Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ03_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 03_2

 

முக்கு தெருவிலிருந்த பிள்ளையார் கோவில் முன் கருப்பு மணி மாலையை அவள் கழுத்திலிட்டு அவன் கூறினானே..

 



Advertisement

“இது என் அம்மாது… என் மனைவிக்காகப் பத்திரப் படுத்தி வச்சிருந்தேன்.. இது உன் கழுத்தில இருக்க வரைக்கும் உன்ன என் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது” என்று.

 

எத்தனைக் கனவோடு இதை அணிவித்திருப்பான்..? எத்தனை முறை ஆசையாய் அருகில் வந்தான்? ஒரு முறை? ஒரே ஒரு முறை கூட.. கணவன் என்ற உரிமை அவனுக்குக் கொடுக்கவில்லையே.

Advertisement

 

Advertisement

எண்ணி எண்ணி உள்ளம் கரைந்து… அவனுக்காக உருகிப் போனாள்.

 

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாலைவனம் போல் அவள் வாழ்வும் அவ்வளவு தானா? வழிகள் எல்லாம் அடைபட்டுவிட்டதா? அடைபட முதலில் அங்கு வழி ஏதாவது இருந்ததா? ஒன்றும் புரியவில்லை.

Advertisement

 

நின்றிருந்த சேற்றில் புதைகுழியாய் ரிஷி இருக்கவே காலை ஆற்றில் வைத்தாள், படகாய் கௌரவ் இருக்கிறானே என்ற எண்ணத்தில்! இன்று படகில் நீர் ஏறிக்கொண்டிருக்க… படகோடு அவளும் மூழ்கிப் போகப் போகிறாள்.

நீரில் தானே.. விழுந்தால் பரவாயில்லை.. நீச்சல் அடிக்க முயலலாம். இந்த நிலையிலும் அப்படி தான் அவள் எண்ணினாள்.

 

ஆனால் நீரில் முதலைகள் அல்லவா இருக்கிறது? அது இன்னும் அவளுக்கு புலப்படவில்லை.

[the_ad id=”6605″]

வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாதோ… அவள் வெளியே செல்ல வேண்டும் என்பதற்குத் தான் மாதுரி காத்திருந்தாளோ.. அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றால் அப்பாவிடம் கேட்டு விடுதியில் சென்றிருக்க வேண்டுமோ?

 

காதலித்தவனோடு வந்திருந்தாலாவது பரவாயில்லை. இங்கு அதுவும் இல்லை. எல்லாம் காலக் கொடுமை!

 

அருகிலிருந்த வீடுகளில் போய் பேசி பார்த்தாள். ம்ம்ஹூம்… ஒரு பைசாவிற்கு பிரயோஜனப் படவில்லை. ஒருவருக்கும் ஒரு வார்த்தை புரியவில்லை.

 

நாலா புறமும் நடந்து பார்த்தாள்.. அனல் காற்று புழுதியை முகத்தில் அறைய.. தலையில் முக்காடிட்டுகொண்டு கால் போன போக்கில் நடந்து திரிந்தாள்.  ஒரு பேருந்து நிலையம் கூட கண்ணில் படவில்லை. கண்ணைக் கட்டியது. தொண்டை வறண்டது. சுட்டெரிக்கும் வெயில் மண்டையை பிளக்க மீண்டும் அந்த 10*10 தகர வீட்டைத் தேடி நடந்தாள்.

 

கேள்விகள் பல… அதில் ஒன்று:- என்ன பூமி இது? ஈ காக்கா கூட இல்லாத இந்த பூமியில் ஏன் கூட்டி வந்தான்? வேறு இடமே அவனுக்கு கிடைக்கவில்லையா?

 

இரண்டு:- என்ன சொந்தங்கள் இவர்கள் எல்லாம்? என்னைப் பார்க்க வர வேண்டாம். படுத்துக் கிடக்கும் அவனைக் கூடவா பார்க்க வேண்டாம்? இவர்கள் நிஜத்திலேயே சொந்தங்கள் தானா?

 

மணி நேரம் வாசலிலிருந்த களிமண் திண்ணையில் அசையாமல் அமர்ந்தே இருந்தாள். யோசனை மருத்துவமனையில் இருப்பவனை பற்றியல்ல… அவளைப் பற்றி மட்டுமே. அவன் இறந்து போனால் வீட்டிற்குப் போகக் கூட தெரியாது. சேற்றில் மூழ்கி போயிருக்கலாம். மனம் அடித்துக் கொண்டது.

 

அவள் கனவு கண்ட கிராமம் எங்கே? இது எங்கே…? கண் முன் கானல் நீர் தான் தெரிந்தது. அவளை நினைத்து அவளுக்கே சிரிப்பு தான் வந்தது. அவசியத்திற்கு அவசரமாய் ஓடிவந்ததின் பலன். பெற்றவனிடம் சண்டை போட்டிருக்க வேண்டும். அவள் உரிமையை சண்டையிட்டாவது நிலை நாட்டியிருக்க வேண்டும்! ஓடிவந்தது தவறு! ஒரு முறை ஓடியாயிற்று… இனி ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமோ?

 

நேரம் சென்றது. அமர்ந்த இடத்தை விட்டு  நகர்ந்தாளில்லை.

 

நீல நிற பத்மினி கார் புழுதி பறக்க வீட்டின் முன் வந்து நின்றது. அவன் வேலைக்காகச் சென்ற முதலாளி வீட்டு வாகனம் என்றான் காரோட்டி. அப்படி தான் புரிந்து கொண்டாள். அவள் கேட்ட எதுவும் அவனுக்கும் புரியவில்லை.

[the_ad id=”6605″]

கார் நேரே மருத்துவமனை முன் சென்றது. வந்த வழி புரியவில்லை. வெகு தொலைவில் ஒரு பேருந்து நிறுத்தம் மட்டும் தான் அவள் கண்ணில் பட்டது. அங்கிருந்து தில்லிக்குப் போக முடியுமா தெரியவில்லை. அதற்கும் கௌரவ் தான் பணம் தரவேண்டும்.

 

மருத்துவமனையிலும் வெளியே வராண்டாவில் தான் அமர்ந்திருந்தாள். என்ன மருத்துவமனையோ… சுத்தம் சுகாதாரம் இரண்டுமே இல்லை. புரட்டி கொண்டு தான் வந்தது. அங்கு அனைவருக்கும் ஒரே மொழி… அது ‘வலியில் ஓலம்’. மருத்துவமனையில் பேசப்பட்ட அந்த மொழி மட்டும் யாரும் கூறாமலே புரிந்தது.

 

மாலையானது அவன் கண் விழிக்க. அதன் பின் தான் அவள் கண்ணில் அவனைக் காட்டினார்கள். மனம் நொந்து அமர்ந்திருந்தவளுக்கு ஆறுதல் கூறினான். பயந்து போயிருந்தாள்.

 

மனம் வருந்திப் பேசினான். அவன் நிலையை விளக்கினான்.

 

“இடுப்புக்கு கீழ கொஞ்சம் அடிவாங்கிடுச்சு கோமல். நடக்க இரண்டு மாசமாவது ஆகுமாம். இப்போதைய செலவை முதலாளி பார்த்துக்கிறதா சொன்னார். எப்போ எழுந்து நடக்க போறேன்னு தெரியலை… நீ என் கூடவே இருக்கது தான் எனக்கு இருக்க ஒரே ஆறுதல். ஆனா உனக்கு? என்னை மன்னிச்சிடு கோமல். உன்ன சந்தோஷமா வச்சுக்கணும்னு தான் உன்னை வீட்டை விட்டு கூட்டிட்டு வந்தேன். நானே உன்ன இப்போ அழ வைக்கிறேன்…”, சோகமே உருவாக மொழிந்தான்.

 

யாரை யார் தேற்ற என்று தெரியவில்லை.

 

“ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்க முடியுமா? நான் முதலாளிட்ட பேசி, உன்ன உங்க வீட்டுக்கு அனுப்ப பாக்கறேன்… நீயாவது போய் நல்லா இரு. என்னால உனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நான் வெறும் பாரம் தான் உனக்கு!” என்றான்.

 

அவன் அப்படிக் கூறவும் அவளுக்கு அவமானமாய் போனது. எத்தனை சுயநலமாய் யோசித்திருந்தாள். அவன் நிம்மதியும் படிப்பும் தருவான் என்று மணந்து வந்தவள் அவனுக்கு மனைவியாய் கூட இருக்கவில்லை. இருந்தும் எத்தனை அன்பாய் பார்த்துக் கொண்டான். அவனை விட்டுப் போக நினைத்த மனதைக் கடிந்து கொண்டாள்.

 

இவனை இந்த நிலையில் விட்டுச் செல்வதா? கூடவே கூடாது! மனம் ஒத்துக் கொள்ளவே இல்லை. அப்படிச் சென்றால் அது  நன்றியற்ற செயலாய் மாறிப் போகாதா? கடவுள் கூட மன்னிக்க மாட்டாரே..! ஏதோ, அவளைக் கூட்டிச் செல்ல வாயிலில் வாகனம் காத்திருப்பதாய் அவளுக்கு நினைப்போ?

 

“எனக்கு ஒண்ணுன்னா… என்னை நீ விட்டுடுவியா கௌரவ்?” என்ற கேள்வியில் அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள். அது ‘என்ன ஆனாலும் நான் உன்னை  விடுவதில்லை’ என்ற வாக்குறுதி! இம்முறை அவன் நெகிழ்ந்து போனான்.

 

அவள் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டான்.

 

அவனிட்ட கருமணி கழுத்தில் தொங்க.. இன்பத்தில் மட்டும் அல்ல துன்பத்திலும் சரி பாதி அனுபவிக்க முடிவெடுத்தாள். பயந்து என்ன பயன்? அடுத்த என்ன செய்வது? வேலை வேண்டும்! இங்கு பன்னிரெண்டாவது படிப்புக்கு வேலை இருக்கும் என்று தோன்றவில்லை. ஏதோ முதலாளியாமே.. அவரிடமே கேட்க முடிவு செய்தாள்… மணமுடித்த பெண்ணாய்!

 

அவன் கண்மூடி உறங்க.. அவளும் அமைதியாய் எதிரில் இருந்ததை வெறித்தாள்.

[the_ad id=”6605″]

எத்தனை தான் அடுத்த கட்டத்திற்கு தன்னை தாயார் படுத்திக் கொண்டாலும், நேரம் ஆக ஆக உள்ளுக்குள் ஏதேதோ செய்தது. ஏதோ மெல்லிய நூலில் தான் தொங்கிக் கொண்டிருப்பது போல் ஒரு ஊசலாட்டம். நூல் அறப்போவது தெரிந்தது. இருட்டில் கீழே என்ன இருக்கிறது?

 

அடுத்த நிமிடம் நடக்கப் போவது தெரிந்து விட்டால் நாம் தான் கடவுள். அவளுக்கும் தெரியவில்லை. கண்ணை மூடிக் கொண்டு சுவரோடு சுவராய் அமர்ந்துகொண்டாள்.

 

நன்றாய் படிப்பவள்.. பள்ளியில் படிப்பாளிகளின் பெயர் பட்டியலில் அவள் பெயர் தான் முதலிடம். ஏதேதோ கனவோடு வந்தாள்.. எல்லாம் தரை மட்டம்! வந்திருக்க கூடாது என்பது மட்டும் திண்ணம். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம். இனி இவனை விடமும் முடியாது. என்ன விட முடியாது? அவளால் நினைத்தால் கூட இங்கிருந்து எங்குமே செல்ல முடியாது என்பது தான் உண்மை. பாலைவனத்தில் எங்கும் ஒன்றுமில்லை… எல்லாம் ஒரே போல் இருக்க.. எங்கு செல்ல முடியும்?

 

படிப்பு வேண்டாம்… ஒரு நிம்மதியான வாழ்வாது கிடைத்திருக்கலாம். சொந்தமில்லை பந்தமில்லை தலைசாய்க்க இடமில்லை இருந்தும் இவன் போதும் என்று வந்தவள், ‘இன்று இவனும் இல்லாமல் போனால்?’ தடுமாறிப் போனாள். துணையில்லா தனிமை. வேற்று ஊர்! வேற்று மனிதர்கள். பேசும் மொழி புரியவில்லை! படுத்திருப்பவன் பாவமா இல்லை அடுத்து என்ன செய்யவேண்டும் என்று கூட தெரியாத அப்பாவி பெண் பாவமா?

 

உண்மையிலேயே அவள் நிலை தான் கவலைகிடமானது.

 

இரவாக, அவளை மருத்துவமனையில் வைத்துக்கொள்ள முடியாது. பெண்ணிற்குப் பாதுகாப்பு இல்லை.. அதிலும் அவள் அழகிய பெண்! காய்ந்த மண்ணில் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை!

 

அங்குத் தங்குவது அவளுக்கு ஆபத்தாய் முடியலாம். “என்ன செய்யறது? நீ இங்க இருக்க முடியாது..” என்று அவன் எண்ணிய வேளை அவனின் முதலாளி வந்தார். ஐம்பது வயதிருக்கும் மனிதருக்கு. மூக்கில்லா ராஜ்யத்தில் முறி மூக்கன் ராஜா என்பது போல் அவர்கள் ஊரில் அவருக்கு வசதி அதிகம், அதனால் மதிப்பும் அதிகம்.

 

மருத்துவமனை மற்றும் மருந்து செலவை அவரே பார்த்துக் கொள்வதாய் வாக்கு கொடுத்தார். நடமாட ஆரம்பித்து வேலையில் சேர்ந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பளப் பணத்தில் பிடித்து கொள்வதாய் கூறி பண நெருக்கடிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

 

கோமலின் பாதுகாப்பைக் குறித்து அவன் அவரோடு பேச, அவர் “அழைத்துச் செல்கிறேன்” என்றுவிட்டார். அவனைத் தனியே விட அவளுக்கு மனதே இல்லை.

 

புது மனிதனோடு செல்ல தயங்கியவளிடம், “நான் உன் அப்பா மாதிரி மா! என்னை உன் அப்பான்னு நினைச்சு வாமா” என்றார் அவளுக்கு புரியாத பாஷையில். அந்த மனிதர் சொல்ல… அவன் தான் அவளிடம் விளக்கினான்.

 

“போ… அந்த குடிசையில, தகரக் கதவில்ல உனக்குப் பாதுகாப்பு இல்ல. இங்க நான் கூட இருந்தாலும் என்னால உன்ன பார்த்துக்க முடியாது. முதலாளி வீட்டில ஆள் இருப்பாங்க. அவரும் நல்லவரா தெரியறார். உதவின்னு கேட்டதும் வேலை போட்டுக் கொடுக்க சம்மதிச்சார்… இப்போ உனக்கு அடைக்கலமும் தரேன்னு சொல்றார். யோசிக்காத போயிட்டு காலையில வா!” என்றான்.

 

‘நான் அவனை நேசிக்கக் கூட இல்லையே… அது அவனுக்குத் தெரிந்தும் என் மீது இவனுக்குத் தான் எத்தனை பாசம்.. இந்த நிலையிலும் என்னை பற்றித் தான் யோசிக்கிறான்’ மனம் நீரில் உப்பாய் கரைந்து. ‘எப்பாடு பட்டாவது இவனை மனமாற விரும்பியே ஆக வேண்டும். அவன் உடல் சரியானதும் அன்பு மனைவியாய் இருக்க வேண்டும்.’ ஆயிரம் கனவுகளும் ஆயிரம் உறுதிகளும்..!

 

இன்னும் அவள் இரண்டு பல் காட்டி சிரித்த அரும்பு தான்!

 

மனமே இல்லாமல் அரைமனதோடு தகப்பனாய் தெரிந்த மனிதரோடு கிளம்பினாள். தகப்பன் அரவணைப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன? அவள் தாத்தா காட்டினாரே தகப்பனின் பாதுகாப்பை. 

 

பெரியவரோடு சென்றாள். கொள்ளை அழகு தாராளமாய் கொட்டி கிடந்த அந்த புத்தம் புது மலரின் வசீகரம், ‘பெரியவர்’ சிந்தையைச் சிதறடித்தது.

 

[the_ad id=”6605″]

 

கை குவித்து நன்றி கூற… அவள் கையை கீழ் இறக்கிய ‘பெரியவருக்கு’.. அந்த கையின் மென்மையும், அந்த ஸ்பரிசமும் சிலிர்ப்பை ஏற்படுத்த.. ‘அவர்’ என்ற ஸ்தானம் ‘அவன்’ என்ற நிலைக்கு இறங்கியது.

 

அவன் ‘உன் அப்பா மாதிரி’ என்று கூறினால் போதுமா? உணர வேண்டாமா? அவள் கண்ணிற்குத் தகப்பனாய் தெரிந்தால் போதுமா? கண்ட நாயும் நரியும் தகப்பன் ஸ்தானத்திற்கு உயர முடியுமா?

 

அவன் அவள் அப்பாவும் இல்லை அவன் கண்ணிற்குச் சத்தியமாக கோமல் மகளாகத் தெரியவும் இல்லை. அவள் இளம் பெண். அதுவும் அந்த பாலை வன மணலில் பசுமையாய் கண்ணுக்கு இதமாய் தோன்றும் அழகிய பதுமை.

 

வெட்டி சுவைக்கத் தான் கூட்டிச் செல்கிறான் வேடன் என்று உணராமலே சென்றது அந்த அழகு முயல் குட்டி!

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!