Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ11_1 – Shoba Kumaran’s – கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 11_1

 

 

“இந்த பிரியா கொல்றாடா எபி!”



Advertisement

 

மாலை அலுவலகம் அருகே இருந்த தேனீர் கடையில், கையில் ஒரு கோப்பை தேநீரோடு ஹம்ரிஷ் புலம்பிக் கொண்டிருந்தான்.

 

Advertisement

“டேய் ஹமி அவங்க நம்ம டெலிவரி ஹெட்… அவங்க வயசுக்காது கொஞ்சம் மரியாதை குடு குறைஞ்சு போயிட மாட்ட”

Advertisement

 

“ம்ம்.. அதே தான் டெலிவரி ஹெட்! அவ என்ன என்னைக் கேள்வி கேக்கிறது? வயசாம் வயசு.. வயசுக்கு ஏத்த மெச்சூரிட்டி வேண்டாம்..? ஆளும் அவ மண்டையும்.. நூடுல்ஸ்ச தொங்க விட்டமாதிரி..”

 

Advertisement

ஒருவன் கடுப்பின் உச்சத்தில் ஒருத்தியை வறுத்து எடுத்துக் கொண்டிருக்க இவன் காதில் விழுந்த ‘நூடுல்ஸ் மண்டை’யோடு செட்டில் ஆனான்!

 

அதன் பின், எபியின் வாயிலிருந்து பதிலாய் வந்ததெல்லாம் “ம்ம்” மட்டுமே.

 

“அவ அன்வர் கிட்ட தானே கேக்கணும்.. அன்வர் தானே என்னை கேள்வி கேக்கணும்?”

 

“ம்ம்”

 

“அவர் தானே நம்மளோட லீட்.”

 

“ம்ம்”

 

“அவ என்னடான்னா ஹைரார்க்கிய மதிக்காம என்ன வந்து புடுங்கறா!”

 

“ம்ம்”

 

வெறும் ‘ம்ம்’ மட்டுமே பதிலாக வர, கடுப்பானான் ஹமி.

 

“ஆபீஸ்ல தீ பிடிச்சுடுச்சாம்”

 

“ம்ம்”

 

“அது உன் தலையில விழுந்துதாம்..”

 

“ம்ம்”

 

“எபின்னு ஒருத்தன் அவன் ஃப்ரெண்டு கிட்ட அடிவாங்கியே செத்தானாம்..”

 

“ம்ம்ம்”

 

“அடிங்..”, பட்டென்று முதுகில் ஒன்று வைக்கவும்..

 

“பரதேசி… ஏன் டா?”, என்று கையிலும் தரையிலும் சிந்திய ஆறிப்போன தேநீர் கோப்பையை எபி ஒதுக்க..

 

“சொல்லு தல.. யார்கிட்ட வசமா மாட்டி சின்னாபின்னாமாயிட்டிருக்க?”, சிரித்தான் ஹம்ரிஷ்.

 

“ஆங்..?”

 

“உன்ன பிச்சு புடுங்கற பாக்கியம் கிடைச்சது அந்த அழகு ராட்சசி, நம்ம லேடி ஜாக்கி சானுக்கு தானே?”

 

“போடா போடா..”, இவன் சிரிக்க.. கூடவே அவனும் சிரித்துக் கொண்டே..

 

“சொல்லு சொல்லு உன் காதல் கதைய..”, என்று ஆரம்பித்து வைத்தான்.

 

“ச்சு! என்ன பேச்சு இது? அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல போடா..”, கடினம் கலந்த குரலில் கூறத் தான் நினைத்தான்! ஆனால் நினைக்க மட்டும் தான் முடிந்தது.

 

“ஹ ஹ ஹா.. உன்ன யார்னே தெரியாதவன் கூட உன்ன பாத்ததும்  சொல்லிடுவான்… நீ பசலை நோயில பாதிக்க பட்டிருக்கன்னு!”

 

முகம் முழுவதும் புது ஒளி பரவ.. புன்னகை மாறாமலே பேச ஆரம்பித்தான்.

 

“அலர்விழி! பாத்து பாத்தே மனுஷன கொல்ல முடியுமா?. அவளால முடியும் டா. அந்த பார்வ இருக்கே… அந்த உருண்ட கண்ணு கத கதையா பேசும். ஆனா.. கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் நான் செஞ்சத இப்போ அவ செஞ்சு என்னை சோதிக்கிறா டா மச்சான்!”

 

கேட்டுக் கொண்டிருந்தவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. அவன் பதிலில் இவன் எதோ எதிர்பார்த்திருப்பான் போலும்! “என்ன தல செய்யறாங்க?”

 

“அன்னைக்கு அவள பாத்தே ஆகணும் போல இருக்கவே ஹாஸ்டலுக்கு போனேன். அப்போ என்னால அவள ஃபீல் பண்ண முடிஞ்சுது டா. ஆனா அதுக்கப்புறம் ஒரு வாரமா பிடி குடுக்க மாட்டேன்றா! அவளுக்கு என்ன பிடிச்சிருக்கு டா. ஏன்னு தெரியல மனச மறைக்க அப்பிடி ட்ரை பண்றா!

நேர்ல பாத்ததும்.. சின்னதா ஒரு ஸ்மைல்.. அதுவும் இழுத்து பிடிச்சு. நான் அவள பாதிக்கவே இல்லியாம்.. அப்படி தான் காட்ட நினைக்கிறா! 

நான் வேற எங்கேயாது பார்த்தா ஏக்கமா பாக்கறா டா.. திரும்பி அவளை பாத்தா போதும் உடனே எங்கேயோ பாக்கறா! அதுல வேற.. ஏதோ யோசிக்கிற மாதிரி பவ்லா காட்டிக்கிட்டு!

கடுப்பாகுது. நேரா போய் அவ கன்னத்த பிடிச்சு… ‘உனக்கு என்ன தான் டி பிரச்சனை? பிடிக்குது தானே.. முகத்தைப் பாக்க மாட்டியா? என் முகம் என்ன அந்த சுவர்லய தெரியுது’ன்னு கேக்கணும் போல இருக்கு டா!”

 

“சோ இத தான் நீ செஞ்சியா..”

 

“பச்!”

 

“நீ ஏன் அப்படி செஞ்ச..?”

 

“உனக்குத் தெரியாதா? வாழ்க்கையில நிறைய இருக்கு ஹமி. இப்போ டிஸ்ட்ராக்ட் ஆனா கனவெல்லாம் கனவா தான் ஒரு ஓரத்தில இருக்கும்! என் படிப்பு.. அவ படிப்பு. பெரிய பெரிய லட்சியத்தோட வாழற சின்ன பொண்ணு டா! பச்! போடா!”. அலுத்துக் கொண்டான்.

 

“அவ சின்ன பொண்ணு! சார் என்ன அரை கிழவனோ? நீயும் சின்ன பையன் தான் டா! உனக்கும் படிப்பு இருக்கு! ரெண்டு பேர் காரணமும் இன்னும் மாறலியே.. அப்புறம் ஏன் வேண்டாம்ன்னு ஒதுக்கின பிறகு திடீர் காதல்?”

 

“மூளைக்கு தெரியுது… இந்த லூசு மனசுக்கு புரியல! அவள பாக்கன்னே வாரத்துல ஒரு நாள் போயிட்டு இருந்த சென்டருக்கு அஞ்சு நாள் போறேன். ஆஃபீஸ் வேலை வேற பெண்டிங்ல விழுது. அத முடிக்க நைட் உக்கார வேண்டி இருக்கு. சனிக்கிழமையானா நாலு மணி நேரம் க்ரௌண்டுல இருப்பேன்.. இப்போ..? பச்! நான் நானாவே இல்ல டா. எப்போ பார் லூசு மாதிரி அவளையே யோசிச்சுகிட்டு.. தானா சிரிச்சுகிட்டு! அவள ஏன் பிடிக்குதுன்னு கூட தெரியல! அட்லீஸ்ட் இது லவ் தான்னு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்.. ஆனா இப்போ? அவ கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடறா! ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குவான்? ஆஆஆஆ… முடியலடா என்னால! படிப்ப கோட்ட விட்டுடுவேனோன்னு பீதி கிளம்புது!”

 

“அப்போ காதல் பத்தி கேள்வி படறது எல்லாம் நிஜம் தானா டா! வச்சு செய்யுது போல.. ஹ ஹ ஹா”

 

பற்கள் அரைபட, “டேய்..” என்றவன், மதில் மேல் இருக்கும் பூனையாக அவதிபட.. பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது. சிரித்து யார் எபி-யிடம் அடிவாங்கி சாவது! அதனால் நல்ல பிள்ளையாய்.. நல்ல நண்பனாய்.. தோள் கொடுக்க முயன்றான்.

 

“கொஞ்சம் கேப் விடுடா எபி! பெங்களூர்ல நாம்ம டீமோட அடுத்த ப்ராஜெக் வர்க்ஷாப்புக்கு நம்ம டீம்-ல இருந்து என்னை தானே அனுப்பறதா அன்வர் சொன்னார்? நான் கடைசி நிமிஷம் முடியாதுன்னு சொல்லிட்டா உன் கிட்ட தான் மனுஷன் வருவார்.  இடம் புதுசு, மக்கள் புதுசு.. எல்லாமே புதுசு! அங்க அவங்கள பாக்க வேண்டி வராது! கண்டிப்பா உன் மனச புரிஞ்சுக்க டைம் கிடைக்கும்! பாஸிங் க்ளௌட்ன்னா… மறந்திடுவ. அதே கேப் அவங்களும் கிடைக்கும். அவங்களுக்கும் இது வெறும் அட்ராக்ஷன்னா உன்ன மறந்துட்டு நிம்மதியா அவங்க படிப்ப பாப்பாங்க! என்ன சொல்ற?”

 

“ம்ம்.. யோசிக்கணும் டா”

 

“லைப் டைம் கமிட்மென்ட் எபி. பாத்ததும் காதல்ன்னு அதுல கவுந்து விழுந்துட்டு, படிப்ப கோட்ட விட்டுட்டு… வீட்டுல போராடி கல்யாணம் முடிஞ்சதும் ‘உன்னால என் கனவு போச்சு.. என் வாழ்க்கை போச்சு’ன்னு மாத்தி மாத்தி ப்ளேம் பண்ணி… ஏன்டா காதலிச்சோம்ன்னு மனசளவில பிரியற மாதிரி ஆகிடக் கூடாது. சோ ஒழுங்கா யோசிச்சு முடிவெடுங்க”

 

“ம்ம்..”

 

“ஜனவரி பதினெட்டுல இருந்து ஃபெப் இருபத்தி எட்டு வரைக்கும் வர்க்ஷாப். சரியா ஒரு மாசம் இருக்கு, பொறுமையா முடிவெடுக்க! என்ன சொல்ற? அன்வர் கிட்ட பேசவா?”

 

“ரெண்டு நாள்ல..? அவ பொங்கலுக்கு ஊருக்கு போயிருக்கா டா.. இன்னும் ஆளக் காணம்! அவட்ட ரெண்டு வார்த்த சொல்லிட்டுப் போக வேண்டாம்..?”

 

“டேய்.. இது தான் நீ கேப் எடுக்கிற லட்சணமா? இன்னைல இருந்தே உன் கேப் பீரியட். அடுத்த 28 வரைக்கும் அவங்கள காண்டக்ட் பண்ண ட்ரை பண்ணக் கூடாது. புரியுதா?”

 

“ம்ம்..” யோசனையாய் தலையாட்டினாலும் சரி என்று தான் எபி-க்கு பட்டது. மாற்றி மாற்றிப் பார்ப்பதும்.. ஏங்கித் தவிப்பதும் இருவருக்குமே சரி வராது. அவள் இன்னும் கல்லூரியின் முதல் ஆண்டு கூட முடிக்கவில்லை. அம்மா தான் அவளின் கனவைப் பற்றி பக்கம் பக்கமாக பேசினாறே! இருவருக்கும் அவரவர் கனவு மிகவும் முக்கியம். காதல் தானா என்று கூட தெரியாமல் கனவை கலைக்க முடியாது.

 

ஓர் இரவு ஜானகியின் விடுதியில் தங்கி வந்த எஸ்தர், அடுத்து வந்த இருதிங்கள் அலர்விழி புராணம் பாடினார். “அவ தான் டா… நீ கூட ஒரு விஸ்காம் ஸ்டுடெண்டால ஸ்காலர்ஷிப் கொண்டு வந்தியே சென்டருக்கு…? நினைவிருக்கா? அவ தான். பேரு அலர்விழி! என்ன அழகு பேரு பாரேன்! அவளும் பாக்க அவ்வளவு அழகு. அவ முடி தான் டா எபி ஹைலைட்! சுருண்டு சுருண்டு.. பாக்க அவ்வளவு நல்லா இருந்து தெரியுமா. இன்னும் ஃப்ரெண்ட் ஆனதும் அத இழுத்து பாக்கணும்!

நல்ல பொண்ணு. எனக்கு அவள பாத்ததும் பிடிச்சு போச்சு தெரியுமா? நல்ல ஃப்ரெண்ட் ஃபீலிக்.. அவளுக்கும் என்னை மாதிரியே மார்ஷ்மெல்லோ பிடிச்சு போச்சு!.. என்னமா கால் முட்டிக்கு மாசாஜ் பண்ணினா தெரியுமா?”, என்று ஆரம்பித்தவர் தான்.. புள்ளி கமா வரை அவர்கள் பேசிய அனைத்தையும் ஒப்பித்துக் கொண்டே இருந்தார், இவனிடமும், யமுனாவிடமும், அவர் கணவனிடமும். மூவர் காதிலும் இரத்தம் மட்டும் வரவில்லை.

 

அவளிடம் பேசாமலே… பழகாமலே அலர்விழியின் மொத்த ஜாதகமும் அவனிடம் இன்று! படிக்கும் பெண்ணின் கனவைக் கலைக்க அவனால் என்றுமே முடியாது. அவளின் நிலை புரிய, அவளுக்காகவும் யோசித்தாக வேண்டுமே!

 

அன்வரிடம் பேசிய மறு நாளே பெங்களூர் சென்றுவிட்டான். SAT தேர்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். இதோ என்பதற்குள் ஒரு வருடம் முடியப் போகிறது… அடுத்த வருடம் எந்த எந்த கல்லூரிக்கு முயல வேண்டும் என்ற பட்டியலை எடுத்து அதற்கான தேர்வு, செலவு, விசா, இருப்பிடம்… என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினான்.

 

தேதி பதினெட்டு:

பெங்களூர் அலுவலகம் சென்று கணினி முன் அமர்ந்தவனை அவன் அருகிலிருந்தவள் சந்தேகம் மேல் சந்தேகமாய் கேட்டே கொன்றாள். அங்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த சர்வர்லஸ் கம்ப்யூட்டிங் (serverless computing) அவளுக்குப் புரியாமல் போகவே அருகில் இருந்தவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள்.

 

‘விழி-யும் தானே அன்னைக்கு சந்தேகம் கேட்டா.. எவ்வளவு அறிவா கேட்டா!  சொன்னதும் எப்படி சட்டுன்னு பிடிச்சுகிட்டா..’, சென்ற முதல் நாளே விழி தான் அவன் நினைவில்.

 

‘சமத்து டி நீ!’ கொஞ்சிக் கொண்டான்.

 

தேதி பத்தொன்பது:

“டேய் எங்க வீட்டுக்கு டின்னருக்கு வாடா..”, தோழன் அழைத்தான். தோழன் வீட்டின் பின் இருந்த தோட்டத்தில் படரவிட்டிருந்த திராட்சைக் கொடியில் சுருள் சுருளாய் தொங்கி நின்ற பற்றுகம்பியை (tendril) மெல்ல இழுத்துப் பார்த்தவன் உள்ளமோ சுருள் முடியை நோக்கி சென்றது.

 

தேதி இருபது:

வேலை முடித்து அலுவலகம் கொடுத்திருந்த விருந்தினர் விடுதியில் அமர்ந்தவன் தொலைக்காட்சி பெட்டியை உயிர்ப்பிக்க.. ஜேக்கி சான் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அவன் நினைவு எங்குச் சென்றிருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

 

நான்கு நாள் கூட அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை! எங்கும் எதிலும் அவள் தானா? ஏன்?

 

“நூடுல்ஸ் மண்டை ஏன் டி என்னை பாடா படுத்தற?”, தனியே புலம்பினான். அருகில் இருந்து அவதிப்படுவதே மேல் என்ற எண்ணம் தன்னால் துளிர்த்தது. ‘பாசிங் க்ளௌட்சாம்.. மண்ணாங்கட்டியாம்!’. ஹமியை கைப்பேசியில் அழைத்துத் திட்டி தீர்த்துவிட்டான்.

 

நாட்கள் மிகுந்த தவிப்போடே சென்றது.

 

இவனுக்கு தான் தவிப்பென்றால் பெண்ணின் நிலை இன்னுமே மோசம்! கிறிஸ்தவன் என்று தெரிந்த பின் என்ன செய்வதென்றே தெரியவில்லை. முயன்று தள்ளி நின்றாள். தன்னை மறந்து அவனை வெறித்தாள். மனதை திறக்க முடியாமல் படிப்பிலிருந்து கவனம் சிதறுவது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. முன்னாலும் போக முடியாமல்.. பின்வாங்கவும் முடியாத தன் மனநிலை கண்டு தன்னையே வெறுத்தாள்.

 

ஒரு வாரம் அவதியில் கழித்து, பொங்கல் விடுப்பிற்கு வீட்டிற்குச் சென்றவள் மனம் முழுவதும் எபி தான். அம்மாவிற்குப் பிடிக்காது.. அதனால் வேண்டாம் என்று எண்ணிக்கொண்டே அவனை நினைத்தாள். ஜாதி.. மதம்.. இனம்.. ஏன் மனிதர்களுக்குள் இந்த பாகுபாடு? எந்த இனம் எதில் குறைந்துவிட்டது? எதில் உயர்ந்துவிட்டது? ஞானி போல் யோசனை எங்கெல்லாமோ சென்றது! எப்படி யோசித்தாலும்.. கடைசியில் ‘மனோ’ என்ற உச்சரிப்பில் முடிந்தது அவள் எண்ணங்கள்.

 

காதலா? அது எப்படி சாத்தியம்? பெண்ணிற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவின் விஸ்வரூபம் பயமுறுத்த மனோவை முயன்று மனதிலிருந்து எடுத்துவிடும் நோக்கம் தான்!

 

“என் படிப்ப நானே கெடுத்துப்பேன் போல இருக்கு! என்னை காப்பாத்து கடவுளே! என் ஆசைய அம்மா கண்டிப்பா நிறைவேற விட மாட்டாங்க. ஆண்டவா என் மனச அலை பாய விடாத! அவன கண்டுக்காம வாழ கத்துக் கொடு! அவனுக்கு நல்ல வேலை கொடுத்து வேற ஊருக்கு அனுப்பிடு! ஏதாவது செய்.”, கண் மூடி வேண்டி நின்றாள்.

 

விடுப்பு முடிந்த பின்னும் இருதினங்கள் வீட்டில் இருந்துவிட்டு, அவனைப் பார்க்க கூடாது என்ற முடிவோடு மீண்டும் சென்டர் வந்தவள் முயன்று பார்வையைக் கட்டுக்குள் வைத்தாள்.

 

மணி எட்டை அடையுமுன் விடுதிக்கு ஓட்டமாய் ஓடினாள். முடிந்தவரைத் தனித்திராமல் ஸ்ருதியோடே அமர்ந்திருந்தாள். ஒரு நாள் சென்றது.. இரண்டு நாள் சென்றது. ‘நான் கண்டுக்காட்டி அவன் பாக்க வரமாட்டானாமா?’ மெல்ல மனம் எட்டிப் பார்த்தது.

 

அந்த வாரம் ஓடியது. அடுத்த வாரமும் ஆரம்பிக்க.. கண் தன்போல் சுழல ஆரம்பித்தது. அவள் தவிர்க்கவில்லையா? அவன் இங்கு இல்லையா? எங்குப் போனான்? பதிலில்லா கேள்விகள் பாடாய் படுத்தியது.

 

மணி எட்டு! எழுந்தாளில்லை. எட்டரை! தனிமையில் அமர்ந்தே இருந்தாள் கணினி முன். அவன் வருவான் என்ற எண்ணம் பொய்த்துப் போனது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல… வாரம் இரண்டான பின்னும் அவனைக் காண முடியவில்லை. அவனைப் பார்த்தால் போதும் என்றது மனம்!

 

எல்லைக் கோடெல்லாம் மறந்து போனது. மனோ.. மனோ… அவன் மட்டும் தான் நினைவில்! என்ன ஆனான் என்று தெரியாமல் தவிப்பது பெரிய கொடுமை என்று தோன்றியது. சாப்பாடு தொண்டையை தாண்டி கீழே இறங்கவில்லை.. படிப்பும் தூர நின்றது… தூக்கம் கண்களைத் தழுவ மறுக்க.. உடல் மெலிய ஆரம்பித்தது. அவளின் மெலிந்த தேகம் மற்றவர் கண்களை உறுத்தும்படி இன்னும் அவல நிலையை எட்டியது!

 

அவள் அவளாகவே இல்லை. யுகங்களாய் நகர்ந்த நொடிகளைச் சபிக்காமல் இருக்க வெகுவாய் பிரயத்தனப்பட வேண்டியதாக போனது.

 

‘ப்ளீஸ் மனோ… வந்திடு. உன்ன சத்தியமா அவாய்ட் பண்ண மாட்டேன். பார்த்தா முகத்தைத் திருப்ப மாட்டேன். வந்திடு மனோ.. தெரியாம நீ போகணும்ன்னு வேண்டினேன். சொன்னதெல்லாம் திருப்பி வாங்கிக்கிறேன்.. ப்ளீஸ் வா மனோ..’ தினம் தினம் பிரார்த்தனை செய்தாள்.

 

அனுப்பு என்றதும் அனுப்பு வைத்த கடவுளுக்கு.. அழைத்து வா என்றதும்… ஏனோ அழைத்து வர விருப்பமில்லை போலும்! அவன் வரவில்லை, பெண் துவண்டு போனாள்.

 

மார்ச் கடைசியில் முதலாம் ஆண்டு நிறைவு தேர்வு. இன்னும் ஒரு மாதமே  இருக்க… கல்லூரி பாடங்கள் பாதியும் மண்டைக்குள் போக மாட்டேன் என்று அடம்பிடித்தது.

 

அன்று வரும் வழியில் திறந்திருந்த தேவாலயம் சென்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு நாதர் முன் முட்டியிட்டு கண்மூடி கெஞ்சினாள்.

 

“எனக்கு உங்கள தெரியாது. நீங்க கடவுள் அதனால தமிழ் புரியும்ன்னு நினைக்கிறேன். நாங்க தான் கடவுள் பேர்ல சண்டை போட்டுக்குறோம். நீங்க எல்லாம் ஒத்துமையா தான் இருப்பீங்க. நான் வேற கடவுள கும்பிடுறவன்னு என் வேண்டுதல புறக்கணிக்காம… மனோவ பத்திரமா கூட்டிட்டு வாங்களேன்.”

 

அம்மாவின் கண்டிப்பை மறந்து, இரத்தத்தில் ஏற்றிவிட்டிருந்த கோட்பாடுகளை மறந்து, மதம் மறந்து, இனம் மறந்து.. அவள் மனோக்காக.. அவன் தெய்வத்திடம் உருகி நின்றாள்.

 

அவனை ஒரு முறையேனும் காண முடியாத என்ற ஏக்கம் முகத்தில் நிரந்தர குடி உரிமம் வாங்கிவிட்டிருந்தது.

 

என்றும் போல் அன்றும் மணி எட்டாகவும் கணினி மையத்திலிருந்து கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், அலர்விழி.

 

எழுந்து நின்று புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தவளுக்கு யாரோ வருவது போல் இருக்கவே தலையை உயர்த்த.. அவன் தான்.. அவனே தான். அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். 

 

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால..

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!