Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ04_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்…

கொல்லை துளசி எல்லை கடந்தால் 4_2

 

சௌமியாவிற்கு கூடைப் பந்து விளையாட்டில் ஈர்ப்பு அதிகம். பள்ளியில் கூடைப் பந்து டீமில் இருக்கவே, முறையான பயிற்சியில் ஈடுபடவென வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவிலிருந்த விளையாட்டு மைதானம் சென்றுவருவாள்.

 



Advertisement

மைதானத்தில் வாரத் தினங்களில் மூன்று நாள் இரண்டு மணி நேரம் பயிற்சி இருக்கும். மற்ற தினங்களில் அவளே தோழிகளோடு பயிற்சி எடுத்துக் கொள்வாள். ஆக சௌமி வாரம் முழுவதும் மைதானத்தில் பயிற்சி எடுக்க, அலர்விழியும் திங்கள் முதல் வியாழன் வரை சௌமியோடு சென்று வருவாள்.

 

பெரிய மைதானம் என்பதால் பலதரப்பட்ட கூட்டமும், பயிற்சியும் இருக்கும்..

Advertisement

 

Advertisement

அது ஒரு சனிக் கிழமை. படிக்க அதிகம் உள்ளதென்று முதல் முறையாக  மாதவனோடு சென்றிருக்கவில்லை. அன்று சௌமிக்கு வகுப்பு இல்லை.. தோழிகளோடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

 

என்றும் போல் அன்றும் அலர்விழி மைதானத்தைச் சுற்றி ஓட ஆரம்பித்தாள். ஓட்டத்தின் இடையே சௌமி, “அக்கா எனக்கு வயறு வலிக்குது வீட்டுக்கு போறேன். பொண்ணுங்க விளையாடி முடிச்சதும் பாள்-ல மட்டும் மறக்காம எடுத்துட்டு வந்துடுக்கா..”, என்று கிளம்பிவிட்டாள்.

Advertisement

 

இருள் கவ்வ ஆரம்பித்தது.  ஓட்டம் முடிந்தது. கூட்டமும் குறைய ஆரம்பித்தது. கூடைப் பந்து பயிற்சி நடக்கும் இடத்திற்குச் சென்றாள், பந்தை வாங்க.

 

பத்து வயது சிறுமி கண்ணில் நீர் திரள புகார் வாசித்தாள். பந்து எடுத்து சென்றவன் இருந்த திசையைக் காட்டினாள் சிறுமி.

 

காட்டிய திசையில்:

 

மைதானத்தின் ஒரு ஓரத்தில் மரத்தடியிலிருந்த சிமென்ட் பென்ச்சில், அமரும் இடத்தில் கால் வைத்து.. தலை வைக்கும் இடத்தில் அவன் அமர்ந்திருந்தான். அரைக் கால் ஸ்போர்ட்ஸ் நிக்கர் அவன் காலின் திடத்தைக் காட்டியது. அமர்ந்திருந்தாலும் காலின் நீளம் காட்டிக் கொடுத்தது அவன் உயரத்தை.

 

அவனோடு கதை பேசிக் கொண்டு இருவர், பதினைந்து.. பதினேழு வயதுகளில்.

 

தென்றல் வருடினாலும் முகத்தில் முடி விழாதபடி ஒட்ட வெட்டிய ஒரு சென்டிமீட்டர் கேசம். அதே ஒரு சென்டிமீட்டர் நீள தாடியும் மீசையுமாக களையான முகம்.

 

அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸியும், அடிடாஸ் ஷூவும்.. அவன் மைதானத்தில் வெட்டி கதை அடிப்பவன் இல்லை என்றது. விளையாடி முடித்திருப்பான் போலும், காபி – வெண்ணிலா கலவை ஐஸ் க்ரீம் நிறம் கொண்ட தேகம் முழுவதும் வியர்வை. துடைத்த பின்னும் நெற்றியில் முத்து முத்தாய் வியர்வை அரும்பி மினுமினுத்தது.

 

போட்டிருந்த விளையாட்டு சட்டையில் கை இல்லை என்பதால் அவன் ஒற்றை விரலில் பந்தைச் சுற்றி சாகசம் காட்டிக் கொண்டிருக்க.. மடித்து வைத்திருந்த புஜத்தில் நரம்புகள் புடைத்து நிற்பது நின்கு தெரிந்தது.

 

“அண்ணா  அண்ணா.. எப்படி ண்ணா ஆம்ஸ் ஏத்துன? நானும் ட்ரை பண்றேன் ஏற மாட்டேங்குது! உன் ஷோள்டர் மட்டும் நல்ல உருண்டு மல மாதிரி நிக்குது.. நீ சொன்னதெல்லாம் செய்யறேன். இருந்தும் எனக்கு ஷோல்டரும் ஏற மாட்டேங்குது… செஸ்ட்டும் ஏற மாட்டேங்குது! பச். சொல்லுண்ணா..”

 

அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில் நின்றிருந்த பொடியர்களிடையே  அவனின் கட்டுமஸ்தான உடலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

 

ஒற்றை விரலில் கூடைப் பந்து சுற்ற.. கையில்லா ஸ்போர்ட்ஸ் ஜெர்சியில் அமர்ந்திருந்தவன் கதை பேசி சிரித்துக் கொண்டிருக்க இவளுக்கு எரிந்தது. அலர்விழி முகத்தில் அப்படி இரு கோபம்… “யாரு டி.. அவனா?”

 

அவள் கை காட்டிய திசையைப் பார்த்த சௌமியின் தோழி,

 

“ஆமா க்கா அந்த கருப்பு பனியன் போட்டிருக்கானே அவன் தான்.. அக்கா, அது சௌமி பாள் தான் க்கா.” என்றாள் ஆதங்கம் தாளாமல்.

 

நின்றிருந்த பதின்ம வயது கருப்பு சட்டையைத் தான் சிறுமி காட்டினாள். மைதானத்தில் சென்று கொண்டிருந்தவன் மேல் பந்து விழவும், பந்தை எடுத்துக் கொண்டான். என்ன கேட்டும் தர மறுத்து விட்டான். போதாக் குறைக்கு ஏதோ காதில் விழக் கூடாத வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டான்.

 

சிறுமி அக்காவிடம் புகார் வாசிக்க. இதோ கிளம்பிவிட்டாள் அக்கா, முகம் சிவக்க.. அவன் வார்த்தைகளில் அப்படி ஒரு கோபம் அவளிடம். மைதானத்தில், ஒதுங்கிச் செல்லவில்லை என்றால் பந்து உடலில் படத் தான் செய்யும்… உடனே எடுத்துக் கொள்வானாமா? வாய் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவானாமா? அதுவும் பிள்ளைகளின் தாய் தந்தையைப் பற்றிப் பேசியதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

 

கருப்பு சட்டைக் காரன் கையில் சுற்றிக் கொண்டிருக்கும் பந்தைத் தான் அடித்து தள்ள நினைத்தாள். ஓடி வந்த வேகத்திலேயே அவள் கை காற்றில் பறந்து வர.. எதிரில் எதோ வருவதை கண்டவன் சட்டென்று தன்னிச்சையாக பின்னால் நகரவும்… அவள் கை அவன் காதை பதம் பார்க்க… அவன் நிலை தவறி பின்னோடு விழ போக.. காற்றில் பிடிமானத்திற்கு அலைந்த அவன் கையை பிடித்து இழுத்து அவனை அமர வைத்தாள்.

 

அனைத்தும் அரை நொடி பொழுதில் அரங்கேறியது.

 

அவனுக்கு நொடி பிடித்தது தன் நிலை உணர.. கோபக்காரன் இல்லை. இருந்தும் கோபம் பீரிட்டது அவனுக்கு. எதிரில் நிற்பது ஆணா.. பெண்ணா என்று கூட அவன் மனதில் பதியவில்லை. பலமான அடி என்பதால் காது வலித்தது அது கொடுத்த கோபம்…

 

எதிரில் நின்ற ஐந்தரையடி பெண்ணின் கழுத்து அவன் பிடியில். மரத்தோடு மரமாய் அவளைப் புதைத்துவிடும் கோபத்தில் அவன்.

 

ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். கூர்மையான ஆளைத் துளைக்கும் பார்வை இருவரிடமும். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றது உடல் மொழி.

 

“அக்கா… இந்த அண்ணா இல்ல…”, ஸ்லோ மோஷனில் ஒரு வழியாய் இருவர் காதிலும் வந்து விழுந்தது சிறுமியின் வார்த்தைகள்.

 

கேட்ட பின்னும் முகமாற்றம் எதுவும் இல்லை அவளிடம். அவன் அவளை விட உயரம் என்றதால் விழி விரித்துப் பார்த்து நின்றவள் நயனம் ‘அச்சோ’ என்றது. அவ்வளவு தான்.

 

இருந்த இரண்டு பொடியர்களும் அண்ணனிடம் அடி வாங்கப் பயந்து தெரித்து ஓடியிருந்தனர்.

 

அண்ணனின் கை மெல்ல அழுத்தத்தைக் குறைத்தே ஒழிய எடுக்கவில்லை.

 

“அக்கா அந்த பையன்.. இவங்க இல்ல..”, மீண்டும் சிறுமி தான்.

 

‘ஆ’ மீண்டும் அந்த நீள விழி அபிநயம் படித்தது.

 

ஒரு மாத காலமாகப் பார்த்த பெண்களிடமெல்லாம் தேடினானே அபிநயம் படிக்கும் விழிகளை.. இன்று பார்த்து நின்றான்.

 

அந்த இராட்சசியின் முகம் நினைவில் இல்லை. அதனால் எதிரில் நிற்பவளை அடையாளம் தெரியவில்லை. அன்று போல் இன்றும் இமைக்கு நிறம் பூசி இருந்தால்.. இதழுக்குச் சாயம் தீட்டியிருந்தால் அவள் தான் என்று பார்த்ததும் தெரிந்திருக்கும். துடைத்து வைத்தார் போன்ற வேர்வை பூத்து மின்னும் தேன் நிற முகம் மட்டுமே அவன் முன்!

 

சற்றுமுன் நாட்டியமாடிய கருவிழிகளும் நீள நயங்களும் ஏதோ கதை கூறியது.

 

பாதி வெந்த நூடுஸ் கொத்துகள் போன்ற அதே கூந்தல்.. இதே பார்வை? பார்த்திருக்கிறானே! அவளா? அவளே தான்! லேடி ஜாக்கி ஜான்!

 

உள்ளுக்குள் சட்டென்று எதோ எழும்பி மறைந்தது.

 

நடந்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்பாள் என்று அவன் பார்க்க… அவளோ கண் கொட்டாமல் அலட்சிய பார்வை அவனைப் பார்க்க..

 

பெண்ணிற்கு தன் நிலை கண்டு பயம் வர வேண்டாமா? ஏன் வரவில்லை. உண்மையாகவே இவள் லேடி ஜாக்கி தானா? என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்.. என்ற எண்ணம் எழ அவள் கழுத்தை விட்டானில்லை. அவளும் பார்வையை நகர்த்தினாள் இல்லை. வலியவன் அசர நேரம் பார்த்து நின்றிருந்தாள். குட்டி புலியின் பார்வை. ஆனால் தீர்க்கமான பார்வை.

 

அவனுக்குள் சுவாரசியம் கூடியது. அவள் தான் இவள் என்றதும்.. அவளைப் பார்க்கும் பார்வை மாறியது.

 

வாயிலிருந்த சவ்வு மிட்டாய் அங்கும் இங்குமாக வாய்க்குள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தது. ஏதோ சவ்வு மிட்டாய்க்காகத் தான் உதடு அசைவது போல் மெல்ல விரிய.. ஒரு எகத்தாள புன்முறுவல் தெரிந்தும் தெரியாமலும்… அத்தனை அழகாய் உள்ளுக்குள் ஒரு சிரிப்பு.

 

எதிரில் இருப்பவரைச் சுண்டி இழுக்கும் புன்முறுவலும்.. புன்முறுவலை ஏந்திய வளமான உதடும், வரைந்து செதுக்கியது போன்ற மிக நேர்த்தியாக மூக்கும் தாடையும்.. ஆளைத் துளைக்கும் பார்வையும்.. மொத்தத்தில் அழகு ராட்சசிக்கேற்ற மன்மத ராட்சசன் தான்.

 

பெண், அவன் கண்களிலிருந்து ஏன் அவள் கண்களைப் பிரிக்கவில்லை? அவன் கண்களில் ஒரு வித காந்தம் இருக்க வேண்டும்… இல்லை அவனை அடையாளம் கண்டிருக்க வேண்டும்? கண்டு கொண்டாள். ஒட்டுமொத்த தோற்றமும் இன்று வேறு. இருந்தும் கண்டு கொண்டாள்.

 

அத்தனை கம்பீரமாய் நிற்பது அவனே தான். என்ன.. இன்று முற்றிலும் வேறு தோரணையில். ஒரே லுக்கில் அதிக நாள் இருக்க மாட்டான் போலும். அத்தனை அழகாய் இருந்த முடியை எப்படி கத்தரித்தான்? வழுவழு முகத்தில் மீசை தாடி? இதுவும் நல்லா தான் இருக்கு!

 

“அண்ணா… அக்காவ விடு ண்ணா..”

 

‘ஏன் உன் அக்காக்கு வாய் பேச முடியாதா’ என்ற பார்வை நிற்பவளிடம் வீச..

 

‘முடியாது. இப்போ என்ன?’ என்பது போல் அவள் பார்வையில் அப்படி ஒரு திமிர்.

 

அவன் கண்கள் அவள் முகத்தை அளவெடுக்க… அவள் கண் அவன் முகத்தைப் பார்த்தே நின்றது. ‘விடு’ என்ற மன்றாட்டை அவளிடம் எதிர்பார்த்தால்.. அது கிடைக்காது என்று தெரிந்து கொள்ள பத்து நொடியே தேவைப்பட்டது அவனுக்கு.

 

கையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான்.. அசையவில்லை அவள். ‘ம்ம் அப்புறம்? ரொம்ப பயந்துட்டேன்..’ என்று பார்க்க, தெள்ளத் தெளிவாக அவள் ‘போடா’ அவனுக்குப் புரிந்தது.

 

போனால் போகட்டும் என்று அழுத்தத்தைக் குறைத்த கை, கழுத்தை விட்டு ஒரு அங்குலம் கீழே இறங்கியது. அவள் கண் இடுங்கியதே ஒழிய… அவள் இன்னும் அசையவில்லை. ‘என் கையில தான் உனக்கு சாவு’ என்பதான ஊடுருவும் பார்வை.

 

உள்ளுக்குள் அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு! ‘ஆளும் பார்வையும்’ என்ற சிரிப்பு!

 

நூடுல்ஸ் தலையிலிருந்து எட்டிப் பார்த்த வியர்வை துளி ஒன்று மெல்ல மெல்ல நெற்றியில் இறங்க.. இவன் பார்வை அதன் மேல் விழுந்தது. பின்னோடு வந்த அடுத்த துளி இதோடு சேர சுறுசுறுப்பாக ஓட ஆரம்பித்தது வியர்வை துளி.. புருவத்திலிருந்து இமைக்குச் சொட்ட.. இமையில் தேங்கி நின்ற சொட்டு நீரில் இவன் பார்வை பதிந்து போனது.

 

இமை மூடி விழி திறக்க.. மொட்டு மலர்ந்த உணர்வு அவனுக்குள். அந்த சொட்டு உவர்ப்பு நீர் அவன் கையில் சொட்டியது. அவளைப் போலவே அதற்கும் உஷ்ணம் அதிகம். கையின் இறுக்கம் முற்றிலும் தளர்ந்தது.

 

அப்பொழுது தான் ஓடி முடித்திருக்க… அவள் உடல் முழுவதும் வியர்வையால் தொப்பலாக நனைந்திருந்தது. நீர் மின்சாரத்தை நன்கு கடத்துமாமே.. அதை மட்டும் தான் கடத்துமா? அவன் உள்ளங்கை உணர்ந்தது ஈரம் மட்டுமல்ல, அவள் இதயத் துடிப்பும் தான்.

 

முதல் முறை உள்ளங்கை உணர்ந்த இதயத்துடிப்பு… பேச்சற்று சுற்றம் மறந்து  நின்றான்.

 

மொத்தம் அறுபது வினாடிகள் முடியவில்லை… பார்வைகளின் யுத்தம் முடியவில்லை. பெண் அவனை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தாள். அவன் சிந்தனையில் அவள் மட்டும் தான்… எப்படி இவளால் இப்படி அசையாமல் நிற்கமுடிகிறது. வியந்த பார்வை அவனிடம்.

 

இவள் இடத்தில் வேறொருத்தி இருந்திருந்தால் குறைந்த பட்சம் கண்ணிலாவது பயத்தை காட்டி இருப்பாள். தொண்டை.. ஒரு முறை கண்டிப்பாக ஏறி இறங்கியிருக்கும். இவளுக்குப் பயம் தான் இல்லை… போகட்டும்! அவள் கழுத்து என் கையில்… பதட்டம் கூடவா வராது?

 

அசட்டு தைரியம் என்று நினைத்து முடிக்கும் முன்.. அவள் விடுபாட்டிருந்தாள். ‘அசட்டு’ என்ற சொல் காணாமல் போயிருந்தது.

 

கீழே இருந்த பந்தை நின்றவாக்கிலேயே ஆகாயத்திற்குக் காலால் தட்டி விட்டு ஒற்றைக் கையால் பந்தை பிடித்தவள் பார்வை முழுவதுமே அவன் மேல் தான். இன்றும் கொண்டையிட்டிருந்த ‘பன்’னில் நிற்காமல் சில நூடுல்ஸ்கள் தொங்கிக் கொண்டிருக்க.. மழை நின்றபின்னும் தென்னங்கீற்றிலிருந்து நீர் சொட்டுவது போல்.. தொங்கி நின்ற ஸ்ப்ரிங் முடியிலும் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

 

சவ்வு மிட்டாயை மென்றானா… இல்லை அவன் சிரிப்பை மென்றானா தெரியவில்லை.. வாய் அசைய இதழ் மந்தகாசமாக விரிந்தது.

 

விட்ட ஓட்டத்தை மீண்டும் தொடர்ந்தாள் அலர்விழி. ஒரு முறை நின்று திரும்பு பார்த்தாள். அவளைத் தான் பார்த்து நின்றிருந்தான், எபி.

 

கண் மூடி காட்சிகளை உள்ளிழுத்து நீண்ட மூச்சை வெளியே விட்டு கண் திறக்கும் முன் அவள் சென்றிருந்தாள். மயக்கம் தெளியும் வேளை, வலது காது, சுண்டு விரல், மணிகட்டு ஆகிய இவைகளில் வலி தெரிய ஆரம்பிக்குமாயிருக்கும்.

 

உள்ளங்கையைப் பார்த்தான்.. வெகு நேரம் அவன் ஈர உள்ளங்கையைப் பார்த்தே நின்றிருந்தான். உள்ளங்கையில் இன்னும் அவள் இதயம் துடித்துக் கொண்டே இருந்தது.

 

உள்ளங்கையிலிருந்து அவள் அவனைப் பார்த்தாள். மழையில் நனைந்த ரோஜா மலர் மீது ஒட்டி நிற்கும் மழைத் துளிபோல் அவளின் அந்த பெரிய அழகிய நயங்களின் நீளமான இமையிலிருந்து உவர்ப்பு நீர் ஒன்று சொட்ட தயாராய் நின்றது.

 

உள்ளங்கையை மூடியவன் இதழில் மென்மையான புன்முறுவல்.

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!