Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ09_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  09_1

 

 

வாய் வரை புதைகுழியில் மூழ்கிப் போக.. இனி பிழைக்கவே வழி இல்லை என்று எண்ணி மனதை மரணத்திற்கு தயார் செய்யும் வேளை.. இன்னும் முடியவில்லை பெண்ணே என்று ஒருவன் அவள் முன் தரிசனம் கொடுத்தால்.. அவள் மனதில் அவன் எப்படித் தெரிவான்? தெய்வமாய் தெரிவானோ? மற்றவர்களுக்கு எப்படியோ..? அப்படி தான் மூர்த்தியும் அவள் கண்ணுக்குத் தெரிந்தான்! அவளைக் காக்க வந்த தெய்வமாய்!



Advertisement

 

இதயம், தன் இயக்கத்தை நிறுத்தி அவனைப் பார்த்தது. அன்று போல் இன்றும் கண் இமைக்க மறந்தது. ஆனால் உணர்வுகள் மட்டும் வேறு!

 

Advertisement

இப்படி தானே.. இதே தோரணையில் தானே முதல் முதல் பார்த்தாள்.. ஆனால் அன்றைய துள்ளலும்.. துறுதுறுப்பும்? இருவரிடமும் இல்லை என்பது தான் நிஜம். காலமோ.. காயமோ ஏதோ ஒன்று இருவரையும் மாற்றியிருந்தது.

Advertisement

 

பாண்டியனின் தங்கை பஞ்சவர்ணத்தின் திருமணமன்று தான் முதன் முதலில் மூர்த்தியை பார்த்தாள். அவன், பாண்டியனின் தூரத்து உறவு என்றாலும் நெருங்கிய நட்பும் சகோதரனும்.

 

Advertisement

ஊர் முழுவதுமே அனைவரும் ஒருவருக்குள் ஒருவர் உறவு தான். பாண்டியன் தாய் சுந்தரிக்கு அத்தை.. சுந்தரியின் தாய் கோமலுக்கு சித்தி. நேர் சொந்தங்கள் இல்லை என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் ஒன்றுக்குள் ஒன்று தான்.

 

[the_ad id=”6605″]

 

தாத்தா மட்டுமே இருந்த நாட்கள் அவை. அனைத்து தேவைகளுக்கும் நான்கு வீடு தள்ளியிருந்த சித்தியும் சுந்தரியும் தான் கோமலுக்கு. புடவையோ.. பூவோ.. எதுவென்றாலும் சித்தி, எழிலரசி தான் பார்த்துக்கொண்டார்.

 

அன்றும் அவர் தான் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார் இரு பெண்களையும்.

 

சுந்தரி அவளாகவே பின்னல் போட்டுக் கொண்டிருக்க.. இவள் மூன்றடி முடி சித்தியின் கையில். அவரால் அமைதியாக இருக்க முடியது, கோமலைப் போலவே.

 

அன்றைக்கும் ஏதேதோ புத்திமதி சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தவர் திடீரென்று அவரின் பேச்சுக்கான காரணத்திற்குள் நுழைந்தார்.

 

“கண்ணு… இன்னும் நீ குழந்த இல்ல. சித்தி சொன்னத எல்லாம் மனசில போட்டுக்கோ… போற வீட்டுல நல்ல பேரு வாங்கணும். உன் சேட்ட எல்லாம் குறை. அப்போ தான் காலம் பூரா இடி வாங்காம இருக்க முடியும்”

 

“நாம தான் போயிட்டு கல்யாணம் முடிஞ்சதும் வந்துடுவோமே சித்தி..”

 

‘களுக்’ என்று பக்கத்திலிருந்தவள் சிரிக்க… ‘நொங்’ என்ற சத்தத்தோடு அவள் சிரிப்பு அடங்கியது.

 

“நீ தெரிஞ்சு தான் பேசுறியா இல்ல நிஜமாவே புரியாம தான் பேசுறியானே புரியல கோமு!”

 

“ஏன் சித்தி… நான் மக்கா.. எனக்கு புரியலையா?”

 

பிள்ளை இப்படி அப்பாவியாய் இருந்தால் அவரும் என்ன தான் செய்வார். உண்மையிலேயே புரியவில்லை தான் போலும்!

 

“இதோ பாரு கோமு.. ஐயாக்கும் (தாத்தா) வயசாகுது. இதுக்கும் மேல அடம்பிடிக்காத. ஒருத்தன கால காலத்துக்கு கட்டிகிட்டு குடும்பம் நடத்திற  வழிய பாரு. வரன் ஒண்ணு வந்திருக்கு, தெகைஞ்சு வந்தா.. ஆறு மாசத்தில படிப்பு முடியவும் கட்டி வைக்க வசதியா இருக்கும்..”

 

“நான் மேல படிக்கணும் சித்தி..” கெஞ்சலாய் கேட்கவும், எழிலும் அவளுக்குப் புரியும் விதமாகவே பதிலளித்தார்.

 

“படியேன் டீ.. யாரு வேணாம் சொன்னா? கல்யாணம் முடிச்சு போனப் பின்ன படி! படிச்ச பையன் தான்.. ஒரு வார்த்த முன்னமே சொல்லிட்டோம்னா அவனே படிக்க வைக்க போரான். சுந்தரிக்கு எல்லாம் முடிவு பண்ணியாச்சு. அவளும் போய்டா… நீ தனியாகிடுவ கண்ணு.. புரிஞ்சுக்கடி..”

 

“உங்க படிச்ச மாப்பிளைட்ட முன்னமே சொல்லிடுங்க சித்தி என்னைப் படிக்க விடணும்னு. அவங்க வீட்டுல படிக்க சரின்னு சொன்னா மட்டும் பாருங்க..”

 

“நம்ம பாண்டியன் சொந்தக்கார பையன் தான். பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு டௌன்-ல கணக்கு வாத்தியாரா இருக்கானாம்.”

 

“ஒழுங்கா படிக்கலியா சித்தி… கவர்மென்ட் ஆப்பீஸ் உத்தியோகம் கிடைக்காம.. வாத்தியார் வேலை தான் கிடைச்…”

 

மகள் முடிக்கவில்லை.. ‘வாய மூடு’ என்ற அர்த்தத்தில் ‘நொங்’கென்று சத்தம் வர… தலையை கை தேய்க்க.. அதற்கும் ‘சுள்’ளென்று கையில் ஒன்று விழுந்தது.

 

“தலைய கலைக்காத டீ!”

 

“வலிக்குது.. மெள்ள கொட்டு சித்தி!”

 

“அந்த வாத்தியாருக்கு பொண்ணு பாக்கிறாங்களாம். சுந்தரிய பேசவானு பாண்டியன் அம்மா கேட்டுது… சுந்தரிக்குத் தான் என் அண்ணன் மவன் இருக்கானே… உனக்கு பாப்போம்ன்னு சொல்லிவச்சிருக்கேன்.”

 

முகத்தில் இருபுறமும் ‘சலங்கை ஒலி’, ஜெயப்பிரதா ஸ்டைலில் முடி வளைந்து காது மடலைத் தொட்டு நிற்க.. பின்னலைத் தளர்வாய் பின்னிக் கொண்டிருந்தார் எழில் சித்தி.

 

“சித்தி.. மினுக்கிற கலர் குஞ்சம் தானே தொங்க விடுறீங்க? பின்னல் மேல மல்லி வச்சுட்டு… முன்னாடி வந்து விழற மாதிரி புடவைக்கு மேட்சிங்கா டிசம்பர் வச்சுவிடுங்க… சுந்தரித மாத்தி எனக்கு வச்சுவிட்டுடாதீங்க”

 

“இதுக்கு எல்லாம் கொறச்சலே இல்ல! அவள பாரு அவளே அவ வேலைய எல்லம் செஞ்சுக்கிறா.  நீயே தல வாரி பின்ன கத்துக்கோ கோமு… நீ போற இடத்துக்கு எல்லாம் சித்தியால வர முடியாது கண்ணு.. உனக்கு ஒண்ணும் தெரியாட்டி சித்திய தான் கண்ணு குத்தம் சொல்லுவாங்க”

 

“ஏன் சித்தி வாத்திக்கு கூட்ட பெருக்க மட்டும் தான் வருமா? பின்ன வராதா?”

 

அடுத்த நொடி.. ‘நொங்’!!

 

[the_ad id=”6605″]

 

அதுக்கு அடுத்த நொடி “சித்தி… வலிக்குது!”

 

ஆனால் இம்முறை கையை தலைக்கு கொண்டு செல்லவில்லை. யார் கையிலும் ஒன்றை வாங்குவது?

 

“பஞ்சவர்ணம் கல்யாணம் முடியட்டும்.. சித்தப்பாட்ட விசாரிக்க சொல்றேன். சரிபட்டு வந்தா.. மேல பேச சொல்லுவோம்.”

 

“வாத்தியார் எல்லாம் வேணாம் சித்தி… அதுவும் கணக்கு வாத்தியார் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சொட்ட மண்டை எல்லாம் எனக்கு வேணாம்”

 

மீண்டும் தலையில் ‘நொங்’ என்று ஒன்று விழுந்தது.

 

“அடியேய் ஆரம்பிக்கும் போதே அபசகுனமா பேசாத! வயசு பையன் டீ.. இருபத்தி ஆறு நடக்குதாம்.”

 

“எங்க நடகுதாம்?”

 

‘நொங்’

 

“வலிக்குது சித்தி!” தலையை மெல்ல தேய்த்துக் கொண்டே சிணுங்க..

 

“ஆடாத டி..” மகளைப் போலவே அவளையும் பட்டுப் புடவையில் கிளப்பிக் கொண்டிருந்தார். ஊதா புடவை.. அவள் டிசம்பர் மலருக்கு பொருத்தமாக

 

“கூசுது சித்தி… நானே சொருகிக்கிறேன்..”

 

“இவளுக்கும் கட்டிக்க தெரியாது.. கட்டி விடுறவளையும் பாடா படுத்தி எடுத்திடுவா… இந்தா கொசுவத்த சொருகு.. இவ்வளவு தழைய விடாத.. கொஞ்சம் மேல தூக்கி சொருகு.. இல்ல நடக்கும் போது தடுக்கும்..”

 

“சரி சித்தி!” குறும்பு தான். சேட்டை சிங்காரி தான். ஆனால் சமத்து வகையைச் சேர்ந்தவள். கேள்விகள் ஆயிரம் கேட்பாள்.. ஆனால் எதிர்த்ததெல்லாம் பேச வராது. சித்தி மேல் கொள்ளை பிரியம். அவரிடம் கொட்டு வாங்காமல் போனால் பெண்ணிற்கு அன்று தூக்கம் வராது.

 

“என் கண்ணே பட்டுடும் என் ராசாதி! ரெண்டு பேரும் பஞ்சவர்ணம் பக்கத்திலேயே இருக்கணும். அங்க போய் குரங்கு வேல எல்லாம் பண்ணக் கூடாது சரியா? நாலு பேரு வந்து போற இடம். நல்ல பிள்ளையா நடந்துக்கணும்.”

 

கோமல், “நல்ல பொண்ணா இருந்தா… கருப்பட்டி மிட்டாய் செஞ்சு தரியா?”

 

எழில், “ம்ம்கும்… உன்ன எவன் கட்டிகிட்டு பட போறானோ?”

 

கோமல், “கணக்கு வாத்தியார் இல்லியா?”

 

“வாய கொஞ்சம் அடக்கு கோமு! பண்டியனுக்கு தம்பி முறை தான் பையன். கண்டிப்பா வருவாங்க. நீ அமைதியா இருக்கணும். அப்போ தான் அவங்களுக்கு உன்ன பிடிக்கும்!”

 

“அப்போ நமக்கு பிடிக்க வேண்டாமா சித்தி?”

 

[the_ad id=”6605″]

 

“பிடிக்க என்ன இருக்கு? படிச்சு இருக்கான். நல்ல உத்தியோகத்தில் இருக்கான். அவங்க ஊர் பஞ்சாயத்து ப்ரெசிடென்ட் மவன்.. வீட்டுல வசதி  இருக்கு. ப்லெஷர் (அம்பாஸிடர் கார்) எல்லாம் வச்சு இருக்காங்க.. பெறவு என்ன டி? கழுத்துல தாலி கட்டுவான். கூட போய் நல்ல படியா குடும்பம் நடத்தணும்”

 

“அப்போ.. சித்தப்பா வாத்தியார் பத்தி விசாரிக்க வேணாமா?”

 

“அடியேய்… அதெல்லாம் முடிஞ்ச பிறகு தான். சாமி..! உன்ட்ட போய் பேச வந்தேன் பாரு என்னை சொல்லணும்! நேரா கல்யாண மேடைல ஏத்தி இருக்கணும்”

 

அடுத்து கேள்வி கேட்டால் வாயில் தான் அடுத்து விழும் என்று தெரியும்… அதனால் சுந்தரி அவள் வாயில் கமர்கட்டை போட்டுவிட்டாள். அதன் பின் அவள் கவனம் முழுவதும் வாயிலிருப்பதை ருசிப்பதில் தான்.

 

எழில் மட்டுமே தான் பேசினார். கோமலைப் போல் சுந்தரிக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கவில்லை. ஆறு மாதத்தில் அத்தை மகன் தான் அவள் வாழ்க்கைத் துணை என்பதில் அவள் தெளிவாய் இருந்தாள்.

 

ஆனால் ஒரு மணி நேரப் பேச்சு தலைவி காதில் ஏறியதா? வாத்தியார் அவள் மனதில் ஏறினாரா என்றால் ஏறவில்லை எனலாம். ஆனால் ஒரு வழியாய் பெண் மனதில் திருமண எண்ணத்தை வெற்றிகரமாக எழில் சித்தி ஏற்றிவிட்டிருந்தார்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!