அத்தியாயம் 10
“என்ன டா போற?”, என்று கேட்ட பார்வதிக்கு பதில் சொல்லாமல் கனவுலகத்தில் போவது போல நடந்து போனான் பார்த்திபன்.
“என்ன அத்தை? இவன் இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி போறான்”
“நீ மந்திரிச்சு தான விட்ட? அதான் அப்படி போறான்”
“என்ன சொல்றீங்க அத்தை?”
“ஆமா பார்வதி. அவன் மனசுல மித்ரா, நந்தினிக்கு கல்யாணம் செஞ்சி வைக்க தான் அவனை கல்யாணம் செஞ்சிருக்காளோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. இப்ப நீ பேசுனதுல ஐயாவுக்கு தெளிவு கிடைச்சிருக்கும். அதான் கனா கண்டுட்டு போறான்”
“ஓ அதுக்கு தான் இப்ப மித்ரா பத்தி பேசுனீங்களா?”
“ஆமா பார்வதி”
“எப்படியோ இந்த பிள்ளைங்க நல்லா இருந்தா சந்தோசம் தான். நான் போய் இதை வடை போடுறேன்”, என்று சொல்லி எழுந்து போனாள் பார்வதி.
நிம்மதியாக அங்கு இருந்த சேரில் சாய்ந்தாள் பாட்டி.
சாமி கும்பிட்டு விட்டு மூவரும் வந்து கொண்டிருந்தார்கள்.
“கண்ணுல பாக்குற எல்லாரும் நலம் விசாரிக்காங்க. என்ன இருந்தாலும் கிராமம் கிராமம் தான் இல்லை நந்தினி?”, என்று கேட்டார் மோகன்.
“நல்லா யோசிச்சு பாருங்க பா. பெரிய ஆள்கள் மட்டும் தான் நலம் விசாரிப்பாங்க. கல்யாணம் ஆகாத பொண்ணுங்க எல்லாம் முறைச்சிட்டு தான போனாங்க?”, என்று சிரித்தாள் மித்ரா.
“ஹா ஹா ஆமா. ஏன் அப்படி?”
“அதுவாப்பா? அவங்க கதாநாயகன்… அதான் நம்ம பார்த்தி அத்தானை அவங்களுக்கு கிடைக்காம நான் எனக்குன்னு எடுத்துகிட்டேன்ல? அதான் என்னை வில்லி மாதிரி பாத்துட்டு போறாங்க”
“நீ அவனை வம்பு இழுக்க ஆரம்பிச்சிட்டியா?”, என்று கேட்டாள் நந்தினி.
“பாருப்பா, அம்மாவை. அவங்க மருமகனை சொன்னவுடனே கோபம் வருது”
“கோபம் எல்லாம் இல்லை மித்ரா. என் மித்து செல்லம் மேல எனக்கு கோபம் வருமா?”
“ஐஸ் வச்சது போதும். ஐஸ் வாங்கி தாங்க”
“அதெல்லாம் வாங்கி தரேன். அப்புறம் மித்ரா. உன்கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். அது எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை”
“நம்ம ஆள் மேட்டர் இவங்களுக்கும் தெரிஞ்சிட்டோ”, என்று நினைத்து கொண்டு “கேளுங்க மா”, என்று சொன்னாள் மித்ரா.
“உனக்கு பார்த்தியை பிடிச்சிருக்கா மித்ரா? எங்களுக்காக தான் கல்யாணம் செஞ்சியோன்னு ஒரு சந்தேகம்”
“அப்படி எல்லாம் இல்லை மா. அத்தானை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அத்தானை கல்யாணம் பண்ணிக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா?”
“அப்ப சந்தோசமா இருக்கியா மித்ரா?”
“இந்த உலகத்திலே நான் தான் சந்தோசமா இருக்கேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? ஆனா அதான் மா உண்மை. சரி சரி நீங்க ரெண்டு பேரும் மெதுவா ஊரை சுத்தி பாத்துட்டு வாங்க. எனக்கு என்னோட பர்த்டே பேபியை பாக்கணும்னு ஆசையா இருக்கு. நான் வேகமா போறேன்”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தாள் மித்ரா.
“பர்த்டே பேபியை பாக்குறது இருக்கட்டும். அப்படியே சீக்கிரம் ஒரு பேபியை பெத்து கையில் கொடுத்துரு”, என்று சொல்லி சிரித்தார் மோகன்.
“போ பா”, என்று சொல்லி கொண்டே வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள் மித்ரா.
“என்ன மித்ரா சாமி கும்புட்டாச்சா?”, என்று கேட்டாள் பார்வதி.
“கும்பிட்டாச்சு அத்தை. அப்புறம் அடுத்த வாரம் திருவிழாவாமே. இன்னைக்கு தான் காப்பு கட்ட கட்டிருக்காங்களாம்”
“போச்சா”
“என்ன அத்தை? எதுக்கு அப்படி சொல்றீங்க?”
“திருவிழான்னா இவன் அட்டகாசம் தாங்க முடியாதும்மா”
“ஏன் அத்தை? என்ன செய்வாங்க?”
“என்ன செய்வானா? அந்த தடி பயலுக கூட சேந்துக்கிட்டு ஊரையே சுத்தி வருவான். அதுல இந்த வயசு பயலுக எல்லாரும் ஒரே கலர்ல சட்டையை போட்டுட்டு சுத்தி வருவானுங்க. அப்புறம் அந்த கடைசி நாள் மஞ்சநீர் ஆட்டம் இருக்கும் மா. அதுல ஆடிட்டு வருவான் பாரு. ஊருல இருக்குற எல்லா கலரும் உன் அத்தான் மேல தான் இருக்கும்”
“ஏன் அப்படி?”
“என்ன செய்ய? அவனுக்கு தான் ஒரு ரசிக பட்டாளமே இருக்கே. அவன் எப்ப டா கிடைப்பான்னு மஞ்சநீர் ஊத்த காத்துகிட்டு இருப்பாளுக. இனி நீ தான் மா உன் புருஷனை பத்திரமா பாத்துக்கணும்”
“சும்மா விளையாட்டுக்கு தான அத்தை?”
“விளையாட்டுக்கு தான். ஆனா இவன் கபடி போட்டி, அது இதுனு விளையாடுவான். எல்லா பொம்பளை பிள்ளைக கண்ணும் இவன் மேல தான் இருக்கும். நாசமா போறவளுக. என் பிள்ளையை வச்ச கண் எடுக்காம பாப்பாளுக. அடுத்து ஒரு வாரம் காச்சல் வந்து என்னை போட்டு படுத்துவான். போகாதன்னு சொன்னாலும் கேக்க மாட்டான் இந்த நாயி. இந்த தடவை நீ சொல்லிரு, எங்கயும் போக கூடாதுன்னு”
“நான் சொன்னா அத்தான் கேப்பாங்களா அத்தை?”
“நீ சொன்னா மட்டும் தான் கேப்பான்”, என்று சொல்லி கொண்டே அங்கு வந்தாள் பாட்டி.
“பாட்டி”
“ஆமா டா மித்ரா. இனிமே அவன் நீ சொன்னதை தான் கேக்கணும். கல்யாணம் முடிஞ்சிட்டுல்ல? இன்னும் என்ன சின்ன பையன்னு நினைப்பா அவனுக்கு? குடும்பத்தோட போறோம். சாமிக்கு பொங்கலை வச்சிட்டு வீட்டுக்கு வரோம். அவனையும் எங்கயும் விட்டுறாத”
“சரி பாட்டி நான் சொல்றேன்”
“சரி நீ மட்டும் தனியா வந்துருக்க? அம்மா, அப்பா எங்க?”, என்று கேட்டாள் பார்வதி.
“அம்மாவும், அப்பாவும் மெதுவா வருவாங்க. சரி எங்க உங்க குட்டி பாப்பா?”
“உங்க ரூம்ல தான் இருப்பான். சரி இந்த வடை சுட்டேன். இதையும் காபியையும் கொண்டு போ. நீயும் சாப்பிடு”
“சரி அத்தை”, என்று சொல்லி விட்டு தங்கள் அறைக்குள் போனாள்.
அங்கே கட்டிலில் படுத்து தலை மேல் கையை வைத்திருந்தான் பார்த்திபன்.
“நான் என்ன சொன்னாலும் தான் உங்க பிள்ளை கேக்க மாட்டுக்காரே அத்தை. இதை சொன்னா மட்டும் கேட்டுடுவாரா?”, என்று நினைத்து கொண்டு “அத்தான், அத்தை காபி கொடுத்து விட்டாங்க”, என்றாள்.
எழுந்தவன் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
“இவன் என்ன இப்படி பாக்குறான்?”, என்று நினைத்து கொண்டு “இந்தாங்க”, என்று அவன் கையில் டம்பளரை கொடுத்தாள்.
அதை வாங்கி கொண்டவன் “நீ குடிக்கலையா?”, என்று கேட்டான்.
அவனை விசித்திர ஜந்து போல பார்த்த மித்ரா “முதலில் இந்த சேலையை மாத்திட்டு வரேன். எரிச்சலா இருக்கு”, என்று சொன்னாள்.
அவள் கையை பிடித்து இழுத்தவன், “குடிச்சிட்டு போய் மாத்து”, என்று சொல்லி அமர வைத்தான்.
விழி விரிய அவனை பார்த்தவள், கட்டிலில் அமர்ந்து மற்றொரு டம்பளரை எடுத்து கொண்டாள்.
“சாரி கோயிலுக்கு வர மாட்டேன்னு சொன்னதுக்கு”, என்று ஆரம்பித்தான் பார்த்திபன்.
ஆச்சர்யமாக அவனை பார்த்தவள், “பரவால்ல. நீங்க தான் காலைலே போயிட்டு வந்துட்டீங்களே”, என்றாள்.
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அமைதியாய் இருந்தான்.
“அத்தை சொன்னதை இப்ப பேசலாம். நல்லா மூடில் இருக்கான்”, என்று நினைத்து கொண்டு “உங்க கிட்ட ஒன்னு பேசணும்”, என்று சொன்னாள்.
“என்ன மித்ரா?”, என்று கேட்டவனின் குரலில் பரபரப்பிருந்தது.
“அது வந்து…”, என்று இழுத்தாள் மித்ரா.
“என்ன மித்ரா தயக்கம்? சொல்லு”
“உங்களுக்கு கோயில் கொடைன்னா ரொம்ப பிடிக்குமா?”
“இதைத்தான் கேக்க வந்தியா?”, என்று நினைத்து கொண்டு “ஹ்ம்ம் ஆமா. ஏன் கேக்குற?”, என்று கேட்டான்.
“இல்லை அடுத்த வாரம் கொடை போட்டுருக்காங்களாம்”
“ஹ்ம்ம் தெரியுமே. காலைல கால் நடுறதுக்கு நான் போயிருந்தேனே”
“ஓ. அதுக்கு யூனிபார்ம் எல்லாம் எடுப்பீங்களா?”
“ஆமா நாளைக்கு தான் எடுக்க போனும்”
“அப்புறம் மஞ்ச நீர் எல்லாம் ஆடுவீங்களா?”
“ஆமா மித்ரா. அந்த வெயிலில் தண்ணி ஊத்திக்கிட்டு கொட்டு மேளத்தோட ஆடி வரது செமையா இருக்கும்”
“எப்படி சொல்ல?”, என்று விழித்தவள், “இந்த வருஷம் நீங்க ஆட கூடாது”, என்று தைரியத்தை கூட்டி சொல்லியே விட்டாள்.
“எதுக்கு இப்படி சொல்றா?”, என்று புரியாமல் புருவம் உயர்த்தினான் பார்த்திபன்.
“எதுக்கு மித்ரா அப்படி சொல்ற? அம்மா ஏதும் சொல்லுச்சா?”
“சொன்னாங்க. ஆனா நான் தான் போக கூடாதுன்னு சொல்றேன்”
“ஏன்?”
“அது எப்படி சொல்லனு தெரியலை”, என்று சொல்லி கொண்டே முகம் சிவந்தாள் மித்ரா.
“எதுக்கு வெக்க படுறா?”, என்று நினைத்து கொண்டு, “அது சின்ன வயசில் இருந்து பழகிருச்சு மித்ரா”, என்றான்.
“அதெல்லாம் கிடையாது. இந்த வருஷம் பொங்கல் வைக்க மட்டும் தான் கோயிலுக்கு போறோம். மித்த படி நீங்க எங்கயும் போக கூடாது”
“அதான் ஏன்?”
“ஏன்னா, நீங்க என்னோட அத்தான். எனக்கு மட்டும் தான் சொந்தம். உங்களை யாரும் தப்பான பார்வை பாக்க கூடாது. நீங்க கபடி விளையாடுவீங்களாமே. அப்ப எல்லா பொண்ணுங்களும் சைட் அடிப்பாங்களாம். அது எனக்கு புடிக்கலை”, என்று தலை குனிந்தவாறே சொன்னாள்.
அவளுடைய குரலில், அவள் சொன்ன விதத்தில், அவள் காட்டிய உரிமையில் பார்த்திபன் மனது சந்தோஷத்தில் மலர்ந்தது.
“இதை விட காதலை வேறு வார்த்தையில் சொல்ல முடியுமா?”, என்று நினைத்து கொண்டவன் மெதுவாக அவள் முகம் அருகே தன் கையை கொண்டு போனான்.
“திட்ட போறான்”, என்று நினைத்து தலை குனிந்து அமர்ந்திருந்தவள் அவனிடம் இருந்து பதில் வராததால் தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் நாடியில் தன் ஒரு விரலை வைத்தான் பார்த்திபன். திகைத்து அவனை பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா.
அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தவளைப் பார்த்து புன்னகை புரிந்தான் பார்த்திபன்.
“இன்னைக்கு என்ன சிரிச்ச முகமா இருக்கான்? பாட்டி சொல்ற மாதிரி பேய் பிடிச்சிருக்குமோ?”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தாள்.
“நான் நீ சொல்ற படி செய்யணும்னா, நீ நான் சொல்ற படி கேக்கணும்”, என்று சொன்னான் பார்த்திபன்.
புரியாமல் “என்ன செய்யணும்?”, என்று கேட்டாள்.
“இப்ப நீ கட்டிருக்க சேலையை நான் சொல்லும் போது தான் கழட்டனும்”, என்று சொன்னான் பார்த்திபன்.
குழப்பமாக அவனை பார்த்தாள். “என்ன சம்மதமா?”
“இந்த சேலை வேண்டாமே. ஏற்கனவே ஒரு மாதிரி இருக்கு. வேற எதாவது சொல்லுங்க. நான் செய்றேன்”, என்றாள் மித்ரா.
“அப்ப நீயும் என்கிட்ட வேற எதாவது கேளு. திருவிழா பத்தி பேசாத. அப்புறம் யாரவது சைட் அடிச்சா என்னை சொல்ல கூடாது”
“அதெல்லாம் கிடையாது. சரி நான் கேக்குறேன். நீங்க சொல்லும் போதே டிரெஸ் மாத்துறேன். நீங்களும் போக கூடாது சரியா?”
“நான் சொல்ற படி நீ கேட்டா, நான் எதுக்கு அங்க போய் என் நேரத்தை வீணாக்க போறேன்”, என்று கண்கள் மின்ன சொன்னவன் எழுந்து போக பார்த்தான்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.