அ10_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் – 10_2
“ஹாட் சாக்லேட் குடிப்பியா மா..?”
Advertisement
“குடிச்சதில்லையே…”
கேட்டவர் கைப்பையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தையும், மார்ஷ்மெல்லோவையும் (marshmallow) தூக்கிக் கொண்டு அடுப்பங்கரை சென்றார். சுடு பாலில் கரைத்து.. “இந்தா..” என்று அவளையும் கூட்டிக் கொண்டு டைனிங் ஹால் சென்றார்.
Advertisement
Advertisement
அதி முக்கிய கேள்வியைக் கேட்டாள்! “உங்களுக்கு என்னை ‘தெரியும் பாத்திருக்கேன்’னு சொன்னீங்களே? எப்பிடி?”
“சென்டர்ல்ல பாத்திருக்கேன்.. நீ தான் கவனிச்சதில்ல!”
Advertisement
“ஓ.. நீங்க அங்க ஃபேக்கல்டியா?”
“இல்லடா.. அது என்னோடைய சென்டர்”
“எஸ்தர் மேடம்?”
“ம்ம்..”
பட்டென்று எழுந்து நின்றுக் கொண்டாள்.
“அலர்!! உக்காரு!”
“மேடம்…”
“ஓய்… மேடம் இல்ல ஆன்டி! சென்டர்ல என்னைப் பார்த்தாலும் அப்பிடி தான் கூப்பிடணும்.. உக்காரு!”
அவளால் பூரிப்பை அடக்கவே முடியவில்லை. அதன் பின் கேள்விகள் எல்லாம் மையத்தைச் சுற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் தான்!
பேச்சு வெகு நேரம் சென்றது. “ஒரு நாளைக்கு உன்ன என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். நாளைக்கு காலேஜ் இருக்கில்ல.. வா போய் படுப்போம்..”
“உங்க வீட்டுல..?”
“நான்.. என் ஹப்பி… என் மகன்.. என் ஹெல்பர். நாலு பேர் தான். உனக்கு அங்க தாராளமா இடம் இருக்கும்.”
“உங்க மகன் தானே கூட்டிட்டு வந்தாங்கன்னு சொன்னீங்க? அவங்க என்ன பண்றாங்க?”
“இந்த வருஷம் தான் இஞ்சினியரிங் முடிச்சான். கேம்பஸ்ல செல்க்ட் ஆகி இப்பொ ஐ.டி வேலை-ல இருக்கான். அவனுக்கும் உன்ன மாதிரி ஒரு எதிர்கால கனவிருக்கு. உனக்கு ஆன் சைட் ஜாப்! அவனுக்கு சின்னதுல இருந்தே எம்.ஐ.டி.(MIT)… ஸ்டான்ஃபர்ட்(Stanford).. ஹாவர்ட்(Harvard).. இது தான் ட்ரீம். அறிவாளி பையன்! எட்டாவது படிக்கும் போது ஆரம்பிச்சான் SAT எக்ஸாம் பத்தி பேச.
ஸ்டான்ஃபர்ட் மாதிரி யுனிவர்சிட்டிக்குள்ள நுழைய 4 வருஷ மார்க் டாப்-ல இருக்கணும். GPA 4.5/5 வேணும்! ஹாவர்ட்ல நுழையணும்னா படிப்பு மட்டும் போதாது. ஆல் ரௌண்டரா இருக்கணும். ஏதாவது வித்தியாசமா சாதிச்சு இருக்கணும். எம்ஐடி-ல நுழைய SAT ஸ்கோர் ஹெவியா இருக்கணும். இந்த மாதிரி நிறை இருக்கு! எல்லாத்தையும் மனசில வச்சுகிட்டு அவ்வளவு ஃபோக்கஸ்ட்டா இருந்தான்.
எனக்கு அவன யூஜி-க்கு வெளிநாடு அனுப்ப மனசே இல்ல. ஆனா அவன் தவமா தவம் இருந்து ஸ்கூல் பாடமும் படிச்சு, SAT எக்ஸாமுக்கு தனியா படிக்கவும் என்னால முடியாதுன்னு சொல்ல முடியலை. என் மகன் ஆசைய நிராகரிக்க எனக்கு தெம்பில்ல. சரின்னு ஏத்துகிட்டேன். ஆனா யார் போராத நேரமோ.. அவன் பன்னெண்டாவது முடிக்கதுக்கு முன்னாடியே எனக்கு ஒரு ஆக்சிடென்ட். அதுல என் முட்டி ரொம்ப அடிவாங்கிடுச்சு! என்னால ரொம்ப நாள் நடக்க முடியல. வீல் சேர் தான் நிரந்தரம்ன்னு நினைச்சுட்டோம்! எனக்கு முடியாத போது என்னை அவ்வளவு நல்லா பாத்துகிட்டான். அவன் எனக்கு மகனா கிடைக்கப் புண்ணியம் பண்ணியிருக்கணும்!
அவனால என்னை அப்பிடி விட்டுட்டுப் போக முடியல! யூஜி வேண்டாம் பிஜி போயிக்கிறேன்னு சொல்லிட்டான்.
இந்த தரம் அவன் கனவ கலைக்கிற மாதிரி எதுவும் நடந்திடக் கூடாது. அவன விட்டு இருக்க முடியாது தான்.. இருந்தும் அவன் ஆசை நிறைவேறணும். ஒரு அம்மாவா அது மட்டும் தான் என்னோட ஜெபம்!”
‘பாசம் அதிகம் வைப்பவர்களால் கிளிகளை கூண்டில் அடைக்கமுடிவதில்லை என்பது இது தான் போலும்!’ . “அவர் விருப்பப்படி கண்டிப்பா அவர் ஆச பட்ட காலேஜ்ல போய் படிப்பார் ஆன்டி. ஒரு தடங்கலும் வராம கடவுள் பாத்துப்பார்.”
“அவனுக்கு ப்ரே பண்ணும் போதெல்லாம் இனி மேல் உனக்கும் சேர்த்தே பண்ணுவேன். நீயும் உன் கனவ அடையணும்ன்னு”
“தாங்கஸ் ஆன்டி”
“அவன் தான் உன் மார்க் ஷீட் எல்லாம் பார்த்துட்டு, ஸ்காலர்ஷிப் கொண்டுவந்தான் நம்ம சென்டருக்கு. அவனுக்கு படிப்போட அருமை தெரிஞ்சு அத ஆசையா படிக்கிற பிள்ளைங்கள பார்த்தாலே அவ்வளவு பிடிக்கும்”
“ஓ..”, ஏகமாய் கண்கள் விரிந்தது. “அப்போ அவருக்கு என்னோட ஸ்பெஷல் தாங்கஸ் சொல்லிடுங்க ஆன்டி. என்னைக்காது மீட் பண்ணினா.. கண்டிப்பா அவர் கிட்ட மனசார என் நன்றிய தெரிவிப்பேன்.”
“சொல்லு சொல்லு. அவன் ரொம்ப நல்ல குழந்த! நல்லது செய்யும் போது அது கவனிக்க படும் போது செய்யறவங்களுக்கு இன்னும் செய்யணும்ன்னு தோணும்..”
“குழந்தையா ஆன்டி..?”, சிரித்தாள்.
“என்ன பண்ண.. அவன் வளந்துட்டான். ஆனாலும் எனக்கு அவன் தான் குழந்த! கொஞ்சி கொஞ்சி என்னை மயக்கி வச்சிருக்கான் என் மகன்! அவன் கிளம்பிட்டா ரெண்டு வருஷம் என்ன பண்ணுவேன்?”
மகன் மேல் மிகுந்த பிரியம் என்று தோன்றியது. “இங்க வந்திடுங்க ஆன்டி..”
“என் புருஷன நாடு கடத்தினா தான் நான் இங்க வர முடியும்! அப்படியே அவர விட்டுட்டு இங்க வந்தா.. நீயும் படிச்சதும் போயிடுவியே..”, சிரித்தார்.
“வா படுப்போம்.”
“உங்க மகன் இப்போ போனா.. அவர் வர வரைக்கும் நான் இங்க தான் படிச்சுட்டு இருப்பேன். நம்பி வாங்க…”, மெத்தையைத் தாயார் செய்துக் கொண்டே பதிலுரைத்தாள்.
மெத்தையில் அமர்ந்தவர் மீண்டும் எழுந்தார். “ மருந்த எடுக்காம மெத்தைக்கு போயாச்சு! அறிவு கொழுந்து!”. வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
மெத்தையை விட்டு எழும்பவும்… “ஆ” என்று முகம் சுளித்துக் கொண்டே அங்கிருந்த மேலையிலிருந்த கைப்பையிலிருந்து களிம்போடு வந்து மீண்டும் அமர்ந்தார்.
கொட்டக் கொட்ட விழித்து அவரையே பார்த்து அமர்ந்திருந்தவளிடம், “உனக்குத் தூக்கம் வரலியாமா?” எனவும்,
“இல்ல ஆன்டி.! இன்னும் நேரம் ஆகும்! லேட்டா படுத்து பழகிடுச்சு” என்றாள்.
“படிப்பியோ..?”
“ம்ம்… ஆமா ஆன்டி! தனி ரூம் எவ்வளவு நாளைக்குக் கிடைக்கும்? அது வரைக்கும் கிடைக்கிற ச்சான்ச மிஸ் பண்ணிட கூடாதில்ல? சோ பன்னென்டாகிடும் படுக்க..”
“ஓ..” மருந்தைத் தேய்த்துக் கொண்டே… “இந்த ரூம்ல.. இந்த கட்டில் என்னுது. நான் எப்போ வந்தாலும் எனக்குன்னு ரெடியா இருக்கும். சோ.. இங்க நீ மட்டும் தான்! எப்பவாது.. ரெண்டு மூனு மாசத்துக்கு ஒரு தரம் நான்..”
“ஸ்ஸ்..” மீண்டும் முகம் சுளித்தார்.
பார்த்துக் கொண்டு அவளால் சும்மா இருக்க முடியவில்லை. பாட்டிக்கு அவளும் நகுநா-வும் தானே மருந்து தேய்த்துவிடுவது!
“எங்க பாட்டிக்கும் முட்டி வலி இருக்கு. எனக்கு தேச்சு விட்டு பழக்கமிருக்கு.. தேச்சு விடவா?”
கை நீட்டி நிற்பவளைப் பார்த்தார்.
“குடுங்க ஆன்டி தேச்சு விடுறேன்.”
“இது ஆயுர்வேதிக் மெடிசின் மா… கை எல்லாம் ஒரே வாசமா இருக்கும். கழுவினா கூட வாசம் போகாது. சின்ன பொண்ணு… உனக்கு எதுக்கு..”
“பச்! நீங்க குடுங்க..”, வாங்கி.. அவர் முட்டியின் அடியில் தலையணை வைத்து மெல்ல முட்டியைச் சுற்றி நீவி விட ஆரம்பித்தாள்.
கண் மூடி சுவரோடு சாய்ந்து கொண்டார்.
வலி அதிகம் என்று தெரிந்தது.
“யமுனா.. எங்க கூட இருக்க ஹெல்பர், அவ தான் போட்டு விடுவா… அவள உன் கிட்ட அனுப்பறேன் ஒரு நாள். சொல்லி குடு அவளுக்கு.”
அவர் முகம் பார்க்க.. அமைதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தார்.
“பாட்டிக்காக பிசியோ தெரபிஸ்ட் கிட்ட கத்துகிட்டது.”
“பாட்டி கொடுத்து வச்சவங்க. வலிக்கும் போது தாங்கி பிடிக்க ஆள் எல்லோருக்கும் கிடைக்கிறதில்ல!”
அம்மா கூறியது போல் இவர் இல்லையே… அனைத்து இனத்திலும் நல்லவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கிறார்கள். அம்மாவிற்குச் சொன்னால் புரியுமா? கூறினால் கேட்டுக் கொள்வாரா என்ன? எஸ்தரிடம் பேசுவதைப் போல் அம்மாவிடமும் பேச முடிந்தால்? நீண்ட மூச்சை இழுத்து விட்டாள்.
“என்ன மா..?”
“நீங்க க்ரிஸ்டியன் தானே ஆன்டி?”
“ஆமா..”
“எனக்கு ப்ரீச் பண்ணி கன்வர்ட் பண்ண ட்ரை பண்ணுவீங்களா?”, உள்ளத்தை உறுத்தியதை கேட்டாயிற்று!
சுவரிலிருந்து தலை உயர்த்தி அவளைப் பார்க்க.. அவள் முகத்தில் உண்மையிலுமே கலவரம்!
“ஹாட் சாக்லேட் ட்ரிங்க் பிடிச்சுதா?”
“ம்ம்.. நல்லா இருந்துது! அந்த மார்ஷ்மெல்லோ ரொம்ப பிடிச்சுது!”
“எனக்கும் பிடிக்கும்.. அதே மாதிரி கோல்ட் காபி கூட பிடிக்கும்! இன்னும் இதே மாதிரி நிறைய பிடிக்கும் பிடிக்காது இருக்கு! எனக்கு பிடிச்சது உனக்கு பிடிக்காம இருக்கலாம்! எனக்கு பிடிக்காதது உனக்கு பிடிக்கலாம். அது அது அவங்க அவங்க விருப்பு வெறுப்பு! எனக்கு பிடிக்குதுன்னு சொல்றனால உன்ன அத குடின்னு நான் சொல்றதா அர்த்தமில்ல… எனக்கு பிடிக்கும்ன்னு மட்டும் தான் அர்த்தம்.
இன்னைக்கு நீ என் கால பிடிச்சுவிட போய் இந்த வலி காணாமலே போச்சுன்னு வை.. பாக்கிற எல்லார் கிட்டயும் உன்ன பத்தி சொல்லுவேன். நாளைக்கு இதே வலி இந்நேரம் வந்தா எனக்கு மருந்து போட உக்கார்ற என் மகன் கிட்டயோ.. என் ஹெல்பர் கிட்டயோ கண்டிப்பா உன்ன பத்தி.. நீ அமுக்கி விட்டத பத்தி சொல்லுவேன். அதுக்காக கால் வலி இருந்தாலே உன் கிட்ட அவங்களும் வர்ணும்ன்னு சொல்றதா அர்த்தமில்ல. எனக்கு நீ அமுக்கி விடுறது பிடிக்குதுன்னு மட்டும் தான் அர்த்தம்.
என் கடவுள் நம்பிக்கை அப்படி தான்! என் உடம்பு.. என் ரத்தம்.. என் உணர்வு.. இதோட ஒன்றி போனது தான் என் கடவுள் நம்பிக்கை. கடவுள் அவங்க அவங்க தேடலா இருக்கணும்.
எனக்காக ஹாட் சாக்லேட் நீ குடிக்கிறத நான் என்னைக்குமே விரும்ப மாட்டேன். உனக்கா பிடிச்சு குடிக்கிறதை எனக்காக விடச் சொல்லவும் மாட்டேன்! என் ஸ்பேஸ் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு மரியாதை என் கூட இருக்கவங்களுக்கும் உண்டு! உன் ஸ்பேஸ்ல நான் எதையும் திணிக்க மாட்டேன்!”
ஒருத்தரைக் கண்ட அன்றே பிடிக்குமா? அலர்விழிக்கு எஸ்தரை மிகவும் பிடித்துப் போனது. அவள் கேட்தற்குச் சட்டென்று கோபப்பட்டிருக்கலாம்! அவரிடம் ஒரு நிதானம்.. பொறுமை.. தோழமை.. பணிவு… அன்பு… அரவணைப்பு… அறிவு என்று பலதை ஒர் கலவையாகப் பார்க்க முடிந்தது. எதையேனும் கேட்டால் எவ்வளவு விளக்கம் கொடுக்கிறார்?
இவர் தான் இவள் வாழ்வில் நுழைந்து, இவ்வளவு நேரம் பேசிய முதல் வேற்று மதத்தார்! அப்படி எல்லாம் மோசமில்லை என்று தோன்றியது. ஸ்கார்ஷிப் எல்லாம் கொடுத்துப் படிக்க வைப்பவர் மோசமானவராய் இருக்க முடியுமா?
எல்லாம் தெரிந்தவர் தானே அம்மா.. நல்லவர்கள் எல்லா இனத்திலும் இருக்கத் தானே செய்கிறார்கள் ஏன் மனிதர்களுக்குள் இந்த பாகுபாடு? அம்மாவிடம் எஸ்தர் ஆண்டியைப் பற்றிப் பேசவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். மற்ற இனத்தவரைப் பற்றிய வேண்டாத எண்ணங்களை அம்மா மனதிலிருந்து நீக்க வேண்டும்! அனைவரும் ஒன்று தான் என்று விளக்க வேண்டும்! பொங்கலுக்குச் செல்லும் வேளை பேச நினைத்தாள். பொங்கலும் வந்தது ஆனால் வாய் தான் திறக்க முடியவில்லை பெண்ணால்.
மனோவா அவளின் எட்டா நிலவு என்பது தெளிவாகத் தெரிந்தது.
வைதேகி, சௌந்தரியாவின் அக்கா மகளுக்கு விவாகரத்து முடிவாகியிருந்தது. அலர்விழி வீட்டிற்குள் நுழையும் வேளை, சௌந்தரியா வைதேகியைக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்.
“தல தலையா அடிச்சுக்கிட்டேன்… இந்த காதல் கன்றாவி எல்லாம் வேண்டாம்ன்னு கேட்டியாடி? அவங்க வேற ஆளுங்க.. ஒத்துவராதுன்னு சொன்னேன்! கேட்டியா? இனம் இனத்தோட மட்டும் தான் சேரணும்ன்னு சொன்னா ஏதாவது புரியுதா உங்களுக்கு எல்லாம்? அவன் இல்லான்னா என்னால வாழவே முடியாது சித்தின்னு சொன்ன? இன்னைக்கு பாரு! அவன் கூட வாழ முடியாதுன்னு வந்து நிக்கிற! கட்டிக்க வேண்டாம்ன்னு சொன்னதையும் கேக்கல. வெட்டிக்காதன்னு சொன்னதையும் நீ கேக்கல! பெத்தவங்கள நிம்மதியா சாக கூட விடமாட்டீங்களா? இனி என்ன பண்ண போற? கையில பெத்து வச்சிருக்கியே அத என்ன பண்ண போற? ரெண்டு பேருமா எங்கேயாது போய் விழுந்து சாகுங்க!”
“சௌந்தரியா…! என்ன பேசற? அந்த பையனும் நம்மாளுங்க தானே… அப்புறம் என்ன? வேற ஊர்ல இருக்காங்க அவ்வளவு தான்! உன் ஜாதி பேச்சுக்கு ஒரு அளவே இல்லியா? மணவாழ்க்கையில கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ மனசு தான் காரணம்! ஜாதி இல்ல! படிச்ச முட்டாள்னா அது நீ தான்! முதல்ல உன் மூளையைச் சரி பண்ணு!
அவளே வாழ்க்கையை தொலைச்சுட்டு வீட்டுல இருக்க முடியலன்னு இங்க வந்தா… நீயும் ஆரம்பிக்காத!”
“ஒரே ஆளுங்களா? எப்படி? அவனோட அப்பா வேறாளுங்க. அவனோட அம்மாக்கு கல்யாணம் ஆகவும் அவ பழக்க வழக்கமெல்லாம் மாறிபோச்சு! எதையும் ஒழுங்கா விசாரிக்காம கட்டி கொடுத்தாச்சு! இப்போ? நான் சொன்னது தானே நடந்துது? ரெண்டும் பிச்சுகிட்டு நிக்குதுங்க!”
“சௌந்தரியா!!!”
“என்னையே சொல்லுங்க…”, சகுந்தளா பாட்டி தான் அன்று சௌந்தரியாவை அடக்கியது.
ஆனால் கராராய் அவர் பெண்களிடம், “படிக்க போற இடத்துல காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வேற அளுங்கள்ல இருந்து எந்த பொறுக்கியையாது கூட்டிட்டு வந்தீங்க.. இந்த வீட்டுல கொலை விழும்! பெத்த பிள்ளைங்கன்னு பாக்க மாட்டேன்!”, என்று கூறிவிட்டார்.
அலர்விழிக்கு தெரியும் தான் அம்மாவைப் பற்றி! ஆனால் இன்று அவர் பேச்சு வலித்தது! ‘மற்ற ஆட்கள் பொறுக்கியாமா? இவர்கள் இனத்தவர்கள் மட்டும் நல்லவர்களாமா? என்ன ஒரு எண்ணம்? அம்மாவின் எண்ணத்தை மாற்றவெல்லாம் முடியாது! பச்!’ எச்சில் விழுங்கி நின்றாள்.
அந்த எச்சில்… தொண்டை வழியே பிரயாணப் படுகையில், அங்கு ஒருவன் கை வைத்தது, இன்றைய சூழலில் நினைவில் வர வேண்டுமா? வந்தது! கூடவே அவன் தொட்ட இடம் இன்று குறுகுறுவென புதுவித உணர்வையும் தந்தது.
காதலுக்குக் கண் தான் இல்லை! காதுமா? அம்மாவின் பேச்சு காதில் விழவில்லையா பெண்ணே?
(Ovulation, Fertility பற்றிய தகவல்கள் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மருத்துவ ஆலோசனை அன்று!)
