்த காலத்தோட கைல தான் இருக்கும்மா. மூணு பேரும் உயிர் சேதமில்லாம தப்பிச்சதே கடவுளோட அருள் தான்!!”
“தேங்க் கோட்!” என நெஞ்சை நீவி விட்டவாறு சாருலதா மொழிந்தபோதும் இதுவரை பார்த்தறியாத அந்த சிறுவனின் நிலைமை நெஞ்சை அச்சுறுத்தாமல் இல்லை.
அதிர்வை மறைத்துக் கொண்டு ஒருசில நிமிட இடைவெளிக்குப் பிறகு உணவை அள்ளி திலோத்தமையின் வாயருகே நீட்டினாள்.
வேண்டாமென மறுக்க முடியாதவாறு பாசப் பிணைப்பு வாயைக் கட்டிப் போட்டு விட, தொண்டைக் குழி தாண்டி உணவு இறங்கப் போவதில்லை என்ற உண்மை புரிந்த போதிலும் உணவை வாங்கிக் கொண்டாள். கண்கள் கலங்கின.
“இந்த விஷயமா தான் உன் மாமா ஓடிக்கிட்டே இருக்காரு சாரு. ஓரளவு பணம் படைச்சவங்கனு நினைக்கிறேன். பாதுகாப்பு, கவனிப்புக்கு தனிப்பட்ட முறைல ஏற்பாடு செஞ்சிட்டு நாலே நாள்ல பொண்டாட்டி, புள்ளைய டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாராம். அதுலயும் மாமா தான் ஓடிப் போய் ஹெல்ப் பண்ணுனாரு.
கிடைக்கிற நேரமெல்லாம் அங்க போய் அவங்களைப் பார்த்துட்டு வர்றாரு. அந்த சின்ன பையன் வீட்டுக்கு ஒரே புள்ளையாம்! அஞ்சாறு வருஷம் கழிச்சி கிடைச்சது வேறயாம்..”
சாருவின் கண்கள் ஒரு கணம் விரிந்து, பின் சுருங்கின.
ஏதோ புரிவது போலிருக்கவும், “அவங்க.. அவங்க இப்போ என்ன சொல்லுறாங்க ஆன்ட்டி? ஈஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?” என்றாள் பெரும் தயக்கத்தினூடே!
திலோத்தமையின் கண்களில் நீர் நிறைந்தது.
“ஆன்ட்டி?”
ஆமாம் என்பதாக அவளின் தலை அசைந்த நேரம்,
“நீங்க என்ன சொன்னாலும், அதை என்னால ஏத்துக்கவே முடியாது சார். எனக்கோ என் பொண்டாட்டிக்கோ ஏதாவது ஆகியிருந்தா கூட மனிதாபிமான அடிப்படைல நான் மன்னிச்சி விட்டுருப்பேன், ஆனா உங்க கவனயீனத்தால் காலத்தையும் கட்டிலோட கழிக்க போறது என் பையன் தானே?” என எகிறிக் கொண்டிருந்தார், ஜெயசிம்மன்.
கட்டுப் போடப்பட்டிருந்த அவரது வலது கால் – அந்தப் பெரிய ஹாலின் டீப்பாயின் மேல் இருந்தது. கண்கள், தன் எதிரே குற்றக் குறுகுறுப்புடன் தலை தாழ்ந்து நின்றிருந்தவரை ஊடுருவிக் கொண்டிருந்தன.
“அது வந்து, சின்ன பையன்.. வேலை பார்த்த அனுபவம் கூட பத்தல! நீங்க..”
“இங்க பாருங்க, உங்க மனசு எனக்கு புரியுது. ஆனா நான் இந்த விஷயத்தை இதோட விட்டுட போறதில்ல. செஞ்ச தப்புக்கு கண்டிப்பா உங்க தரப்புல தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும். கொஞ்சம் தவறி இருந்தாலும் நா.. நான் என் புள்ளைய இந்நேரம் இழந்திருப்பேன்..” எனக் கூறும் போதே ஜெயசிம்மனின் கண்ணில் பயம் தெரிந்தது.
“இன்னைக்கு நான் பாவம் பார்த்து இதை இப்படியே விட்டுட்டா, நாளைக்கும் ரோட்டுல கவனமில்லாம தான் உங்க பையன் வண்டி ஓட்டுவான்..”
ஜெயசிம்மனின் குரலில் தொனித்த உறுதி, கேஷவமூர்த்தியிடமிருந்து நம்பிக்கை இழந்த நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியது.
“சார், மெடிஸன்ஸ் கொடுத்து தூங்க வைக்க ட்ரை பண்ணுனாலும் விஷாகன் முனகிட்டே இருக்காரு. டாக்டர் கிட்ட சொல்லிட்டேன், உங்க யாரையாவது கொஞ்சம் பக்கத்துல இருக்க சொல்லுறாரு..” என வாசுதேவ பிரதாப்பால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட தாதிப் பெண் கூறிவிட்டுச் சென்றாள்.
ஜெயசிம்மனின் பார்வை முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரில் பதிந்தது, குற்றம் சாட்டும் விதமாக!!
தொடரும்.
error: Content is protected !!