அ05_2 Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 5_2
மூக்கிலும் தொண்டையிலும் சிக்கிய திரவம் இருமலை நிற்க விடவில்லை.
Advertisement
அவள் கையை வானுக்கு உயர்த்தி தலையை பின்னுக்குக் கொண்டு சென்று மெல்லத் தலையையும் முதுகையும் தட்டி விட… சிறிது நேரத்தில் இயல்புக்கு வந்தாள்.
Advertisement
“யூ ஓக்கே?”, கேட்டவன் முகத்தில் ‘அச்சோ..’ என்ற பிரதிபலிப்பும். ‘கண்ணழகிக்கு என்னை தெரியுது’ என்ற மன நிறைவும்.
Advertisement
எதிரில் அமர்ந்தவன் டிஸ்யூ பாக்ஸை அவளிடம் தள்ளி வைத்து, அதிலிருந்து ஒன்றை உருவி தன்னை துடைத்துக் கொள்ள, வைத்த கண் எடுக்காமல் அவனைத் தான் பார்த்தாள். அவன் தான். அவனே தான். இதயத் துடிப்பு அவள் காது வரை கேட்டது.
Advertisement
முதல் முறை + இரண்டாம் முறை பார்த்ததின் கலவையான தோற்றம் இன்று.
இடது பக்கம் வகிடெடுத்து தலை வாரியிருக்க.. வலப் பக்க கேசம் மட்டுமே நீளம், மற்றது வெறும் ஒரு சென்டிமீட்டர் நீளமே. நீளமான அடர் கேசம் ஜெல்லின் உதவியோடு படிந்து நின்றது. இன்று தாடி இல்லை. மீசையின் ஓரத்தில் சின்ன முறுக்கல்.
இப்படி எல்லாம் யாரைக் கவனித்தாள்? இவன் கண் ஈர்த்தது.. சுண்டி இழுக்கும் பார்வை ஈர்த்தது.. அவளைக் கண்டதும் மந்தகாச புன்னகை சிந்தும் உதடு ஈர்த்தது.. ஒவ்வொரு முறையும் மாற்றும் தோற்றம் ஈர்த்தது.. மொத்தத்தில் ஈர்த்தான்… கவனித்தாள்.
“ஹாய்…” என்றான். அவன் ஆண்மை ததும்பிய குரல் ஏதோ செய்தது. ஆராய்ச்சியை நிறுத்தி அவன் கண் பார்த்தாள்.
பேச்சு வரவில்லை. இன்றும் முட்டைக் கண்கள் விரிந்தது. ஆனால் அன்று போல் ‘நீயெல்லாம் பெரிய இவனா’ என்ற திமிர் மொழி இல்லை. அதிகப்படியான ஆராய்ச்சி அவளிடம். பார்வையில் ‘நீ என்ன(னை) டிஸ்டர்ப் செய்ற’ என்ற தகவல் அடங்கி இருந்தது.
அவன் ஆராய்ச்சி எல்லாம் கடந்திருந்தான். அதிகப்படியான ரசனை அவன் பார்வையில்.
எதிரில் இருந்த மோகினிப் பிசாசின் நெற்றியில் தொங்கி நின்ற ஸ்ப்ரிங் முடியை இழுத்து அதன் நீளம் பார்க்கத் தோன்றியது.
‘என் பிம்பத்தை ஏந்தும் உன் விழியின் வெப்பமும் குளுமையும் ஒன்றாய் என்னைப் பொசுக்குகின்றது’ என்று கூற மனம் பரபரத்தது.
என்னை கூறு போடும் உன் நயங்களில் இன்னும் அடர்த்தியாக மை தீட்டேன் என்று கூற மனம் ஆசைக் கொண்டது.
பளபளத்த மாந்தளிர் உதட்டில் சாயம் உள்ளதா இல்லையா என்று உற்றுப் பார்க்கத் தோன்றியது.
பாரதியின் புதுமைப் பெண்ணின் அடாவடி குணத்தைச் சீண்ட ஆசை தோன்றியது. இருந்தும் இதை எதையுமே முகத்தில் காட்டினான் இல்லை.
இருவர் விழிகளும் சந்தித்தது. இருவர் பார்வையிலும் அலைப்புறுதல் இல்லை. கள்ளத்தனம் இல்லாத நேர்மையான பார்வை அது.
அவளை வம்பிழுக்காமல் போனால் அவனுக்குத் தான் தூக்கம் வராதே.. “ஜூஸ் கொஞ்சம் புளிப்பில்ல?”, என்றான், எழுந்த நமுட்டு சிரிப்பை மறையாமல்.
‘மூஞ்சில துப்பினாலும் நீ அடங்க மாட்டியா டா?’ அழகிய சிலையிடம் உரைக்க பதிலில்லை என்றாலும் அந்த நீள நயங்கள் சுருங்கி முறைத்தது.
அவன் சிரிப்பு விரிந்தது. முகம் துடைக்க… பிசுபிசுப்பு குறைந்தபாடில்லை.
“வாஷ் ரூம் போகணும்ன்னா… வெளியில லெஃப்ட் சைட் எண்ட்-ல இருக்கு. எனக்கு டூ மினிட்ஸ் தாங்க… ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். ரொம்ப ஸ்டிக்கியா இருக்கு.”, கூறிவிட்டு எழுந்தான்.
அவள் காதில் விழுந்ததா? விழுந்தாலும் எங்கும் செல்லும் நோக்கமில்லை… சேதாரம் அவன் சந்தன முகத்திற்கும் அதை ஒத்த பளீர் சந்தன சட்டைக்கும் தானே.. அவன் நகர அவள் விழி அவனையே தொடர்ந்தது.
ஏன் மீண்டும் மீண்டும் இவன்? அவன் மேல் துப்பியதுக்கு மன்னிப்பைக் கேட்க வேண்டுமோ? அன்றே அறைந்ததிற்குக் கேட்டிருக்க வேண்டும்! இன்றும் கேட்டிருக்க வேண்டும்! இன்றும் கேட்க தோன்றவில்லை. இவனைப் பார்த்தால் மூளை செயலிழந்து போய் விடுமோ? அவன் சீண்டுவது தெரிந்தது. ஏனோ அதுவும் பிடித்தது.
‘ரொம்ப மேன்லியா… ரொம்ப அழகா இருக்கான். வாய்ஸ் கூட சூப்பர். ரொம்ப நல்லவன் போல முகத்தில துப்பி இருக்கேன்… ஒரு நிமிஷம் முகம் கோணல.’ அவன் சிந்தனையில் பதினெட்டு வயது பெண் கரைய..
அறையைச் சுத்தம் செய்யும் பெண்ணோடு வந்த வனிதா, இவளை வேறு அறை கூட்டிச் சென்று ஆப்பிள் ஜூசை கொடுத்து அமரவைத்துச் சென்றாள்.
‘இங்க தான் வேலை பாக்கறானோ?’ மனம் அவனையே சுற்றி வந்தது. இன்று வரை நினைக்காதவனை இன்று சேர்த்து வைத்து ஒட்டு மொத்தமாக நினைத்தாள். கையிலிருந்த தாளில் கவனமில்லை.
இம்முறை ஜூசை தொட்டுக் கூட பார்க்கவில்லை. முதுகு பின் கதவு தட்டப்படும் சத்தம்.. வந்து விட்டானா? மனம் பரபரத்தது.
“ஹாய். ஐ அம் விஜய். அப்புறம் சொல்லுங்க. என்ன பண்றீங்க?”
புன்னகை முகமாக எதிரில் அமர்ந்தவனைப் பார்த்தவள் முகத்தில் வெளிச்சம் இல்லை.
மெல்லத் திரும்பி வாசலைப் பார்த்தாள். கதவு மூடியிருந்தது. முகம் விழுந்து போனது. என்ன எதிர்பார்க்கிறாள்? அவனையா?
அப்படி தான் போலும். எதிரில் அமர்ந்திருந்த புதியவன் மேல் அவசியமே இல்லாமல் கோபம் வந்தது.
“மிஸ்.அலர்விழி?”
“ம்ம்..?”
கவனம் அவள் கையிலிருந்த தாளில் எப்படியோ பதிய, ‘வந்த வேலையை மட்டும் பாக்கிறியா?’ மனம் கடிய…
வேண்டிய விஷயங்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.
“உங்களுக்கு சனி ஞாயிறு க்ளாஸ். அடுத்த பேட்ச் நெக்ஸ்ட் மந்த் மிட்-ல தான். லேப் ஃபெசிலிட்டி பாக்கறீங்களா?”, விஜய் வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றான். “மேல ரெண்டு ஃப்லோர்ல லைவ் ப்ராஜெக்ட்ஸ் போகுது. கடைசி ரெண்டு மாசம் உங்களுக்கும் அதுல இன்வால்வ் ஆக முடியும்.” எரிந்து கொண்டிருந்த ஆசை நெருப்பில் நெய் ஊற்றினான்.
அந்த பிரமாண்டமான லேப்பை பார்த்தவள் கண்கள் இரண்டிலும் ஏக்கம் பொங்கி வழிந்தது. படிக்க ஆசை இருந்தும்.. திறமை இருந்தும்… சிலருக்கு அது ஏக்கமாகவே நின்று விடுவது பாரமான விஷயமே.
படிப்பு சம்பந்தமாக அனைத்தும் கேட்டு முடிக்கவும் அவன், “ஹோப் டூ சீ யூ அரௌண்ட் மிஸ்.அலர்விழி”, என்று கழண்டுக் கொள்ள, மீண்டும் வனிதா வந்தாள்.
நீண்ட நாட்களாக இருவரும் தோழி போல் பெரிதாக இதழ் விரித்தாள். மிஸ்.யூனிவர்ஸ் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இப்படி தானே சட்டென்று பெரிதாகச் சிரிப்பார்கள்?
அருகில் அமர்ந்தவள், “இந்த ஜூஸ் பிடிக்கலியா? ஆரெஜ் ஜூஸ் கொண்டு வரட்டுமா? ஃபீல் ஃப்ரீ மிஸ்.அலர்விழி”, சிரித்துக் கொண்டே முகம் பார்க்க… மார்க்கெட்டிங் திறன் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை அலர்விழியால்.
“இல்ல இல்ல இது ஓகே..”, அருகிலிருந்த ஜூஸ் ஒரு வாய் உள்ளே சென்றதும், “உங்க ஃபீஸ் தான் பிடிக்கல. மாத்த முடிஞ்சா புண்ணியமா போகும்.”, சிரித்தாள்.
அவள் பதிலுக்கு மீண்டும் இழுத்துப் பிடித்து இதழை விரித்தாள் வனிதா.
“சொல்லுங்க அலர்விழி. இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“முதல்ல ஒருத்தர் வந்தேரே..”, அலர் தயங்க.. வனிதா உதட்டிற்குள் எழுந்த சிரிப்பை மென்று விழுங்க.. இவளுக்கே இவள் அல்பத்தனம் முகத்தில் அறைந்தது.
கேவலமான உணர்வை உள்ளுக்குள் புதைத்து, “அவர் மேல் ஜூஸ் ஸ்பில் பண்ணிட்டேன்.. அது தான்…”, இவள் இழுக்க..
“ஓ… அவருக்கு இன்டெர்வியூ இருக்கு. கொஞ்சம் பிஸி.”
‘அவர் பேர சொல்லேன்..’ கேட்டாள் இல்லை.
‘லூசு என்ன பண்ற?’ தலையைச் சிலுப்பியவள், “வீக் எண்ட் மட்டும் தானே க்ளாஸ். எனக்கு டைம் இருந்தா வீக் டேஸ் காலேஜ் முடிஞ்சதும் லேப் யூஸ் பண்ண வரலாமா?”
“அஃப் கோர்ஸ் எஸ். அடுத்த எட்டு மாசம் சென்டர் ஓப்பன் ஆரதுல இருந்து ஷட்டர் க்லோஸ் ஆகர வரைக்கும் எப்போ வேணும்னாலும் லேப் யூஸ் பண்ணலாம். லேப்-ல ஹெல்ப் பண்ண அங்க தனியா ஃபேக்கல்டி இருப்பாங்க”.. ஏதேதோ கூறினாள். பெண்ணிற்கு ஆசை அலைமோதியது. ஆனால் இங்குப் படிக்க விரும்புவது கானல் நீர் என்று உணர முடியாத அளவிற்கு முட்டாளில்லையே அவள்.
“நான் ஸ்டூடென்ட்! எனக்கு கோர்ஸ் ஃபீஸ்ல டிஸ்கௌண்ட் கிடைக்குமா? ஸ்காலர்ஷிப் மாதிரி எதுவும் இருக்கா?”
“மார்னிங் எயிட்க்கு ஒபன் ஆகும். நைட் நைன் வரைக்கும் இன்ஸ்டிடியூட் இருக்கும். கம்யூடர் அவர்ஸ் அன்லிமிடெட். எயிட் மன்ந்ஸ் க்லாஸ் ட்யூரேஷன் வரைக்கும் நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்.. லேப் செய்யலாம். லேப்ல எப்போவும் ஹெல்ப் பண்ண ஃபேக்கல்ட்டி இருப்பாங்க.
வீக் என்ட்-ல பெரிய பெரிய கம்பனில இருக்க பெரிய லெவல் டெவலபர்ஸ் வந்து கெஸ்ட் லெக்சர் குடுப்பாங்க. 90% எடுத்து இங்க பாஸ் ஆனா.. உங்க காலேஜ் மார்க் 80% மேல இருந்தா கண்டிப்பா எம்.என்.சி-ல ப்ளேஸ் பண்ணுவோம். 100% ஜாப் கேரண்டி! நீங்களே சொல்லுங்க… இவ்வளவு ஃபெசிலிட்டிக்கு இந்த கோர்ஸ் ஃபீ கம்மி தானே. நீங்க நாலு இடம் விசாரிச்சு பாருங்க. நாங்க அவ்வளவு காஸ்ட்லி எல்லாம் இல்லை மிஸ்.அலர்விழி”
புன்னகைக்க மட்டும் தான் முடிந்தது. குனிந்து எண்களில் விழி பதித்தாள். லட்சத்து இருபதினாயிரம்!
“கண்டிப்பா யூஸ்ஃபுல்லா இருக்கும்.”, மீண்டும் வனிதா தான்.
இருக்கும் தான்… யார் இல்லை என்றது. ஆசையாகத் தான் உள்ளது. தொண்டையைக் கனைத்தவள், நடுக்கத்தை மறைத்து கொஞ்சமும் கெத்து குறையாமல், “ஸ்டேட் லெவெல் டாப்பர் நான். ஸ்காலர்ஷிப் குடுக்க முடியமான்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்ல முடியுமா?”
வனிதாவிற்குத் தெரிந்து விட்டது. இது தேறாத கேஸ் என்று. “அப்படி எல்லா ஒன்னும் இல்ல மிஸ்”
“பச்.. நிறைய சென்டர்ல இருக்கே… நான் உங்க பாஸ் கிட்ட பேசி பாக்கறேன். அப்பாயின்மென்ட் கிடைக்குமா?”
அவளின் விடா முயற்சி கண்டு வனிதாவிற்குச் சிரிப்பு வந்தது போலும்… அடக்கிக் கொண்டாள்.
இவளுக்குக் கோபம் வந்தது. மற்றவரின் இயலாமை நகைப்புக்குரியது இல்லையே..
“நான் ஜோக் சொல்லலியே..?” என்றாள்.
அவள் “சாரி” எனவும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். “நீங்களா சொன்னா எப்பிடி? உங்க மேனேஜ்மென்ட் கிட்ட பேசிட்டு எனக்கு சொல்லுங்க ப்ளீஸ். இல்ல நான் பேச ஏற்பாடு பண்ணி தாங்க.”
ஜானகி ஆண்டி கொடுத்திருந்த எஸ்தரின் விசிட்டிங் கார்டில் தனது நம்பரை எழுதி கொடுத்தாள்.
எம்.டியின் விசிடிங் கார்டை பார்த்ததும் வனிதாவிடமிருந்து, “மேடம் கிட்ட பேசிட்டு சொல்றேன் மிஸ்.” என்ற திருப்தியான பதில் வரவும் மீதி இருந்த ஜூசை வாய்க்குள் கடத்தியவள்,
“உங்க கால்-க்கு காத்திருப்பேன். பை.”, என்று கிளம்பினாள்.
வெளியே செல்லும் போது அவள் கண், முக்கு முடுக்கு என்று பார்வையில் தென்பட்ட இடமெல்லாம் அலசிக் கொண்டே சென்றது. எதிர்பார்த்த விடயம் கண்ணில் படவில்லை.
‘பச்!’ பெருமூச்சோடு வெளியே சென்றவளுக்குக் கண்டிப்பாகத் தெரியும் மீண்டும் இங்கு வரும் வாய்ப்பில்லை என்று.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
